9.12.25

சிறுகதை ::: அது இது எது - திருவாழிமார்பன்

அது இது எது

- திருவாழிமார்பன் -

ற்ற மன்னர்கள் ஆடல் பாடல் என்று கேளிக்கைகளில் கழித்துக் கொண்டிருந்தபோது, விதேஹ நாட்டின் அப்போதைய ஜனகன்(அரசன்) ஸீரத்வஜன் முயற்சியில், மிதிலாபுரி அறிவுஜீவிகளின் நகராகவும் ஆன்மீக மையமாகவும் கலாசாரக்கேந்திரமாகவும் உருமாறிக்கொண்டிருந்தது. வேத வேதாந்த, சாங்க்ய, இதர மெய்த்தேடல் மரபுகளின் வாத விவாதங்களால் நகர் நிரம்பியது. பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களும் ஆன்மீகத் தேடல் கொண்டவர்களும் வந்தவண்ணம் இருந்தனர். உபநிஷத்துகளும் உருவாகிக் கொண்டிருந்தன.

                                                                                  நன்றி இணையம், கீதா

ஒரே நேரத்தில் எதிரெதிர் திசைகளில் வேகமாக செல்ல அவனால் முடிந்தது. மனதின் வெளி விஷயமாகிய அதிமுக்கிய அரச கடமைகளில் ஒரு குறையும் வைக்காமல், உள் நோக்கிய பயணமாகிய ஆன்மீகத்திலும் குதிரைப் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருந்தான்!

என்றைக்கும் போல அன்றைக்கும் மாலையில் கூடிய ஞானசபை நெடு நேரம் நீடித்தது.

“அரசே, இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. இனியாவது நீங்கள் சற்று ஓய்வு எடுக்க வேண்டும்.”

“அதுவும் சரிதான்; சபை கலையலாம்.” உடலும் மனமும் களைத்துப் போயின. ஸீரத்வஜன்படுக்கப்புறப்பட்டான்.


*********

செவியைத்துளைக்கும் இடியோசை. இடி?  மீண்டும் இடி!  இந்த முறை உடம்பையே உலுக்கிப்போட்டது. மலையிலிருந்து உருண்டு கொண்டிருப்பது போல உடலும் மனமும் பதற, கண் விழித்தான்.

“ஆபத்து! ஆபத்து! எதிரிப்படை மிக நெருங்கி விட்டது. எதற்கும் அவகாசம் இல்லை.  புறப்படுங்கள். புறப்படுங்கள்!!” என சேனாபதியின் குரல் அதிர்ந்தது.

தூங்கி ஒரு ஜாமத்திற்குள் எழுப்பி இருக்கிறார்கள் போலும். உடலின் ஒவ்வொரு அங்குலமும் தேள் கொட்டி வலித்தது; கண்களில் மிளகாய் பொடி பற்றி எரிந்தது. தாகம் தொண்டையை வறட்டியது.  

தலையைப் பிளப்பது போல் விண் விண்ணென்று தெறித்துக்கொண்டிருந்தது.

உடம்பு தள்ளாடியது; கால்கள் நகர மறுத்தன. உடல்நிலை சரியில்லையோ?

ஒரே அமளி; காதைத்துளைக்கும் ஓசைகள். அதற்குள் யாரோ கவசம் அணிவிக்கிறார்கள்.

“தண்ணீர்”, என ஆணையிட்டான். தண்ணீர் கொண்டு வருவதற்குள் ஜனகனை கிளப்பிக் கொண்டு வந்து விட்டார்கள். என்ன போர், யார் எதிரி, எந்த நாட்டுப்படை, ஒன்றும் புரியவில்லை. இரண்டு மூன்று முறை கேட்டுப்பார்த்தான். அவர்கள் ஏதோ சொல்கிறார்கள்;

அந்த இரைச்சலில் ஒன்றும் காதில் விழவில்லை. வேண்டுமென்றே மறைக்கிறார்களா?

தேரில் ஏறிய ஜனகன் கேட்ட தண்ணீர் இன்னும் கிடைக்கவே இல்லை! கிளம்பி ஆயிற்று.

முரசு முழுக்கம். ரத கஜ துரக பதாதிப்படைகள் அடித்துப்பிடித்து கிளம்பும் ஓசையில் நிலம் அதிர்ந்தது. ‘யார் எதிரி? எப்போது வந்தனர்? நாம் எல்லோரிடமும் சுமுகமான முறையில்தானே நடந்து வருகிறோம்? நமக்குதான் இப்போது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ஏதும் இல்லையே? தெற்கே கங்கையின் அப்புறம் மகதம், மேற்கே ஸதாநீரா ஆற்றுக்கப்பால் கோசலம், கிழக்கே கௌசிகி, வடக்கே இமயமலை, எல்லாமே நட்பு நாடுகள், அல்லது இயற்கை அரண்கள். மிதிலையும் எல்லையிலிருந்து வெகு தூரமாயிற்றே?  எங்கிருந்து இந்தப் புது எதிரி? ஒன்றும் புரியவில்லை. நம் உளவுப்படையும் சாரணப்படையும் அவ்வளவு சோடைகளா? ‘ என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

ஒரு கணம் மனதில் முந்தைய தினம் ரிஷி உத்தாலக ஆருணி, யாங்யவல்க்யர், கார்கி, மைத்ரேயி, இவர்களோடு வேதாந்த விசாரம் நடத்தியது நினைவுக்கு வந்தது. ‘சர்வம் மாயாமயம்’ என்கிறார்களே; அது இதுதானா? ஒருக்கால் கனவு தான் காண்கிறேனோ?

