வெள்ளி, 14 அக்டோபர், 2022

கண்ணன் விளையாட்டுப் பிள்ளையா - அல்லது கைக்குழந்தையா?

 

அக்டோபர் 14. ரோகிணி நட்சத்திரம். 

என் (KGG) அப்பாவின் பிறந்தநாள், பிறந்த நட்சத்திரம். ரோகிணியில் பிறந்ததால், என்னுடைய தாத்தா, அப்பாவுக்கு 'கோபாலன்' என்று பெயர் வைத்தார். அப்பாவுக்கு இன்னொரு பெயரும் உண்டு. 

பக்தவத்சலம் - அப்பா பிறந்தநாளில், தாத்தா திருக்கண்ணமங்கை என்ற ஊர் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருந்தார். அந்தக் கோவில் பெருமாள் பெயராகிய பக்தவத்சலம் என்ற பெயரை என் அப்பாவுக்கு இரண்டாவது பெயராக வைத்தாராம் தாத்தா. 

ஆனால் பக்தவத்சலம் என்ற பெயர் மருவி பக்தா ஆகி - அதுவும் பிறகு பர்த்தா ஆகிவிட்டது. அவருடைய சகோதர சகோதரிகள் எல்லோரும் அவரை 'பர்த்தா'  என்றுதான் அழைத்தார்கள்! 

இன்றைய பதிவில் ரோகிணியில் உதித்த கண்ணன் பற்றி இரண்டு பாடல்கள் பார்ப்போம் + கேட்போம். 

இன்றைய தனிப்பாடல் : 

கீழே உள்ளது முழுப் பாடல்.  பாடகர்கள் சில வரிகளை விட்டுப் பாடுவார்கள். 

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)


தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

பின்னலைப் பின்னின் றிழுப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வண்ணப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளால் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)

விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்  (தீராத)

அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)


பாடலின் சில வரிகளை பாடியிருப்பவர் : 


= = = = =

பத்ரகாளி !! 
பயப்படாதீர்கள்! 1976 டிசம்பர் 10 - வெளிவந்த படத்தின் பெயர்தான் அது. 

நடித்த ராணி சந்திரா என்னும் நடிகை படம் வெளிவருவதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக (அக்டோபர் 12 , 1976) விமான விபத்து ஒன்றில் இறந்துவிட்டதால் - இந்தப் படம் சூப்பர் ஹிட் படமாகிவிட்டது. பாடலும் சூப்பர் ஹிட் - தினந்தோறும் விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பில் இரவு இந்தப் பாடலைக் கேட்டிருப்போம்! 

 ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்ராணி சந்திரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எழுத்தாளர் மகரிஷி எழுதிய தமிழ்ப் புதினம் ஒன்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் இதே பெயரில் தெலுங்கில் 1977 இல் தயாரிக்கப்பட்டது.

பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார். கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இதனால், அவர் நடிக்க இருந்த மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்


கீழே உள்ளது முழுப் பாடல். 
இசைத்தட்டுகளில் முழு பாடல் கிடையாது என்று நினைக்கிறேன். 

படம்: பத்ரகாளி
இசை: இளையராஜா
பாடல் : வாலி 
பாடியவர்கள் : P சுசீலா & K J யேசுதாஸ் 

******************************************

பெண்:
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மை விழியேதாலேலோ
மாதவனே தாலேலோ

******************************************

ஆண்:
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

பெண்:
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஆண்:
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா

பெண்:
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது

ஆண்:
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

******************************************

பெண்:
மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி

ஆண்:
வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி

பெண்:
மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி

ஆண்:
வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி

பெண்:
கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடும் என்று
பொட்டு ஒன்றுவைக்கட்டுமா
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை

ஆண்:
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை

பெண்:
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ

ஆண்: மை விழியே தாலேலோ

பெண்:
மாதவனே தாலேலோ
ஆராரிரோ

ஆண்: ஆராரிரோ
பெண்: ஆராரிரோ
ஆண்: ஆராரிரோ
இருவரும்: ஆராரா ரிரோ




= = = = = =

34 கருத்துகள்:

