11.3.26

சமீபத்தில் நீங்கள் பார்த்து நொந்துபோன தமிழ்ப்படம் எது?

 

கேள்வி பதில்கள் :

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஒரு காலத்தில் திருமணம் என்பதை தன் வாழ்க்கையோடு பின்னி பிணைத்துக் கொண்ட பெண்கள் இப்போது திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம், அவ்வளவுதான் என்று கருதுவதற்கு பொருளாதார சுதந்திரம் மட்டும்தான் காரணமா?

# காலக்கிரமத்தில் அடிப்படைக் கோட்பாடுகள் பலவும் தேய்ந்தும், உரு மாறியும், முற்றிலும் வேறாகவும் ஆவது இயற்கையின் நியதி.  இவ்வகை மாற்றம் மேல் நோக்கியோ மலினப் பட்டோ இருக்கும் . 

சாதுவாக,  பிறரைச் சார்ந்து,  வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகள் நலம் என்று மட்டுமே இருந்த பெண் இன்று யாருடனும் சரி நகர் சமானமாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள்.  இது திசை மாறியோ வக்கிரமாகவோ போகும்போது விபரீதங்கள் விளைகின்றன. இதுவே சரியாக பயன்படுத்தப்படும் போது உன்னதம் வெளிப்படுகிறது.

பொருளாதார சுதந்திரம் மிகவும் முக்கியமானதாக மாறிப் போய்விட்ட இந்த காலத்தில் வேறு பல மதிப்பீடுகள் வீரியத்தை இழக்கின்றன.


நெல்லைத்தமிழன் : 

1. பழைய பாடல் வரிகள் நம் மனதில் நிற்பதுபோல, சமீபத்தில் (சில வருடங்கள் ஆயிருந்தாலும் பாதகமில்லை) வந்த பாடல்களில் நீங்கள் அடிக்கடி முணுமுணுப்பது எது?   

# "மாமனாரை மாமியாரை மதிக்கணும்,  மாலையிட்டவனை தினமும் துதிக்கணும்."

சில வருஷங்கள் அல்ல,  பலப்பல வருஷங்களுக்கு  முன்னது.

& என்னுடைய மனதில் அடிக்கடி வரும் பாடல் வரிகள் நிலையாக இருக்காது. அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். 

2.  சமீபத்தில் நீங்கள் பார்த்து நொந்துபோன தமிழ்ப்படம் எது? ஓடிடியில் பார்த்திருந்தாலும்.   

# ஜெயிலர்.

& சமீபத்தில் அல்ல. பல மாதங்களுக்கு முன்பு, படத்தின் பெயரைப் பார்த்து, நகைச்சுவை படம் போலிருக்கு என்று நினைத்து, பார்த்த படம் " இருட்டு அறையில் முரட்டுக் குத்து " கண்றாவி, ஆபாசம் பேத்தல் படம்.  

3.  நாமெல்லாம் (வாசகர்கள்) சந்திப்பதுபோல ஏதேனும் விசேஷம் எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவில் உண்டா?  

# இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

& வீடியோ conferencing மூலம் அனைவருக்கும் ஒத்து வரும் நேரத்தில் நம் whatsapp குழுவில் முயற்சி செய்யலாம். But, count me out - due to obvious reasons. 

4.  யாருடைய மரணம் உங்கள் மனதில் இன்னும் நீங்காமல், நினைத்தால் வருத்தத்தை உண்டாக்குகிறது?  

# காலம் சற்றுக் கடந்து விட்டால்,  யாருடைய மரணமும் நம்மை வருத்தப்படுத்தாது. கென்னடி சுடப்பட்டு இறந்த போது,  நான் மிகவும் வருத்தப்பட்டது நினைவில் இருக்கிறது. அப்போது என் வயது வெறும் 25 என்பதும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

& இன்றைய சூழ்நிலையில் நிதானமாக யோசித்துப் பார்த்தால், அப்படிப்பட்ட மரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

5. குழந்தைகளுக்காக நாம் வாழணுமா இல்லை நமக்காக அவர்கள் வாழணுமா? எந்த வயதுகளில்?

# உங்கள் கேள்வியைப் பார்த்தால்,  சினிமாக்களில் வருவது போல,  தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து கொண்டு குழந்தைகளுக்காக பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களுக்காக குழந்தைகளோ வாழ்வதைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. 

ஒரு லட்சியம் என்று பார்த்தால் வாழ்க்கை என்பதே தனக்காகத்தான் முதற்கண் வாழ வேண்டும். அதில் எல்லாருடைய நலமும் அவரவர்களுக்கு ஒத்த அளவில் நம் கவனத்தில் இருக்க வேண்டும். 

எல்லாரும் எல்லாருக்காகவும் வாழ்வது என்பது ஒரு லட்சிய நிலை. அடைய முடிந்தால் அதுவே சிறப்பு. 

