24.8.25

ஞாயிறு பட உலா – நெல்லைத் தமிழன் நான் சென்ற இடங்கள் – மெக்சிகோ - படங்களுடன் - 12

 

சிச்சன் இட்ஸா மற்றும் பிற இடங்கள்

ஒரு வழியாக  எல்லாவற்றையும் பார்த்து படங்கள்லாம் எடுத்துக்கொண்டேன். இந்த இடத்தைவிட்டு எல்லோரும் பேருந்தில் கிளம்பி அருகில் இருந்த ஒரு பாரம்பர்ய உணவகம் (மெக்சிகன் விருந்து, பஃபே)  இருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். மதிய உணவு.  அதன் பிறகு திரும்பும் வழியில் வேறு ஒரு இயற்கைக் காட்சியைக் கண்டுவிட்டு ஊர் திரும்பவேண்டியதுதான்.

பலருக்கும் வெஜிடேரியன் உணவு உண்பவர்களின் செண்டிமெண்ட் தெரியாது. இதற்குக் காரணம், அவங்க நாட்டுல, உணவுப் பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், அதனால் மற்றவர்களுடன் சேர்ந்து உணவருந்துவது பாதிக்கப்படுவதில்லை. அதாவது அருகில் உள்ளவர்கள் நான்வெஜ் உண்பதனால் வெஜ் உணவு உண்பவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த நிலையை நான் அடைய பலப் பல வருடங்களாகிவிட்டது. 

லண்டன் அருகே ஒரு பெரிய பிராண்ட் உணவகம். அதன் கிளையை எங்கள் தேசத்தில் மற்றும் எங்கள் நிறுவனம் இருந்த தேசங்களில் ஆரம்பிக்கலாம் என்ற திட்டத்தால், அதன் கணிணி சம்பந்தமான புரிதலுக்காக நான் சென்றிருந்தேன். என் பொறுப்பு மற்றும் வேலை காரணமாக அந்தச் சூழலைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை (ஆனால் அதுக்காக அவங்க அங்குள்ள வெஜ் உணவு கொடுத்தாலும் சாப்பிடமாட்டேன்).  அந்த உணவகத்தின் முக்கியமானவர்களும் வந்திருந்தார்கள். கணிணி சம்பந்தமாக முழுவதும் எனக்குப் புரிந்தது.  போதாக்குறைக்கு படங்களும் எடுத்துவைத்துக்கொண்டேன். அந்த உணவகத்தின் மேலதிகாரி, என்னை இரவு டின்னருக்குக் கூப்பிட்டார். அவரிடம் கணிணி சம்பந்தமாக எல்லாமே எனக்குப் புரிந்துவிட்ட து,  டின்னருக்கு வரலை, ஸாரி என்று சொல்லிவிட்டேன் (அங்க எனக்கு என்ன உணவு இருக்கப்போகிறது? ஆரஞ்சு ஜூஸ் தவிர. எதுக்கு அவரைக் கஷ்டப்படுத்துவானேன் என்று. ஒருவேளை அவர், இவரும் சாப்பிட்டுவிட்டு நம் உணவின் தரத்தை அவர்கள் ஆபீஸில் சொல்லட்டுமே என்று நினைத்திருப்பாரோ என்னவோ). இரவு, என் பாஸ் எங்க ஊரிலிருந்து போன் பண்ணி, நீ ஏன் டின்னருக்கு வரலை என்று சொல்லிவிட்டாய்? அவங்க தவறா நினைத்துக்கொண்டார்கள் என்று சொன்னார். நான் சிரித்துக்கொண்டே காரணத்தைச் சொன்னேன். (ஆனால் அந்தக் காரணத்தை அஃபீஷியலாக யாரிடமும் சொல்லமுடியாது. பலருக்குப் புரியாது). இன்னொரு சந்தர்ப்பத்தில் ரெஸ்டாரண்டின் உள்பகுதி படம் பகிர்கிறேன். 

இப்போது நாம் பார்க்கப்போவது, சிச்சன் இட்ஸாவில் விட்டுப் போன படங்கள். பிறகு நாங்கள் சென்றிருந்த உணவகம்.