எப்படி கனவாக இருக்க முடியும்? இவ்வளவு தெள்ளத் தெளிவாக கண்முன் நடக்கின்றதே!

எல்லாப் புலன்களும் விழிப்பின் உச்சத்தில் அல்லவா இருக்கின்றன!’ என்று எண்ணலானான்.

இதற்குள் எதிரிப்படை அரசல் புரசலாகத் தெரிய ஆரம்பித்தது. அரண்மனை தாண்டி சிறிது தூரத்திலேயே ஒரே அல்லோலகல்லோலம்; புழுதிப் புயலோடு எதிரிப்படை அதற்குள்ளாக எதிரே வந்துவிட்டது! ‘எப்படி சாத்தியம்?! நம் படையினர் அனைவரும் விலை போய் விட்டனரா? அப்படி இருந்தாலும் ஒருவன் கூடவா விசுவாசம் இல்லாமல் இருப்பான்?’ 

மன்னன் திக்பிரமித்துப்போனான். இந்த பிரமை விலகுவதற்குள் வலது இடது புறங்களில் இருந்தும் எதிரிப் படையினர் தாக்க ஆரம்பித்தனர். படீரென தேர் அச்சு முறியும் ஓசை கேட்டது. அடுத்த நொடி சரிந்து கீழே விழுந்தான். சுதாரிக்கும் முன் எதிரி வீரர்கள் இருவர் தாங்கிப் பிடித்து கணநேரத்தில் அவன் கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டனர்.

என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது!

‘எனக்கு எதிரியா? நான் தோற்று விட்டேனா? அப்படியானால் இத்தனை காலம் நான் செய்த போர்ப்பயிற்சி எங்கே போயிற்று? துவங்கும் முன்னாலேயே போர் முடிந்துவிட்டது; வெட்கக்கேடு! அழுவதா சிரிப்பதா என்றுகூடத்தெரியவில்லை’.

தரதரவென்று ஜனகனை அவனுடைய அரண்மனைக்கு உள்ளேயே அடிமையைப் போல இழுத்துச் சென்றனர். இத்தனை குழப்பம், தோல்வி, அவமானத்திற்கு நடுவே அவனுக்கு தன்னைத் தோற்கடித்த எதிரி யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் வந்தது. அவனுடைய அரண்மனைதான்; ஆனால், ஆட்சிதான் நொடிப் பொழுதில் கை மாறி விட்டது! தன்னுடைய
அரியணை காலியாகவே இருந்தது. எதிரி மன்னன் இன்னும் வந்து அமரவில்லை. இத்தனை ஆண்டுகள், எத்தனை முறை அதன் மீது ஏறி அமர்ந்திருக்கிறான். என்றாவது ஒரு நாள் இப்படி நடக்கும் என்று கனவிலாவது நினைத்திருப்பானா?

எத்தனை ஆணவம்! நேற்று வரை, தான் மிகவும் அடக்கமானவன், எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பவன் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தானே! தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தானோ? சதானந்தர், அஷ்டாவக்ரர், பஞ்சசிகர் இவர்களிடம் எல்லாம் கற்றது என்ன? த்வைத, அத்வைத, சாங்க்ய சம்வாதம் எல்லாம் தன்னளவில் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? இத்தனை வலி , வேதனை, குழப்பத்திற்கு நடுவிலும் கண நேரம் மின்னல் போல ஒரு சிரிப்பு வந்தது. 'தன்னைப்பற்றி தான் கொண்டிருந்த பிம்பம் உடையும் தருணம் இது. இதுவும் ஒரு பாடம்தான் போலும்' என்று எண்ணிக் கொண்டான். 'ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால்' என்பதுபோல, ஒருபுறம் ராஜ்ய காரியங்களிலும் இன்னொரு புறம் தத்துவத் தேடல்களிலும் இப்போதும் மனம் லயித்திருந்தது!

எவனோ ஒருவன் வந்து அறிவித்தான்.

“ஸீரத்வஜன் ஒரு இடத்திலும் கூட தங்காமல் மிதிலை விட்டு நீங்க வேண்டும். அது வரை அவனுக்கு ஒருவரும் உணவோ தண்ணீரோ கொடுக்கக்கூடாது. இது அரச கட்டளை! ” 

அவ்வளவுதான்; அறிவிப்பு முடிந்து விட்டது. 

எதிரி மன்னன் தன்னை சமமாக பாவிக்க விரும்பவில்லை போலும்! அவன் முகத்தில் விழிக்கக்கூட அருகதை இல்லை என்று சொல்லாமல் சொல்லி விட்டான். ஜனகன் மனம் துவண்டு விட்டது. இதுவரை வரலாற்றில் இப்படி ஒன்று கேள்விப்பட்டதே இல்லை!  அரச ஆடைகளை உருவி, கட்டிய
கோவணத்தோடு தரதரவென்று வெளியே எறிந்தார்கள். இதுவும் கேள்விப்படாதது!

