16.8.25

வாயசைத்தால் வரும் குரல் மற்றும் நான் படிச்ச கதை

 வாய் அசைவே இனி குரலாக மாறும் ஐ.ஐ.டி.,யின் அசத்தல் கண்டுபிடிப்பு

குவஹாத்தி: குரல் வழி உத்தரவுகளை பின்பற்றி இயங்கும் நவீன கருவிகளை வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளும் இனி பயன்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்பை குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.  நவீன யுகத்தில், 'ஸ்மார்ட் போன்'கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை நம் குரல் மூலம் கட்டுப் படுத்தும், தொழில்நுட்பம் வந்துவிட்டது.  சுவாசக்காற்று 'வாய்ஸ் கமாண்ட்' எனப்படும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் நவீன உபகரணங்களை பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்த முடிவதில்லை. இந்த குறைக்கு, அசாமின் குவஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி., ஆய்வார்கள் தீர்வு கண்டுள்ளனர்.  இதற்காக அவர்கள் புதிய வகை, 'சென்சார்' கருவியை கண்டுபிடித்துள்ளனர். வாய் அசைவு மூலம் வெளியே வரும் சுவாசக் காற்றை கவனித்து, அதை குரல் பதிவாக மாற்றும் வகையில் அந்த சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கை:  குரல் ஒலியை எழுப்ப முடியாதோர் வாயை அசைத்து பேச முயற்சித்தாலே போதும், நுரையீரலில் இருந்து வெளியே வரும் அந்த காற்றை ஒலியாக மாற்றித் தரும் வகையில் சென்சார் மேம்படுத்தப்பட்டுள்ளது.  நீரின் மேற்பரப்பில் காற்று பட்டால், நுண்ணிய அலைகள் உருவாகும். அந்த அலைகளை தான் இந்த சென்சார் குரல் ஒலியாக மாற்றித் தரும்.  நவீன கருவிகள் இதன் மூலம் குரலற்றவர்களின் குரலையும், நவீன கருவிகள் பேச்சு ஒலியாக அடையாளம் கண்டு குரலாக அங்கீகரிக்கும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  பரிசோதனை கூடத்தில் இந்த கருவியை தயாரிக்க இந்திய மதிப்பில் 3,000 ரூபாய் மட்டுமே செலவாகி இருக்கிறது.  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதை கொண்டு வரும்போது சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=========================================================================================



=============================================================================================

மீட்கப்பட்ட ரூ.70 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு 

ஆவடி, 'ஆன்லைன்' மோசடி புகார்களில், பாதிக்கப்பட்டவர்கள் இழந்த 70 லட்சம் ரூபாயை, கமிஷனர் சங்கர் உரியவர்களிடம் வழங்கினார்.  ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பங்குச் சந்தை, பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளிட்ட 'ஆன்லைன்' மோசடி தொடர்பான புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், ஜூலை மாதம் ஆறு வழக்குகளில் 11 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  மேலும், ஜூலை மாதம் முதல் ஆக., 5ம் தேதி வரை, 'ஆன்லைன்' மோசடி தொடர்பாக, 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  விசாரித்த போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய வங்கி பரிவர்த்தனைகள் கொண்டு, சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்கை முடக்கினர்.  மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்து மீட்ட 70 லட்சம் ரூபாயை, ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில், உரியவர்களிடம் கமிஷனர் சங்கர் நேற்று வழங்கினார்.

===========================================================================

 

நான் வாசித்த மூன்று கதைகள் - ஆசிரியர் : என் சொக்கன்

மாற்றத்தான்  வேண்டுமோ?

கதையாசிரியர்: என்.சொக்கன்

 

சில நாள்களுக்கு முன்னால், ஒரு வித்தியாசமான அனுபவம்.

கடந்த பிப்ரவரியில், ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து சிறுகதை கேட்டிருந்தார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன்.

வழக்கம்போல், பல மாதங்கள் கழித்து ஒரு மாலை நேரம், அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், கதை படிச்சோம், ரொம்பப் பிரமாதமா இருக்கு’ என்றார்கள்

‘சரிங்க, சந்தோஷம்!’ என்றேன்.

‘இந்தக் கதை எந்த இஷ்யூல வருதுன்னு நாளைக்கு ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்றேன் சார். நன்றி!’

சொன்னபடி மறுநாள் காலை ஃபோன் வந்தது. ‘சார், அந்தக் கதைபத்திக் கொஞ்சம் பேசணுமே. நேரம் இருக்குமா?’

‘பேசலாம், சொல்லுங்க!’

அடுத்த மூன்று நிமிடங்கள் அவர் அந்தக் கதையைச் சுருக்கமாக விவரித்தார். அதன்மூலம் நான் சொல்ல நினைத்த விஷயங்களையும் சொல்லாமல் விட்ட கருத்துகளையும் மிகத் தெளிவாக விளக்கினார்.

