செவ்வாய், 27 செப்டம்பர், 2022

சிறுகதை - சாட்சி பூதம் - மாலா மாதவன்

 சாட்சி பூதம்


மாலா மாதவன்
—----------------------------------------------

ஸ்ரீ வேணுகோபாலன் கோவிலில் பாகவதப் பிரவசனம் நடந்து கொண்டிருந்தது.  கதை போல் ஒப்புவிக்காமல் அழகாய் ஏற்ற இறக்கத்தோடு வசனமாய்ப் பேசிக் கொண்டிருந்தார் பிரவசனம் செய்பவர்.

துவாபர யுகத்தின் இறுதிக்காலம்.  கிருஷ்ணர் தாம் எடுத்த பிறவியை பூர்த்தி செய்து வைகுண்டம் எழுவதற்கான நேர அவசரத்தில் உத்தவரைப் பார்த்துக் கேட்கிறார்.

"உத்தவரே! எம்முடன் இருந்தவரெல்லாம் என்னை வைத்து ஆதாயம் தேடிக் கொண்டனர். எனக்காக நான் பிறந்தது முதல் இன்று வரை என்னுடனே பயணிக்கும் நீர் இதுவரை எதுவுமே கேட்டதில்லையே. அந்தளவுக்கு என் மேல் புரிதல் கொண்டுள்ளீரா? 


கிருஷ்ணரின் உள்ளர்த்தம் பொதிந்த கேள்வியை உடனே புரிந்து கொண்டார் உத்தவர். அலகிலா விளையாட்டு உடையான். யுகம் முடியும் தருவாயிலும் விடாது தம்மை வைத்து விளையாடத் தொடங்கி விட்டார் எனப் புரிந்து கொண்டார்.

"இன்றைக்கு உன் விளையாட்டுப் பகடைக் காயா நான்?" உத்தவர் கேட்க..

கண்ணன் சிரித்தான்.

"இவ்விளையாட்டில் வெற்றி தோல்வியில்லை உத்தவரே. விளக்கம் மட்டுமே. அது உம் மூலம் உலகத்துக்கு நான் தெரியப் படுத்துவது. "

"ஆஹா! தன்யனானேன்! என்னையும் ஒரு கருவியாய்க் கொண்டாய். என் பிறப்பின் பலனை அடைந்தேன்."

"ஆம் உத்தவரே! உம்மிடம் நான் சொல்ல விழைவதும்.கீதை தான்! உத்தவ கீதை!"

"அஹோ பாக்கியம் கண்ணா! அஹோ பாக்கியம்! நானென்ன கேட்கப் போகிறேன் கண்ணா! நீ தான் உன்னுடனே இருக்கும் பாக்கியத்தை எனக்கு எப்பவும் அளித்திருக்கிறாயே. "

"இருந்தாலும், உமக்கென என்னிடம் கேட்கக் கேள்விகள் ஏதுமில்லையா? அப்புறம் அடடா இவனிடம் கேட்க வில்லையே என்றும் கேட்டிருக்கலாமே என்றும் நீர் நினைத்து வருத்தப் படக் கூடாது. என்னிடம் கேட்க வேண்டியதை என்னிடமே கேட்டுவிட்டால் தெளிவுறலாம். உமக்கு ஒன்றும் கேட்க இல்லையென்கிறீர். சரி.. அப்போது நான் விடைபெறவா?"

"விடைபெறுதலா? எங்கு கண்ணா? "

"எமது வைகுண்டத்திற்குத்தான். விட்டு வந்து யுகமாகி விட்டதே. சேடன் தாங்க ஸ்ரீதேவி கால்பிடிக்க அதனால் என்  சிந்தை குளிர.. ஆஹா.. சுகானுபவம் பெற்று வெகு நாட்களாயிற்றே! "

"யசோதையின் கோகுலத்தில் களித்ததை விடவா பேரின்பம் அது?"

"கோகுலத்தில் ஓடி ,ஆடி, பாடி, அன்னை தேடி , கோபியர் முகம் வாடி, அடாடா..எத்தனை வேலைகள் எனக்கு? போதாததற்கு பாண்டவ தூதனாய், பகைவனுக்கும் நண்பனாய் எத்தனை பதவிகள் ஏற்க வேண்டி இருந்தது. களைத்து விட்டேன் உத்தவரே!"

"களைப்பா உனக்கா? கள்ளம் புரிவதில் தான் நீ தேர்ந்தவனாயிற்றே! "

"கள்ளன்.. ஆம்! உங்கள் உள்ளம் கவர்ந்த கள்ளன். அது சரி.. கேளுங்கள் உத்தவரே.. எனக்கான வைகுண்ட வழி வா வா என்கிறது."

