18.8.25

"திங்க"க்கிழமை : இட்லி தோசைக்கான சாம்பார் - ஸ்ரீராம்

 

நிறைய வீடுகளில் தினசரி காலை டிஃபன் இட்லி யாகத்தான் இருக்கும்.  அல்லது தோசை.  அதற்கு அவர்கள் தினசரி அலுத்துக் கொள்ளாமல் இரண்டு வகை சட்னி,  அல்லது குறைந்த பட்சம் ஒரு சட்னி செய்து விடுவார்கள்.  நிறைய பேர் சட்னியுடன் சாம்பார் கூட செய்து விடுவார்கள்.  ஆனால் எங்கள் வீட்டில் இட்லியோ தோசையோ, பெரும்பாலும் மிளகாய் பொடி தான்!  இட்லி, தோசை இரவு உணவாக இருந்தால் மதியம் செய்த குழம்பு கூட சேர்ந்து வரும்.  சட்னிகள் செய்வதற்கு ரிக்வஸ்ட் கொடுக்க வேண்டும்.  சமயங்களில் அப்ரூவ் ஆகும்.  அதிலும் வெங்காய சட்னி பெருமளவில் ஒதுக்கி வைக்கப்படும்!

இந்த சாம்பாரும், சட்னிகளும்தான் வேறு தனிச்சுவையில்லாத தோசையையோ, இட்லியையோ மெருகேற்றி அழகாக்கி சுவை கூட்டுகின்றன.  சட்னியோ, சாம்பாரோ அவரவர்கள் அவரவர்கள் கைக்கு வந்த படி செய்து போட்டாலும் சில சுவைகள்தான் மனதில்  நாக்கில் நிற்கும்.  நானும் சின்ன ஹோட்டல் முதல் பெரிய ஹோட்டல் வரை சுவைத்துச் சோதித்திருக்கிறேன்.

இதை வீட்டில் சொல்லி சில வருடங்கள் பாசிப்பருப்பில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் கேரட் பீன்ஸ் போட்டு முயற்சித்திருக்கிறேன்.  வித்தியாசமாக இருந்தாலும், ஏதோ குறைவது போல இருக்கும்.

சமீபத்தில் இணையம் பார்த்தும், ரீல்ஸ் பார்த்தும், கணினி மருத்துவர் நண்பர் இளமாறன் டிப்ஸும் சேர்த்து ஒரு சாம்பார் முயற்சி செய்தேன்.  அன்று வெளிவேலையாக (உறவினர் மருத்துவமனையில் அனுமதி) சென்றிருந்த பாஸ், மருமகள், மகன்கள் வந்து சுவைத்து ஆஹா ஓஹோ என்று கொண்டாடி விட்டார்கள்.

இதை நண்பர் ஒருவரிடம் சொல்லிப் பெருமை அடித்துக் கொண்டதும் 'என்ன ரெசிப்பி' என்று கேட்டார்.  சொன்னேன்.  அன்றே செய்தார்.  அவரும் கொண்டாடினார்.

நண்பரே இதைப்பற்றி இங்கு விளக்கமாகச் சொல்வார் என்று நம்புகிறேன்.

இன்றைய பதிவில் இடம்பெற்றிருக்கும் சாம்பார்ப் படங்கள், காணொளி அவர் செய்ததை எடுத்து எனக்கு அனுப்பியதுதான்.  நான் செய்யும் போது இதை பதிவாக போடுவோம் என்று நினைக்கவில்லை.  எனவே படங்கள் எடுக்கவில்லை.

சின்ன மாறுதல்கள்தான்.  அவை ருசியில் வேறொரு லெவலைக் கொண்டு வருகின்றன.

