10.12.25

AI ஆல் உருவாக்கப்பட்ட பெண்கள் எல்லோருமே அழகாக இருக்கிறார்களே! அப்போ. AI ஒரு ஆணா?

 

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 


ஒரு ரிசெப்ஷன் உணவுக்கு இப்படி விஸ்தாரமாக ஏகப்பட்ட ஐட்டங்கள் கொடுப்பது ஆடம்பரமா? இல்லை விருந்தினர்களின் உடல் நலனைக் கெடுக்கவா? இல்லை வெற்று பந்தாவா? இல்லை சாப்பிடுபவர்களுக்கு வயிறு இல்லை அதற்குப் பதிலாக வண்ணான் சால்தான் இருக்கிறது என்ற நினைப்பா?

# ஆடம்பரம் மட்டுமே.

வர வர திருமண விருந்து ஏன் ரொம்பவே ஆடம்பரமாகவும், கேடரர்கள் மாத்திரம் அதன் மூலம் பெரும் பயன் அடைவதாகவும் இருக்கிறது?  முன்பு பஞ்ச காலத்தில் இருந்ததுபோல அரசின் கட்டுப்பாடு தேவையா இல்லை, கேடரர்களுக்கு 90 சதம் வரி விதிக்கணுமா?   

# காசு இருக்கிறது, ஆடம்பர ஆசையும் இருக்கிறது. வாரி இறைக்காமல் வேறென்ன செய்வார்கள் ? அரசிடமே ஏராளமான தவறுகள் இருக்கும் இந்த காலத்தில் அரசு வந்து என்ன செய்துவிட முடியும் ? கேடரர்களை சரியாக மதிப்பிட்டு, சரியான வரி விதித்து, அதைப் பெறுவது மிகக் கடினம்.

3. திருமணம் என்பது எல்லோரும் சந்தோஷப்படும் ஒரு நிகழ்வா இல்லை, புகைப்படம் எடுப்பவர், கேடரர், மண்டபம் வைத்திருப்பவர், மேடை அலங்காரம் செய்பவர் போன்றவர்களை பணக்காரர்களாக ஆக்கும் ஒரு நிகழ்வா?   

4.  திருமணத்துக்கு அநாவசியமாகச் செய்யும் செலவை, அப்படியே பெண்ணுக்கோ பையனுக்கோ பணமாகக் கொடுத்துவிட்டால் அது அவர்களது புது வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா இருக்காதா?  

5.  திருமண நிகழ்வுக்கு புகைப்படக்காரர்கள் செலவாக பல லட்சங்கள் செலவழிப்பதற்குப் பதில், நான்கு ஏழை மாணவர்களிடம் செல்ஃபோன் கொடுத்து படங்களை எடுத்துத் தரச் சொல்லி அதற்குப் பதிலாக அவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பது அவர்களுக்கு உதவிகரமாக இருக்குமா இருக்காதா?

# 3, 4, & 5. கேட்க நன்றாக இருக்கிறது செய்யத்தான் ஆள் இல்லை. ஓரளவுக்கு மேல் வசதி வாய்ப்புகள் அதிகமாகி விட்டதும் கூட இதற்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். நல்லது என்று நாம் ஒன்றை செய்ய முனைந்தால் அதில் நம்மை ஏமாற்றுபவர்கள் இருப்பதையும் கண்டு மனம் வெதும்பிப் போய் விடுகிறது.‌

கே. சக்ரபாணி சென்னை 28:

நம் நாட்டில் இருந்து  ஜப்பான்,  சிங்கப்பூர்  , அமெரிக்கா  , துபாய். ஆகிய வெளிநாடுகளுக்கு  சென்று   அங்குள்ளவற்றை  ரசித்துவிட்டு  வருகிறார்களே  தவிர  அங்கெல்லாம்  உள்ள  discipline  ஐ  இங்குவந்தவுடன்  எவ்வளவு. சதவிகிதம் பேர்   கடைபிடிக்கிறார்கள்? 

# பார்த்ததிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு திருந்துவது என்று ஒரு மனப்பான்மை இருக்குமானால் நம் நாட்டில் பார்த்து திருந்துவதற்கு எவ்வளவோ இருக்கின்றனவே. வெளிநாடுகளுக்குப் பயணம் போவது,  உல்லாசத்திற்காக மட்டுமே. அதுதான் உல்லாசப் பயணம் ஆயிற்றே.‌

என்னதான்   பிள்ளைகள்  பரீட்சையில்  சரியாக  விடைகளை  எழுதினாலும்  அவர்களின். விடைத்தாள்களை. திருத்தும்போது  ஆசிரியர்களுக்கு  அப்போது  உள்ள  மனநிலை (mood) ம் மார்க்குகள்   வாங்குவதில் ஒரு அங்கம் வகிக்கிறது  சரியா? 

