வியாழன், 3 அக்டோபர், 2024

ஸ்ரீமந் ந்ருஸிம்ம விபவே

 அடுத்ததாக பூவரசன்குப்பம் நோக்கி சென்றோம். 

பரிக்கல்லிலிருந்து வெளியே வரும்போதே பூவரசன்குப்பம் 35 கிலோமீட்டர், அபிஷேகப்பாக்கம் 67 கிலோமீட்டர் என்று போர்ட் பார்த்தோம்.  35 கிலோமீட்டர்தான் என்றாலும் சாலைகள் மிகக்குறுகிய சாலைகள்.  எனவே பயண நேரம் அதிகமானது.  வந்த வழியிலேயே வந்து பாண்டிச்சேரி செல்லும் பாதையில் திரும்பி சென்றோம்.  இந்த நரசிம்மர் அந்த மாநிலத்தில்தான் இருக்கிறார்!

குறுகலான சாலைகள் மட்டுமல்ல, உடனே உடனே திடீர் திடீரென குறுக்கிடும் வேகத்தடுப்புகள்.  பொறுமையாய் செல்ல வேண்டி இருந்தது.

உள்ளே நுழையும்போது சட்டை கழற்றச் சொல்வார் யாருமில்லை.  நானே கேட்டு, நானே கழற்றி விட்டேன்.  

அப்போதுதான் பட்டர் வெளியே சென்றாராம்.  அவரை அழைக்க இரண்டு பேர் ஓடினார்கள்.  வெள்ளையும் சிவப்புமாக என் ட்ரெஸ் பார்த்து யாரோ பெரிய மனுசன் வந்திருக்கான்னு நினைத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.  அதேபோல நான் நினைத்திருந்தால் யாரும் இல்லாத அந்த இடத்தில் கருவறைக்குள் ஸ்வாமியை படம் எடுத்திருக்கலாம்.  செய்யவில்லை.  சுற்றுமுற்றும் கொஞ்சம் திருட்டுப் பார்வை பார்த்தபோது என் பின்னே வந்திருந்த இன்னொரு பக்தர் (நிஜமாகவே பெரிய மனுஷன் மாதிரி இருந்தார்)   என்னைப் பார்த்து 'வந்து கொண்டிருக்கிறார்' என்றார்.  எனவே மரியாதையை நான் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை!  சின்னக் கோவில்தான்.  துவஜஸ்தம்பம் தாண்டிச் சென்றதுமே சன்னதி வந்து விடுகிறது.  சிறிய பிரகாரம்.  இறங்கி நடந்த உடன் தாயார் சன்னதி வருகிறது.

கருவறைக்குப் பின்னே உப்பு கொட்டி வைத்திருந்தார்கள்.  எதற்கோ?

அங்கிருந்து கிளம்பி அபிஷேகப்பாக்கம் சென்றோம்.  கால் பொசுங்கும் அளவு சூடு.  சாதாரணமாக முதல் இரண்டு கோவில்களும் காலை பனிரெண்டு மணிக்குள் தரிசித்து. இந்தக் கோவிலை மாலை தரிசனம் செய்வார்கள்.  வெய்யிலில் கால் வைக்க முடியாததே காரணமாய் இருக்கக் கூடும்.  அல்லது காலை இந்த கோவிலிலிருந்து தொடங்கி மற்ற கோவில்கள் பார்க்கலாம்.

'சுடச்சுட' பிரகாரம் சுற்றி வந்து, கிளம்பி, பிரதான சாலையைப் பிடித்து, மறுபடி காலை வந்த அதே ஹோட்டலுக்கு வந்தோம்.  சாப்பாடு சுமார்தான்.  வெந்நீர் வேண்டும் என்று கேட்ட எங்களை பூச்சியைப் பார்ப்பது போல பார்த்த சர்வர் எங்களுக்கு வைக்கப்பட்டிருந்த டம்ளர்களை மேசையின் நடுவே இருந்த மின் அடுப்பில் வைத்து 'ஆன்' செய்து விட்டு சென்றார்.  சில கணங்களில் வெந்நீர் தயார்!

புகைப்படங்கள் கைநழுவி விழுந்தது போல சிதறி கன்னாபின்னாவென்று அமைந்திருக்கின்றன.  ஆங்காங்கே விளக்கம் கொடுத்து விடுகிறேன்.


அபிஷேகப்பாக்கம் நரசிம்மர் கோவில்.  கோபுரம் மேலே பாருங்கள் சூரியனின் கதிர் நேராக கீழே இறங்குகிறது!



திரும்பும் வழியில் புதுவை ராஜீவ் காந்தி மருத்துவமனை - கிடைத்த இடுக்கில் எடுத்தது!


திரும்பும் வழியில் வெய்யிலில் அமர்ந்திருந்த பெரிய பிள்ளையார்.


வெந்நீர் வேண்டுமா...  அப்படியே அடுப்பில் வைத்துக் கொள்ளலாம்!


சாலைக் காட்சி.

மழைத்துளிகள் கார் கண்ணாடியில் பட்டு வித்தியாசமான தோற்றம் தந்தன.


வழக்கமான சாய் கடை என்றாலும், தயாரித்தவர் வழக்கம்போல ஒரு வடநாட்டவர்!


இதுதான் கடை 


நாங்கள் திரும்பும் அன்று விநாயகர் விஸர்ஜனம் நடந்தது என்றாலும் இது அது அல்ல...  திடுக்கிடும் வண்ணம் எதிரே கண்ணில் பட்டது.




மேகங்கள் வர்ணஜாலம் புரிய அழகிய சாலைக் காட்சி.



பூவரசன் குப்பத்தில் பெருமாளுக்கு வாங்கிய மலர் மாலை.



சந்நதிக்கு பின்புறம் உப்பு 



பூ. குப்பம் தாயார் சன்னதிக்குள் ஆனந்தமாக உறங்கி கொண்டிருந்த பூனாச்சு!  எவ்வளவு சத்தப்படுத்தியும் அசரவில்லை.