குழந்தைகளிடம் சரியான மதிப்பீடுகள் வரும் வரை பெற்றோர்கள் அவர்களை  அனுசரித்து வாழ வேண்டும். பெற்றோர்களுக்கு தற்சார்பு நிலை குறையும்போது அவர்கள் அந்திம காலம் வரை குழந்தைகள் அனுசரித்து வாழ வேண்டும். சிக்கல் நிறைந்து கஷ்டமான ஒன்றானாலும் இதுதான் நிதர்சனம்.

= = = = = = = = = =

படமும் பதமும் :

நெல்லைத்தமிழன் :


ஒரு வருடத்துக்கு முன்பு, நியூசிலாண்டின், வகாரி/வெள்ளைத் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு, அதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்பு என்பதைப் பற்றிய டாக்குமெண்டரி பார்த்தேன். எரிமலை வெடிக்கும் அன்றைய தினம் வரை சுற்றுலாப் பயணிகள் அந்த எரிமலையைப் பார்க்கச் சென்றிருந்தனர். (படகில் அந்த இடத்திற்குச் செல்லவேண்டும்). அந்த சோகமான தினத்தில் திடும் என்று எரிமலை வெடித்து ஏகப்பட்ட உயிர்களை பலிவாங்கியது. எப்போதும்போல், நிகழ்வு நடந்ததும், அங்கு சுற்றுலா செல்லத் தடைவிதித்துவிட்டது அரசாங்கம். அதற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்பந்தம்? பிலிப்பைன்ஸ் சென்றிருந்தபோது தால் எரிமலைப் பகுதிக்கு, படகில் ஏரியைக் கடந்து, பிறகு குதிரையில் ஏறி எரிமலைப் பகுதியை அடைந்தேன். கடைசியாக 1911ல் எரிமலை வெடித்ததாம். பிறகு 1965-77ல் கொஞ்சம் கொஞ்சம் புகை வந்ததாம். அவ்ளோதானாம். அதனைச் சென்று பார்த்தபோது வியப்பாக இருந்தது (எரிமலைக் குழம்புலாம் இல்லை. தண்ணீர்தான் இருந்தது. சுற்றியுள்ள மண் சிவப்பு நிறமாக இருந்தது). வரும் வழியில் பூமியின் சிறிய திறப்புகளில் புகை வருவதைப் பார்த்தேன் (படங்களும் எடுத்தேன்).


எரிமலை உச்சியிலிருந்து பார்க்கும்போது தெரிந்த தண்ணீர் (கரைகளில் கந்தகம் படிந்திருக்கும்). அப்போதெல்லாம் எனக்கு பயம் இல்லை. பிறகு 2011ல் எரிமலை புகை கக்கியது. அதன் பிறகு அந்த இடமே வாழத் தகுதியற்ற இடம் என்று அரசு சொல்லிவிட்டது. நான் சென்றிருந்த சமயம் எரிமலை வெடித்திருந்தால்?  இதுபோல தாய்வானிலும் கொஞ்சம் ஆக்டிவ் ஆக இருக்கும் எரிமலைப் பகுதியில் பயணம் செய்தோம் (குடும்பத்துடன்). மலைப்பகுதி அது. எரிமலைப் புகை வெளியே வந்துகொண்டிருந்தது. அருகில் தண்ணீர் எரிமலைக் குழம்புபோல கொதித்து வெளியே வருவதையும் பார்த்தேன். அந்த இடத்தில் கந்தகப் புகை நிறைய ஆங்காங்கே வந்துகொண்டிருந்தன. என் பையன், இது ரொம்ப டேஞ்சர், மூச்சுக்குழாய், லிவரைப் பாதிக்கும் என்று எச்சரித்தான் (அவன் நிறைய படிப்பவன்). அதன் பிறகுதான் அதன் ஆபத்து எனக்குப் புரிந்தது. இந்தப் பயணங்களைப் பற்றி படங்களுடன் எப்போது எழுதப் போகிறேனோ!


எரிமலை, பின்னால் (நடுவில்) தெரியும் மலைதான். அதன் உச்சிக்குத்தான் குதிரையில் பயணம் செய்தேன்.

**************************

ஸ்ரீராம்...



எத்தனை கதைகளை அடக்கிய கற்களோ
உடைந்த கற்களில் எத்தனை சம்பவங்களோ, அனுபவங்களோ
உடைந்தது கற்கள் மட்டும்தான் என்று நம்புவோம்; பிரார்த்திப்போம்
கற்கள் உடைவதில்லை மீண்டும் உயிர் பெற்று புதிய வீடுகள் ஆகின்றன.
கற்கள் புதுப்பிக்கப்படுவது போல் கனவுகளும் புதுப்பிக்கப்படுகின்றன
பழைய சோகங்கள் மறைந்து புதிய இன்பங்கள் தலை தூக்கட்டும்
புதிய கட்டிடம் உருவாவது போல் வண்ணமயமாய் புதிய வாழ்க்கை உதயமாகட்டும்



= = = = = = = = = = = = =

படங்கள் பார்த்து கதை, சம்பவம் சொல்லுங்கள்!  இடம் சுட்டி பொருள்!






