சிலிகான் ஷெல்பில் சில மாதங்களுக்கு முன்னால் இந்த சிறுகதையை வாசித்தேன். KGG கூட இந்தப் போட்டியில் கலந்து கொண்டு அதை இங்கு ஒரு செவ்வாயில் பகிர்ந்திருந்தார். RV வெளிநாட்டில் வசிக்கிறார். ஜெமோவுடன் இன்னும் சில எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு உண்டு. மகாபாரதக் கதைகள் உட்பட நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். சொல்வனம் தளத்தில் இவரது படைப்புகளைக் காணலாம். நான் விரும்பி வாசிக்கும் தளங்களில் ஒன்று. அவர் எழுதி வெளியிட்ட அந்த கதையை அவரின் முன்னுரையோடு இங்கு இன்று வெளியிடுகிறேன். அவரிடம் அன்றே அனுமதி பெற்று விட்டேன்! - ஸ்ரீராம்.
******************************************
சில மாதங்களுக்கு முன் இப்படி ஒரு சிறுகதைப் போட்டி கண்ணில் பட்டது. அதுவும் இறுதித் தேதிக்கு இரண்டு நாள் முன்பாகத்தான். அப்போதுதான் யாரும் இந்தத் தளத்தைப் படிப்பதில்லை என்றெல்லாம் அலுத்துக் கொண்டிருந்தேன், இந்தப் படத்தைப் பார்த்ததும் "சும்மா டமாஸான" கரு ஒன்று - என்னையே கிண்டல் செய்து கொள்ளும் கரு - தோன்றியது. கிண்டல் செய்யும் வாய்ப்பை விடுவானேன் என்று அவசர அவசரமாக எழுதி அனுப்பினேன்.
என் அவசரம் கதையிலும் இருந்தது ஆரம்பம் விலாவாரியாக இருக்கும், கடைசியில் எப்படியோ முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக காமுவே எல்லா விவரங்களையும் சொல்லிவிடுவதாக கதையை முடித்துவிட்டேன். என்றாவது திருத்தி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இப்போதுதான் முடிந்தது.
போட்டியை ஏற்பாடு செய்த கணேஷ் பாலா யார், கோமதியம்மாள் யார் என்றெல்லாம் தெரியாது. பாலகணேஷா, கணேஷ் பாலாவா என்பதே சந்தேகம். எழுத்தாளர் என்று தெரிகிறது, இன்னும் படிக்கவில்லை. அவருக்கு ஒரு ஜே!
ரத்தினசாமி மிட்டாய்வாலா
அலைபேசி “ஒருவன் ஒருவன் முதலாளி” என்று அலறியது. தூங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்து அலைபேசியை எடுத்து “யெஸ் சார்!” என்றேன். வழக்கம் போலவே என் மேலாளர் ஹரிலால் ஜெயின் நேராகப் பேச்சை ஆரம்பித்தார்.
ஹரிலால் ஜெயின் தொழில், வணிகம், நிதி பற்றிய சிறப்பு தொலைக்காட்சி சானலை ஐந்து வருஷமாக மிகவும் வெற்றிகரமாக நடத்துகிறார். அதைப் பார்க்காத தொழிலதிபர், உயரதிகாரி, பங்குச் சந்தையில் வாங்கி விற்பவர் இல்லை. சராசரி பார்வையாளர் ஓரளவு வசதியானவர், விலை உயர்ந்த, ஆடம்பரப் பொருட்களுக்கான விளம்பரங்களுக்கு ஏற்ற சானல். பணம் கொட்டுகிறது. அவரது சிறப்பு நிருபர்களில் நானும் ஒருவன். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவார், நேரம் காலம் கிடையாது, எதையாவது நோண்டி எடுத்து தகவல் சேகரிக்கச் சொல்வார்.
“ரத்தன் மிட்டாய்வாலாவை பற்றி நிகழ்ச்சி வைக்கப் போகிறேன், உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார். “மிட்டாய்வாலா சாம்ராஜ்யம் நாலைந்து பில்லியன் டாலர் பெறும். சுரங்கங்கள், கப்பல்கள், உணவகங்கள் என்று வகைவகையான தொழில்கள், 100 ஆண்டுகளுக்கு முன் மும்பை தாதர் ரயில் நிலையத்துக்கு அருகே கோபால் மிட்டாய்வாலா சிறிய இனிப்புக்கடை ஒன்றை ஆரம்பித்தார். அது ராஜு மிட்டாய்வாலா காலத்திலும் அவர் மகன் ஷ்யாம் மிட்டாய்வாலா காலத்திலும் பல துறைகளில் விரிவடைந்தது. ஷ்யாமின் ஒரே மகன் குடும்பத்தோடு விமான விபத்தில் இறந்துவிட்டார். ஷ்யாம் இரண்டு வாரத்துக்கு முன் மறைந்தார், ரத்தன் ஷ்யாமுக்கு ஏதோ தூரத்து உறவு. 45 வயதிருக்கும். ஷ்யாமுக்கு உதவியாளராக பின்னணியில் இருந்தவர், அவர் மீது ஊடக வெளிச்சம் மிகக் குறைவு” என்று பதிலளித்தேன். கணினியில் அதற்குள் கூகிள் செய்யவும் ஆரம்பித்திருந்தேன்.
