25.8.25

"திங்க"க்கிழமை : மிளகு சீரகப்பொடி - ஸ்ரீராம்

இன்று நான் பகிரப்போவது ஆரோக்கியமானது மட்டுமில்லை, எளிமையானதும் கூட.

இட்லியை படுத்தியது போதும் என்று தோன்றியதால் இன்னொரு இட்லி ரெசிப்பி அப்புறம் பகிர்கிறேன்.  போன வாரமே JKC ஸார் ஒரு இட்லி மீம்ஸ் அனுப்பி இருந்தார்.

எனவே வேறு எதுவும் பயங்கரமாய் படுத்தாமல், பயமுறுத்தாமல் ஒரு சாதாரணமான பகிர்வு.  உங்களில் யாருக்காவது இது புதுசு என்றால் கமெண்ட்டில் சொல்லவும். ஆச்சர்யப்பட்டுக் கொள்கிறேன்!

சிறு வயதில் இருபது தேதிக்குமேல் வீட்டில் சில பொருட்கள் தீர்ந்து விடும்.  அப்பா எங்காவது கடன் வாங்கி சமாளித்தால் சில சமயம் மீண்டும் செழிப்பாவோம்.  ஆனால் அவர் அலுவலகத்திலோ, நண்பர்களிடத்திலோ கடன் வாங்கினாரா என்பது எங்களுக்குத் தெரியாது.  நிச்சயம் வாங்கியிருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அந்த தேதிகளில் காலியாகும் காசு டப்பாவில் மறுபடி கொஞ்சம் காசு கண்ணில் படாதே....!   

அப்பாவுக்கு அந்த வழக்கம் இருந்தது.  பணம் வந்ததும் அம்மா கையால் காசு டப்பாவில் வைத்து விடுவார்.  

சொல்லி இருக்கிறேன்.  

சோதனையாக இருபது தேதிக்கு மேல் காலியாகும் பொருள்களில் சில, காபிப்பொடி, சர்க்கரை, நல்லெண்ணெய் போன்றவை.  

அந்த நேரம் காய்கறி வாங்குவதில் கூட கொஞ்சம் சிக்கனம் கடைப்பிடிக்கப்படும்.  காபியில் வெல்லம் போட்டு சாப்பிடுவோம்.  ஆறு பேர்களுக்கு, மேலும் அடுத்து யாரும் விருந்தினர் வந்தாலும் ஆவின் பால் அரை லிட்டர்தான்.  நபர்களுக்குத் தகுந்தாற்போல தண்ணீர் ஊற்றப்படும்!

அதுபோன்ற சில தினங்களில் இது எங்களுக்கு கைகொடுக்கும்.

எது?

மிளகு சீரகப்பொடி.

பருப்புப்பொடி, தனியாப்பொடி எல்லாம் கூட அம்மா செய்து வைத்திருப்பாள்.  ஆனால் எனக்கு பருப்புப்பொடி அப்பவும் பிடிக்காது, இப்பவும் பிடிக்காது.  தனியாப்பொடி போட்டு சில சமயம் சாதம் பிசைந்து சாப்பிட்டிருக்கிறேன்.  தனியா இல்லை, எல்லோருடனும் சேந்துதான்!!!

புளியோதரைப்பொடி போல ஏதோ ஒன்று அவ்வப்போது பிசைந்து சாப்பிட்ட நினைவு இருக்கிறது. அது என்ன என்று சரியாய் நினைவில்லை.  வறுத்த கடலைப்பருப்பும், நிலக்கடலையும் அதில் கிடைக்கும் என்று நினைவு இருப்பதால் புளியோதரைப்பொடி என்றுதான் நினைவு.  ரெடிமிக்ஸ் வாங்கி வைத்திருந்த ஞாபகம்.

கொஞ்ச நாட்கள் என் தாத்தா கூட அது தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

மிளகு சீரகப்பொடி செய்வது மிக எளிது என்பது உங்களுக்கும் தெரியும்.


மிளகும் சீரகமும் சம அளவு எடுத்து அதில் பெருங்காயம் சேர்த்துக் கொண்டு மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.  அப்போதெல்லாம் அம்மியில் அரைத்து வைத்துக் கொள்வோம்!

உப்பு இப்போது சேர்க்கக் கூடாது.  அப்புறம் அதை கொஞ்ச நாட்களுக்கு வைத்திருக்க முடியாது.  நீர் விட்டுக்கொள்ளும்!  சிலபேர் மிளகு அதிகமாகவும் சீரகம் சற்றே குறைந்த அளவிலும் எடுத்து அரைத்துக் கொள்வார்கள்.  அதெல்லாம் அவரசவர் ருசி. விருப்பம்.  என் நண்பர் இதில் இரண்டு பட்டை மிளகாய் வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாமா என்று கேட்டார்!

சூடான வெண்ணிற சாதத்தை தட்டில் போட்டுக்கொண்டு இந்தப் பொடியைத் தூவி, தேவையான அளவு உப்பு போட்டுக்கொண்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசிதான்.  ஆரோக்யமும் கூட.