பூவரசன்குப்பம் கோவில் சன்னதி வாசல்.  இங்கு ஒரு கிழவி பத்து ரூபாய்க்கு சாமியையே காட்டிக் கொடுக்க தயாராய் இருந்தார்!  அவர் மட்டுமே அப்போது சன்னதியில் இருந்தார்.  கேமிரா எடுத்தாலும் ஒன்றும் சொல்லவில்லை!



பூவரசன் குப்பம் கோவில் கோபுரம் 


வழியில் கண்ணில் பட்ட ஒரு 'கண்கவர்'(!) குடிசை! 


மரங்களால் சூழப்பட்ட புதுவை சாலை.


அபிஷேகப்பாக்கம் கோபுரம் Side View ....


அங்கிருந்த மரத்தில் காய்கள் 

 கால்களைப் பழுக்க வைக்கும் பிரகாரங்கள் 


அபிஷேகப்பாக்கம் துவஜஸ்தம்பம் 



கொஞ்சம் கவனித்தால் பெருமாளே தெரிவார்...!


உள் பிரகாரத்திலிருந்து கோபுரம்...


தாயார் சந்நதி 



ஹிரண்யகசிபு வதம்.



நந்தவனம் 

அழகிய கோபுரம்...  பெருமாள் தேவியை தூக்கி மடியில் அமரவைத்துக் கொள்ளும் காட்சி.






அபிஷேகப்பாக்கம் கோவில் குளம் 


திரும்ப வரும் வழியில் தேநீர் அருந்தலாம் என்றால் கருப்பட்டிக் கடைகளாக இருக்க, சாதாரண கடை வரும்வரை பயணித்து ஒரு கடையில் சாதாரண சாய் குடித்து இன்புற்றோம்.

வாடகை டிரைவர் அநியாய வாடகை வசூல் செய்தார்.  அவரை அனுப்பிய நண்பரிடம் கேட்டபோதும் சரியான பதில் கிடைக்காதது கோபம்.
======================================================================================================


நியூஸ் ரூம் 


-  அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ராமச்சந்திரன், அவரது மகன், வங்கி அதிகாரி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.  விசாரணைக்குப் பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:  சி.பி.ஐ., தரப்பு வழக்கை நம்புவதற்கு கடினமாக உள்ளது; லண்டனில் உள்ள விடுதியில், ராமச்சந்திரனின் தயவில் தான் வங்கி அதிகாரி தியாகராஜன் தங்கியிருந்தார் என்பதை, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் நிரூபிக்கவில்லை.  விடுதியில் தங்கியதற்கான கட்டணத்தை செலுத்த, அதிகாரி தியாகராஜனிடம் போதுமான பணம் இருந்தது என்பதை, மற்றொரு வங்கி உயர் அதிகாரி அளித்த வாக்குமூலம் வாயிலாக எளிதாக முடிவுக்கு வர முடிகிறது.  இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கவில்லை. எனவே, சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அபராத தொகையை செலுத்தி இருந்தால், அவற்றை திருப்பி அளிக்க வேண்டும்.

-  சிக்கமகளூரு: கர்நாடகாவில், சிறப்பு பூஜையில் பங்கேற்க, மாமனார் வீட்டுக்கு செல்ல இரவு நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததால், அவசர போலீஸ் 112க்கு தொடர்பு கொண்டு, தன்னை மாமனார் வீட்டில் விடும்படி கேட்டவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர்.

-  ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய கந்தர்வ் சிங்கின் முதல் மனைவி இறந்து விட்டதால், இரண்டாவதாக திருமணம்செய்து கொண்டார். அப்பெண்ணின் கொடுமையால், மகன்களும், கந்தர்வ் சிங்கும் பாதிக்கப்பட்டனர்.  அவர், 2011 ஜூன் 6 ல் காணாமல் போனார். அவர் எப்படி திருநெல்வேலி வந்தார் என்பது தெரியவில்லை. கடற்படைதளம் அருகில் அடிக்கடி நிற்பதும், வேடிக்கை பார்ப்பதுமாக இருந்ததால் அதன் வாயிலாக அவர் யாரென கண்டறியப்பட்டுள்ளார்.  அவரது மகன்கள், மகிழ்ச்சியுடன் தந்தையைசொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

-  குற்றவழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி, வாட்ஸ்அப் இயக்குநர்கள் மற்றும் நோடல் அதிகாரிகள் மீது ஹரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இது தொடர்பாக கூறிய போலீசார், 'நாட்டின் சட்டவிதிகளை மீறி, தகவல்களை அளிக்க வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துள்ளது. இது சட்டப்படி குற்றம்,' எனக் கூறினர்.  இந்தியாவில் செயல்படும் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களும், தேவைப்படும் போது அரசுக்கு தேவையான விபரங்களை வழங்க வேண்டும் என்பது விதியாகும்.

-  விசாரணையில் நாஜிம்முக்கு ஏகப்பட்ட கடன்கள் இருப்பதால் தந்தை வைத்துள்ள ஏராளமான பணத்தை கறக்க நண்பர் உதவியுடன் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. நாஜிம், அமித் இருவரையும் கைது செய்த போலீசார், பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணத்துக்காக பெற்ற தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய இந்த வழக்கில் போலீசார் 8 மணி நேரத்தில் உண்மையை கண்டுபிடித்தனர்.

-  ''புதுடில்லி: நீதிமன்ற விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் 'யா யா' என்று கூறியதற்கு, ''இதென்ன காபி கடையா, நீதிமன்றத்தில் இவ்வாறு பேசக் கூடாது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கோபத்துடன் குறிப்பிட்டார்.  அது என்ன, யா யா? இந்த வார்த்தையை கேட்டாலே அலர்ஜியாக உள்ளது. 

