31.8.25

ஞாயிறு பட உலா – நெல்லைத் தமிழன் நான் சென்ற இடங்கள் – மெக்சிகோ - படங்களுடன் - 13

 

சுண்ணாம்புப் பாறைகளால் அமைந்த இயற்கை நீர்நிலை

சிச்சன் இட்ஸா பார்த்துவிட்டு, மதிய உணவு உண்ட பிறகு நாங்கள் சுண்ணாம்புப் பாறைகள் நிரம்பிய ஒரு குகைக்குச் சென்றதை சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். அந்த குகைக்குள் குளிக்கும் அளவு அருமையான நீர் இருந்தது.  இந்த வாரம் அங்கிருந்து தொடர்கிறோம்.

நம் ஊரில் ஜீவ நதிகள் பல உண்டு. அவற்றில் குளித்தால் நம் பாவம் போகும் என்று நம்புகிறோம். அவற்றைப் பற்றி பல்வேறு புராணக் கதைகளும் உண்டு. அவை எல்லாமே நடந்தவை என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் உண்டு. இருந்தாலும் நதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும், நாகரீகங்கள் நதிக்கரையில்தான் உருவாகியிருக்கின்றன,  நன்னீர் இல்லாவிட்டால் நம்மால் உயிர் வாழவே முடியாது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தும் நதியைப் பாழ்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறோம். அரசியல்வாதிகள் ஒரு புறம், மணலை அள்ளுவது, தொழிற்சாலைக் கழிவு நீரை நதியில் விடுவது என்று தொடர்ந்து திட்டமிட்டு நதிநீரை பாழாக்குகிறார்கள்.  பக்தி என்ற பெயரால், பக்திமான்கள் (மானை எதுக்கு இங்க இழுக்கிறார் என்று யோசிக்காதீர்கள். பக்திகரடிகள் என்று சொல்லலாம்தான்) தங்கள் பழைய உடையை, கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கும் மாலைகளை எல்லாம் நதியில் போட்டுவிடுகிறார்கள். ஆனால் அந்த பக்திக்கரடிகள் மறந்தும்கூட பழைய ரூபாய் நோட்டுகளை ஆற்றில் போடுவதில்லை. பழைய உடையை ஒன்றும் இல்லாத ஒரு ஏழைக்கு தானம் கொடுக்க மனம் வராதா?  தொழிற்சாலைகள் கடுமையாக நதிநீரைக் கெடுக்கின்றன. எந்த எந்த ஆறுகள், எந்த எந்த சாயத் தொழிற்சாலைகள் என்றெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

வெளிநாடுகளில் (அமெரிக்கா கனடா மற்றும் பல), நதியில் குளிக்கவே வாய்ப்பு கிடையாது. சில நாடுகளில் நதி என்று அவங்க சொல்வது கொஞ்சம் பெரிய ஓடை என்றுதான் எனக்குத் தோன்றும். நம்ம ஊர் மாதிரி மணலுடன் கூடிய நதிகளை நான் கண்டதில்லை. அத்தகைய நதிகள் நமக்கு இறைவன் கொடுத்த வரம். சில நாடுகளில் நதி கிடையாது. நன்னீருக்கு அவர்கள் கடல் நீரைச் சுத்திகரித்து உபயோகப்படுத்துகின்றனர். நமக்கு தண்ணீர் கஷ்டம் முற்றிலும் வராத வரை நம்மால் தண்ணீரின் மகத்துவத்தை அறிய முடியாது.