ஜனகன் எழுந்து தூசி தட்டிக்கொண்டான். எழுந்தது முதல் அவன் ஆசைப்பட்ட தண்ணீர் இன்னும் கிடைத்தபாடில்லை. தள்ளாடி நடக்க ஆரம்பித்தான். முகங்கள்! எத்தனை விதமான முகங்கள்! வேதனையோடு, எக்களிப்போடு, புன்முறுவலோடு, பொறாமையோடு, அதிர்ச்சியோடு, கண்ணீரோடு … இன்னும் எத்தனை உணர்ச்சிகள்! எதுவும் தெளிவாக மனதில் பதியவில்லை. ஆனால், ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தான். இப்போது உடனடித் தேவை தண்ணீர். உணவு பற்றி யோசிக்க அவகாசம் இல்லை . இழுத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், துரத்திக் கொண்டும் காவலர்கள் தொடர்ந்தார்கள். அவன் மிதிலை நகர எல்லயைக் கடந்தபிறகுதான் அவர்கள் அரண்மனைக்குத் திரும்ப முடியும்; அவர்கள் கவலை அவர்களுக்கு!

நடுக்கோடை ஆதலால் வியர்த்துக் கொட்டியது. ஆனால் அதுவும் கொஞ்ச நேரத்தில் நின்று போய் விட்டது. உடலில் தண்ணீர் வற்ற ஆரம்பித்து விட்டது. துவண்டு போய் கீழே விழுந்தான். கொஞ்ச நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தான்.  நாள் இவ்வளவு நீண்டதா?  பகல் இவ்வளவு கொடியதா? எங்கே என் ராஜ்யம்? எங்கே என் மனைவி ஸுநயனா? எங்கே என் உற்றார் உறவினர்? தன்னை கடவுளைப் போல பாவித்த மக்கள் எங்கே? எல்லோரும் 
இருக்கிறார்கள்; ஆனால் எதுவும் இல்லை!

ஒரு வழியாக, நகர எல்லையைக் கடந்தான். உலர்ந்த நாக்கும் தளர்ந்த கால்களும் ஓர் அடி கூட எடுக்க முடியாதபடி அவனை வருத்தின. அத்துவானக்காட்டில், நெடுந்தொலைவு தாண்டி எதிர்ப்பட்ட, கை வைத்துக்கூட மொள்ளமுடியாத ஆழமற்ற குட்டையில், ஒரு விலங்கு போல கைகளை ஊன்றி நாக்கால் நக்கிக் குடித்தான். அப்படியும் நான்கு வாய் குடிப்பதற்குள் சேற்றுத்தண்ணீர் கலங்கிவிட்டது.


************

கலிலும் இருளோவென்றிருந்த அடர்ந்த காட்டுக்குள் தள்ளாடியபடியே ஒத்தையடிப்பாதை வழியே முன்னேறிக் கொண்டிருந்தான் . சிறிது தூரத்தில் எதிர்ப்பட் சில காட்டுவாசிகள் இவனைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று ஏகப்பட்ட உபசாரம் செய்தனர். புழுதியும் சேறுமாக இருந்த ஜனகனை அவர்களே நன்கு நீராட்டி, சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, காட்டுப் பூக்களால் ஆன மாலையும் சூட்டினர். பின்னர், போதும் போதும் எனும் அளவுக்கு வயிறார உணவிட்டனர். அவனுக்கு திருப்தியாய் இருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர். ஜனகனுக்கு சிறிது தெம்பும் தைரியமும் வந்தது.

சிறிது நேரத்தில் அவனை அருகில் இருந்த ஒரு மரத்தில் கட்டிப்போட்ட போது அவன் அதிர்ந்து போனான். ஷோடச உபச்சாரம் செய்து, பின் கட்டியும் போடுவார்களா என்ன? விசித்திரமாய் இருக்கிறதே! அதற்குள்ளாக, அவனை பாதாதிகேசம் ஆராய்ந்து விட்டிருந்தனர். வெறும் கோவணத்தோடு இருந்தாலும் ராஜ களை மறையவில்லை! அத்தனை ஆண்டுகள் ராஜபோஜனம் செய்த மேனி நெகுநெகுவென்று வளப்பமாயிருந்தது. சர்வ லட்சணம் பொருந்திய சரீரத்தில் அங்கஹீனம் ஏதுமில்லை!  தீ சடங்குகள், மந்திர உச்சாடனங்கள் தொடங்கின. 

“என்னை ஏன் கட்டிப்போட்டு இருக்கிறீர்கள்”, என்று கேட்டான். இரு தப்புக்கும் மற்றவர் மொழி புரியவில்லை.

இருந்தாலும், குழப்பத்திற்கு சிறிது நேரத்திற்குள்ளாகவே விடை கிடைத்து விட்டது. அவனை நரபலி கொடுக்கப் போகிறார்கள்! இதை அறிந்தவுடன் வியர்த்துக் கொட்டியது. அவனை அறியாமல் தாரை தாரையாக கண்ணீர் பெருகியது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வது போல அவன் வேதாந்த அறிவுக்கு தெரிந்த வரையில் உயிர் ஆசை இருந்ததோ இல்லையோ, உடலுக்கும் உணர்ச்சிக்கும் தெரிந்த வகையில் கண்டிப்பாக உயிர் ஆசை அதிகமாகவே இருந்தது. ஆனாலும் என்ன? அழுதும் தொழுதும் பயனில்லை.