சாரநாத் போயிருந்தபோதும் அங்கிருந்த பல வடிவங்கள், சிதைந்த கட்டிடங்கள் எனக்குப் புரியவில்லை. ஓரளவு அதனை ஆவணப்படுத்தியிருக்கின்றனர்.  பழங்கால சிதைந்த இடங்கள், எதற்காக அமைக்கப்பட்டவை என்பது யாருக்குமே தெரியாது.


மேலே இருக்கும்  வடிவம், அரசருடையதா இல்லை தலைமைப் பூசாரியுடையதா இல்லை அவர்கள் வணங்கிய கடவுளுடையதா?




இந்தப் படம்லாம் என்ன? எல்லாம் எழுத்துக்கள் தம்பிகளா. படித்துப் புரிந்துகொள்ளுங்கள்.

இதுதான் அவர்களின் சிங்காதனம் (அரசாங்க முக்கியத்துவம் உள்ளவர்கள் அமர்வது… மாயன் காலத்தில்)  ஆசையிருந்தால் சொல்லுங்கள். உங்களுக்கும் ஒன்று ஆர்டர் பண்ணிடலாம்.  முக்கியப் பிரமுகராக இருப்பதில் என்ன பிரச்சனைனா, அரசனின் கோபம் திரும்பினால், நரபலிதான்.

உச்சியில் உள்ள கட்டிடத்தில் இருக்கும் மூன்று சன்னல்களையும் வீனஸ் போன்ற கிரகங்களைக் கண்காணிக்கும் விதமாக அமைக்கப்பட்டவை என்று சொல்கிறார்கள். சீசனைப் பொறுத்து சூரியனின் ஒளி ஒவ்வொரு சன்னல்கள் மூலமாகப் பரவும் என்றார்கள் (அதற்கு கிரகண அமைப்பு காரணம் என்றார்கள்). வருடத்துக்கு ஒரு நாள் மாத்திரம் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி வரும் கோயில்கள், ஒவ்வொரு நிலையிலும் வருட த்தில் ஒரு நாள் சூரிய ஒளி என்று பலவாறு அமைக்கப்பட்ட ஊரிலிருந்து வந்தவனுக்கு இது பெரிய அதிசயமாகத் தெரியவில்லை. 

அவர்கள் அழைத்துச் சென்ற உணவகம் பாரம்பர்யமாக குடிசைகளால் அமைக்கப்பட்டு இருந்தது. மெக்சிகன் பெண்கள் எங்களை வரவேற்று அமரச்சொன்னார்கள். முதலில் பானங்கள் போன்றவை வந்தன. பிறகு நாமே எடுத்துக்கொள்ளும்படியான வகைவகையான உணவுகள். நான் பழங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டேன். (ரொம்ப கன்சர்வேடிவ் ஆக இருக்கக் கூடாது, ஏதாவது உணவை முயற்சிப்போமே என்று நினைத்து, இந்தோனேஷியாவில், வேக வைத்த ஜவ்வரிசி, வெல்லப்பாகு, பால் இவற்றை எடுத்துக்கொண்டு…. ஆமாம் அவையெல்லாம் பஃபேயில் இருந்தன. வெல்லப் பாகுன்னு சொல்லமுடியாது, கொஞ்சம் தளிர இருந்தது..  எல்லாவற்றையும் கலந்து கஞ்சி மாதிரி சாப்பிடலாம் என்று முயற்சித்தேன்… நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. எனக்குப் பிடிக்கவில்லை)

நானும் பஃபேயில் கலந்துகொண்டேன். போட்டோ எடுத்தால்தானே நினைவில் இருக்கும்?


டிப்ஸ் போட்டிருப்பார்களோ? நான் சாப்பிட்ட ஐந்து ஸ்லைஸ் பழத்துக்கு டிப்ஸாவது ஒண்ணாவது?


அரியணையில் வீற்றிருக்கும் மாயன் அரசர்(தலைவர்), பூசாரிகள், மந்திரிகள்.  சித்தரிக்கும் படம். செவ்விந்தியர்களும் இத்தகைய உடைகளை அணிந்தவர்களாகத்தானே இருந்திருப்பார்கள். 

