7.10.25

சிறுகதை : காலமெல்லாம் காதல் வாழ்க - பானுமதி வெங்கடேஸ்வரன்

 காலமெல்லாம் காதல் வாழ்க

பானுமதி வெங்கடேஸ்வரன்


சித்ரா தன் மகன் வருணிடம் கெஞ்சி கொண்டிருந்தாள், "டேய் வருண், இந்த ஃபோட்டோவ கொஞ்சம் பாருடா"

வருண் "முடியவே முடியாது." என்று முகத்தை திருப்பிக் கொண்டான். 

பிறகு கோபமாக தாயிடம், "டி.வி. டாக் ஷோவிற்க்கு போறாம்னா, அங்கு போயி ஏதாவது கருத்து சொல்லிட்டு, அல்லது பேசாம உட்கார்ந்துட்டு வரணும், நீ பாட்டுக்கு ஏதாவது வாக்கு குடுத்துட்டு வருவ, அதை நான் நிறைவேத்தனுமா? சான்ஸே கிடையாது" என்று முறுக்கிக் கொண்டான்.

"இப்போ என்னடா தப்பாயிடுச்சு? அப்பா இல்லாத பொண்ணு, அம்மா தனியா வளர்த்து ஆளாக்கியிருக்காங்க, வரதட்சணை கொடுக்க முடியாதுங்கறதுனால கல்யாணம் ஆக மாட்டேங்குது. இந்த பெண்ணை வரதட்சணை வாங்காமல் தன் மகனுக்கு திருமணம் செஞ்சுக்க யார் ரெடி?"னு அந்த ஆங்கர் கேட்டார்...

"நீ உடனே நான் ரெடினு கை தூக்கிட்ட.. என்னோட விருப்பம் என்னன்னு கேட்கணும்னு உனக்குத் தோணல.. உன்ன மாதிரி ஆட்கள ப்ரவோக் பண்ண அவங்க கேட்பாங்க"

"நான் சொன்னா நீ கேட்பனு ஒரு நம்பிக்கைதான்".

"மண்ணாங்கட்டி! உன்னை அந்த டாக் ஷாவுக்கு போக விட்டதே தப்பு" என்று வெடித்தான்.

"மண்ணாங்கட்டியும் இல்ல, தெருப்புழுதியும் இல்ல, என்னை மாதிரி ஒரு சிங்கிள் உமன் வளர்த்த பொண்ணுடா.. பாவம், கஷ்டமா இருந்துச்சு"
செண்டிமெண்ட் பேசியதும் வருண் மெளனமானான்.

அதுதான் சாக்கு என்று, " அந்த பொண்ணு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் எம்.எஸ்ஸி. படித்து விட்டு எம்.என்.ஸி. ஒன்றில் வேலை பார்க்கிறாள். பேசிக்கொண்டே ஃபோனை அவன் முன் நீட்டினாள் சித்ரா. 

வேண்டா வெறுப்பாக ஃபோன் வாங்கியவன், "என்னம்மா? டார்க் காம்ப்ளெக்ஸா இருக்காளே..?" என்றான். 

"நிறம் மட்டுதான், ஆனால் பார்க்க லட்சணமா இருக்காளே"

"நீதான் பொண்ணு ஃபேரா இருக்கணும்னு சொன்ன,"

"அது அப்போ, மத்த விஷயங்கள் பிடிச்சுதுன்னா, நிறம் ஒரு விஷயம் கிடையாது"

"மத்த எல்லா விஷயங்களும் ஓகேவா? ஜாதகம்..?"

"எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை"

அவனிடமிருந்து பதில் இல்லாததால், "என்ன..? அவளோட பேசறயா?"

"பேசாட்டி விட்டு விடற மாதிரிதான். .."அலுத்துக் கொண்டாலும் அம்மாவிடமிருந்து நம்பர் வாங்கிக் கொண்டான்.