==========================================================================================

நம்புங்கள்..  இது ஜெ.. ஓவியம்!



============================================================================================

KGG பக்கம் : 


என்னிடம் எப்போதும் 3 சிம்கள் உண்டு. 

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சென்னையிலும் பெங்களூரிலும் மாறி மாறி இருக்கவேண்டிய சூழ்நிலையில் சென்னை ஏர்டெல் எண் ஒன்று, சீப் ஆகக் கிடைத்ததால், சென்னை பிஎஸ்என்எல் சிம் ஒன்று, பெங்களூரில் பயன்படுத்த பெங்களூர் ஏர்டெல் சிம் ஒன்று. 

இவற்றில் கடந்த 8 வருடங்களாக கிட்டத்தட்ட பெங்களூரில் மட்டுமே இருக்கவேண்டிய சூழ்நிலை வந்ததால், பெரும்பாலும் கைவசம் பெங்களூர் சிம் போடப்பட்ட ஃபோன் மட்டுமே வைத்திருப்பேன். 

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கி பரிவர்த்தனைகள் எல்லாமே நான் அதிகம் பயன் படுத்தாத, சென்னை சிம் உள்ள ஃபோன் மூலமாகவே செய்வேன். 

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை பொழுது. அலை பேசியில் என்னென்னவோ சோதனைகள் செய்து கொண்டு இருந்தேன். 

அப்போது என்னுடைய சென்னை போனில் மொபைல் பேங்கிங் செய்ய முயற்சி செய்யும்போது, என்னுடைய பாங்க் அக்கவுண்ட் திறக்க வரவில்லை. 
e KYC விவரங்கள், கொடுத்தால் சரியாகும் என்று தெரிந்துகொண்டேன். அந்த விவரங்களைக் கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளாமல் பாங்க்குக்கு நேரே வந்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று செய்தி வந்தது. 

அது மட்டும் அல்ல - திடீரென்று என்னுடைய பெங்களூரு ஃபோன் ஸ்கிரீன் லாக் ஆகிவிட்டது. password கொடு என்று ஒரு செய்தி திரும்பத் திரும்ப திரையில் வந்தது. ஃபோன் பயன் படுத்த முடியவில்லை. 

என்னென்னவோ வழக்கமான passwords கொடுத்தும் பலன் இல்லை. 

நான் எப்பொழுதும் பல தளங்களின் கடவுச் சொல்களை ஞாபகம் வைத்து இருப்பது கடினம் என்பதால், அவற்றை ஒரு text file ஆக உருவாக்கி என்னுடைய போனில் வைத்து இருந்தேன். 

சோகக் கதை என்ன என்றால், அந்த ஃபைல் இந்த போனில் மாட்டிவிட்டது! இப்போ பாஸ்வேர்ட் என்ன என்று தெரியவில்லை. ஃபோன் பயன்படுத்த இயலவில்லை. 

பலவாறு குழம்பி அந்த போனை முழுவதுமாக reset செய்தேன். 

அதற்குப் பின் கூகிள் உதவியால் அந்த போனில் முன்பு இருந்த சில app களைத் திரும்பக் கொண்டு வந்தேன். இன்னமும் 100% recovery இல்லை. 80% recovery ஆஃப் data வந்ததால் சமாளித்து வருகிறேன். 

அதற்குப் பின்னும் வேறு ஒரு பிரச்சனை. 

அடுத்த வாரம் அது என்ன என்று எழுதுகிறேன். 

(தொடரும்) 

= = = = = = = = = = 

சில உளவியல் சமாச்சாரங்கள் அதிசய விவரங்கள் கொண்டதாக இருக்கும். அவற்றில் ஒன்று, இதோ இங்கே - ஒரு facebook பதிவு. 

வரலாற்றில் தொடர் கொலைகள் எப்போதும் நடந்து வந்தாலும், எந்தவித நோக்கமும் இன்றி உளவியல் காரணங்களுக்காகக் கொலை செய்யும் சீரியல் கில்லர்கள் பற்றிய பிம்பம் ஜாக் தி ரிப்பர் (Jack the Ripper) காலத்தில்தான் பிரபலமானது. 

புள்ளிவிவரங்களின்படி, இத்தகைய கொலைகாரர்களின் எண்ணிக்கை 1970 மற்றும் 1980-களில் அதன் உச்சத்தைத் தொட்டது; குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தக் காலகட்டத்தில் பல கொடூரமான தொடர் கொலைகாரர்கள் உருவானார்கள். 

