12.8.25

ஒரே ஒரு ஊரிலே - தொடர் கதை - ஸ்கை :: பகுதி 04

 

முன்னறிவிப்பு : 

அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க. 

முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" 

= = = = = = = = = =

முந்தைய பகுதி சுட்டி <<<

" யோவ். என்ன நீ பாட்டுக்கு சர்ர்னு உள்ளே போய்ட்டே. எங்களை டோஸ் வாங்க வச்சிட்டியே " என்று காவலர் கடிந்து கொண்டார்.

"மன்னிச்சுக்கங்க அண்ணே. ரெண்டு பேருக்குமா சேர்த்துதான் அனுமதி கொடுத்து இருந்தாங்க" ராஜா நாற்காலியிலமர்ந்து கடிகாரத்தைப் பார்த்தான்.‌

சற்று நேரம் கழித்து ராமசாமி வெளியே வந்தார். முகம் சற்று இறுக்கமாக இருந்தது.

காரில் ஏறி அமர்ந்து கதவைச் சாத்தியதும் வண்டியை கிளப்பாமல் அவரைப் பார்த்து " என்ன சார் ? முதல்வர் என்ன சொன்னார்? ஒரே மவுனமாய்ட்டீங்க ? " என்று கேட்டான் ராஜா.

" விசேஷமாக சொல்றதுக்கு ஒண்ணுமில்லை . அவர் கையில ஒரு தாளைக் கொடுத்தார்கள். அதில் என்ன பத்தின எல்லா விவரமும் இருக்குன்னு எனக்கு புரிஞ்சு போச்சு அதை ஒரு பார்வை பாத்துட்டு நீங்க **தானே அப்படின்னு என் ஜாதியை கேட்கிறார் முதல்வர். நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை 'ஆம்' என்று தலையாட்டி வச்சேன். அடுத்தபடியா ' அமைச்சர் ஆகப் போறீங்க . பெரிய பொறுப்பு. கட்சிக்கும் எனக்கும் நல்ல பேர் வர்ற மாதிரி பணியாற்றுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ' னு வணக்கம் போட்டு கை கொடுத்தார்.

'வேறே ஏதானும் வேணும்னா அன்பு கிட்ட கேட்டுக்கோங்க' னு சொன்னார். அன்பரசு அவரோட தனிச் செயலாளர். உனக்குத்தான் தெரியுமே."

 மௌனமாக நடந்து வந்து இருவரும் காரில் அமர்ந்தார்கள்.

" ராஜா, நம்ம ரெண்டு பேருக்கு நடுல ஒளிவு மறைவு இல்லைனு நீ நினைக்கிறது எனக்குத் தெரியும். ஆனா நான் உனக்கு சொல்ல வேண்டியது நிறையவே இருக்கிறது. ஊருக்குப் போனப்புறம் சாந்தியையும் அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வா. பேசிக்கலாம்". ராஜாவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. "சரி ஐயா" என்பதற்கு மேல் இருவரும் ஊர் வரும்வரை எதுவும் பேசவில்லை

** ***

ஊர் வந்து சேர்ந்ததும் ராமசாமி ராஜாவை பார்த்து " நேரா பண்ணை வீட்டுக்கு விடு. உன்கிட்ட ஒரு பத்து நிமிஷம் பேசணும்." என்றார். உள்ளே போய் காஃபிக்கு சொல்லி விட்டு தனியறைக்குள் வசதியாக உட்கார்ந்து கொண்டார்கள். கொஞ்ச நேரம் நிசப்தமாகக் கழிந்தது.

ராமசாமி என்ன சொல்லப் போகிறார் ? மனம் பல சாத்தியக் கூறுகளை வரிசையாக எண்ணிப் பார்த்தது . ராஜா சுவற்றில் இருந்த படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். ராமசாமிதான் மௌனத்தைக் கலைத்தார்.