"ஆ! கண்ணா .. கிளம்புகிறாயா?" உத்தவர் கண்ணில் நீர் நிற்காமல் வழிந்தது.

"ம்ம்.. தலைக்குள் போட்டு உழப்பாதீர்.  உம் கண்ணன் தானே! இருக்கும் சந்தேகங்களைக் கேட்டு விடும்." உத்தவரின் மனதைச் சமன்படுத்தக் கண்ணன் குறும்பாக நகைத்தான்.

"என் கண்ணா! நீ கீதையைப் போதித்தாய். அதன் பிரகாரம் வாழச் சொன்னாய். இப்படி பல நெறிகளைப் போதித்தவன் நீ அதன்படி நடந்தாயா? தருமன் சூதாடித் தோற்ற போது நீ தடுத்திருக்க வேண்டாமா? ஆபத்பாந்தவா என்று அழைக்கிறார்கள் உன்னை. ஆனால் நீ ஆபத்து வருகிறது என்று தெரிந்தும் அசையாமல் பார்த்திருக்கிறாயே. ஏன்?"

தருமன் என்னைக் கேட்டா சூதாடினான் உத்தவரே! இரும்! இரும்! செய்கின்ற வேலையெல்லாம் செய்து விட்டு கஷ்டம் என்று வரும் போது மட்டும் கடவுள் உங்கள் கண்களுக்குத் தெரிவாரா? அதுவும் எப்படி? தன்னை வைத்து, தன் தம்பிகளை வைத்து, தன் மனைவியை வைத்து.. இப்படி எல்லாவற்றையும் இழப்பவன் சூதாடும் முன் விவேகமாக நடந்து கொண்டிருக்கலாம் துரியோதனனைப் போல!" 

"துரியோதனன் விவேகியா? எப்போதிருந்து?"

"ஆம் விவேகி தான். அவனுக்கு விளையாடத் தெரியாது. பந்தயப் பொருளாய் வைக்க அவனிடம் ஏராளமான சொத்து, பணம் இரண்டுமிருந்தது. ஆக விளையாடத் தன் மாமா சகுனியை நியமித்தான். 

தருமனிடம் சொத்து இல்லா விட்டாலும் பெரும் சொத்தாக நானிருந்தேனே. துரியோதனன் தன் மாமாவை விளையாட நியமித்தது போல் தருமனும் தன் மச்சினனான என்னை நியமித்து இருக்கலாமே. 

என் பகடை பேசும் எண்ணிக்கையின் முன் சகுனியின் பகடை நின்றிருக்குமா? இல்லை.. சகுனி கேட்ட எண்ணிக்கையை என் பகடை தான் போடாதா? ம்ஹும்! பகடை இட்ட கை எனதாயிருந்தால் பாண்டவர்களின் பாதையே மாறி இருக்கும். 

சரி! போகட்டும். கூடவே இருந்த என் ஞாபகம் தருமனுக்கு அந்தச் சமயம் வரவில்லை என்று வைத்துக் கொள்ளலாம் என்றாலும்   இந்தச் சூதாட்டமே கண்ணனுக்குத் தெரியக் கூடாது. கண்ணா! நீ இவ்விடத்திற்கு வந்து விடாதே என்று என்னிடமே எனக்கான வேண்டுதலை வைத்தானே! அதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? துன்பம் வரும் என்று தெரிந்தே செய்பவனுக்குத் துணை போகிறவன் அல்ல நான். அதனால் கூப்பிடும் வரை நாமாக உள்ளே செல்ல வேண்டாம் என யசோதையின் சமத்துப் பிள்ளையாய் வாசல் கதவருகே நின்று கொண்டேன்."

"வேண்டுபவர் வேண்டுவன நிறைவேற்றுபவன் நீ!" என்றார் உத்தவர்.

"ஆமாம். வேண்டியதைக் கொடுக்கத்தானே கடவுள். அப்படியும் அவனைக் காக்க நான் காத்திருந்தேன் வாயில் புறம். தருமனைத் தவிர வேறு யாரும் கூப்பிட்டால் உடனே உள்ளே விரைவோமென்று. எல்லோரும் தனக்கானத் துன்பப் புலம்பலில் இருந்தாரே ஒழிய.. அடேய்! கண்ணா! வாடா இங்கேன்னு கூப்பிடவே இல்லை!"

"பாஞ்சாலி கூப்பிட்டாளே!"

