முன்னறிவிப்பு :
1) அப்பப்போ படிச்சுடுங்க. 'முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம்' என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க.
2) முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்"
= = = = = = = = =
சாந்தி படி ஏறி கடைக்குள் வருவதை முதலில்
மாப்பிள்ளை சார்தான் பார்த்தார். "தம்பி! நான் கல்லாவை பாத்துக்குறேன் நீங்க
மூணாவது மாடிக்கு போயிட்டு வாங்க !" என்று அவர் புன்னகைத்தபடி சொன்னதும்தான்
சாந்தி வந்ததையே கவனித்தான் ராஜா.
கடையின் மூணாவது மாடி வியாபார ஸ்தலமாக
இல்லாமல் செல்வம், ராஜா, மாப்பிள்ளை சார் இப்படி முக்கியஸ்தர்கள் வந்து கொஞ்ச நேரம்
இருந்து போவதற்கு வசதியாக இருந்தது.
ஓரத்திலே ஒரு சின்ன அறை. அதற்குள்ளே ஒரு
சோபா செட் போடப்பட்டிருந்தது .கூடவே ஒரு ஈசி சேர். சிறிய பக்க மேஜையில் ஐந்தாறு
புத்தகங்கள் ஒரு ஸ்டாண்டில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. எதிர்
ஓரத்தில் ஒரு மைக்ரோவேவ் ஒரு காபி மேக்கர் இத்யாதி உபகரணங்களுடன் கூடிய ஒரு சிறு
மேடை.
ராஜாவும் சாந்தியும் உள்ளே வந்ததும்
சாந்தி நேராக புத்தக ஸ்டாண்டு பக்கம் போனாள்.
மேல் தட்டில் இருந்த புத்தகங்களை நோட்டம் விட்ட சாந்தி " என்ன புது செட்டு புத்தகம் வந்தாச்சா ? பழசெல்லாம் படிச்சு முடிச்சாச்சா அட! இதென்ன! வேண்டுதல், கரையேற்றம் - 2 புத்தகமும் வாங்கணும்னு நெனச்சிருந்தேன். ஸ்ரீராம் சார் எழுதிய கதையையும், ஜீவி சார் எழுதிய கதையையும் ஏற்கெனவே மின்நிலா புத்தகத்தில் படித்தேன். இந்த புத்தகங்களை நான் எடுத்துப் போய் மீதி கதைகளைப் படித்துவிட்டு தரட்டுமா?"
ராஜா பதில் சொல்லும் முன் அவனுடைய அலைபேசி ஒலித்தது.
திரும்பத் திரும்ப ஐந்தாறு தடவை " சரி
சார்" "ஓக்கே சார்" என்று சொல்லியவாறு பேசிக் கொண்டிருந்தான் ராஜா.
அழைப்பு ராமசாமியிடமிருந்துதான் இருக்க
வேண்டும் என்று சாந்தி சரியாக ஊகம் செய்தாள். " சாந்தி ! ராமசாமி சார்
கூப்பிடுகிறார் வரியா போகலாம் ?"
"நான் வரலை ராஜா. நீங்க போயிட்டு வாங்க. போன தடவை நான் வந்த போது அவர்
கொஞ்சம் தயக்கம் காட்டின மாதிரி இருந்தது. நான் இல்லாவிட்டால் மனம் திறந்து
உங்களோடு பேசுவார் என்று நினைக்கிறேன். நீங்க அவரைப் பார்க்கும்போது 'சாந்தி வரலையா' என்று அவர் கேட்டால் அடுத்த
தடவையிலிருந்து அவரை பார்க்கப் போகும்போதெல்லாம் நானும் வருகிறேன் ஓகே வா?"
" சரி, நீ கேட்ட புத்தகங்களை எடுத்துக்கோ. ஆனால் படிச்சதும் கண்டிப்பா திருப்பிக் கொடுத்துடணும். நான் இனிமேல்தான் அவைகளைப் படிக்கணும்" என்று சொல்லிவிட்டு ராமசாமியை பார்க்கப் புறப்பட்டான் ராஜா. இருவரும் கீழே வந்த போது செல்வம் வந்திருந்தார். மாப்பிள்ளை சாரோடு ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்.
"ஹலோ அங்கிள்" சாந்தி
வணக்கம் சொன்னதற்கு அவள் பக்கம் பார்த்து புன்னகைத்து விட்டு " என்னம்மா
சௌக்கியமா ? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?
"என்று கேட்டார்.