"என்னைப் பத்தி என்ன நினைக்கிறே ? "

" இதென்ன புதுசாக் கேக்கறீங்க ? நீங்க நல்ல மனுஷர். என்மேல நல்ல அபிப்பிராயம் வச்சிருக்கறவரு. நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவரு. இதுக்கு மேல என்ன வேணும் ? "

" நீ சொன்னது சரிதான் . கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் கேட்க வந்தது இன்னும் கொஞ்சம் ஆழமான சமாச்சாரம். நீங்க நல்ல ஆளுன்னு சொன்னே. எவ்வளவு நல்ல ஆளு ? அரிச்சந்திரன் மகாத்மா காந்தி மாதிரியா ? இல்ல பால்ல டிகாஷன் கலந்த மாதிரி கொஞ்சம் வெளுப்பு கம்மியா ? "

" நீங்க ஒளிவு மறைவு இல்லாம மனம் விட்டு பேசணும்னு நினைச்சு என்னை இங்கே அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நானும் ஒளிவு  மறைவு இல்லாம பேசணும் . அதுதான் நியாயம். ஆனா நான் ஏதோ சொல்ல போக நீங்க கோவிச்சுக்கிட்டு ' இந்தாப்பா உனக்கும் எனக்கும் சரிப்படாது. நாளையிலிருந்து நீ யாரோ நான் யாரோ ' அப்படின்னு விரட்டி விட்டுவிடுவீங்களோ அப்படிங்கற பயம் வருது."

" அப்படியெல்லாம் நீ நினைக்க வேண்டாம் . ஒருவேளை நீயே என்ன விரட்டிடலாம். அந்த பயம் எனக்குக் கூட உண்டு . அதனாலதான் இத்தனை நாள் உன்கிட்ட சில விஷயங்களை சொல்லாம மறைச்சு வச்சேன்."

 " ஐயா இப்ப கூட நீங்க ஏதாவது ஏடாகூடமாக சொல்ல வேண்டி இருந்தா தயவு செய்து எனக்கு சொல்ல வேண்டாம். உங்க மேல நான் வச்சிருக்கிற நல்லபிப்ராயம் மரியாதை இதெல்லாம் இப்படியே இருக்கணும்ங்கறதுதான் என்னுடைய ஆசை . "

இந்த வார்த்தைகள் ராமசாமியை மிகவும் சந்தோஷப்படுத்தி இருக்க வேண்டும். அவர் மிகுந்த முக மலர்ச்சியுடன் பேசத் தொடங்கினார்.

 " தம்பி ! நீ இப்படி சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆண்டவன் புண்ணியத்துல நம்ம சினேகம் இப்படியே எப்பவும் இருக்கட்டும். "

சிறு மௌனத்துக்குப்பின் அவரே பேசினார். " நான் கேட்டதுக்கு பதில் சொல்லவில்லையே. மறுபடி கேட்கிறேன் சொல்லு. நான் அரிச்சந்திரன் மகாத்மா காந்தி மாதிரி பரமயோக்கியன்னு நினைக்கிறியா ?"

" நான் முந்தியே சொல்லி இருக்கேன் தப்பா நினைக்க வேண்டாம்னு. அந்த தைரியத்துல பேசறேன். தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க. " தேர்தல்னு சொல்லி பணத்தைத் தண்ணீரா எல்லார் மாதிரியும் நீங்களும் செலவழிச்சீங்க . 'என்னடா இவர் வேற மாதிரின்னு நினைச்சோமே' என்று என் மனசுக்குள்ள ஒரு சின்ன சஞ்சலம் வந்தது உண்மை மத்தபடி ...."

ராமசாமி இடைமறித்தார்.