-  உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணை கொடுமை வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு 65 வயதான மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

வரதட்சிணை வழக்கில் தலைமறவாக இருந்த பெண், 29 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

-  பணி அழுத்தம் காரணமாக தான் 45 நாள்களாக தூங்கவில்லை, எப்போதாவதுதான் சாப்பிட முடிந்தது, நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன், முடிந்தால் இலக்கை அடைந்துவிடு, இல்லையேல் வேலையை விட்டுச் சென்றுவிடு என மேலாளர்கள் மிரட்டிக்கொண்டே இருந்தார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர், பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், தலையில் காயத்துடன் வந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்தபோது, தலைக்குள் ஊசியை தவறுதலாக வைத்துத் தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-  ஆமதாபாத்தில் தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரியான மெஹூல் தக்கரிடம் மர்ம கும்பல் ஒன்று, பாலிவுட் நடிகரான அனுபவம் கெர் படம் அச்சிட்ட போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து, ரூ.1.3 கோடி மோசடி செய்துள்ளது. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  தங்கத்தை ஒப்படைத்த பிறகு, தக்கர் ஊழியர் ரூ. 1.3 கோடி பாதுகாப்பு வைப்புத்தொகையை ஆய்வு செய்ததில், அவை போலியான நோட்டுகள் என்பதைக் கண்டுபிடித்தார். மகாத்மா காந்தியின் படத்திற்குப் பதிலாக, அந்த நோட்டுகளில் பாலிவுட் நடிகர் அனுபவம் கெர் படம் இருந்தது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,) என்பதற்குப் பதிலாக 'ஸ்டார் பேங்க் ஆப் இந்தியா' என்ற முத்திரை இருந்தது.

-  மருத்துவ கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தவர்கள் அனுமதிக்கப்பட்ட தேதிக்குப்பின் படிப்பை கைவிட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.  ல்வி கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஒரு லட்சம் ரூபாய் வைப்பு தொகையும் திருப்பி தரப்பட மாட்டாது. இந்த நடைமுறை மூன்றாம் மற்றும் இறுதி கட்ட கவுன்சிலிங்கில் பின்பற்றப்படும்.

-  கோவை : சித்தாப்புதுாரில் துாய்மை பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு, பார்ப்பதற்குதான் பளபளப்பாக இருக்கிறது. ஆனால் குடத்துடன் குடிநீரை ஏழாவது மாடி வரை, சுமக்க வேண்டிய அவலநிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, பெண்களின் வாழ்வில் 'விடியல்' விளக்கை ஏற்றி வைத்து சாதனை புரிந்துள்ளது தமிழக அரசு.

-  பத்து வருடம் குறைவு என்று தெரிந்தும் காதலித்து திருமணம் செய்து 8 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நடிகை ஊர்மிளா மடோன்கர் இப்போது விவாகரத்து கோரியுள்ளார்.

-  பிரசவ விடுமுறை முடிந்து வந்த 19 பெண் போலீஸாரை சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.  தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும்போது அவா்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு வசதியாக அவா்களுடைய பெற்றோா்களோ அல்லது கணவா் வீட்டைச் சாா்ந்தவா்களோ வசிக்கும் சொந்த மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா்.  முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் துறையில் அண்மையில் பிரசவ விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய 19 பெண் போலீஸாா், அவா்கள் சொந்த ஊா்களுக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.

டோக்கியோ: ஜப்பானில், மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்ததில், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது.



================================================================================================




==================================================================================================

படித்ததில் ரசித்தது...