உணவுக்குப் பிறகு எங்களை அழைத்துக்கொண்டு, இயற்கையாக அமைந்திருந்த சுண்ணாம்புப் படிவ குகை மற்றும் நீர்நிலைக்கு அழைத்துச் சென்றனர். அந்த இடத்திற்கு நடக்கும் வழியில் பல மயில்களையும் பல்வேறு பறவைகளையும் பார்த்தேன்.  மயிலைக் கண்டால் எனக்கு மனதில் எப்போதும் ஒரு சந்தோஷம் வந்துவிடும்.  சமீபத்தில் திருப்புல்லாணியில், நிறைய மயில்களைப் பார்த்தேன், அதில் ஒரு பெரிய மயில் என்னுடனே நடந்து வந்தது கொஞ்சம்கூட அச்சம் இல்லாமல். வீடுகளுக்கு வந்தால் அங்கு பொரிகடலை போடுவது வழக்கம் என்று சொன்னார்கள் (திருப்புல்லாணியில்) ஒருவேளை அதற்கும் தெரிந்திருக்குமோ, நாம் தேசியப் பறவை, தொட்டால் போலீஸ் அள்ளிச்சென்றுவிடும் என்று?


"மயிலே மயிலே  மச்சான் இல்லையா இப்போ வீட்டிலே?" (முதல்ல பாடல் வரிகளை ஒழுங்காக் கத்துக்கோ. அப்புறம் நீ கேட்பது ஆணிடம்! போய் பெண் மயில் எங்க இருக்குன்னு தேடு. என்னிடம் நேரத்தை வீணாக்காதே)

மயிலுக்கு உணவிடும் மக்கள்… இல்லை இவை அவற்றின் வாழ்விடமா?


குகைக்குள் நுழைந்து வெளியேறும் வழி

இப்பொழுதே படங்கள் அதிகமாகிவிட்டன. வேறு வழியில்லை. அடுத்த பகுதியில்தான் தொடரவேண்டும் போல் தெரிகிறது.

(தொடரும்) 

19 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  2. ​பயணக்கட்டுரை விவரங்களுடன் படங்களுடன் நன்றாக இருந்தாலும் சில சமயங்களில் நீங்கள் மெயின் ஸ்டோரியிலிருந்து விலகி கிளைக் கதைக்கு செல்வது உபன்யாசம் போல் உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். படங்கள் இருக்கும் அளவு தகவல்கள் இல்லை. வெறும் தகவல்கள் போரடிக்கும் என நினைத்தேன்.சில படங்களுடன் மூன்று வாரங்களுக்குள் முடித்திருக்கலாம். ஞாயிறு படப்பகுதி என்பதால் படங்களுக்கே முக்கியத்துவம்.

      நீக்கு
  3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய ஞாயிறு மெக்சிகோ பதிவு நன்றாக உள்ளது. சிச்சன் இட்சா நினைவு சின்னத்தைப் பற்றி தாங்கள் விபரமாக எழுதிய விதத்தை படித்து ரசித்தேன்.இங்கெல்லாம் நாங்கள் எங்கு செல்லப் போகிறோம்.? நீங்கள் அங்கிருப்பவற்றை பற்றி விவரமாக தந்த விபரங்கள், படங்கள்தாம் எங்களின் நினைவுகள். படங்கள் அனைத்தையும் அழகாக எடுத்துள்ளீர்கள்.

    அந்த சிங்க முக அரியணை நன்றாக உள்ளது. அது அரசனின் சிதைந்த உருவமாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். தலையில் கீரீடம் மாதிரி அமைப்பு உள்ளதே.! உணவக படங்களும் நன்றாக உள்ளது. பணிப்பெண்கள் ஒரேமாதிரியான சீருடையில் அழகாக உள்ளனர். குடில் மாதிரியான உணவகமும் அழகாக உள்ளது.

    மயில்களின் படங்கள் அருமை. மயில்களை பார்த்தவுடன் அது சம்பந்தபட்ட பல பாடல்கள் நினைவுக்கு வர நாம் சகோதரர் ஸ்ரீராம் இல்லையே..! நீங்களும், மயிலும் உரையாடிய வாசகங்களைப் படித்ததும், நானும் சகோதரி கீதாரெங்கன் மாதிரி சிரித்து விட்டேன். குகைக்குள் என்ன மாதிரியான உருவங்கள், சிற்பங்கள் உள்ளதென அறிய அடுத்தப்பகுதிக்கு காத்திருக்கிறேன். நல்ல ஸ்வாரஸ்யமான இடங்களைப் பற்றி கூறி வருவதற்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குமே அரிய வாய்ப்பாகத்தான் இந்த மெக்சிகோ பயணம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க விசா வாங்கினேன். ஆனால் பாருங்க அமெரிக்கா செல்லும் வாய்ப்பே அமையவில்லை

      ஒரே சீருடைதான். அழகா என்பது கண்களைப் பொறுத்து இருக்கிறது..

