இறந்தவர்களுடன் தொடர்பு கொள்வது மறுபிறவி பற்றிய புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.
Dr. Walter Semkiw ஆராய்ச்சியின் படி டொனால்ட் ட்ரம்ப் முற்பிறவியில் நீரோ மன்னர். லாடிமிர் புதின் ஜூலியஸ் சீசராம். மகாத்மா காந்தி வான் ஜோன்ஸ் ஆக மறுபிறப்பு எடுத்திருக்கிறாராம். பிரதமர் நரேந்திர மோடி முற்பிறவியில் சையத் அகமத் கானாம்.முற்பிறவி, மறுபிறவி பற்றிய புத்தகங்கள் சுவாரஸ்யமாக வாசிக்க முடிகிறது. 'சட்' என்று தெரிந்துகொள்ள முடியாத மர்ம வகையில் இருப்பதாலோ என்னவோ நமக்கு நமது முற்பிறவி பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் வந்து விடுகிறது.
தெரிந்து கொள்ள முடியாத மர்மமான விஷயங்களில் மனிதனுக்கு ஆர்வம் இருப்பது இயற்கைதான்.
ஒரு நகைச்சுவை கதை ஒன்று உண்டு. காந்தியும் நேருவும் ஒரு சமயம் ஒரே நேரத்தில் சிறையில் இருந்த போது நேரு உறக்கத்தில் கனவு காண்பதாக! கனவில் இந்திரன் வந்து நேருவுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிட்டு, ஒரு அறையை மட்டும் திறக்க கூடாது என்று சொல்லிவிட்டு செல்வார். அத்தனை வசதிகள் கிடைத்தும் நேருவுக்கு அந்த திறக்கக் கூடாத கதவின் மீது தான் அதிக சுவாரஸ்யம் ஏற்படும்.
இது மனித இயல்பு. இது போல நமக்கு தெரியாத, புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் தான் ஆர்வம் அதிகம் வருகிறது. அப்படியான ஆர்வம் நேருவுக்கும் வந்ததால் ஏற்படும் ஒரு நகைச்சுவைக் கற்பனைக் கதை.
இந்து மதத்தில்தான் மறுபிறப்பு உண்டு போன்ற நம்பிக்கைகள்இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்திலோ, முஸ்லிம் மதத்திலோ இந்த நம்பிக்கை கிடையாது. ஆனால் முற்பிறவி பற்றிய ஆராய்ச்சிகள் வெளிநாடுகளில் தான் அதிகம் நடக்கின்றன. இந்தியாவில் அதிகம் நடப்பதில்லை. நம்புபவர்கள் குறைவு ; எதிர்ப்பவர்கள் அதிகம். இது ஒரு நகைமுரண்.
முன்பு எங்கள் நண்பர் ஒருவர் நங்கநல்லூரில் ஒரு ஜோசியரை பார்த்தார். அவர் ஒரு சாமியார். அவரைப் பார்ப்பதற்கு நிறைய பேர் பெரிய ஹாலில் கூட்டமாகக் காத்திருப்பார்கள். நீங்கள் அவரிடம் ஒன்றுமே சொல்ல வேண்டாம். உங்கள் முறை வந்து உங்கள் பெயர் அழைக்கப்பட்டதும் அந்த சாமியார் கட கட கடவென்று விஷயங்களை சொல்லுவார், பக்கத்தில் ஒருவர் பேப்பரில் எழுதி நம்மிடம் கொடுத்து விடுவார். கிறுக்கலாக இருக்கும்.
( இன்னொரு மாம்பலம் ஜோசியர் - பாலன் நாயர் - அவர் பலன்களை சொல்லும்போது நாம்தான் வேகமாக பேப்பரில் எழுதிக்கொள்ள வேண்டும்)
அதில் நாம் எங்கே இருக்கிறோம், நாம் யார், பெயர் என்ன, தொழில் என்ன, எதற்காக வந்திருக்கிறோம் என்றெல்லாம் வரிசையாக சொல்வார். சரியாக இருக்கும். நமக்கு வியப்பு மேலோங்கும். பிறகு இனி நடக்கவிருப்பதாக, நான் எதற்காக அவரை நாடிப் போயிருக்கிறோமோ அதையும் நாம் சொல்லாமல் அவரே சொல்வார். ஆனால் அதற்கான பலனாக, தீர்வாக அதற்காக, அவர் சொல்வதில், அவ்வளவு பலன் இருக்காது.
உதாரணமாக தன் லாரி காணாமல் போய்விட்டது என்றுதான் என் நண்பர் அங்கு போயிருந்தார். இத்தனை விவரங்களையும் அவருக்கு - அவரைப் பற்றிய விவரங்களை அவருக்கு சரியாக சொன்னார். பிறகு லாரி எங்கு இருக்கும் என்பதை பற்றி இரண்டு இடங்கள் சொன்னார். நம்பிக்கையாக வந்து தேடித் பார்த்தபோது இரண்டு இடங்களிலுமே அவை இல்லை. அவர் சொன்ன நேரத்திற்குள் அது நகர்ந்து போய் விட்டதா என்ன என்று தெரியாது!!