நாகேஷ் அவரைப் பார்த்ததும் வாலி குஷியாகி, வாய்யா வாய்யா, நீ கூட இருந்தாதான் மூடே வரும் என்று ஆர்வமானார். வாலி, நாகேஷ் இருவரும் ரொம்பவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், கம்போசிங் களைகட்டியது. சிச்சுவேஷன் கேட்ட வாலி, எப்படி ஆரம்பிக்கலாம் சொல்லுய்யா என்றதும், நாகேஷ்
“அவளுக்கென்ன அழகிய முகம், அவனுக்கென்ன இளகிய மனம்” என்று அடியெடுத்து கொடுத்தார், அந்த அடியை பின்பற்றி வாலி, மளமளவென்று பாடலை எழுதி முடித்தார்.
யார் பாடுவது என்று யோசித்தோம். நாகேஷுக்கு எ.எல். ராகவன்தான் எப்போதும் பாடுவது வழக்கம். அந்த நேரம், அவர் ஊரில் இல்லை. நாகேசும் டி.எம்.சவுந்தரராஜன் பாடினால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தை சொன்னார். அதன் பேரில் டி.எம்.எஸ். வந்தார். கம்போசிங் ஹாலில், டி.எம்.எஸ்., எம்.எஸ்.வியிடம் மெட்டு கேட்டார். பாடல் வரிகளை கேட்டார். டி.எம்.எஸ். எப்போதும் தான் பாடப்போகும் நடிகரை தெரிந்து கொண்டு அவருக்கு ஏற்றபடி தன் குரலில் மாறுதல் செய்து கொண்டு பாடுவது அவர் வழக்கம். அதன்படி, இந்தப் பாடலை தான் யாருக்காக பாடுகிறேன் என்று கேட்டார். எம்.எஸ்.வி. “நாகேஷ்” என்றார். அவர் பெயரை கேட்டதும், டி.எம்.எஸ். கேலியாக சிரித்து, அவருக்கு பாடலா? அதை நான் பாடவா, அதுக்கு இவ்வளவு பெரிய செட்டப்பா, என்னடா இது சோதனை, எனக்கு ஏற்பட்ட வேதனை, என்று திருவிளையாடல் டி.எஸ். பாலையா பாணியில் சலித்துக் கொண்டார்.
நாகேஷ் எல்லாம் பாடி, அதை தியேட்டர்ல உட்கார்ந்து யார் பார்க்கிறது? என்று ஏளனமாக கேட்டார். அப்போது நாகேஷ் ரெகார்டிங் ரூமிற்குள் உட்கார்ந்திருந்தார். டி.எம்.எஸ். விமர்சனத்தை கேட்டு, அவரது முகமே மாறிவிட்டது. இருந்தும் பொறுமையாக இருந்தார். நாகேஷ் மனதில், ஒரு வைராக்கியம் உருவானது. டைரக்டர் கிருஷ்ணன், பஞ்சுவிடம் சொன்னார், ‘சார் டி.எம்.எஸ். சொன்னதை பொய்யாக்கி காட்டணும் சார்’ இந்த பாட்டுக்குன்னே ரசிகர்கள் திரும்ப திரும்ப இந்தப் படத்தை பார்க்கணும் சார். அந்த அளவுக்கு புதுப்புது விஷயங்களை இதில் சேர்க்கணும் என்று இதனை ஒரு சவாலாக ஏற்றார். டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தை மாஸ்டரா போடுங்க என்றார். அவர் இந்த மாதிரி பாடல் பண்ணுவதில் புகழ்பெற்றவர். அவர் வேறுயாரும் இல்லை, தற்போது இந்திய அளவில் டான்ஸ் மாஸ்டராக, ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவின் தந்தைதான். அவரை புக் செய்ததும், ஒத்திகைக்கு நாள் குறித்தார்.
நாகேஷ் இயல்பாகவே நல்ல டான்சர், ஆனாலும் பாடல் நன்றாக வரவேண்டும் என்ற நோக்கத்தில், பல நாட்கள் வந்து ரிகர்சல் செய்தார். உடன் ஆடுவதற்கு எந்த நடிகையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தபோது, நாகேஷ் சொன்னார் நடிகைகள் வேண்டாம், ஏன்னா அவர்கள் நல்லா நடிப்பார்கள். ஆனால் நல்லா டான்ஸ் பண்ணணுமே, அப்போதுதான் பாடல் காட்சிக்கு நல்லா இருக்கும். அதனால் சொல்லிக் கொடுத்த, ரிகர்சல் பண்ணின, டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் உதவியாளர் சாந்தாவை டான்ஸ் பண்ண வைக்கலாம். என் மூடுக்கு ஏற்ற மாதிரி பண்ணுவாங்க என்றார். நாங்களும் ரெகார்டிங் எப்படி நடக்கிறது என்பதை ஆடியன்சுக்கு காட்ட தியேட்டர் செட்டே புதிதாக போட்டு படம் பிடித்தோம். இப்படி நாகேஷ் பாத்திரத்தை உணர்ந்து ஈடுபாட்டுடன்முழு ஒத்துழைப்பு தந்ததால், அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் காட்சி மிகச் சிறப்பாக வந்தது. இதன் பிறகு, ஒரு நாள் கடற்கரையில் நான் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். அப்போது டி.எம்.சவுந்திரராஜனை சந்தித்தேன் என்னை பார்த்ததும் சொன்னார். ‘ஜெய்ச்சிடீங்களே அய்யா!, சர்வர் சுந்தரத்துல நான் பாடிய பாடல் எடுபடாது, தியேட்டர்ல ஆள் இருக்காது என்றேன். ஆனா, அந்த பாட்ட பார்க்கவே ஜனங்க வர்றாங்கன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சி அய்யா’ என்று வாழ்த்திவிட்டு சென்றார்.
நம்பிக்கை இழந்து பேசியவரையும், வியக்க வைத்த பெருமை, நாகேஷை சேரும்.
இந்தப்படம் சென்னையில், கிரவுன், ராக்சி, வெலிங்டன், கிருஷ்ணா, எல்லா தியேட்டர்களிலும் நூறு நாட்கள் ஓடியது. இதன் வெற்றியை கொண்டாட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒரே வேனில் புறப்பட்டு எல்லா தியேட்டர்களுக்கும் ரசிகர்களை சந்திக்க புறப்பட்டோம். கிருஷ்ணா தியேட்டரின் இடைவேளையில் நாகேஷ் பேசினார். எல்லோருக்கும் வணக்கம். இயக்குனர் பேசும்போது இந்த படத்தின் வெற்றிக்கு நாகேஷ் தான் காரணம் என்றார். நான் அதை ஒத்துக்கொள்ளமாட்டேன், என்று கூறிவிட்டு, நாகேஷ் ரசிகர்கள் மத்தியிலிருந்து, ஒரு பையனை சுட்டிக்காட்டி, தம்பி இங்க வாங்க என்று அவனை மேடைக்கு அழைத்தார். அவன் மேடைக்கு வந்ததும், தம்பி நீங்க இந்த சர்வர் சுந்தரம் படத்தை எத்தனையாவது முறையா பார்க்க வந்திருக்கீங்க என்றார். அவன் நாலாவதுமுறையா பார்க்கிறேன் என்றான். உடனே நாகேஷ் கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவரிடம் தம்பி நீங்க? என்றார். அவன் ஐந்தாவது முறை என்றான். உடனே நாகேஷ், பார்த்தீங்களா ஒவ்வொருத்தரும் ஒருமுறைக்கு மேல் பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கீங்க. இப்போ புரியுதா இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துருக்குன்னா அதுக்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான் என்று சொன்னார். அப்படி ஒரு புத்திகூர்மையான சிறந்த மனிதர், திறமையான நடிகர் நாகேஷ்.
இதனை அவரிடம் எங்கள் தயாரிப்பில் உருவான ஒவ்வொரு படங்களிலும் நாங்கள் பார்த்தோம்.
ஏ.வி.எம்.குமரன்,
நிர்வாக இயக்குனர்,
ஏ.வி.எம் நிறுவனம்.
நன்றி: தினத்தந்தி


==================================================================================================

பழைய தினமணியில் படித்தது...

பிரியங்கா நேரு காந்தி, பிரியங்கா நேரு வதேராவாக மாறிய அந்தத் திருமணச் சடங்குக்கும், அதற்குப் பின்னால் நடந்த விருந்துக்கும் அழைக்கப்படாதவர் வேறு யாருமல்ல, சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும், அவரது மகன் வருண் காந்தியும்தான். இந்திரா காந்தி இருக்கும்போது அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவரும், ராகுல், பிரியங்கா இருவரையும் குழந்தைகளாகத் தூக்கி வளர்த்தவர்களில் ஒருவருமான ஆர்.கே.தவானும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

அந்தத் திருமண நிகழ்வு குறித்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஷீலா கெளலை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது நான் கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல்கள் இவை. மேனகாவை அழைக்க வேண்டாமா என்று அவர் கேட்டதாகவும், "நோ' என்கிற ஒற்றை வார்த்தையில் அதற்கு சோனியா முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பிரியங்கா - வதேரா திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, மேனகா காந்தி என்ன செய்து கொண்டிருந்தார்? எங்கே இருந்தார் என்று நான் விசாரிக்க முற்பட்டேன். தனது மகனுடன் குருத்வாரா ரகாப்கஞ்சில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் அந்த குருத்வாராவுக்கு, ஹிந்துக்கள், சீக்கியர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் பஞ்சாபியர் அனைவரும் சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.  இந்திய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் அமைந்திருக்கும் அந்த குருத்வாராவுக்கு முக்கியமான பலரும் அமைதி தேடிப் பிரார்த்தனைக்குச் செல்வதுண்டு.