எங்களை யாத்திரைக்கு அழைத்து செல்பவர், நதிகளில், புஷ்கரணிகளில் (திருக்குளங்கள்) சோப்பு உபயோகிக்கக் கூடாது என்று சொல்வார்.  இதை எழுதும்போது எனக்கு ரிஷிகேசில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அங்கு கங்கை நதி உண்டு. கொஞ்சம் வேகமாகப் பாயும். அங்கு எங்களை நீராடிவிட்டு வரச்சொல்லியிருந்தார் யாத்திரைக் குழுத் தலைவர். நான் குளித்துவிட்டு, நனைந்த உடையை நதியில் பிழிந்தேன். உடனே அருகில் இருந்த வடநாட்டவர், மிகவும் கோபமாக, நதியின் புனிதம் தெரியவில்லையே, அதில் நீரைப் பிழியலாமா என்று கேட்டார். எனக்கு அவர் கேள்வி ஆச்சர்யம், மற்றும் கடுப்பு. அவ்வளவு ஓவரா ஆக்ட் பண்ணவேண்டாம், நதியை நாம் நம் வீட்டு குடிதண்ணீர் என்று நினைத்தாலே போதும்.

இந்த மாதிரி சுண்ணாம்புப் படிவப் பாறைகள், குகைகள் அமைந்திருந்த பகுதி ஓமானில் உண்டு. அங்கு செல்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. 

மெக்சிகோவின் பாரம்பர்ய உடையணிந்து, அலங்காரத்துடன் அங்கு பலர் இருந்தனர். (இது சுற்றுலாப் பயணிகளைக் கவர, உள்ளூர் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது என்று நினைத்தேன்)

நடுப்பகுதி வரை சென்று நாம் குளிக்கமுடியும்.

மாயன் மக்கள் அவர்களின் வழிபாட்டுக்கு உபயோகப்படுத்திய இடமா என்பது தெரியவில்லை.

மேலே வெளிச்சமாகத் தெரிவது தரைப்பகுதி. மேலிருந்து மழை நீர் வருவது தெரிகிறதா?

இந்தப் படத்தில் இன்னும் நன்றாகத் தெரியும். 

வெளியில் மழை. அதனால் உடை நனைந்துவிட்டது.  தண்ணீருக்குப் பயந்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை விடமுடியுமா?

அங்கு பல சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தார்கள். எங்களுடன் வந்தவர்கள் யாரும் குளித்தமாதிரித் தெரியலை. நானோ மாற்று உடை எடுத்துக்கொண்டு செல்லவில்லை. சென்றிருந்தால், தண்ணீரில் இறங்கியிருப்பேன். இந்த அனுபவத்தை வேறு எங்கு பெற முடியும்?  (இதை எழுதும்போது, தாய்பே நகரத்தின் அருகில், எரிமலைப் பகுதியில் கந்தக நீரூற்றுகள் நிறைய உண்டு. அங்கு இருக்கும் பல இடங்களில் அந்தத் தண்ணீரில் குளிப்பதற்கான வசதியும் உண்டு.  அதில் இரண்டு பெரிய அறைகள் (30-50 பேர் குளிக்கும்படியாக), அதன் வழியாக நீர் செல்லுமாம்.. கிட்டத்தட்ட மிகப் பெரிய நீர்த்தொட்டிபோலவே அந்த அறை இருக்குமாம். ஆனால் உடையுடன் அனுமதிக்கமாட்டார்கள். அதற்கு முந்தைய அறையிலேயே உடையைக் களைந்து பிறகு உள்ளே செல்லணுமாம். நாங்கள் அந்த இடம் வரை போனோம். வெளியில் தண்ணீரில் கால்களை அளைந்துகொண்டோம், படங்கள் எடுத்துக்கொண்டோம். குளிக்கவில்லை. இது தாய்வானில்… இதன் படங்களெல்லாம் பிறிதொரு சமயம் வரும். நான் எழுதும் எல்லாவற்றிர்க்கும் அனேகமாக படங்கள் உண்டு.  அங்கு அதிலிருந்து சிறிது தூர த்தில் பல ஹோட்டல்கள் உள்ள சிறு இடம் உண்டு. அங்கெல்லாம் ஹோட்டல்களில் அறையில் இந்த நீர் வரும்படிச் செய்திருப்பார்களாம். கந்தக நீரில் அமிழ்ந்து அறையில் குளிக்கும்படியாக. பொது இடத்தில் என்றால்தானே உடைகளைக் களைய யோசனையாக இருக்கும் என்று.  என்னை அந்த நாட்டிற்கு வரவழைத்தவர், அடுத்த முறை இந்த இடத்தில் உங்களுக்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். ( ஆனால், அதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு காலம் கொடுக்கவில்லை)

பாரம்பரிய உடையுடன், இசைக்கருவிகளுடன்.


