நான் லண்டனில் ‘நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தில் கண்டவற்றை புகைப்படத் தொகுப்பாக உங்களுடன் கடந்த இரண்டு வாரங்களாகப் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதன் இறுதிப் பகுதி இந்த வாரம்.
இந்த வாரத்தில் ஆரம்பத்தில் சில பல படங்கள் தண்டனை சம்பந்தப்பட்டது. இப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக இவற்றைத் தொகுத்து அங்கு காட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.
தற்காலங்களில் இந்த மாதிரி கொடூர தண்டனைகளெல்லாம் கிடையாது. சௌதியில் மாத்திரம் இன்னமும், பொதுவெளியில் குற்றவாளியின் தலையை வெட்டும் தண்டனை இருக்கிறது. அமெரிக்காவிலும் பிலிப்பைன்ஸிலும் கொடூர கொலையாளிக்கு மின்சாரத்தினால் கொல்லும் வழக்கம் இன்னும் இருக்கிறது. நம்ம ஊரில், ரொம்ப நாளாக ஆராய்ந்து, கொலைக்குற்றம் செய்தான் என்று தெரிந்தாலும் பலவித வாய்ப்புகள் (மேல் கோர்ட், அதற்கும் மேல் கோர்ட் என்று பல படிகள் பிறகு கருணை மனு…..) கொடுத்து பிறகு, மக்கள் எல்லோரும் அவன் செய்த குற்றத்தை மறந்த பிறகு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவாங்க. அரபு தேசங்களில் குற்றம் செய்தால் தண்டனை நிச்சயம். அதிலும் கொலைக்குற்றம் செய்தால் உடனே சிறை, பிறகு கோர்ட் நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு நிச்சயம் உயிரை எடுத்துவிடுவார்கள். ஜாமீன், சுறாமீன் போன்ற தகிடுதத்தங்களுக்கு அங்கு இடமே கிடையாது.
சாலையில் வாகனத்தில் செல்லும்போது யார் மீதாவது மோதி, இறப்புக்கு அல்லது அங்கஹீனத்துக்குக் காரணமாக ஆகிவிட்டால், அந்த நிமிடமே சிறைதான். அவர்கள் இஸ்லாமிய சட்டப்படி, ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. இறந்தவர்களின் மிக நெருங்கிய உறவினர் அல்லது பாதிக்கப்பட்டவர் நஷ்டஈடு பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிக்கலாம் (நஷ்ட ஈடு பெறாமலும் அதனைச் செய்யலாம்). அப்போதான் குற்றவாளி தப்பிக்கமுடியும். மற்றபடி, நான் இவ்வளவு பெரியவன், பணக்காரன், எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்ற கதையெல்லாம் அங்கு நடக்காது.
பிறகு ஒரு சந்தர்ப்பத்தில், நான் துபாய் சென்ற புதிதில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை எழுதுகிறேன்.
ஐரோப்பாவிலும் ஸ்பெயினிலும் அதிகமாகப் பேசும் (வளவளப்பு இல்லை, கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரத்தை எதிர்த்துப் பேசுபவர்கள்) பெண்களின் முகத்தில் இத்தகைய முகமூடிகள் மாட்டிவிடப்பட்டன. வாய்ப்பகுதியில் இரண்டு கத்திபோன்ற கம்பிகள் செல்லும். நாக்கை இப்படியும் அப்படியும் அசைக்கமுடியாது. காது நீண்ட வடிவமாகச் செய்திருப்பதன் காரணம், அவர்களை கழுதைகள் என்று குறிப்பிட.
சீனாவில் குற்றவாளிகளைத் தண்டிக்கும் முறை. இதனை நரக நெருப்புத் தண்டனை என்று சொல்லலாம். குற்றவாளியை இரும்புத் தூணில் இப்படி படத்தில் இருப்பதுபோலக் கட்டிவைத்துவிட்டு, கீழே இரும்பு அடுப்புக்குள் நெருப்பை மூட்டுவது. தூண் எவ்வளவு சுடும் என்பதைக் கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான். (அட… அவங்கள்லாம் நாகரீகமற்றவர்கள். கொடூரமானவர்கள். இந்தியாவில் அப்படியெல்லாம் கிடையாது என்று நினைப்பவர்களுக்காக. நம் தமிழகத்தில் ஈர மாட்டுத் தோலை குற்றவாளிகளின் உடம்புடன் ஒட்டி நன்றாகக் கட்டிவிடுவார்கள். மாட்டுத் தோல் காயக் காய மனிதத் தோலை உரித்துவிடும். நம்ம அப்பா கூட, தோலை உரிச்சுப்புடுவேன் என்று நம்மை மிரட்டியிருப்பாரே)
குற்றவாளிக்குத் தண்டனை தரும்போது, அவன் கண்கள் இறக்கும் தருவாயில், யார் நம்மைத் தண்டிக்கிறார்கள் என்று தெரியக்கூடாது என்பதற்காக இத்தகைய முகமூடிகளை தண்டனையை நிறைவேற்றுபவர்கள் அணிந்துகொள்வார்கள். இது 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகமூடி. நம்ம ஊரில் கொலைக் குற்றவாளிக்கு முகமூடியை அணிவித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
பெண்களைத் தங்கள் உடைமைப் பொருட்களாகக் கருதியதால் மேல் நாட்டில் உபயோகப்படுத்தப்பட்ட பூட்டுகள். பொதுவாக இவற்றை தங்கள் மனைவிக்கு உபயோகித்தவர்கள் போர் வீரர்கள், தளபதிகள். இது பற்றி ஒரு நகைச்சுவை படித்திருக்கிறேன். இங்கு சொன்னால், சென்சார் செய்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்தியாவில் படையெடுத்துவந்த முகலாயர்கள் தங்கள் அரண்மனை அந்தப்புறத்தில் பாதுகாப்புக்காக நிறுத்திய வீரர்கள் அனைவருமே திருநங்கைகள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அரச இரத்தத்தில் வேறு கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை அது.
