சிச்சன் இட்ஸா மற்றும் பிற இடங்கள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும், நம்ம ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் இருக்கும்போது வரும் உணர்ச்சி இங்கு வரவில்லை. ஆக்ரா கோட்டை, முகலாய அரசர்களின் அரியணை போன்றவற்றைக் காணும்போதும் அவர்கள் இடங்களைப் பார்க்கும்போதும் மனதில் தோன்றும் வியப்பு இந்த இடத்தில் எனக்கு ஏற்படவில்லை. இதற்குக் காரணம், என்னால் அந்த இடத்துடன் ஒன்ற முடியவில்லை.
இருந்தாலும் தென் தமிழகத்தின் ஒரு கோடியில் பிறந்த ஒருவன், இன்னொரு கண்டத்தின் ஒரு பகுதியில் இருக்கும் கலாச்சாரச் சின்னத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்ற வியப்பும் என் மனதில் தோன்றியது.
நான் புதிய தேசத்தில் வேலை பார்க்க ஆரம்பித்திருந்த புதிது. அது ஒரு கன்சல்டன்சி நிறுவனம். அதில் எனக்கு ஒரு முக்கியமான போஸ்ட். சில பல ப்ராஜக்டுகளுக்கு நான் பொறுப்பு. அங்கு சுமார் 30 பேர்கள் வேலை செய்துகொண்டிருந்தோம். அது 1995. என்னுடன் வேலை பார்த்த பலர் இரவில் அமெரிக்க கம்பெனி இண்டர்வியூவில் கலந்துகொண்டு சட் சட் என்று ஆஃபர் லெட்டர் வாங்கிவிடுவார்கள். ஒரு சில மாதங்களில் ஒரு நாள் காணாமல் போய்விடுவார்கள் (நாங்கள் எல்லோரும் அலுவலக வளாகத்திலேயே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு படுக்கை அறை அமைப்பில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்தோம். இரண்டு குடியிருப்புக்கு பொதுவான கிச்சன்.) யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால், அமெரிக்கன் எம்பஸிக்கு விஸா ஸ்டாம்பிங்குக்குப் போயிருக்கிறார்கள் என்று அர்த்தம் என எல்லோரும் பேசிக்கொள்வார்கள். என்னுடன் வேலை பார்த்த 4-5 பேர்கள் இது போல அமெரிக்க வாய்ப்பு கிடைத்து கம்பெனியை விட்டு விலகவும் எனக்கும் என் திறமையைச் சோதித்துப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது.
ஒரு முக்கியமான கட்டத்தில் (என் வாழ்வில்) எனக்கு இந்தக் கம்பெனி ஆஃபர் கொடுத்திருந்தது. ஒரு கம்பெனி நன்றாக இருக்கும்போது, குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது தொடர்ந்து அங்கு வேலை பார்க்கவேண்டும், சட் சட் என்று வேலையை, காசுக்காக மாற்றக்கூடாது என்பது என் எண்ணம். வேலை செய்யும் நிறுவனத்திற்கு ரொம்பவே loyal ஆக இருப்பது என் குணம்.
ஒரு நாள் நான் என் பாஸ் அறைக்குச் சென்று (அவர்தான் எம்.டி.), எனக்கும் அமெரிக்க கம்பெனிகளின் இண்டர்வியூக்களில் கலந்துகொள்ள ஆசை இருக்கிறது. ஆஃபர் கடிதங்கள் கிடைத்தால் என் ஃபைலில் வைத்துக்கொள்ள ஆசை. ஆனால் நிச்சயம் இந்த நிறுவனத்தில் 3 வருடங்களாவது வேலை செய்வேன். பிறகு இந்த தேசத்திலேயே ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமானால் எனக்கு ‘ஆட்சேபணை இல்லை’ என்ற கடிதத்தை கம்பெனி வழங்கவேண்டும், எந்தக் காரணம் கொண்டும் நான் அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று அவரிடம் சொன்னேன். நீயாக என்னிடம் இதனைச் சொல்லியிருக்கிறாய். பலரும் என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஆஃபர் கிடைத்தவுடன் ஏதேனும் சாக்குச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அவர்களை இங்கு கொண்டுவந்து டிரெயின் பண்ணுவதற்கு எவ்வளவு செலவாகிறது, எவ்வளவு கஷ்டம் என்பதையெல்லாம் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று சொன்னார்.