தானும் குழந்தையும் அழைக்கப்படவில்லை என்கிற வருத்தத்தைத் (அவமானத்தை) தாங்க முடியாமல் அமைதி தேடி மேனகா குருத்வாராவுக்குச் சென்றாரா, இல்லை தான் பார்த்து வளர்ந்த குழந்தை நன்றாக வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்யச் சென்றாரா என்பதை அவர்தான் சொல்ல முடியும்.


===================================================================================================

நன்றி J பிரதாபன், ஃபேஸ்புக் 


==================================================================================================

பொக்கிஷம் 





யார் இந்த வீட்டு எஜமானி? தெரிகிறதா?



85 கருத்துகள்:

  1. அவளுக்கென்ன... பாடல் நிகழ்வு ஏற்கனவே கேட்டதுதான். ஒவ்வொரு திரைப்பாடலும் வெற்றிபெற பலரின் உழைப்பும் ஈடுபாடும் காரணமாக அமைகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரணமாகவே TMS சற்று கொனஷ்டை பிடித்தவர் போல..   பாட்டு பதிவு செய்வதற்குள் நிறைய சண்டைகள் வருமாமே..   T ராஜேந்தரை அவர் பேசியது போலவே கிண்டல் செய்து அவர் பேசிய காணொளி  முகம் சுளிக்க வைத்தது.

      நீக்கு
  2. கடைசி நகைச்சுவை இங்கேயே வந்திருக்கிறதா இல்லை சமீபத்தில் வாட்சப்பில் படித்தேனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயே படித்த ஞாபகம், எனக்கும்.

      நீக்கு
    2. நிச்சயம் இங்கே வரவில்லை...




      என்று நினைக்கிறேன்!

      அப்படி வந்திருந்தால் அதன் கூட இருக்கும் ஜோக்ஸும் பார்த்திருக்க .வேண்டும்.  ஒரு புத்தகத்தைப் பிரித்து வரிசையாக எடுத்து வருவேன்.

      நீக்கு
  3. சோனியா பழிவாங்கும் குணம் உடையவர். அவருக்கேற்ற பிள்ளை ராகுல் இப்போது இந்தியாவை பழிவாங்குகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் அறிந்து செய்தார்கள்.  இவர் அறியாமல் செய்கிறார்.  ஆனால் அனாயாசமாக செய்கிறார்கள்!

      நீக்கு
  4. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் ஒரு ஞாயிறு வந்தது போல இருந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... அவ்ளோதான்.. அடுத்த வாரம் வெட்டி அரட்டைதான்!

      நீக்கு
  6. சிறப்பான தொகுப்பு., இன்றைய பதிவு அருமை..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. பன்னாடைகள் பலவும் பண்டிதராய் அலைகையிலே சௌந்தரரின் குறை குறையே அல்ல!..

    பதிலளிநீக்கு
  9. சௌந்தரரின் வித்யா கர்வம் இயல்பானதே..

    நான்கு மாத அழுக்குத் தாடிகள்
    ஆ.. தாடி..
    ஆத்தாடி!.. என்று இங்கே அலைகின்றனவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுபது வயதைக் கடந்த நிலையில் ராஜேந்தரை அவர் போலவே உடல்மொழி செய்து பேசி, பாடி கிண்டல் செய்தது பார்க்க ரசனையாயில்லை, நன்றாயில்லை.  வாய்ப்பில்லாததால் நிறைய 'பேசிக்கொண்டிருந்தவரை SPB அவர் வீடு தேடித் சென்று பேசி ஆற்றுப்படுத்தியதாய் கூட படித்தேன்.

      நீக்கு
  10. நின்று நிதானமாய் கோணம் பார்த்து எடுக்க முடியாமல் கிடைத்த அவசரத்தில் எடுத்த புகைப்படங்கள் ஆகையால் சிறப்பாக இல்லை என்றாலும் ஷார்ப் ஆக உள்ளன. படங்கள் செல் போனா, அல்லது காமெராவா?

    மழைக்கவிதைகள் மூன்றுமே கருத்து பிழை இருப்பதாக கருதுகிறேன். 1. காற்று தான் மேகங்களை கொண்டு வந்து மழை பெய்விக்கிறது. கலைக்கவில்லை. பெய்வது (புயல் மழை). 2. இரண்டாவது கவிதையில் (மழை பிடிக்கும்) படம் சரியில்லை. மழை எப்போது கோள வடிவில் கருப்பு வெள்ளையாய் பெய்திருக்கிறது.? 3. வானத்தில் ஏற்ப்படும் மின்னலை வானம் எப்படி படம் பிடிக்க முடியும். செல்பியா? மேகம் எப்படி உடனே பார்த்தது கை தட்ட முடியும்?

    பா வெ லீவிலா? இன்றைய நியூஸ்ரூமில் பெயர் இல்லை.

    பிரியங்கா கல்யாணத்திற்கு யார் யாரை அழைக்கவில்லை என்பதை தற்போது ஏன் ஆராயவேண்டும்? 27 வருடங்கள் ஆகி விட்டனவே!

    பிரதாபன் செய்தி புனைவு எனறு கருதுகிறேன். சூரியனை ஒரு தடவை சுற்றி வரும்போது பூமி தன்னைத்தானே 365 சுற்றுகள் தான் சுற்றுகிறது என்பதே என்னுடைய அறிவு. ஆனால் ஜோதிஷ சாஸ்திரம் பிரகாரம் சனி 12 ராசிகளையும் சுற்றி வர ஏறக்குறைய 30 ஆண்டுகள் என்பது பொருந்தும்.
    ஜோக்குகள் பரவாயில்லை ரகம் தான்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் செல்போன்தான்.