எனக்கு ஆச்சர்யம். ஒருபக்கம், கதை எழுதியவனிடமே கதையைக் குடலாப்ரேஷன் செய்கிறாரே என்கிற வியப்பு. இன்னொருபக்கம், என்னுடைய கதையை இத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டு பேசியவர்கள் இதுவரை யாருமே இல்லை, நானே அந்தக் கதையை இன்னொருவருக்கு விவரித்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ அந்த அளவு தெளிவாக அவர் பேசினார். சிறுகதைகள்பற்றி இத்தனை புரிதலும் முதிர்ச்சியும் கொண்ட ஓர் உதவி ஆசிரியரிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது.

கதையை முழுக்க விவரித்துவிட்டு அவர் கேட்டார். ‘சார், இதானே நீங்க சொல்ல வந்தது? நான் சரியாப் புரிஞ்சுகிட்டிருக்கேனா?’

’ஆமாங்க. ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க’ என்றேன் நான்.

அவர் சற்றுத் தயங்கினார். பிறகு, ‘சார், இந்தக் கதையைப் பிரசுரிக்கறதுல ஒரு சின்னப் பிரச்னை.’

‘என்னாச்சு?’

‘எங்க பொறுப்பாசிரியர் கதையை இன்னிக்குதான் படிச்சார். அவர் இந்த க்ளைமாக்ஸ் சரியில்லை, மாத்தணும்ன்னு ஃபீல் பண்றார்’ என்றார் அவர். கதைக்கு இன்னொரு வித்தியாசமான முடிவை விவரித்தார்.

எனக்கு அது சற்றும் பிடிக்கவில்லை. ‘ரொம்ப childishஷா இருக்குங்களே!’ என்றேன்.

‘ஆமா சார்’ என்றார் அவர். ‘உங்க கதைக்கு நீங்க எழுதியிருக்கிற முடிவுதான் மிகச் சரியானது. அதை இப்படி மாத்தினா கதையே வீணாகிடும்.’

‘சரிங்க, இப்ப என்ன செய்யறது?’

’சார், நான் சொல்றதைத் தப்பா நினைச்சுக்காதீங்க, அவங்க சொல்லிக் கேட்க வேண்டிய நிலைமையில நான் இருக்கேன்.’

‘ஒண்ணும் பிரச்னை இல்லைங்க, எதுவானாலும் தயங்காம சொல்லுங்க.’

’நீங்க இந்தக் கதையோட க்ளைமாக்ஸை மாத்தினாதான் இது எங்க பத்திரிகையில பிரசுரமாகும்ன்னு நினைக்கறேன். ஆனா அப்படி மாத்தினா மொத்தக் கதையும் கெட்டுப்போயிடும்.’

‘உண்மைதாங்க!’

‘ஆனா, இதை நான் எங்க எடிட்டர்கிட்ட சொல்லமுடியாது. நீங்க சொன்னதாச் சொன்னாலும் அவர் கோவப்படுவார்.’

‘ஓகே!’

‘எனக்கு என்ன தோணுதுன்னா, இந்தக் கதை இந்த வடிவத்துல பிரசுரமாகணும், இல்லாட்டி அது பிரசுரமாகாம இருக்கறதே நல்லது’ என்றார் அவர். ‘இது என் கருத்து மட்டுமே, நீங்க விரும்பினா க்ளைமாக்ஸை மாத்திப் பிரசுரிக்கறோம், என்ன சொல்றீங்க?’

நான் கொஞ்சம் யோசித்தேன். கொள்கைப் புடலங்காயெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் புது க்ளைமாக்ஸ் இந்தக் கதைக்குக் கொஞ்சமும் பொருந்தாது. மொத்தக் கதையையும் வெட்டிச் சாய்த்துவிடும்.

நான் வருஷத்துக்கு ரெண்டு கதை எழுதுகிறவன். ஒரு கதை பிரசுரமாகாவிட்டால் என்ன பெரிய பிரச்னை? அப்படி குப்பையாகக் கதையைச் செய்து அச்சில் பார்க்கவேண்டுமா என்ன?

‘பரவாயில்லைங்க, அந்தக் கதையைத் திரும்பக் கொடுத்துடுங்க, நான் புதுசா வேற கதை எழுதித் தர்றேன்’ என்றேன்.

அவருக்குப் பெரும் நிம்மதி. ‘ஒருபக்கம் சந்தோஷமாவும் இன்னொருபக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கு சார்’ என்றார்.

‘கவலைப்படாதீங்க, இந்தக் கதை இதே வடிவத்தில வேறு எங்காவது பிரசுரமாகும்னு நம்பறேன். லட்சம் பேர் ஒரு சுமாரான கதையைப் படிக்கறதைவிட, நான் எழுதின வடிவத்தில நீங்கமட்டுமாவது படிச்சு ரசிச்சு இந்த அளவுக்குப் புரிஞ்சுகிட்டு எனக்கே விளக்கிச் சொன்ன அனுபவம், ரூபாய் கொடுத்தாக் கிடைக்காது. நன்றி’ என்றேன்.