குகைக்குள் இறங்கும் பாதை



இந்த இடம் அவர்களுக்கு ரொம்பவே புனிதமானதாம்.

அதே படம்தான்… அப்போ உள்ள போனோம்… இப்போ வெளியில் வந்தோம்.

இந்த சுண்ணாம்பு(?)க் குகை அமைந்திருந்த பகுதி

உள்ளே மழைநீர் வருவதைப் பார்த்தோம் இல்லையா? அதன் வெளிப்பகுதி

குகை அமைந்திருக்கும் விதம் தெரிகிறதா?

அந்தப் பகுதியில் வீடுகளும் இருந்தன. நிறைய மக்காச்சோள வயல்களைப் பார்த்தேன். நாம பார்க்காத மக்காச்சோளமா என்று நினைத்து அந்தப் படங்களை இங்கு பகிரவில்லை.

இங்கேயும் தோகையைப் பறித்துவிடுகிறார்களா?

அந்த இடத்தில் இருந்த சிறிய நீரூற்று. அதனைச் சுற்றிலும் ஆரஞ்சு மரங்கள். (தெரிகிறதா?)

இந்தப் படத்தில் ஆரஞ்சுப் பழங்கள் நன்றாகத் தெரியுமே…

அங்கு எங்கு பார்த்தாலும் வீடுகளின் அருகே ஆரஞ்சு மரங்கள். பறித்துக்கொண்டால் ஒன்றும் சொல்லியிருக்கமாட்டார்கள். சுவையான ஆரஞ்சு.

எல்லாவற்றையும் பார்த்த பிறகு மாலை 6 மணி வாக்கில் அங்கிருந்து பேருந்து கிளம்பி ரிசார்ட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.  இவர்கள் பல ரிசார்ட்டுகளிலிருந்தும் கஸ்டமர்களை அழைத்துவருவதால், என் ரிசார்ட்டிலிருந்து நான் ஒருவன் மட்டுமே வந்திருந்ததால்,  ஓரிரு கி.மீ முன்பு, வேறு ஒரு காரில் என்னை ஏறிக்கொள்ளச் சொன்னார்கள். இரவு 8 ½ மணிக்கு வந்துசேர்ந்தேன் (பத்திரமாக). மிக அருமையான நினைவுகள். மாயன் கலாச்சாரம் பரந்துபட்டிருந்த அந்த இடங்களில் சிலவற்றை நானும் காணும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமே.  இறுதிப் பகுதியை அடுத்த வாரம் காணலாம்.

(தொடரும்) 

32 கருத்துகள்:

  1. நெல்லை, நதிகள் பத்தி சொல்லியது டிட்டோ.
    புண்ணியம் என்று சொல்லி, நதிகளை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கதைகளும் சொல்லியும்....நிலைமை....எனக்குக் கண்டபடி வார்த்தைகள் வந்துவிடும்

    என்னைப் பொருத்தவரை எந்த ஒரு நீர் நிலையும் இயற்கையால் படைக்கப்பட்டது எனும் நிலையில் அது புனிதமானது என்பது என் தனிப்பட்டக் கருத்து. சிறு குளமாக இருந்தாலும். எனவே எந்த ஒரு நீர் நிலையையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் சின்ன குளமாக இருந்துவிட்டா போதும் அவ்வளவுதான் அதன் மீது கட்டிடங்கள் எழுந்துவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. இங்கு மதுராவில் சில குளங்களை யமுனை நதியின் ஒரு பகுதியை மிக மோசமாக வைத்துக்கொண்டுள்ளோம். பெண்ணைத் தெய்வமாக்கி ஆனால் மோசமாக நடத்துவதில்லையா? அது மாதிரி

      நீக்கு
  2. இப்ப கூட வடக்கே பெய்யும் மழையும் வெள்ளம் தண்ணீர் நிறைய வீணாகப் போகிறது. என்னவெல்லாமோ பாலம் பாலமாகக் கட்டுகிறார்கள். மழை நீர் சேகரிப்புக்கு ஏனோ முனைப்பில்லை.