# ஒரு ஊகமாகச் சொல்வதானால், நீங்கள் சொல்வது சரி என்று தான் தோன்றுகிறது . 

 விரைவில் செயற்கை நுண்ணறிவு மூலமாக பரீட்சைத்தாள்களைத் திருத்தும் வசதி வரும் என்று நம்புவோமாக.

 AI ஆல்  உருவாக்கப்பட்ட  பெண்கள்  எல்லோருமே  அழகாக  இருக்கிறார்களே! அப்போ.  AI  ஒரு  ஆணா?

# Artificial என்றாலே செயற்கை. ஆண்களின் அறிவு செயற்கையானது என்று நான் சொல்ல மாட்டேன். பெண்களுக்கு, தான் மட்டுமே அழகு என்றுதான் தோன்றும் என்றும் நான் நினைக்க மாட்டேன்.

& அப்படியா சொல்கிறீர்கள்? இதோ Meta AI உருவாக்கிய பெண்ணைப் பாருங்கள்! 


ஏ ஐ யிடம் எது எப்படி கேட்கிறோமோ, அது அப்படி கிடைக்கும். 'அவளுக்கென்று ஒரு மனம்' போல, 'ஏ ஐ க்கென்று ஒரு மனமோ மூளையோ' கிடையாது! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பாட்டுப் பாட, படம்,வரைய, நடனம் ஆட, மேடைப்பேச்சு, நடிப்பு போன்ற பல நுண் கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, கதை எழுத இப்படிப்பட்ட பயிற்சி எதுவும்  அளிக்கப்படுவதாக தெரியவில்லையே? எ.க.எ. என்று ரா.கி.ரங்கராஜன் ஆரம்பித்தார். ஆனால் எ.க.எ. வுக்கு reach இருந்ததாகத் தெரியவில்லை.

# நல்ல கதை படிப்பதில் இருக்கும் அளவுக்கு ஆர்வம் கதை எழுதுவதில் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். கதை  நன்றாக எழுதுவது சொல்லித் தெரியாத கலையாக இருக்குமோ ? 

ராகிர புத்தகத்தைப் படித்து கதை எழுதுபவர் எண்ணிக்கை பெருகியதாகத்தான் தோன்றுகிறது. ஃபார்முலா கதைகள் நிறைய வருகின்றனவே. குமுதம் கதைகளைப் பார்க்கவில்லையா?

தரையில் இறங்கும் விமானங்கள் கதையில் மாலியின்  புல்லாங்குழல் கச்சேரியைக் பற்றி,"இப்போதே செத்துப் போயிட மாட்டோமானு தோணித்து.." என்று எழுதியிருப்பார்.(நல்ல விதமாகத்தான்) எந்த கச்சேரியாவது கேட்டு அப்படி உணர்ந்திருக்கிறீர்களா?

# விவரிக்க முடியாத அளவுக்கு ஆனந்தப் பரவசம் அனுபவித்தது உண்டு.  " இப்பவே இந்த க்ஷணமே உயிர் விட்டுவிடலாம் " என்று ஏதோ ஜானகிராமன் கதையில் படித்ததுண்டு.  அனுபவிக்கவில்லை. 

(நான் நேரில் கேட்ட ஒரே மாலி கச்சேரி வெகு சாதாரணமாக இருந்தது என் துரதிருஷ்டம். அவரது கடைசி இந்தியக் கச்சேரி). 

& கச்சேரி கேட்பதைவிட வேறு வேலை இல்லை; குடும்பம், குழந்தைகள் இல்லை என்றால், நல்ல கச்சேரி கேட்கும்போது அப்படி நினைக்கலாம்! ஆகவே அப்படி எல்லாம் ரசிக்க எனக்கு வாய்ப்பு இல்லை! 

= = = = = = = = = = = =

படமும் பதமும் 


நெல்லைத்தமிழன் : 

சமீபத்தைய பயணத்தில், கெங்கேரி அருகிலிருந்த ஒரு உணவகத்தில் முள்பாகல் தோசை கிடைக்கும் என்று போட்டிருந்தார்கள்.  இது மிகவும் ஃபேமஸானது.  சிறிய குழிவான தோசைக்கல் (7-8 இஞ்ச் இருக்கலாம்) வரிசையாக இருக்கிறது. அதை நன்கு துடைத்துவிட்டு, தோசை செய்பவர், இறைவனைத் தியானித்ததைப் பார்த்தேன். பிறகு அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, கடாயின் உள்பக்கவாட்டிலும் மாவைப் பரத்திவிடுகிறார். 


