இங்கு எழுதினாலும் தவறில்லை. சென்னையில் அமைந்துள்ள விஜிபி கடற்கரை வளாகத்தில் நிறைய பழங்காலச் சிலைகள், தூண்கள் இருக்கும். அவற்றையெல்லாம் தென்னகத்திலிருந்து கொண்டுவந்துவிட்டார் என்று சொல்லுவர். அவருக்கு இந்தச் சிந்தனை, மதுரை மதனகோபால ஸ்வாமி கோயில் மண்டபம் வெளிநாட்டுக்குப் பெயர்ந்ததிலிருந்து வந்திருக்கவேண்டும்.
மதுரையிலிருந்த
கோயிலின் மண்டபமே அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருக்கிறது. (1920களில்)
அட என்னப்பா.. நம்ம ஊர் கோயில் மாதிரியே இருக்கு ஆனால் ரொம்ப மாடர்ன் லுக்கில் தரை மற்றும் மற்றவைகள் இருக்கிறதே என்று நீங்கள் யோசிக்கலாம்.
இது மதுரை மதனகோபால ஸ்வாமி கோயில் மண்டபத்தில் ஒரு காலத்தில் இருந்த தூண்கள். கோவிலின் சொந்தக்காரர்களிடமிருந்து (அட.. கோயிலுக்கே சொந்தக்காரர்களா? நல்லவேளை தஞ்சைப்பக்கம் இவர்கள் வரவில்லை. இல்லையென்றால் தஞ்சைப் பெரியகோயிலின் சொந்தக்காரர்களிடமிருந்து எல்லாவற்றையும் சல்லிசு விலைக்கு வாங்கிச்சென்றிருந்திருக்கலாம்) தூண்கள் போன்றவற்றை விலைக்கு வாங்கி (1912ல் அடெலைன் பெப்பர்கிப்சன் என்பவர், பிலடெல்பியா) அவற்றை அமெரிக்காவிற்குக் கொண்டுசென்று (அழிந்துபட்ட என்று சொல்கிறார்கள்) அங்கேயே இவற்றை நிறுவி விட்டார். இதனை அங்கிருக்கும் மியூசியத்தில் காணலாம்). இப்போதும் மதுரையில் மதனகோபால ஸ்வாமி கோயில் இருக்கிறது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகப் பெரிய இடத்தில் பல மண்டபங்களுடன் இந்தக் கோயில் இருந்திருக்கவேண்டும்).
இதுபோல கல்கத்தா தொல்லியல் ஆய்வாளர், தஞ்சைக்கு 1951ல் வந்திருந்தபோது இப்போது கரந்தை என்று அழைக்கப்படும் கருந்தட்டான் குடியில், வடவாற்றின் கரையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பிரம்மன் சிலை ஒன்றின் அழகில் மயங்கி அதனைக் கல்கத்தாவிற்கு எடுத்துச் செல்ல முயன்றார். அதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியாளராக இருந்த (தற்போது உள்ள சில மாவட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்….. சமீபத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த ஒருவனைப் பற்றி அந்த மாவட்ட ஆட்சியாளர் சொன்னது, இருவர் மீதும் தவறு இருக்கிறது, சிறுமி அவனைப் பார்த்து காறி உமிழ்ந்தாள், அந்தக் கோபத்தில் பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது என்றார்) திரு டி.கே பழனியப்பன் பார்வையிட்டு, அங்குள்ள மக்கள் இந்தச் சிலையை தஞ்சை மாவட்டத்திற்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று வலியுறுத்தியதைக் கண்டு, சிலையை தஞ்சை அரண்மனை கட்டிட த்திற்குப் பாதுகாப்பாக எடுத்துவந்தார். இதுபோல மாவட்ட த்தில் உள்ள கவனிப்பாரற்றுக் கிடக்கும் சிலைகளை எல்லாம் திரட்டி ஓரிடத்தில் வைத்தால் என்ன என்ற யோசனையில் இந்தக் கலைக்கூடம் 1951ல் உருவானதாம். இதுபோலவே பூமியில் புதைந்து கிடந்த செப்புச் சிலைகள், கோயிலில் வழிபாடு இல்லாமல் உள்ள செப்புச் சிலைகள் ஆகியவற்றைச் சேகரித்து இந்தக் கலைக்கூடத்தில் வைத்தாராம்.
