27.8.25

அவல் மற்றும் மோர் சாப்பிட்டே ஒருவர் உயிர் வாழ முடியும்போது எதற்கு ஆடம்பர மூன்று வேளை உணவு?

 

நெல்லைத்தமிழன் : 

ஏன் ஹூமனாய்ட் என்று சொல்லப்படும் ரோபோக்கள் எல்லாமே பெண்ணின் வடிவமாகவே தயாரிக்கப்படுகிறது? செய்யற வேலை என்னவோ வீட்டைப் பெருக்கறது. அந்த மெஷின் ஆண் வடிவமாக இருந்தால் என்னவாம்?   

# பெண் கண்கவரும் இயல்பினள் என்பதால் இருக்கும். மேலும் வீட்டு நிர்வாகம் பெண்ணின் பொறுப்பில் தானே பெரும்பாலும் இருக்கிறது.‌

சுதந்திரம் வாங்கி இந்த 78-80 வருடங்கள்ல பெண்களின் நிலை சொல்லும்படியாக முன்னேறியிருக்கிறதா?   

# முன்னைக்கு இப்போது பெண்கள் பல விஷயங்களிலும் கொஞ்சம் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

சக மனிதர்கள் மீது வெறுப்பைக் காண்பித்து கோயிலுக்குப் போய் சாமி தரிசனம் செய்தால், பக்திமானாக ஆகிவிட முடியுமா இல்லை ஸ்வாமியின் அருள்தான் கிடைத்துவிடுமா?   

# கடவுள் அருள் ஓரளவுக்கு நல்ல குணங்கள் இருந்தால் கூட கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தவறு செய்துவிட்டதை, ஈகோ இல்லாமல் எப்போது வெளிப்படையாகத் தெரிவித்து மன்னிப்பு கோரும் மனம் வரும் (எந்த வயதில்?)   

#  தவறை ஒப்புக் கொள்ளாமல் ஏன் செய்தோம் என்று சாக்குப் போக்கு கண்டுபிடித்துச் சொல்வது மனித இயல்பு.  இது எந்த வயதிலும் மாறாது என்று தான் நான் நினைக்கிறேன். அரிதிலும் அரிதாக எப்போதோ ஒரு முறை வேறு வழி இல்லையே என்று செய்த தவறை ஒப்புக் கொள்வதும் உண்டு.

வெறும் அவல் மற்றும் மோர் சாப்பிட்டே ஒருவர் உயிர் வாழ முடியும்போது எதற்கு நமக்கு ஆடம்பர மூன்று வேளை உணவு என்று யோசித்திருக்கிறீர்களா?

# தேவைக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை என்கிற மனப்பான்மை மிகவும் அபூர்வமாகவே காணப்படும். அப்படி இருக்கும்போது, உணவு விஷயத்தில் மட்டும் ஒரு விதிவிலக்கு எப்படி வரும் ?

ஆன்லைன் இனிப்பு காரம் வாங்க நிறைய தளங்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொருத்தரும் கூசாமல் கிலோ 1000 ரூபாய்னு விலை போடறாங்க. அவங்க டார்கெட்  வெளிநாட்டு கஸ்டமர்கள்தாம் என்றாலும் எப்படி இப்படி அநியாய விலைக்கு விற்கறாங்க?  நேர திருநெவேலில உள்ள கடைகள்ல நாம வாங்கினோம்னா எதுவும் 400 ரூபாய்க்கு அதிகமாவதில்லை. இப்படி எக்ஸ்ப்ளாய்ட் பண்ணுவது நேர்மையா?