நிபுணர்களின் தரவுகளின்படி, 1980-களின் இறுதியிலிருந்து தொடர் கொலைகளின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாகக் குறைந்துவிட்டது. 1990-களுக்குப் பிறகு 'டெட் பண்டி' (Ted Bundy) அல்லது 'ஜெப்ரி டாமர்' (Jeffrey Dahmer) போன்ற உலகையே உலுக்கிய பிரம்மாண்டமான தொடர் கொலைகாரர்கள் உருவாவது மிகக் குறைவாகவே உள்ளது.

தொடர் கொலைகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தக் கொலைக் குற்றங்களே 1990-களுக்குப் பிறகு பெருமளவில் குறைந்ததற்கு அறிவியலாளர்கள் முன்வைக்கும் சில முக்கிய காரணங்கள்:

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் 'சைக்கோ' திரைப்படம் வெளியான பிறகு, அறிமுகமில்லாத நபர்களிடம் உதவி கேட்பதோ அல்லது முன்பின் தெரியாதவர்களின் வாகனங்களில் ஏறி பயணம் செய்வதோ (Hitchhiking) ஆபத்தானது என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாகப் பதிந்தது. அதன்பின் குழந்தைகளை முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகவிடுவது, லிப்ட் கேட்பது எல்லாம் வெகுவாக குறைந்தன.

DNA பரிசோதனை மற்றும் கைரேகைத் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்ததால், முதல் கொலைக்குப் பிறகே குற்றவாளிகள் எளிதில் பிடிபட்டு விடுகின்றனர்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாகனங்களின் எஞ்சின் சத்தத்தைக் குறைக்கப் பெட்ரோலில் 'டெட்ரா எத்தில் லீட்' (Tetraethyl lead) சேர்க்கப்பட்டது. 1970 மற்றும் 1980-களில் இது உச்சத்தில் இருந்தபோதுதான் தொடர் கொலைகளும் பெருகின.

காரீயம் (Lead) என்பது ஒரு நச்சுத்தன்மை கொண்ட உலோகம். இது உடலில் நுழையும்போது குழந்தைகளின் வளரும் மூளையைத் தீவிரமாகப் பாதிக்கிறது.
குறிப்பாக, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் (Impulse control) முடிவெடுப்பதற்கும் பொறுப்பான முன் மூளைப் பகுதி (Prefrontal Cortex) காரீய நச்சால் சிதைக்கப்படுகிறது. இதனால் ஒருவருக்குத் திடீர் கோபமும் வன்முறை எண்ணங்களும் எளிதாக உருவாகின்றன.

1950 மற்றும் 60-களில் பிறந்த குழந்தைகள் காற்றில் கலந்திருந்த காரீய நச்சைச் சுவாசித்துக் கொண்டே வளர்ந்தார்கள். அவர்கள் 20 வயதை எட்டியபோது (அதாவது 1970 மற்றும் 80-களில்), அவர்களில் சிலரிடம் இந்த வன்முறை எண்ணங்கள் தொடர் கொலைகளாக வெடித்தன.

பெட்ரோல் மட்டுமின்றி பழைய காலத்துக் குடிநீர்க் குழாய்களிலும் காரீயம் (Lead pipes) பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து கசிந்த நச்சு குடிநீர் வழியாக உடலுக்குள் சென்று மனநலப் பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியது.

 இந்த 'காரீயம்-குற்றக் கோட்பாடு' (Lead-Crime Hypothesis) சற்று சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இதற்கு வலுவான அறிவியல் அடிப்படைகள் உள்ளன.

1970-களின் இறுதியில் பெட்ரோலில் காரீயம் சேர்ப்பது படிப்படியாகத் தடை செய்யப்பட்டு, 2002-ல் முழுமையாக நிறுத்தப்பட்டது. காற்றில் காரீயத்தின் அளவு குறையத் தொடங்கிய 20 ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது 1990-களின் தொடக்கத்தில்), கொலைக் குற்றங்களின் விகிதமும் உலகளவில் சரியத் தொடங்கியது.

தற்போது தடய அறிவியல் முன்னேற்றம், டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் காரீயம் இல்லாத தூய்மையான சுற்றுச்சூழல் ஆகிய மூன்றும் இணைந்து நிஜ உலகில் தொடர் கொலைகாரர்களின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன. 

இருப்பினும், கொரிய மற்றும் இந்தியத் திரைப்படங்கள் இன்றும் இவர்களை ஒரு புனைவு நாயகர்களாகச் சித்தரித்துத் திரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

#history_is_his_story

~ நியாண்டர் செல்வன். 

= = = = = = = 

79 கருத்துகள்:

  1. படம் பார்த்து சம்பவம்.... எத்தனையோ நினைவுகளுக்குள் ஒன்றச் செய்துவிட்டீர்கள்.

    கந்தமாறன், வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர்.
    பொன்னியின் செல்வன்.
    3....
    யானைமேல் துஞ்சிய தேவர்? ராஜாதித்தன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  யானை மேல் துஞ்சிய தேவர்தான்.  ராஜாதித்தன்தான்.