“ப்ச்” என்ற ஒலி கேட்டது. நான் இன்னும் தீவிரமாகத் தேட ஆரம்பித்தேன். “எனக்கு வேண்டியது ரத்தன் என்ற மனிதனைப் பற்றிய human interest தகவல்கள். நீ சொன்ன தகவல்களுக்கு கூகிளே போதும், உனக்கு எதற்கு சம்பளம்? புத்தகங்களைப் படித்துவிட்டு உன் தளத்தில் அவற்றைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிட்டு போ, போய் கண்டுபிடி, உனக்கு ஒரு வாரம் தருகிறேன்” என்று அலைபேசியை வைத்துவிட்டார்.
எனக்கு சிறு வயதிலிருந்தே புத்தகப் பைத்தியம் உண்டு. பல ஆண்டுகளாக நான் படித்த புத்தகங்களைப் பற்றி siliconshelf.wordpress.
ரத்தன் பேட்டிகள் தரமாட்டார் என்பது ஊரறிந்த விஷயம். மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், அமெரிக்காவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் டிப்ளமா என்பது மிட்டாய்வாலா இணையத் தளத்தில் தெரிந்தது. ஆனால் அவர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேளை கல்லூரி செல்லாமல் தபாலில் பட்டம் பெற்றாரோ என்று சந்தேகமாக இருந்தது. கூடப் படித்தவர் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கு ஒரு நாள் திடீரென்று ஷ்யாம் இவரைத் தன் உதவியாளராக நியமித்தார், அன்றிலிருந்து அவர் ஷ்யாமின் நிழலாகப் பணியாற்றினார், நான்கு ஆண்டுகளுக்கு முன் ஷ்யாமின் ஒரே மகன் குடும்பத்தோடு விமான விபத்தில் மறைந்தபிறகு ஷ்யாம் இவரை தன் வாரிசாக நியமித்தார் என்று மட்டும் தெரிந்தது. ஏன் ரத்தனை தேர்ந்தெடுத்தார்? எப்படி பழக்கம்? ஒன்றும் தெரியவில்லை. ஊடக நண்பர்கள் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
ஹரிலால் எனக்குக் கொடுத்த கெடுவோ நெருங்கிக் கொண்டிருந்தது. ஹரிலால தயவு தாட்சணியம் பார்க்க மாட்டார், சொன்ன வேலை நடக்கவில்லை என்றால் கிழித்துவிடுவார். எல்லா வழிகளும் அடைபட்டிருந்தன. ரத்தனை சந்திக்க வாய்ப்பே இல்லை. பல நண்பர்களிடம் முட்டி மோதினேன், கடைசியில் அவரது செயலரைச் சந்திக்க ஐந்து நிமிஷம் கிடைத்தது.
காமு பரமேஸ்வரன் காலை 11:30க்கு நேரம் கொடுத்திருந்தார். 11 மணிக்கே அங்கே சென்றுவிட்டேன். காத்திருந்தபோது சுவரில் ஒரு விசித்திரமான ஓவியத்தை கவனித்தேன். ஒரு காவல் துறை இன்ஸ்பெக்டரை நீலமும் பச்சையும் கலந்த லுங்கியும் சிவப்பு நிற பட்டைகள் போட்ட டீஷர்ட்டும் அணிந்த ஒரு தாடிக்காரன் கையில் கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்று கொண்டிருந்தான். பின்னணியில் ஸ்கூட்டர்களும் ஆட்டோக்களும் ஓடிக் கொண்டிருந்தன. அதையே ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
காமுவுக்கு 50-55 வயதிருக்கலாம். மிகக் குறைந்த ஒப்பனை, இஸ்திரி போடப்படாத குர்தி, ஜீன்ஸ் என்று மிக எளிமையாக இருந்தார். காலில் விழாத குறையாக அவரிடம் எப்படியாவது ரத்தனை பேட்டி எடுக்க வேண்டும் என்று கெஞ்சினேன். புன்னகை மாறாத முகத்தோடு மறுத்தார். எங்கள் சானலின் மகிமை, அதில் பேட்டி கொடுத்தால் ரத்தனுக்கும் மிட்டாய்வாலா கம்பெனிக்கும் நல்ல பெயர் என்றெல்லாம் தாஜா செய்துப் பார்த்தேன். கடைசியில் உங்கள் மனம் மாறாவிட்டால் எனக்கு வேலை காலி என்று கூட புலம்பிப் பார்த்தேன். அவரது புன்னகையும் பதிலும் மாறவே இல்லை. சரியாக 11:35-க்கு அவரது கடிகாரத்தை நோக்கினார். நான் எழுந்து வெளியே வந்தேன்.
வெளியறையில் காத்திருக்கத் தீர்மானித்தேன். ரத்தன் எப்படியும் இந்த வழியாகத்தான் வெளியே வந்து மின்தூக்கியில் ஏற வேண்டும். கடைசி முயற்சியாக அவர் காலிலும் விழுவோம் என்று அங்கேயே உட்கார்ந்திருந்தேன். கையில் இருந்த ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு புத்தகத்தைக் கொஞ்ச நேரம் புரட்டினேன். பிறகு மீண்டும் அந்த ஓவியத்தின் அருகே போய் நின்றேன்.