எவ்வளவு அருமையான செயல்பாடு பாருங்கள்? அதனால்தான் அந்தக் கலைக்கூடத்தில் நிறைய கற்சிலைகளும், செப்பு/பஞ்சலோகச் சிலைகளும் நமக்குக் காணக் கிடைக்கின்றன.
ஆனாலும் எத்தனையோ ஆயிரக்கணக்கான செப்பு/பஞ்சலோகத் திருமேனிகள் காணாமல் போயிருக்கின்றன, கடத்தப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள்.
6ம் நூற்றாண்டில் திவாகர நிகண்டு என்ற நூல் திவாகரர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது. நிகண்டு என்றால் என்ன? சொல்லகராதி அல்லது சொற்களுக்கான பொருள்கள் என்று சொல்ல லாம். இந்த நூலே அதற்கு முன்பே இருந்த இன்னொரு நூலைத் தழுவி உருவாக்கப்பட்ட து (இந்த மாதிரி இடம் வந்தாலே எனக்கு சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு இன்னொரு விஷயத்துக்குத் தாவும் குணம் வந்துவிடுகிறது. நாம் தமிழகம் என்ற பரந்த நிலத்தின் வரலாற்றைப் பற்றி எண்ணும்போது இங்கு ஆதியில் சைவ சமயம்தான் இருந்தது, வைணவ சமயம்தான் இருந்தது என்றெல்லாம் முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இங்கு பௌத்த மற்றும் சமண சமயங்களும் மிக ஆழமாக வேரூன்றி இருந்தன. ஒரு சமயத்திற்கான நூல்கள், காப்பியம், அந்தச் சமயத்தை ஒழுகியவர்கள் செய்த மொழி இலக்கண நூல்கள் என்றெல்லாம் உருவாகவேண்டும் என்றால் அதற்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்கவேண்டும் என்று யோசியுங்கள். 3ம் நூற்றாண்டில், தமிழகத்தில் பரவலாக ஜைன, பௌத்த மதங்கள் வேரூன்றி இருந்தன என்பது உண்மை. அதனை மீறி சைவம் வளர்ந்த தாலும், அரசர்களின் பலத்த ஆதரவினாலும் இந்த இரண்டு மதங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபட்டன. இதற்கு மேல் படங்களுடன் இதனை விளக்க முற்பட்டால் பதிவு எங்கோ போய்விடும்)
உலோகச் சிற்பங்களுக்கும் கல்/சுதைச் சிற்பங்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், கல்/சுதைச் சிற்பங்களில் முழு உருவச் சிற்பம் மற்றும் புடைப்புச் சிற்பம் என்று இரண்டு வகை உண்டு. உலோகத்தில் முழு உருவச் சிற்பம் மாத்திரம்தான் உண்டு. (அனேகமாக. விதிவிலக்குகளை விட்டுவிடலாம்)
திவாகர நிகண்டு,
கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பாவன ’
என்று சொல்கிறது. பொதுவாக மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், உலோகம் போன்றவற்றால் சிற்ப உருவங்கள் உருவாக்கப்பட்டாலும், செதுக்கிச் செய்யப்படும் சிற்பம் என்பது கொஞ்சம் உயர்வானது. காரணம், அதில்தான் சிற்பி, ஒரு பொருளில் வேண்டாதவற்றை நீக்கி சிற்பத்தை உருவாக்குகிறான்.
உலோகத் திருமேனிகள் இருவகைப்படும். முழுவதும் கனமாகச் செய்யப்பட்ட உலோகத் திருமேனிகள் என்றும் உள்ளே பொள்ளலாகச் செய்யப்பட்ட திருமேனிகள் என்றும் இருவகைப்படும். தமிழகத்தில் செய்யப்பட்ட திருமேனிகள் அனைத்தும் பெரும்பாலும் முழுதும் கனமாகச் செய்யப்பட்ட உலோகத்திருமேனிகளாகும்.
உலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. பொன் விலையுயர்ந்த உலோகமாகையால் அதனால் செய்யப்பட்ட சிலைகளும் மிகக் குறைவு. தற்போது முழுவதும் வெள்ளியினால் அமைந்த, பொன்னினால் அமைந்த இறை சிலைகளும் தற்காலத்தில் கோயில்களில் உண்டு (திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பொன் சிலை) செம்பு, பஞ்சலோகத்தினாலும் (தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், ஈயம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை. இதில் தங்கத்தின் அளவு குறைவு) சிலைகள் செய்யப்பட்டன. தங்கத்தினாலும் சிலைகள் கோயில்களில் இருந்ததால், முஸ்லீம் படையெடுப்புகளின்போது அவை கொள்ளையிடப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டன.