# பொருளை சுலபமாகப் பெறுவதற்கு  கொஞ்சம் விலை அதிகம் என்றால் நியாயமாக இருக்கும்.  60% கூட சிலசமயம் தரவேண்டி வருவது சரியில்லை, அந்த அதிகப் பணத்தில்  தயாரிப்பாளருக்கு ஒரு சிறு பகுதி கூட செல்வதில்லை என்பது அநியாயம்.‌

ரோபோக்களின் உபயோகம் என்ன என்ன? (உடனே சர்ஜிகல் என்றெல்லாம் ஆரம்பித்துவிடக்கூடாது. சாதாரண மனிதர்கள் வாழ்வில் அவைகளின் உபயோகம் என்ன? இப்போதான் அந்த டெக்னாலஜி வளர ஆரம்பித்திருப்பதால் உயர்தட்டு மக்களின் வாழ்வில் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  

# எடுபிடி வேலையாள்.  ஒரு பேச்சுத்துணை.

ஆட்டமேடிக்காக சமைக்கும் மெஷின்கள் வர ஆரம்பித்திருப்பது தெரியுமா? தற்போது சில பல குறைபாடுகளும் மனித உதவி தேவைப்படுவதுமாக இருந்தாலும், அந்தத் துறை வளர்ச்சி பெற்றால், சமைப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது என்பது தெரியுமா?   

# சமையல் மெஷின் வெற்றி பெறுவது எளிதல்ல. நம் தென்னிந்திய சமையலை வடிவமைப்பது கஷ்டம்.

வெளிநாட்டுப் பால் பொருட்களை நம் அரசு அனுமதிக்காததற்கு முக்கியக் காரணம், அந்த மாடுகளுக்கு எலும்புப் பொடிகள் மற்றும் அசைவங்களை உணவாகக் கொடுப்பதுதான். அப்படி என்றால், வெளிநாட்டுக்குச் சென்று வரும் நம்மவர்கள் அந்தப் பாலையோ அல்லது அவற்றில் செய்த தயிரையோ உட்கொள்ளாமலா இருக்கிறார்கள்? இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?

#  உணவில் வேண்டாத பொருட்கள் கிட்டத்தட்ட தவிர்க்க இயலாததாகிவிட்டன.

ஹோட்டலிலேயே உணவை உட்கொண்டால் உடம்பு கெட்டுவிடும், வீட்டில் தயாரித்தால் உடல் கெடாது என்று நினைப்பது சரியா?  வீட்டில் எப்போதுமே நாம் சூடான உணவைச் சாப்பிடுவதில்லை, காலையில் மிஞ்சிவிட்டதே என்று சாம்பார்,  சாதம் போன்றவற்றை உபயோகிக்கிறோம் இல்லையா?

# கொஞ்சம் பழசான பொருட்களை தூக்கி எறியாமல் பயன்படுத்துவது தவறில்லை. ஹோட்டலில் லாப நோக்கத்திற்காக கலப்படங்களும் செய்யப்படுவதால் ஹோட்டல் சாப்பாடு என்றுமே நல்லதல்ல. இதற்கு விதிவிலக்குகள் மிகச் சொற்பம்.

= = = = = = =

படமும் பதமும் 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


டொரண்டோ மிருகக்காட்சி சாலையில் பார்த்த ஒரு அறிவிப்பு! 

- - - - - - - - -

இவையெல்லாம் என்னவென்று தெரிகிறதா?

- - - - - - - - - - 

குழந்தைகள் நீந்த, பெற்றோர்கள் உட்கார்ந்து புத்தகம் படிக்கலாம்(யார் படிக்கிறார்கள்?), செல்ஃபோனை நோண்டலாம், குழந்தைகளை கவனிக்கலாம், ஏதாவது கொரிக்கலாம்.
- - - - - - - - - - - - -

நெல்லைத்தமிழன் : 


இது ரிஷிகேசில், சுவர்க ஆஸ்ரமத்தில் இருக்கும் கற்பக விருட்சம். இது இரண்டு மரங்கள் போன்று பூமியிலிருந்து கிளம்பினாலும், ஒரே வேர்தான். படத்தைக் கூர்ந்து கவனித்தால் இரண்டு மரங்கள் போன்று இருப்பதைச் சுற்றி காவித் துணி கட்டியிருப்பார்கள். வருகிறவர்கள் இந்த கற்பக விருட்சத்தை வலம் வருகின்றனர்.  சில வாரங்களுக்கு முன்பு பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் இரண்டு அருகருகே இருந்த மரங்களைப் படமெடுத்துப் பகிர்ந்ததைப் பார்த்தபோது இது நினைவுக்கு வந்தது. 