மண்டை காய்ந்தது. ஏற்கனவே மண்டைக்குள் எக்கச்சக்கப் பிரச்சினை. இந்த மாதிரி ஒரு ஓவியம் வேறு. எதற்காக அந்த இன்ஸ்பெக்டர் பேசாமல் வருகிறார்? யார் இந்த ரௌடி? இதை ஏன் யாருமே கண்டு கொள்ளவில்லை? என்னதான் நடக்கிறது இங்கே?
ஒரு பத்து பதினைந்து நிமிஷமாவது அந்த ஓவியத்தையே உன்னித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். தலையை உலுக்கிக் கொண்டு திரும்பினேன். காமு நான் வைத்திருந்த புத்தம்வீடு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டு புன்னகைத்தார். “தமிழரா? நிறைய படிப்பீர்களா?” என்று தமிழில் கேட்டார்.
“ஓரளவு படிப்பேன். சிலிகான்ஷெல்ஃப் என்ற தளத்தில் படித்த புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன்” எண்று அடக்கமாகச் சொல்லிக் கொண்டேன்.
காமுவின் புன்னகை இன்னும் பெரிதானது. “உங்கள் தளத்தை ஒரு நாளைக்கு நூறு பேர் கூட படிப்பதில்லை என்று சமீபத்தில் குறைப்பட்டுக் கொண்டீர்களே?” என்று கேட்டார். நான் வியந்தேன். “நான் நூற்றில் ஒருத்தி” என்று மெல்லியதாகச் சிரித்தார்.
“வாருங்கள், எங்கள் அலுவலக உணவகத்தில் இன்று என்னுடன் மதிய உணவு சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்றார். புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயமோகன், தி.ஜா. என்று அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டோம்.
அவரே திடீரென்று ரத்தனைப் பற்றி பேச ஆரம்பித்தார். “உங்களுக்கு off the record ஆக மூன்று தகவல்களைத் தருகிறேன். ஆனால் என் பேர் வெளியே வரக் கூடாது. நீங்களே ஆராய்ச்சி செய்து எப்படியோ கண்டுபிடித்ததாக இருக்க வேண்டும்” என்று முதலில் நிபந்தனை விதித்தார். நான் வேகவேகமாகத் தலையை ஆட்டினேன்.
“நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்களே ஒரு ஓவியம், அதுதான் ரத்தினத்தின், அடச்சே ரத்தனின் ரிஷிமூலம்” என்றார். என் புருவம் உயர்ந்தது.
"நான் அவனுக்கு அக்கா முறை" என்று தொடர்ந்தார். என் புருவம் மேலும் உயர்ந்தது. மிட்டாய்வாலாக்கள் சிந்திகள். இவரோ தமிழ் படிக்கிறார். "அவன்" என்று உரிமையோடு வேறு சொல்கிறார். இருவருக்கும் சகோதர உறவா? ரத்தன் தமிழரா சிந்தியா? ரத்தினம் என்று முதலில் சொல்லி பிறகு காமு திருத்திக் கொண்டாரே...
"என் சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகே மானாம்பதி கண்டிகை என்ற சின்ன கிராமம்" என்று முடித்துவிட்டு எழுந்து கொண்டார். "மீண்டும் சந்தித்து நிறைய பேசுவோம்" என்று கை கொடுத்தார்.
முதல் காரியமாக காமுவுடன் ஒரு செல்ஃபி வேண்டும் என்று கேட்டு எடுத்துக் கொண்டேன். நமட்டுச் சிரிப்போடு போஸ் கொடுத்தார். பிறகு அந்த ஓவியத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ஹரிலாலுக்கு அலைபேசினேன். சுவாரசியமான பின்புலக் கதைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது, ஆனால் இன்னும் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை, ஆராய்ச்சிக்கு இன்னும் இரண்டு வாரம் நேரம் வேண்டும் என்று கேட்டேன். இதெல்லாம் சுடச் சுடக் கொடுத்தால்தான் செய்தி என்று எரிந்து விழுந்தார். ஆனால் அவருக்கு என் கணிப்புகளில் நம்பிக்கை உண்டு. சரி உனக்கு இன்னும் ஒரு வாரம் தருகிறேன், இரண்டு வாரத்துக்குள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக வேண்டும் என்று கண்டிப்பாகக் சொன்னார்.
மானாம்பதி கண்டிகை பற்றி கூகிளில் தேடினேன், அதன் பின்கோட் மட்டும்தான் கிடைத்தது. மானாம்பதி என்ற குக்கிராமத்துக்கு அருகே உள்ள குக்குக்கிராமம் என்று தெரிந்தது. இரண்டுக்கும் ஒரே பின்கோட்தான்! சென்னையிலிருக்கும் சில நண்பர்களைக் கூப்பிட்டு விசாரித்தேன். யாருக்கும் எந்த விஷயமும் தெரியவில்லை.
அடுத்த விமானத்தில் சென்னை, வாடகைக் காரில் காஞ்சிபுரம். காலையில் பேருந்து நிலையத்துக்கு சென்று மானாம்பதி கண்டிகைக்கு போகும் பஸ் உண்டா என்று விசாரித்தேன். அனேக காஞ்சிபுரம்-உத்திரமேரூர் பேருந்துகள் மானாம்பதியைத் தாண்டி சாலையில் ஓரிடத்தில் இறக்கிவிடும், அங்கிருந்து 2 கிலோமீட்டர் நடந்தால் கண்டிகை வரும் என்று தெரிந்தது. வெகு சில பேருந்துகளே செல்லும் என்று தெரிந்தது.