      ஒரு தடவை ஶ்ரீரங்கத்திலிருந்து காரில் பயணித்தபோது (பெங்களூர் நோக்கி) ஊர் மறந்துவிட்டது ஆனால் எங்கு நோக்கிலும் மயில்கள், அதிலும் வயல் வரப்பில் வரிசையாக அந்த மழைத் தூரலில் நின்றுகொண்டிருந்தன. படங்கள் உண்டு. மயில்கள் மிக அழகு அல்லவா?

      நீக்கு
  4. நண்பர் இயல்பாக தன் அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்லும் திறன் படைத்திருக்கிறார். இது நமக்குப் பெரிய சந்தோஷம். அனுபவங்கள் என்று வரும்போது அதில் மெயின் லைன் பிரான்ச் லைன் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன். இந்தப் பகுதியை நான் படிக்கும்போது அவர் தன் சாப்பாட்டு விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டாரே என்ற குறை கூட எனக்கு ஏற்பட்டது . அதையும் இங்கேயே சொல்லி இருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். மிக நல்ல பதிவுத் தொடர்.‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராமன் சார். இத்தகைய பல பயணங்களில் நான் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை (எங்கே நான் வெஜ் இருந்துவிடும் என்ற பயத்தால்). இது பற்றி ஒரு முறை படங்களுடன் எழுதுகிறேன். அனுபவத் தொடராக எழுதலாமா இல்லை இத்தகைய பயணங்கள் பகுதியில் இடைச்செருகலாக எழுதலாமா என்று யோசிக்கிறேன். எனக்கு பெரிய துரதிருஷ்டம் ஏற்பட்டது. சில இழப்புகள் நான் வரவழைத்துக்கொண்டவை. நல்லவைகளுக்கு இறையருளே காரணம் என நம்பும் நான் இதற்கும் இறைவனின் திட்டம்தான் காரணமாக இருக்கும் என நம்புகிறேன்.

      நீக்கு
  5. அருகில் உள்ளவர்கள் நான்வெஜ் உண்பதனால் வெஜ் உணவு உண்பவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த நிலையை நான் அடைய பலப் பல வருடங்களாகிவிட்டது. //

    ஆமாம் நெல்லை.

    ஆனால் எனக்கு இது சிறு வயதில், பள்ளியிலேயே பழகிவிட்டது. பிரச்சனை இல்லாமல். மகனுக்கும் அவன் பள்ளி செல்லத் தொடங்கிய சமயம் முதலில் நான் சொல்லிக் கொடுத்தது இதுதான்.

    கிதா

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் நெல்லை, இரு உணவுகளும் இருக்கும் உணவகத்தில் சாப்பிடுவது கொஞ்சம் கடினம் தான். அவர்களைப் பொருத்தவரை சைவம் என்பதன் பொருள் வேறு மட்டுமல்ல அவங்க தனி அடுக்களை எதுவும் வைச்சிருக்க மாட்டாங்க. இப்ப எப்படினு தெரியலை. ஏனென்றால் இப்பலாம் vegan, vegetarian, eggtarian!!!!! என்றெல்லாம் அவங்களே பேசுவதால் பின் பற்றுவதால்...

    நான் சொல்வது சில பல வருடங்களுக்கு முன்னானது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மேலே இருக்கும் வடிவம், அரசருடையதா இல்லை தலைமைப் பூசாரியுடையதா இல்லை அவர்கள் வணங்கிய கடவுளுடையதா?//