விஷயம் இதுதான். சமீபத்தில் ஒரு தொலைகாட்சியின் டாக் ஷோவில் கலந்து கொண்டாள் சித்ரா. அது வரதட்சணை கொடுமை பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சி. அதில் ஒரு இளம்பெண், தன்னுடைய தாய் சிங்கிள் மதராக இருப்பதால் தங்களால் வரதட்சணை கொடுக்க முடியாது என்பதாலேயே தன்னுடைய திருமணம் தடை படுகிறது என்று கூற, அந்த நிகழ்ச்சியை நடத்திச் சென்ற நெறியாளர்,"எதிரே அமர்ந்திருப்பவர்களில் இந்தப் பெண்ணை வரதட்சணை வாங்காமல் உங்கள் மகனுக்கு திருமணம் செய்து கொள்ள யார் தயாராக இருக்கிறீர்கள்?" என்று கேட்டதும், சட்டென்று நாலைந்து பெண்கள் கை தூக்கினார்கள். அவர்களுள் சித்ராவும் ஒருத்தி. 

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், அந்தப் பெண்ணின் தாயாரிடம் செல்ஃபோன் நம்பர் வாங்கி கொண்டாள். 

பல விஷயங்கள் அவள் விரும்பியபடி இருந்ததால் பெண் நிறம் குறைவு என்பதை அவள் பொருட்படுத்தவில்லை. அதற்கான பஞ்சாயத்துதான் மகனோடு ஓடிக் கொண்டிருந்தது. 

"டாக் ஷோக்களில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக கலந்து கொள்பவர்களை தூண்டி விடுவார்கள். நீ அதற்கு பலி ஆனதோடு இல்லாமல் என்னையும் எப்படி இழுத்து விடலாம்?" என்பது மகனின் வாதம்.

சித்ரா எப்படியோ மகனை தன் வழிக்கு இழுத்து விட்டாள். வருண் அம்மா சொன்ன பெண்ணோடு முதலில் தொலைபேசியில் பேசினான். பிறகு நேரில் சந்தித்தார்கள், இருவருக்குமே திருப்தியாக இருந்ததால், அடுத்தடுத்து விஷயங்கள் வேகமாக நடந்து திருமணத்தில் முடிந்தது. 

கதை இங்கே முடிந்து விடவில்லை. இதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. 

உண்மையில் வருணும் கவிதாவும் காதலர்கள். இருவருடைய அலுவலகங்களும் ஒரே கட்டிடத்தில் இருந்ததால் லிஃப்டில் பார்த்திருக்கிறார்கள். இருவருக்கும் பொதுவான ஒரு நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் சந்தித்தார்கள். அங்கு அவர்கள் இரண்டு பேரும் தான் நான்கமிட்டட் மற்ற எல்லோரும் ஜோடியாக தான் இருந்தார்கள் எனவே இவர்கள் இரண்டு பேரும் தனித்துவிடப்பட்டார்கள் அப்பொழுது கொஞ்சம் பேசிக் கொண்டார்கள் அடுத்த நாள் ஃபுட் கோர்ட்டில் பார்த்தார்கள் அதற்குப் பிறகு ஃபுட் கோர்ட்டில் பார்க்க வேண்டும் என்ற முடிவு செய்தார்கள். அடிக்கடி பார்த்து பேசி பழகி நட்பு காதலாக பரிணமித்தது. 

அம்மாவிடம் தங்கள் காதலை தெரிவிக்க நினைத்த வருனுக்கு ஒரு சின்ன சங்கடம் என்னவென்றால் அவனுடைய அம்மா சித்ராவுக்கு தன் மகன் காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்று தீவிரமான நம்பிக்கை. தான் பார்க்கும் பெண்ணைத்தான் மணந்து கொள்வான் என்று நினைத்தாள், நம்பினாள்.

அவளுடைய நம்பிக்கையை மாற்றுவது கடினம் ஆனால் அவளுக்கு தன்முனைப்பு கொஞ்சம் அதிகம். தான் ஒரு விஷயத்தை நினைத்து அதை முடிக்கிறோம் என்றால் அதிக பெருமிதம் கொள்வாள். அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த வருண் தன் அம்மா கலந்து கொண்ட அந்த டாக் ஷோவில் வேண்டும் என்றே கவிதாவையும் கலந்து கொள்ள சொன்னான். அவள் கலந்து கொண்டு அவன் சொல்லிக் கொடுத்தது போல பேசி அம்மாவின் ஈகோவை தூண்டிவிட்டு அவள்தான் அந்த திருமணத்தை முடித்தாள் என்பது போல உணர வைத்து தன் காரியத்தை சாதித்துக் கொண்டான். அது பாவம் சித்ராவிற்கு தெரியாது. எப்படியோ காலமெல்லாம் காதல் வாழ்க!