16ம் நூற்றாண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கான இரும்பு முள் செருப்பு இது. பாதத்தை அசைத்தால் ஆயுள் முழுவதும் நடக்க முடியாதபடி பாதம் பாழ்பட்டுவிடும். தூக்கி நடப்பதற்கும் முடியாத கனமான இரும்புச் செருப்புகள் இவை.
குற்றவாளிகளைக் கொலை செய்யும் இந்த எலெக்ட்ரிக் சேரைக் கண்டுபிடித்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பல் வைத்தியர். ஆல்ஃப்ரட் 1881ல் கண்டுபிடித்த இந்த மின்சார நாற்காலி தண்டனை, அமெரிக்காவிலும் மற்றும் பிலிப்பைன்ஸிலும்தான் உண்டு. ஆமாம்.. கொடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தருவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
பல வீடுகளுக்கே மின்சாரம் இல்லை. இதுல ஆளைக் கொல்ல மின்சாரமா?
மங்கோலியன் பட்டினிக் கூண்டு. இதில் அடைக்கப்பட்ட ஒருவர் உயிருடன் வெளியில் வர இயலாது.
தண்டனைக்கு உரிய கருவிகள்லாம் ஓகேதான். ஆனால் தவறு செய்யாத ஒருவனுக்கு இத்தகைய தண்டனைகளைத் தவறுதலாகக் கொடுத்துவிட்டால்? வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று ஓடும் உலகமல்லவா இது.
சிறைத் தண்டனைக் கைதிகளை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு இந்த கழுத்து அமுக்கியை உபயோகித்தார்கள். இதனை சிறைக்கைதிகளின் கழுத்தில் மாட்டிவிட்டால், அவனால் ஓடிவிட முடியாது.
தண்டனைக் கருவிகளைப் பார்த்து மனசு உடைந்து போயிருப்பீங்க. இங்கிலாந்துல குற்றவாளிகளின் தண்டனைக்கு இன்னும் பலவித முறைகள் வைத்திருந்தாங்க. அவற்றில் சிலவற்றை நான் லண்டன் டவர் சென்றிருந்தபோது பார்த்தேன். அவைகளை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன். இனி வேறு படங்களைப் பார்ப்போம்.
ஒலிம்பிக் போட்டிகளைத் துவக்கும்போது உபயோகப்படுத்திய வெவ்வேறு டார்ச்சுகள். பார்க்க சட் என்று வாட்கள் போலத் தோற்றமளிக்கின்றன. இதனைப் பார்க்கும்போது, குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி அவர்கள் ஒரு ஒலிம்பிக் போட்டியைத் துவக்கி வைக்க இத்தகைய டார்ச்சைக் கையிலேந்திக்கொண்டு வந்தபோது அவருடைய கை கட்டுப்படுத்த முடியாமல் ஆடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
டாய்லெட் பேப்பர் கம்பெனி, தன் விளம்பரத்திற்காக, டாய்லெட் பேப்பரை உபயோகித்து திருமண உடையைத் தயாரிக்கும் போட்டி வைத்தது. அதற்காக வந்த சில உடைகள். இவை எல்லாமே டிஷ்யூ பேப்பரினால் செய்த உடைகள். (ரொம்ப அழகாத்தான் இருக்கிறது. நான் உடைகளைச் சொன்னேன். ஆமாம் இவங்க வெளில நடந்து போகும்போது பெரிய மழை வந்துவிட்டால் என்ன செய்வாங்க? இவங்க என்ன செய்வாங்கன்னு எனக்குச் சொல்லத் தெரியலை. ஆனால் ஆண்கள்லாம் உடனே ரோட்டுக்கு வந்துடுவாங்க என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்)
நான் ரொம்ப குண்டா இருக்கேன் என்ன பண்ணறதுன்னு யாரும் புலம்பாதீங்கப்பா. கண்ணதாசன் சொன்னதுபோல, உனக்கும் மேலே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
1926ல் பிறந்து 32 வருடங்கள் வாழ்ந்த, மிசௌரியைச் சேர்ந்த ஏர்ல் ஹூக்ஸ் என்பவர், 6 வயதிலேயே 92 கிலோவாக இருந்தாராம். பிறகு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து 485 கிலோவை அடைந்தாராம். நினைக்கவே நடுங்குகிறது. இதுபோல குண்டாக இருந்த ஒரு பெண்மணியின் உருவமும் பார்த்தேன். இங்கு பகிரவில்லை.