"கூப்பிட்டாள். எப்போது தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்த பிறகு அபயம் கிருஷ்ணா என நிர்க்கதியாய் அழைத்தாள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி மானம் காத்தேன். "

"ஆக கூப்பிட்டால் தான் வருவாயா கிருஷ்ணா? உன் பக்தர்களும் உன்னைக் கூப்பிட்டு அழைக்க வேண்டுமா? அப்போது தான் வந்து உதவி செய்வாயா?"

"நான் எல்லோருடனும் எல்லோருக்குள்ளும் இருக்கிறேன். என்னை மறந்து அவரவர் செய்யும் வினைகள் அவரவர் கர்ம வினைப் படி நடக்கிறது. அதைத் தடுக்க நான் யார்.? என்னை உணர்ந்தவன் தன்னைத் தாழ விட மாட்டான். தன்னைத் தாழ விட்டவன் என்னை நினைக்க மாட்டான். நான் காலம். நான் கடவுள். நானே சாட்சி பூதம். நடந்த, நடக்கின்ற, நடக்கப் போகும் அனைத்துச் செயலுக்கும் சாட்சி நானே. ஆனால் அவரவர் செயலுக்குப் பொறுப்பு நானல்ல!"

"புரிந்தது கிருஷ்ணா! என்றும் நீ கூட இருக்கிறாய் என்ற மன பலத்தில் யாரும் தவறே செய்ய மாட்டார்கள். தவறு செய்பவன் உன்னை நினைப்பத்தில்லை அல்லது உன்னை உடன் அழைப்பதில்லை. உன்னை அடைந்தோருக்குத் துக்கமில்லை. ஆஹா! கண்ணா! சரணாகதி தத்துவம் மிளிர்கிறது!"

பிரவசனம் தொடர்ந்து கொண்டிருந்தது. கேட்பவர் அனைவரும் உத்தவராகவும் கிருஷ்ணராகவும் மாறி மாறி உருமாறிக் கொண்டிருந்தனர்.

"சரணாகதி! அதை விட உயர்ந்த தத்துவம் வேறில்லை. இன்பம் அவனே! துன்பம் அவனே! இருப்பும் அவனே! இல்லாமையும் அவனே!  அவன் சாட்சி பூதமாய் இருக்கிறான். நீ செய்யும் செயல்களுக்கான சாட்சி.. உன்னைக் காப்பவன் உனக்காக வருபவன் என்றாலும் நீ தான் அவனை நோக்கி முதலடி வைக்க வேண்டும்.  அடுத்த அடி வைப்பதற்குள் உன்னை நோக்கி ஓடி வருவான் நம் கண்ணன். உள்ளிரு நாதனாய் ஓங்கி வளர்வான். அதற்குத் தேவை உன் மனத் தூய்மை. அதனைக் கைகொள்ளுங்கள் அனைவரும். சரணாகதி! சரணாகதி!"

மேடையில் அவர் பேசும் சொற்கள் செவியில் வந்து அறைந்தது.

சரணாகதி!  காலட்சேப மண்டபச்  சுவற்றோரம் வாழ்க்கையே போனாற்போல் பொலிவிழந்து சாய்ந்திருந்த அந்தக் கூன் உருவம் நிமிர்ந்து உட்கார்ந்தது.  

மனம் குழம்பிய நிலையில் கையைக் கூப்பி அங்கிருந்தவாறே கர்ப்பகிரகத்தை நோக்கிக் கும்பிட்டது.  நான் உன்னைச் சரணடைய வில்லையா கிருஷ்ணா? பார்வை கேள்வி கேட்டது. இங்கு அந்த கூன் உருவம் உத்தவராய் மாறி கேள்வி கேட்கத் தொடங்கியது.

"ஹே! கிருஷ்ணா! உனக்கு என்னைத் தெரியறதா? உனக்கு எப்படி என்னைத் தெரியும்? நான் தான் உன்னைக் கூப்பிட்டதே இல்லையே! உன்னை நிமிர்ந்து கூடப் பார்க்க நாழியில்லாமல் மடப்பள்ளியே கதியென வேலை பார்த்துக் கொண்டு இருப்பவன். தெரிஞ்சுக்கோ!  அடியேன் பட்டாபி. மடப்பள்ளித் தளிகைக்காரன். எனக்கு இன்னும் இரண்டு நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். எடுத்ததை எடுத்த மாதிரியே கொண்டு வந்து வைக்க வேண்டுமாம். எதை எடுத்தேன்? எதைத் திருப்பி வைக்க வேண்டும்? அதற்காகவே கோவிலை விட்டு விலகாத சிறை வாசம் போல இந்தத் தூணோர வாசம். இரவில் குருக்கள் வீட்டுத் திண்ணையில் உறக்கம்."

