செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

சிறுகதை - இன்னா செய்தாரை - சியாமளா வெங்கட்ராமன்

 

"அம்மா ராகு காலத்துக்குள் கிளம்பு" என அவசரப்படுத்தினான் ராகவன்.  "இதோ கிளம்பி விட்டேன்" என்று கூறிக் கொண்டு சிவகாமி புடவை தலைப்பை சரி செய்து கொண்டு தன் சிறிய ஹேண்ட் பேக்கில் போனை வைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

கூடவே வந்த மருமகள் சினேகாவிடம், "போயிட்டு வரேன். உடம்ப பாத்துக்கோ வேளாவேளைக்கு சாப்பிடு" என்று கூறினார். 

சிவகாமி  காரில் ஏறி உட்கார்ந்ததும் ராகவன் காரின் கதவை சாத்தினான். ராகவன் முன் பக்கம் வந்து காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே உட்கார்ந்து காரை கிளப்பினான். இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்கள். 

சிவகாமி திருமணம் ஆகி வந்தபோது அவர் கணவன் பிரசாத் அவருடைய அப்பா அம்மாவுடன் வசித்து வந்தான். சிவகாமியை பெண் பார்க்க வரும்போது தன் கண்டிஷனை கூறி விட்டான். அதாவது 'என் அம்மா அப்பாவிற்கு நான் ஒரே பிள்ளை. எனவே எந்த காலத்திலும் தனிக் குடித்தனம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது' எனக்கூறி பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்கிய பிறகு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான். 

குடும்பமும் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென்று பிரசாதினுடைய  அப்பா கிருஷ்ணன் இறந்துவிட, மாலுமி இல்லாத கப்பல் போல குடும்பம் தத்தளித்தது.  இதுவரை கிருஷ்ணன் எல்லாவித குடும்ப பாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்ததால் பிரசாதிற்கு எவ்வித சிரமும் தெரியவில்லை. இதை சாக்காக வைத்துக்கொண்டு சிவகாமி அவனை கொஞ்சம் கொஞ்சமாக தன் சொல் கேட்கும்படி செய்தாள். பிரசாதினுடைய அம்மா வைதேகி பரம சாது. பிரசாத்  இல்லாத போது சிவகாமி, வைதேகியை படாதபாடு படுத்தினாள். தன் மகன் மனம் கஷ்டப்படக்கூடாது என்று சிவகாமியின் அட்டகாசத்தை அவனிடம் கூறாமல் அமைதியாக பொறுத்துக் கொண்டாள் வைதேகி. அப்போது அந்தக் காலனியில் இருந்து ஒரு குழுவினர்  காசிக்குப் போவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

வைதேகி, தன் மகன் பிரசாதிடம் தானும் அவர்களுடன் யாத்திரை போவதற்கு கேட்க, சிவகாமியும் மாமியார் ஒரு மாதம் இல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்து அனுப்பி வைத்தாள். 

வைதேகி, தான் சிவகாமியிடம் வாங்கும் சுடு சொற்கள்  சில காலத்திற்கு இல்லாமல் இருக்குமே என்று மன நிம்மதியுடன் அவர்களுடன் காசி பயணத்தை மேற்கொண்டாள். 

எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டு வர, வைதேகி சோகமாக அடிக்கடி உட்கார்ந்து கொண்டிருப்பார். அவள் மனதுக்குள் இந்த பயணம் தனக்கு ஒரு நல்ல வழிகாட்டும் என்று நம்பி இருந்தாள். எல்லோரும் காசி வந்து அடைந்தார்கள். காசியில் உள்ள சங்கர மடத்தில் அனைவரும் தங்கி இருக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு தங்கியிருந்த இன்னொரு குழுவும் இவர்களோடு டைனிங் ஹாலுக்கு சாப்பிட வந்தார்கள் இரு குழுவும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டு பழக ஆரம்பித்தார்கள். ஆனால் வைதேகி மட்டும் யாருடனும் பழகாமல் தனித்து சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்த அக்குழுவின் தலைவி வைதேகி இடம் தானாக முன்வந்து பேச ஆரம்பித்தாள்.

நாம் மனதில் கஷ்டத்துடன் இருக்கும் போது அன்பாக யாராவது பேசினால் இதமாக இருக்கும். அதுபோல அந்த குழுவின் தலைவி வைதேகியிடம் பேசப் பேச, தன் நிலைமையை அவரிடம் கூறி வைதேகி வருத்தப்பட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தனியே இருந்த வைதேகி 15 நாட்களில் அந்தக் குழு தலைவியுடன் ரொம்ப நெருக்கமானாள்.  

15 நாட்கள் போனதே தெரியவில்லை. அன்று ஊருக்குக் கிளம்பும் நாள்.. அனைவரும் கடைசி முறையாக கங்கையில் குளித்துவிட்டு கிளம்பத் தீர்மானித்தார்கள். அனைவரும் கங்கையில் குளித்துவிட்டு மடத்திற்கு வந்தார்கள். அனைவரும் கிளம்புவதற்கு ஆயத்தமான போது வைதேகி மட்டும் காணவில்லை. அனைவரும் தாங்கள் கங்கையில் குளிக்கும் போது பார்த்ததாகவும் பிறகு பார்க்கவில்லை என்றும் ஒரே குரலில் கூறினார்கள். 