14 கருத்துகள்:

  1. மிளகு சீரகப் பொடி சாதம்.... அம்மா செய்து போட்டிருக்கிறாள் அபூர்வமாக. இட்லி மி பொடி தவிர வேறு பொடிகள் செய்து ஸ்டோர் செய்து வைத்திருந்தத்தாக நினைவு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  மிளகு சீரகப்பொடி எங்கள் வீட்டில் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கும்.  ரசத்தை இறக்கும்போது தூவி இறக்குவது வழக்கம். 

      இப்போதெல்லாம் எப்போதாவதுதான் மிளகு சீரகப்பொடி சாதம்!  ஜீரணத்துக்கு நல்லது.

      நீக்கு
  2. இரவு நான் சின்ன வயதில் விருப்பப்பட்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவது, சுட சாதம் ஜீனி பால் கலந்து. இல்லைனா சுட சாதம் நல்லெண்ணெய் சிறிது உப்பு.

    சிறிய வயதில் எளிய உணவோ இல்லை அபூர்வமான பாயசமோ தந்த திருப்தியை, வித வித உணவுகள் இக்காலத்தில் அளிக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூட எப்போதாவது இந்த பால் சர்க்கரை சாதம் சாப்பிட்டிருக்கிறேன். சமயங்களில் சூடான சாதத்தில் நெய், வெல்லம்!

      திடீர் ச.பொ

      நீக்கு
    2. இது போல், சுடான சாதத்தில், கொஞ்சம் தேங்காய் பூ துருவி சேர்த்து பொடித்த வெல்லமும், நல்ல பசு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். எங்கள் பாட்டி சித்திர குப்தர் விரததன்று உப்பில்லா உணவுக்காக ஒரு பொழுது உணவாக (மதியம் மட்டும்) இதை எடுத்துக் கொள்வார்கள். நானும் அப்போது இதன் ருசிக்காக நான்கைந்து முறை அவர்களுடன் விரதம் இருந்திருக்கிறேன். (சித்திர குப்தர் இதை எந்த கணக்கில சேர்த்துள்ளாரோ..? போய் பார்த்தால்தான் தெரியும்... :))).)

      பி. கு. இது கிட்டத்தட்ட இனிப்பு கொழுக்கட்டை போல் ருசியாக இருக்கும். ஹா ஹா.

      நீக்கு
    3. சித்திரகுப்தருக்கு விரதமா?  பார்றா...   நானும் தேங்காய்ப்பூ தூவியும் வெல்ல சாதம் சாப்பிட்டிருக்கிறேன்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம், பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய ஜீரா, மிளகு பொடி சாதம் நன்றாக இருக்கும். கூடவே கொஞ்சம் கறிவேப்பிலையையும் காய வைத்து, (இல்லை வறுத்து) பொடித்துக் சேர்த்துக் கொண்டால், வாசனையாக இருக்கும். எங்கள் அம்மா வீட்டில் இருக்கும் போது எங்கள் பாட்டி இப்படித்தான் சில பொடி சாதங்களை செய்து தருவார். தொட்டுக் கொள்ள வீட்டில் தயார் செய்த சுட்ட அப்பளங்கள். அதற்குப் பிண்ணனி நீங்கள் கூறிய காரணங்கள்தாம். ஆனால், அதில் இருந்த ருசிகள் இப்போது தினமும் காய்கறிகளோடு சாப்பிடும் மதிய உணவில் இல்லை எனக் கூறலாம். நல்ல பகிர்வு. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கறிவேப்பிலைபொடியே தனியாக செய்து சாப்பிடுவோம்.  பருப்புப்பொடி, தனியாப்பொடி, கறிவேப்பிலை பொடி எல்லாம் வரிசையாக இருக்கும்.  கடையில் வாங்கிய புளிக்காய்ச்சல் மிக்ஸ் எல்லாம் ஒரு வரிசையில் இருக்க, இந்த மிளகு சீரகப்பொடி மட்டும் தனியாக கீழே இருக்கும்.  ஏனோ அவற்றோடு இது சேர்ந்திருக்காது.  சமைப்பவர்களின் கைவசதிக்காக!  
      தனியாப்பொடியே தனியாக இல்லாமல் சேர்ந்திருக்கும் இது தனியாக இருக்கும்!  ஹிஹிஹி...

      நீக்கு
  5. ​ரசப்பொடிக்கும் இந்த பொடிக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம். நல்ல வேளை நான் சாப்பிட்ட ஹார்லிக்ஸ் சாதத்தை சொல்லவில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   

      ஹார்லிக்ஸ் சாதமா?  நிஜமா, கிண்டலா? 
       
      தெரிந்தா தெரியாமலா? 

      எனக்கு இது போல வேறொரு அனுபவம் உண்டு.  அதற்காகத்தான் கேட்கிறேன்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!