கர்ணன். தமிழில் முதன் முதலாக ஈஸ்டமென்கலரில் வெளியான திரைப்படம். 1964 ல் பந்துலு இயக்கத்தில் சக்தி கிருஷ்ணஸ்வாமி வசனத்தில் வெளியானது. கண்ணதாசன் பாடல்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை.
இன்று பகிரப்பட்டுள்ள இந்தப் பாடல் யு டியூபில் துண்டு துண்டாகக் கிடைத்தது. இப்போது சேந்து ஒரே காணொளியாக கிடைக்கவும் சேர்த்தே பகிர்ந்து விட்டேன். முதலில் மூன்று துணுக்குகளாக எடுத்து வைத்திருந்தேன்.
சிவாஜி அதாவது கர்ணனை வள்ளல் அது இது என்று ஐஸ் வைத்து புகழும்போது அவர் முகத்தில் தெரியும் பெருமிதம், உடனே பொருள்களை எடுத்து கொடுக்கும் பெருமை..
பாடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சுவாரஸ்யம், இனிமை. டி எம் சௌந்தரராஜன், பி பி ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் குரல்களில் பாடல். ஆயிரம் கரங்கள் நீட்டி பாடலில் குழுவினராக பாட ஆரம்பித்தாலும், 'தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்' வரியில் டி எம் எஸ்ஸின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
படத்தில் வரும் அளவு கர்ணன் நாயக குணங்கள் கொண்டவன் இல்லை என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் மகாபாரதம் எல்லா கருத்துக்கும், எல்லா யூகத்துக்கும் இடம் கொடுக்கிறது. எல்லோருக்கும் சமமான நாயக அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. குணம் நாடி குற்றமும் நாடி போல அளவில்தான் மாற்றம். துரியோதனன் வில்லன் என்றாலும் மகாவீரன்.
பந்துலு இந்தப் படத்துக்காக திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களிடமும், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்களிடமும் விவரங்கள் விசாரித்துக் கொண்டாராம்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலும் ஆயிரம் கரங்கள் நீட்டி பாடலும் வரிகளாக எழுதி அப்புறம் டியூன் போடப்பட்டு மற்ற பாடல்கள் எல்லாம் டியூனுக்கு எழுதிய பாடல்களால். இரண்டே நாட்களில் கண்ணதாசன் பாடல்களை எழுதிவிட, மூன்றே நாட்களில் பாடல்கள் ஒலிப்பதிவு முடிந்ததாம்.
மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்…ம்ம் ம்ம் ம்ம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்…ம்ம் ம்ம் ம்ம்
பசு வழங்கும் கொடையுமொரு
நான்கு மாதம்…ம்ம் ம்ம் ம்ம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்…..
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்…
நாணிச் சிவந்தன
மாதரார் கண்கள்
நாடு தோறும் நடந்து சிவந்தன
பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன
ஞானியர் நெஞ்சம்…ம்ம்…..ம்ம்ம்
தினம் கொடுத்து
தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக்கரமே….
தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக்கரமே
மன்னவர் பொருள்களை
கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்…
மாமன்னன் கர்ணனோ
தன் கரம் நீட்டுவார்
மற்றவர் எடுத்துக் கொள்வார்…
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாமல்
வைத்தவன் கர்ண வீரன்
வறுமைக்கு வறுமையை
வைத்ததோர் மாமன்னன்
வாழ்கவே வாழ்க வாழ்க
என்ன கொடுப்பான்
எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னே…ஏ…ஏ…
பொன்னும் கொடுப்பான்
பொருள் கொடுப்பான்
போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால்
எங்கள் கர்ணன்
தன்னைக் கொடுப்பான்
தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே…
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி
தாயினும் பரிந்து
சாலச் சகலரை
அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம்
துணைக் கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி…
=======================================================================================
கர்ணன் படம் பற்றி இணையத்தில் வாசித்தது...
ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் அப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது. ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடும் வாய்ப்பே அதிகம்...
இத்திரைப்படத்தில் ஜோடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் மிகவும் கண்டிக்கத்தக்க காட்சி: இறுதியில் கிருஷ்ணர் கர்ணனிடம் வந்து தர்மத்தை பிச்சை கேட்கும் காட்சி. எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை என்பதால், பெரும்பாலான தமிழக மக்கள், கிருஷ்ணர் கர்ணனிடம் பிராமண ரூபத்தில் வந்து அவன் செய்த தானத்தின் பலன்களை தானமாகப் பெற்றார் என்று இன்றும் நம்பிக் கொண்டுள்ளனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை, இது ஏமாற்றுத்தனத்தின் உச்சகட்டம். கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்குக் காட்டியதாகக் கூறுவதும் பொய், "வஞ்சகன்_கண்ணனடா" என்பதும் துளியும் ஏற்கத்தக்கதல்ல. கதாநாயகர்களுக்காக வடிவமைக்கப்படும் இத்தகைய காட்சிகள் பெரும் கண்டனங்களுக்கு உரியவை. அந்தோ பரிதாபம்! கண்டிக்கத்தான் ஆள் இல்லை!
இதர சில குளறுபடிகள்
திரைப்படத்தின் குளறுபடிகள் சொல்லி மாளாதவை, அவை எமது நோக்கமும் அல்ல. இருப்பினும், முக்கிய குளறுபடிகளை சுட்டிக் காட்டுவதை கடமையாக உணர்கிறோம்.
* கர்ணன் செய்த அனைத்து அட்டூழியங்களும் மறைக்கப் பட்டுள்ளன.
* கர்ணன் அர்ஜுனனால் தோற்கடிக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றையும் காணோம்.
* குந்தி போர்க்களத்திற்கு ஓடிவந்து, மகனே என்று அழுவதெல்லாம் சுத்த பொய். மஹாபாரதத்தின்படி போர் முடிந்த பின்னர், இறந்த உறவினர்களுக்கு யுதிஷ்டிரர் ஈமச் சடங்குகளைச் செய்யும்போது மட்டுமே குந்தி அதனை வெளிப்படுத்துவாள். போர்க்களத்திற்கு வந்து அழுவதாகவும், அதற்காக கர்ணன் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்ததுபோலவும் காட்டியிருப்பது வேதனைக்குரியதாகும்.
* கர்ணனின் மகன் விருஷஷேணன், அவனது கண்களுக்கு முன்பாக முறையான போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். அவன் ஒரு சிறுவனும் அல்ல, பின்னால் இருந்து தாக்கப்பட்டவனும் அல்ல. விருஷஷேணனை சிறுவனாகக் காட்டியதும் பின்னால் இருந்து கொல்லப்பட்டதாகக் காட்டியதும் வெற்று அனுதாபங்களை கர்ணனுக்கு சேகரிப்பதற்காகவே.
* சல்லியன் தேரிலிருந்து ஓடியவனா? இல்லை. சல்லியன் பெரும் முயற்சி செய்தும் தேரை உயர்த்த முடியாததால், கர்ணனே இறங்க வேண்டியிருந்தது என்பதே உண்மை.
* நாக அஸ்திரத்தை இரண்டாம் முறை பிரயோகிக்க கர்ணன் மறுத்ததற்கு, “நான் எனது வெற்றிக்கு நாகங்களைச் சார்ந்தவன் அல்ல,” என்ற கர்ணனின் அகந்தையே காரணம். குந்தி அவ்வாறு வரம் கேட்டதாக வருவது கற்பனை.
* கர்ணன் பரசுராமரிடம் பொய் சொல்லி கலை கற்றது துரியோதனனின் தூண்டுதலினால் அல்ல. துரியோதனனைச் சந்திப்பதற்கு முன்பாகவே கர்ணன் பரசுராமரிடம் கலை கற்றிருந்தான்.
