17.1.26

ஆறாயிரப்படியிலிருந்து ஒரு திருவாய்மொழி நான் படிச்ச கதை

 

                         நாலாயிர திவ்யப் பிரபந்தம் வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

முன்னுரை பகுதி 3

இந்த திவ்யப் பிரபந்தப் பாசுரங்களுக்கு எப்படி பொருள் சொல்வது? வைணவ சமயத்தில் (சித்தாந்தம் என்பதை சமயம் என்ற பொருளில் எழுதுகிறேன்) எல்லாவற்றையும் ரகசியமாக வைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அதாவது பொருத்தமானவர்களுக்கே அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்தது. அது போல, ஓராண் வழி சம்ப்ரதாயம் என்று ஒன்று இருந்தது. ஒரு ஆச்சர்யாருக்கு/குருவுக்கு பல சீடர்கள் இருந்தாலும், வைணவ சம்ப்ரதாயத்திற்கு அடுத்த குருவிடம்தான் (சீடர்களில் பொருத்தமானவரிடம்) சம்ப்ரதாயத் தலைமை செல்லும். நாலாயிர திவ்யப் பிரபந்தங்களின் பொருளும், மற்ற வைணவ சம்ப்ரதாய நூல்களின் விளக்கங்களும் குருவினால், பொருத்தமான சீடர்களுக்கு மாத்திரம்தான் விளக்கப்படும்.  நாதமுனிகள்தாம் குரு பரம்பரையின் முன்னோடி.  அவர் காலம் தொடங்கி இராமானுசர் காலம் வரை இந்த ஓராண்வழி சம்ப்ரதாயமே இருந்து வந்தது. நாதமுனிகளுக்குப் பிறகு அவருடைய சீடர் உய்யக்கொண்டார், பிறகு மணற்கால் நம்பி, பிறகு நாதமுனிகளின் பெயரர் ஆளவந்தார், பிறகு திருமாலையாண்டான், பிறகு இராமானுசர் என்று அறுவர் தலைமுறையில் திருவாய்மொழிக்கு வாய்மொழி உரை விளக்கம் ஓராண்வழியே உபதேசிக்கப்பட்டுச் சென்றது. பிறருக்கு அந்தப் பொருள் சென்றடையவில்லை. சீடர்களுக்கு அர்த்தம் தெரிந்திருந்தாலும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு/உரிமை/தகுதி ஒற்றை குருவுக்கே இருந்தது. இந்த முறையை மாற்றியவர் எம்பெருமானார்என்று பெயர் பெற்ற இராமானுசர்தாம். 

இராமானுசருக்கு முன்னமே வைணவ சமயம் இருந்தபோதிலும், அதனைப் பலருக்கும் எடுத்துச் சென்றதில் முன்னோடி, இராமானுசர். அதனால்தான் வைணவ சமயத்தை எம்பெருமானார் தரிசனம்என்றே சொல்கின்றனர். இராமானுசர் காலத்திற்கு 350 வருடத்திற்குப் பிறகு அவதரித்த ஸ்வாமி மணவாள மாமுனிகள் தாம் இயற்றிய உபதேச ரத்தின மாலையில், 

ஓராண் வழியாய்   உபதேசித்தார் முன்னோர் *

ஏரார் எதிராசர் இன்னருளால் ** பாருலகில்

ஆசையுடையோர்க்கு எல்லாம்   ஆரியர்காள்! கூறுமென்று *

பேசி வரம்பறுத்தார் பின்.    (37)                                                                                                  

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு

நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்-அம்புவியோர்

இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த

அந்தச் செயல் அறிகைக்கா  (38) 

என்று கூறுகிறார். 

இராமானுசர் காலத்தில்தான் திருவாய்மொழிக்கு பொருள், ஏட்டில் எழுதப்பெற்றது. இராமானுசரின் சீடரும், அவருடைய மாமன் மகனுமாகிய திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்பவர், இராமானுசரை திருவாய்மொழிக்குப் பொருள் எழுத வேண்டும் என்று வேண்டிகொண்டார். தானே உரை எழுதினால், திருவாய்மொழிப் பொருளுக்கு கரை எழுப்பியதாக ஆகிவிடும் என்று பிறர் நினைத்துவிடக் கூடாது, அவரவர் அறிவுத் திறனுக்கு ஏற்ப பிற்பாடு இந்த தரிசனைத்தை வளர்க்க வருபவர்களால் விரிவான பல பொருளுரைகள் தோன்றவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம். அதனால் திருக்குறுகைப் பிரானையே வியாக்கியானம் (பொருளுரை) எழுதப் பணித்தார். முதன் முதலாக திருவாய்மொழிக்கு மணிப்பிரவாள நடையில் (சமஸ்கிருதம் தமிழ் கலந்த நடை, சட் என்று எல்லோரும் இந்தக் காலத்தில் புரிந்துகொள்ள இயலாது, ஆனால் அந்தக் காலத்தில் இந்த நடை பரவலாகப் பலருக்கும் புரிந்திருந்தது. அந்தக் காலம்-9ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை)  அவர் எழுதிய வியாக்கியானமே ஆறாயிரப் படி என்று அழைக்கப்படுகிறது (ஒரு படி என்பது 32 எழுத்துக்களைக் குறிக்கும். அப்படி ஆறாயிரம் படிகளைக் கொண்டது இந்த நூல்) 