      நீக்கு
  2. ஆகமொத்தம் தொடர் கொலைகார்ர்கள் மீது தவறல்ல, சிஸ்டத்தின் மீதுதான் தவறு என்று சொல்லிட்டாங்க.

    அப்போ பலரும் தொடர் கொலைகார்ர்களாக ஆகியிருக்கணுமே.

    பதிலளிநீக்கு
  3. பாஸ்வேர்ட், மொபைல் பேங்கிங், மொபைல் லிங்க், கே ஒய் சி எல்லாமே சிக்கல் நிறைந்த சமாச்சாரங்கள். போன் தொலைந்தால் வேறு வகைச் சிக்கல்கள். என்னாச்சுன்னு சொல்லுங்க. கே ஒய் சிக்காக வங்கிக்கிக்குப் போவது இன்னும் கடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திக்கி முக்கி திணறி சரி செய்து வருகிறேன்.

      நீக்கு
  4. இடிந்த வீடுகள் மண்டபங்கள் எனக்கு கவிதையில் கூறப்பட்ட எண்ணங்களைத் தோற்றுவிக்கும். படம் அனுப்பி கவிதை எழுதச் சொல்லலாம் என நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போடலாமே இப்போதும்...   அது வேறு தோற்றம் தருமல்லவா!

      நீக்கு
  5. நானும் இருட்டு அறையில்.... படம் ஐந்து நிமிடங்கள் பார்த்து அசிங்கமாக இருக்கிறதே என்று பார்ப்பதை விட்டுவிட்டேன் ஒரு வாரம் முன்பு. ஜெயிலர் படம் இரண்டு முறைக்கு மேல் பார்த்தேன் (திருடும் போர்ஷன் ஓட்டுவேன்). அதை நல்லா இல்லை என்று சொன்ன புண்ணியவானைக் கட்டிவைத்து இ.அ.மு.சி படம் முழுவதையும் பார்க்க வைக்கணும்.

    ஜெயிலர் வில்லன் போதைச் சமாச்சாரங்களால் உடல் கெட்ட செய்தி படித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  6. இ.சு.பொ.வி 1 ----- பொன்னியின் செல்வன் கதை ஆரம்பக் காலம். சம்புவரையர் அரண்மனையில் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் சதியாலசனை. அந்த சமயம் வந்த வல்லவரையனைக் கந்தமாறன் பழுவேட்டரையருக்கு அறிமுகம் செய்து வைக்கிறான்
    இ.சு.பொ.வி 2 ------ மந்தாகினி காவேரியில் தவறி விழுந்து மூழ்கவிருந்த அருள்மொழி வர்மரைக் காப்பாற்றுகின்றார். எல்லோரும் (ஸுந்தர சோழர் தவிர) காவேரி அம்மனே வந்து காப்பாற்றினார் என்று கருதுகின்றனர்.
    இ.சு.பொ.வி 3 ------- கால்கள் இரண்டையும் இழந்தும் பழுவேட்டரையர் குல முன்னோர் இரு வீரர்கள் சுமந்து செல்ல வாள் சுழற்றி சோழர் படைக்கு வெற்றி தேடித் தருகிறார்.
    இ.சு.பொ.வி 4 ------ யானை மேல் துஞ்சிய தேவர்.....சுந்தர சோழரின் மூதாதை. சோழ சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் போட்டவர்.
    எல்லாப் படங்களும் பொன்னியின் செல்வன் கதையில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா..   சபாஷ்.  சூப்பர்.  எல்லாமே சரி.  இதில் என்ன விசேஷம் தெரியுமா?  இது முதலில் வந்த பொன்னியின் செல்வனுக்கான படங்கள்.  மணியம் கைவண்ணத்தில்.

      இரண்டாவது படம் - அதனால்தான் அருள்மொழிவர்மர்  பொன்னியின் செல்வர் என்று அழைக்கப்பட்டார்.

      மூன்றாவது படத்தில் இருப்பவர் விஜயாலயச் சோழர்.  சோழர் குலத்தை மீண்டும் நிறுவியவர்.

      நான்கு... விஜயாலயன் மகன் ஆதித்த சோழன்.ராஜாதித்தன்.  விஜயாலயன்தான் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடித்தளமிட்டவர்.