" தம்பி நான் என்ன சொல்ல நினைச்சேனோ அதையே நீயும் கவனிச்சிருக்கே. " தேர்தல்ல ஜெயிக்க சாமி படம் பெண்டாட்டி பிள்ளைகள் படத்தை வைத்து சத்தியம் வாங்கிக்கொண்டு 200, 500 னு கொடுக்கிறேன். கொடி தோரணம்னு வாரி இறைக்கிறேன். சட்டமே லட்ச லட்சமா அனுமதிக்குது. அதுக்கு மேலயும் செலவாகுது. இத்தனைக்கு அப்புறம் அஞ்சு பைசா மேல சட்டத்துக்கு புறம்பாக வாங்கமாட்டேன் அப்படின்னு பிடிவாதம் பிடிக்க முடியுமா ? அதுவும் நாம கேட்காம தானாவே வர்ற காச வேணாம்னு சொல்ல யாருக்கு மனசு வரும் ? வலிய வர்ற ஸ்ரீதேவி என்று சொல்வார்கள்.‌ ரொம்ப யோசனைக்கு அப்புறம் நானும் இந்த முடிவுக்கு தான் வந்தேன் . நாமளா போய் யார்கிட்டயும் எதுவும் கேட்காத போது தானா வரத வாங்கிக்கலாம். அதுல கட்சிக்கு கொஞ்சம் மேல இருக்கிறவங்களுக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு நாம் கொஞ்சம் நிறுத்தி வைத்துக்கொள்ளலாம். போட்ட காசை எடுக்கிற வரைக்கும் இப்படி செஞ்சா தப்பில்லை என்றுதான் ஆரம்பிச்சேன். இப்போ அதை நிறுத்த மனசு வரமாட்டேங்குது. இதோ இப்ப மந்திரிக்கு கூப்பிடுறாங்க.‌ அங்க நிலவரம் எப்படி இருக்குமோ. நான் மந்திரி ஆனா நீ எனக்கு உதவி ஆளா இருக்கணும். அரசாங்கமே அதுக்கு சம்பளம் கொடுக்குது.‌ அதை நீ வாங்கிட்டு முழு நேரமா எனக்கு வேலை செய்யணும் . மத்தபடி உனக்கு வேற இம்சை எல்லாம் தரமாட்டேன் . அதுக்கு வேற ஆட்கள் இருக்கிறார்கள். உதவியாளர் பதவிக்கு வர ஒத்துக்கிறியான்னு சொல்லு ."

" ஐயா நான் இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுக் குழம்பின விஷயம்தான். இன்னும் கொஞ்சம் யோசிச்சுப் பாத்து அப்புறமா  சொல்றேன்"

 " நல்லா யோசிச்சு பார்த்து அப்புறமா சொல்லு.‌ அப்பால  என்கிட்ட வந்து சிக்கலில் மாட்டி விட்டுட்டீங்களே’ன்னு   சொல்லக்கூடாது.‌" வீடு திரும்பிய ராஜா அவசரமாகத் தன்னைத் தயார் செய்து கொண்டு கடைக்குப் போய் அப்பாவை வீட்டுக்கு அனுப்பினான்.

* * *

சாந்திக்கு ஃபோன் செய்தான். “ சாந்தி! ராமசாமி சார் என்னை அவருடைய பி ஏ வாக வேலை பார்க்கச் சொல்கிறார். நீ என்ன நெனக்கிறே?”

“ எங்கிட்ட ஏன் கேட்கறே ? “

“ நல்லா இருக்கே நீ சொல்றது - நாளைக்கு நீதானே என்னுடைய லைப் பார்ட்னர்? அதனால உனக்கு என்ன மாதிரி வாழ்க்கை அமையவேண்டும் என்று நீதானே தீர்மானம் செய்யணும்!”

சாந்தி கொஞ்சம் யோசித்து, “ இப்போ என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியவில்லை. ஒண்ணு சொல்றேன் - சரியா என்று யோசி”

“ என்ன அது?”

“ ராமசாமி சார் கிட்ட, நம்ம கல்யாணம் முடியும்வரை வெயிட் பண்ணச் சொல்லு. அப்புறமா நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து முடிவு செய்வோம். “

“ அதுதான் சரி. “

* * * *

  மறுநாள் ராமசாமி ஃபோன் செய்தபோது, அவரிடம் ராஜா, “ சார் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல எனக்கும் சாந்திக்கும் கல்யாணம். நீங்க தாலி எடுத்துக் கொடுத்துதான் கல்யாணம் செய்துகொள்வேன். வேலை விஷயமாக கல்யாணத்திற்குப் பிறகு முடிவு செய்து சொல்லிடறேன். “

“ சரி தம்பி, உன் விருப்பம் போலயே ஆகட்டும்” என்றார் ராமசாமி. 

=‌ = = = = = = =

கோபி.

கோபி, பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். அவன் ஊரில் கல்லூரி இல்லை என்பதால் இந்த ஊருக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தான்.

படித்த காலத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தான்.

ராஜா படிப்பில் சுமாராக இருந்தாலும் தமிழ்ப் பேச்சு, கட்டுரை, விளையாட்டு போன்ற பல விஷயங்களில் திறமை பெற்றிருந்தான். மேலும் அவர்களின் குடும்ப வியாபாரமாகிய டெக்ஸ்டைல்ஸ் கடைகளுக்கும் அவன்தான் ஏகபோக வாரிசு.