முன்பு இப்படிதான் சரவணபவன் சாம்பார் பற்றி பகிர்ந்திருந்ததும் கீதா அக்கா சின்ன மாறுதல்கள் தவிர நாங்கள் செய்வது போலதான் இருக்கிறது என்று பதிவின் பின்னூட்டத்தில் சொன்னாலும், ஒருமுறை நான் சொல்லி இருந்தபடியே செய்தாராம்.  அதைச் சாப்பிட்டுப் பார்த்த மாமா "வித்தியாசமா நல்லாயிருக்கே..  இனிமே இப்படியே செய்" என்று சொன்னதாய் அவர் தளத்தில் பதிவு  போட்டிருந்தார்.

கதையை நிறுத்தி விட்டு செய்முறைக்கு வருகிறேன்!

ஒரு  Pan ல ரெண்டு கைப்பிடி துவரம் பருப்பு, கால் கைப்பிடி பாசிப்பருப்பு எடுத்துக் கொள்ளவும்.  பாசிப்பருப்பு ஆப்ஷனல்.  நான் எடுத்துக் கொண்டேன்.  ஏனெனில் சிலர் இதை வெறும் பாசிப்பருப்பு மட்டுமே போட்டுக் கூட செய்வார்கள்.  என் அம்மா சாம்பாருக்கு எப்பவுமே 'து.ப' வுடன் கொஞ்சூண்டு 'பா ப' ம் சேர்த்துக் கொள்வார் என்பதால் எனக்கும் பழகி விட்டது!

அந்த பருப்பில் மூன்று மீடியம் சைஸ் பூண்டு பல் நசுக்கிச் சேர்க்கவும்.  நசுக்கிச் சேர்ப்பது அவசியம்!   

பருப்பை எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். 

அப்புறம் மீடியம் சைஸ் என்றால் இரண்டு, பெரிய சைஸ் என்றால் ஒரே ஒரு உருளைக்கிழங்கு எடுத்து தோல் சீவிக் கொண்டு நான்காய் அல்லது எட்டாய் நறுக்கிக் கொள்ளவும்.  காரத் தேவைக்குத் தகுந்தாற்போல் பச்சை மிளகாய் கீறிப் போட்டுக் கொள்ளவும்.  நான் ஐந்து பெரிய சைஸ் பச்சை மிளகாய் கீறிப் போட்டேன்.  ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டபின்  முழுகும் அளவுக்கும் கொஞ்சம் அதிகமாய் தண்ணீர் சேர்க்கவும்.  மூடி போட்டு எட்டு முதல் பன்னிரண்டு விசில் வரை வைத்து எடுக்கவும்.  பதமாய் வெந்திருக்க வேண்டும்.  தண்ணீர் தீர்ந்து போய் அடி பிடிக்காமல் கவனமாக இருங்கள்.   அடுப்பை அணைத்து விசில் அடங்கும் வரை  அது ஓரமாக இருக்கட்டும்.

பத்து அல்லது பதினைந்து சின்ன வெங்காயம் சிலுக்குத் தோல் நீக்கி, பளபளவென்று உரித்து பொடியாக இல்லாமல் ஒன்றுக்கு இரண்டாய் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  விரும்புபவர்கள் முழுசாயும் போடலாம்.  இரண்டு மீடியம் சைஸ் தக்காளி எடுத்து பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.அப்புறம் சிறிய துண்டுகளாய் நறுக்கிய சிறிய முருங்கைக்காய், சிறிய கேரட்,  இரண்டு பீன்ஸ் சின்னச் சின்னதாய் நறுக்கி  சேர்க்கலாம்.  ஒரேயடியாக காய்கறிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் நல்லது.  அதே சமயம் இத்தனை காய்கறிகளும் சாம்பாருக்கு வாசனை சேர்க்கும்.  நான் அரை முள்ளங்கி கூட சேர்த்தேன். எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்தான்.  சும்மா வாசனைக்கு.  மஞ்சள் பூசணி எனப்படும் பரங்கி இருந்தால் விசேஷம்.  சேர்க்கலாம்.  வெகு பொருத்தம்.