மனம் பேசிற்று. ஆயிரம் மக்கள் அங்கு கூடியிருந்தாலும் மனமும் மனமும் பேசும் ஆத்மார்த்தமான சம்பாஷணைக்கு சப்தம் அவசியமில்லை. மௌனம் போதும் வார்த்தையில்லா வலியைக் கடத்தி விடும். அப்படித் தான் பேசிக் கொண்டிருந்தார் பட்டாபி.

உள்ளுள் மந்தஹாசப் புன்னகையோடு வேணுகோபாலன் குழலோடு நின்று கொண்டிருந்தான்.

திரை மறைத்தாற்போல் நடுவில் வந்து நின்றார் பிரசிடெண்ட் வீராச்சாமி. 

"என்ன ஓய் பட்டாபி! நகை கிடைச்சுதா? ஒற்றை வடமாய் முழுசா பத்து சவரன் நான் நம்ம கோபாலனுக்காய்ப் போட்டது. அப்படியே கொத்திண்டு போறதுக்கு நாங்க விடுவோமா? இல்ல இந்த கோபாலன் தான் விடுவானா? எங்க ஒளிச்சு வைச்சுருக்கன்னு ஞாபகம் வந்துதா? இல்ல போலீஸைக் கூப்பிடவா?"

"எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே ஐயா. எனக்குத் தெரிந்ததெல்லாம் மடப்பள்ளி பாத்திரங்களும் பட்சண நைவேத்தியங்களும்தான். என்னைப் போய்த் திருடன் என்று!"  சொன்ன பட்டாபிக்கு அழுகை முட்டிக் கொண்டு வர மேல் துண்டை எடுத்து வாயில் வைத்து அழுகையை அடக்கிக் கொண்டார்.

பட்டாபிக்கு உறவென்று யாரும் இல்லை அந்த வேணு கோபாலனைத் தவிர. தன் வயிற்றுப் பாட்டுக்கு ஒரு வேலை என்று அக்கோவில் மடப்பள்ளியில் சேர்ந்தவர். இந்நாள் வரையில் அவன் சன்னதிக்குத் தனக்காகச் சென்று வேண்டாதவர். என் கடன் பணி செய்து கிடப்பதே என நைவேத்தியப் பணிகளைச் செய்வதும் மடப்பள்ளிப் பாத்திரங்கள் அலம்புவதுமாக மாயக் கண்ணனின் சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கும் கூன் விழுந்த மனிதரைப் பார்த்து நீ திருடன் என்றால் பாவம் அவர் என்ன தான் செய்வார்?

ஒன்றும் செய்ய இயலாது வீராச்சாமியையே பார்த்தார்.

"என்னய்யா அப்படிப் பார்க்கற? என்ன சொல்லி பூசி மெழுகலாம்ன்னா? நானாக்கும் இந்தக் கோவிலை பார்த்துக்கறவன்.  பரம்பரை தர்மகர்த்தா. தினப்பூஜைக்குப் படியளக்கறது பத்தாதுன்னு பத்து பவுனுக்கு ஒரு வடம் செஞ்சு போட்டேன். போட்ட அன்னிக்கு நீ தான் கர்ப்பக்கிரகத்துக்குள் நைவேத்தியப் பிரசாதம் வைச்சுட்டு வந்துருக்க. அன்னிக்குப் பூஜை முடிஞ்சு பார்த்தாக் காணோம். குருக்களய்யா உன்னைக் கை காமிக்க நீ என்னடான்னா கோபாலனைக் கை காமிக்கற? சாமிய கையைக் காட்டிட்டா அவர் ஒண்ணும் பேச மாட்டாரு. தப்பிச்சுக்கலாம்ன்னு திட்டம் போட்டிருக்க. நல்ல திட்டமால்ல இருக்கு. இப்ப என் நகைக்கு என்ன பதில் சொல்லப் போற? அதச் சொல்லு. நகையை எங்க வித்த? என்ன வாங்கின? "

"நானெங்க நகையை எடுத்தேன். என்னிடம் இந்த இடுப்பு வேட்டியும், இன்னொரு மாற்று உடுப்பும்.மட்டும் தான் இருக்கு. உறவும் இல்ல. ஊரும் இல்ல. பின் எதுக்கு நான் திருடப் போறேன்!" பட்டாபியின் பதில் வீராச்சாமியைக் கோபமூட்ட இன்னும் இரைந்தார்  அவர்.