இப்போ உங்களுக்கு மணிப்பிரவாள நடை என்றால் என்ன என்ற சந்தேகம்வரும். வடமொழியும் தமிழும் சேர்ந்த நடை. ஆறாயிரப்படியிலிருந்து ஒரு திருவாய்மொழி பாசுரத்திற்கு எப்படி அர்த்தம் எழுதியிருக்கிறார்கள் என்ற உதாரணம் தருகிறேன். 

எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில

வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே    (1.2.10) 

(எண்பெருக்கு) இப்படி சகலசமாச்ரயணீயனாகச் சொல்லப்பட்ட ஈச்வரன் தான் ஆரென்னில்; அசம்க்யேயராய் ஞானாநந்தஸ்வபாவராயிருந்த சர்வாத்மாக்களையும் நித்யசித்தகல்யாணகுணங்களையும் உடையனாய் இருந்த நாராயணன். அவனுடைய ஆச்ரிதரை ஒருகாலும் கைவிடாதே ரக்ஷிக்கும் ச்வபாவமான திருவடிகளை ஆச்ரயி என்கிறார். 

சுலபமான ஒரு பாசுரத்தை எடுத்துக்காண்பித்திருக்கிறேன். காலக்ஷேபம் (அல்லது சீடர்களுக்குப் பொருளுரைத்தல், விரிவுரை) காலத்திலும் இப்படித்தான் பொருளுரைப்பார்கள். இதற்கான காரணம் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். திருவாய்மொழி சமஸ்கிருத வேதத்தின் சாரம் தமிழில். அதுபோல திருவாய்மொழி இராமாயணம், மகாபாரதம் மற்றும் பல புராணங்களில் உள்ளவற்றில் உள்ள கதைகளையும் அடக்கியது. அதனால் மூல வாக்கியங்களையும் குறிப்பிட்டே விளக்கவுரைகள் சொல்லப்பட்டன. பாசுரத்தைப் பார்த்தாலும், எழுத்துக்கள் சேர்ந்திருப்பதைக் காணலாம். அந்தக் காலகட்டத்தில் இவற்றில் ஈடுபட்டவர்கள், அதாவது காலக்ஷேபம் கேட்பவர்களும் சமஸ்கிருத ஞானம் பெற்றிருந்தனர். மூல ஏட்டில் இருக்கும் பாசுரம்  புரியும்படி இருக்கவேண்டும் என்றால், 

எண்பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில

வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே 

என்று இருக்கவேண்டும். 

இதன் பொருள்:  எண்ணிக்கையால் மிகுந்து இருக்கின்ற ஞானம், ஆனந்தம் போறவற்றிர்க்கு இருப்பிடமாயும், ஞானமயமாய், அழிவற்ற புகழினை உடையவனான ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை உறுதியாகப் பற்றுவாயாக. இதில் நாராயணனின் திருவடிகள் எதற்கும் ஈடாகாது, அதனால் அதனைப் பற்று என்கிறார்.  

ஸ்ரீபெரும்பூதூர் இராமானுசர், சரம திருமேனியின் வடிவம், ஸ்வாமி மணவாள மாமுனிகள்

தொடர்வோம்...

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நான் படித்த கதை - பானுமதிவெங்கடேஸ்வரன்

புதுப்புனல் சிறுகதை தொகுப்பு -அனுராதா ஜெய்சங்கர்

நான் படித்த புத்தகம் 

புதுப்புனல் சிறுகதை தொகுப்பு - அனுராதா ஜெய்சங்கர் - புஸ்தகா பப்ளிகேஷன்ஸ்.

சமீப காலங்களில் பத்திிரிகைகள், மற்றும் இணையங்களில் நடத்தப்படும் சிறுகதை, குறுநாவல் போட்டிகளில் அதிகம் பரிசு பெறுபவர்களில் ஒருவர் அனுராதா ஜெய்சங்கர். புதுப்புனல் என்னும் இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பதினாங்கு கதைகளில் நான்கு பரிசு பெற்றவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு பெண் எழுத்தாளர்களுக்கு ஒரு சௌகரியம் இருந்தது. பெண்களின் துயரங்களை, தியாகங்களை மாய்ந்து மாய்ந்து எழுதி பெண்களின் ஆதரவை சம்பாதித்து விடலாம். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் அவற்றை ரசிக்கவும் மாட்டார்கள், ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். இன்றைய பெண் சந்திக்கும் சவால் வேறு, அவள் சூழலே வேறு. அவற்றை மிக அழகாக கையாண்டிருக்கிறார் அனுராதா ஜெய்சங்கர்.