வாழ்வில் ஒரே ஒரு முறை போரிட்டிருந்தான். மிதிலையின் அரசனாக அரியணை ஏறியவுடன், சங்கஸ்ய மன்னனான சுதன்வனின் தாக்குதலை எதிர்கொண்டு, தோற்கடித்து கொன்று, தனது சகோதரன் குஷத்வஜனை அந்தப் பிரதேசத்தின் புதிய அரசனாக நியமித்திருந்தான்.  சுதன்வனின் சாபம்தானோ? ஒருகால் அந்த போரிலோ பின் எப்போதாவதோ அங்க ஹீனம் ஏற்பட்டிருந்தாலோ, அல்லது ஏப்பை சாப்பையாக, கூனிக்குறுகி நெருங்கலாகவோ இருந்திருந்தால் இந்நேரம் அவனை விட்டு விட்டிருப்பார்களோ? குறை உடைய, கசங்கி வாடிய மலரையோ, வதங்கிய, அடி பட்ட கனியையோ யாரும் கடவுளுக்கு படைப்பதில்லை அல்லவா?

மந்திர உச்சாடனங்கள், கோஷங்கள் ஆட்டங்கள் , இவைகளுக்கு நடுவே ஆஜானுபாஹுவான ஒருவன் கையில் மிகப்பெரிய கொலைவாளுடன் நெருங்கினான். அருகில் வர வர, வலிப்பு வந்தவன் போல உடல் உதறி உதறி எடுத்தது. முகம் வெளுத்தது; திறந்த வாய் மூடவில்லை.  விழிகள் பிதுங்கின. எலும்பு குருத்துக்குள் சிலீரிட்டது. உயிரின் ஆழத்தை ஊடுருவிய அனைத்து மிருகங்களுக்குமான அனாதி கால மரண பயம் அது!

தீ ஜ்வாலையில் பளபளத்த அந்த வாள், அக்னியே உருவாக தன் கழுத்தை நோக்கி வருவதைக்கண்டு, ஜனகனின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஐம்புலன்களும், மனமும், புத்தியும், ஸ்தம்பித்துப்போயின. இனம் புரியாத, சொல்லில் விவரிக்க முடியாத, துடிப்பா அல்லது ஒளியா என வகைப்படுத்த முடியாத ஒரு அதிர்வு அவன் இதயத்தில் எழுந்தது. அது அஹம் ஸ்புரணை என்பதை அவன் அறியான்!

அடுத்த கணம், அடிவயிற்றிலிருந்து, அடிபட்டு சாகப் போகும் பிராணியின் மரண ஓலம் எழுந்தது. ‘கடவுளே, ஏன் இப்படி, என்ன பாவம் செய்தேன், எவ்வளவு பாவம் செய்தேன்? ஒரு நாளைக்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது; வாழ்வே முடிந்து விட்டது!!’ 

ஓலம் அவனுக்குள் இருந்துதான் எழும்புகிறது என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை. அவன் வலியும், மன வேதனையும், சுய இரக்கமும், பச்சாதாபமும், பய பீதியும் இதுவரை எந்த மனிதனும் அறியாதது! மனித குலத்தின் ஒட்டுமொத்த துக்கமும் ஆறாத் துயரமும், மரண பயமும் அந்த வீரிடலில் ஓங்கி ஒலித்தது!

****
                                            
                                                                                        நன்றி இணையம், கீதா

திடீரென்று, நெஞ்சே பிளக்கும் நரியின் ஊளை போன்ற அந்த அமானுஷ்ய ஒலத்தால் அடித்துப்பிடித்து எழுந்தாள் மகாராணி ஸுநயனா. 

“அன்பே, நாதா! என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்று பக்கத்தில் உறக்கத்தில் உளறி ஊளையிட்டுக்கொண்டும் புரண்டு கொண்டும் இருந்த மன்னனை எழுப்ப முயற்சித்தாள். 

அதற்குள் மெய்க்காவலர்கள் உள்ளே ஓடி வந்தனர். 

“ஒன்றுமில்லை, நீங்கள் எல்லாம் வெளியே போகலாம்,” என்று அவள் ஆணையிட்டாள். காவலர்கள் குழப்பத்தோடும், பயத்தோடும், தர்ம சங்கடத்தோடும் பின் வாங்கினர். பின்னர் அவனை அணைத்துத்தழுவி ஆதுரப்படுத்தினாள். பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து குடிக்கச்செய்தாள். மன்னன், உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட குழந்தை போல மலங்க மலங்க விழித்தான். ‘என்ன ஆயிற்று’ என்று கேட்கக் கூட அவனுக்கு நா எழவில்லை. அரசியின் அணைப்பில் கைக்குழந்தை போல தாங்க முடியாமல் விசித்து விசித்து அழுதான். நிமிடங்கள் ஆகியும் உடம்பு அதிர்ந்து அதிர்ந்து அடங்கிக் கொண்டிருந்தது.