சொல்ல வருவது என்னவென்றால், முன்னால் நடந்தது பற்றி சரியாக சொல்ல முடிகிறது. நாடி ஜோசியத்திலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அப்புறம் நடக்கப்போவது பற்றி யாராலும் சரியாக சொல்ல முடிவதில்லை. எந்த விஞ்ஞானமும், எந்த மெய்ஞானமும் அதை செய்(சொல்)வதில்லை. செய்ய / சொல்ல முடிவதில்லை. முற்பிறவியில் நான் என்னவாக இருந்தேன் என்று கண்டுபிடித்து சொல்பவர்கள், அடுத்த பிறவியில் நான் என்னவாக இருப்பேன் என்று சொல்ல முடிவதில்லை. ஒருவேளை அதற்கு காரணம் என்னுடைய கர்மா கணக்கு இன்னும் மிச்சம் இருப்பதால், அதை பொறுத்துதான் அடுத்த பிறவி அமையும் என்பதால் இருக்கலாம்.
அந்த நங்கநல்லூர் ஜோசியரை பார்த்து வந்த நண்பரிடம் நான் இப்படி சொன்னேன்... "இதுவரை நான் என்ன செய்தேன், நான் யார், எங்கு வேலை செய்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்து நான் போய் கேட்டு தெரிந்து கொள்ள மாட்டேன். அதெல்லாம் எனக்கே தெரியும். அடுத்து என்ன நடக்கும் என்பது தான் எனக்கு தெரிய வேண்டும். அது பெரும்பாலும் அவர்கள் சொல்வது நடப்பதில்லை. அப்புறம் எதற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து நான் அங்கு போக வேண்டும்?" என்று கேட்டேன்.
இங்கு யாருக்காவது அனுபவத்தில் இது மாதிரி ஜோசியர்கள் அல்லது ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களோ அடுத்த என்ன நடக்கும் என்பது சொன்னது பலித்திருக்கலாம். விதிவிலக்குகள் இருக்கும். அவர்கள் ஆன்மீக உயர்நிலை உடையவர்கள் என்பது என் கணக்கு. சொல்பவர்கள் மிக உயர்நிலையும், அதை பெறுபவர்கள் ஆன்மீக உயர் நிலையில் உடையவர்கள். உங்களில் யாருக்காவது இப்படி அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன்...
=====================================================================================
தன்னைவிட வயது மூத்த (மோகமுள் அளவு அல்ல!) பெண்ணைக் காதலிக்கிறான் பிச்சுமணி. உமாவுக்கு அவனைப் பிடித்திருக்கிறதுதான். ஆனால் சமூகத்துக்கு பயந்தும் அவன் தாத்தா ராமதுரைக்கு பயந்தும் பேசுகிறாள்..
எனக்குப்பிடித்த கதைகளில் ஒன்று.
"பிச்சுமணி! உன் தாத்தாவுக்கு இருப்பதெல்லாம் நீ ஒருவன்தான்.அவரைப் போல உன் மீது அன்போ உன் எதிர்கால நன்மைகளில் அக்கறையோ வேறு யாராலும் வைக்க முடியாது. அதனால் உன் அந்தஸ்துக்கும் வயசுக்கும் உன் எதிர்காலத்துக்கும் சரியான ஒரு பெண்ணைத்தான் நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பொருத்தமில்லாத பெண்ணை நீ நாடக் கூடாது என்றும், அவர் (ராமதுரை) நினைப்பதும், அதற்காக உன்னோடு சண்டை பிடிப்பதும் இயற்கைதான். அது நியாயந்தான்! அவரைப் போலவே நானும் நினைக்கிறேன். ஆகவே என்னை முன்னிட்டு உங்களுக்குள் இப்படி ஒரு சண்டை மூன்டிருக்கவே வேண்டியதில்லை"
"சரி உமா! என் கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு இன்விடேஷன் அனுப்ப வேண்டும் என்றோ, என் தாத்தா நிச்சயித்த பெண்ணையே நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ நீங்கள் ஏன் சொல்லவில்லை?"
குண்டு மல்லிகை - அரு ராமநாதன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பெரும்பாலான கதைகள் ஒரு பேசப் பட்ட வாக்கியத்தில் முடிகின்றன.
வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக்காட்டி ஒரு அபத்தத்தில் முடிகின்றன. சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது. அன்றாட அலுப்பு வாழ்க்கையில் உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும். அந்த கணத்தை ரெவேலேஷன் அல்லது வெளிப்பாடு அல்லது epiphany என்கிறார்கள். அவதாரம், அற்புதத் தோற்றம் என்று பலதும் சொல்கிறார்கள். இது zen தத்துவத்திலும் உண்டு. Satori என்பார்கள்.
- சுஜாதா ஓரிரு எண்ணங்கள் சும்மா
===================================================================================================================
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
ரீல்ஸில் பார்த்தேன். நன்றாகத்தான் பாடினார். ஆனால் ஆடம் போட்டிருப்பது மறுபடியும் காதுக்காக! காது ரிங்!
==========================================================================================
மாக்னெட்டா? மாக்னடேயா?!
======================================================================================
======================================================================================
ஜோக்ஸ்... ஜோக்ஸ்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!