17.8.25

ஞாயிறு பட உலா – நெல்லைத் தமிழன் நான் சென்ற இடங்கள் – மெக்சிகோ - படங்களுடன் - 11

 

சிச்சன் இட்ஸா மற்றும் பிற இடங்கள். 

நாம் சிச்சன் இட்ஸா என்ற வரலாற்றுச் சிறப்புள்ள இடத்தில் இருக்கிறோம். நாம் நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் மெக்சிகோ பழங்குடியினரின் (மாயன்) திருவிழாக்கள் நடக்கும் கோயில் அமைந்த இடமாக இருந்திருக்கிறது. சுற்றியும் உள்ள பல்வேறு குழுக்களும் விழாக்காலத்தில் இங்கு கூடுவார்களாம். தொல்லியல் துறையின் ஆராய்ச்சியின்படி சுமார் 50,000 மக்கள் இந்த இட த்துடன் தொடர்போடு இருந்தனராம்.

இட்ஸா கிணற்றின் வாயில் என்று அழைக்கப்பட்ட இந்த இடம்தான் அவர்களின் சமூக பொருளாதார ஆன்மீக இடமாக அமைந்திருந்தது (கிபி 600-1200)

Guide  சொன்னதைச் சிறிது நான் கேட்டுக்கொண்டேன். இந்த பிரமிடின் உச்சியில்தான் தலைவர்/அரசர் மற்றும் அமைச்சர்கள் இருப்பார்களாம். பூசாரியும் அவர்களுடன் இருப்பாராம். இங்குதான் தண்டனையும் பலியும் நடைபெறுமாம்.  குற்றம் சாட்டப்பட்டவர் பலி கொடுக்கப்பட்டு வீசி எறியப்படுவாராம். 

கூட்டம் வருவதற்குள் பிரமிடின் முன்னால் நின்று போட்டோக்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு அவள் கேமராவில் போட்டோ எடுத்துக் கொடுத்துவிட்டு, என்னையும் எடுக்கச் சொன்னேன்.



மேலே இருக்கும் கட்டிடத்தில் கடவுளர்களுக்கு ஏதேனும் உருவமோ சிலையோ இருக்குமோ? இருந்திருந்தால் guide காண்பித்த புத்தகத்தில் இருந்திருக்க வேண்டுமே.

நம்முடையது கருங்கல் கட்டிடம் (தளிகள் என்று சொல்கின்றனர்) இங்கு சிமெண்ட் பிளாக்போல, அல்லது சாந்துபூசின கற்கள் போல இருந்தன.


மிக அருகில் பார்த்தால் ஒழுங்குமுறை இல்லாத கற்களால் பிரமிட்டை உயர்த்திவிட்டு அதைச் சுற்றி கல் ப்ளாக்குகளை அடுக்கியிருப்பது போலத் தெரிகிறது.




படிகள் போல மேல வரைல செல்கிறது. ஏறக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. முன்னாலாம் ஏறிப் பார்க்கலாமாம். சின்னப் பசங்க ஏறுகிறேன் என்று சில பகுதிகளைச் சிதைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். கல் விழுந்தால் ஆபத்து என்பதால் ஏறுவதற்கு தடா. 



உள்ளேயே கடைகளெல்லாம் இருக்கும்படியாக ஒரு இடம் இருந்தது. நாங்கள் அங்கெல்லாம் செல்லவில்லை. நல்லவேளை மழை தூறலாகத்தான் இருந்தது.  பெரிய மழை பெய்திருந்தால், எங்களால் ஒன்றையும் பார்த்திருந்திருக்க முடியாது.


சுற்றுலாவிற்கு பேருந்தில் அழைத்துச் செல்பவர்களும், இந்த இடத்தில் உள்ள கடைகளில் உள்ள பொருட்கள் விலை மலிவானவை என்று தெரிந்தும் தனியாக கலைப்பொருட்கள் விற்கும் கடைக்குத்தான் அழைத்துச் சென்றிருந்தார்கள்.  அந்தக் கடை ஒழுங்குமுறையாக நடக்கும் கடையாக இருக்கலாம், இருந்தாலும் பொருட்கள் விலை மிகவும் அதிகம். இங்கோ விலை மலிவு.