- - - - - - -


இப்படி வெறும் பச்சை இலைகளாக உடைய இந்த மரம், பூக்கும் காலம் வரும்போது இலைகள் இல்லாமல் வெறும் பூக்களுடன் இருக்கும். இதில் இரண்டு வகைகள் எங்கள் வளாகத்தில் உண்டு. மஞ்சள் நிறப் பூக்கள் இன்னொன்று ரோஸ் நிறப் பூக்கள். பூக்கள் பூத்திருக்கும்போது மரத்தில் பூக்கள் மாத்திரமே காணப்படும்


முழுவதும் மஞ்சள் மலர்களாக இருந்தபோது அந்த மரத்தையும் படமெடுத்திருக்கிறேன். ஆனால் அதனைத் தேடவேண்டும். 

- - - - - - - - -


திராட்சைக் கொடிகள் என்றுதான் படித்திருந்திருக்கிறேனே தவிர அதன் அடிப்பாகம் மரம் போல வளரும் என்று எனக்குத் தெரியாது. பஹ்ரைனில் என் பெண்ணின் ஸ்கூலுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு திராட்சைக்கொடி (மரம்) இருந்தது. அது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மூணாறு சென்றிருந்தேன். செல்லும் வழியில் கம்பம் தேனி அருகே திராட்சைத் தோட்டங்களுக்குச் சென்றிருந்தோம்.  எத்தனை படங்கள் எடுத்தாலும் இன்னும் இன்னும் எடுக்கத் தூண்டிய அளவில் அவ்வளவு அழகாக இருந்தன. இவை பச்சை திராட்சைகள் அல்ல. சில நாட்களில் கறுப்பாக மாறப்போகும் பன்னீர் திராட்சைக் கொடிகள்.


திராட்சைகள் கறுப்பு நிறமாக ஆக ஆரம்பித்திருப்பது தெரிகிறதா?

அந்தத் தோட்டத்தில் திரட்சியாக இல்லாமல் கொஞ்சம் வாடிக்கிடந்த திராட்சைக் கொத்துக்களைப் பார்த்தேன். ஏன் அப்படி வாடியிருக்கின்றன என்று கேட்டதற்கு, பார்வையாளர்கள் திராட்சைத் தோட்டம் மற்றும் குலைகளுடன் படங்கள் எடுப்பதற்குப் பதிலாக, அவற்றைத் தொட்டு, கையினால் பிடித்துக்கொண்டிருப்பதுபோல இல்லை அவற்றின் மீது கையை வைத்துப் படங்கள் எடுத்துக்கொள்வதால் அவை இப்படி வாடியிருப்பதுபோலத் தோன்றுகின்றன என்றார். ஆனால் அந்தப் பழங்கள் அவ்வளவு ருசியாக இருந்தன. அங்கே கிடைத்த ஜூஸும் சாப்பிட்டுப்பார்த்தோம். மிகவும் ருசி. 

தொடாமல் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கின்றன பாருங்கள்! 

தொட்டால் பூ மலரும்! தொடாமல் நான் பழுத்தேன்!

= = = = = = = = = =

KGG பக்கம்: 

மூன்று மாதங்களுக்கு முன்பு வரை மடிகணினியில் தமிழ் தட்டச்சு கடினமாக இல்லை. கூகிள் தமிழ் தட்டச்சு பலகை தேர்ந்தெடுத்து ஆங்கில எழுத்துகளை தட்டிக் கொண்டு இருந்தால் உதாரணமாக ..