ராஜாவையும் கோபியையும் இணைத்தது கிரிக்கெட் விளையாட்டு  மட்டுமே.

கோபிதான் கல்லூரி கிரிக்கெட் அணியின் கேப்டன்.

ராஜா வேகப்பந்து வீச்சில் நிபுணன்.

கல்லூரி படிப்பு முடிந்தபின் ராஜா கடை வியாபார நுணுக்கங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்தான். அவனுக்கு வேலை தேடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஆனால் கோபிக்கு அப்படி இல்லை. இந்த ஊரிலோ அல்லது தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு நகரத்திலோ வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை.

பேப்பரில் வந்த விளம்பரங்களைப் பார்த்து, 'மெடிக்கல் ரெப்' வேலைக்கு விண்ணப்பம் செய்து வேலையில் சேர்ந்தான்.

பெரிய மருந்து ஸ்தாபனம் ஒன்றின் பல 'மெடிக்கல் ரெப்'களில் கோபியும் ஒருவன் ஆனான்.

***

ஹாஸ்டலைக் காலி செய்தபின் அழகர் வீட்டு மாடியில் இருக்கும் சிறிய  போர்ஷனில் குடியேறினான் கோபி.

வீட்டில் இருக்கும் சமயங்களில் பெரும்பாலும் தன்னுடைய அறையில்தான் இருப்பாள் சாந்தி.

கோபி அவள் வீட்டின் மாடியிலேயே ஒரு போர்ஷனில் தங்கியிருந்தாலும் அவனை லட்சியமே செய்ததில்லை சாந்தி.

'சரியான ராங்கிக்காரி' என்று நினைத்திருந்தான் கோபி. 

கோபியைக் காண வந்த ராஜாவின் பார்வையில் ஆரம்ப காலங்களில் சாந்தி படவில்லை.

ஆனால் அடிக்கடி வந்த ராஜாவை ஒரு சமயம் பார்த்த சாந்தி, ' அட! நம்ம செல்வமீனா செக்கர் வானம்! இங்கே எங்கே வந்துச்சு?' என்று அதிசயித்தாள்.

அப்புறம் அவள் ராஜாவை தன் வலையில் பிடித்தது எல்லாம் நமக்குத் தெரிந்த பழைய கதை.

(தொடரும்) 

ஸ்கை கருத்துகள் : 

ஸ்கை : கதையைப் படிக்கிறவர்கள் ஏதாவது ரெண்டு வரிகளாவது கருத்து எழுதுங்க. 

துரை செல்வராஜூ:

இப்போல்லாம் மூஞ்சில புதரோட வர்ற கதாநாயகன்களைப் பிடிப்பதில்லை..
பதில்கள்
கௌதமன்:

அதே, அதே. எனக்கும் பிடிக்காது.
ஆனால் இந்தப் பதிவில் (29/7/25 ) இருக்கும் படம் வில்லன் என்று நினைக்கிறேன்.

சாரி கௌதமன் அண்ணா - வரதன் வில்லன் இல்லை.

துரை அண்ணா - ராஜா - நம்ம கதாநாயகன் - தாடி இல்லை என்பதை படத்தில்  கவனிக்கவும்!

என்றும் அன்புடன் 
ஸ்கை 
= = = = = = = = =

23 கருத்துகள்:

  1. சென்ற வாரம் படிக்காமல் விட்டு விட்டதால், கொஞ்சம் ஞே..!படித்து விடுகிறேன். நல்ல தேர்ந்த எழுத்தாளருக்கான நடை!

    பதிலளிநீக்கு
  2. இன்றைய படம் ராமதாஸ் அவர்கள் அன்புமணிக்கு அட்வைஸ் பண்ணுவது போல இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நினைத்தது போல்தான் நானும் நினைத்தேன்

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. AI generated படம்தானே? ஒரு வேளை ப்ராம்ப்ட் கொடுக்கும்போது, "ராமதாஸ், அன்புமணி" போல் படம் இருக்கவேண்டும் என்று ப்ராம்ப்ட் கொடுத்தாரா?