* மனைவியைப் பணயம் வைத்ததை கர்ணன் திட்டுவது போன்ற காட்சிகள் உண்மையை திருப்பிப் போடுகின்றன. திரௌபதியை அவமானப்படுத்தியதில் கர்ணன் மிக முக்கிய பங்கு வகித்தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
* அதர்மத்தின் பக்கம் நின்ற கர்ணனைக் காண தர்ம தேவதை வருவதுபோன்ற காட்சிகள் எதற்காக?
* கர்ணனின் திருமண வாழ்க்கை குறித்த தகவல்கள் கற்பனைகளால் மூழ்கியுள்ளன.
மொத்தத்தில் சினிமா பார்த்து மஹாபாரதம் கற்க வேண்டாம் என்பதை இதன் மூலமாக பகவத் தரிசன வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறோம்...
__நன்றி _: ஶ்ரீ கிரிதாரி தாஸ் 
(மீள் பதிவு)
Narayanasami Krishnaswami
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத்தில் ஒரு காட்சி. இந்திரன் வயோதிக அந்தணர் வேடம் கொண்டு கர்ணனின் கவச குண்டலங்களை பெற வருவதாக அக்கட்சி அமைப்பு. கர்ணனின் தந்தையான சூரியன் அதை கர்ணனுக்கு சொல்லி எச்சரிக்கிறான். 'உயிரைக்கூட தானம் செய்வேன் என்னும் கொள்கையை உடைய கர்ணன் அதையும் கொடையாகக் கொடுக்கிறான்.
காட்சியில் சூரியன் சன்னதியிலிருந்து சிவாஜி வெளியே வந்து ராமதாஸை பார்க்கிறார். "வணக்கம் வயோதிகரே" என்று கரம் குவிக்கிறார். வயோதிகர் வேடத்தில் வந்திருக்கும் இந்திரன் தடுமாற்றத்துடன் "வ.. வணக்கம் மன்னா" மன்னனைப் பணிகிறான். கர்ணன் சட்டென விலகி உள்ளே சன்னதியை இந்திரன் வணங்குமாறு நிற்கிறான். நல்ல காட்சியமைப்பு. ரசிக்கும்படி இருந்தது. அதன் பின்னரான காட்சியில் சகுனி கர்ணனை துரோகம் செய்து விட்டதாகக் குற்றம் சாட்டும்போது சிவாஜியின் சட்டென கை நீட்டி மாமாவைக் காட்டி, அதே வேகத்தில் திரும்பி கைகளை துருரியோதனன் பக்கம் நீட்டி துரியோதனனைப் பார்க்கும் காட்சி..

கர்ணன் படப் பாடல்களை எத்தனை முறைகள் கேட்டாலும் அலுக்காது. அருமையான இசை, பாடல் வரிகள்.
பதிலளிநீக்குமழை கொடுக்கும் கொடை... இந்தப் பாடல் எனக்கு விருப்பமானது. பல ஜாம்பவான்கள் சேர்ந்து பாடி, அந்தப் பாடல் நம் மனதைக் கவர்வது என்பது அபூர்வம். இதில் ஒவ்வொருவர் குரலையும் நம்மால் ரசிக்கமுடியும்.
நல்ல பகிர்வு
வாங்க நெல்லை.. சில படங்களில் குறைந்த அளவே பாடல்கள் இருந்தாலும் ஒரு பாடல் கூட மனதில் நிற்காது. நிறைய பாடல்கள் இருக்கும் படங்களில் சில பாடல்கள் மனதில் நிற்கும். ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் அதிகம். எல்லாப் பாடல்களும் அருமையான பாடல்கள்.
நீக்குகர்ணன் தேர் அழுந்தியதாகச் சொல்லப்படும் இடம் மற்றும் அதனையொட்டியுள்ள அவனது மறைவு இடத்தையும் சில மாதங்களுக்கு முன் சென்றிருந்த யாத்திரையில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு குருஷேத்திரத்தில் கிடைத்தது. யாத்திரையில் வந்திருந்த பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு அது.