38 கருத்துகள்:

  1. பாதிக் கதை வரை மிக வித்தியாசமான கதைக்கரு. ரொம்ப நல்லா இருந்தது. ஃப்ளாஷ் பேக்தான் இது கொஞ்சம் சாதாரணக் கதையோ எனத் தோன்ற வைத்தது.

    டாக் ஷோவே ஸ்க்ரிப்டட் எனும்போது, இப்படியும் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றனவே. கதை நல்லா இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. இன்று என் கதை பிரசுரமாகிறது என்பதே மறந்து விட்டது. கீதா(க்கா) அழைத்து சொன்னதும்தான் நினைவுக்கு வந்தது. அப்போது நான் தூங்கச் செல்லும் நேரமாகி விட்டதால் பதில் அளிக்கவில்லை. கதையை பிரசுரித்த எ.பி.க்கும் நன்றி!

      நீக்கு
  2. இதற்கொரு படம் போடாமல், கேஜிஜி சார் இல்லைனா கீதா ரங்கன் ஏஐ படம் கொடுத்திருப்பார்களே, இப்படி ஶ்ரீராம் ஏமாற்றிவிட்டாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கீதா ரங்கனுக்கு அனுப்பியிருந்தால் அவர் படம் இணைத்திருப்பார். தோன்றவில்லை.

      நீக்கு
  3. இந்தக் கதைக்கான மேம்போக்கு அல்லாத ஆழ்ந்த வாசிப்புத் திறன் கொண்டவர்களின் பின்னூட்டங்களைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை அறிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.

      நீக்கு
  4. பானுக்கா, கதை மொத்தத்தில் நன்றாக இருக்கிறது. வித்தியாசமான கரு.

    முதல் பகுதி அம்மாவிற்கும் பிள்ளைக்குமான அந்த விவாதம் இயல்பு. உங்கள் நடை.

    இந்தக் காலத்திலும் கூட மகனைக் கேட்காமல் அதுவும் பொது வெளியில் ஓர் அம்மா இப்படி டக்கென்று பெண்ணிடம் வாக்குறுதி கொடுக்கிறாளே, என்று தோன்றியது.

    தலைப்போ காலமெல்லாம் காதல் வாழ்க!

    ஃப்ளேஷ் பேக்கில் அந்த ட்விஸ்ட் வந்துவிடுகிறது.

    ஃப்ளாஷ் பேக் உங்கள் பாணி அல்ல, அக்கா. அதனால் அது கொஞ்சம் இன்னும் உங்கள் பாணியில் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. தொகுத்து சொன்னது போல ஆகிவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு டாக் ஷோ பார்த்தபொழுது தோன்றிய விஷயம். உடனே எழுதி விட்டேன். எழுதியதை உடனே அனுப்பி விட்டேன். நன்றி.

      நீக்கு
    2. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்த்தே நாலைந்து வருடங்கள் ஆகின்றன. சும்மா பேருக்கு இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துட்டோம். (மாமா இருக்கும்போதே)

      நீக்கு
  5. ​பா வெ அவர்கள் தற்போது புத்துணர்வு (rejuanation) பெற்று பதிவுகள் பல எழுதித் தள்ளுகிறார். தம்பட்டத்தில் கொலு பற்றிய விவரமும் படங்களும், திங்கள் கடலை சட்னி எ பி யில் , தற்போது செவ்வாய் சிறுகதையில் காதல் வாழ்க என்று ஜமாய்கிறார். தொடரட்டும் பதிவுலகப்பணி, வாழ்க.

    வாழ்க என்றவுடன் இன்றைய கதைத் தலைப்பு பிளாஷ். ஆமாம் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகம் தவறாது எடுத்துக்கொண்ட ஒரு சப்ஜெக்ட். 'காதல்' 'காதல் காதல் காதல் போயின் சாதல்'.