உலோகச் சிலைகள் பொதுவாக மெழுகு வார்ப்பு முறையில் தான் செய்யப்படுகிறது. இதில் முதலில் மெழுகு மூலம் சிலை செய்து, அதன் மீது மண் பூசி, பின்னர் மெழுகை உருக்கி கூடு செய்துகொள்வார்கள். பிறகு உலோகத்தை உருக்கி, அதனை இந்த வார்ப்பில் (கூடு) இடுவார்கள்.
மெழுகுச் சிலை செய்யும்போது, அதனை மிக நுண்ணியதாக அழகுடன் உருவாக்குவார்கள். அதன் மீது வண்டல்மண் பூசி வார்ப்பு செய்வார்கள். இந்த வார்ப்பின் தலைப்பகுதியில் ஓட்டை இருக்கும்., பிறகு இதனைச் சூடுபடுத்தும்போது மெழுகு கீழே உள்ள ஓட்டை வழியாக உருகியோடிவிடும் (அல்லது மேலே இருக்கும் ஓட்டை வழியாகவும் வெளியோடச்செய்துவிடுவார்கள். நன்கு உருக்கிய உலோகத்தை இந்த வார்ப்பில் காற்றுக் குமிழிகள் இல்லாதபடி மிக க் கவனமாக இட்டு, பிறகு சில நாட்கள் அப்படியே வைத்துவிடுவார்கள். பிறகு நன்கு ஆறியபிறகு மண்ணைத் தட்டி எடுத்துவிட்டு, சிலையை எடுப்பார்கள். இந்தச் சிலையைப் பிறகு சீர் செய்து அழகுபடுத்தி, உரிய காலத்தில் கண் திறப்பார்கள்.
அரண்மனை வளாகத்தில் இருந்த செப்புச் சிலைகள் பஞ்சலோகச் சிலைகள் அல்ல. அவற்றில் வெள்ளி மற்றும் தங்கம் கலந்திருக்கவில்லை என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்த அரண்மனை வளாகத்திற்குள் இருந்த கலைக்கூடத்துக்குள் நுழைந்து செப்புச் சிலைகள் வைத்திருந்த பகுதியில் எடுத்த புகைப்படங்கள் இந்த வாரத்திலும் வரும் வாரப் பதிவுகளிலும்.
சோமஸ்கந்தர் (சிவன், முருகன் மற்றும் பார்வதி)
சோழர் கால உலோகச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது
இணையத்தில் ஒரு சிலையைப் பார்த்தேன். அதன் இடது
காதைப் பாருங்கள். இதனை பத்ர குண்டலம் என்பார்கள். எங்கேயோ
இதுபோல் பார்த்திருப்பீர்களே.. கொஞ்சம் யோசியுங்கள். பதிவில்
சொல்கிறேன்.
அங்கு (கலைக்கூடத்தில்) ஏகப்பட்ட செப்பு/பஞ்சலோகச் சிலைகள் இருக்கின்றன. இவை அனைத்துமே பல்வேறு கோயில்கள் மற்றும் அந்தப் பகுதிகளில் பூமிக்கடியில் கிடைத்தவையாக இருக்கும். மேற்கத்தைய நாடுகளில், குறிப்பாக ரோமப் பேரரசுகளில் பளிங்கினால் செய்த சிலைகள்தாம் இவ்வளவு மென்மையாக இருக்கும். அவற்றில் சில சிலைகளில் பளிங்கிலேயே உடை அணிவிக்கப்பட்டிருப்பது மிக அழகாக இருக்கும் (எல்லாம் சந்தர்ப்பம் வருகின்றபோது பகிர்கிறேன். ஆனால் அந்தத் தொடர் ஆரம்பித்தால் எந்த எந்தப் படங்கள் சிற்பங்களை எங்கள் பிளாக் கத்தரி போடும் என்று தெரியவில்லை. நான் அவற்றைக் கலைப்படைப்புகளாகத்தான் பார்க்கிறேன். இந்த செப்புத் திருமேனிகளிலும் நாம் கலைக்கண் கொண்டுதான் இயல்பாகப் பார்க்கிறோம் அல்லவா?).
