சனி, 9 டிசம்பர், 2023

சிவகாசி சிட்டுக்குருவி தம்பதி மற்றும் நான் படிச்ச கதை

 கே.பி.ராபியா கேரள மக்கள் மத்தியில் பிரபலமான பெயர். தற்போது பத்மஸ்ரீ விருது பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளதால் கேரள மக்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வீல் சேரில் பயணித்தாலும், தன்னம்பிக்கை நாயகியாக வலம் வரும் கே.பி.ரா யார்?  இங்கே சென்று படிக்கலாம்.


=============================================================================================


================================================================================================

அவர்கள் எப்படி இவ்வளவு மனஉறுதியுடன் இருந்தார்கள் என்ற விவரங்களை அறியும் போது பிரமிப்பாக இருக்கிறது....

41 தொழிலாளர்கள் 17 நாட்கள் 408 மணி நேரம்.....  தொழிலாளர் மீட்பு..

=====================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================


 நான் படிச்ச கதை (JKC)

மாண்புமிகு மாணவன்

கதையாசிரியர்: அய்க்கண்


முன்னுரை

கதாசிரியர் அய்க்கண்  பெயர் பிரபலமான ஒன்று. ஆயினும்  sirukathaigal.com தளத்தில் இவரது 4 கதைகளே உள்ளன. அந்த நான்கில் ஒன்று தான் “மாண்பு மிகு மாணவன்”.

//சிந்திக்கத் தெரிந்தவனே படைப்பாளி ஆகிறான். எல்லாக் கற்பனைகளுக்கும் அடிப்படையாக ஒரு உண்மை உண்டு. அந்த உண்மை இல்லாமல் கற்பனை வராது…..ஏதாவது ஒரு கருத்து அல்லது செய்தி இல்லாத கதையை நான் எழுதியதில்லை. //  இது அவருடைய கூற்று.

ஒரு சிறிய சிறந்த கருத்து. “ஆசிரியர் போற்றத்தக்கவர்”. உண்மை. இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரி எழுதலாம், ஒரு பத்தி எழுதலாம். ஒரு பக்க கதை எழுதலாம். ஆனால் சிறந்த எழுத்தாளர் ஒரு நீண்ட கதையே எழுதி விடுவார். அதுதான் கற்பனைத் திறமை. அப்படியான கதை தான் “மாண்பு மிகு மாணவன்”.

 

மாண்புமிகு மாணவன்

கதையாசிரியர்: அய்க்கண்

எனக்குள் பதற்றம் பொங்கிப் பரவிக் கொண்டிருந்தது.

தாலி கட்ட இன்னும் சில நிமிடங்கள்தான் இருந்தன. சோதிடர் குறித்துக் கொடுத்த நேரப்படி அழைப்பிதழில் போட்டிருந்த நேரப்படி, இன்னும் பத்து நிமிடங்களுக்குள் தாலி கட்ட வேண்டும்.

திருமண வீட்டில் யாரும் இதைப்பற்றி பரபரப்படைந்ததாகவே தெரியவில்லை. எல்லாரும் வடக்கே தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணமகன் தாலிகட்ட வேண்டுமானால், மாண்புமிகு அமைச்சர் வருகை தந்து, தன் கையால் தாலிச்சரடை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுக்க வேண்டுமே?…இன்னும் அமைச்சரைக் காணோம்…!

உண்மையில் எங்களையெல்லாம் விட மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்குத்தான், அந்த ஊரின் பேருந்து நிலையத்திலிருந்து ‘வருக! வருக!’ என்று ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் பத்து அடிக்கு ஒன்றாக பிரம்மாண்டமான அளவில் வரவேற்றுக் கொண்டிருந்தன. எங்களையெல்லாம் அழைப்பிதழ்கள் மூலம் வரவேற்றதோடு சரி…

அந்த வட்டாரத்தில் இன்னும் சில ஊர்களில் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கும். அங்கேயெல்லாம் அமைச்சர், தாலிகளை எடுத்துக் கொடுத்துவிட்டுத்தான் இந்த ஊருக்கு வர வேண்டும்.