சாந்தி அடிக்கடி கடைக்கு வருவதும் ராஜாவும்
சாந்தியுமாக மேலே போய்ப் பேசிக் கொள்வதும் பிறகு எங்கோ வெளியே போவதும் வருவதுமாக
இருந்தது பற்றி மாப்பிள்ளை சார் ஜாடை மாடையாக செல்வத்திற்கு ஏற்கனவே சொல்லி
இருந்தார். தனக்கு சாந்தி மேல் ஒரு பெரிய நல்ல அபிப்பிராயம் இருந்ததையும்
செல்வத்திற்கு நன்றாகவே உணர்த்தி இருந்தார் மாப்பிள்ளை சார்.
சாந்தியை முதலில் பார்த்த உடனேயே செல்வத்திற்கும் அவளைப் பிடித்துப் போயிற்று. இந்த காலத்துப் பெண்கள் பந்தயக் குதிரை மாதிரி மூக்கை ஆகாசத்தை பார்த்து உயர்த்திக்கொண்டு அலட்சிய நடை நடக்கிறார்கள் என்று அவருக்குள் ஒரு அபிப்பிராயம் யாரோ ஒன்றிரண்டு பேரைப் பார்த்து பலமாக ஏற்பட்டிருந்தது. அதை ஒரே நாளில் உடைத்துப் போட்டாள் சாந்தி. ஏதோ ரொம்ப நாள் பழகின மாதிரி சரளமாக சினேகமாக அவரோடு பேசினாள்.
ராஜாவைப் பற்றியும் கூட ராஜாவை பக்கத்தில்
வைத்துக் கொண்டே அவள் அவ்வப்போது அவரிடம் சொன்ன பல செய்திகள் அவர்களுக்கு இடையே
இருந்த ஆழமான நட்பைப் பற்றி அவருக்கு நன்றாகவே உணர்த்துவதாக இருந்தது.
"
எல்லாரும் நல்லா இருக்காங்க அங்கிள் . தேங்க்யூ. உங்க பிள்ளை
உயர்திருவாளர் ராமசாமியைப் பார்க்க இதோ கிளம்பிவிட்டார். இப்படியே போய்க்கிட்டு
இருந்தா சீக்கிரமே இவருக்கு உங்களோடும் என்னுடனும் பேசுவதற்கு நேரமே இல்லாமல்
போய்விடும் என்று நினைக்கிறேன் !"
செல்வம் பதிலாக ஒரு புன்னகை செய்தார். " அப்பா ! நான் சாந்தியை அவ வீட்டுப் பக்கம் டிராப் பண்ணிட்டு ராமசாமி சாரைப் பார்த்து விட்டு வருகிறேன்" இருவரும் புறப்பட்டார்கள்.
சாந்தியை வீட்டில் கொண்டு போய் விட்ட போது
அழகர் வீட்டில் இல்லை. கேட் சத்தம் கேட்ட உடனே சாந்தியின் அம்மா வந்து வாசல் கதவை
திறந்தாள்.
"வாங்க தம்பி. உள்ளே வந்து காபி சாப்பிட்டுட்டு போங்க !"
"இல்லையம்மா. அவசரமா போயிட்டு இருக்கேன் இன்னோரு நாளைக்கு வந்து காபி
மட்டும் இல்ல பலகாரமும் சேர்த்து சாப்பிடறேன்" என்ற சிரித்தவாறு சொல்லிவிட்டு
காரை ஸ்டார்ட் செய்தான் ராஜா.
********
ராமசாமியிடமிருந்து மீண்டும் ஃபோன்
வந்தது.
" ராஜா பண்ணை வீட்டுக்கு வந்துடு. இப்பத்தான் வரதன் வந்துட்டுப் போறான். பேச நிறைய செய்தி இருக்கு. "
பண்ணை வீட்டை அடைந்து அழைப்பு மணியை
அழுத்தியதும் ராமசாமி வந்து கதவைத் திறந்தார். 'சாந்தி வரலையா ?' என்று கேட்பாரா என்று ஆவலாக அவருடைய முகத்தைப் பார்த்தான் ராஜா.
"வா ராஜா. உள்ளே போய்
சாவகாசமாகப் பேசலாம் " என்று சொல்லியவாறு அவர் உள்ளே செல்ல அவரைப் பின்
தொடர்ந்தான் ராஜா.