ஒரு டீக்கடைக்காரரிடம் மேலும் விசாரித்தேன். "ஆ, அந்த ஊர்க்காரங்க அதிர்ஷ்டக்காரங்க சார், வசதியானவங்க. முக்கால்வாசி பேர்கிட்ட ஸ்கூட்டர் இருக்கு, பஸ்ல ஏற்றவங்க ரொம்ப கம்மி. ஒரு பம்பாய்க்கார சேட்டு அந்த ஊர்ல பணத்தை கொட்டி இருக்காரு,அந்த சேட்டு ஊர்ப் பசங்க படிப்புக்கு எல்ப் செய்றாரு, ஏரியை தூர் வாரிக்கிறாரு, ஒரு ஆஸ்பத்திரி கூட இருக்கு. இவ்ளோ ஏன் சார், இன்னிக்கு உத்திரமேரூர்ல பத்துல ரெண்டு கடை கண்டிகக்காரங்களுதுதான், தொளில் செய்ணம்னா குறைச்ச வட்டிக்கு கடன் கூட கொடுக்கறாராம். ஆனா எல்லாம் கண்டிகைல பொறந்தவகளுக்கு மட்டுந்தான். சேட்டு நல்ல மன்ஷன், ஆனா கண்டிகைக்கும் அவனுக்கும் என்னா கனெக்ஷன்னு தெர்ல" என்றார்.
"சேட்டு பேரென்ன?"
"தெர்ல சார், சேட்டு சேட்டுன்னுதான் சொல்வாங்க" என்றார்.
எனக்கு மண்டை காய்ந்தது. எதற்காக ரத்தன் மிட்டாய்வாலா ஒரு குக்கிராமத்துக்கு இத்தனை உதவி செய்கிறார்? காரை கண்டிகைக்கு ஓட்டினேன். போகும் வழியில் இருந்த மானாம்பதி கிராமமே கொஞ்சம் செழிப்பாகத்தான் இருந்தது. கண்டிகையில் பாதி வீடுகளுக்கு முன் ஸ்கூட்டர் இருந்தது. ஆரோக்கியமாதா சர்ச் என்று ஒரு பெரிய கட்டிடம் தெரிந்தது. சர்ச்சின் பின்சுவரில் மிட்டாய்வாலா அலுவலகத்தில் பார்த்த அதே ஓவியம் பெரிய அளவில் சுவர்ச்சித்திரமாக வரையப்பட்டிருந்தது.
நான் ஸ்தம்பித்துப் போனேன். காரை நிறுத்தி நான் கொண்டு வந்திருந்தத் வீடியோ காமெராவில் பல புகைப்படங்களை எடுத்தேன். மீண்டும் காருக்கு வந்தபோது மறைவிலிருந்து நாலைந்து இளைஞர்களும் இரண்டு பெருசுகளும் வெளியே வந்தார்கள்.
"தம்பி டிவிக்காரரா?" என்று ஒரு பெருசு ஆரம்பித்தார். இன்னொரு பெருசு யாருக்கோ ஃபோன் போட்டார். நான் தலையை ஆட்டினேன். என்னிடம் அந்த அலைபேசி நீட்டப்பட்டது.
"நான்தான் ரத்தன்" என்ற குரல் கேட்டது. ஆடிப் போய் பேச்சில்லாமல் நின்றேன். இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரிடம் இத்தனை சுலபமாக ஃபோன் போட்டு பேசக் கூடியவரா இந்தப் பெருசு?
"ரொம்ப ஃபாஸ்டா இருக்கீங்க! நேத்திக்குத்தான் அக்கா உளறி இருக்கா, அடுத்த நாளே கண்டிகைல நிக்கறீங்க!" என்று அந்தக் குரல் தொடர்ந்தது.
"சார்..." என்றேன். மேலே வார்த்தைகள் வரவில்லை. "ஒரே ஒரு ரிக்வெஸ்ட் தம்பி. இது சுவாரசியமான கதைதான், ஆனா சென்சேஷனலைஸ் பண்ணாம கொஞ்சம் அடக்கி வாசிச்சீங்கன்னா நல்லா இருக்கும். குமாரு உங்களுக்கு கதை எல்லாம் சொல்லுவான்" என்று சொல்லிவிட்டு கட் செய்துவிட்டார்.