    உடனே அருகில் இருந்த வடநாட்டவர், மிகவும் கோபமாக, நதியின் புனிதம் தெரியவில்லையே,//

    ஹாஹாஹா நாம குளிக்கும் போது துணியோடுதானே குளிக்கிறோம்?

    இன்னும் ஒன்று சொல்லிவிடுவேன் ஆனால் வேண்டாம் இது பொதுவெளி என்பதால் சொல்ல மாட்டேன். நெல்லை உங்களுக்குத் தெரிந்துவிடும், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று.!!!

    அந்த முக்திநாத்தில் நிறைய புண்ணிய தீர்த்தங்கள் என்று உண்டாமே குளம் குளமாக.....சில்லுன்னு....எனக்குப் பல தோன்றியது அதில் ஒவ்வொன்றிலும் குளிப்பவர்கள் அதுவும் கொஞ்சம் வயசானவங்க....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு கோகுலம் மதுரா விருந்தாவனத்தில் யமுனை கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் இந்தப் பகுதியின் பல இடங்களில் உப்புநீர்.

      நீக்கு
  3. நெல்லை சுண்ணாம்புப் பாறைகள் சூப்பர். முடிஞ்சா அரக்கு பள்ளத்தாக்கின் போரா குகைகளுக்குப் போய்ட்டு வாங்க. சூப்பரா இருக்கும். அரக்கு பள்ளத்தாக்கு ம் அழகும் போகும் வழியின் அழகும் மனதைக் கொள்ளை கொள்ளும்.

    நானும் பதிவு போட்டிருந்தேன், வெங்கட்ஜியும் பதிவு போட்டிருந்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பயணங்கள் போகவேண்டி இருக்கிறது. ஆனால் டிசம்பர் இறுதி வரை புதுப்பயணம் போவதில்லை என நினைத்திருக்கிறேன். பார்ப்போம்

      நீக்கு
  4. அந்த நீர்னிலை சூப்பரா இருக்கு சுத்தமாக. இங்கு போரா குகைகளில் ஆங்காங்கே நீர் சொட்டும் ஒழுகும் அருகில் நதி ஓடுகிறது. ஆனால் உள்ளே நீர் தேங்கியிருக்குமே தவிர குட்டையாக இல்லை.

    நடுவில் உள்ள கற்கள் மாயன் மக்கள் வழிபட்டது போலதான் இருக்கின்றது.

    மழை நீர் வருவது போன்றுதான் இங்கும் போரா குகைகளில் உண்டு.

    நானும் தண்ணீரைக் கண்டால் குளிக்க அனுமதி இருந்தால் இறங்கிவிடுவேன்!!!!! முன்னரே தெரிந்தால் மாற்று உடையும் வைத்துக் கொள்வேன்.

    தலக்காடு பயணம் எழுதவே இல்லை. இந்த வாரத்திலாவது எழுதணும் அது ஒரு 4, 5 பகுதிக்கு மேல வரும் படங்கள் இருக்கே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தண்ணீரைக் கண்டால் மிகவும் பிடிக்கும். நேற்று கோகுலம் பயணத்தில் ரொம்ப வெயில். ஆனாலும் வசுதேவர் நதியைக் கடந்து கரையேறியதாகக் கூறப்படும் இடத்தில் யமுனையில் கால் வைத்து நின்றுகொண்டிருந்தது ஜில் என இருந்தது. வாய்ப்பு இருந்திருந்தால் குளித்திருப்பேன்

      நீக்கு
  5. குளியல் உடைகள் அணிந்து குளிக்கணுமோ தாய் பற்றி சொல்லியிருப்பதில்?