தந்தத்திற்காக யானையைக் கொல்லும் வழக்கம் காலம் காலமாக இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான தந்தங்களைக் கொண்ட ஆண் யானையின் எலும்புக்கூடு. தும்பிக்கை ஆரம்பிக்கும் இடத்தில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட துளை இருக்கிறது. தோல் பொருட்கள், தந்தம் மற்றும் விலங்குகளைக் கொன்று அதன் உறுப்புகளை உபயோகித்துச் செய்யப்படும் ஆடம்பரப் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கு இல்லாமலா போய்விடும்? Fur எனப்படும், கதகதப்புக்காக முயல் ஆடு போன்ற பல விலங்குகளிடமிருந்து பெறப்படும் முடியினால் தயாரிக்கப்பட்ட உடையை அணிபவர்கட்கும் அந்தக் கதிதானே.
அமேசான் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருக்கு இந்த நெக்லெஸ்தான் விலையுயர்ந்த ஆபரணம். ஆமாம் அதில் என்ன ரத்தினங்களைக் கோர்த்திருக்கிறார்கள் என்று நினைக்கறீங்க? மனுஷப் பற்கள் 37. அது சரி. கீழே என்ன, காய்ந்த அத்திப்பழ மாலையான்னு யோசிக்கிறீங்களா? இது சாலமன் தீவுகளில் வாழ்ந்த ஒருவித பறவையின் இறகினால் ஆன 3 மீட்டர் சுற்றளவுள்ள பெல்ட். இதனைப் பரிசாகக் கொடுத்து திருமணத்திற்கு மணமகளைப் பெறுவார்கள். காலம் எவ்வளவு மாறிவிட்டது பாருங்க. இப்போ பரிசா எதை வேணும்னாலும் கொடுக்கலாம் என்று நினைத்தாலும் (அவற்றில் மானம் வெட்கம் சூடு சுரணையும் உண்டா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை) திருமணத்திற்குச் சம்மதம் சொல்லும் பெண்கள் குறைந்துவிட்டார்கள்.
இறந்தவர்களைப் புதைக்க விதவிதமான சவப்பெட்டிகள் உண்டு. ஆனால் கழுகு போன்ற சவப்பெட்டிகள் கானா நாட்டில், சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ளவர்களுக்கு மாத்திரம்தானாம்.
இறப்பிலும் சமூக அந்தஸ்து குறுக்கே வரும். இது எல்லா தேசத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான். பிலிப்பைன்ஸில், முன்பு, இறந்தவர்கள் சமூக அந்தஸ்தோடு இருந்திருந்தால், அவர்களது முகத்தில் தங்கத்தினாலான மெல்லிய முகமூடி அணிவித்துத்தான் புதைப்பார்கள். (கண் பகுதி திறந்திருக்கும்) சில நேரங்களில், கண், மூக்கு, வாய் போன்றவற்றிர்க்கு மாத்திரம் தங்க ரேக்குகளால் மூடியிருப்பாங்க. அப்படிச் செய்தால் கெட்ட ஆவிகள் இறந்தவர்களின் உடலில் புகாதாம். கீழே கொடுத்துள்ள முகமூடி உதாரணத்திற்குக் கொடுத்திருக்கிறேன். இரண்டாவது படத்தில் உள்ள மாதிரி முகமூடி பிலிப்பைன்ஸ் மியூசியத்தில் பார்த்தேன். ஆனால் அந்தப் பகுதிகளில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டின் இறந்தவர்களுக்கான தங்க முகமூடிமேலே உள்ளது இமயமலையில் வாழ்ந்த திபெத்தியர்கள் உபயோகித்த மண்டையோட்டுக் கிண்ணம். இறந்தவர்களின் மண்டையோடுகளை உபயோகித்து அலங்காரமாகச் செய்யப்படும் கிண்ணத்தை புனிதச் சடங்குகளின்போது மது போன்றவற்றை அருந்த உபயோகிப்பார்களாம். அது இறந்த முன்னோர்களின் ஆசியைக் கிடைக்கச் செய்யுமாம். (உடனே இதை நம்பி உங்க முன்னோர்களின் மண்டையோடுகளைத் தேடிக் கிளம்பிடாதீங்க. நம்மிடம் உள்ள பொதுவான வழக்கம், சரம உடலை எரித்துவிடுவதுதான்)இதை எழுதும்போது என் வாழ்வில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வருது. நான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நினைவுக்கு புகைப்படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லியிருக்கிறேன். என் அப்பா மறைந்ததும், (இரவு 9 மணிக்கு இறந்தார்) மறுநாள் காலை 11 மணிக்கு நான் இறுதிச் சடங்குகளுக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன். என் அப்பாவின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்ளணும் என்று நினைத்தேன். உறவினர் ஒருவர் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிட்டார். அதை நினைத்து இப்போதும் எனக்கு வருத்தம்தான்.