"வாங்க" என்று சர்ச்சிற்குள் அழைத்துக் கொண்டு போனார்கள். இளநீர் வந்தது. பெருசு "ரத்னம் பழைய கதையை எல்லாம் சொல்லிடுங்கன்னான். அந்த சுவத்திலிருக்கற படத்தில இருக்கற ரௌடி ரத்னம்தான். நான் அவன் பெரியப்பா பையன். எம்பேரு குமாரசாமி. இன்ஸ்பெக்டர் ட்ரஸ்ல இருக்கறது நாந்தான். 30 வருஷங்களுக்கு முன் நடந்த கதை இது. ரத்னத்தோட அப்பா மாணிக்கம் பல வியாபாரம் செஞ்சாரு, எல்லாத்திலியும் நஷ்டம்தான். அவர் அப்பதான் இறந்து போயிருந்தாரு. ஊர் முழுக்க கடன். கயறு வியாபாரம் செய்யறேன்னு கட்டுக்கட்டாக கயறு வாங்கி வச்சிருந்தாரு, ஒரு அடி கயறு கூட விக்கல. அப்பல்லாம் மானாம்பதியில் வியாழக்கிழமை சந்தை நடக்கும். ரத்னம் எனக்குதான் இன்ஸ்பெக்டர் ட்ரஸ்ஸ மாட்னான், ரௌடி மாதிரி லுங்கி டீஷர்ட் கட்டிக்கிட்டான். என்னைக் கட்டி சந்தை பூரா இழுத்துக்கிட்டு போனான், போலீசால் கூட தப்பிக்க முடியாது, அவ்வளவு பலமான கயிறுன்னு கத்திக்கிட்டே போனான். அவன் பண்ண ட்ராமாவைப் பாத்து ஊர்ல எல்லாரும் சிரிச்சாங்க, ஆனால் கயறு விக்க ஆரம்பிச்சது. காஞ்சிபுரம் கோவிலுக்கு யாத்திரை வந்திருந்த பெரியவரு - ஷ்யாம் அய்யா - மானாம்பதி வழியாக சென்னை போய்ட்டிருந்தவர், இதப் பாத்து இவன தன் கூட கூட்டிட்டுப் போயிட்டாரு. முதல்ல அசிஸ்டன்டா இருந்தான், அவர்கிட்ட ரொம்ப விஸ்வாசம். பெரியவரு பையன் போன பிறவு இவனை தன் வாரிசாக்கிட்டாரு" என்று சொல்லி முடித்தார்.
பிறகு காமுவிடமிருந்து மேலும் விவரங்களை அறிந்து கொண்டேன். ஷ்யாம் தன் சொந்தக்காரர்களிடமிருந்து எவனோ ஒரு தமிழன் உன் வாரிசா என்ற முணுமுணுப்புகளைக் கட்டுப்படுத்த ரத்தனை தன் தமிழ் நாட்டு தொடர்புகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ரத்தன் நன்றி உணர்வால் தன் பெயரை மாணிக்கம் ரத்தினசாமி என்பதிலிருந்து ரத்தன் மிட்டாய்வாலா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். மும்பை பல்கலைகழகத்திலும் கார்னலிலும் ரத்தன் மிட்டாய்வாலா என்று தேடினால் எப்படி கிடைக்கும்?
எங்கள் நிகழ்ச்சி பெரிய வெற்றி. ஹரிலால் மிகவும் சந்தோஷப்பட்டார், எனக்கு பாராட்டு மழை, மிட்டாய்வாலா நிறுவனத்திலிருந்து எங்களுக்கு விளம்பரங்கள் இரட்டித்தன். ரத்தனும் காமுவும் பல தமிழ் புத்தகங்களை இணையத்தில் பதிவேற்ற உதவி செய்யப் போகிறார்கள், ஷ்யாம் மிட்டாய்வாலா பேரில் தமிழ் எழுத்தாளர்களுக்கு வருஷாந்தர விருது அறிவிக்கப் போகிறார்கள்...
அடுத்த முறை ஹரிலால் சிலிகன்ஷெல்ஃப் வெட்டி வேலை என்று கிண்டல் அடிக்கும்போது மனதுக்குள்ளாவது புன்னகைத்துக் கொள்ளலாம்

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. வணக்கம்.
நீக்குகதை மிக நன்றாக இருந்தது. படத்துக்கு பொருத்தமாக கதையில் இடம் பெற்றதை படித்தவுடன் பிழைக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் பிழைக்கலாம் என்ற எண்ணம்தான் வந்தது.
பதிலளிநீக்குமிக அருமையாக கதையை சொல்லி இருக்கிறார்.
முன்பு வலைத்தளத்திற்கு வந்து கருத்து சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். இவர் கதைகள் படித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். எனக்குத் தெரிந்து எங்கும் வந்து கருத்து சொன்னதில்லை. நிறைய நிறைய நிறைய புத்தகங்கள் படித்து அவற்றை பகிர்ந்து கொள்வார்.
நீக்குரத்தன் மிட்டாய்வாலா பேர் காரணம் அருமை.
பதிலளிநீக்குஇவர் கதைகளை ஏற்கனவே சில கதைகள் படித்திருந்தும், ஏனோ இந்தக் கதை படித்ததும் அவர் அனுமதி பெற்று இங்கு பகிரலாம் என்று தோன்றியது. கேட்டேன். சம்மதித்தார். பகிர்ந்தேன்!
நீக்குநான் இந்தப் படத்திற்கு தீவிரமாக யோசித்து ஒரு கதை எழுதினேன், அதில் ஒரு போர்ஷனை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. அந்தப் பகுதியை எழுத முடிந்து தட்டிக் கொட்டினால் படிக்கக்கூடிய கதை கிடைக்கலாம்.