பதிலளிநீக்குஅங்கும் கர்ணன், பிராமணன் கடைசி கட்டத்தில் யாசகம் கேட்கும் சிலை வைத்திருந்தார்கள்.
இதெல்லாம் மஹாபாரதத்தில் இல்லையென்று சொல்கிறார்கள், இடைச்செருகல்கள் என்கிறார்கள். ஆனால் அவர்களும் அதற்கு சிலை வைத்திருக்கிறார்கள். எப்படி?
நீக்குநேற்றும் இன்றும் கர்ணனைப் பற்றிய மகாபாரத்த்தின் உண்மை முகம் பேசப்பட்டிருப்பதால், ஒரிஜனல் மகாபாரத்த்தின் தமிழாக்கம் படிக்கும் ஆவல் வந்துவிட்டது.
பதிலளிநீக்குகர்ணபரம்பரைக் கதைகள் ரசிக்கத் தகுந்தவை. இருந்தாலும் உண்மைக் கதை படிக்கவேண்டும்.
சிவாஜியின் நடிப்பு மிக அருமை. இருந்தாலும் இருபது முப்பது கிலோ குறைந்த சிவாஜி இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார்.
மஹாபாரதம் எப்போது கைக்கு கிடைத்தாலும் வாசிக்கத்தோன்றும். அது சம்பந்தப்பட்ட கதைகள் என்றாலும் படிக்கும் ஆர்வம் வரும். இப்போது எஸ் எல் பைரப்பாவின் 'பருவம்' வாங்கி தூங்குகிறது.. இதோ.. அடுத்த புத்தகக்கண்காட்சியே வந்து விட்டது!
நீக்குபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லையாமே
பதிலளிநீக்குசில இடங்களில் நூறு நாட்கள் ஓடியும் கூட பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டதால் போட்ட காசு தேறவில்லை. மேலும் சிவாஜியே கூட இதற்கு ஒரு காரணம். ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்த படங்களை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் வருவதால் முந்தைய படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு அப்படி சோதனையாக வந்தது பச்சைவிளக்கு!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குஓம் சரவணபவா...
நீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
எங்களையும் வெவ்வேறு முருகன் நாமங்களை யோசிக்க வைத்து விடுகிறீர்கள்!
எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை
பதிலளிநீக்குஎனினும் காலஙகளைக் கடந்தும்
பேசப்படுகின்றது...
ஆனாலும்,
லாபம் நஷ்டம் உலோகாயதம்...
ஆமாம். இன்றளவும் பேசப்படும் படம். சில நஷ்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை!
நீக்குவீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலிருந்து பாடலொன்று பகிர்னவுடனேயே சிவ கங்கைச் சீமை படத்திலிருந்தும் ஒரு பாடலை மனம் எதிர்பார்த்தது. ஏன் என்று கேட்காதீர்கள். செழுமையும் எளிமையுமாய் ஒன்றுக்கொன்று போட்டியாக திரையிடப்பட்ட அந்நாளைய நினைவுகளின் ஏக்கம் இது.
பதிலளிநீக்குஆமாம். கண்ணதாசன் தயாரிப்பு அல்லவா அது? போட்டியில் வென்றதென்னவோ வீரபாண்டியன்தான்! ஆனால் இன்று கட்டபொம்மன் எங்கே வந்தார்? வாங்க ஜீவி ஸார்...
நீக்குபதிவைப் படிக்காமல் பாடலைப் பார்த்து பின்னூட்ட மிட்ட விளைவு. ஆமாம். கர்ணன் படப்பாடலை வீ.பா.கட்டபொம்மன் பாடலாக அவதானித்து விட்டேன். தவறு என்னுடையது தான்.