சிறிது நேரத்தில் அதன் மீது நந்தினி நெய்யைப் பீய்ச்சியடிக்கிறார் (இங்க பெங்களூர்ல நல்ல பெரிய ரெஸ்டாரண்டுகளில் நெய்யை அளவுக்கு அதிகமாக தோசையில் ஊற்ற அஞ்சுவதில்லை. கலப்படமே செய்யமாட்டார்கள். எனக்குத்தான், இவற்றைச் சாப்பிட்ட உடனேயோ இல்லை ஒரு நாளுக்குள்ளாகவோ மாரடைப்பு வராமல் எப்படி கஸ்டமர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று தோன்றும்). பிறகு ஒரு தட்டைப் போட்டு மூடிவிடுகிறார். 


தோசை முறுகலாக ஆகட்டும். தட்டைப் போட்டு மூடியாகிவிட்டது. கொஞ்சம் காத்திருப்போம்.


வெறும் முள்பாகல் தோசையா? அப்படியே அதன் மீது ஒரு சட்னியைத் தடவி எடுத்துவிடுவோம். மசால் தோசையா? அதன் மீது மசாலை வைப்போம் என்று வைத்துவிடுகிறார். 

படத்தில் தோசை மீது மசாலா தெரிகிறதா? உடனே எடுத்துவிடுவதில்லை. கொஞ்சம் நேரம் காத்திருக்கிறார். 


பார்த்தீர்களா? முறுகலான நெய் சேர்த்த முள்பாகல் தோசை ரெடி.  எனக்கு இதில் Bபாத் தோசை என்று ஒன்று பிடிக்கும். வேறு ஒன்றுமில்லை. முள்பாகல் தோசையின் உள்ளே எலுமிச்சை சாதம் வைத்துத் தருவார்கள், ஆந்திராவில்  எம்.எல்.ஏ பெசரட் போல - ஆந்திராவில், அடையின் நடுவே உப்புமா வைத்துத் தந்தால் அது எம்.எல்.ஏ பெசரட். என்ன விநோத ரசனை என்கிறீர்களா? எனக்குத்தான் Bபாத் தோசை மிகவும் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேனே. 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 


நண்பர் ஒருவர் வீட்டில் பார்த்த யோகா செய்யும் சாண்டாகிளாஸ் பொம்மை. 
= = = = = = = = = = =

KGG பக்கம். 

சென்ற வாரப் பதிவில், 

அடுத்த வாரம் : ரயிலில் நான் பார்த்த (பைத்தியக்கார!) துப்பறியும் நிபுணர்! என்று குறிப்பிட்டிருந்தேன். 

எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் எழுதிய பெர்ரி மேசன் கதைகளில், குழப்பமான தகவல்களை பகுத்துப் புரிந்துகொள்ள பெர்ரி மேசன் ஒரு யுக்தியைக் கடை பிடிப்பார். 

தன்னுடைய உதவியாளர் டெல்லா ஸ்ட்ரீட்டிடம் தான் சொல்லுகின்ற எல்லா விஷயங்களையும் நோட்ஸ் எடுக்கச் சொல்லுவார். 

கொலை பற்றி போலீசுக்கு தகவல் தந்தவர் பால்கார பக்கிரிசாமி. காலை ஏழரை மணிக்கு பால் வாங்க வாசலுக்கு வரும் உலகநாதன் பால் வாங்க வாசலுக்கு வரவில்லையே ஏன் - வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்று பார்க்க கதவைத் தொட்ட பால்காரர் கதவு திறந்திருக்கிறது என்று பார்த்து உள்ளே சென்று பார்த்து,  விபரீதத்தைப் பார்த்ததும் போலீசுக்கு தகவல் தந்துள்ளார். 

கொலை நடந்த நேரம் என்று போ மா ரிப்போர்ட் குறிப்பிடுவது காலை நாலரை மணி என்று. 

உறங்கிக் கொண்டு இருந்தவரை உலகநாதனை யாரோ ஒருவர் அருகில் இருந்து சுட்டு இருக்கவேண்டும்.   

வீட்டில் வேலையாட்கள் யாரும் இல்லை. அதுவரை அவர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. 