Pan ல தாராளமாக  இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பட்டை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.  அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  அப்புறம் தக்காளி, மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  

அது வேகும் நேரம் இரண்டு டேபிள் ஸ்பூன் சீரகம் எடுத்து மிக்சியில் எல்லாம் போடாமல் ஒரு பேப்பரில் வைத்து கரகரவென இடித்துக் கொள்ளளவும்.  நாங்கள் இதற்கென்று இரண்டு குட்டி உரல் வைத்திருக்கிறோம்.

காய்கறிகள் நன்றாய் வெந்து விட்டன என தெரிந்ததும் குக்கரில் வைத்திருக்கும் பருப்புக் கலவையை எடுத்து பருப்பு முழிக்காமல் மாவாய் கடைந்து அதில் சேர்க்கவும். ஒட்டிக்கொண்டிருக்கும்  பருப்பு வீணாகாமல், பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு கழுவி சேர்த்து விடலாம்.  முதலில் பச்சை மிளகாய் போடவில்லை என்றால் இங்கு சேர்க்கலாம்.  இலந்தைப் பழ அளவு புளியை கால் டம்ளர் தண்ணீரில் கலந்து சேர்க்கவும்.  இரண்டு ஸ்பூன் சாம்பார்ப்பொடி, தேவையான அளவு உப்பு  சேர்க்கவும்..  கொஞ்சமாய் வெல்லம் சேர்க்கவும்.  தோசை இட்லிக்கு சாம்பார் கொஞ்சம் நீர்க்கத்தான் இருக்க வேண்டும் என்பதால் சுவை கெடாத அளவு தேவையான நீர் சேர்த்து, கொரகொரவென்று தட்டி வைத்திருக்கும் சீரகத்தை அதில் தூவி விட்டு,  இரண்டு கொதி விட்டு, கொத்துமல்லி பொடியாய் நறுக்கி மேலே தூவி இறக்கவும்.

சாம்பார் ரெடி.  வெங்காய, தேங்காய் சட்னியும் செய்து வைத்துக் கொண்டால் இன்னும் சௌக்கியம்/  இட்லியா, தோசையா..  எது தயார் செய்து வைத்திருக்கிறீர்கள்?  எடுங்கள், இதை தட்டில் ஊற்றி அடிக்கலாம்.  தயவு செய்து தட்டில் தனியாய் கப் எல்லாம் வைத்து சாம்பார் சட்னியை ஒதுக்கி வைக்காதீர்கள்.  வருத்தப்படும்.  இட்லிமேல், தோசை மேல் அல்லது தோசை பக்கம் ஊற்றி சாப்பிடுங்கள்...சட்னியையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  சாதாரணமாகவே நான் நல்ல ஹோட்டலில் சாப்பிடும்போது தோசை , இட்லி அல்லது பொங்கல் தீர்ந்து விட்டாலும், சாம்பாரும் சட்னிகளும் கலந்த அந்தக் கலவையை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக....

வ்ரூச்...    (உறிஞ்சும் சத்தம்!)


14 கருத்துகள்:

  1. ஸ்ரீராம், சாம்பார் குறிப்பு உங்ககிட்ட தெரிஞ்சுகிட்டு அப்படியே செய்தேன். சூப்பராக இருந்தது. ஹார்லிக்ஸ் விளம்பரம் போன்று "நான் அப்படியே சாப்பிடுவேன்" என்பது போல் அப்படியே சாப்பிட நன்றாக இருந்தது.

    பாருங்க உங்க குறிப்புக்கு testimony கொடுத்துவிட்டேன்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   வாங்க கீதா..   யார் அந்த மர்ம நபர் என்று நான் போட்டிருந்த கொக்கியை முதல் ஆளாக வந்து நான்தான் என்று எடுத்து விட்டீர்கள்.   நீங்கள் எடுத்த படங்கள்தான் பதிவுக்கு உதவி இருக்கிறது!  நன்றி/

      நீக்கு
  2. நானும் பருப்பை வறுத்துச் சேர்ப்பதுண்டு, அது போல து பருப்புடன் கொஞ்சம் பா பருப்பும் சேர்த்து செய்வதுண்டு சாம்பார் அது டிஃபன் சாம்பாராக இருந்தாலும் சரி, சாதத்துக்கானதாக இருந்தாலும் சரி.