‘அப்பா, என்ன நிவாரணம்! கனவு தான் கண்டு கொண்டிருந்தேனோ? அப்படியானால் அந்த போர், தோல்வி, நாடு கடத்தல், நரபலி, அத்தனையும் கனவா? எப்படி கனவு என்று சொல்ல முடியும்? என் ஐம்புலன்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தன அல்லவா? இது நாள் வரை நான் நிஜம் என்று நினைத்த அனைத்தையும் விட நிஜமாகவே, தத்ரூபமாக, ப்ரத்யக்ஷமாக நடந்து கொண்டிருந்தன அல்லவா? ஒருவேளை, பசி மயக்கத்தில், இப்போது அரசியின் அரவணைப்பில் இருப்பது போல கனவு கண்டுகொண்டிருக்கிறேனோ?’ என்று சந்தேகித்தான். 

ஆனால், அவனால் வாய் திறந்து கேட்க முடிந்ததெல்லாம் இதுதான், 

“அது நிஜமா, அல்லது இது நிஜமா?”

ஒரு கணம் அரசி திடுக்கிட்டுப்போனாள். என்றாலும், ‘இவ்வளவு மோசமாக இருக்கும்படி என்ன கனவாக இருக்க முடியும்? பிறகு மெதுவாக விசாரித்துக்கொள்ளலாம்,’ என்று எண்ணமிடலானாள். “ஏதோ கெட்ட கனவு; வேறு ஒன்றும் இல்லை. தயவு செய்து சிறிது நேரம் படுத்து கண்ணை மூடுங்கள், ஸ்வாமி .” மன்னன் இன்னமும் பிரமையில் இருந்து மீளவில்லை.

கண்களை மூட மிகுந்த அச்சமாக இருந்தது.  மறுபடியும் கேட்டான், “அது நிஜமா, அல்லது இது நிஜமா? “ 

“நான்தான் சொன்னேனே, அன்பே! இதுதான் நிஜம். இரவு நெடுநேரம் விழித்திருந்து படுத்தபடியால் துர்ஸ்வப்னம் வந்திருக்கிறது போலும். வேறு ஒன்றும் இல்லை. இதுதான் நிஜம்; இதுதான் நிஜம்” என்றபடி அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள். ஜனகனுக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை.

ஏனெனில், அந்த போர்க்களமும், அதன் பின்னர் நிகழ்ந்தவையும் அவன் மனக்கண் முன் இன்னும் நிற்கிறதே! அதை ஒப்பிடும்போது, இப்போது அரசி அவனைத் தழுவித்தரும் ஆறுதல் ஒரு ஆழமற்ற கனவாகவே தோன்றுகிறது.

ஒரு ஜபம் போல மறுபடியும் மறுபடியும் “அது நிஜமா, இது நிஜமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான். அரசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பொழுது புலர்ந்தது.

அவனுடைய நீராட்டுக்கு ஏற்பாடு செய்ய வந்தவர்களிடம் அதே கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தான் “அது நிஜமா, இது நிஜமா?” மன்னனிடம் என்ன ஏது என்று எதிர் கேள்வி கேட்க முடியுமா? பயபக்தியினால் அவர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவதிப்பட்டார்கள்.

பின்னர், அவனுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டு அமைச்சர்கள் வந்து பார்த்தனர். அனைவரிடமும் அதே கேள்வி, “அது நிஜமா, இது நிஜமா? “ மன்னன் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது அவர்களையும் கவலையில் அழுத்தியது. ஒரு சிலமணி நேரங்களில் சரியாகிவிடும் என்று நினைத்தனர். ஆடல் பாடல் அனைத்திற்கும் ஏற்பாடு செய்தனர். அவ்வப்போது அவன் கேள்வியை விடுவதாக இல்லை. அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார். எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் அவரும் குளிகை, தைலம், பஸ்பம், செந்தூரம் என்று ஏதேதோ முயற்சித்தார். மந்திரம், தந்திரம், யந்திரம், பூஜை, ஹோமம் எல்லாம் முடுக்கிவிடப்பட்டன.

இரவு வந்தது. உறங்கவும் பீதியாயிருந்தது; விழித்திருப்பதும் கடினமாயிருந்தது.  படுத்துப் புரண்டதுதான் மிச்சம். என்னதான் ராஜாங்க ரஹஸ்யம் என்று இருந்தாலும் தகவல் கசியலாயிற்று. முதலில் அந்தப்புரத்திலும் பின்னர் எந்தப்புறத்திலும் அரண்மனைக்கு வெளியிலும் மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள், 

“மன்னனுக்கு சித்தபிரமை ஏற்பட்டுவிட்டது; மறை கழன்றுவிட்டது. ”

எப்படி இருந்த மன்னன், வேதாந்த விசாரங்களிலும் பண்டிதர்களுக்கு ஈடாக வாதம் செய்துகொண்டிருந்தவன் இப்படியாகிவிட்டானே! ஒரு முறை தூங்கி எழுந்தாலே எது கனவு எது நினைவு என்ற தெளிவு பிறந்து விடும் என்ற அவர்களின் ஆசை நிராசை ஆகிவிட்டது.

அங்காடி வழியே போய்க்கொண்டிருந்த குரு அஷ்டாவக்ரர் இது பற்றி கேள்விப்பட்டார்.