    நம்ம ஊர் சிறு தெய்வம், ஊர் காவல் தெய்வம் போன்று இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கை கூப்பி இருப்பதால் தலைமை பூசாரியாகக் கூட இருக்கலாம். இங்கும் சிறு தெய்வங்களைப் பூசிப்பவர்கள் இப்படியான வடிவங்களில் இருப்பதைப் பார்க்கலாமே! வள்ளியூரில் நான் பார்த்திருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
  8. உருவ எழுத்துகளோ? அதாவது உருவங்கள் மூலம் செய்தி சொல்வது ஆனால் பல கற்களில் ஒரே போன்று இருக்கின்றன. குதிரை போன்றும், பாம்பு போன்றும் சிங்கம் போன்றும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. எனக்கு ஒன்று சிங்காதனம் ஆர்டர் பண்ணிடுங்க நெல்லை. ஏற்கனவே என் பிறந்த வீட்டில் என்னை சிங்கம்னும் (இப்ப சொல்லற சிங்கப் பெண் எல்லாம் இல்லை...இது திட்டுவது!!!!) லங்கா ராட்சசி என்றும் சொல்வதுண்டு சின்னப் பிள்ளைல. எனவே பொருத்தமா இருக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஜவ்வரிசிய பாயாசமா செஞ்சா நல்லாருக்கும். ஜவ்வரிசி ஸ்வீட் ஒன்று கொழுக்கட்டை/உருண்டை என்று நம்ம வீட்டில் ஏதாச்சும் விரதம்னா செய்வாங்க. பிறந்த வீட்டில் அப்படிச் சாப்பிட்டதுண்டு. அதே போல விரதம்னா பாட்டிஸ் ஒன்று இது இல்லைனா பயத்தம்பருப்பு கஞ்சின்னு. அப்புறம் சென்னைக்கு வந்த பிறகும் இதுதான் ஏகாதசி இன்னும் பிற விரத நாட்களில். ஆனா நான் விரதம் எல்லாம் இருந்தது இல்லை. அதுக்குப் பிறகு நமக்குதான் ஸ்வீட் ஆவாதே அதனால அதன் பக்கம் போவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. டிப்ஸ் போட்டிருப்பார்களோ? நான் சாப்பிட்ட ஐந்து ஸ்லைஸ் பழத்துக்கு டிப்ஸாவது ஒண்ணாவது?//

    ஹாஹாஹா. ஆனால் அந்தப் பெண்களின் உடை நல்லாருக்கு.

    உணவகம் கூரையுடன் அழகா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மயில்கள் அழகுதான்! எனக்கும் ரொம்பப் பிடிக்கும் அதுவும் தோகை விரித்து ஆடிச்சுன்னு வைங்க!!! ஆஹா. அப்படி ஒரு வெள்ளை மயில் ஆடியதை எடுத்திருந்தேன் தில்லி மிருகக்காட்சி சாலையில் பல வருடங்களுக்கு முன். வலையில் எங்கள் தளத்தில் போட்ட நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. சுண்ணாம்புப் படிவ குகை//

    நம்ம ஊர் பொக்காரோ குகைகள் போல இருக்குமா? அல்லது கோமதிக்கா போட்டிருந்தாங்க அப்படித் தொங்கிக் கொண்டிருக்கும் குகை வடிவம் அமெரிக்காவில் என்று நினைவு. அவங்க மாமா வோடு மகன் குடும்பத்தோடு போனப்ப எடுத்தது. அப்படி இருந்ததா?

    அடுத்த வாரம் தெரிஞ்சுருமே அப்படி என்ன பரபரப்பு கீதா உனக்கு?

    கீதா

    பதிலளிநீக்கு
  14. "மயிலே மயிலே மச்சான் இல்லையா இப்போ வீட்டிலே?" (முதல்ல பாடல் வரிகளை ஒழுங்காக் கத்துக்கோ. அப்புறம் நீ கேட்பது ஆணிடம்! போய் பெண் மயில் எங்க இருக்குன்னு தேடு. என்னிடம் நேரத்தை வீணாக்காதே)//

    சிரித்து முடியலை போங்க!!!!

    மயிலே மயிலே உன் தோகை எங்கே, மயில் போல பொண்ணு ஒண்ணு (அந்த வருடங்களில் இந்தப் பாட்டு வரலையோ!!) தோகை மயிலிவள்,

    ஒரு வேளை நீங்க மயிலே மயிலே வா மயிலே ந்னு பாடியிருந்தா அது உங்க குரலைக் கேட்டு குயிலே குயிலே பூங்குயிலேன்னு பாடியிருக்கும்!!!

    ஹையே நான் என்ன குயிலா? பெண்ணான்னு கேட்க முடியாது. குயிலினத்தில் ஆண் குயில்தான் அழகா பாடும்!!! நீங்கதான் அழகா பாடுவீங்களே!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!