"அதனால் தான் நீ எடுத்திருக்கன்னு சொல்றேன். என்னைப் பாரு காசு, பணம், வசதி ,வாய்ப்பு, கார், பங்களான்னு இந்த கோபாலனுக்கே கொட்டிக் கொடுப்பேன் நான் . தெரியுமா? அதனால்தான் பெரும்பணம் செலவழிச்சு அவனுக்கு அந்த வடத்தைப் போட்டா அதை நீ திருடிட்டு நிக்கற. இதை நான் கேட்காம அந்த கோபாலனா வந்து கேட்பான்? "

நான் நானென ஆணவம்  வீராச்சாமியின் பேச்சில் வீசும் சலங்கையாய் இறைபட இறைவன் சிரித்துக் கொண்டான்.

பட்டாபிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நேற்று காணாமல் போனது. இரண்டு நாள் அவகாசம் தருகிறேன் என்று சொன்னவர் இன்றே வந்து இப்படி மிரட்டுகிறார். போலீஸ் அடிக்கு உடம்பு தாங்குமா? செய்யாத தப்புக்கு அடி வாங்குவதை விட மொத்தமாக எங்கேனும் விழுந்து உயிரை விட்டு விடலாமா? இப்படியான சிந்தனைகளில் கோபாலன் சன்னதி நோக்கி அவர் கால்கள் தாமாகவே நடந்ததை அவர் அறியவில்லை.

"சரணாகதம் கிருஷ்ணா! சரணாகதம்! எடுப்பவன் வைத்தவன் எல்லாம் நீயறிவாய்! உனக்கான பசியை மட்டும் உன் தாய் யசோதாவாய் மாறி பார்த்தேனே ஒழிய உன்னைக் கடவுளாய் நினைத்து சரணாகதி அடைய வில்லை. அதனால் தான் நீ என்னிடம் திருடனென்ற சொல் விளையாட்டு விளையாடுகிறாயோ? இதோ வந்து விட்டேன். நீ தான் எல்லாம். நீயே சரணம். உயிரை எடுத்துக் கொள் இல்லையேல் உடன் பழி போக்கு!" 

வீராச்சாமி பார்த்துக் கொண்டிருக்கும் போதே பட்டாபி மடாலென்று வேணுகோபாலன் முன் நெடுஞ்சாண்கிடையாய் வீழ்ந்தார்.

"நடிப்பு!" என்றார் வீராச்சாமி.

"என்னங்க! இந்தாங்க!" ஓடி வந்தாள் வீராச்சாமியின் மனைவி கோமதி. அவளே ஒரு நடமாடும் நகைக் கூடம் தான். வீராச்சாமியின் கர்வமும் அகந்தையும்  அவள் கழுத்தில் நகைகளாகத் தொங்கியது.

"என்ன  கோமதி..வீட்டுல இருந்தே ஓடி வறியா என்ன? இத்தனை பதட்டம்? என்ன ஆச்சு?" வீராச்சாமி கேட்க..

இந்தாங்க கோபாலனுக்கு நாம் போட்ட பத்து பவுன் வடம். நேத்து குருக்களய்யா உங்களுக்கு கோபாலன் மேல போட்டிருந்த மாலையை எடுத்துப் போட்டு மரியாதை செஞ்சாரில்ல.. அத்தோட இதுவும் உங்க கழுத்துக்கே வந்து விட்டுருக்கு. அது தெரியாம நீங்க நம்ம வீட்டு நிலையில கழட்டி செருகிட்டுப் போயிருக்கீங்க. இன்னிக்கு என்னவோ தோண விடுவிடுன்னு போய் பார்க்கறேன். மினுமினுன்னு மின்னிட்டு கெடக்குது. பாவம் பட்டாபி.. இவரை விட்டுடுங்க!"

வீராச்சாமி அசட்டுச் சிரிப்புடன் பட்டாபியைப் பார்த்து..

"சரி..சரி.. நகை கிடைச்சுருச்சு.. எந்திருச்சு வேலையைப் பாரு! குருக்களய்யா! நீங்க இந்த வடத்தை கோபாலனுக்கே போடுங்க." குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பதைப் போல மிதப்பாகச் சொன்னார்.

தன்னைச் சரணடைந்த பக்தனுக்காய் வேணு கோபாலன் அந்த ஆணவ நகையை நிராகரித்தான். ஆம்! அவ்வடத்தை கண்ணன் கழுத்தில் பூட்ட முயலும் போதெல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தது.

கடைசியில் அது வீராச்சாமியின் பெட்டகத்தைச் சென்று சேர்ந்தது.

பட்டாபியின் மனநிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். கோபாலா! நீ தான் எல்லாம் என்ற சரணாகதி தத்துவத்தைப் புரிந்து கொண்டவன் வீராச்சாமியின் அகங்காரப் பேச்சை அசட்டை செய்து தன் மடப்பள்ளி வேலையை பார்க்க யசோதாவாய் மாறிப் போனார். 

"பாவம் ! கோபாலன் பசியோடு இருப்பான்!" 