-- இப்படி பல தகவல்களை சொல்லி, அதை அவர் உதவியாளர் டைப் செய்து கொடுத்ததும், அவற்றை அலசி ஆராய்ந்து மேலும் சில கேள்விகள் எழுப்பி, துப்பறியும் பால் டிரேக்கிடம் சில தகவல்களை கூறி அவரை அது விஷயமாக துப்பறிய சொல்லி, கடைசியில் சந்தேகத்துக்குறிய 2 அல்லது மூன்று பேரை தேர்ந்தெடுத்து கோர்ட் குறுக்கு விசாரணையில் உண்மையான குற்றவாளியை மடக்கிவிடுவார்! 

அந்த பாணியை பின்பற்றி, விவேக் & ரூபலா (ராஜேஷ் குமார்) பரத் & சுசீலா (பட்டுக்கோட்டை பிரபாகர்) கதைகளில் கூட அப்படி ஒரு யுக்தியை பின்பற்றி எழுதியிருப்பார்கள். 

காலையில் இட்லி, போண்டா, டீ சாப்பிட்ட கந்தசாமி மர்மமான முறையில் வாயில் நுரை தள்ளி இறந்துபோனார். 

காலையிலிருந்து வேறு எதையும் அவர் சாப்பிடவில்லை. 

போண்டா & டீ என்பதை அன்டர்லைன் செய்த பரத், " அவர் சாப்பிட்டது என்னடீ " என்றான் பரத்.

" பொண்டாட்டி " என்றாள் சுசீலா. 

" என்ன? " என்றான் பரத்.  

- 'என்னடி' என்று நீ கேட்டதால் போண்டா டீ என்பதை அப்படி சொன்னேன். 

" என்ன பிராண்ட் டீ " என்று கேட்டேன்! 

" ஓ - அப்படியா - கந்தசாமி சாப்பிட்டது ஜேம்ஸ் பாண்ட் டீ - இல்லை இல்லை - புரூக் பாண்ட் டீ " 

இப்படி ஜல்லியடித்து சுற்றி வந்து கடைசியில், பக்கத்து வீட்டு பரமசிவம், முன்பகை காரணமாக - காலையில் கந்தசாமி வீட்டிற்கு பால்கார பக்கிரிசாமி போட்டுவிட்டுப் போன பால் பாக்கெட்டில்  பாம்பு விஷத்தை இன்ஜெக்ட் செய்து கொலை செய்ததைக் கண்டுபிடிப்பார்கள். 

நிற்க. 

இந்த அடிக்கோடு இடும் பைத்தியக்கார முறையை அடிக்கடி படித்ததனாலோ என்னவோ அதை அப்படியே பின்பற்றி,  ஒரு பைத்தியக்காரர் செய்த செயலைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். 

அது 1991, மே மாதம், இறுதி வாரம். ராஜீவ் காந்தியை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்று பத்திரிக்கைகள் உட்பட எல்லோரும் குழம்பி, வாசகர்களையும் குழப்பிக்கொண்டு இருந்தனர். தினசரிகளிலும் வாரப் பத்திரிக்கைகளிலும் ராஜீவ் கொலையான இடத்தின் படங்களையும், உடல் கிடந்த விதத்தையும் அங்கு நடைபெற்ற சம்பவங்களின்போது எடுக்கப்பட்ட படங்களையும் தினுசு தினுசாக போட்டு, அதைப் பற்றி எழுதிக்கொண்டு இருந்தார்கள். 

காலையில் பீச் ஸ்டேஷன் நோக்கி செல்லும் மின் வண்டித் தொடரில் எனக்கு எதிரே உட்காரந்திருந்த 25 அல்லது 30 வயது மதிக்கப்பட்ட, வேட்டி சட்டை அணிந்த ஒருவர், தன்னிடம் சமீபத்து தினசரிகள், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளை நிறைய வைத்திருந்தார். 

ராஜீவ் கொலை சம்பந்தமான கட்டுரைகளை மாறி மாறிப் படித்து, ஒரு பால் பாயிண்ட் பேனா கொண்டு கட்டுரைகளில் சில இடங்களை அடிக்கோடு, பக்கக் கோடுகள் போட்டு மார்க் செய்யத் தொடங்கினார். 

அவர் வைத்திருந்த தினசரிகளிலும் வாரப் பத்திரிக்கைகளிலும் இப்படி பல இடங்களில் கோடு போட்டு - அவைகளை மீண்டும் மீண்டும் படித்து, ரயிலில் மேலே உள்ள மின்விசிறியைப் பார்த்து, கண்ணை மூடி யோசித்து, மீண்டும் கோடிட்ட இடங்களைப் படித்து, யோசித்த வண்ணம் இருந்தார். 