      1. சில இடங்களில் கூடி இருக்கும் மழை மேகங்களை காற்று தள்ளிக்கொண்டு போய்விடுவதைபோ பார்த்ததில்லையா?  2.  படம் நான் எடுத்ததில்லை.  இணையத்திலிருந்து எடுத்துக் போட்டது!  புகைப்படக்காரரின் திறமை.  3.  வானத்தில் மின்னுவது போட்டோ பிளாஷ்.  இடி கைதட்டுவது போல.

      பா வெ ஆமாம்.  அவர் தற்செயல் விடுப்பு எடுத்திருக்கிறார்.

      மேனகா மேட்டரை எப்போதோ யாரோ ஆராய்ந்ததை இங்கு பகிர்ந்திருக்கிறேன்!

      எனக்கு ஜோதிடமும் தெரியாது, வானியல் விஞ்ஞானமும் புரியாது.  எனவே ஜஸ்ட் ஷேர்ட்!

      ஜோக்ஸ்...   ஸோ..  ஸோ....

      நன்றி JKC Sir 

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய கோவில்கள் பகிர்வு மிக நன்றாக உள்ளது. உடனிருந்து நாங்களும் கோவில்களை தரிசித்த உணர்வு அடைந்தேன். கோபுர தரிசனங்கள், நீங்கள் சொன்னது போல மூலஸ்தான இறைவனையே காணும் வாய்ப்பு அனைத்தையும் பெற்றேன். படங்கள் அனைத்தும் அழகாகவும், ரசனையாகவும் இருக்கிறது.

    இறைவன் இல்லை என்ற வாதத்தில்தான் ஹிரண்யகசிபு வதம் செய்யப்பட்டான். (படங்களின் விமர்சன எழுத்துக்களில்) இதில் "வா"வுக்கு துணை எழுத்து தேவையில்லை. அதனால் வாதத்தை வதமாக்கி விடுங்கள். குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும்.

    தாங்கள் நேற்று என் பதிவுக்கு வந்து கருத்துக்களை தந்தமைக்கு மிக்க நன்றி. நேற்று வெளியில் சென்றிருந்த நாங்கள் வீடு திரும்ப இரவு தாமதமாகி விட்டதால் அனைத்திற்கும் பதில் கருத்து பிறகு தருகிறேன். இங்கும் கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் இல்லை என்ற வாதத்தில்தான்...   ஹா..  ஹா..  ஹா...   பார்த்துப் பார்த்து நிறைய பிழைகள் சரி செய்தேன்.  அப்படியும் இப்படி ஒன்றிரண்டு விட்டுப்போய் விடுகிறது!  சரி செய்து விட்டேன்.  நன்றி அக்கா.  அழகாகச் சொன்னீர்கள்!

      பதில்கள் மெல்லச் சொல்லுங்கள் அக்கா.  அவசரமில்லை.  காத்திருக்கிறேன்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    தங்களின் மழைக்கவிதைகள் மூன்றும் ஜகத்ஜோதியாக நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன். வானம், மழை, காற்று, இடி, மின்னல் இவையனைத்தும் சேர்ந்த வார்த்தை அலங்காரங்களுடன் கவிதைகள் படிக்க நன்றாக உள்ளது.

    கடைசி ஜோக் இங்கு முன்பே படித்ததாகத்தான் எனக்கும் நினைவு. சகோதரர் நெல்லைத்தமிழர்அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னதும் நானும் கடைசிக்கு சென்று அதைப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "ஜகத்ஜோதியாக" !!! __/\__

      அச்சச்சோ...   கடைசி ஜோக்கை நீக்கி வேறொன்று வெளியிடவா?

      நீக்கு
  13. ஸ்ரீமந் என்று இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. பொக்கிஷம் - 5 ஜோக் ஏற்கனவே வெளியானது தான்.

    பதிலளிநீக்கு
  15. அபிஷேகப்பாக்கம் கோயில் அந்தக் கோடு வெயிலா??? அது ஜெட் போன புகை போல இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கேமிராவில் மட்டுமே தெரிகிறது.  ஜெட் புகை போலவா இருக்கு?

      நீக்கு
  16. இந்தப் பிள்ளையார் , ராஜீவ்காந்தி மருத்துவமனை எல்லாம் கடலூர் ரோடில் பார்த்திருக்கிறேன்!! பாண்டிச்சேரில இருந்தப்ப இந்தப் பக்கங்கள் எல்லாம் நிறைய போயிருக்கிறேன்.

    அட அந்த டேபிள் இண்டக்ஷன் சூப்பரா இருக்குதே!

    மழைத்துளிகள் கார்க்கண்ணாடியில் பட்டு அந்த ஃபோட்டோ வித்தியாசமான தோற்றம் நீங்கள் சொல்லியிருப்பது போல்...அழகாவும் இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  உங்க ஏரியாவா?  போட்டோ பார்க்க நன்றாயிருக்கு இல்லே?  எல்லா ஹோட்டல்களிலும் இப்படி வசதி வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

      நீக்கு
  17. அது என்ன லாரியில் இரு கைகள்?!

    மேகங்களின் ஜாலம் சூப்பர்!

    தாமரை மலர் மாலை ரொம்ப அழகா கட்டியிருக்காங்க!

    சந்நதியின் பின்புறம் உப்பு நானும் பார்த்திருக்கிறேன், ஸ்ரீராம் ஆனா அது எதுக்கு என்று நானும் அறிய நினைக்கலை...அதனால தெரியலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி சந்தேகங்களுக்கெல்லாம் கீதா அக்கா பதில் சொல்வாங்க..  ஆனா அவங்க அக்கேஷனலாத்தான் வர்றாங்க...