புதுப்புனல் என்னும் முதல் கதையில் ஒரு பள்ளியில் வாட்ச்மேனாகபணியாற்றும், குழந்தைகள் இல்லாத ஒரு முதியவர் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனை தன் பேரனாகவும், அவன் தாயை தன் மகளாகவும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கார்டியனாக மாறுகிறார்.

கடல் கன்னி அடடா! கடலைப் பற்றிய வர்ணனைகள் இவரே ஒரு கடல் கன்னியோ என்று எண்ண வைக்கிறது. அற்புதமான சொல்லாடல்!

டீன் ஏஜ் குழந்தைகளைை வைத்துக் கொண்டிருக்கும் மத்திம வயது பெண் தன் மனக் கிலேசங்களை வயதான பெற்றோர்களிடம் கொட்ட வருகிறாள், அதைச் செய்தாளா? ‘மூச்சு விடும் நேரம’ கதை நாயகி நவீன பெண்ணாயிற்றே? செருப்பை மட்டிக் கொள்ளும் பொழுது ஷூ ஸ்டாண்ட் அருகே இருக்கும் ஒட்டடையை பார்த்து நாளைக்கு அம்மா, அப்பாவிற்காக வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்ரு நினைக்கும் பெண் பெற்றோர்களுக்கு கவலையைத் தருவாளா?

‘பருப்பு அளவு பொருப்பு’ புன்னகைக்க வைக்கும் ஃபேமிலி டிராமா.

‘இனியொரு விதி செய்வோம்’ கதையில் சிறுமிகளை வண்புணர்வு செய்யும் பாதகர்களுக்கு என்ன விதமான தண்டனை தர வேண்டும் என்று கொஞ்சம் சினிமாட்டிக்காக யோசித்திருக்கிறார்.

‘நானும் ஸ்ருதியும் என் கேர்ல் ஃப்ரண்ட்சும்’ கதையில் பல வருடங்களுக்குப் பிறகு தன் பள்ளி ரீ யூனியனுக்குச் செல்ல விரும்பும் கணவன் தன் மனைவியையும் அழைக்க, வளர்ந்த குழந்தைகள் அவருடைய முன்னாள் கேர்ல் ஃப்ரண்டுகளைப் பற்றி கேட்க, தர்மசங்கடமாக உணரும் தந்தைக்கு கோபம் வருகிறது. ஆனால் அதில் கோபம் கொள்ள எதுவுமில்லை என்று முதிர்ச்சியோடு மகள் உணர்த்துகிறாள்.

தொலைகாட்சிகளில் புதிய திரைப்படங்களை ‘உலக தொலை காட்சிகளில் முதல் முறையாக’ என்று விளம்பரம் செய்வார்கள். அதைப்போல இதுவரை யாரும் எழுதாத கிஃப்டெட் சில்ட்ரென்(gifted children) பிரச்சனைகளைப் பற்றி எழுதியிருக்கிறார் அனுராதா ஜெய்சங்கர். மிகவும் சிறப்பான படைப்பு.

பேட்மிண்டன் வீரனான ஆணினால் அதே விளையாட்டு வீரங்கணையான மனைவியின் திறமையை ரசிக்க முடியவில்லை. அதை மாற்றுவதும் ஒரு ஆண்தான். ‘லவ் ஆல்’ கதை பேசும் விஷயம் இது.

‘அரும்பு மலரும் நேரம்’ வாழ்வின் கடை நிலையில் இருக்கும் இருவரிடையே காதல் அரும்புவதை அழகுற சொல்லும் கதை. “நம்பி ஏறலாமா?”, “நம்பிக்கை இருந்தா ஏறு” ஏறினா இறங்க மாட்டேன்” நானா இறங்கச் சொல்ல மாட்டேன்” ரசிக்கக் கூடிய உரையாடல்கள்.

சிறு வயதில் தனக்கு தைரியம் கொடுத்து, ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய தன் தந்தை வயதான காலத்தில் நோயும், தனிமையும் படுத்தி எடுக்க பயத்தில் நடுங்கும் பொழுது தாயாக மாறி அவரைத் தேற்றும் கருணையை ‘உறவுச் சக்கரத்தில’' விவரிக்கிறார்.