    நெல்லை இப்படி வேறு ஊர் பற்றிச் சொல்லும் போது அதைத் தனி பத்தியாகப் போடுங்களேன். இடையில் சேர்ந்து வரப்ப கொஞ்சம் குழம்புது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை இந்தத் தவறு வராமல் பார்த்துக்கொள்கிறேன். தாய்பே தாய்வானின் தலைநகரம்.அங்குதான் கந்தக நீர்குளியலில் உடை கூடாதாம் (ஆங்.. ஆண்கள் தனி இடம் பெண்கள் தனி இடம். காண முடியாது)

      நீக்கு
  6. பாறைகளின் படங்கள் சூப்பர்.

    மழைனீரின் வெளிப்பகுதி அமானுஷ்யத் துளை போல இருக்கு. சில குகைகளின் நுழைவு இப்படி இருக்கும் ஆனால் உள்ளே போக அனுமதிக்கமாட்டாங்க. வள்ளியூரில் இருக்கும் வள்ளிகுகை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமானுஷ்யம்தான். இருட்டில் தவறி விழுந்தால்? வள்ளியூர் குகை பார்த்ததில்லை

      நீக்கு
  7. குகை அமைந்திருக்கும் விதம் இயற்கையின் அற்புதத்தைச் சொல்கிறது.

    வீடுகள் எளிமை.

    மனுஷன் இருக்கற இடங்கள் எல்லாத்துலயும் கெட்ட மனசு இருந்தா இப்படிப் பறிமுதல்கள் நடக்கும்.

    ஆரஞ்சு - பறிக்கத் தோன்றுகிறது.

    படங்கள் எல்லாமே விவரங்களுடன் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரஞ்சு பறித்தால் தவறில்லைனு நினைக்கிறேன். பசித்தால் பறித்துச் சாப்பிடவேண்டியதுதான். மிக்க நன்றி கீதா ரங்கன்

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் மிக அழகு! விபரங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன் அவர்கள். மிக்க நன்றி

      நீக்கு
  9. நெல்லை எதுவானாலும் சிறப்பாகச் சொல்கிறார். மிக நன்று. நேற்றுதான் Backpacker Kumar யூட்யூப் சேனலில் மெக்சிகோ பார்த்தேன். நடுவீதி நாற்சந்தில், பயம் தரும் உடை உடுத்தி புகை, சங்கு , மயில் இறகு விசிறி எல்லாம் வைத்திருந்த பூசாரிகளின் மக்கள் திருஷ்டி கெட்ட ஆவி கழித்துக் கொள்வதைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இராமன் சார். மெக்சிகோ பற்றி நல்லபல காணொளிகள் இருக்க பூசாரி காணொளி பார்க்க நேர்ந்துவிட்டதா? மக்கள் தொலைக்காட்சியில் கிராமீயக் கூத்து பார்த்தமாதிரி இருந்திருக்குமே

      நீக்கு
  10. பூசாரிகளிடம் என்று படிக்கவும்.‌

    பதிலளிநீக்கு
  11. மிகவும் சுவையான பகுதி.  அந்த குகையைப் பார்த்தல் இறங்கவே பயப்படும் அளவு இருக்கிறது.  இறங்கி விட்டால் பயமில்லை போல.  சாவி போன்ற அந்த அமைப்பு ஏதோ ரகசியக் குறியீடு போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். இரகசியக் குறியீடு -ஹாஹாஹா. எனக்குத் தோன்றவில்லையே ஆனால் குகை பயமாக இல்லை. வாய்ப்பிருந்தால் குளித்திருப்பேன். அவ்வளவு ரம்யமாக இருந்தது