' ippadi ezhuththugalai thodarndhu type seidhaal podhum. Vendiya vaarththaigal varisaiyaaga thamizhil varum.' என்று டைப் செய்தால் ' இப்படி எழுத்துகளை தொடர்ந்து டைப் செய்தால் போதும். வேண்டிய வார்த்தைகள் வரிசையாக தமிழில் வரும்' என்று அழகாக டைப் ஆகும்.

ஆனால் கடந்த முறை ஒரு அப்டேட் ஆட்டோமேட்டிக்காக ஆனதும் பிடித்தது சனியன். ஒவ்வொரு வார்த்தைக் முதல் எழுத்து மட்டும் வரும் ஆனால் மற்ற எழுத்துகள் காணாமல் போய்விடும்.

ஆண்டிராய்டு ஃபோனில் கூகிள் தட்டச்சுப் பலகை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு எழுத்தாக தட்டினால் வருகிறது.

ஆனால் மடிக்கணினி தமிழ் தட்டச்சு.. ஊஹும்.

சரி தட்டச்சு செய்வதை விட வாய்ஸ் டைப்பிங் செய்யலாம் நேரம் மிச்சமாகும் என்று ஃபோனில், கமலா ஹரிஹரன் கருத்துரைக்கு ' விளக்கமான கருத்துரைக்கு நன்றி ' என்று வாய்ஸ் கொடுத்தால் அது ' வழக்கமான கருத்துரைக்கு நன்றி ' என்று டைப் செய்கிறது!

மைக்ரோசாப்ட் அடுத்தடுத்த அப்டேட்ஸ் வந்தால் தமிழ் தட்டச்சு சரியாகுமா என்று தெரியவில்லை.
- - - - - - - -

சென்ற வாரம் பார்த்த திரைப்படங்கள் ஷோலே மற்றும் சில்சிலா.


ஷோலே படம் வந்த புதிதில் இருந்த சென்ஷேஷன், கப்பார் சிங் ( அம்ஜத்கான்) etc etc இப்போது பார்த்தால் அதில் இல்லை. மேலும் படம் பார்க்கையில் எனக்கு வேறு ஒரு பெரிய சந்தேகம் வந்தது! அந்த கப்பார் சிங்கைப் பிடிக்க சஞ்சீவ் குமார் ஏன் கொக்கு தலையில் வெண்ணை வைக்கும் கதையாக இரண்டு (கதாநாயக) திருடர்களை செட் செய்கிறார்? இந்த லட்சணத்தில் ச கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வேறு. அந்த கப்பார் சிங் பக்கத்து ஊரிலிருந்து அடிக்கடி குதிரை / ஜீப் என்று கிடைத்தவற்றில் ஏறிக்கொண்டு ச கு ஊருக்கு வந்து சிலரைக் கொன்று விட்டு திரும்பிச் செல்கிறார். அவரை யாராலும் பிடிக்க இயலவில்லை! எப்படியோ சுற்றிச் சுற்றி அமிதாப் உயிர்த் தியாகம் செய்ய, தர்மேந்திரா உயிரைக் காப்பாற்ற ஹேமா கண்ணாடித் துண்டுகளில் நாட்டியமாட .. 
கப்பாரை தர்மேந்திரா, தன் நண்பன் அமிதாபைக் கொன்றதற்காக கொல்லப் போக - கையில்லாத சஞ்சீவ் குமார் தான்தான் கொல்லுவேன் என்று அடம் பிடித்து காலால் உதைத்துக் கொல்ல முயற்சிக்க வழக்கம் போல் கடைசியில் போலீஸ் தலையிட்டு ' சட்டம் தன் கடமையை செய்யும்' என்று சொல்லி கப்பாரை பிடித்துச் செல்கிறார்கள்!

அடுத்த படம் சில்சிலா. 