அடுத்த
வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
உறக்கம் இல்லை அதனால் எழுந்து முதல் ஆளாக வரும் வாய்ப்பு. செப்பு திருமேனிகள் யாவும் சைவத் திருமேனிகளாகவே உள்ளனவே. அப்படி ஒரு தொகுப்பா?
பதிலளிநீக்குஇருப்பதை பாதுகாத்தால் நல்லது.
பொன் மாணிக்கவேல் படும் பாடு தெரியுமல்லவா?
சாதாரணமாக அரும்காட்சியகங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. நீங்கள் படம் பிடித்திருக்கிறீர்களே
எப்படி?
Jayakumar
இன்று ஞாயிறு என்பதால் மெதுவாக காலை ஐந்தரைக்குத்தான் எழுந்தேன். இனி வரிசையாக வேலைகள் இருக்கின்றன.
நீக்குஜெயகுமார் சாரின் முதல் கருத்துக்கு நன்றி. சோழர் காலக் கலைப் படைப்புகளில் விஷ்ணு மற்றும் இலக்குமி செப்புச் சிலைகளும் பல இருந்தன என்றாலும் சோழப் பேர்ரசு சைவ மத்த்தை ஒழுகியது என்பதை நினைத்தால் இதனைச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். பிறகு வருகிறேன்.
பொன் மாணிக்கவேல் நிறைய கஷ்டங்களை எதிர்கொள்கிறார். யாருமே அவருக்கு ஆதரவா இல்லை என்பதில் வருத்தம்தான்.தஞ்சை அரண்மனையில் நூலகம் தவிர பிற இடங்களில் படம் எடுக்க அனுமதி உள்ளது.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் நன்று. செப்புத் திருமேனிகள் பார்க்கப் பார்க்க ஈர்ப்பு..... வட இந்தியாவில் இது போன்று பல அருங்காட்சியகங்களுக்குச் சென்றதுண்டு என்றாலும் இங்கே சென்றதில்லை. வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு சென்று வர வேண்டும்.
வாங்க வெங்கட் நாகராஜ். புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்று போட்டிருக்கும் அருங்காட்சியகங்கள் என்னை ஈர்ப்பதில்லை. தாய்வானில் அப்படிப்பட்ட அருங்காட்சியகத்தில் சீன கலாச்சாரப் பொருட்கள் நிறைய பார்த்தேன். படங்கள் இல்லை. ஏன் அனுமதிப்பதில்லை என்பது புரியவில்லை. மீனாட்சி கோயிலிலும் அனுமதி கிடையாது, காரணம் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட தீ விபத்து
நீக்குகலை வணக்கம்! காலை வணக்கம்!!
பதிலளிநீக்கு:-))
நீக்குசோழர் காலக் கலைக்கு வணக்கம் திருவாழ்மார்பன்.
நீக்கு/அதன் இடது காதைப் பாருங்கள். இதனை பத்ர குண்டலம் என்பார்கள்/
பதிலளிநீக்குநடராஜர் உருவத்திலும் இப்படிப் பார்த்திருக்கின்றேன்
வாங்க சூர்யா. இது வித்தியாசமான காதணி.
நீக்குArthanareeswarar?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இணைந்து பிரார்த்திப்போம் கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு பதிவு எப்போதும் போல அருமை..தஞ்சை அரண்மனை வளாகத்தின் தொகுப்பான உலோகச் சிலைகள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். சிலைகளை பாதுகாத்து நமக்கு இவ்வாறு பார்க்கத் தந்த அவரது முயற்சிக்கு நன்றி. திவாகர நிகண்டின் பாடல் தெரிந்து கொண்டேன். உலோகச் சிலைகள் செய்முறைகளை விவரித்து கூறியிருப்பதை படித்தறிந்து கொண்டேன். பல விபரங்களுடன் பதிவை நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்கள் விபரங்களின் மூலம் பல விஷயங்களை நான் தெரிந்து கொள்கிறேன். உங்களின் பண்பட்ட எழுத்துக்கும், சென்றவிடங்களின் பல விவரணைகளுக்கும் எனது பாராட்டுக்கள். நன்றியும் கூட. .