‘அய்யர் வரும் வரை அமாவாசை காத்துக் கொண்டிருக்காது’ என்பார்கள். ஆனால் அமைச்சர் வரும் வரை முகூர்த்தம் காத்துக் கொண்டிருக்கும்…!

பரபரப்பை அடக்க முடியாமல் நான் பெண் வீட்டார் சார்பாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்திக் கேட்டேன்.

“என்னங்க, அமைச்சர் முகூர்த்த நேரத்துக்குள் வந்திடுவாரா?” அந்தக் கிராமத்து ஆள் என்னை ஏற இறங்கப் பார்த்தார். நான் மாப்பிள்ளை வீட்டாரா, பெண் வீட்டாரா என்று அவருக்குத் தெரியவில்லை. யாரோ ஒரு பட்டிக்காடு என்று மட்டும் தெரிந்து கொண்டு விட்டார் போலிருக்கிறது!

“சார்! கரெக்ட் டயத்துக்கு மினிஸ்டர் வந்திடுவார்!” என்று அடித்துச் சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த ஊர்க்காரர்!

இப்பொழுது என்று இல்லை- அந்தக் காலத்திலிருந்தே என் ‘முகராசி’ அப்படித்தான்! என் ஊரிலேயே நான் யார் என்று முழுமையாகத் தெரியாது.

எங்கள் ஊரில் ஒருவரிடம்,”இவர் யார்?” என்று கேட்டால்” “இவர் திருப்பத்தூரிலே பெரிய ஸ்கூலிலே வாத்தியாராயிருக்கார்” என்று என்னைப் பற்றிச் சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், தொடக்கப்பள்ளி ஆசிரியரிலிருந்து கல்லூரிப் பேராசிரியர் வரை ‘வாத்தியார்’தான்!

“இவர்தானே சிறுகதை, நாவல்கள் எல்லாம் எழுதுகிறவர்?” என்று கேட்டால், “ஐயையோ! அப்படியெல்லாம் தப்புத் தண்டாவாக எதுவும் எழுதமாட்டார். ரொம்ப நல்ல மனுஷர்” என்று நற்சான்றிதழ் வழங்குவார்கள்.

சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் பொறுமை இழந்தவனாய் இன்னொரு பெண் வீட்டு ஆள் மாதிரி இருந்தவரிடம், வாயைத் திறந்தேன். இப்போது பட்டிக்காட்டுத்தனமாக இல்லாமல், நாகரிகமாகவே கேள்வியைக் கேட்டேன்.

”ஏன் சார்! கரெக்ட் டயத்துக்கு மினிஸ்டர் வந்திடுவாரா?”

அவரும் சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினரைப் பார்ப்பதுபோல் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

”அய்யா! மந்திரி வந்த பிறகுதான் தாலி கட்டுவாங்க…உங்களுக்கு அவசரம்னா, இப்பவே நீங்க சாப்பிடலாம். சாப்பாடு ரெடியாயிடுச்சு. தாலி கட்டுறவரை நீங்க காத்திருக்க வேண்டாம். நீங்க சாப்பிடப் போகலாம்…” என்று சாப்பாட்டு ஹாலைக் காட்டிவிட்டுச் சென்றார் அந்த மனிதர்.

அவர்மேல் தப்பு இல்லை; பெரும்பாலும் இந்தக் காலத்தில் திருமணங்களுக்கு வருகிறவர்கள், முன்னால் வரவேற்பாளர் காட்டும் சந்தனம், பூ கற்கண்டு எதையாவது அல்லது எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நேரே சாப்பாட்டு பந்திககுப் போய் சாப்பிட்டுவிட்டு, மொய் எழுதும் இடத்துக்குப் போய் பணம் எழுதி, ‘அட்டெண்டன்ஸ்’ பதிவு செய்துவிட்டு, தாம்பூலப் பையை வாங்கிக் கொண்டு வெளியே போய்விடுவார்கள். ஆனால், நான் அப்படியில்லை.