இந்த தொகுப்பின் கடைசி குறுநாவல் ‘உயிரில் மலர்ந்த சுடர்கள்’ என்னும் கதை. தன்னுடைய ஆராய்ச்சிதான் பிரதானம் என்று இருக்கும் ஒரு விஞ்ஞானிை வெங்கடேஷை மணந்து கொள்ளும் மாலினி. இருவரும் சந்தோஷமாகவே வாழ்கிறார்கள், இருவரிடமும் எந்த குறையும் இல்லை, ஆனாலும் குழந்தை பிறப்பது தள்ளிப் போகிறது. செயற்கை கருத்தரிப்பிற்கோ, வேறு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளவோ மாலினி விரும்பவில்லை. “நம்மிருவரிடமும் எந்தக் குறையும் இல்லை ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை என்றால் நான் பிறந்ததற்கு வேறு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்” என்று கூறுகிறாள். ஒரு முறை வெங்கடேஷ் வெளிநாட்டிற்கு கிளம்பும் முன் அவனிடம் ஒரு சந்தோஷ செய்தியை சொல்ல வேண்டும் என்கிறாள். அவன் பிரயாண தயாரிப்பு மும்முரத்தில் அது என்னவென்று கேட்க மறந்து விடுகிறான். ஃபோனில் சொல்ல மறுத்து விடுகிறாள். ஆனால் அவன் நாடு திரும்பும் முன்னரே மாரடைப்பால் மரணித்து விடுகிறாள். என்ன சொல்ல விரும்பினாள்? ஒரு வேளை காத்திருந்த தாய்மை கனிந்து விட்டதோ? வெங்கடேஷின் தேடலுக்கு கிடைக்கும் விடை.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அனுராதாவின் எழுத்தில் யாருடைய பாதிப்பும் இல்லாதது ஒரு சிறப்பு. எதையும் வலிந்து புகட்டாமல் போகிற போக்கில் எளிமையாக சொல்கிறார்.

“பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் கொஞ்ச நேரம் வெளியே நிற்க வைப்பது போல்.”

“கல்யாணம் முடிந்து காலியான சத்திரம் போல காலியாகக் கிடந்தது பள்ளிக்கூடம்”

“அவள் பார்வை என்னைத் தொட்டுவிட்டு திரும்பிய வேகம், காலைத் தொட்டுவிட்டு ஓடுகிற அலை போல இருந்தது”

வீட்டிற்குள் புது ஆள் வந்தவுடன் எப்போது நம்மைப் பார்ப்பார்கள் என்று எட்டி எட்டி பார்த்துக்கோண்டிருக்கும் குழந்தை போல புது இலைகளுடன் முருங்கை கிளைகள் பால்கனி வழியே உள்ளே நுழைந்து அசைந்து கொண்டிருந்தன’ என்று வித்தியாசமான உவமைகள் ரசிக்க வைக்கின்றன. இவருடைய எழுத்தில் இருக்கும் பாசிடிவ் அப்ரோச் பாராட்டப்படக்கூடியது. எதிர்பார்ப்பை தூண்டும் எழுத்து உங்களுக்கு இன்னும் நிறைய எழுதுங்கள் அனுராதா.

56 கருத்துகள்:

  1. 'கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
    கன இருள் அகன்றது காலையம்பொழுதாய்'
    காலை வணக்கம்!

    பதிலளிநீக்கு
  2. இன்று நெல்லைஜியின் முன்னுரை #3, பானுமதி வெங்கடேஸ்வரன் எழுதியுள்ள புத்தக விமர்சனம், ஆகிய இரண்டுமே அருமை!!

    பதிலளிநீக்கு
  3. புதுப்புனல் என்று நூலுக்கு தலைப்பு வைததால் அந்தக் கதை ஏதாவது சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றிருக்கலாம் என்றும் கொள்வதற்கில்லை. அந்தக் கதை பரிசுக்குத் தேர்வாகியிருந்தாலும் மற்ற மூன்று கதைகள்? தினமலர் வாரமலரில் பரிசு பெற்ற கதைகளை வாசிக்க நேரும் போது என்ன க்சரணத்திற்காக அந்தக் கதைக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்றே என்னால் புரிந்து கொள்ள முடியாது. சில எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்ய நினைத்துக் கொள்வேன். நான்கு கதைகள் பரிசுக்கு த் தேர்வாகியிருந்த்தலும் எந்தந்த கதைகள் அவை என்று பா.வெ. சொல்லாதது தான் அவர் விவரிப்பின் சிறப்பாக எனக்குத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  4. இராமானுஜர் என்றே எழுதுங்களேன் நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்.... தமிழில் எழுதும்போது அப்படி வந்துவிடுகிறது. இனி இராமானுஜர் என்றே எழுதப் பார்க்கிறேன். இராமனுக்கு அனுஜன், தம்பி, லக்ஷ்மணர் என்பதைக் குறிக்க, இராமானுஜர் என்ற பதம். அவருடைய இயற்பெயர், இளையாழ்வார், லக்ஷ்மணமுனி.