பதிலளிநீக்குஅதே படத்தைப் பார்த்ததினால் இந்தக் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். ரொம்ப நல்ல எழுதியிருக்கார். மிக வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்.கொஞ்சம் டிராமாத் தனமான, படத்திற்கான நிகழ்வு. மற்றபடி கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
வாங்க நெல்லை.. நீங்களும் எழுதினீர்களா? அதுசரி, பேஸ்புக்கில் எந்தப் பெயரில் இருக்கிறீர்கள்?
நீக்கு// அதில் ஒரு போர்ஷனை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. அந்தப் பகுதியை எழுத முடிந்து தட்டிக் கொட்டினால் படிக்கக்கூடிய கதை கிடைக்கலாம். //
படத்துக்கான சம்பவமா? கதையோடு எப்படி இணைப்பது என்பதில் பிரச்னையா? எழுதி முடித்து அனுப்புங்களேன்... இங்கே ஒரு செவ்வாயில் பகிர்ந்து விடலாம்!
நெல்லை எங்கிட்ட சொன்னீங்களே இதுக்கு எழுதின கதையை....
நீக்குநடுல நிக்கிறது என்று. அதைத் தொடர்வதற்கும் சில க்ளூஸ் கொடுத்து உங்க பாணில யோசிங்கன்னு ...உங்க ஆரம்பம் நல்லாருந்துச்சு
இப்பவும் நீங்க அதை முடித்து அனுப்பலாம் நெல்லை நேரம் கிடைக்கும் போது யோசிங்க
கீதா
இப்படி நடக்குமா என்றெல்லாம் யோசிக்காமல் கதையின் நடை நம்மை ஆழ்ந்து படிக்கவிடுகிறதா என்று பார்த்தால் இது நல்ல சிறுகதை எனத் தோன்றும். பாராட்டுகள்.
பதிலளிநீக்குகாமு பரமேஸ்வரன் கதா பாத்திரம் மாத்திரம் சட் என பெண்ணாக மாறிவிட்டதோ எனத் தோன்றியது. அவர் ஆண் என்றே நினைத்திருந்தேன்.
தன்னைத் தானாகவே வைத்து ஆனால் வேற்றாளாக எழுதி இருக்கிறார். அந்தப் புதுமையும் என்னைக் கவர்ந்தது. சந்தடி சாக்கில் தளத்துக்கும் விளம்பரம்!
நீக்குகாமு பரமேஸ்வரன் கதா பாத்திரம் மாத்திரம் சட் என பெண்ணாக மாறிவிட்டதோ எனத் தோன்றியது. அவர் ஆண் என்றே நினைத்திருந்தேன்.//
நீக்குநெல்லை அறிமுக லைனே அவர் பெண் என்பதைக் காட்டிக் கொடுக்கிறதே.
//மிகக் குறைந்த ஒப்பனை, இஸ்திரி போடப்படாத குர்தி, ஜீன்ஸ் என்று மிக எளிமையாக இருந்தார்.//
இதிலேயே தெரிந்துவிடுகிறதே.
கீதா
ஆமாம் தன்னையே வைத்து வேற்றாளாக எழுதியிருக்கிறார். சிலிக்கான் ஷெல்ஃபும் வாசிப்பும் வந்துவிடுகிறது!!!! கதையிலேயே ஒரு அறிமுகமும்.
நீக்குகீதா
//தன்னைத் தானாகவே வைத்து ஆனால் வேற்றாளாக எழுதி இருக்கிறார். அந்தப் புதுமையும் என்னைக் கவர்ந்தது.// புதுமை? மகாபாரதத்தில் வியாசர் மூன்றாவது நபராக, தன்னைப் பற்றி,
நீக்கு(பெரும்பாலும்) "வியாசர் வந்தார்..." என்ற ரீதியில் குறிப்பிடுகிறார். Cameo role ஆனாலும் கதையில் தொய்வு விழும்போது உள்ளே புகுந்து பட்டையை கிளப்புகிறார். உங்களுக்கு தெரியாதது இல்ல; சும்மா அன்பா சீண்டுகிறேன் ;-)
சிலிக்கன் ஷெல்ஃப் வாசிப்பதுண்டு. ஆர் வி அவர்களின் கதைகளைப் பற்றிய பகிர்வு அருமையாக இருக்கும். எனக்கும் பிடித்த தளம். சில வாரங்கள்? மாதங்களுக்கு முன் சுஜாதாவின் கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்ததை வாசித்தேன்.
பதிலளிநீக்குகதையைப் படித்துவிட்டு வருகிறேன்.
கீதா
வாங்க கீதா... நீங்களும் அவர் தனம் சென்று படிப்பது குறித்து சந்தோஷம்.
நீக்குகௌ அண்ணா எழுதியிருந்ததும் நினைவு இருக்கிறது இங்கு வந்ததே. அரசியல்வாதி பிடிபடுவது....என்றேல்லாம் போகும்
பதிலளிநீக்குகீதா
ஆமாம்.. அதே தான்.
நீக்குகாமுவின் புன்னகை இன்னும் பெரிதானது. “உங்கள் தளத்தை ஒரு நாளைக்கு நூறு பேர் கூட படிப்பதில்லை என்று சமீபத்தில் குறைப்பட்டுக் கொண்டீர்களே?” என்று கேட்டார். நான் வியந்தேன். “நான் நூற்றில் ஒருத்தி” என்று மெல்லியதாகச் சிரித்தார்.//
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப ரசித்தேன் இந்த இடத்தை!