திருமண அழைப்பிதழில், ‘தாங்கள் தவறாமல் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம்’ என்று அச்சடித்துள்ளபடியே, மணமேடையில் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டியதும், பூவையும் அட்சதையும் அவர்கள் தலையில் தூவி மனமார ஆசீர்வதித்துவிட்டுத்தான் சாப்பிடக் கிளம்புவேன்.

திருமணத்திற்குச் சம்பந்தப்பட்ட பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பரபரப்பு எதுவும் இல்லாமல் இருக்கும்போது, நமக்கு மட்டும் ஏன் பரபரப்பு? என்று எனக்கு நானே புத்திமதி கூறிக்கொண்டேன்.

'ரோம் நகரில் இருக்கும்போது, ரோமானியனாக இரு’ என்று படித்த வரி நினைவுக்கு வந்தது. நானும் ரோமானியனாக அந்தக் கூட்டத்தைப் பரபரப்பு இல்லாமல், அமைதியாகச் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மாண்புமிகு அமைச்சர் வரும் வழி மேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் எல்லாரும். மணமேடையில் மாப்பிள்ளையும், பெண்ணும் ஏதோ ரகசியமான குரலில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

இதென்ன கர்னாடகக் காலமா, மணப்பெண் நாணத்துடன் தலை குனிந்தபடி உட்கார்ந்திருக்க, மாப்பிள்ளை குத்துக் கல் போல் அமர்ந்திருக்க…? இது இருபத்தோராம் நூற்றாண்டு அல்லவா?

திடீரென்று தெருவிலே முழக்கம் வெடித்து.

“மாண்புமிகு அமைச்சர் அவர்களே வருக! வருக!” என்ற முழக்கம் சுற்றிலும் ஒலிக்க, அமைச்சர் காரிலிருந்து இறங்கி நடந்து வந்தார்.

எல்லாரும் எழுந்து மரியாதையோடு நின்றார்கள். நானும் ‘ரோமானியனாக’ எழுந்து நின்றேன். இருபுறமும் கூட்டம் விலகி, நடுவில் வழிவிட்டு கைகளைக் கூப்பி வணங்கியபடியே அமைச்சர் வந்து கொண்டிருந்தார்.

நான் இயற்கையாகவே அதிக உயரம் உடையவன் என்பதால் நாங்கள் நின்ற பக்கம் திரும்பிய அமைச்சரின் பார்வையில், நான் ‘பளிச்’ என்று தென்பட்டேன் போலிருக்கிறது. திரும்பி ஓரடி முன்வைத்த அமைச்சர், சட்டென்று திரும்பி, என்னைக் கூர்மையாகப் பார்த்தார்.

விழிகளில் திகைப்பு ஒளிர என்னை நோக்கி வந்து என் கைகளைப் பிடித்தார்.

“சார்! நீங்க மாணிக்கம் சார் தானே? திருப்பத்தூர் காலேஜிலே ப்ரொஃபஸராயிருந்தவர்தானே? என்னைத் தெரியலியா சார்?…” என்று அவர் படபட என்று கேட்டதும் நான் திடுக்கிட்டுப் போய்விட்டேன்.

உண்மையில் அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வெளியே செல்கிறார்கள். அவர்களையெல்லாம் நினைவு வைத்துக் கொள்ள இயலாது. நாம் பேராசிரியரான பிறகு பல ஆண்டுகள் ஓய்வு பெறும் வரை ஏறத்தாழ அப்படியேதான் இருக்கிறோம். அதனால் நம்மை மாணவர்கள் சுலபமாக அடையாளம் கண்டுவிட முடியும். ஆனால் நம்மிடம் படிக்கும் மாணவர்கள் இளமையிலிருந்து வளர்ந்து பெரியவர்களாகி உருவத்தில் மாறிவிடுகிறார்கள். ஆகையால் அவர்களை நம்மால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதில்லை. 