சத்தியமாக அது புகழ்ச்சி வார்த்தை அல்ல. அந்தக் கணத்தில் ஆத்மார்த்தமாகத் தோன்றியது. சிறுகதைகள் வழக்கொழிந்துவரும் இன்றைய நாள்களில், எனக்கு இப்படி ஓர் அனுபவம் மறுபடி என்றும் கிடைக்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஆண்டவன் கருணையுள்ளவன்!

- 26 07 2012

 

அஞ்சு ஸ்பூன் உப்பு

கதையாசிரியர்: என்.சொக்கன்

 

கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.

அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.

கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.

ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.

‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’

‘அடுத்த வெள்ளிக்கிழமை!’

’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’

கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.

வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’

கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’

’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’

‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’

’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’

‘சரிம்மா!’

அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.

இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.

இவர்கள் மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’ மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.

இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.

அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’

மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.

‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.

‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.

’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.

‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’ 

இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.

அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!

 

காவேரியும் திருடனும்

கதையாசிரியர்: என்.சொக்கன்

 

ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருந்தது.

அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.

இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.

ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.

இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.

அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.

‘ம்ஹூம், முடியாது!’

‘அஞ்சாயிரம்?’

‘ம்ஹூம்!’

’பத்தாயிரம்?’

’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’

திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.

அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.

உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’

அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’

‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.

‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’

அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.

இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

ஆசிரியர்

என். சொக்கன் (ஜனவரி 17, 1978 ). இயற் பெயர் : நாகசுப்பிரமணியன் சொக்கநாதன். சுருக்கமாக “என். சொக்கன்”. பிறந்த ஊர் :ஆத்தூர். தற்போது வசிக்கும் ஊர் பெங்களுர். மென் பொருள் பணியாளர்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

சொக்கன்

இவரது படைப்புகளை தளத்தில் இருந்து பெறலாம்.

https://freetamilebooks.com/authors/nchokkan/     

இவரதுதளம்

http://nchokkan.com/

என்னுரை

மூன்று கதைகளும் sirukathaigal.com தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

இன்றைய கதைகளில் வாசகர்கள் சொக்கனின் இரு வேறுபட்ட நடை அல்லது பாணியைக் காணலாம். முதல் கதை ஆசிரியரின் அனுபவமாக அவரே சொல்வது போல் இருக்கும். மற்ற இரண்டு கதைகள் சிறுவர்களுக்கு கதை சொல்வது போல் இருக்கும்.  இவ்வாறு ஆசிரியரின் எழுத்து திறமை புலனாகிறது.

முதல் கதையை வாசிக்கும்போது எ பி ஆசிரியர் ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட அனுபவம் நினைவில் வந்தது, அக்காரணத்தாலேயே அதை தேர்ந்தெடுத்தேன். இரண்டாம் கதை அஞ்சு ஸ்பூன் உப்பு மூச்சுக்கு மூன்று அண்ணா என்று அன்புடன் அழைக்கும் கீதா ரங்கன் அவர்களை நினைவூட்டியது.

சிறுவர் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது. ஆனாலும் உப்பு சேர்த்தலைப் பற்றி கூற வேண்டியிருக்கிறது. சாம்பார் கூட்டியவர் உப்பையும் முன்னரே சேர்த்திருக்க வேண்டும். அப்போது தான் உப்பு சுவை காய்களில் சேரும். உப்பு சேர்க்காது விட்டது அம்மாவின் தவறே.

திருடன் கதையில் “ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.” நம்பக்கூடியதாக இல்லை கதையை அங்கே முடிக்காமல் மீண்டும் அந்த திருடன் புதையலை தேடி காட்டுக்கு செல்லும் கதை நீட்சியை தவிர்த்திருக்கலாம்.

மாற்றத்தான் வேண்டுமோ? கமல் சொல்வது போல் நான் படிச்ச கதை விமரிசன பாணியை  மாற்ற வேண்டுமா என்று தெரியவில்லை. ஆனால்  மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படிப்பட்ட மாற்றம் தேவை என்பதுதான் புரியவில்லை. கதையை படித்து விரிவான கருத்துகள் கூற விரும்புவர்கள் ஓரிருவர் மட்டுமே.

 

 

3 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் அவரின் நல்லருளை தந்து சிறப்புடன் வைத்திருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன் இன்று வேலைகள் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகம். பிறகு வருகிறேன். அனைவருக்கும் எனதன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய செய்திகள் அனைத்தும் நன்று. நல்ல மனம் கொண்ட மனிதர்கள் வாழ்க....

    சொக்கன் அவர்கள் எழுதிய சில நூல்கள் படித்து இருக்கிறேன். அவர் முகநூலில் எழுதிய/எழுதும் இடுகைகளும் அவ்வப்போது வாசிப்பது உண்டு.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!