பத்ர குண்டலம் சிவனுக்கே உரியது அல்லவா? இதை படிக்கும் போது "மகர குண்டலம் ஆடவும், அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்" என்ற சுதா ரகுநாதனின் "குழலூதி மனமெல்லாம்" என்ற பாடலும் மனதுக்குள் வந்தது. நம் ஊர் பக்கத்தில் வயதான பெண்கள் காதில் அணியும் "பாம்படம்" என்ற அணிகலனும் நினைவுக்கு வந்தது. நல்ல பயனுள்ள பல செய்திகளைக்கூறி உங்கள் அருங்காட்சியகத்தின் பயணத்தோடும், பார்வைகளோடும் எங்களை அழைத்துச் செல்வதற்கு பணிவான நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். மகர குண்டலம் ஆடவும் பாடல் எனக்கு மகாராஜபுரத்தை நினைவுபடுத்தியது. கம்பீரமான குரல் அவருடையது.
நீக்குநான் சிறு வயதில் பாம்படம் என்பது முழுக்க தங்கம் என நினைத்திருந்தேன். எப்படித்தான் காது தொங்க அதை வயதானவர்கள் அணிகிறார்கள் என நினைத்திருக்கிறேன்.
பாராட்டுக்கு நன்றி.
நமக்கு அருமை தெரியாத சிற்பங்களின் பெருமை அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. கிச்சா என்றால் இளிச்சவாய்தானே என்பது போலவே இந்துக்கோவில் என்றால் கொள்ளையடிக்கலாம் என்று நம் தற்போதைய தமிழர்கள் நிறுவி விட்டார்கள். பொன் மாணிக்க வேலின் கோபம் நியாயமானது. அவரது பணி பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். மிக்க நன்றி. சின்ன வயதிலேயே ஒற்றுமையான எருதுக் கூட்டம் சிங்கத்தை எதிர்கொள்வதைப் பாடங்களில் வைத்திருந்தார்கள். இந்துக்களுக்கு ஒற்றுமை வந்துவிடப் போகிறதே என்ற பயத்தில் அவை அத்தனையையும் தூக்கிவிட்டார்கள்.
நீக்குஏனோ தானோ என்று எழுதாமல், பதிவை கொடுப்பதற்கு நீங்கள் சுற்றிலும் சம்பந்தப்பட்ட விவரங்களை படித்து பதிவைத் தரும் உங்கள் பணி பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஶ்ரீராம்.
நீக்குசிலைகளின் படங்கள் நன்றாக இருக்கின்றன. சிலைக்கு கண் திறப்பது என்பதை ஒரு நல்ல நாள் பார்த்து செய்வார்கள் என்று படித்த நினைவு.
பதிலளிநீக்குஆமாம் ஶ்ரீராம். வழிபடும் சிலைகளுக்கு. தூண் சிற்பங்களுக்கு கண் திறப்பதில்லை. ஒரு முறை அதிகாலையில் மன்னார்கோயில் சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு சிலை என்னைப் பார்த்தது. நடுங்கிவிட்டேன். படங்கள் எடுத்திருக்குறேன். பிறகு சென்ற பயணங்களில் அந்தச் சிலையைக் காணவில்லை.
நீக்குசொல்ல வரும் விவரங்களை விட்டு சுற்றி இங்குமங்கும் செல்வது குறையாக படவில்லை. பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். தவறில்லை. படங்களை 'கலைக்' கண்ணோடேயே பார்க்க தயாராகிறேன்.
பதிலளிநீக்குஇயற்கையாகவே நமக்குக் கலைக் கண்ணோட்டம் உண்டு. எனக்கு லூவர் படங்கள் பகிர ரொம்பவே ஆசை. அது பத்து வாரத்்தொடராகலாம்.
நீக்குமதன கோபால ஸ்வாமி கோவில் மண்டபமே அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்திருக்கிறது என்னும் செய்தியை படித்த பொழுது, டில்லி சென்றபொழுது குதுப்மினார் சென்றது நினைவுக்கு வந்தது. அங்கு நம் ஊர் கோவில்களில் இருப்பது போன்ற சிற்பங்கல் கொண்ட ஒரு மண்டபத்தை பார்த்தது நினைவுக்கு வருகிறது. அல்லாவுதீன் கில்ஜி தென்னிந்தியாவிற்கு படை எடுத்து வந்த பொழுது, நம் ஊர் கோவில்களை சிதைத்து, அங்கிருந்த சிற்பங்களை அங்கு எடுத்துச் சென்று, குதுப்மினார் வளாகத்திற்குள் வைத்ததாம்.