இந்த முகமூடியை இப்போது பார்க்கும்போது பாகுபலி முதல் பார்ட் திரைப்படம் நினைவுக்கு வருது (தமன்னா-அப்போதிருந்த தமன்னா  ரசிகனுக்கு இது நினைவுக்கு வராமலிருந்தால்தான் ஆச்சர்யம். அந்தப் படத்தில் மிகவும் கவரப்பட்டு நான் இருந்த தேசத்தில் தியேட்டரில் தொடர்ந்து மூன்று நாட்கள் பார்த்தேன்.  நாலாவது முறையாக  என் குடும்பத்தோடு உதயம் காம்ப்ளக்ஸில் பார்த்தேன். சுமாரான ஃபீல், காரணம் கொஞ்சம் ஒழுங்குமுறை இல்லாத நம்ம மக்கள்தாம்)

அந்தக் காலகட்டத்தில் நம் கலாச்சாரம், திறமை (தமிழர்களின், இந்தியர்களின்) எங்கோ இருந்தது.  இவையெல்லாம் ஒப்பீட்டளவில் பார்க்கும்போதுதான் நம் திறமை, பாரம்பர்யம் நமக்கே புரியும். 

இந்தப் படங்களை இப்போது பார்க்கும்போதும் பயமாக இருக்கிறதே… இரவு சரியாகத் தூக்கம் வருமா?




படிகளின் இருபுறமும் பாம்பு இருப்பதுபோலவும், தரையில் அதன் வாய் பிளந்துகொண்டு இருப்பதுபோலவும் அமைத்திருக்கிறார்கள். மாயன் கலாச்சாரத்தில் பாம்புகளுக்கு ஒரு தனி இடம் இருந்திருக்கிறது  (மயன், நாக உலகம்…. இதுக்கெல்லாம் உள்ள தொடர்பை கீதா சாம்பசிவம் மேடம் சொல்லக்கூடும்)

எம்மாம் பெரிய பாம்புத் தலை.  நிச்சயம் அனகோண்டா போலத்தான் தோன்றுகிறது


இந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. தூரப்பார்வையில் எப்படி இருக்கிறது என்று கீழே கொடுத்துள்ளேன்.

இதனைப் பார்க்கும்போது சாரநாத்தில் நான் பார்த்த பெரிய கட்டிடம் நினைவுக்கு வருகிறது. அதுவோ செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப் பெரிய கூடம் மாதிரி அமைந்திருக்கிறது (படம்லாம் கயா யாத்திரையில் வரும்).  அதன் முன்னால் இருக்கும் புல்வெளியில் இருந்து வெளிநாட்டிலிருந்து வந்த பௌத்தர்கள் குழு (100 பேர்கள் இருக்கும்) புத்தகம் ஒன்றை விரித்து வைத்துக்கொண்டு அதை ராகத்துடன் வாசிக்கிறார்கள்.  அவர்கள் மனதில் நினைக்கும் புனிதத் தன்மையை மற்ற பார்வையாளர்கள் அறியாமல், அவர்கள் ப்ரார்த்தனை பண்ணும் இடத்திற்கும் கட்டிடத்திற்கும் குறுக்கே போய் வந்தார்கள்.  (அவர்கள் மனதில் நினைத்திருப்பார்கள்… இவனுவளுக்கு நாகரீகமே இல்லையே என்று)

இது இந்த இடத்தில் இருந்த வானிலை ஆராய்ச்சி மையம் (மாயன் காலத்துல) என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு சன்னலிலும்,  அந்த அந்த கோள்களின் இருப்பைப் பொறுத்து பார்க்கமுடியும், சூரிய வெளிச்சம் வரும் என்று சொல்கின்றனர் (அவங்க புத்தகத்துலயும் இதனைப் பார்த்தேன்)

இன்றைய படங்கள் ரசிக்கும்படி இருந்தனவா? நாம் சிச்சன் இட்ஸாவை முழுமையாகப் பார்த்து முடித்துவிட்டோம். அடுத்தது என்ன என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

(தொடரும்) 

= = = = = = = =


2 கருத்துகள்:

  1. படங்கள் கவர்கின்றனதான்.    ஆனால் பிரமிடின் படம் மீண்டும் மீண்டும்...

    ஒருவேளை உள்பக்கமாக அதனுள் ஏறிப்பார்க்க வழி கருக்குமோ...  ரகசிய வழி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். சில இடங்களில் சில நம் மனதை மிகவும் கவர்ந்துவிடும். கூடவே வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் நிற்கிறோம் எனத் தோன்றிவிடும். மீண்டும் வர இயலுமா?

      பிரமிட் போன்று இதில் ரகசிய அறைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!