    இன்ஸ்டன்ட் சாம்பார் அதாவது பொடியிலேயே பருப்பும்....போட்டுச் செய்வது மகனுக்கு அனுப்புவதும் கூட வறுத்துச் சேர்ப்பேன்.

    அவர்கள் இருவருக்குமே ரொம்பப் பிடித்திருந்தது. இப்பவும் செய்கிறேன்.

    இந்த முறை உங்களின் இக்குறிப்புதான் போகப் போகிறது. டிஃபன் இன்ஸ்டன்ட் சாம்பார் எனும் பெயரில்!!!!!!!!

    அவங்க காய் மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  இதையே இன்ஸ்டன்ட் பொடியாக செய்யப்போகிறீர்களா?  சூப்பரோ சூப்பர்.  செய்து, சுவைத்து, ஒரிஜினல் சுவை மாறாமல் இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

      நீக்கு
  3. சாம்பாருக்குப் பொதுவாகவே நான் கடைசியில் தான் புளியும், பொடியும் சேர்த்துச் செய்வேன், ஸ்ரீராம்.

    அது போல பருப்புடன் பூண்டு தட்டிப் போட்டு, கொஞ்சம் ஜீரகம் எல்லாம் சேர்த்து வைப்பதுண்டு.

    இதில் என்ன வித்தியாசம் என்றால், அப்புறமும் ஜீரகம் தட்டிக் கடைசியில் சேர்ப்பது,

    நம் வீட்டுக்கு அளவு குறைவு என்பதால் அதற்கு ஏற்றாற்போல உங்கள் குறிப்பைச் செய்து கொண்டேன். ஜீரகம் தட்டிப் போடுவதும் சேர்த்து கொஞ்சம் குறைவாக.

    இந்த அளவே எங்களுக்கு இரண்டு நாள் வந்தது!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அவரவர்களுக்கு ஏற்ற அளவில் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்! இதுவே இரண்டு நாட்களுக்கும்.. அம்மாடி!

      நீக்கு
  4. ஸ்ரீராம், நீங்க முன்னாடி கொடுத்திருந்த சரவணபவன் சாம்பார் ஒரு சுட்டியும் கொடுத்து பகிர்ந்திருந்தீங்க.

    ஆனால் எனக்கு அது என்னவோ ஸோ ஸோ தான்.
    அதைவிட இது சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் எனக்கும் அப்படிதான் தோன்றியது.  கடைசியில் இட்லி தோசைக்கான ஒரு சுவையான, பொருத்தமான சாம்பார் எங்களுக்கு கிடைத்தது!

      நீக்கு
  5. டிபன் சாம்பார் செய்முறை குறிப்பு நல்லா இருக்கு.

    நாங்க பட்டை, பூண்டு சேர்ப்பதில்லை. சேர்த்தால் நல்லா இருக்குமா என்று யோசனை. முருங்கைக்காய் சேர்க்கணும்னு சொல்லியிருக்கீங்க. இவை மூன்றையும் சேர்த்து ஒரு நாள் பண்ணிப்பார்க்கிறேன்.

    நீங்க சொல்லியிருப்பதுபோல, சட்னி சாம்பார் கலவை மிக ருசியாக இருக்கும். அடுத்த தோசை கொண்டுவருவதற்குள் காலி செய்துவிடுவேன். அதிலும் இரண்டையும் தோசை, இட்லி மேலேயே விட்டுக்கொண்டுவிடுவேன்.

    ம்ம்.. என்ன ஒண்ணு.. இதற்கு தமிழகம்தான் வரணும் (ஹோட்டல்ல சாப்பிடணும்னா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   இதில் நான் பட்டை, சோம்பு போடவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள்.  ஆனால் பூண்டு இருந்தால் சுவை கூடும்.  நான் செய்த அன்று முருங்கை இல்லை.  அது இல்லாமல்தான் செய்தேன்.  ஆனால் முருங்கை கூடுதல் வாசனை.