“சார்! நான்தான் சார், மீனாட்சி சுந்தரம். உங்ககிட்ட பி.யூ.ஸி.யிலே ஃபர்ஸ்ட் குரூப் படிச்சேன். கோலங்குடி கிராமத்திலிருந்து வந்து படிச்சேன். அடிக்கடி உங்க குவார்ட்டஸ்க்கு வந்து பார்ப்பேன்…” என்று அவர் சொன்னதும், சட்டென்று எனக்குள் நினைவு மின்னலிட்டது. அந்த மாண்புமிகு அமைச்சருக்குள் இருந்த மாணவன் என் கண்ணுக்குள் நிழலாடினான்.

அந்த மீனாட்சி சுந்தரத்தின் மேல் எனக்கு ஒரு தனிப்பிரியம் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. அவன் நிறைய மதிப்பெண் பெற்று கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவில் தகுதியடிப்படையிலே இடம் பெற்ற ஏழை மாணவன்..

ஒரு சிறிய கிராமத்தில் வசதிகள் குறைந்த பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து வந்தவனாக இருந்தாலும், கல்லூரியில் நன்றாகப் படித்து முன்னணி மாணவனாகத் திகழ்ந்ததால், அவன் மேல் எனக்கு தனிப்பிரியம். அவன் பி.யு.ஸி.யில் முதல் வகுப்பில், பல்கலைக்கழக ராங்க் உடன் தேறி, என்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து வருங்காலத்தில் பொறியாளனாகி ஊருக்கே பெருமை சேர்ப்பான் என்ற நம்பிக்கையோடு அவனுக்குத் தேவையான உதவியும் ஊக்கமும் அளித்து வந்தேன்.

ஆண்டிறுதித் தேர்வு முன்பு-தமிழகத்தில் கிளம்பிய ஏதோ ஓர் அரசியல் பிரச்னையில்- (அந்தக் காலத்தில் அடிக்கடி அரசியல் போராட்டங்கள் நடப்பதும், அவற்றிலே ஈடுபடும்படி மாணவர்களைத் தூண்டிவிடுவதும் சாதாரண நடைமுறை!) நாலைந்து மாணவர்கள் தீவிரமாக வேலை செய்தார்கள். அவர்களில் இந்த மீனாட்சி சுந்தரமும் ஒருவனாகச் சிக்கிக் கொண்டுவிட்டான்.

எங்கள் கல்லூரி, எப்போதும் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்றது. ஆனானப்பட்ட அமைச்சர்களே தலையிட்டாலும், கட்டுப்பாட்டை மீறிய மாணவனை மன்னிக்கமாட்டார்கள். அமைச்சரின் பரிந்துரைக்காக ஒரு மாணவனைச் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு மாணவனை டிஸ்மிஸ் செய்யும்போது யாருடைய சிபாரிசும் எடுபடாது.

கல்லூரியிலிருந்து விலக்கப்பட்ட பிறகு, ஸ்டாஃப் குவார்ட்டஸில் என் வீட்டுக்கு வந்து கண் கலங்க நின்றான் மீனாட்சி சுந்தரம். அவனைக் கண்டிக்க எனக்கு மனம் வரவில்லை.

“மீனாட்சி சுந்தரம்! கிராமத்திலிருந்து ஏழை ஒருத்தன் நம்ம கல்லூரியில் படித்து என்ஜினியராகி, வெளிநாடுகளுக்குப் போய், நாட்டுக்குப் பேரும் புகழும் பெற்றுத் தரப் போகிறாய் என்று நினைத்தேன். ஆனா, நீ எப்படியோ சந்தர்ப்ப சூழ்நிலையிலே படிப்பதை இழந்திட்டே!…பரவாயில்லை…நீ உனக்காக இந்தத் தப்பைச் செய்யலே. பொதுவான காரியத்துக்காகத்தான் இப்படிச் செஞ்சுட்டே! எல்லா மாணவனும் இன்ஜினியரிங் படிச்சு, மெடிக்கல் படிச்சுத்தான் புகழ் பெறணும்னு இல்லே. இந்தப் படிப்புகளைத் தவிர வேற எத்தனையோ துறைகள் இருக்கு. படிப்பும் அறிவும் கல்லூரிகளுக்குள்ளே மட்டும் இல்லை. அதற்கு வெளியே எவ்வளவோ இடங்கள், படிக்கவும் திறமையைக் காட்டவும் இருக்கு. உன்னோட அறிவுக்கும் திறமைக்கும் நீ இன்னொரு துறையிலேயும் முன்னுக்கு வரலாம்…கவலைப்படாதே! “டோன்ட் லூஸ் யுவர் ஹார்ட்’…கடவுள் ஒரு கதவை மூடினா, இன்னொரு கதவை திறந்து வைப்பார்…உனக்குனு ஒரு வழி நிச்சயமாய்க் கிடைக்கும்” என்று ஆறுதல் சொல்லி அவனை அனுப்பி வைத்தது என் நினைவுக்கு வந்தது.