பத்திரிக்கைகளில் வந்திருந்த கட்டுரைகள் ஒவ்வொன்றுமே அந்தப் பத்திரிக்கையின் நிருபர் எழுதிய கட்டுரைகள். 

அவர்களுக்கு கொலை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்ற விவரங்கள் அப்போது தெரியாது. அப்படி இருக்கும்போது அவர்கள் எழுதிய கட்டுரைகளில் இந்த துப்பறியும் நிபுணர் கோடுகள் இட்டு எதைக் கண்டுபிடித்திருப்பார் என்று யோசித்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். 

= = = = = = = = = =  

7 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய புதன் கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. திருமணம் அனைவரின் வாழ்விலும் ஒரு மறக்கவியலாத நிகழ்வாக வருவது. அதற்கு இப்போது போல் ஆடம்பரங்கள் தேவையில்லை. ஆனாலும் என்னசெய்வது? மாறி வரும் மனிதர்களின் மனபாங்கினைப் பார்த்து, காலமும் கண்களை மூடியபடி மாறித்தான் வருகிறது. காலத்தின் மீது பழியை போட்டபடி மனிதர்களும் தாம் மாறி விட்டதை நிரூப்பிக்கிறார்கள்.

    கருப்புதான் அழகு என வாதிடுபவர்களும் உண்டே..! ஒருவரின்மனதின் அழகை காண முடியாத போது, நம் கண்கள் காணும் அழகுதான் அப்போதைக்கு உயர்வாக இருக்கிறது.

    படமும் பதமும் பகுதியில் சகோதரர் நெல்லைத் தமிழர் அறிமுகப்படுத்திய தோசைக் கடை படங்கள் நன்றாக உள்ளது. தோசைகள் காலை நேரத்தின் இயல்பான பசியை தூண்டுகிறது. (அதுவும் நான் இன்று தூக்கம் வராமல் அதிகாலையிலிருந்தே( விட்டுப்போன) பதிவுகளை பார்த்துக் கருத்துக்களை தந்த வண்ணமிருக்கிறேன்.) குறைந்தளவு ஒரு காப்பியாவது தயாரித்து அருந்த வேண்டும். சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் சாண்டாகிளாஸ் பொம்மை படமும் அருமை.

    தங்கள் பக்கமும் ரசனையாக உள்ளது. துப்பறியும் நிபுணர் களை அலசிய விதம் நன்று. பல எழுத்தாளர்களின் துப்பறியும் ஜோடிகளை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள். அனைத்தையும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. கச்சேரியோ அல்லது சில நிகழ்வுகளோ மனதில் பரவசத்தைக் கொண்டுவரும்.

    இப்போதே செத்துப் போயிடலாமா என்ற எண்ணம் வாழ்க்கையில் மிகுந்த துன்பப்படுபவர்களுக்குத்தான் வரும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மெட்டா ஏஐ உருவாக்கிய பெண்..... நிறம் எப்படி ஒரு பெண் அழகா இல்லையா என்று தீர்மானிக்கும்?

    படுக்கையிலிருந்து எழும் எந்தப் பெண்ணும் மெட்டா ஏஐ பெண் போலத்தான் இருப்பார்.

    ஒன்று கவனித்திருப்பீர்கள். அழகின்மையால் திருமணம் ஆகவில்லை என்று ஒரு பெண்ணுமே இருக்கமுடியாது. அவளுடைய ராஜகுமாரனுக்கு அவள் அழகாக்கத்தான் தோன்றுவாள்.

    பதிலளிநீக்கு
  5. கேஜிஜி பக்கம்... நல்ல புத்தகங்களில் அடிக்கோடிடுவதைக் கண்டிருக்கிறேன். டைம் பாஸ் துப்பறியும் புத்தகத்திலா? நல்லா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  6. கதை எழுத பயிற்சி...... எல்லாச் செயல்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டால் திறமை வந்துவிடும். ஆனால் இயல்பான திறமை இருந்து, கடும் பயிற்சி கொடுக்கப்பட்டால் மிகுந்த உயரத்திற்குச் செல்ல முடியும் அல்லது குறைந்தபட்சம் ஜொலிக்க இயலும்.

    இதனால்தான் டெண்டுல்கர், ஶ்ரீகாந்த் அடைந்த உயரத்தை, பயிற்சி அளிக்கப்பட்ட அவர்களின் வாரிசுகளால் அடையமுடிவதில்லை..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!