    கதை ஒரு சிறந்த ஒரு பக்கக்கதையாக பிரசுரத்தகுதி உள்ள ஒன்று. ஆனால்
    "எதிரே அமர்ந்திருப்பவர்களில் இந்தப் பெண்ணை வரதட்சணை வாங்காமல் உங்கள் மகனுக்கு திருமணம் செய்து கொள்ள யார் தயாராக இருக்கிறீர்கள்?"
    கேள்வி நடத்துனர் கேட்பார் என்று வருணுக்கு எப்படி தெரியும்? இந்தக்கேள்வி தான் கதையின் அச்சாணி. இந்த கேள்வி இல்லை என்றால் நார்மல் ரூட் தான்.
    சிறு தொடராக வந்த "ஒரே ஒரு ஊரிலே " ராஜா, சாந்தி காதலும் பா வெ க்கு கிரியா ஊக்கி ஆக அமைந்தது தற்செயல் என்று சொல்ல முடியவில்லை.
    வாழ்க என்று வாடும்போது என்னை விட்டு விட்டாயே என்று "வளர்க" தலை நீட்டுகிறது. வளர்க உங்கள் எழுத்துப்பணி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​"வாடும்போது" "பாடும்போது" என்று சரி செய்து கொள்ளவும்.

      நீக்கு
    2. நன்றி சார். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'ஒரே ஒரு ஊரிலே' கதை நான் படிக்கவில்லை. நான் பார்த்த ஒரு டாக் ஷோதான் எழுத வைத்தது.

      நீக்கு
    3. நீங்க மட்டும் சனிக்கிழமைக்கான சுவாரஸ்யமான கதைத் தேர்வில் ஆர்வம் காட்ட மாட்டீங்களாக்கும்!

      நீக்கு
  6. ஒரு வேளைன்று அந்த டாக் ஷோ உண்மையான நிகழ்வு என்றால், மிகவும் ஆச்சரியம். எப்படி ஒரு அம்மா, தன் பிள்ளை என்ன நினைக்கிறான் என்று கேட்காமல், என்னதான் தன் மகன் மீது நம்பிக்கை இருந்தாலும், தன்னை மீறி விவாகம் செய்ய மாட்டான் என்றாலும், பெண்ணைப் பற்றி அறியாமல், மகனுக்கும் அவளைப் பற்றி எதுவும் சொல்லாமல் அந்த அம்மா இப்படிப் பொதுவெளியில் ஒரு சத்தியப் பிரமாணம் போன்று எடுப்பது பீஷ்ம சபதம் போல இருக்கு உணர்ச்சிப் பிரவாகத்தில்!!!

    இந்த இடத்தில் கதையை வேறு விதமாகக் கொண்டு செல்லலாம். அதாவது அம்மா வந்து தன் மகனிடம் தான் பேசியதும் மகனின் விருப்பமும்....வேறொரு கதை பிறக்கும்.

    (உண்மையாகவே நான் அப்படி ஒரு ப்ளாட் குறிப்புகள் வைத்திருக்கிறேன். ஆனால் டாக் ஷோ என்றில்லை. அது வேறு விதத்தில் அம்மா தான் கொடுக்கும் வாக்குறுதி அதனால் மகனின் தர்மசங்கடம் என்று...கதை போகும்)

    இங்கு கதை முடியவில்லை// இந்த லைன் வைக்காமல் ஃப்ளாஷ் பேக்கை கதையில் அப்படியே இழையோடுவது போலக் கொண்டு வந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.

    உங்களிடம் தனிப்பட்ட முறையில் அதை எல்லாம் சொல்லிவிட்டதால் இங்குக் குறிப்பிடவில்லை. இரண்டாவது ஆசிரியர் நீங்கள். நான் அதைப் பொதுவெளியில் பிரித்து மேய்வது சரியல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது ஆசிரியர் நீங்கள். //

      அர்த்தம் மாறிவிட்டது கமா போடாமல்.....இரண்டாவது, நீங்கள் ஆசிரியர்......என்று வந்திருக்க வேண்டும். கர்சர் ரொம்ப ஜம்ப் செய்கிறது. வேர்டில் அடித்து இங்கு போட்டாலும் அங்கும் ஜம்ப் செய்கிறது. அதனால் கருத்தில் பல பிழைகள்.

      கீதா

      நீக்கு
    2. டாக் ஷோக்களில் சிலர் இப்படி உணர்ச்சிவசப்படுவதை பார்த்திருக்கிறேன். சுலபமாக உணர்ச்சிவசப்படுபவர்களை தூண்டி விடுவதுதான் அந்த நிகழ்ச்சி நடுத்துபவர்களின் நோக்கம்.