      நீக்கு
  6. பாண்டிச்சேரியில் இருந்தப்ப திருநெல்வேலி நட்பு நம் வீட்டில் எதிரில் இருந்தாங்க. அவங்க சாம்பார் நல்லாருக்கும். அவங்ககிட்ட கற்றுக் கொண்டது

    பருப்பு, வெந்தயம் கொஞ்சம், ஜீரகம் கொஞ்சம், சின்ன வெங்காயம், கொஞ்சம் கேரட், பூண்டு தட்டிப் போட்டு, மஞ்சள், ப மிளகாய் என்று எல்லாம் குக்கரில் வைத்துவிட வேண்டும் தண்ணீருடன். முருங்கையும் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

    வெந்து வெளியில் எடுத்ததும் சாம்பார் பொடி, புளி கொஞ்சம் கரைத்து விட்டு, உப்பு போட்டு சற்றுக் கொதி வந்ததும் கடுகு, வற்றல் மிளகாய் கறிவேப்பிலை தாளிச்சு சிறிது கொத்தமல்லி தூவிவிட வேண்டும்.

    நல்லாருந்தது. இப்படியும் நான் செய்கிறேன். இது சாதத்துக்கும் நல்லாருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நானும் இப்படி செய்ததுண்டு.  எனக்கு அதில் ஒரு திருப்தி இல்லாமல் இருந்தது.

      நீக்கு
  7. ​சாப்பாடு ராமன் சாம்பார் ராமன் ஆகிவிட்டீர்கள். வாழ்க சாம்பார்.
    சாம்பாரில் பூண்டு சேர்ப்பதை தற்போது தான் பார்க்கிறேன். பூண்டு சீரகம் சேர்த்த நீங்கள் குறுமிளகும் சேர்த்திருந்தால் ரச சாம்பார் ஆகியிருக்கும்.
    பொதுவே நாங்கள் இட்லிக்கு சாம்பார் வைப்பதில்லை. தேங்காய் சட்னி, மிளகாய் புளி சட்னி, வெங்காய சட்னி, நிலக்கடலை சட்னி,புதினா சட்னி, தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, கொஸ்து, சில சமயங்களில் குருமா (தீபாவளி), பழைய வற்றல் குழம்பு இவையே. தற்போது புதிதாக மதுரை தண்ணி சட்னி செய்ய ஆரம்பித்து விட்டார் பாஸ்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..  நீங்கள் நான் எழுதிய தோசையாயணம் படித்திருக்கிறீர்களா?!  சாப்பாட்டு ராமனில் சாம்பாரும் அடக்கம்!

      சாம்பாரில் பூண்டு சேர்ப்பதை நான் சுவைத்த சில ஹோட்டல்களில் கண்டேன்.  அதன் சுவைக்குள் நுழைந்து ஆராய்ந்து என்னென்ன சேர்த்திருப்பார்கள் என்று யோசிப்பேன்!  

      இட்லிக்கு சாம்பார் சேர்ப்பதில்லையா?  தில்லக்கேணி ரத்னா கேஃப் காரர்கள் கேட்டால் வருத்தப்படுவார்கள்.  நாலு இட்லிக்கு எவ்வளவு சாம்பார் வேண்டுமானாலும் ஊற்றிக்கொள் என்று வாளியை பக்கத்தில் வைத்து விடுவார்கள்.  இட்லி தீர்ந்தபின்னும் சாம்பாரை தட்டில் ஊற்றி 'சாப்பிடுபவர்கள்' உண்டு! 

      இட்லியில் சாம்பார் சேர்ப்பது ஒரு முறை என்றால் சாம்பாரிலேயே இட்லியை ஊறவைத்து சாம்பார் இட்லி என்றே எல்லா ஹோட்டல்களிலும் தருகிறார்களே...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!