      நீக்கு
  12. சில படங்கள் சரியாக புரியவில்லை.
    ஓமானில் சுண்ணாம்பு குகை... பார்த்த நினைவு இல்லை. ஓமான்,துபாய் பார்டரில் இருக்கிறது என்று நினைக்கிறேண். ஆனால் ருஸ்டாக் என்னும் இடத்தில் கந்தக நீரூற்று உண்டு. அந்த நீர் வெடுவெதுப்பாக இருக்கும், ஒரு சின்ன கால்வாய் போல கட்டி விட்டிருப்பார்கள். அதில் குளிப்பது சரும நோய்களை குணமாக்கும் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். படங்கள் பெரும்பாலும் அந்த குகைக்குள் எடுக்கப்பட்டவை. அதற்குள் இருக்கும் மேடு போன்ற பகுதியில் பாரம்பர்ய ஆடைகளுடன் உள்ளூர் மக்கள் சிலர் இருந்தார்கள். கந்தக நீர் நல்லது. ரொம்பநேரம் குளிப்பது நல்லதில்லை என்பார்கள். ஆடையில்லாத பலருடன் சேர்ந்து குளிப்பது எனக்கு விருப்பமானதல்ல. புது வியாதிகள் நமக்கெதற்கு?

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம்.

    படங்களும் தகவல்களும் நன்று.

    டேராடூன் அருகே சஹஸ்ரதாரா எனும் இடத்திலும் கந்தக நீர் இருக்கும் ஆறு/ நதி ஒன்று உண்டு. அங்கே குளித்த அனுபவமும் உண்டு. அதே போல இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணிக்கரன் பகுதியிலும் உண்டு.

    கீதா ஜி சொல்லி இருப்பது போல அராக்குப் பள்ளத்தாக்கு மற்றும் போறா குறைகளும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட் நாகராஜ். நான் இன்னமும் ஹிமாச்சல் பிரதேஷ் சென்றதில்லை. மற்ற இடங்களும் லிஸ்டில் இருக்கின்றன. உங்களுக்கு வடகிழக்கில் பயணிக்க நிறைய வாய்ப்புகள் கிட்டியிருக்கின்றன. விரைவில் ஹிமாச்சல் பிரதேஷ் போகணும்

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. மெக்சிகோவில் உள்ள சுண்ணாம்பு குகை படங்கள் நன்றாக இருக்கிறது. நாங்களும் மகனுடன் இது போன்ற குகைகளுக்கு போய் இருக்கிறோம்.

    நீர்நிலையை பற்றி சொன்னது முற்றிலும் உண்மை. எனக்கும் புனித நீர்நிலைகளை பார்க்கும் போது இப்படி செய்யலாமா மக்கள் என்று புலம்பி கொள்வேன்.

    "சார் தம் " யாத்திரையின் போது இப்படி கந்தக நீர் ஊற்றில் மக்கள் குளிப்பதை பார்த்தோம். ஆனால் நாங்கள் குளிக்கவில்லை.
    சிறிய குளம் போல இருக்கும் மக்கள் அதில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தார்கள். உடை மாற்ற இடம் எல்லாம் இல்லை, அதனால் குளிக்கவில்லை.

    பாரம்பரிய உடையுடன், இசைக்கருவிகளை வாசித்தது நன்றாக இருந்ததா?

    மயிலின் தோகையை எடுத்து இருப்பது பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

    மேலிருந்து மழை நீர் வரும் படம் அழகு.

    சிறிய நீரூற்றில் தண்ணீர் வந்து இருந்தால் பார்க்க அழகாய் இருக்கும்.

    ஆரஞ்சு மரங்கள் அழகு.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் பத்ரிநாத்தில் தப்த்குண்ட் எனச் சொல்லப்படும் வெந்நீர் ஊற்றில் குளித்திருக்கிறோம்.

      அவர்களின் இசை ஓகே ஆனால் அதை ரசிப்பதைவிட படங்கள் எடுப்பதிலும் கீழிறங்கிப் பார்ப்பதிலும் பிசியாக இருந்தேன்

      மயில் இறகை வைத்துக்கொள்ள அழகு ஆனால் இதற்காக மயிலின் இறக்கைகளைப் பிடுங்குகிறார்கள் எனப் புரிந்தபின் ஆசை குறைந்துவிட்டது

      நன்றி கோமதி அரசு மேடம்

      நீக்கு
  16. சுண்ணாம்புக்குகை, பாறைகள், நீரூற்று என பல படங்கள் கண்டோம்.

    பாரம்பரிய உடையுடன் இசைக் கருவிகளையும் காட்சிப்படுத்தியது அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!