      நீக்கு
    5. ராமதாஸ் இங்கே உள்ள ராமசாமியை விட வயது முதிர்ந்தவர்.

      நீக்கு
  3. கதை நன்றாகச் செல்கிறது.....

    மிகுதிக்கு .........காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய நான்காவது பகுதி கதையும் நன்றாகப் போகிறது. ஸ்கை நன்றாக எழுதி வருகிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.

    திருமணம் முடிந்த பிறகு மந்திரியின் உதவியாளராக பதவி ஏற்கும் ராஜாவுக்கு பிரச்சனைகள் ஏதும் வருமோ..? என இன்றைய கதைப்போக்கு யோசிக்க வைக்கிறது. நடுவில் கோபி வேறு இவர்களது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக உருவெடுக்க போகிறானோ .? நல்ல திருப்பங்களுடன் கதை நகர்கிறது.அடுத்தப் பகுதிக்கு காத்திருக்கிறேன். ( ஸ்கையில் மறைந்திருந்து இல்லை. எர்த்தில் அமர்ந்தபடி இருந்துதான். :)) ) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா அட! நம்ம கருத்து கொஞ்சம் ஒரே பாயிண்டை சொல்லுது.

      உங்கள் பேத்தி யின் கை விவரங்கள் நேற்று பார்த்தேன் கமலாக்கா. சரியாகிவிடும். கவலைப்படாதீங்க.

      கீதா

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. ராஜா வுக்கு 7 1/2 சனி தொடங்கப் போகிறதா? ச்சே ச்சே...சனி ரொம்ப நல்லவராச்சே. நான் சொன்ன சனி, அரசியல்/அரசியல்வாதி.

    கோபி யின் பங்கு என்ன இக்கதையில் என்று யோசனை எழுகிறது. ஒரு வேளை சாந்தியைக் காதலிக்கிறானோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ கதையின் கடைசி வரிகளில் வருபவர்கள் கோபியும் சாந்தியுமா? ஸ்கை பதில் சொல்லுங்கள்.

      நீக்கு
  6. போன வாரம்தான் கதையில் இப்படி வந்தது
    /சாந்தி அடிக்கடி கடைக்கு வருவதும் ராஜாவும் சாந்தியுமாக மேலே போய்ப் பேசிக் கொள்வதும் பிறகு எங்கோ வெளியே போவதும் வருவதுமாக இருந்தது பற்றி மாப்பிள்ளை சார் ஜாடை மாடையாக செல்வத்திற்கு ஏற்கனவே சொல்லி இருந்தார்.‌ தனக்கு சாந்தி மேல் ஒரு பெரிய நல்ல அபிப்பிராயம் இருந்ததையும் செல்வத்திற்கு நன்றாகவே உணர்த்தி இருந்தார் மாப்பிள்ளை சார்./
    இந்த வாரம் இப்படி இருக்கிறதே?
    /ராஜா, “ சார் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல எனக்கும் சாந்திக்கும் கல்யாணம். நீங்க தாலி எடுத்துக் கொடுத்துதான் கல்யாணம் செய்துகொள்வேன்./
    இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்களா?
    இந்த இடத்தில்தான் ஸ்கை ட்விஸ்ட் வைத்திருக்கிராறோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் இருக்கும். பார்ப்போம்.

      நீக்கு
  7. கதை சுவாரஸ்யமாகத்தான் போகிறது. எங்கள் ப்ளாக் வாசகர்கள் யாரையும் கதையில் இரண்டு வாரங்களாய்க் காணோமே! நெல்லை, கீதா ரங்கனோடு மங்களம் பாடி விட்டாரோ ஸ்கை?

    பதிலளிநீக்கு
  8. "இந்த வார ஸ்கை கருத்துகளின் சாராம்சம் = ஸ்கை கௌதமன் சார் இல்லை" என்பதுதானோ? இல்லை, இன்டென்ஷனல் மிஸ்லீடிங்கா? I wonder!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூர்யா சார்... SKY என்று எழுதிப் பார்த்து ஒருவேளை ஆசிரியர்களைக் கண்டுபிடிக்கலாமோ? தெரியலை.

      நீக்கு
    2. நல்ல யோசனை. ஒருவேளை SKAI= KASU SOBANA + AI என்று இருக்குமோ?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!