அழகான எழுத்து நடை. ரசித்து வாசித்தேன். தொடங்கியதும் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் எழுத்து.
கீதா
ஆமாம்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குவழக்கம் போலவே செவ்வாய்க் கிழமை பிரச்னை...
பதிலளிநீக்குசொல்வதனால் வருத்தம் கொள்ள வேண்டாம்...
சிறு சிறு பத்திகளாகப் பிரித்துத் தந்திருந்தால் நல்லது ...
நெருக்கமான பாதை போல எழுத்துருவாக்கம் கண்களுக்கு அயர்ச்சி ஆகின்றது..
ஆனால் அண்ணா.. நான் மொபைலில் பார்க்கும்போது படிக்கும் படி தானே இருக்கிறது...
நீக்குமிட்டாய்வாலாக்கள் சிந்திகள். இவரோ தமிழ் படிக்கிறார். "அவன்" என்று உரிமையோடு வேறு சொல்கிறார். இருவருக்கும் சகோதர உறவா? ரத்தன் தமிழரா சிந்தியா? ரத்தினம் என்று முதலில் சொல்லி பிறகு காமு திருத்திக் கொண்டாரே...//
பதிலளிநீக்குகதைக்கருவுக்கு ஏற்ப இந்த இடத்தை வைத்து நகர்த்தல்!!!
படத்திற்கான கதையை ரத்தனின் ஃப்ளாஷ் பேக் ரத்தினத்தின் வழியாகக் கொண்டு வந்தது வித்தியாசம் கருவும்தான்.
ரத்தினம் கயிறு விற்க அப்படிச் செய்தான் சரி அதை ஏன் சுவரில் சித்திரமாக?
அதாவது நடக்குமா இப்படி என்று தோன்றினாலும், கதை சொல்லும் திறமை..
ஆனால் அதிர்ஷ்ட தேவதையின் கண் பட்டால் சொடக்கு போடும் நேரத்தில் வாழ்க்கையே மாறிவிடுமாமே. அப்படி ரத்தினம் ஒரு ட்ராமா செய்யப் போக, ஷ்யாமின் கண்கள் பட....அதாங்க அதிர்ஷ்ட தேவன்...ரத்தினம் ரத்தனாகிறான்.
கீதா
கதை பிடித்தது.
கீதா
அதேதான் ..... எக்ஸாக்ட்லி.
நீக்குமீண்டும் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதி. நிலைய வித்துவான்கள் அடிக்கும் "டொய் டொய்" யைக் காட்டிலும் மேல்.
பதிலளிநீக்குஇன்றைய கதையை RV அவர்களே
//என் அவசரம் கதையிலும் இருந்தது ஆரம்பம் விலாவாரியாக இருக்கும், கடைசியில் எப்படியோ முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக காமுவே எல்லா விவரங்களையும் சொல்லிவிடுவதாக கதையை முடித்துவிட்டேன். என்றாவது திருத்தி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இப்போதுதான் முடிந்தது.//
என்று ஒத்துக்கொண்டார். எதிர்பார்க்காத முறையில் படத்தை கயறு விளம்பரம் ஆக்கிக் கொண்டார். இதில் தான் ஒரு சின்ன சறுக்கல். ஆள், சம்பவத்தை முன் நிறுத்தாமல் ஒரு கயிறை சுஜாதாவின் "நைலான் கயறு" போன்று முக்கிய பாத்திரம் ஆக்கி விட்டார். ஆனாலும் போரடிக்கவில்லை.
RV திருவனந்தபுரத்துக் காரரோ? RV திருவாங்கூர் மகாராஜாவின் இனிசியல் முத்திரை. தற்போதும் கிழக்கே கோட்டையின் வரவேற்பு வளைவில் RV என்று உள்ளதை காணலாம்.
Jayakumar
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் JKC ! வாழ்க பல்லாண்டுகள்!
நீக்குநன்றி ஐயா.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் JKC ஸார்... வணங்குகிறேன்.
நீக்குRV பற்றிய உங்கள் ஆராய்ச்சி சுவாரஸ்யமானது JKC ஸார்!
நீக்குசகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும், வணக்கங்களும். பகிர்வுக்கு நன்றி.
நீக்கு///ஆனால் அண்ணா.. நான் மொபைலில் பார்க்கும்போது படிக்கும் படி தானே இருக்கிறது...///
பதிலளிநீக்குஎனக்கு இயலவில்லை ஸ்ரீராம்...
அதுதான் வருத்தமே...
உங்கள் சிரமம் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.
நீக்குபெரியோர்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே, மற்றும் எல்லோருக்கும் முதற்கண் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇன்று ‘நான் படிச்ச கதை’ பகுதியில் இடம் பெறும் இக்கதை மறைந்த எழுத்தாளர் ஆர்வி என்ற புனைபெயர் கொண்ட ஆர். வெங்கட்ராமன் (1918-2008) அவர்கள் எழுதிய “கண்கள்” என்ற சிறுகதை. ஆர் வி யை பற்றி அறிமுகப்படுத்த, நான் சொல்வதை விட அவரைப் பற்றி நன்கு அறிந்த, அவருடன் பழகிய ஜீவி சார் எழுதிய ஒரு பதிவின் சுட்டி தருகிறேன்.