      நீக்கு
  7. நெல்லையின் ஐந்தாவது கேள்விக்கு பதில் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நானும் அந்த கேள்வியையும் பதிலையும் ரசித்தேன். நன்றி.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  9. வெள்ளைக் குதிரை மேல் நெல்லை உட்கார்ந்திருக்கும் படத்தை பார்த்ததும், 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..' பாடல் மனதில் ஒலித்தது. தமிழ் சினிமா உலகில் வெள்ளைக் குதிரையில் அமர்ந்து கதாநாயகன் பாடிக் கொண்டே வருவது போல காட்சி அமைந்தால் ஒன்று அந்தப் படம் தோல்வி அடையும் அல்லது அந்த கதாநாயகனுக்கு ஏதாவது நிகழும் ஒரு நம்பிக்கை உண்டாம். ஹரிதாஸ் படத்தில் தியாகராஜ பாகவதர் வெள்ளைக் குதிரையில் பாடிக் கொண்டே வருவராம். படம் வெற்றி, அவர் வாழ்க்கை அதோடுஅஸ்தமித்தது. எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர் போன்றவர்கள் வெள்ளைக் குதிரையில் பாடிக்கொண்டு வந்த படங்கள் தோற்றதால் அவர்கள் தப்பித்தார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது புதிய செய்தி..  ரஞ்சன் நீலமலைதிருடன் படத்தில் குதிரையில் பாடிக்கொண்டே வருவார்.  படித்தால் மட்டும் போதுமா படத்தில் சிவாஜி.  சித்ரா பௌர்ணமி படத்திலும் சிவாஜி. 

      நீக்கு
    2. சித்ரா பௌர்ணமி தோல்விப்படமாயிற்றே? ப.ம.போ.வில் வெள்ளைக் குதிரையா? are you sure? எம்.ஜி.ஆர். படம் நீரும்,நெருப்பும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம்.  ஆனால் மற்றவை வெள்ளைக்குதிரையா என்று தெரியாது.   பாவம், அதென்ன  வெள்ளைக்குதிரைக்கு மட்டும் இப்படி ஒரு செண்டிமெண்ட்?!

      நீக்கு
    4. வெள்ளை நிறம் ஆழ்ந்த அமைதியை, முற்றும் துறந்த முனிவர் நிலையை குறிப்பதால் இருக்கலாம்.

      நீக்கு
    5. சினிமாவில் இப்படி நிறைய உண்டு. பாலாஜி படங்களில் முதல் நாள் பவர் கட் ஆனால் ராசியாம். தேவர் ஃப்லிம்ஸில் முதல் காட்சி "சக்ஸஸ்" அல்லது "வெற்றி வெற்றி" என்ற டயலாக்தான் எடுப்பார்களாம். சங்கர் படத்தில் ஹீரோயினாக நடித்தால் மார்க்கெட் சரிந்து விடும்.. இப்படி பல உண்டு.

      நீக்கு
    6. ஏன்... ராஜமௌலி படத்தில் கதாநாயகனாக நடித்தால் படம் வெற்றிபெறும்... ஆனால் கதாநாயகன் பிறகு பரிமளிப்பது கஷ்டம். என்பதை விட்டுவிட்டீர்கள்?

      நீக்கு
  10. எத்தனை அபூர்வமான இடங்களுக்குச் சென்றிருக்கிறார் நெல்லை! இதெல்லாம் ஒரு ஆசிர்வாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் பா.வெ. மேடம். எங்கு சென்றாலும், கிடைத்த சந்தர்ப்பத்தில் எப்படி புது இடங்களுக்குச் சென்று பார்ப்பது? என, கொஞ்சம்கூட சோம்பலில்லாமல் சுற்றும் குணம் ஒரு காரணம். அதி காலையில் எழுந்துகொள்ளவோ இல்லை இரவு வெகுநேரம் முழித்திருந்து இடங்களைப் பார்க்கவோ தயங்கமாட்டேன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. படித்து ரசித்தேன்.

    ஸ்ரீ ராம் சகோதரரின் கவிதை அருமையாக உள்ளது. உடைந்த ஒவ்வொரு கற்களிலும் நம் உள்ளக் குமுறல்களும் உள்ளது என நான் நம்புகிறேன். ஏனெனில் அதனுடன்தான் நாம் பேசி பழகி வாழ்ந்துள்ளோம். அதற்கு த் தெரியும் நம் மனதின் ஆழங்கள்.

    சகோதரர் நெல்லைத்தமிழரின் படமும் பதிவும் நன்றாக உள்ளது. குதிரையில் பயமின்றி ஜம்மென்று அமர்ந்திருக்கும் அவர் படமும் அருமை. எரிமலை பகுதிக்குச் செல்ல ஒரு தைரியம் வேண்டும். அதை அவர் விபரமாக கூறியிருப்பதை படித்தவுடனும், அந்த தனிமையான எரிமலைப் படங்களைப் பார்த்தவுடனும் எனக்கும் சற்று பயம் வந்தது. .எப்படித்தான் இந்த மாதிரி பிரதேசங்களுக்கு மக்கள் விரும்பி செல்கிறார்களோ.? ஒரு ஆர்வந்தான்.!! எனவும் நினைக்கிறேன்.