      நீக்கு
    3. //இரண்டாவது ஆசிரியர் நீங்கள். //No worries, நான் மானசீகமாக ஒரு கமா போட்டுக் கொண்டு விட்டேன்.

      நீக்கு
  7. இந்த பெண்ணை வரதட்சணை வாங்காமல் தன் மகனுக்கு திருமணம் செஞ்சுக்க யார் ரெடி?"னு அந்த ஆங்கர் கேட்டார்//

    இதற்கு அம்மா கொடுக்கும் பதிலும்....உங்கள் கரு இதை பேஸ் செய்து அழகாக வந்துவிட்டது.

    //"பேசாட்டி விட்டு விடற மாதிரிதான். .."அலுத்துக் கொண்டாலும் அம்மாவிடமிருந்து நம்பர் வாங்கிக் கொண்டான்.//

    இந்த இடத்தில் கொஞ்சம் தோன்றியது...என்னடா பையன் நம்பர் எல்லாம் வாங்கிக் கொள்கிறானே என்று ஒரு ஊகம் வந்தது.

    அது ஃப்ளேஷ் பேக்கில் முடிச்சு தெரிந்துவிடுகிறது.

    //"என்ன..? அவளோட பேசறயா?"

    "பேசாட்டி விட்டு விடற மாதிரிதான். .."அலுத்துக் கொண்டாலும் அம்மாவிடமிருந்து நம்பர் வாங்கிக் கொண்டான்.//

    இந்த இடத்திலும் வேறு ஒருகதைக்கான அடித்தளம் இருக்கிறது. அதாவது மகனுக்கு ஏற்கனவே அப்பெண் அறிமுகம் என்றில்லை காதல் என்றில்லாமல், அவன் அம்மாவிற்காக நம்பரை வாங்கி பேசுவதாகக் கதையை நகர்த்தினால் வேறொரு வகையில் கதை அமைய சான்ஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலோசனைகளை குறித்துக் கொண்டேன். நன்றி.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கதையின் தலைப்பும் கதையும் நன்றாக இருக்கிறது. இப்போது தொலைக்காடசியில் நடைபெறும் நிகழ்ச்சியின் தாக்கம் கதை உருவாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
    பையன்களுக்கும் பெண் கிடைக்க மாட்டேன் என்கிறது .இருபக்க எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.

    ஒரு பையனின் அம்மா ஒரு பெட்டி நிறைய நகை இருக்கு வரும் மருமகளுக்கு என்று காட்டினார்கள் ஒரு பெண்ணும் அந்த பையனை கல்யாணம் செய்ய முன் வரவில்லை.

    கதையில் வருவது போல் வரதட்சணை வாங்காமல் தன் மகனுக்கு திருமணம் செய்து கொள்ள முன் வந்த சித்ராவின் பரந்த உள்ளத்தை பாரட்ட வேண்டும்.
    இத்துடன் கதையை முடித்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது தொலைக்காடசியில் நடைபெறும் நிகழ்ச்சியின் தாக்கம் கதை உருவாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.// அதேதான்.
      //கதையில் வருவது போல் வரதட்சணை வாங்காமல் தன் மகனுக்கு திருமணம் செய்து கொள்ள முன் வந்த சித்ராவின் பரந்த உள்ளத்தை பாரட்ட வேண்டும்.
      இத்துடன் கதையை முடித்து இருக்கலாம்.//அப்படி முடித்திருந்தால் சாதாரண கதையாகி இருக்குமே. அதற்கு ஒரு பின்னணியைக் கொடுக்கலாம் என்ரு நினைத்தேன். கருத்திற்கு நன்றி.

      நீக்கு
    2. வரதக்ஷணை என்பதே இப்போதெல்லாம் கொடுப்பதும் இல்லை; வாங்குவதும் இல்லை. 28 வருடங்கள் முன்னர் நடந்த எங்க பெண் கல்யாணத்திலேயே நோ வரதக்ஷணை, நோ சீர்ப் பேச்சு, நோ பக்ஷணங்கள் பற்றிய பேச்சு இத்யாதி, இத்யாதி! பிள்ளை வீட்டில் கேட்டு நாங்க மறுத்தது என்பது கல்யாண ரிசப்ஷனில் கர்நாடக சங்கீதக் கச்சேரி வைக்கணும் என்பதை. எங்க இருவருக்குமே அதில் இஷ்டமில்லை. சொல்லப் போனால் என் புக்ககத்தில் பலரும் திறமையான பாடகர்கள். அவங்கல்லாம் கூடச் சொல்லிப் பார்த்தாங்க. வேணும்னா நீங்களே ஒருத்தொருத்தரா மாத்தி மாத்தி விளையாட்டாப் பாடிடுங்கனு சொல்லிட்டோம். கடைசியில் கல்யாணத்துக்கு வந்திருந்த நாதஸ்வர வித்வானே அன்னிக்குக் கச்சேரி செய்தார்.