      நீக்கு
  18. தாயார் சன்னதிக்குள் பூனாச்சு செம க்யூட்டா இருக்கு. குட்டி போல!!
    சாமியையே காட்டிக் கொடுக்க தயாராய் இருந்தார்//

    ஹாஹாஹாஹா சாமிய எதுக்குக் காட்டிக் கொடுக்கணும்...ஓ! சாமி இங்கதான் ஒளிஞ்சுருக்காரு ரகசியமா 10 ரூ கொடு காட்டறேன்னாரா அந்தப் பாட்டி!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது சாமியை போட்டோ எடுத்தா OK ன்னு விட்டுட்டார்.  நான்தான் எடுக்கலை.

      நீக்கு
  19. கொஞ்சம் கவனித்தால் பெருமாளே தெரிவார்...!//

    ஹிஹிஹிஹி எம்புட்டு கவனிச்சாலும் எங்க தெரியராரு?சொல்லுங்க!!! உங்களுக்கு அப்படிச் தெரிஞ்சா சொல்லுங்க ஸ்ரீராம் நான் ஓடோடி வந்திடுவேன்..அதுவரைக்கும் பிடிச்சு வைச்சுக்கணும் நீங்க!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா.. ஹா...   தெரியலையா...  தெரிவாரோன்னு பார்த்தேன்.  நான் நேர்ல பாத்துட்டதால முயற்சிக்கலை!

      நீக்கு
  20. கோபுரங்கள் சிற்பங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன.

    ஓட்டுநரை அனுப்பிய நண்பர் முதலிலேயே ரேட் சொல்லலையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்னார். ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி சொன்னார். அதைச் சொல்லவே எரிச்சல் ஆகுது கீதா.

      நீக்கு
  21. முன்னாள் எம் பி - யாரைத்தான் நம்புவதோ??!!!! நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், சி பி ஐ?

    சிக்கமகளூரு செய்தி சிரிப்பை வரவழைத்தது. நல்ல காலம் போலீஸ் அவரைக் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லவில்லை!!

    அப்படியே சமூக வலைத்தளங்களுக்கு அரசு கட்டுப்பாடுகொண்டுவந்தால், நடவடிக்கை எடுத்தால் நல்லது. யுட்யூப் பற்றி கூகுளில் பணியாற்றும் என் உறவினர் பையன் இன்று பேசினார். கடினமாம். இருந்தாலும் குறிப்பாக எந்த சானல்கள் அப்படி செயல்படுகின்றன என்று பெயரை அனுப்புங்க சொல்லிப் பார்க்கலாம். இல்லைனா நாமே யுட்யூப் கம்ப்ளெயின்ட் பக்கம் போய் அங்கு புகாரைப் பதியலாமாம்.
    இல்லைனா யாரைப் பத்தி அவங்க அப்படிப் பேசறாங்களோ அந்த நபர் தனியாகப் புகார் அளித்தால் அல்லது சங்கம், குழு என்றிருந்தால் நல்லது. பொதுமக்களின் சார்பில், சமூக அக்கறையில் நீங்க சொல்வது கடினம். ஏன்னா எல்லா சமூக வலைத்தளங்களுமே மோசமாகத்தான் பதியறாங்கன்னு.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. யா...யா என்பவர் இந்தத் தலைமுறை வக்கீலோ!!?

    மருத்துவப்படிப்பு சீட் குறித்த செய்தி சூப்பர்.

    பெண்காவலர்களுக்கான உத்தரவு நல்ல செய்தி

    டோக்கியோ குண்டு வெடிப்பு....இத்தனை வருடங்கள் கழித்து வெடிச்சிருப்பது ஆச்சரியம் அதே சமயம் நல்ல காலம் பெரும் சேதம் இல்லாமல் போச்சு..

    துபாய் செய்தி - வாயைப் பிளக்க வைக்குது இப்பூடியுமான்னு!!! பணத்தை வைச்சுக்கிட்டு என்ன செய்யணும்னு தெரியலை போல...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க கிட்ட இருக்கற பணத்துக்கு ஈக்வலா நம்ம அரசியல்வாதிகளிடம் இருக்கு...

      நீக்கு
  23. மழைக்கவிதைகள் நல்லாருக்கு ஸ்ரீராம். மூன்றாவது சூப்பர். இரண்டாவது ஏற்கனவே வாசித்த நினைவு.

    வேற வேற இடத்துல கச்சேரிக்கு மேகம் கொஞ்சம் குறைவா இருந்திருக்குமோ என்னமோ அதான் காத்து ஆங்கங்க பிரிச்சு அனுப்புதாருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கதம்பம் பதிவின் அனைத்து பகுதிகளும் சிறப்பு. அவளுக்கென்ன பாடல் குறித்த தகவல்கள் ரசித்தேன்.

    கோயில் உலா - வாடகை பல சமயங்களில் அதிகமாகவே வாங்குகிறார்கள். சில சமயம் அதிகம் வாங்கிவிட்டு, “உங்களுக்காக குறைவா வாங்கிக்கொண்டேன் என்றும் சொல்வார்கள்!”

    மற்ற பகுதிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். இவர்கள் ரெகுலராக எங்கள் காருக்கு வாடகை ஓட்டுநராக வருபவர்கள்.

      நீக்கு
  25. டி எம் எஸ் எவ்வளவுதான் அருமையான பாடகர், எனக்குப் பிடிக்கும் என்றாலும் அவரது வார்த்தைகள் மிகவும் மோசம். அவரைப் பற்றிக் கொஞ்சம் இப்படி சில இடங்களில் வாசித்த நினைவு. ஒரு வேளை அதீத திறமை உள்ளவர்களிடம் இப்படியான பிரச்சனைகள் இருக்கும் போல! நான் பார்த்த வரையில் கேஸஸ் இப்படி.

    நாகேஷின் குணம் வாவ் போட வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அதீத திறமை இருப்பவர்கள் சட்டென ஒரு மாதிரி அவ்வப்போது பேசி விடுகிறார்கள்.

      நீக்கு
  26. பிரியங்கா கல்யாணம் செய்தி அறிந்ததுண்டு.

    இங்கிலிஷ் தமிழ் காப்பி எல்லாம் அப்போவே இருந்திருக்கு!

    யார் அந்த வீட்டு எஜமானி? ம்ஹூம் தெரியலை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​எழுத்தாளர் லஷ்மி. விகடனில் இருண்ட கானகத்தில் எட்டு ஆண்டுகள் என்று ஒரு தொடர் எழுதினார். அவரின் ஆப்பிரிக்க வாழ்க்கை பற்றி. அதிலிருந்து எடுத்த படம்.