பாஸிடம் அனுமதி பெற்ற பிறகு நான் ஒரு சில இண்டர்வியூக்களில் கலந்துகொண்டேன். அப்போதெல்லாம் டெக்னிகல் கேள்விகளே கிடையாது. என்ன அனுபவம், என்ன என்ன தெரியும் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு உடனே ஆஃபர் லெட்டர் அனுப்பிடுவாங்க. எனக்கு அந்த மாதிரி இரண்டோ அல்லது மூன்றோ ஆஃபர் கடிதங்கள் வந்தன. அதில் ஒன்றை அனுப்பிய கம்பெனியின் பொது மேலாளர், ஏற்கனவே இந்த கம்பெனியில் வேலை பார்த்தவர். 2 வருடங்களுக்குள்ளாகவே க்ரீன் கார்டுக்கு அப்ளை செய்துவிடுவோம் என்றார். என்னவோ எனக்கு அமெரிக்காவில் வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. அதற்குக் காரணங்கள் என்று நான் நினைத்ததை இங்கு எழுதினால், அது விவாதங்களுக்கு வழி வகுக்கும். அதனால் தவிர்க்கிறேன். இப்போது டைம் மெஷினில் பின்னோக்கிச் செல்லமுடியுமானால், அதே முடிவைத்தான் இப்போதும் எடுப்பேன் என்பதை உறுதியாக என்னால் சொல்லமுடியும்.
அந்தக் கம்பெனியிலேயே நான் சொன்னதுபோல 3 ½ வருடங்கள் இருந்தேன். பிறகு ஒரே நேரத்தில் மூன்று ஆஃபர்கள் கிடைத்தன. என் பாஸ், நான் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அவருக்கு சந்தோஷமே என்று சொல்லும்படியாக நான் அவரிடம் நடந்துகொண்டேன். (ஆனால் பாருங்க என் உண்மையான குணத்தை அவர் சரியாக கணிக்கவில்லை. நான் அவருக்கு loyal என்று நினைத்துக்கொண்டார். நானோ வேலை பார்க்கும் கம்பெனிக்கு loyal என்பதை பிறகு புரியவைத்தேன். அது பிறிதொரு சமயம்)
ஏற்கனவே குறிப்பிட்ட கிணறு இதுதான். ஆங்கிலேயர்கள் (அமெரிக்கர்கள்) இந்த இடத்திற்கு வந்தபோது, இந்தக் கிணறு முக்கியம் என்றால் இதன் அடியில் ஏதேனும் புதையல் கிடைக்கலாம் என்று முடிந்த வரை கிணற்றுத் தண்ணீரை இரைத்தும், கயிறை உள்ளே விட்டும் தேடிவிட்டார்கள். ஒன்றும் உருப்படியாகத் தேறவில்லை போலிருக்கிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியின் மத்தியில் இந்த இடம் இருக்கிறது என்று புரிந்தது.
வனாந்திரப்பகுதியாக இருக்கிறது. கொஞ்சதூரம் நடந்துசென்று பார்க்கலாமா என்று நினைத்தேன். அவர்களே பாதையை அடைத்து வைத்திருக்கின்றார்கள்.
Guide வைத்திருந்த புத்தகத்தில் இருந்த கிணற்றின் படம் மற்றும் அதிலிருந்து ஆங்கிலேயர்கள் புதையல் கிடைக்குமா எனத் தேடிய படம்.
கிணற்றின் முன்பு நின்றுகொண்டு (இங்க வந்ததற்கு சாட்சி வேண்டாமா?)
நிறைய கடைகள். ஒவ்வொன்றிலும் எழில் மிக்க நினைவுப்பொருட்கள். கலைப்பொருட்கள் கடையில் 10 டாலர் சொன்ன தொப்பி இங்கு 1 டாலர்தான். வாங்கியிருக்கலாம். என்னவோ வாங்காமல் வந்துவிட்டேன். இதுபோலத்தான் இந்தோனேஷியாவில் ஒரு எரிமலைப் பகுதிக்குச் சென்றபோது மரத்தால் ஆன செஸ் (எல்லா காயின்களும் சிற்பங்கள் போல மரத்தில் செய்திருந்தார்கள். எடை அதிகம்). கடைசியாக 15 டாலர் என்று சொன்னான், நான் 10 டாலர்னா வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
நினைவுப் பொருட்களின் உபயோகம் என்ன? நாம் அங்கு சென்றோம், வாங்கினோம் என்பது நமக்கு மாத்திரம்தான் தெரியும். நமக்கு அது உணர்வு பூர்வமான ஒன்று. மற்றவர்களுக்கு அது இன்னொரு பொருள், வீட்டில் இடத்தை அடைத்துக்கொண்டு. இந்தக் கருத்தைக் கொண்டு எஸ்.ரா அவர்கள் (னு நினைவு) எழுதிய ஒரு அனுபவக் கட்டுரையைப் படித்திருக்கிறேன். ஒரு பழங்கால வீட்டில் கிடந்த புத்தகங்கள். அதனைச் சேகரித்தவர் இறந்துவிடுகிறார். அவர் வாரிசுகளுக்கு அவை குப்பைகள். அவர் மகன் சொல்கிறார், உருப்படியான எத்தனையோ பொருட்களை வாங்கியிருக்கலாம், எங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும். காசையெல்லாம் இந்த மாதிரி உபயோகமில்லாத புத்தகங்கள் வாங்கி வீணாக்கிவிட்டாரே என்று சொல்லுவார்.