இவர்கள் அழைத்து வந்த குழுவின் தலைவர் காசியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துவிட்டு அவளுடைய போட்டோ மற்றும் விவரங்களை பதிவு செய்துவிட்டு அவளைப் பற்றி விவரம் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்கும்படி கூறிவிட்டு கிளம்பிவிட்டார். 

சென்னை வந்ததும் வைதேகி மகன் பிரசாத்திடம், அனைத்து விவரங்களையும் கூறினார். பிரசாத் சென்னை போலீஸ் உதவியுடன் காசி போலீஸுடன் தொடர்பு கொண்டு தன் அம்மாவை தேடச் சொன்னான்.  ஆனால் எவ்வித பலனும் இல்லை. சிவகாமி, 'சனியன் விட்டது' என்று மிக சந்தோஷப்பட்டாள். 

வருடங்கள் ஓடின. அவர்களுடைய மகன் ராகவனுக்கும், சினேகாவுக்கும் திருமணம் ஆகி இருந்தது. திடீரென்று ஆபீஸில் இருந்து வந்த பிரசாத் ஹார்ட் அட்டாக்கில் இறக்க, சிவகாமி  சிறகு உடைந்த பறவையானாள்.

சிவகாமிக்கும் அவள் மருமகள் சினேகாவுக்கும் ஒத்துப் போகவில்லை. அது பார்த்த ராகவன், தன் அம்மாவின் விருப்பப் படி நல்ல ஹோமில் சேர்க்க நினைத்தான். அவனுடைய நண்பன் சிபாரிசு செய்த *அமைதிஹோமை நேரில் சென்று பார்த்தான். அதை நிர்வகிக்கும் தலைவி வடநாட்டு பெண்மணி ஹேமா என்று தெரிந்து கொண்டான். அந்த இல்லத்தைப் பற்றி அனைவரும் நல்ல அபிப்பிராயத்தையே சொன்னார்கள்.

அதைப் பார்த்துவிட்டு வந்த ராகவன், அது பற்றி தன் அம்மாவிடம் கூறினான். அதை நிர்வகிக்கும் ஹேமா வடநாட்டு பெண்மணி என்றும், தமிழ் நன்றாக பேசுகிறார்கள் என்றும், அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்கிறார் என்றும் கூறினான். மேலும் அந்த இல்லம், நன்றாக பராமரிக்கப்படுவதாக அனைவரும் கூறினார்கள் - என்று கூறினான். 

சிவகாமியும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டாள். இப்பொழுது அங்குதான் போய்க்கொண்டு இருந்தார்கள். 

*அமைதி* என்ற அந்த இல்லம் பேருக்கு ஏற்றாற்போல் மிக அமைதியாக பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. சிவகாமியை ரிசப்ஷனில் உட்கார வைத்துவிட்டு, ராகவன் ஆபிஸிற்கு சென்று தேவையான கோப்புகளில் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் சேர்வதற்கு தேவையான பணத்தைக் கட்டினான். 

பணம் கட்டி முடிந்ததும் ஹேமா ராகவனுடன் ரிசப்ஷனுக்கு வந்தாள்.. 

அங்கு உட்கார்ந்து இருந்த சிவகாமியைப்  பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள். சிவகாமியை ஹேமா எதிர்பார்க்கவில்லை. அந்த நிர்வாகி ஹேமா வேறு யாரும் இல்லை காசியில் காணாமல் போன சிவகாமியின் மாமியார் வைதேகி தான்!!!

காசியில் அறிமுகமான இல்ல துணைவியின் உதவியோடு இந்த ஆசிரமத்தில் சேர்ந்தார். தன் பெயரை ஹேமா என்று மாற்றிக் கொண்டாள். அவளுக்கு உற்ற தோழியாக இருந்தால் அவளுடன் ஆசிரம நிர்வாகத்தை கவனித்தார். 

அந்த ஆசிரம தலைவி இறந்துவிட, ஹேமா முழு நேர நிர்வாகியாகி, அந்த ஆசிரமத்தை நடத்த ஆரம்பித்தாள். தன் எதிரே தன் மருமகள் சிவகாமியைப் பார்த்ததும்,  பழைய நினைவுகள் வந்து அவளை அலைக்கழித்தது.  உடன் தன் மனதை மாற்றிக் கொண்டாள் இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறளுக்கு ஏற்ப, தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, சிவகாமியைஅந்த ஆசிரமத்தில் சேர்க்க அவள் கையைப் பிடித்து ஆதரவாக, அவள் தங்க வேண்டிய ரூமிற்கு அன்புடன் அழைத்துச் சென்றாள். 

= = = =

 

18 கருத்துகள்:

  1. //தனிக்குடித்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை// - காலம் மாறிவிட்டது. இப்போ, தனிக்குடித்தனம் என்றால்தான் திருமணம் என்று சொல்லும் சிவகாமிகளின் காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் முழுதாக சொல்ல முடியாது.  50-50!