என்ன நடந்திருக்கும் என்று ஒரு கணத்தில் ஊகித்துவிட்டிருந்தார்.  அரண்மனைக்குள் நுழைந்த அவரை மன்னன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து அமரச் செய்தான். தெளிந்த மனம் உடையவர்களுக்கே சித்தாந்தமும் அதை விட வேதாந்தமும் புரிந்துகொள்ள மிகக்கடினமானவை. அப்படி இருக்க, இப்படி சித்தம் பிரமித்து போன மன்னனிடம் அவர் என்ன செய்ய முடியும், என்று ஒரு புறம் அவர்கள் மிகுந்த அவநம்பிக்கையோடு இருந்தாலும், எப்படியாவது சரியாகிவிடாதா என்ற நப்பாசையும் இருந்தது.

                                      
                                                                                       நன்றி இணையம், கீதா

மன்னன் திருவாய் மலர்ந்து அவரிடமும் கேட்டான், “அது நிஜமா அல்லது இது நிஜமா?”

பெரிய ஹாஸ்யத்தை க்கேட்டது போல அவர் விழுந்து விழுந்து சிரித்தார். 

மன்னன் விடுவதாக இல்லை; மறுபடியும் அதையே கேட்டான். சிரிப்பை நிறுத்திவிட்டு அவர் சொன்னார்,

“இரண்டும் நிஜமில்லை.”

இப்போது சுற்றி இருந்த அனைவருக்கும், ‘குருவுக்கும் சித்த பிரமையோ’ என்று சந்தேகம் ஏற்பட்டுவிட்டது!

“அப்படியானால், அதுவும் நிஜமில்லை இதுவும் நிஜமில்லை என்றால் பின் எதுதான் நிஜம்?”

“ஜனகா, நீ ‘அது’ என்று சொல்கிறாயே, அந்த அது இப்போது இங்கு இருக்கிறதா?“

“இல்லை".

"அப்படியானால், அது நிஜமில்லை. நீ ‘இது’ என்று சொல்கிறாயே, இந்த இது அப்போது இருந்ததா?"

“இல்லை"

"அப்படியானால், இதுவும் நிஜமில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அது இப்போது இருக்கிறதா"

“ஆழ்ந்த உறக்கத்தில் எனக்கு என் உடம்பும் இந்த உலக
முமே இல்லையே!”

"அப்படியானால், அந்த ஆழ்ந்த உறக்க நிலையும் நிஜமில்லை. ‘அது' நடந்தபோதும், இப்போதைய 'இது' நடக்கின்றபோதும், 'அது'வுமில்லாமல் 'இது'வுமில்லாமல் ஆழ்ந்து உறங்கும்போதும் ஒரே ஒரு முறையோ மீண்டும் மீண்டுமோ எப்படியாயினும் போவதும் வருவதுமான 'எது'வும் உண்மைப் பொருளாக, நிஜமானதாக இருக்கமுடியாது.”

“எல்லாமே பொய்யாய் இருந்தாலும் ஏதோ ஒன்று உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா குருவே?  பகல்/இரவு, ஆண்/பெண், வெண்மை/கருமை என்பதுபோல இயற்கையில் எல்லாமே இரட்டைகளாகத்தானே இருந்தாக வேண்டும்? நிஜம், சத்யம், உண்மை என்று ஒன்று இருந்தால்தானே அசத்தான பொய்யும் இருக்க முடியும்? “

"எல்லாமே பொய் என்று சொல்லவில்லையே? எதையும் பார்க்க முடியாத கும்மிருட்டாய் இருந்தாலும் உனக்கு நீ தொலைந்து விடுவதில்லையே! கண் விழித்திருக்கும் நேரமான எதை விழிப்பு, நனவு (ஜாக்ரத்) என்று சொல்கின்றாயோ அதிலும், எதை கனவு (ஸ்வப்னம்) என்று
சொல்கின்றாயோ அதிலும், எதை ஆழ்ந்த உறக்கம் (சுஷுப்தி) என்று சொல்கிறாயோ அதிலும் ஆக மொத்தம் மூன்று நிலைகளிலும் தொடர்ச்சியாக அறுபடாமல் இருந்த ஒரே தொடர்பு ‘நீ’ மட்டும் தான் இல்லையா? மூன்றிலும் நீ இருந்தாயே. மூன்றையும் அனுபவித்தவன் நீயே அல்லவா?  சங்கிலி, வளையல், ஒட்டியாணம் என்று வேறு வேறு பெயர்களில், வடிவங்களில் (நாம ரூபம்) செய்து போட்டுக் கொண்டாலும் அவற்றின் உள்ளுறையும் உண்மைப் பொருளான தங்கம் ஒன்றுதானே! உலோகத்தை எடுத்து விட்டால் சங்கிலியோ வளையலோ ஒட்டியாணமோ இருக்க முடியாது அல்லவா? உருவமும் வடிவமும் வெறும் மாயத் தோற்றங்களே!  இப்படி, என்றும் எதிலும் மாறாது இருந்த, இருக்கின்ற, இருக்கப் போகும் உள்ளுறையும் உண்மைப்பொருளான நீ மட்டுமே நிஜம். கனவிலும் நனவிலும் உன்னுடைய வயது மாறக்கூடும். உருவங்கள் மாறக்கூடும், உடைகளும் மாறக்கூடும், ஆனால் எந்த உருவத்தில் இருந்தாலும் எந்த உடையில் இருந்தாலும், வயது ஏறிக்கொண்டே போனாலும், நீ நீதானே!  உன்னைத்தவிர வேறு நிஜம் ஏதும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை.“