தனக்குத் தானே சொல்லிக் கொண்டு ஈரிழைச் சிவப்புத் துண்டை உதறி இடுப்பில் கட்டிக் கொண்டு புறப்பட்டார்.

= = = = =

62 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    கேட்டதும் கொடுப்பபரே, கிருஷ்ணா, கிருஷ்ணா
    கீதையின் நாயகரே, கிருஷ்ணா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்...   பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்..

      நீக்கு
  2. நேற்றைய தினமணியில் மாலதி சந்திரசேகரன் என்பவர் உத்தவர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்ட சந்தேகங்கள் என்ற கட்டுரையில் இதே சாட்சிபூதம் என்ற வார்த்தையை உபயோகித்திருந்தார். அந்த சாட்சிபூதம் வார்த்தைத் தலைப்பிலேயே என்றோ
    சகோதரி கதையெழுதியிருப்பது
    வியப்பாக இருந்தது.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக கதையை ஒட்டிய, எழுதியவரின் எழுத்து சம்பந்தமாக பின்னூட்டங்கள் இருந்தால் எழுதியவருக்கு உற்சாகமாக இருக்கும்.
    அதைக் கருத்தில் கொண்டு பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான், பதிவை எழுதியவர் பின்னூட்டங்களுக்கு மறுமொழி கொடுக்கணும் என நான் சொல்லுவேன், நினைப்பேன். இல்லாவிட்டால், அருமை, நல்லது, படித்தேன், சரியாயில்லை என்று எழுதி நகர்ந்துவிடலாமே

      நீக்கு
    2. சரியாகச் சொன்னீர்கள். அதுவே வாசகர்களுக்கான மரியாதையாகவும் நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  4. கிருஷ்ணா.. கிருஷ்ணா..

    அன்பின் வணக்கங்களுடன்

    எங்கெங்கும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  5. பாதிக்கதைவரை படிக்கும்போது என்ன பிரவசனமாக இருக்கிறதே என்று நினைத்தேன். சரி இந்த வாரம் நீதிபோதனை வகுப்பு என்று தோன்றியது.

    கதை நன்றாக முடிந்திருக்கிறது. வரலாற்றில் இதே போன்ற கதைகள்/நிகழ்வுகள் பல உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதை நினை என்று போதிக்கும் கதைகள் நன்னெறிக் கதைகள்..

      நீக்கு
  6. இந்தக் கதையின் முற்பகுதி உத்தவ கீதை எனப்படுவது..

    ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சக்தி விகடன் இதழில் தெரிந்த புராணம் தெரியாத கதை எனும் பெயரில் வெளியாகி இருந்தது..

    அது இணையத்தில் எழுதியவர் பெயரில் அல்லாது வேறு வேறு பெயர்களிலும் தற்சமயம் உலவிக் கொண்டிருக்கின்றது...

    போகட்டும்...

    பெருமாள் கோயிலில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு என்ன பெயர்?..

    குருக்களா!..

    தளிகை என்றெல்லாம் வந்திருக்கின்றதே கிருஷ்ணா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடப்பள்ளியில் (கோவில் சமையலறை) பிரசாதம் தயார் பண்ணுபவர் மடப்பள்ளிக்கார்ர். பல கோயில்களில், சுத்த பத்தமாக பெருமாள் பிரசாதம் தயார் பண்ணுபவர் பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணும் நேரம் வந்ததும், அர்ச்சகர் மணி அடிப்பார், இல்லை கூப்பிடுவார். பிரசாத்த்தை மூடி சன்னதிக்குக் கொண்டு செல்வார் தளிகை செய்பவர். பெருமாள் கோவிலில், அர்ச்சகர் அல்லது பட்டாச்சாரயார் எனவும் சைவ மரபில் குருக்கள் பூசாரி எனவும் அழைப்பது மரபு

      நீக்கு
  7. திருக்கச்சி நம்பிகள் காஞ்சி தேவப்பெருமாளுக்கு ஆலவட்டம் கைங்கர்யம் செய்பவர். பெருமாளிடம் பேசும் வரம் பெற்றவர் (ஆனால் பெருமாள் இவருக்கு மோட்சம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டான். நீர் எனக்கு ஆலவட்டம் கைங்கர்யம் பண்ணினீர். நான் உம்மிடம் எப்போதும் பேசினேன். ஆனைக்குப் பானை சரி என்று சொல்லிவிட்டான்). சனீஸ்வரன், ஒரு சமயம், உமக்கு 7 1/2 நாட்டுச் சனி வருகிறது என்று சொன்னதும், தன்னைப் பீடிக்காமல் இருக்கச் செய்யமுடியுமா என்றார். அது முடியாது. நியம்ப்படி நான் செய்யணும் என்று சொல்ல.. சரி உமக்காக 7 1/2 மாதங்கள்.. 7 1/2 நாட்கள்.. 7 1/2 மணி நேரங்கள் என்று குறைத்துக்கொண்டுவந்து கடைசியில் 7 1/2 நாழிகை உம்மைப் பீடிப்பேன் என்றார். சனி பீடித்ததும், கோயில் சன்னிதி தங்கப் பாத்திரம் எஆணவில்லை என இவர் மீது குற்றம் வந்து நிந்திக்கப் பட்டு, சறி முடியும்போது தானாகவே கிடைத்தது வரலாறு.