பதிலளிநீக்குஒடிசா சென்ற பொழுது சாட்சி கோபால் கோவில் என்னும் கோவிலுக்குச் சென்றோம். அங்கிருக்கும் மிக அழ்கான குழலூதும் கிருஷ்ணர் விக்கிரகமும், பிரகாரத்தில் இருக்கும் விநாயகர் சிலையும் வட இந்திய பாணியில் இல்லாமல், தென்னிந்திய பாணியில் இருக்கும். கலிங்க மன்னர்களில் ஒருவர் தென்னிந்தியாவிற்கு படையெடுத்து வந்த பொழுது எடுத்துச் சென்றவையாம் அவை.
வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். குதுப்மினார் அமைந்திருந்த இடத்தில் இந்துக் கோயில்கள் ஒரு குழுவாக இருந்தன. அவற்றை அகற்றி அங்கு அந்தக் கற்களைக் கொண்டே குதுப்மினார் கட்டப்பட்டது எனப் படித்திருக்கிறேன். கற் சிலைகளை வெகு தூரத்திலிருந்து கொண்டு சென்றிருக்க (நிறைய அளவில்) வாய்ப்புகள் குறைவு என நினைக்கிறேன். நீங்கள் பரஞ்சோதி கொண்டுவந்த விநாயகர் சிலையைப் பார்த்திருக்கிறீர்களா? திருச்செங்காட்டங்குடி என நினைவு.
நீக்குபடங்களும், தகவல்களும் சிறப்பு.
பதிலளிநீக்குமிக்க நன்றி பா.வெ. மேடம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்.
நீக்குபத்ர குண்டலம் சிவபெருமானுக்கு இடது காதில் இருக்கும். சம்பந்தர் ஞானபால் குடித்த போது யார் உனக்கு பால் கொடுத்தது என்று சம்பந்தரின் அப்பா கேட்டபோது தோடுடைய செவியன் என பாடுகிறார். இடது பாகத்தை உமைக்கு அளித்த சிவபெருமான் ஒரு காதில் தோடு அணிந்த மாதிரி தோற்றம் அளிப்பார். நீங்கள் பகிர்ந்து இருக்கும் நடராஜர் சிலை அனைத்திலும் இடது பாகம் பத்ர குண்டலம், வலது காது நீண்டு வளர்ந்து இருப்பதும் தெரியும்.
பதிலளிநீக்குஓ... மிக்க நன்றி. ஆனால் இந்த வகைக் குண்டலங்களை யார் அணிகிறார்கள் என்பதைப் பிறகு எழுதுவேன்.
நீக்குஇணையத்தில் எடுத்து பகிர்ந்த படத்தில் இடப்பாகம் பத்ர குண்டலம், வலப்பக்கம் காது நீண்டு வளர்ந்து இருக்கு. தலையில் பிறை தரித்து இருக்கிறான்
பதிலளிநீக்குகாதில் கலர் கலராக பனை ஓலை சுருளை காதில் அணிந்து இருப்பார்கள். அம்மனுக்கு காதோலை வைத்து கும்பிடுவது அதனால் தான்.
பதிலளிநீக்குமதுரை மதனகோபால ஸ்வாமி கோயில் மண்டபம் பற்றிய விவரம், உலோக சிலைகள், அவை செய்யபடும் விதம் எல்லாம் நல்ல விளக்கமாக சொன்னது அருமை. நிறைய படித்து அவைகளை சரியான முறையில் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபஞ்சலோகச் சிலைகளில் பெண் தெய்வங்களின் ஒயிலான தோற்றம், அவர்கள் ஆடைகளின் வரி வரியான நேர்த்தி எல்லாம் நன்றாக இருக்கிறது.
சோமஸ்கந்தர் (சிவன், முருகன் மற்றும் பார்வதி) திருவாச்சி இல்லா படமும், அடுத்த சோமாஸ்கந்தர் சிலை முருகன் இல்லை, ஆனால் திருவாச்சி அருமை.
நெல்லை, முதல் படம் அட்டகாசமாக இருக்கு. அது மதுரையா அமெரிககவா? குழப்பம்!!! (கீதா உனக்கும் குழப்பமா? அது இருந்தாதானே குயப்பம் வரும்!!!...ஹிஹிஹி)
பதிலளிநீக்குகீதா