    ஒருதடவை மதுரையில் இருக்கும் போது எங்கள் அண்ணா குடும்பத்துடன் நாங்களும் தேக்கடி படகு சவாரி சென்று வந்தவுடன், அடுத்த வாரம் என்னவோ அங்கொரு படகு மூழ்கி பல பேர் மரணித்ததை செய்தியில் படித்தவுடன் மனதுக்குள் பயம் வந்தது. ஆனாலும் இப்போது இங்கு குழந்தைகளுடன் சுற்றுலாக்கள் செல்லும் போது இரு தடவைகள் இந்த படகு சவாரி சென்று வந்தோம். (மனதில் பழைய நினைவுகளுடன்) . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. நெல்லை குதிரை சட்டென ஓடிவிட்டால் என்ன செய்வது என்கிற பயமில்லாமல் அமர்ந்திருக்கிறார், இல்லை? அப்படியே குதிரை ஓடியிருந்தால் அவர் கூட ஒரு பாட்டு பாடி இருப்பார்.

      நீக்கு
  12. படம் 1. பொன்னியின் செல்வன் கதையில் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வந்த வந்தியத்தேவனை அவன் தோழன் கந்தமாறன் பெரிய பழுவேட்டரையருக்கு அறிமுகம் செய்து வைக்கும் கட்டம்.
    2. பொ.செ. கதையில் காவேரி ஆற்றில் தவறி விழுந்து விட்ட குழந்தை ராஜராஜனை மந்தாகினி தேவி(ஊமச்சி) காப்பாற்றும் இடம்.
    3. பொ.செ. கதையில் தன் இரண்டு கால்களையும் இழந்தாலும் போர் வீரர்கள் தோளில் சுமந்து செல்ல போரில் திறமையாக செயல்பட்ட அரசர்.(விஜயாலய சோழன்?)
    4. த்க்கோலத்தில் நடைபெற்ற யுத்ததில் யானை மீது துஞ்சிய தேவர் இராஜாதித்ய சோழர்.

    பதிலளிநீக்கு
  13. த்க்கோலம் என்பதை தக்கோலம் என்று வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  14. அந்தப் படத்தை வரைந்தது ஜெயராஜ் என்று தெரிகிறதே.
    ஸ்ரீராமின் கவிதை சோகமாக துவங்கி, நம்பிக்கையோடு முடித்திருப்பது நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்தப் படத்தை வரைந்தது ஜெயராஜ் என்று தெரிகிறதே. //

      பின்னாட்களில் அவர் வரைந்த படங்களை நினைவில் வைத்திருப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.  அதுதான் அப்படி சொன்னேன்!

      கவிதை -  நன்றி பானு அக்கா.

      நீக்கு
  15. குழந்தைகள் பெரியவர்கள் பற்றிய நெல்லையின் கேள்விக்கான பதில் நல்ல பதில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நெல்லை, அடிபொளி படம் வெண்குதிரையில் வீற்றிருக்கும் மாடர்ன் அரசர். அது சரி எப்ப வெண்கொற்றக் குடை? செங்கோல் எல்லாம்?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் குதிரைக்குதான் ஏதோ கோபம் போல...   முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறது!

      நீக்கு
  17. நேற்று எனது சிறுகதையைப் பற்றி ஏதும்
    சொல்லவில்லை ஸ்ரீராம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாயிருந்தது செல்வாண்ணா..  கேட்கவும் வேண்டுமா?  பாஸிட்டிவ்  மன்னராச்சே நீங்கள்..

      நீக்கு
    2. பாஸிட்டிவ் மன்னரா!
      நீங்கள் சொல்லியிருப்பது
      அதிகம்...

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    3. ஹிஹிஹி...   எழுதும் கதைகளில் சொன்னேன்...

      நீக்கு
  18. என் நெருங்கிய உறவினர் ஒருவர் ஹவாய் தீவுக்குச் சென்றிருந்த போது எரிமலை எரிந்து கொண்டிருக்க, இவர், மற்றும் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று படங்கள் கூட எடுத்து வந்திருந்ததை எனக்குப் பகிர்ந்திருந்தார். குழம்பு பொங்கி வழிந்து கொண்டே இருந்ததாம். சுற்றிலும் அத்தனை வெப்பம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குழம்பு பொங்கி வழிந்து கொண்டே இருந்ததாம். //

      கொஞ்சம் கொண்டு வந்திருந்தால் சுவை எப்படி என்று பார்த்திருக்கலாம். செய்முறை 'திங்க'வுக்கு அனுப்புங்களேன்!!!

      ஹிஹிஹி..

      வேணாம் கல்லை எல்லாம் எடுக்கக் கூடாது.. தப்பு..

      நீக்கு
    2. ஹா ஹா ஹா.திங்கள் பதிவில் இனி இக்குழம்பா..? குழம்பு நன்றாக, கலராக உள்ளதேயென சிறிது நம் "செவ்வாயில்" இட்டு ருசித்தாலும், மறுநாளைய "செவ்வாயை" காண நம்மால் இயலுமா?