      நீக்கு
    2. ஆச்சாரியார்கள் பெயர்களை உச்சரித்து உச்சரித்து மனம் பழக்கப்ப்டு விட்டதால் சின்ன மாற்றமுமும் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. அதனால் சொன்னேன். தற்சமம், தற்பவம் என்று தமிழில் இலககண விதிகள் உண்டு தான். சங்ககாலம் தொட்டே தமிழோடு கலந்த சொற்களாக மணிப்பிரவாள எழுத்து நடை இருப்பது உங்களுக்கும் தெரியும். ஜெயகாந்தன் எழுத்துக்களில் இந்த நடையை நீங்கள் பார்க்கலாம்.

      நீக்கு
    3. உங்கள் கருத்து மிகச் சரியானது. செயகாந்தன் என்று இலக்கணமாக எழுதுவது சரியல்லதான். அது அந்த ஆளுமையின் கம்பீரத்தைச் சிதைக்கிறது. இனி இதனை மனதில் கொள்கிறேன் (இன எழுதும் பகுதிகளில்)

      நீக்கு
  5. நெல்லை, நல்ல விவரணங்கள். அறியாத சில விஷயங்கள் அறிய வாய்ப்பு. ஆனால் மனதில் நிற்கணுமே!

    நல்லா உழைச்சு எழுதறீங்க நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். எனக்குமே மனதில் தங்குவதில்லை. அதனால் நீங்கள் தனி ஆள் இல்லை. ஹா ஹா ஹா. உங்களுக்குத் தெரியுமா? எனக்கு ஆட்களின் மைகம் நினைவுல் இருக்காது என்று. நிறைய முறை சந்தித்து, புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால்தான் (அவ்வப்போது) மனதில் உருவம் பதியும். அந்த லட்சணத்துல, விளக்கங்கள் பாசுரங்கள் எங்க பதிகிறது?

      நீக்கு
  6. பானுக்கா, புதுப்புனல் - அனுராதா ஜெய்சங்கர் கதைகள் எல்லாமே வித்தியாசமாக ரொம்ப நல்லா இருக்கும்னு உங்க விமர்சனமே சொல்கின்றன. அவங்க நல்லா எழுதுவாங்க என்பதில் சந்தேகமே இல்லை.

    உங்க விமர்சனம் கிரிஸ்ப், பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நானும், சிறப்புக் குழந்தை பற்றி ஒருகதை எழுதி பாதியில் இருக்கிறது அது ரொம்ப வருஷம் ஆச்சு. சிறப்புக் குழந்தைகளோடு அனுபவங்கள் உண்டு என்பதால் எழுதத் தொடங்கிய கதை. முடிக்கப் பார்க்க்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும், சிறப்புக் குழந்தை பற்றி ஒருகதை எழுதி பாதியில் இருக்கிறது// இங்கே ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். சிறப்பு குழந்தைகள் என்னும் ஸ்பெஷல் சில்ட்ரென் வேறு, கிஃப்டெட் கிட்ஸ் வேறு. முதல் வகையினர் ஆட்டிஸம் போல் ஏதோ ஒரு வகையில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
      கிஃப்டெட் கிட்ஸ் என்பவர்கள் வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி கொண்டவர்கள். பிராடிஜிகள், சமகாலத்தை தாண்டி யோசிப்பவர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே பத்தாம் வகுப்பு தேர்வை இவர்களால் எழுத முடியும், அதனால் எட்டாம் வகுப்பு போரடிக்கும். இவர்களை சராசரி பெரும்பான்மையினரால் புரிந்து கொள்ள முடியாது. இந்த விஷயங்களை நான் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

      நீக்கு
  8. /திருவாய்மொழி சமஸ்கிருத வேதத்தின் சாரம் தமிழில்/
    வேதத்தில் சிவனையோ திருமாலையோ டைரக்டாகக் குறிப்பிடுவதில்லையென்று சிலர் வாதிடுகின்றார்கள். இந்தக் கருத்து ஏற்புடையதா?

    /எண்பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில
    வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே /
    இந்தத் திருவாய்மொழிப் பாசுரத்திற்கு மூலம் எந்த வேதத்தில் எந்த ஸம்ஹிதையில் வருகின்றது என்று கூற முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு வேதமும் கவனத்துடன் படிச்சுப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கடினமான தேடல்.

      நீக்கு
    2. வாங்க சூர்யா சார்... நல்ல கேள்வி. வேதம் இருவரையும் குறிப்பிடுகிறது. நாராயணன் என்கிறது. பொதுவாகவும் குறிக்கிறது.

      வண்புகழ் நாரணன் - நாராயண பரோ ஜ்யோதிர். அந்தர் பஹிஸ்ச தஸ் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித: - நாராயணன் உள்ளும் புறமும் நிறைந்து இருக்கிறான்.