நீக்குநினைத்தேன். பரவாயில்லை ஜீவி ஸார்.. . இப்போது கர்ணன் பாடல்களை பற்றி கதைக்கலாமே..
நீக்குஅதுசரி, இன்றுதான் பதிவைப் படிக்காமல் கருத்தா?
கர்ணன் படப் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதவை
பதிலளிநீக்குஇனிமையான இசை,
ஆமாம். ஒரு பாடல் கூட சோடை போகவில்லை. ஆமாம், சோடை என்றால் என்ன?!
நீக்குகர்ணன் படப் பாடல்கள் கேட்டு ரசித்த பாடல்களே.
பதிலளிநீக்குமீண்டும் இங்கே கேட்கத் தந்தமைக்கு நன்றி.
வாங்க வெங்கட். நன்றி. 'என்றும் இனியவை' என்று சிலோன் ரேடியோவில் போடும் நிகழ்ச்சி போல என்றும் இனிமை இந்தப் பாடல்கள்.
நீக்குசில அபூர்வ, கலைநுணுக்கம் வாய்ந்த படங்களின், எழுத்து படைப்புகள், ஏனைய கலை வெளிப்பாடுகளின் வெற்றி அதன் காலங்கடந்த தன்மையில், கம்பீரத்தில், தீராத புகழில் இருக்கிறது. காசில் அளக்கப்படும் சங்கதியல்ல இது. காசு வெறும் தூசு!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... எனக்கும் அதே எண்ணம்தான், கருத்துதான்... ஆனால் தயாரிப்பாளர் அப்படி நினைத்திருக்க மாட்டார்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்கு///ஆமாம், சோடை என்றால் என்ன?!...///
பதிலளிநீக்குசொத்தை விதைகள்...
முளைக்கின்ற திறனற்றவை...
தீய்ந்து போனவை... கூ முட்டை விதைகள்..
நானும் எடுத்து வைத்திருக்கிறேன்.. குன்ஸா தெரியும் என்றாலும் சரியா என்னன்னு பார்த்தேன். ஆமாம் குன்சா என்றால் என்ன?!!
நீக்கு"சோடை (chotai) என்பது வறட்சி, காரியக்கேடு, சோர்வு, காய்ந்துபோன மரம், அறிவிலி, அல்லது தரம் குறைந்த பொருளைக் குறிக்கும் தமிழ் வார்த்தையாகும். இது பெரும்பாலும் வளர்ச்சி குன்றிய, சத்து இல்லாத (எ.கா: பருப்பு இல்லாத தானியம்) அல்லது சாமர்த்தியம், வலிமை இல்லாத தன்மையைக் குறிக்கப் பயன்படுகிறது"
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வு அருமை. கர்ணன் படத்தின் பாடல்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. அனைத்துமே கேட்பதற்கு இனிமையானவை. நீங்கள் பகிர்ந்திருக்கும் இப்பாடலும், பாடும் ஒவ்வொருவரின் குரல் வன்மையோடும், அதற்கேற்ப நடிகர் திலகத்தின் நடிப்பபோடும் மிக நன்றாக இருக்கும். கர்ணன் படம் எந்த காலத்திலும் பார்க்கத் தூண்டும் படம். அன்றொரு முறை நீங்கள் இப்படத்தின் பாடல்கள் பகிர்ந்ததும், நானும் இப்படத்தைப் பார்த்தேன்.எத்தனை முறை பார்த்தாலும் படத்தோடு ஒன்றிப்போகச் செய்யும் சிவாஜி அவர்களின் நடிப்பு. படத்தைப்பற்றிய செய்திகளையும், பகிர்ந்த படத்தின் பகுதி ஒன்றினையும் படித்துப் பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குகர்ணனுக்குப் போட்டியாக வந்தவன் வேட்டைக்காரன்...
பதிலளிநீக்குநான் சொன்னது சிவாஜி படங்களிலேயே..
நீக்கு