முகமூடிகள் விதவிதம். இதைச் சுவற்றில் மாட்டி வைக்கலாம். வேறு என்ன உபயோகம் என்று தெரியவில்லை. ஆனால் வீட்டில் மாட்டியிருந்தால் ஏதோ ஆவி பிடித்த வீடு மாதிரியான தோற்றம் தராது?
80களில் (நான் பார்த்தது 89ல்) விமானப் பயணத்தின்போது டிரிங்க்ஸ் அழகிய சிறு பாட்டில்களில் தருவார்களாம். அது தற்போதுள்ள 8 ml Roll On Perfume பாட்டில் அளவு. விதவிதமாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு டிசைனில் இருக்கும். நான் அப்போது சென்னை கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டிடியூட்டில் டிரெய்னி (அதாவது PG Diploma முடித்துவிட்டு, என்னையும் என் நண்பனையும் அங்கு வேலைக்கு எடுத்திருந்தார்கள்). டிப்ளமா கோர்ஸில் கடைசியில் ஒரு ப்ராஜக்ட் பண்ணவேண்டும். அது 4 - 5 பேர்கள் சேர்ந்து பண்ணுவார்கள். அதைச் செய்து முடிக்கும்போது ஓரளவு அப்ளிகேஷன் நாலட்ஜ் வந்துசேரும். அதற்கு ஒரு பையனுக்கு நான் உதவி செய்தேன். அவனுக்கு என்னவோ என் மேல் ஒரு பிரியம் ஏற்பட்டுவிட்டது. ஒரு நாள் தன் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு அழைத்தான். நான் அவனிடம், மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடுவதில்லை, சுத்த சைவம் என்பதால் என்று சொன்னேன். அவனோ, இல்லை சார், முழு சைவம்தான் வாங்க என்று கூப்பிட்டான். அவனுடைய வீடு பாண்டிபஜாரில்தான் ஒரு இடத்தில் இருந்தது. பக்கத்தில்தானே இருக்கிறது என்று அவன் வீட்டிற்கு ஒரு மதியம் போனேன். பார்த்தால் பெரிய பணக்காரர்கள் போல இருந்தது. அவனுடைய அம்மா அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வாராம். அதனால் ஷோ கேசில் பலவிதமான இந்த பாட்டில்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அவனுடைய அப்பா வந்தார். அவர் சொன்னார், தான் ஆந்திரத் திரையுலகில் இருக்கிறேன், ரொம்ப influential person. அதில் என்ன வேண்டுமானாலும் உங்களுக்குச் செய்துதர முடியும் என்றார். நாம இருக்கும் நிலை என்ன… ஆந்திரா திரைத்துறை எங்கே இருக்கிறது… ரொம்ப நன்றி சொல்லிவிட்டு வந்து சேர்ந்தேன்.
கலைப்பொருட்கள் மிக அழகாகத்தான் இருக்கின்றன. வாங்கி என்ன செய்வது?
இடத்தில் basement எப்படிக் கட்டியிருக்கிறார்கள். இதன் மீது பல கட்டிடங்கள், அரண்மனைகள் போன்றவை இருந்திருக்கலாம்.
இன்றைக்கு கதையும் படங்களும் ரொம்ப அதிகமாகிவிட்டனவோ? அடுத்த பகுதியில் தொடரலாமா?
(தொடரும்)
கலைப்பொருள்கள் அழகாகத்தான் இருக்கின்றன. வாங்கி என்ன செய்வது?
பதிலளிநீக்குநல்ல கேள்வி. உண்மை.
உபயோகம் இல்லாத புத்தகங்கள் வாங்கி...
பதிலளிநீக்குபடிக்கும்போது ஒரு மாதிரி இருந்தாலும், புத்தகம் படிக்கும் பழக்கம், ஆர்வம் இல்லாதவர்கள் பார்வையில் அது சரிதானே?
அந்த படிகள் போன்று இருக்கும் இடத்தில் ஏறிச்செல்ல முடியுமா? இல்லை சும்மா அலங்கார கட்டுமானமா?
பதிலளிநீக்குமற்ற இடங்களை விட இந்த இடத்தில் கலைப்பொருள்களின் விலை குறைவு என்றால் நமக்கு அந்தப் பொருளின் உண்மைத்தன்மை மீதும், தரத்தின் மீதும் சந்தேகம் வந்து விடுமே...!
பதிலளிநீக்குஇந்த காலர் டி ஷர்ட் உங்களுக்குத் பிடித்தது என்று நினைக்கிறேன். அடிக்கடி உங்களை இந்த நிற டி ஷர்ட்டில்தான் புகைப்படத்தில் பார்க்கிறேன்!
பதிலளிநீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநெல்லை அவர்களுக்கு அன்பின் வணக்கம்