      இறைவனைப் பற்றி முதல் பத்து பாசுரங்களில், அவன் எப்படிப்பட்டவன் என்று அருளிச்செய்தார். உயர்வர உயர்நலம் உடையவன் என்று தொடங்கி. இரண்டாம் பத்துப் பாசுரங்களில் அவனை எப்படி அடைவது என்கிறார். ஒரே வழி, அவனது திருவடியைப் பற்றி சரணாகதி அடைவது ஒன்றே உய்வதற்கான வழி.

      முண்டகோபநிஷத், ப்ரம்மசூத்ரம், வேதம் போன்றவற்றில் எனக்கு ஞானம் இல்லை.இவற்றில் நிறைய rules உண்டு. ஆனால் இந்த பத்து பாசுரங்களில் இறைவனை அடையும் வழி சொல்லப்படுகிறது.

      நீக்கு
    3. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். உபநிஷத்துகளைக் கற்றிருக்கிறேன். அதற்கான பொருளை அவ்வப்போது படிப்பேன். எனக்கு சிறிய வயதில் (9ம் வகுப்பு) என் பெரியப்பா வேத்த்தைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அசிரத்தை காரணமாக கற்றுக்கொள்ளவில்லை. வேதம் பல இடங்களில் பூடகமாக, உருவகமாகச் சொல்லிச் செல்லும். எனக்கு இந்த ஜென்மத்தில் அது எட்டாக்கனி.

      நீக்கு
    4. // வேதங்களில் நாராயண, விஷ்ணு direct mention உள்ளது. ஆனால், சிவன் நாலு வேதங்களிலும் கிடையாது. ஏனெனில், சிவன் தமிழ் பெயர்; சிவந்த நிறமுடையவன் என்ற பொருளில். வேதங்களில் ருத்ரன் உண்டு. பிற்காலத்தில், ருத்ரன்தான் சிவன் என்று equivalence உருவாக்கப்பட்டது.

      நீக்கு
    5. திருமால்தான் நாராயணன்/விஷ்ணு என்று ஒத்துக்கொள்ளாதவர்களும் இருக்கக்கூடும். are you coming from that angle?

      நீக்கு
    6. @Nellai! அப்பாவிலிருந்து ஆரம்பித்து வேத அத்யயனம் நின்னு போச்சு. என் அண்ணா, தம்பி, பெரியப்பா பையர்கள்(அண்ணாக்கள்) யாருமே வேத அத்யயனம் செய்யவில்லை. ஆனால் என் அப்பா தன் பேரனுக்குப் பூணூல் போட்டதும் வேத அத்யயனம் செய்வித்தார். அதே போல் ஒரு பெரியப்பாவின் பேரனும் வேதம் அத்யயனம் செய்தான். இப்போதைய தலைமுறையில் அவங்களுக்கெல்லாம் குழந்தையே இல்லை. :( பெரியப்பா பேரனுக்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை! :( எங்க புக்ககத்தில் இதிலெல்லாம் யாருக்குமே ஆர்வம் இல்லை. பொதுவாக சாஸ்திர, சம்பிரதாயங்களே அவ்வளவாத் தெரியாது. மடி, ஆசாரம் மட்டுமே கடுமையாகப் பின்பற்றுவார்கள். எச்சல், பத்து, தீட்டெல்லாம் பார்த்ததில்லை. நான் தான் அதை எல்லாம் நோண்டுவேன்.

      நீக்கு
    7. வேதத்தில் அல்லது ருத்ரத்தில் "ஓம் நமசிவாய" குறிப்பிடப்படுவதாகச் சிலர் சொல்லிக் கேள்வி!

      நீக்கு
    8. //திருமால்தான் நாராயணன்/விஷ்ணு என்று ஒத்துக்கொள்ளாதவர்களும் இருக்கக்கூடும்// திருவாழ்மார்பன்... அடி மடிலயே கைவைக்கிறீங்களே..... தமிழில் திருமால், மாலவன். அவர்தான் விஷ்ணு, நாராயணன். திருமால் இரும் சோலை - திருமாலிருஞ்சோலை. வைணவ திவ்யதேசத்தில் ஒன்று.

      உபநிஷத்தில், பஞ்ச ஸுக்தத்தில், புருஷ ஸுக்தம், நாராயண ஸுக்தம், விஷ்ணு ஸூக்தம் உண்டு. ஆதிபுருஷன், மூல புருஷன் அல்லத் ஒற்றைத் தெய்வத்தை விளக்க வார்த்தை இல்லாமல்,

      ஸகஸ்ர ஸீர்ஷா புருஷ: என்று ஆரம்பிக்கிறது புருஷ ஸூக்தம்.