“ஒரு ஐயம், குருவே. நான் என்பதில் என் உடைமைகளும் அடக்கம்தானே? ஏனெனில்,  என்னிடமிருந்து என் உடமைகளான பெயர், பதவி, புகழ், ராஜ்ஜியம், மனைவி, மக்கள்,  உணர்ச்சிகள், எண்ணங்கள், கொள்கைகள், அபிப்ராயங்கள், விருப்பு வெறுப்புகள், அகந்தை, பணிவு முதலிய குணங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டால், ‘நான்’ என்று எதுவும் மிஞ்சாதே?!"

“மிஞ்சிய ஒன்றுண்டு, ஜனகா! அது மட்டுமே நீ!! மீண்டும் சொல்கிறேன். ‘நீ‘ உண்மை; ஆனால் ‘உனது’ என்று சொல்லக்கூடிய எதுவும் உண்மையில்லை! தான் என்பதான 'தன்மை' மட்டுமே உண்மை. முன்னிலை, படர்க்கைகள் யாவும் பொய்.” 

ஒரு குகை பல்லாயிரம் ஆண்டுகளாக இருண்டிருந்தாலும், விளக்கேற்றிய நொடியிலேயே அத்தனை கால இருளும் விலகி விடுகிறது அல்லவா? அதுபோல, ஒரு நொடியில் ஜனகரின் கண் திறந்தது. தன்னை விளக்க இன்னொரு விளக்கு தேவைப்படாத சூரியனைப்போல, தானாய் ஒளிரக் கூடிய, எதன் ஒளியில் உலகின் அத்தனை அறிவையும் அறிந்து கொள்கிறோமோ, அந்த சைதன்ய போதம் அடைந்தார். ஒரு மணி நேரம் முன் சித்தபிரமையோ எனும்படி நடந்துகொண்டவர், இப்போது சித்தம் பற்றிய தெள்ளிய ஞானம் கொண்டார்.  பின்னர், ஆத்ம ஞானமும் அடைந்து ஜனகரிஷி என அறியப்பட்டார்!

இறுதி வரை, விதேஹ நாட்டின் அரச கடமையை விட்டுவிடாமல், (மருமகன் ராமன் காட்டுக்குப்போயிருந்தபோதும், பின்னர் திரும்பி வந்து அரசாண்டபோதும்) கோசல நாட்டிற்கும் தக்க ஆலோசகராக இருந்தார். அதனால், ஏற்கெனவே ஞான யோகத்தில் சிறந்த ஜனகரை, பகவான் கிருஷ்ணனே கீதையில் (3:20) கர்மயோகிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக
சொல்லலாயிற்று!!



* வேதாந்த மரபில் வழங்கும் ஒரு செவி வழிக்கதையை ஒட்டி எழுதப்பட்டுள்ளது.

28 கருத்துகள்:

  1. மிக்க நன்றி, வாத்யாரே!
    பிரயாணம், சுகவீனம் இன்ன பிறவற்றுக்கும் இடையே, நேரம் ஒதுக்கி அருமையாக வெளியிட்டிருக்கிறீர்கள். பொருத்தமான படங்களுக்கு சிறப்பு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க TVM... வணக்கம்.

      நன்றி, நல்லதொரு சிறுகதையை அளித்திருப்பதற்கு.

      நீக்கு
  2. அட! திருவாழிமார்பர் எழுதிய கதையா!

    தொடக்கமே சுவாரசியம்....

    Grade guaranteed

    வருகிறேன் பின்னர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. படங்கள் எடுத்துக் கொடுத்து உதவியதற்கு நன்றி. நான் எடுத்த படங்கள் எனக்கே திருப்தி இல்லாமல் இருந்தன.

      நீக்கு
  3. அசாத்திய எழுத்து நடை. கட்டிப் போடுகிறது, திவாமா!

    நானும் கொஞ்சம் பிரமை பிடித்து இருக்கிறேன்!!!!

    கொஞ்சம் தெளிந்து வருகிறேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அதேதான்.  எனக்கே எனக்கா என்று பாடுவது போல எங்களுக்கே எங்களுக்கா இந்தக் கதை என்று வியந்து போனேன்.

      நீக்கு
    2. உங்கள் இருவரின் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
      திருமதி ஸுநயனா ஸீரத்வஜன் நான் எதிர்பார்த்ததை விட படத்தில் சற்று இளமையாகவே தென்படுகிறார்கள்! :-) படங்களுக்கு நன்றி கீதா ரெங்கன்!

      நீக்கு
  4. ஒரு சிறுகதையில் ஸ்ரீமத் பாகவதம் முழுவதையும்
    படித்த effect!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, கௌதமன்ஜி! பாகவதத்தின் கால் தூசு பட்டாலே பெருமைதான்! தங்கள் பாராட்டு உயர்வு நவிற்சி; ஆயினும் ஏற்றுக்கொள்கிறேன்! Thanks again!