"
என்ன ரொம்ப அவசரமா கூப்ட்டு விட்டீங்க ? மந்திரி
பதவி வரப்போகுதுன்னுதான் போன்லயே சொல்லிட்டீங்களே. அந்த சந்தோஷத்தை இன்னும்
கொஞ்சம் கொண்டாடணும் அப்படினு நினைக்கிறீங்களோ ? "
"
ராஜா நீயும் நானும் ரொம்ப ஏழைங்க இல்லை. ஒரேடியா பெரிய
பணக்காரங்களும் இல்லை. ஆனா இந்த மந்திரி பதவிங்கறது ரொம்ப பெருசுக்கும்
பெருசுக்கும் நடுவாந்தரத்தில் இருக்கிறது. அரசியல்ங்கறதே நெருப்பு மாதிரி. ரொம்ப
கிட்ட போகப்படாது. சுட்டுடும். உள்ளே விழுந்தா ரோஸ்ட் ஆகி போயிடுவோம். எவனாவது
எடுத்து முழுங்கிட்டுப் போயிடுவான். என் மனசுக்குள்ள நான் ஒரு லிமிட்
வச்சிருக்கேன். இவ்வளவுதான் செய்யலாம் - இப்படித்தான் இருக்கணும்னு.
அப்படியெல்லாம் இருக்க முடியும்னு ஒரு நம்பிக்கையோட நானும் மந்திரி ஆகுறதா முடிவு
பண்ணிட்டேன்." என்றார் ராமசாமி.
மேலும் " உன்னோட சாந்தி
வரலையா ? நீ வரும்போது அவளையும் அழைத்துக்கொண்டு விட்டு
வருவேன்னு நினைச்சேன்." என்று கேட்டார்.
ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. இனிமே
எப்போது வந்தாலும் அவளையும் அழைத்துக் கொண்டு வரலாம் அவளும் அப்படித்தான் சொன்னாள்
. இவரும் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்.
" அவளுக்கு தான் வந்தா நீங்கள் மனம் விட்டு பேசத் தயங்குறீங்களோ என்று ஒரு சந்தேகம் . அதனால நீ போய் பார்த்துக்கொள் . நான் வந்தா அவருக்கு சங்கடமா இருக்குமோ என்னவோ என்று சொன்னாள்."
" எனக்கென்ன சங்கடம். என் பெண் மாதிரி. அவ இருக்கிறதுனால என்ன ஆகிடப் போகிறது ? "
"அவளுக்கும் வரணும்னுதான். அடுத்த தடவை கட்டாயம் அழைத்துக்கொண்டு
வர்றேன்."
" சும்மா இருந்த ஆளை எலக்ஷனுக்கு
நில்லுடான்னு சொல்லி எம் எல் ஏ ஆயாச்சு. சரி அதோடு போச்சு என்று பாத்தா இப்போ
அமைச்சர் பதவி வந்து கதவைத் தட்டுது. பாக்கலாம் அந்த பரமேஸ்வரன் நமக்கு என்ன எழுதி
வச்சிருக்கானோ அது நடந்துதானே ஆகும்" என்று சொன்னபடி உள்ளே போய் ரெண்டு
கிளாஸ் பழச்சாறு கொண்டு வரச் சொல்லி யாருக்கோ சொல்லி விட்டு வந்தார்.
******
அன்று மாலை ஐந்து மணிக்கு சாந்திக்கு போன்
செய்தான் ராஜா. ராமசாமி சந்தித்து வந்த விபரங்களைச் சொன்னான்.
"
ஏய், சாயங்காலம் எத்தனை மணிக்கு வருகிறாய் ?
பேச நிறைய விஷயம் இருக்கு. ராமசாமி மந்திரி ஆகப் போகிறார். "
"
ஓ அப்படியா ! சரியா ஆறு மணிக்கு கடைக்கு வர்றேன் ."
"
சரி ஆறு மணிக்கு வா நேர்ல பேசிக்கலாம்" என்று சொல்லி போனை
வைத்தான் ராஜா.
*******
ராமசாமி பதவி ஏற்பு நாள். முதலமைச்சரைப்
பார்த்து 'நன்றி சொல்லி ஆசி பெற' ராமசாமி அவருடன் ராஜா
தலைநகரத்துக்கு வந்தார்கள்.
சரியாக காலை ஒன்பதே முக்கால் மணிக்கு
ராமசாமியும் ராஜாவும் முதல்வரின் அலுவலகம் இருக்கும் கட்டிடத்திற்குள்
நுழைந்தார்கள். ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடி.
முதல்வர் அலுவலகம் கொடுத்திருந்த அனுமதி
சீட்டைக் காட்டியதும் இருவரையும் உள்ளே போக விட்டார்கள். முதல்வரின் அறைக்கு
முன்பாக இருந்த பல நாற்காலி வரிசைகளில் மையமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ராஜாவும்
ராமசாமியும் உட்கார்ந்தார்கள்.