அன்று ஜீவி சார் எழுதியது கிட்டத்தட்ட ஒரு இரங்கற்பா ஆகிவிட்டது. பதிவு ஏப்ரல் 2008இல். ஆர்வி யின் இறப்பு ஆகஸ்ட் 2008 இல். ஜீவி சாரின் பதிவு அவருடைய “பூவனம்” தளத்தில் இல்லை என்றாலும் ஆர்ச்சிவில் இருக்கிறது. சுட்டி இதோ ஆர்வி
‘கண்கள்’ என்ற தலைப்பை பார்த்ததும் சுப்ரமணியபுரம் திரைப்பட பாடல் கண்கள் இரண்டால் நினைவில் தோன்றியது. கண்கள் இரண்டால் காதலாகிய ஒரு பெண்ணின் முக்கோணக் காதல் கதை தான் ‘கண்கள்’. பழைய கால திரைப்படங்களில் எடுத்தாளப்பட்ட ஒரு “காதல்” சப்ஜெக்ட்.
இந்தக்கதை எழுதியது இந்த R V யா?
Jayakumar
இல்லை. அனுமதி தருபவர் என்றால் தற்போதும் ஜீவித்திருப்பவர். தவறுதலுக்கு வருந்துகிறேன்.
நீக்குஅந்த ஆர் வி வேறு; இவர் வேறு என்று நினைக்கிறேன்.
நீக்குஅவர் ஆர்வி. இவர் RV. இவர் மத்திம வயதுக்காரர். சுமார் 44 வயது என்று நினைக்கிறேன்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்
இன்றைய கதைப்பகிர்வு நன்றாக உள்ளது. இதே ஓவியத்திற்கு சகோதரர் கௌதமன் அவர்கள் முன்பு எழுதிய கதையும் நன்றாக இருந்தது. இப்போது தாங்கள் பகிர்ந்த இந்த கதையும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக சென்றது. கதாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குகதைப் பகிர்வு நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குதிரு. ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி.
ஜெயக்குமார் சந்திரசேகரன் சாருக்கு பிறந்தநாள் வணக்கம் , வாழ்த்துகள்
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குJayakumar
கதையை இங்கே பதித்ததற்காக நன்றி, ஸ்ரீராம்! மேலும் கதையைப் படித்த அனைவருக்கும் நன்றி!
பதிலளிநீக்குஜயகுமார், நீங்கள் குறிப்பிடும் ஆர்வி வெற்றி பெற்ற எழுத்தாளர். நான் கற்றுக்குட்டி எழுத்தாளன். :-) அவரைப் பற்றி மேலும் இங்கே - https://tamil.wiki/wiki/ஆர்வி
நான் சென்னையில் பிறந்து செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் வளர்ந்தவன். சிலிகன்ஷெல்ஃப் ப்ளாகை ஆரம்பிக்கும்போது 44 வயதிருக்கலாம், இப்போது கிழவன். இருந்தாலும் அந்த சுய அறிமுகத்தில் இருக்கும் 44 வயதை மாற்றுவதாக இல்லை, ஊரை ஏமாற்றத்தான். :-)
ஸ்ரீராம், பிற தளங்களில் கருத்து சொல்வதில்லை என்றெல்லாம் எதுவுமில்லை. இப்போதெல்லாம் சிலிகன்ஷெல்ஃபில் இரண்டு நாளைக்கு ஒரு பதிவு போடுகிறேன், அதற்கே மூச்சுத் தள்ளுகிறது. வேலைப்பளு, உடல்நலக் குறைவு, குடும்பக் கடமைகள் அதிகரித்து இணையத்தில் மேய்வது ஏறக்குறைய நின்றே விட்டது, அவ்வளவுதான்.
கௌதமன், நீங்கள் எழுதிய கதை எங்கேயாவது இணையத்தில் இருக்கிறதா? நெல்லைத்தமிழன், இந்தப் படத்திற்கு உங்கள் கற்பனையைப் படிக்க ஆவல், சீக்கிரம் பதியுங்கள்! மற்றவர்கள் இந்தப் படத்திற்கு என்ன யோசித்தார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பம்...
கோமதி அரசு, கொஞ்சம் தமிழ்-சிந்தி குழப்படி பேராக இருக்க வேண்டும் என்றுதான் ரத்தினசாமி மிட்டாய்வாலா என்று பேர் வைத்தேன். கவனித்திருக்கிறீர்கள், நன்றி!
கீதா (துளசிதரன்), நீங்கள் சிலிகன்ஷெல்ஃப் வாசகர் என்று தெரிந்து மகிழ்ச்சி! நூற்றில் ஒருத்தி பாராவை எழுதும்போது எனக்கே புன்னகைதான்.
கமலா, உங்களுக்கு கதை பிடித்திருந்தது மகிழ்ச்சி!
அன்புடன்
ஆர்வி
R.V. சுப்ரமணியன்
https://siliconshelf.wordpress.com
என்னுடைய இன்னும் சில படைப்புகளுக்கான சுட்டிகள் இங்கே - https://siliconshelf.wordpress.com/2025/10/13/மற்றுமொரு-மகாபாரதச்-சிறு/
பதிலளிநீக்கு