ஜப்பானியர்கள் உபயோகித்த ரெயின் கோட். இரண்டாவது படத்தில் உள்ளது நாகாலாந்து பழங்குடியினர் உபயோகித்த எலும்பு மாலை/பெல்ட். கொலை செய்த எதிரியின் எலும்பை எடுத்து அலங்காரப் பொருளாக்கி அந்த பெல்டில் கோர்த்துக்கொள்வார்களாம். எத்தனை அலங்காரப் பொருட்கள் இருக்கிறதோ அத்தனை பேரை அவர்கள் கொன்று தின்றிருக்கிறார்கள் என்பது பொருள். உங்களுக்குத் தெரியுமா? இந்த நாகாலாந்து இனப் பழங்குடியினரை யாருமே (வெளியாட்கள்) போரிட்டுவெற்றதில்லையாம்.
இந்தப் பகுதியில், முடிந்தால் தைரியமாக இந்தப் பாலத்தைக் கடந்து செல்லுங்கள் என்று எழுதியிருந்தது. அதனைச் சுற்றி அமைக்கப்பட்ட கூரையால், தலை சுத்தி விழாமல் இதனைக் கடப்பது கடினம்.
இது மிரர் மேஸ் (mirror maze) எனப்படும் பாதை. ஒளிபுகா கண்ணாடிகளாலானது. ஒவ்வொரு முக்கோண அறையிலும் மூன்று கதவுகள் இருக்கும். இந்தப் பகுதியில் நுழைந்தவுடன், எதிர்படும் இரண்டு கதவுகளில் ஏதேனும் ஒன்றைத் திறந்துகொண்டு செல்லவேண்டும். இப்படி பல அறைகளில் தட்டுத் தடுமாறி கடைசியில் வெளியே வரவேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இது இருக்கும். எனக்குமே மிகவும் பிடித்திருந்தது.
கண்ணாடி அறையில் மூன்று கதவுகள் (பிரதிபலிக்கும் கண்ணாடி) இருப்பது தெரிகிறதா?
இதைத் தவிர, லேசர் ரேஸ் என்ற பகுதி இருந்தது. அங்கு பல கோணங்களில் லேசர் ஒளி வந்துகொண்டிருந்தது. அதன் மீது படாமல் தாண்டி அந்த இடத்தைக் கடக்கவேண்டும். சில இடங்களில் ஒளியைத் தவழ்ந்துதான் கடக்கணும். ஆனால் நான் அதனை முயற்சிக்கவில்லை.
சாலைகளில் ஓட்ட முடியுமென்றால் இத்தகைய சிறிய கார்கள் நமக்குப் போதாதோ?
சென்ற மூன்று வாரங்களாக ‘நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தில் நான் பார்த்த சிலவற்றைப் படங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இவை உங்களுக்குப் புதியனவாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
எப்போதும் கோயில், சிற்பங்கள், யாத்திரைகள் என்று எழுதினால், படிப்பவர்களுக்கும் போரடிக்க ஆரம்பித்துவிடும். அதனால் இடையிடையே இந்த மாதிரி குறுந்தொடர்களையும் அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். உங்களுக்கும் புதிதாக் ஒன்றைத் தெரிந்துகொண்ட மாதிரி இருக்கும்.
மீண்டும் இன்னொரு தொகுப்பில் சந்திப்போம்.
நம்பிட்டேன், நெல்லை. வரேன்...கொஞ்சம் அப்பால.
பதிலளிநீக்குவேலைகள், சிந்தனைகள் கூடிடுச்சா இல்லை நான் ஸ்லோடவுன் ஆகிட்டேனா தெரியலை...நேரம் துரத்துகிறது.
வரேன் ஒவ்வொண்ணா பார்க்க...
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா... அதிசயமாக காலையிலேயே வந்திருக்கீங்களே. நீங்கதானா
நீக்கு