முதல் காட்சி ரேகா நடனம். பார்த்து காதல் வயப் படுகிறார் அமிதாப். 
அமிதாப் அண்ணன் சசி கபூர்.
அடுத்த காட்சி ஜெயா பாதுரி சசி கபூர் காதல். 
சசி கபூர் விமானப் படை வீரர். 
தெரிஞ்சு போச்சு! 
ச. க போரில் வீர மரணம். 
அமிதாப் ஜெயா பாதுரி மீது பரிதாபப் பட்டு அவரை மணக்கிறார். 
ரேகா வேறு வழியின்றி டாக்டர் சஞ்சீவ் குமாரை மணக்கிறார். 
அமி& ஜெ ப மற்றும் ரேகா & ச கு  தம்பதிகள் சந்திக்க வேண்டி வருகிறது. 
இங்கேதான் ட்விஸ்ட். 
அமி & ரேகா அவர்களின் காதலை தொடர்கிறார்கள். 
இருவரும் சிம்லாவுக்கு ஓடிப் போய் புது வாழ்க்கை தொடங்க தலைப்படும் போது சஞ்சீவ் குமார் பயணம் செய்யும் விமானம் விபத்து என்று செய்தி வருகிறது. அந்த செய்தியை ஃபோனில் சொல்பவர் ஜெயா பாதுரி! 
என்ன ஆச்சரியம்! விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரியும்போதே அமி & ரேகா ஒரு ஹெலிகாப்டரில் சிம்லாவிலிருந்து புறப்பட்டு விபத்து நடந்த இடத்துக்கு வந்து, விமானத்தின் வால் பகுதியில் பயணம் செய்த சஞ்சீவை அமிதாப் காப்பாற்ற ...
மீண்டும் சஞ்சீவ் & ரேகா மற்றும் அமி & ஜெயா ஜோடிகள் ஒன்று சேர்கிறார்கள்! 
படத்தில் ஒரு காட்சியில் யாராவது வருகிறார்கள் என்றால் அடுத்த காட்சியில் அவர் இந்த ஜோடிகளில் யாராவது ஒருவருக்கு 'ஒன்றுவிட்ட ஓர்ப்படி மச்சினி அல்லது மச்சினன்' என்று உறவு ஆக மாறிவிடுகிறார்கள்! 
நல்ல வேளை - ஆரம்பத்தில் விபத்துக்குள்ளான சசி கபூரும் கடைசியில் உயிர் பிழைத்து வந்திருந்தால் கதை வேதாளம் & விக்கிரமாதித்தன் கதை போல ஆகி யார், யாரை கல்யாணம் செய்துகொள்வது என்று குழப்பமாகியிருக்கும்! அப்படி ஆகவில்லை என்பது ஆறுதல்!
= = = = = = = = =

11 கருத்துகள்:

  1. மொத்த கேள்விகளையும் இந்த வாரமே தட்டிவிட்டீர்களா? இன்றிலிருந்து பத்து நாட்கள் பிருந்தாவன் மதுரா கோவர்தன் கோகுலம் குருக்ஷேத்ரா பயணம் இதோ ஒரு மணி நேரத்தில் கிளம்புகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வழியாகவா? தில்லி வந்தால் சொல்லுங்கள்.....

      நீக்கு
    2. அடேடே ! நான் சென்னைப் பயணம். இன்னும் 2 மணி நேரத்தில் கிளம்பவேண்டும்.

      நீக்கு
  2. பா வெ மேடம் அனுப்பிய படம். முதலில் பேத்தி கடப்பா கல்லில் முயற்சித்த பிள்ளையார் கொழுக்கட்டைனு நினைத்தேன்-வகை வகையா முயற்சித்திருக்கிறாள் என. பிறகுதான் புரிந்தது. ஜெல்லி ஃபிஷ்கள் என

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.......

    இன்றைய கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்று.

    படங்கள் அழகு.

    தமிழ் தட்டச்சு - சில சிக்கல்கள் இப்படி இருக்கத்தான் செய்கின்றன. சரியாகும் என்ற நம்பிக்கை உண்டு.

    சினிமா விமர்சனங்கள் - நன்று. இப்போது சினிமா பார்க்கும் அளவு பொறுமை இல்லை....

    பதிலளிநீக்கு
  4. பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. திரை விமர்சனம் எதற்கு?!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!