      நீக்கு
    9. //பொதுவாக சாஸ்திர, சம்பிரதாயங்களே அவ்வளவாத் தெரியாது. மடி, ஆசாரம் மட்டுமே கடுமையாகப் பின்பற்றுவார்கள்.// கீதா சாம்பசிவம் மேடம்... பலவும் தற்கால கட்டங்களில் நீர்த்துப்போகிறது. மக்களுக்கு பலவற்றில் நம்பிக்கை ஏற்படுவதில்லை. எல்லாருமே பணத்தையே பிரதானமாகக் கொள்கிறோம். ஆனால் வழி வழி வந்த பழக்கவழக்கங்களால் மடி ஆசாரம் போன்றவற்றைக் கைக்கொண்டிருக்கிறோம், முடிந்த சமயங்களில்.

      நீக்கு
    10. //வேதத்தில் அல்லது ருத்ரத்தில் "ஓம் நமசிவாய" குறிப்பிடப்படுவதாகச் சிலர் சொல்லிக் கேள்வி!// நேரடியாகக் கிடையாது என்று நினைக்கிறேன். பஞ்சாட்சிர ஸ்ரீருத்ரத்தின் நடுப்பகுதியில் இருப்பதாகக் குறிப்பிடுவர். இதுவும், திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் ஓம் என்ற மந்திரம் உறைந்துள்ளதைக் குறிப்பிடுவது போலத்தான் என்று நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    11. ///திருமால்தான் நாராயணன்/விஷ்ணு என்று ஒத்துக்கொள்ளாதவர்களும் இருக்கக்கூடும்// திருவாழ்மார்பன்... அடி மடிலயே கைவைக்கிறீங்களே.....// அடி மடியிலோ மேல் பாக்கெட்டிலோ கை வைக்கவில்லை. எல்லா விதமாகவும் பேச ஆட்களுண்டு; உங்களுடைய கோணம் என்ன என்று சூர்யாவைக்கேட்கிறேன். மீண்டும் நான் (மேலே)எழுதியதை படித்துப் பாருங்கள்.
      'திருமால்' அல்லது 'சிவன்' என்னும் தமிழ் பெயர்களை வேதத்தில் எதிர் பார்க்கலாகாது என்பது தெரிந்ததுதானே? அதனால்தான் அவருடைய நோக்கத்தை கேட்கிறேன்.

      நீக்கு
    12. //தமிழில் திருமால், மாலவன். அவர்தான் விஷ்ணு, நாராயணன்.// இந்த திருமால்தான் விஷ்ணு என்ற equivalence வேதத்தில் (வேத காலத்தில் எந்த மொழியிலும்) சொல்லப்படவில்லை. இதுதான் சூர்யா கேள்விக்கான நேரடி பதில். புரிகிறதா?

      நீக்கு
  9. நெல்லையின் கடின உழைப்புக்குத் தலை வணங்குகிறேன். அருமையான பகிர்வு. இன்னும் தத்துவ விளக்கங்கள் விரிவாக வரும் என எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு அறிவுலாம் இல்லை கீசா மேடம். இருந்தாலும் புரிந்துகொண்டதை எழுதுகிறேன். முடிந்த அளவு விவாத்த்துக்குரியவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.எப்படி பாசுர விளக்கங்களை ஆரம்பிக்கலாம் என்பது இன்னமுமே யோசனையாக இருக்கிறது.

      நீக்கு
  10. பானுமதியின் வழக்கமான பாணியில் ரத்தினச் சுருக்கமாகக் கொடுத்திருக்கும் விமரிசனக் கட்டுரை நன்றாக இருந்தாலும் புத்தகத்தை வாங்கியோ அல்லது தேடியோ படிக்கணும்னு ஆவல் எதுவும் ஏற்படவில்லை.

    பதிலளிநீக்கு
  11. இனி வரப்போகும் சனிக்கிழமைகளில் பானுமதியும் நெல்லையும் கொடி கட்டிப் பறக்கப் போகிறார்கள் என எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் வாரங்களுக்கு இன்னும் எழுத ஆரம்பிக்கணும் கீசா மேடம். நான்கு நடவைகள் அதற்குத் தயாராக உட்கார்ந்து ஒன்றுமே எழுத ஆரம்பிக்கவில்லை.

      நீக்கு
    2. ஹாஹாஹா! நெல்லை எங்கே? நான் எங்கே ?

      நீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ​ஸ்ரீ ஆளவந்தார் கதையை சனிப்பதிவுக்கு அனுப்பியிருந்தேன். அதற்குள் குரு பரம்பரை முன்னுரையில் வந்திருக்கிறது.
    நெல்லையிடம் உள்ள ஒரே குறை சொல்ல வேண்டிய விசயத்தை மட்டும் சொல்லாமல் அதன் கிளைக்கதைகளாக மற்ற விஷயங்களிலும் புகுந்து விடுவதால் முக்கியமான அம்சங்கள் மனதில் நிற்காமல் கிளைக்கதைகளே நிற்கின்றன.
    பா வெ அவர்களுடைய புத்தக விமரிசனம் நன்று. ஆனாலும் மரபு வழிப்படி அணிந்துரையாகவே அமைவதால் ஒரு ஆர்வக்குறைவு ஏற்படுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். ஆளவந்தார் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், என்னவாக இருக்கும் என்ற எண்ணத்துடன்.