    இன்னொன்று மலையாள திவ்யதேசத்தில் (சட்னு பெயர் நினைவுக்கு வரலை) விஷ்ணு கோவிலுக்கு தங்க வாழைக் குலை ஊர் தலைவர் கொடுத்திருந்தார். கோவிலிலேயே பூஜை, தியானம் என்று செய்துகொண்டு ஒருவர் இருந்தார். ஒருநாள் தங்க வாழைக்குலை காணோம் என்றதும் பிராது வந்து ஊர்மக்களெல்ஙோரும் கூடி நிற்க பழி சுமத்தல் நடந்தது. அவர் மிகவும் வருத்தமுற்று, செய்யாத மவறுக்குத் தன்னைக் குற்றம் சுமத்தி அடித்தார்களே என்று வருந்தி, பாருங்கள் என் கையில் எதுவுமில்லை. அப்பாவியான என்னை வதைத்ததால் இந்த ஊர் பாழ்படும், மழை பெய்யாது, எல்லோரும் ஊரைவிட்டுச் செல்வீர்கள் எனச் சாபம் கொடுத்துவிட்டு அகன்றார். பிறகு பெருமாள் திருமஞ்சன தீர்த்தம் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் வாழைக்குலை கண்டெடுக்கப்பட்டது... என வரஙாறு செல்லும்.

    விதி என்பது கொடிது. அது தன் வழியே நம் விதியை எழுதிச் செல்லும். (எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற் செல்லும்-உமர் கய்யாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இப்போது அஷ்டமத்து சனியாம்.  உறவினர் ஒருவர் பார்த்துச் சொன்னார்!

      நீக்கு
  8. ஏற்கனவே நெல்லை வந்து விட்டார், இனி வரமாட்டார் என்றா நினைத்தீர்கள், தம்பீ?..

    பதிலளிநீக்கு
  9. சரணாகதி தத்துவத்தை விளக்கிச் சொல்ல சரியான கதை. உணர்வு பூர்வமான உரையாடல்
    நம்மை ஆக்கிரமித்தது.
    வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  10. பத்து பவுன் வடம் டுவிஸ்ட் கதையில் பிரமாதமாய் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது! போட்ட மாலையோடு சேர்ந்து பிரசிடண்ட் வீராசாமி வீட்டுக்குப் போனது யதார்த்த நிகழ்வாய்ப் பொருந்திப் போனது. முன்பகுதி: வாசித்த விஷயத்தை எடுத்துக் கொண்டு (தம்பி துரை அவர்களின் பின்னூட்டம் ) எடிட் செய்திருக்கலாம் என்றாலும் துடிப்பான கோர்வையான எழுத்து முயற்சி கவர்ந்தது. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. செவ்வாய்க் கிழமை பகுதிக்கு சங்குண்ணி கதைகளுக்கெல்லாம் போவானேன் என்ற நினைப்பு எழுந்ததை சொல்ல மறந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. @ ஜூவி அண்ணா..

      // செவ்வாய்க்கிழமை பகுதிக்கு சங்குண்ணி கதைகளுக்கெல்லாம் போவானேன்.. //

      அதானே!...

      நிலைய வித்துவான்கள் வாழ்க!..

      நீக்கு
    2. :)) ஆல் இண்டியா ரேடியோ
      சென்னை வானொலி நிலையம்.

      நீக்கு
  12. கருத்தளித்தமைக்கு நன்றி. இக்கதை முன்பு ஒரு closed groupல் போட்டிக்காக அனுப்பப் பட்டது. எல்லோரும் அறிந்த உத்தவகீதையை இப்போது நடக்கும் நிகழ்வுடன் தொடர்பு படுத்தி எழுத ஆசை கொண்டு எழுதியது. மிக்க நன்றி.
    - மாலா மாதவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இப்பொழுது நடக்கும் நிகழ்வுடனா? புரியலேயே!!