"அந்த மீனாட்சி சுந்தரமா நீ? ஓ ஐ யாம் சாரி  நீங்க?” என்று குரல் தடுமாறியது எனக்கு.

“நோ…சார்! உங்களுக்கு நான் எப்போதும் நீதான். உங்க மாணவன்தான்…” என்று என் கரங்களைப் பிடித்து, தன் விழிகளின் ஈரத்தில் அழுத்திக் கொண்டார் அமைச்சர் சுந்தரம்.

எங்களைச் சுற்றிலும் நின்ற கூட்டம் அமைதியில் ஆழ்ந்திருந்தது.

மணமேடையின் பக்கத்திலிருந்து ஒரு குரல், "நேரமாயிருச்சு முகூர்த்த நேரம் ஆயிருச்சி…”என்று எழுந்து ஒலித்தது.

“சார்! வாங்க…வாங்க…” என்று என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மணமேடைக்கு வந்த அமைச்சர் பெரியவர் ஒருத்தர் நீட்டிய தாலிக் கயிற்றை வாங்கி என்னிடம் நீட்டினார்.

“சார்! நீங்க இந்தத் தாலியை மாப்பிள்ளை கிட்டே கொடுங்க…” என்றதும் நான் திகைத்துப் போனேன். நான் மட்டுமல்ல, சுற்றியிருந்த கூட்டமும்தான்.

“இல்லே…இல்லே…நீங்கதான்…நீங்கதான் பெரியவங்க…” என்று என் கைகளைப் பின்பக்கம் இழுத்துக் கொண்டேன்.

‘அரசியல்வாதிகள் எந்தக் கூட்டத்திலும், தனக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். திருமண வீடாயிருந்தால் மாப்பிள்ளையாகவும், இழவு வீடாக இருந்தால் பிணமாகவும் இருக்க நினைப்பார்கள்!’ என்று வேடிக்கையாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த அமைச்சர், என்னை முக்கியஸ்தனாக்கப் பார்க்கிறாரே என்று திகைத்தேன்.

“இல்லே, சார்! உங்க ஆசீர்வாதத்தாலே உயர்ந்தவன் நான்…நீங்கதான் என்னைவிடப் பெரியவங்க எல்லா வகையிலும்…” என்று அழுத்தமாகச் சொல்லி, தாலியை என் கைகளில் திணித்தார்.

“நேரமாயிடுச்சு…தாலியை மாப்பிள்ளை கிட்டே கொடுங்கோ…” என்று ஒரு பெரியவர் அவசரப்படுத்தினார்.

பதில் சொல்ல நேரமில்லாமல், கையிலிருந்த தாலியை மணமகனிடம் கொடுத்தேன்.

மங்கல ஒலிகளுக்கிடையே, மணமகன் தாலி கட்டியதும், நான் வழக்கம்போல், பூவையும் அட்சதையையும் மணமக்களின் தலைகளில் தூவி, மனமார வாழ்த்தினேன்.

– அக்டோபர் 2012

பின்னுரை :

காலம் மாறிப்போச்சு. மாணவர்களுக்கு ஆசிரியர்கள்  பயப்படும்படியான நிலை வந்து விட்டது.. காரணம் அரசியல் தான்.

பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் அவமதிக்கும் வகையிலான வீடியோக்கள், வகுப்பறையில் ஹீரோ, ஹீரோயின்களாக சித்தரித்தபடி உலா வரும் வீடியோக்கள், ரோட்டில் நடக்கும் மாணவர்கள் ஈடுபடும் கோஷ்டி மோதல் என பல சம்பவங்கள்  விவாதத்தை உருவாக்கி வருகின்றன....

மேலும் வாசிக்க இங்கு  

ஊசிக்குறிப்பு: 

சுப்ரமணிய சாமியின் திகைக்க வைக்கும் செயல் நினைவில் வராமல் இல்லை. வித்தியாசமான அரசியல்வாதி.  


ஆசிரியர் ::

அய்க்கண் (மு. அய்யாக்கண்ணு: செப்டம்பர் 1,1935- ஏப்ரல் 11, 2020) எழுத்தாளர், விமர்சகர், கல்வியாளர். கோட்டையூர் பிறந்த ஊர். திருப்பத்தூர் ஆறுமுகம் சீதையம்மாள் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


4 சிறுகதைத் தொகுப்புகள், 19 நாவல்கள், 6 வரலாற்று நாவல்கள், 11 நாடகங்கள், 14 கட்டுரைத் தொகுப்புகள் என 90 புத்தகங்கள் படைப்புகளாக
வெளிவந்துள்ளன. மொத்தம் 22 விருதுகள் பெற்றுள்ளார்.  

அய்க்கண்
எழுதிய நாடகங்கள் பலமுறை வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது நாடகம், 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பானது. சாகித்திய அகாதெமி தமிழில் வெளியான சிறந்த 30 கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டது. அவற்றில் இவரது கதை இடம் பெற்றது.

“என் கண்ணில் அய்க்கண் இலக்கியம் படைக்கவில்லை. அவர் எழுத்தை வணிக எழுத்து என்று தான் வகைப்படுத்துவேன்.” ஜெயமோகன் 

மேல் விவரங்களுக்கு     
அய்க்கண்.

கதையின் சுட்டி :  இங்கு க்ளிக் செய்யுங்கள்

21 கருத்துகள்:

 1. ஜெயமோகன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. இலக்கியம் வணிகத்தில் வராதா ? இவருடைய படைப்புகளை வியாபாரம் செய்யவில்லையா?
   Jayakumar

   நீக்கு
 2. யதார்த்தங்களுக்குப் புறம்பான கதை. ரொம்பவும் மெனக்கெடாத எழுத்து. 'கயல்வேந்தன் என்கிற மாதிரி அமைச்சருக்கு
  ஒரு மாற்றுப்பெயர் கொடுத்து அந்தப் பெயர் வரவேற்பு வளையங்களில் பளிச்சிட்டது' என்று யோசிக்கிற அளவுக்குக் கூட கதாசிரியர் அலட்டிக் கொள்ளவில்லை.
  சிறுகதைகள்.காமிலிருந்து கொஞ்ச நாளைக்கு வெளிவந்து வித்தியாசமான கதைகளைக் கொடுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார். PDF பார்த்து எழுதி பின்னர் தட்டச்சு செய்ய முடியாததால் சிறுகதைகள்.காம் தளத்தை சரண் அடைந்தேன்.

   ஏட்டில் இல்லாத மஹாபாரத கதைகளை அப்படித்தான் தட்டச்சு செய்ய வேண்டி வந்தது.

   இப்பகுதிக்கு பிறரும் படைப்புகளை பகிர்ந்து கொண்டால் நலம்.
   Jayakumar

   நீக்கு
  2. உங்கள் ஆதங்கம் புரிகிறது. நானும் மனசார உணர்கிறேன்.
   இன்னொரு பக்கம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன்
   மனம் ஒன்றிப் பதியும் சிறப்பான விஷயங்களுக்கும் எபியில் சரியான வாசிப்பு நேர்த்தி இல்லை
   என்ற போக்கும் தொடர்கிறது. பல நேரங்களில் அந்த மாதிரியான வாசிப்பு நேர்த்தியைக் கூட்ட வேண்டும் என்பதற்காகவே என் பின்னூட்டங்களும் அமைந்து விடுகின்றன. எனக்கு ஏன் இந்த வேலை என்று சில சமயங்கள் வருந்தியதும் உண்டு.
   எபி ஆசிரியர் குழாமினரும் எபிக்கான பின்னடைவு இது என்று உணர்ந்து இந்த விஷயத்தில் கவனம் கொண்டு ஊக்குவிக்க முன் வரவேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.