  1. நானும் ரோஹிணி நட்சத்திரத்தில் ஜனித்தவன் தான். தீராத விளையாட்டுப் பிள்ளையின் நடசத்திரம் அது என்பதில் எனக்கும் அலாதியான பெருமை உண்டு. அதுவும் தவிர கண்ணபெருமானின் கல்யாண குணங்களில் பல என்னிலும் படிந்திருப்பதை நான் உள்ளுக்குள்ளே ரசித்து மனதளவில் சுகித்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊத்துக்காடு காளிங்க நர்த்தனப் பெருமானை நாம் இருவரும் சேர்ந்து வணங்குவோம். எல்லாப் பெருமைகளும் அவனிடமிருந்தே பிறக்கின்றன.

      நீக்கு
    2. அப்பா வைத்து பூஜித்த விக்கிரகங்களில் காளிங்க நர்த்தன கிருஷ்ணனும் ஒன்று.

      நீக்கு
    3. //தீராத விளையாட்டுப் பிள்ளையின்// ஜீவி சார்...நீங்களும் தீராத விளையாட்டுப் பிள்ளையான்னு நான் கேட்கமாட்டேன்

      நீக்கு
    4. என் அப்பாவும் ரோகிணி, என் பையனும் ரோகிணி. இரண்டு ரோகிணிகளுக்கு நடுவே சாண்ட்விச் இந்தப் பூராடம்!

      நீக்கு
  2. உன் மடியில் நானுறங்க
    கண்ணிரண்டும் தான் மயங்க
    என்ன தவம் செய்தேனோ
    என்னவென்று சொல்வேனோ

    ------- ஆஹா. கிரக்கமடிக்கும் தித்திப்பு வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. பத்ரகாளி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    எமது உல்டா பாடலாக எழுதி இருக்கிறேன். செட்யூலில் இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே
    இனிமை.. இனிமை..

    பதிலளிநீக்கு
  5. ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
    சொந்தம் இந்த சொந்தமம்மா!..

    வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
    தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா!..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஒவ்வொரு வார்த்தையும், இசையமைப்பும் பிரமாதம்.

      நீக்கு
  6. தீராத விளையாட்டுப் பிள்ளையைப் பாடியவர்
    யாராகிலும் கேட்க மிகவும் இனிக்கும்...

    பதிலளிநீக்கு
  7. இரண்டுமே மிகவும் ரசித்த, நிறையதடவை கேட்ட பாடல்கள்

    பதிலளிநீக்கு
  8. தலைப்பைப் பார்த்ததுமே என்ன பாடல்கள் என்பது புரிந்துவிட்டது!!!

    இருபாடல்களுமே மிகவும் ரசித்த பாடல்கள். ராகுல் மிக நன்றாகப் பாடுகிறார்.

    இப்போது இன்னும் வளர்ந்துவிட்டார். சூரியகாயத்ரி எல்லோருமே.. குல்தீப் பாயால் வளர்த்து எடுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் அருமையாகப் பாடுகிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பாடல்களுமே ரசித்துக் கேட்டவை தான். நான் கற்றுக்கொண்ட முதல் பாரதியார் பாடலில் கணபதிராயனுக்கு அப்புறமாத் "தீராத விளையாட்டுப் பிள்ளை!" தான். பின்னலைப் பின்னின்று இழுப்பான் என்னும் வரி வரும்போது என் தம்பி என் பின்னலைப் பிடித்து இழுப்பது நினைவுக்கு வரும். அதே போல் எங்க பையரும் அவரோட அக்காவின் பின்னலைப்பிடித்து இழுப்பார். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. !! குறும்பு ! பரம்பரைப் பழக்கம்!

      நீக்கு
    2. இரண்டு பாடல்களும் அருமையானவை.
      பாரதியின் கண்ணன் பாடல்களை படிக்கும் காலத்தில் மிகவும் விரும்பி படித்திருக்கிறேன்.

      நீக்கு
  10. உங்கள் அப்பாவிற்கு பிறந்த நாள் வணக்கங்கள்.

    இரண்டு பாடல்களும் மிக அருமையான பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!