      நீக்கு
  5. ‘சர்வம் மாயாமயம்’ என்கிறார்களே;//

    உண்மை....கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், நம்முள் உணர்வதே மெய்!!!!!!!!

    இப்ப கூட பாருங்க இந்த ஹைடெக் யுகத்தில் மெய்நிகராகிக் கொண்டிருக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......

    காலையில் ஓர் நல்ல கதை படித்தேன். நன்றி. இப்போது தான் ஒரு சிறுகதை தொகுப்பும் படித்து முடித்தேன்.... இன்றைய காலை இப்படி சிறுகதைகளுடன் தொடங்கி இருக்கிறது.

    நல்லதே நடக்கட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ன்றைய காலை இப்படி சிறுகதைகளுடன் தொடங்கி இருக்கிறது.//

      ஆஹா...

      வாங்க வெங்கட்.. வணக்கம்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கமும், நன்றியும், வெங்கட்ஜி!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை மிக அருமையாக இருந்தது. தெளிவான ஓடை நீரைப்போன்ற சகோதரரின் எழுத்தாற்றல் மிக கவர்ந்தது.

    /நீ‘ உண்மை; ஆனால் ‘உனது’ என்று சொல்லக்கூடிய எதுவும் உண்மையில்லை! தான் என்பதான 'தன்மை' மட்டுமே உண்மை. முன்னிலை, படர்க்கைகள் யாவும் பொய்.” /

    அருமையான வரிகள். கதையை ரசித்துப் படித்தேன். அருமையாக கதையை எழுதிய சகோதரர் திருவாழிமார்பன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பொருத்தமான ஓவியங்களில் தன் பங்கை நிறைவேற்றிய சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. /// எல்லாவற்றையும் நீக்கிவிட்டால், ‘நான்’ என்று எதுவும் மிஞ்சாதே?!///

    அங்கே தான் பிரச்னை...
    வெங்காயத்தின் தோல் அவ்வளவு
    எளிதாக உரிபடுவதே இல்லை..

    பதிலளிநீக்கு
  10. அஷ்டவக்ர முனி, ஜனகர் - பரிச்சயம் ஆனால் இதன் சம்பந்தப்பட்ட புராணக் கதையை அறிந்திருக்கவில்லை.

    உங்கள் கற்பனை அபாரம்.

    //'தன்னைப்பற்றி தான் கொண்டிருந்த பிம்பம் உடையும் தருணம் இது. இதுவும் ஒரு பாடம்தான் போலும்'//

    இது மிகப் பெரிய பாடம்.

    நம் எல்லோரது வாழ்க்கையிலும் ஒரு தருணத்தில் அல்ல பல தருணங்களில் இந்தப் பிரபஞ்ச சக்தி அறிவுறுத்தும் சம்பவங்கள் இதைச் சொல்லிப் போகும். நம் அகக் கண் விழித்திருந்தால் முதல் அனுபவத்திலேயே உணர்ந்துவிடலாம். இல்லை என்றால் அடுத்து...இல்லையா பல நடந்தாலும் ம்ஹூம் கேஸ்தான்.

    அருமையான வரி.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வெங்காயத்திற்கே இத்தனை அடுக்கு என்றால்!?

    க்ருஷ்ணாய நம...

    பதிலளிநீக்கு
  12. இன்று தத்துவ வாரம்...
    வாழ்க வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. ​சோ வின் ஆமாம் = இல்லை யை படித்த திருவாழி ரமணரின் ஆத்ம விசாரத்தில் ' நான் யார் ' என்று இறங்கி கீதையின் 'மாயை' என்பதை அனுபவித்து பகவான் ராமகிருஷ்ணரின் அறிவுரையால் 'நேதி நேதி' என்று ஒதுக்கி கடைசியில் மிஞ்சும் 'நானை' அறிந்து ஜனகர் ஞானம் பெறுவதாக கதையை எழுதியிருக்கிறார்.
    இந்த கதை இங்கு எ பி யில் வெளிவரத் தகுதி உடைய ஒன்றல்ல. தீராநதி போன்று குழப்பும் பத்திரிக்கைகளில் வெளியிடும் தகுதி பெற்றது.
    வாசகர்கள் சோ வை தொடர்ந்து கீழ்ப்பாக்கத்திற்கு செல்லாமல் இருந்தால் சரி.
    கதையை எழுதிய திருவாழிக்கு பாராட்டுக்கள். கொஞ்சம் மெனக்கெட்டு சுருக்கியிருக்கலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  14. அஷ்டவக்ரர் ஜனகரை சந்தித்த இந்த விஷயத்தை ஏற்கனவே படித்திருந்தாலும், அதை ஒரு அழகான சிறுகதையாக்கிய உங்களின் திறமையை போற்றுகிறேன். அஷ்டவக்ர கீதை என்று ஒன்று உண்டு.

    பதிலளிநீக்கு
  15. எல்லாம் அவன் என்றால்
    வெங்காயமும் அவன் தானே!..

    பதிலளிநீக்கு
  16. இன்பமும் துன்பமும்
    உள்ளானே இல்லானே!...

    பதிலளிநீக்கு
  17. அவன் இயக்குகின்றான்
    நாம் நடிக்கின்றோம்...

    இதில் வெங்காயம் என்ன
    வெங்காயத் தோல் என்ன??..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!