      கல்யாணக் கச்சேரி என்பதே அந்த வித்வான்கள்/விதூஷிகளை அவமானம் செய்வது போல இருக்கும். அவங்க பாட்டுக்குப் பாடிட்டு இருப்பாங்க. இங்கே ஆளுக்காள் பேசிட்டு இருப்பாங்க. என்ன பாடல், ராகம் என்னனு கூட யாருக்கும் தெரிஞ்சிருக்காது. உறவுகள் கூடி மகிழத்தானே ரிசப்ஷன் மாதிரி நிகழ்ச்சிகள். அதுவும் நாங்க எல்லோரையும் போல் முதல்நாளெல்லாம் ரிசப்ஷன் வைக்காமல் கல்யாணம் முடிந்த பின்னரே (தாலி கட்டிய பின்னரே) ரிசப்ஷன் வைத்தோம்.

      நீக்கு
  10. இது பானுமதி எழுதின மாதிரித் தெரியலை. என்னதான் ஒரு கல்யாணம் ஆகாமல் கஷ்டப்படும்/ம்மனம் வருந்தும் பெண்ணிற்கு உதவி எனக் கூறினாலும் கல்யாணம் எனும் வாழ்க்கை முழுதும் தொடரப் போகும் ஒரு பந்தத்திற்கு இப்படி சினிமாத்தனமாக ஒரு அம்மா வாக்குறுதி கொடுத்ததே சரியாய்த் தெரியலை. வேணும்னா அந்தப் பெண்ணின் விபரங்களை வாங்கிக் கொண்டு வந்து நமக்குப் பொருந்துமானு பார்க்கலாமானு நினைச்சேன், மத்தது எல்லாம் சரியா இருக்கு. நீ பார்த்து உனக்கும் பிடிச்சால் மேலே போகலாம்னு சொல்லி இருந்தால் பொருந்தி இருக்குமோ? அதோடு அவங்களோடு சேர்ந்து இன்னும் நாலைந்து பேர் முன் வந்திருக்காங்க. அவங்களில் யாருக்கானும் ரொம்பப்பிடிச்சு இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்திருந்தால்? அப்போ அந்தப் பையர் என்ன செய்திருப்பார்? அதோடு நிகழ்ச்சி நடத்துபவரிடம் காதலர்கள் இருவரும் சேர்ந்து இப்படி இப்படி நடக்கணும், எங்க அம்மா வருவாங்க என்றெல்லாமும் கூறி இருக்கணும். மாற்றிப் பேசி இருந்தால் என்ன செய்ய முடியும்? ஃப்ளாஷ் பேக் கதையோட ஒட்டவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அதோடு அவங்களோடு சேர்ந்து இன்னும் நாலைந்து பேர் முன் வந்திருக்காங்க. அவங்களில் யாருக்கானும் ரொம்பப்பிடிச்சு இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்திருந்தால்? அப்போ அந்தப் பையர் என்ன செய்திருப்பார்? // உண்மையில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்களில் மூன்று பேர்கள் ஒரு பெண்ணை தன் மகனுக்கு வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முன் வந்தார்கள். அதில் ஒரு பெண்மணியைத்தான் முதன்மை படுத்தினார்கள்.

      நீக்கு
    2. முன்னரே முடிவு செய்திருந்தபடி ஒருத்தரை மட்டும் முன்னிலை? இன்னொருத்தரும் முன் வந்து அடம் பிடிச்சிருந்தால்?