   நீக்கு
  3. // எபியில் சரியான வாசிப்பு நேர்த்தி இல்லை //

   // எபி ஆசிரியர் குழாமினரும் எபிக்கான பின்னடைவு இது என்று உணர்ந்து இந்த விஷயத்தில் கவனம் கொண்டு ஊக்குவிக்க முன் வரவேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன். //

   படைப்பு சிறப்பாக இருக்க முயற்சிக்கலாம். மற்றவை வாசிப்பவர்கள் சுவை, நேர்த்தி... எவ்வளவு சிறப்பாக சமைத்தாலும் பசி இருந்தால்தான் சுவை இருக்கும்.


   நீக்கு
  4. பதிலுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 5. செய்திகள் அனைத்தும் அருமை. மனித நேயம், உதவும் குணம், தன்னம்பிக்கை ஆகியவற்றை சொல்கிறது. அனைவருக்கும், வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. //சார்! நான்தான் சார், மீனாட்சி சுந்தரம். உங்ககிட்ட பி.யூ.ஸி.யிலே ஃபர்ஸ்ட் குரூப் படிச்சேன்//

  என் கணவரின் நினைவு வந்தது. மாயவரத்தில் எங்கு போனாலும் யாராவது ஒரு மாணவரை பார்த்து விடுவார்கள். பின்பு பெண்களும் படிக்கும் கல்லூரி ஆனது. அதனால் மாணவியரும் வணக்கம் சொல்லி "எங்கள் சார்" என்று தங்கள் கணவர் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்வார்கள்.

  அப்போது என் கணவரின் முகத்தில் பெருமிதம் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கணவரும் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

   நீக்கு
 7. //உங்க ஆசீர்வாதத்தாலே உயர்ந்தவன் நான்…நீங்கதான் என்னைவிடப் பெரியவங்க எல்லா வகையிலும்…” என்று அழுத்தமாகச் சொல்லி, தாலியை என் கைகளில் திணித்தார்.//

  ஆசிரியர் , மாணவர் மரியாதை தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. நானும் ஐயாவை நினைத்துக் கொண்டேன். ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களை நினைவில் நிறுத்த முடியாது. ஆனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு ஆசிரியரை நினைவில் நிறுத்தமுடியும்.

   கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
  3. இந்தக் கதை சாதாரண ஆசிரியர் -- மாணவர் உறவு, அது சம்பந்தப்பட்ட மரியாதைகள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசியல் களத்தில் செயல்பட்டு
   அமைச்சரான ஒருவர் தனக்கு இளமையில் பாடம் போதித்த ஆசிரியரை நினைவில் கொண்டு மரியாதை செலுத்துவது சம்பந்தப்பட்டது. பரவலாகக் காணப்படாத ஒன்று.

   நீக்கு
 8. ஆசிரியரிடம் மாணவருக்கு இருக்கும் மரியாதை தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 9. கே பி ராபியா சிறந்த நல்லுள்ளம் படைத்த பெண்மணி அவரின் சேவைகள் தொடரட்டும்.

  அனைத்து உதவும் நலன் விரும்பிகளையும் வாழ்த்துவோம்.

  ஆசிரியர்களை நினைவில் இருத்தி போற்றும் காலம் இனியும் இருக்குமா,?தொடர்ந்தால் மகிழ்ச்சியே.

  பதிலளிநீக்கு
 10. நடிகர் பாலா நலமுடன் வாழவேண்டும் என பிரார்த்திப்போம்.

  காரணம் பல ஏழைகளுக்கு பயன் உண்டு.

  பதிலளிநீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!