      நீக்கு
    4. உத்தவகீதை புராணகாலத்தைய கதை.  அதை, ஒரு கற்பனையில் உதித்த தற்போதைய சம்பவத்துடன் இணைத்து எழுதி இருக்கிறார்.

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. பக்தி பரவசத்தோடு படித்தேன். சரணாகதியின் பலன் பட்டாபிக்கு உடனடியாக கிடைத்திருக்கும் பகுதி மெய் சிலிர்க்க வைக்க்கிறது. உணர்வு பூர்வமான இக்கதையை எழுதிய திருமதி மாலா மாதவன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. இக்கதையில் நடந்த சம்பவம் போன்ற ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நடந்துள்ளது. 1985 இல் காணாமல் போன நாகப்பட தாலி கோயில் கிணற்றில் 2014இல் தூர் வாரும் போது கிடைத்தது. 

    1985இல் முதல்வர் கருணாகரனை உலுக்கிய சம்பவம் அது. 

    https://www.thehindu.com/news/national/kerala/guruvayur-temple-ornament-recovered/article5948090.ece


    ஆனால் ஆதிகேசவ பெருமாள் நகைகள் மீட்கப்படவே இல்லை. 2020இல் தான் அது சம்பந்தமாக கோயில் போத்தி உட்பட பலர் தண்டனை பெற்றனர். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  17. கதை மிக அருமை.
    புராண கதை பகிர்வு நன்று.

    //"அதனால் தான் நீ எடுத்திருக்கன்னு சொல்றேன். என்னைப் பாரு காசு, பணம், வசதி ,வாய்ப்பு, கார், பங்களான்னு இந்த கோபாலனுக்கே கொட்டிக் கொடுப்பேன் நான் . தெரியுமா? அதனால்தான் பெரும்பணம் செலவழிச்சு அவனுக்கு அந்த வடத்தைப் போட்டா அதை நீ திருடிட்டு நிக்கற. இதை நான் கேட்காம அந்த கோபாலனா வந்து கேட்பான்? "''

    எத்தனை ஆணவம்! தன்னால் முடியும் இறைவனுக்கு என்று ஆணவமாக சொன்னார்.


    //தன்னைச் சரணடைந்த பக்தனுக்காய் வேணு கோபாலன் அந்த ஆணவ நகையை நிராகரித்தான். ஆம்! அவ்வடத்தை கண்ணன் கழுத்தில் பூட்ட முயலும் போதெல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தது.//

    உள் அன்போடு இரண்டு துளசி சாற்றினால் போதுமே மகிழ்ந்து போவான் மாதவன்.

    அருமையான கதை .

    பதிலளிநீக்கு
  18. கதையின் முதல் பகுதி அடிக்கடி படித்தது என்றாலும் அதற்குப் பொருந்தும்படி தற்கால நிகழ்வுகளைக் கொண்டு போயிருக்கார் கதையின் ஆசிரியர் மாலா மாதவன் அவர்கள். சரளமான நடை! முடிவு யதார்த்தம்! எங்கும் நடக்கக் கூடிய ஒன்றே! குற்றவாளி யாருமே இல்லை என்பதும் சமய சந்தர்ப்பமும் தான் காரணம் என்பதும் ஏற்கக் கூடியதாய் இருக்கிறது. தர்மகர்த்தாவின் ஆணவப் பேச்சும் எங்கும் காணக் கிடைப்பதே!

    பதிலளிநீக்கு
  19. இந்த வாரம் கதை கேட்டு வாங்கிப் போட்டிருப்பதற்குப் பாராட்டுகள். ஸ்ரீராமுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல். அநேகமாய்த் தெரிந்திருக்கலாம். அனுஷ்காவுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாமே! மாப்பிள்ளை யார் என்பதிலும் ஓர் சஸ்பென்ஸ் கொடுத்திருக்காங்க. ஆனால் நான் போயெல்லாம் பார்க்கலை யாரா இருந்தா எனக்கென்ன? கல்யாணத்துக்குப் போகப் போறதில்லையே! :)))))

    பதிலளிநீக்கு
  20. அருமையான கதை! உண்மை பக்திக்கு இறங்கும் தெய்வம், ஆனவத்திற்கு என்றும் இருங்குவதில்லை...

    பதிலளிநீக்கு
  21. @ கீதாக்கா..

    // ஸ்ரீராமுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!.. //

    ஆகா!.. :(

    பதிலளிநீக்கு
  22. கதை மிகவும் நன்றாக இருந்தது மனதிற்குள் திரும்பவும் சுற்றி சுற்றி வருகிறது அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. கதையைப் படித்து கருத்துகள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  24. சரணாகதியை உணர்த்தும் கதை நன்றாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!