      நீக்கு
    2. நெல்லை, நானும் ஸ்ரீராமின் கருத்தை டிட்டோ செய்கிறேன். சும்மா காலம் மாறி விட்டது மாறிவிட்டதுன்னு எல்லாரும்...அட போங்கப்பா.....காலம் மாறத்தான் செய்யும் அப்படியே ஒரே இடத்துல நிக்குமா என்ன? அது ஓடிக் கொண்டேதான் இருக்கும் ..ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்!!!

      அந்தக் காலத்துலயும் தனிக்குடித்தம் பிரச்சனைகள் இருந்ததுதான். இப்பவும் சேர்ந்திருக்கற குடும்பங்களும் இருக்கு..
      இப்பல்லாம் தனிக்குடித்தனம் என்று சொல்லவே தேவையில்லையே, குழந்தைகளோட வாழ்க்கையும் வேலையினால் ஒவ்வொரு இடமாகத்தானே இருக்கு. தானாவே....

      கீதா

      நீக்கு
    3. //ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்!!!// - பெண்களை பூனைகள் என்று சொன்ன கீதா ரங்கன்(க்காவை)க் கண்டிக்கிறேன். ஹா ஹா ஹா

      நீக்கு
  2. இப்படி நடந்தால்? என்று நினைத்து, தவறிழைத்தவர்களுக்குத் தக்க தண்டனை கிடைத்துவிட்டது என எண்ணிக்கொள்ளும்படியான கதை. கதையின் நீதி, மகனுக்குக் கல்யாணம் ஆனால், பெற்றோர்கள் கூறாமல் விலகிவிடுவதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகளில் நீதி வழங்கி மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் அதே அதே. சினிமா போலத்தான்...

      நெல்லை, தவறிழைத்த எல்லாருக்குமா தக்க தண்டனை கிடைக்கிறது??!!!! எனக்கும் சின்ன வயசுல இப்படித்தான் போதிச்சாங்க. நானும் அதை அப்படியே ஒருகாலம் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் புத்தி தெளிந்தது. நாம தப்பு செய்யாம இருக்கத்தான் அப்படி ஒரு போதனைன்னு, ஆனா அனுபவத்தில் கண்டதென்னவோ தப்பு செய்யறவங்க யாருக்கும் தண்டனை கிடைத்ததாகத் தெரியலை.

      கீதா

      நீக்கு
  3. நிகழ்வுகள் இப்படியும் இருக்கலாம். முடிவில் வந்த குறள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலைப் பொழுதில் அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  5. தன் வினை தன்னைச் சுடும்!

    ஆனால் எல்லாருக்கும் சுடுவதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்!

    கதைக் கரு வழக்கமான கதைக் கரு. எல்லோரும் பேசும் கரு. முடிவு கொஞ்சம் எதிர்பார்க்க முடிந்தது. அந்த ஹேமா இவளது மாமியாராகத்தான் இருப்பாள் என்று. முடிவு நேர்மறையான முடிவு.

    இன்னும் கொஞ்சம் உரையாடல் பாணியில் கொண்டு போயிருக்கலாமோ என்றும் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கதை நன்றாக இருக்கிறது.
    ஹேமாதான் வைதேகி என்று படிக்கும் போதே தெரிந்து விடுகிறது.

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற நீதியை சொல்கிறது.

    சிவகாமிக்கு மாமியாரை நாம் நன்றாக நடத்தவில்லை. அது போல நம்மை நம் மருமகள் நன்றாக நடத்தவில்லை என்ற நினைப்பே வரவில்லை.
    மாமியாரை பார்த்து அதிச்சி மட்டும் அடைகிறார்.
    மாமியார் பழசை மறந்து விடுகிறார்.

    ஸ்ரீராம் சொன்னது போல கதைகளில் நீதி இருக்கட்டும்.


    பகிர்ந்த திருக்குறளும் அருமை.

    வேறு வழி இல்லாமல் மகனுடன் உடன் இருக்க வேண்டும் என்றால் நெல்லை சொல்வது போல அவர்களை சுதந்திரமாக இருக்கவிட்டு , எதிலும் தலையீடு செய்யாமல் விலகி இருக்க வேண்டும்.
    அதுதான் முன்னோர்கள் சொன்னார்கள் வயதாகி விட்டால் "கிருஷ்ணா, ராமா என்று இரு" என்றார்கள் போலும்.

    கதைக்கு படம் பொருத்தமாக அழகாய் வரைந்து இருக்கிறார் சார்.



    முற்பகல்

    பதிலளிநீக்கு
  7. திருவள்ளுவர் சொல்வது போலதான் மகரிஷியும் சொல்கிறார்.
    தவத்தில் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லும் போது

    "இன்னல் புரிவோர் , எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் அவர்களும் மனம் திருந்தி நல்வாழ்வு பெறக் கருணையோடு வாழ்த்துவோம்"
    அவர்களையும் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த வேண்டும்.
    என்று வேதாத்திரி மகரிஷி சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
  8. இப்படியெல்லாம் உலகம் போய்க் கொண்டிருக்கின்றது..

    நமக்குத் தான் ஒன்றும் புரியவில்லை..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!