ராமசாமியைப் பார்த்ததும் பலரும் எழுந்து
நின்று வணக்கம் தெரிவித்தார்கள். ஓரிருவர் கை குலுக்கினார்கள். செல்ஃபி எடுத்துக்
கொண்டார்கள். எல்லாவற்றையும் தாண்டி அந்த இடம் முழுவதும் ஒரு கனத்த மவுனம்
நிலவியது.
பளிச்சென்று தேய்க்கப்பட்டு மின்னும் பித்தளைத்
தகட்டில் முதல்வர் பெயரும் பதவியும் மூன்று மொழிகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அவ்வப்போது மணி ஒன்று சிக்கனமாக அதிக சப்தம் செய்யாமல் ஒரு முறை "டிங்"
என்று அடிக்கும். நொடிப்பொழுதில் ஒரு பள பள டவாலி வந்து அடுத்து உள்ளே நுழைய
அனுமதிக்கப் பட்டுள்ளவரது பெயரை சன்னமான குரலில் உச்சரிக்கிறான். வருபவர்களும்
போகிறவர்களும் ஆடை சலசலக்கிற சத்தத்தை தவிர வேறு ஓசை எழுப்பாமல் ஜாக்கிரதையாக
நடந்தார்கள். அடிக் குரலில் பேசிக் கொண்டார்கள்.
சரியாக ஒன்பது 58. ஊர் பேரை சேர்த்துச்
சொல்லி "ராமசாமி.." என்று அழைப்பு வந்ததும் ராமசாமியும் ராஜாவும் ஒரு
சேர உள்ளே சென்றார்கள். பெரிய விசாலமான அறை. தரை முழுதும் பச்சைக் கம்பளம் பித்தளை
ஆணிகளால் அடிக்கப் பட்டு விரிந்திருந்தது. முதல்வர் செயற்கையாக ஒரு புன்சிரிப்புடன்
ராமசாமியை நோக்கினார். " ஐயா, வணக்கம். . " அவர்
முடிக்கும் முன்பே உதவியாளர் நீட்டிய தாளைப் பார்த்தவாறு முதல்வர் " வாங்க **
ராமசாமி. வணக்கம். இது..."
" இவர் ராஜா. எனக்கு ரொம்ப
வேண்டியவர். இவர் இல்லைன்னா நான் எலக்ஷன்ல ஜெயித்திருக்க மாட்டேன் "
" ரொம்ப சந்தோஷம். தம்பி
நீங்க கொஞ்சம் வெளியில் வெயிட் பண்ணுங்க "
ராஜாவுக்கு காதின் பின்புறம் சூடாகியது. வேகமாக வெளியே வந்தான்.
(தொடரும்)
ஆசிரியர்களே அப்புறம் உடைப்பாங்க என்று நினைக்கிறேன்.
கீதா//
// இன்றைய கதைப்பகுதி படித்தேன். கதையில் நிறைய சம்பவங்கள், ஒருவேளை பெரிய கதைக்காக அடிபோடுகிறாரா கதாசிரியர்?//
அப்புறம் இதுவும்
//பைக் இருக்குமிடம் வந்தபோது இவன் பைக்கில் சாய்ந்தபடி ஒற்றை நாமம் இட்ட ஒரு நடுத்தர வயதுக்காரர் போனில் பேசிக் கொண்டிருந்தார்./
கதை நன்றாகப் போகிறது. ஸ்கை யாரென்று தெரியவில்லை.
நடுத்தர வயதுக்காரரா? ஏதோ உள்குத்து போலத் தோன்றுகிறதே!
அல்லது நெல்லையேதான் ஸ்கையா? சந்தடி சாக்கில் வயதைக் குறைத்து விட்டாரோ(:- //
மற்றும் இதுவும்
// ஏழு பேர் தான் கருத்து சொல்லியிருக்காங்க. கதையைக் கொண்டு போகிற லாவகத்திற்கு இந்த எண்ணிக்கை இன்னும் எகிறணும். அரட்டை எபியில் இந்த எழுத்து சாமர்த்தியத்தையெல்லாம் யார் கவனிக்கறாங்க என்கிறீர்களா? அதுவும் சரி தான். அது சரி..
என்னத்துக்காக இப்படி ஒரு பெயரில் மறைந்து?... ஸ்கையை விட அவர் பெயரே அட்டகாசமா இருக்குமே! ...//
இவை யாவும் ரசிக்க வைத்தன.
ஆனா பாருங்க இப்போதைக்கு நான் விவரங்கள் தருவதற்கு தயாராக இல்லை.
எதுக்கும் கதை பற்றிய உங்க கருத்துகளை தொடர்ந்து எழுதுங்க.
= = = = = = = =