      நீக்கு
  11. போன வாரக்கதையே இன்னும் முடியலை. அதுக்குள்ளே ஸ்ரீராமோ அல்லது மற்ற ஆசிரியர்களோ அவசரப்படுத்தினதில் பானுமதி அவசரமா எழுதிட்டாங்க போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா. //என்னதான் ஒரு கல்யாணம் ஆகாமல் கஷ்டப்படும்/ம்மனம் வருந்தும் பெண்ணிற்கு உதவி எனக் கூறினாலும் கல்யாணம் எனும் வாழ்க்கை முழுதும் தொடரப் போகும் ஒரு பந்தத்திற்கு இப்படி சினிமாத்தனமாக ஒரு அம்மா வாக்குறுதி கொடுத்ததே சரியாய்த் தெரியலை.// அந்த சினிமாத்தனம்தான் கதை எழுதத் தூண்டியது.

      நீக்கு
    2. இல்லை, 'ஒரே ஒரு ஊரிலே' வெளிவரத் தொடங்கிய பொழுதே இந்தக் கதையை எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பி விட்டேன். தொடர் முடிந்ததும் வெளியிடுவதாகச் சொன்னார். அதன் முதல் பகுதிதான் முடிந்து விட்டதே.

      நீக்கு
  12. எபி நண்பர்களின் கருத்து மழையைக் கண்டு அசந்து போனேன். எத்தனை பார்வை எத்தனை கோணங்களடா! 'அட, ஆமாம்லே' என்று கீதாம்மா பின்னூட்டத்தைப் பார்த்து நினைப்பு மேலோங்கியது.

    எனக்கோ இந்தக் கதையை ஏற்கனவே படிச்சிருக்கோமோ என்ற நினைப்பு வேறே வாசிக்கையில் மனசில் ஓடியது. பா.வெ. மத்யமரில் பகிர்ந்து கொண்டிருந்திருப்பாரோ?

    யாரோ போட்டோலே கறுப்பு நிறத்தைக் கண்டு பிடிக்க முடியுமா என்று கூட கேட்டிருந்த மாதிரி ஒரு ஞாபகம் வேறே! அதனால் கதை ஆரம்பப் பகுதியில் ஃபோனை நீட்டினாள் என்று வருவது
    ஃபோட்டோவை நீட்டினாள் என்று இருந்திருக்க வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கோ இந்தக் கதையை ஏற்கனவே படிச்சிருக்கோமோ என்ற நினைப்பு வேறே// ஐயையோ! இதை எழுதியது நாந்தான், நாந்தான், நானேதான்.
      //பா.வெ. மத்யமரில் பகிர்ந்து கொண்டிருந்திருப்பாரோ?// இல்லை, இனிமேல் மத்யமரில் கதைகளை பகிர்வதாக இல்லை. யாரோ போட்டோலே கறுப்பு நிறத்தைக் கண்டு பிடிக்க முடியுமா என்று கூட கேட்டிருந்த மாதிரி ஒரு ஞாபகம் வேறே!// ஃபோட்டோவில் நிறம் நன்றாகத் தெரியும்.
      //

      நீக்கு
  13. தங்கள் மறுமொழிகளுக்கு நன்றி, பா.வெ. தொய்வில்லாமல் தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன் சகோதரி

    உங்களின் எழுத்தில், கற்பனையில் உதித்த கதை நன்றாக உள்ளது. அம்மாவின் விருப்பத்தை மதித்து, அதற்கேற்றபடி தன் காதலையும் நிறைவேற்றிக் கொண்ட மகன் வாழ்க. அவரின் காதலும் வாழ்க.. வளர்க.

    நீங்கள் எபியில் படங்களுக்கு தகுந்தாற் போல தந்த கதை ஒன்றில் ஈர்க்கப்பட்டு நானும் எழுதிய ஒரு சிறுகதை (உங்களைப்போலவே சுருக்கமாக எழுத வேண்டுமென்ற பேராவலுடன் எழுதிய சிறுகதை) ஒன்றிக்கு நீங்கள் தந்த கருத்தும் "காலமெல்லாம் காதல் வாழ்க." என்ற நினைவும் இக்கதையை படிக்கும் போது வந்தது. அதை ஒட்டிய இன்றைய கதையின் தலைப்பும் நன்றாக உள்ளது. கதையும் வித்தியாசமாக சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை காணவேயில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உடம்புக்கு ஒன்றும் இல்லையே? என்னுடைய
      ப்ளாக் பக்கமும் வந்து எட்டில் பாருங்கள்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!