      கிளைக் கதைகளுக்குத் தாவுவது என் இயல்பாக அமைந்துவிட்டது. பிறகு எப்போ சந்தர்ப்பம் அமையுமோ என்ற எண்ணமும், கிளைக் கதைகள் சம்பவங்கள் மனதில் அப்போது தோன்றுவதாலும் இது நிகழ்கிறது.

      நீக்கு
    2. ///பா வெ அவர்களுடைய புத்தக விமரிசனம் நன்று. ஆனாலும் மரபு வழிப்படி அணிந்துரையாகவே அமைவதால் ஒரு ஆர்வக்குறைவு ஏற்படுகிறது.// ஆ! 'புத்தக விமர்சன விமர்சனம் நன்றாக செய்திருக்கிறீர்கள், ஜேகேசி' என்று நானும் புத்தக விமர்சன விமர்சன விமர்சனம் செய்துவிடுகிறேன் ;-) ;-)//

      நீக்கு
  14. இன்றைய நாளின் இரண்டு பகிர்வுகளும் சிறப்பு. நெல்லைத்தமிழனின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. முன்னுரை பகுதி 3 நன்றாக இருக்கிறது.

    //எல்லாவற்றையும் ரகசியமாக வைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அதாவது பொருத்தமானவர்களுக்கே அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்தது. அது போல, ஓராண் வழி சம்ப்ரதாயம் என்று ஒன்று இருந்தது. ஒரு ஆச்சர்யாருக்கு/குருவுக்கு பல சீடர்கள் இருந்தாலும், வைணவ சம்ப்ரதாயத்திற்கு அடுத்த குருவிடம்தான் (சீடர்களில் பொருத்தமானவரிடம்) சம்ப்ரதாயத் தலைமை செல்லும். நாலாயிர திவ்யப் பிரபந்தங்களின் பொருளும், மற்ற வைணவ சம்ப்ரதாய நூல்களின் விளக்கங்களும் குருவினால், பொருத்தமான சீடர்களுக்கு மாத்திரம்தான் விளக்கப்படும். //

    ஓராண் வழி சம்ப்ரதாயம் தெரிந்து கொண்டேன்.

    அதை மாற்றிய இராமானுசர்,
    எம்பெருமானார் தரிசனம் அருமை.

    திருக்கோஷ்டியூர் நினைவுக்கு வருகிறது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். திருக்கோஷ்டியூர் பற்றியும் பின்பு வரும். ஆனால் முழு வரலாறு என்று அதற்குள் புகுந்தால் பாசுரங்கள் பக்கம் வரவே மாதக்கணக்காகிவிடும்

      நீக்கு
  18. அனுராதா ஜெய்சங்கர் அவர்களின் புதுப்புனல் சிறுகதைகளை மிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். பானுமதி வெங்கடேஸ்வரன்.
    முக்கியமாக கதைகளில் தனக்கு பிடித்த வரிகளை எடுத்து போட்டு விமர்சனம் செய்து இருப்பது படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  19. நெல்லை அவர்களின் பகுதி சிறப்பான தகவல்கள் பலவற்றையும் அறியத்தருகிறது தொடருங்கள் பாராட்டுகள். கதை விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய சனிக்கிழமை சிறப்பான நாளாக மலர்ந்துள்ளது. இன்றைய பதிவுகளை இரண்டுமே நன்றாக உள்ளது. இன்றைய பாசுரப்பகுதி, மற்றும், கதைப்பகுதியை எடுத்தாண்ட சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்களும், சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களும், அவரவர் பங்கை திறம்பட செய்துள்ளனர். இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பக்தி நிறைந்த பாசுரம் முன்னுரை ஆழ்வார்களைப்பற்றிய பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. கதைகளின் முடிவின்படி கதாசிரியரின் திறமைகளை சகோதரியின் விமர்சனம் எடுத்துச் சொல்கிறது. தங்களின் சிறந்த எழுத்துகளின்பால் இவற்றையெல்லாம் அறியத் தரும் இருவருக்கும் என் பணிவான நன்றி🙏. .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். மிக்க நன்றி.

      நீங்க பிரார்த்திக்கலைனா, ஸ்ரீராமும் ப்ரார்த்திக்க மறந்துவிடுவதைக் கவனித்தீர்களா?

      நீக்கு
  21. சங்கரா டிவியில் விசாஹா ஹரி அவர்களின் விஷ்ணு சஹஸ்ரநாமம் உபந்யாசம் மிகப் பிரமாதமாக இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முடிந்தவர்கள் பார்த்துக் களிக்கவும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!