      நீக்கு
    2. இருண்ட "கண்டத்தில்" எட்டு ஆண்டுகள்! தொடர் அது! அப்போல்லாம் அப்பா விகடன் வாங்கிக் கொண்டிருந்தார். மிகவும் ரசித்துப் படித்த கட்டுரைத் தொடர். லக்ஷ்மியின் நாவல்களை விட நன்றாக இருந்தது. பைண்டிங் கூட இருந்தது. பின்னாட்களில் பேப்பர்/பேப்பராகக் காத்தாடி மாதிரிப் பறந்து விட்டன.

      நீக்கு
  27. கோயில் ஃபோட்டோஸ் எல்லாமே மிக அருமை. அனுபவ விவரணங்கள் உட்பட.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. எல்லா வீட்டிலும் வீட்டு எஜமானிகள் தானே விருந்து தயாரிப்பார்கள்? இவங்க என்ன விவிஐபியோ/

    பதிலளிநீக்கு
  29. டி எம் எஸ்ஸா இப்படி? ஆச்சரியம். நாகேஷ் படத்தின் வெற்றிக்குக் காரணம் ம் 3, 4 முறை பார்த்த ரசிகர்கள் தான் காரணம் என்று சொன்னதுமிக அருமை,

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரிடமும் ப்ளஸ்ஸும் இருக்கும், மைனஸும் இருக்கும் இல்லையா துளஸிஜி?

      நீக்கு
  30. உங்கள் கவிதைகள் மூன்றுமே ரசித்தேன். அதிலும் மின்னல் ஃபோட்டோ எடுத்ததும், இடி கைதட்டியதும் நல்ல கற்பனை.

    எங்கள் தளத்திலும் மின்னல் என்று ஒரு ஹைக்கூ எழுதப்பட்டிருந்த நினைவு. கீதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது எழுதியது அது.

    பிரியங்கா காந்தி தகவல், நியூஸ் ரூம் செய்திகள் (ஒரு சில தவிர), அறிவியல் ஒப்பீட்டுத் தகவல் எல்லாமே புதியவை.

    பொக்கிஷம் ஜோக்குகள் நன்று. அந்தப் பெண்மணி யாரென்று தெரியவில்லை.

    துளசிதரன்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி.  அந்தப் பெண்மணி எழுத்தாளர் லஷ்மி.

      நீக்கு
  31. கோவில் படங்கள் தரிசித்துக் கொண்டோம்.

    நியூஸ்ரைம் பல செய்திகளையும் அறிகிறோம்.

    கவிதை, பொக்கிசம் என நல்ல பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  32. நாகேஷ் பற்றிய செய்தி எம்மாம் நீளம்? டி.எம்.எஸ். அப்படிக் கேட்டதே புருடாவாக இருக்கலாம். ஏன்னா, நாகேஷ் தானே அந்தப் படத்தின் நாயகன்? நாயகனுக்கு இல்லாத முக்கியத்துவம் வேறே யாருக்கு? என்னவோ போங்க. இந்த சினிமாச் செய்திக்கெல்லாம் ரிஷிமூலம் நதி மூலம் கண்டுபிடிப்பதே துர்லபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பந்தப்பட்டவர்களே சொல்லி இருக்கிறார்களே...   நம்புவதும் நம்பாததும் உங்கள் சாய்ஸ்!

      நீக்கு
  33. சிண்டு முடியற செய்திகளின் ராசியே சொல்றதைச் சொல்லிட்டு 'அவர் தான் சொல்லணும்' என்றே முடியும். அவர் தான் சொல்லணும் என்கிறதுக்கு எதுக்கய்யா இவ்வளவு நீட்டி முழக்கி ஒரு செய்தி? அவர் தான் சொல்ல முடியும் என்றால் இவ்வளவு எழுதினவங்க அவங்க கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டு அதையும் எழுதிடாமில்லே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விப்பட்ட விஷயத்தை சொல்கிறோம்.  இப்படி ஒரு விஷயம் எல்லா இடங்களிலும் உலா வருதுன்னு தெரியாதவர்களுக்கு தெரிய வைக்கறோம்.  உண்மையான்னு கேட்டால் அதுதான் பதில்.

      நீக்கு
    2. உங்களைச் சொல்லலே! இந்த 'டைப்' செய்திகளைக் குறித்து சொன்னது அது!

      அட! பத்திரிகை செய்திகளை கிண்டல் அடிப்பதைக் கூடப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே!

      நீக்கு
  34. அடடா! மழையைப் பத்தின கவிதையா அது?
    பளீரிட்ட வெளிச்ச பிரகாசத்தில் ஏதோ டிரில் செய்கிற மாதிரி பின்புறத்தில் எடுக்கப்பட்ட அந்தப் படத்துப் பெண்ணைப் பத்தினக் கவிதையா இருந்திருந்தா எவ்வளவு ஜோரா.... இப்பத்தான் என்ன? இதே படத்தைப் போட்டு அடுத்த வாரம் அந்தக் குமரியைப் பத்தின கவிதை ஒண்ணு எழுதிடுங்க...

    பதிலளிநீக்கு
  35. அந்த 'யா..யா..' விஷயத்தில் தலைமை நீதிபதி 'இது என்ன டீக்கடையா?' என்று கண்டித்தது இரண்டு தடவை வந்திருக்கு, பாருங்க!

    பதிலளிநீக்கு
  36. அரபு எண்கள் (Arabic Numerals) 0...முதல் 9 வரை
    கணக்கிடுதல் வராகமிகிரர் காலத்திலும் இருந்ததா, என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியலையே...  வாட்ஸாப் செய்திகளை எல்லாம் பகிர்ந்து படுத்தும்போது இப்படி நேர்கிறது.  கலிலியோ காபி அடித்தார் என்று சொல்லும் முயற்சி.

      நீக்கு
  37. 'அது ஒரு Towing service வண்டி சார்!'-- எது என்று கண்டுபிடியுகள் பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!