      "குழம்பு" பொங்கி வழிவதைக் காணத்தான் குதிரையின் "குழம்புகளின்" உதவியோடு சகோதரர் நெ. த அங்கு சென்றிருக்கிறார். மேலும் "குழம்பை" கொண்டு வந்திருந்தால், குதிரையின் வெள்ளை நிறம் மாசு அடைந்திருக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹா ஹா ஹா.

      இ. சு. பொ. வி போல் இந்த ஒரு குதிரைப் படத்தை வைத்து இத்தனை விளக்கமா என நெ. த அடிக்க வரப்போகிறார். :))

      நீக்கு
    3. "குதிரையின் குழம்பு" "குளம்பு" என அடித்தால், அது முந்தயைதேயே (ழ) என காட்டியுள்ளது. எனவே "குளம்பு" என திருத்திப் படிக்கவும்.

      நீக்கு
    4. பிலிப்பைன்சில் அவ்வளவு ரிஸ்க் இல்லை. தாய்வானில் ரிஸ்க். என் பையன் எச்சரித்த பிறகுதான் மனதில் உறைத்தது. பொங்கிவரும் நீரைத் தொட ஆசை. பையன், பக்கத்துலகூடப் போக்க்கூடாதுன்னு சொல்லிட்டான்.

      நீக்கு
    5. நெல்லை அந்த நீரைத் தொடாமல் இருப்பது நல்லது.

      கீதா

      நீக்கு
  19. எ.பி. வாசகர்கள் ஜூமில் மீட் பண்ணலாமே என்று எனக்கும் தோன்றும்.
    சீரியல் கொலைகாரர்கள் பற்றிய செய்தியை படித்தபொழுது சினிமாக்களிலும், கதைகளிலும் மாத்திரம் இருக்கிறார்களோ என்று தோன்றியது, அது கட்டுரையிலும் குறிபிடப்பட்டிருக்கிறது :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் ஏதும் தொடர்பில்லை என்றே நம்புகிறேன்!

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    புதிர் போட்டி இ. சு. பொ. வி என தினந்தோறும் பதிவுகள் ஒரு சிறந்த பத்திரிக்கையை வாசிப்பது போன்ற சுவாரஸ்யமான பொலிவுடன் திகழ்கிறது. உங்களது புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்,. பாராட்டுகள்.புதிர் போட்டியை நிறுத்துவது என்ற செய்தி கொஞ்சம் வேதனைதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. இன்றைய வாழ்வில்
    திருமணம் என்பது
    இருபாலருக்கும்
    திசை மாறி விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​உண்மைதான். ஆனால் பெரும்பான்மை இல்லை!

      நீக்கு
  22. வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தான்
    நபக்கெல்லாம் முன் மாதிரி...

    இன்றைக்கு பெரும்பாலும்
    அப்படி இல்லை...

    பதிலளிநீக்கு
  23. மேற்கத்திய கல்வி முறையால்
    பெருமளவுக்கு ஒழுக்கம் பண்பாடு
    சிதைந்து விட்டது...

    பதிலளிநீக்கு
  24. பெரும்பாலும் சினிமா பார்ப்பதில்லை. எப்போதாவது தான் பார்க்கத் தோன்றும்.

    பொன்னியின் செல்வன் ஓவியங்கள் - ஆஹா....

    நெல்லைத் தமிழன் பகிர்ந்த படமும் அதன் எண்ணங்களும் நன்று. சில இடங்களுக்குச் சென்று வந்தபிறகு இப்படியான ரிஸ்க் எடுப்பது அவசியமா என்று தோன்றும். ஆனாலும் இப்படிச் செல்வதை மனம் விரும்பவே செய்கிறது.

    கேஜிஜி எண்ணங்கள் - தொடரட்டும்! சிம் கார்ட் - என்னிடம் தில்லி எண் ஒன்றும், திருச்சி எண் ஒன்றும் இருக்கிறது. பெரும்பாலும் தில்லி சிம் தான் பயன்பாட்டில் - பல வருடங்களாகவே... சில சிம் வாங்கி சில மாதங்கள்/வருடங்களில் வேண்டாம் என விட்டிருக்கிறேன். அப்படியான எண்கள் இப்போது நினைவில் கூட இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கும், தகவல்களுக்கும் நன்றி.

      நீக்கு
  25. ​நான் இரண்டு கேள்விகள் கேட்டு மெயில் அனுப்பியிருந்தேன். காணவில்லை.

    படிப்பு மற்றும் பொருளாதார சுதந்திரம் (தற்போது உரிமைத்தொகையையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளவும்) பெண்களின் கௌவரத்தை நிலை நாட்டியது என்றாலும் ஆண்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் ஒரு காரணம் என சொல்லலாம்.

    வெள்ளைக்குதிரையில் நெல்லை. கல்கி அவதாரம்?

    பாசிட்டிவ் செய்திகள் கொடுத்த ஸ்ரீராம் உடைத்த வீட்டின் படம் என்ற நெகடிவ் செய்தியை கவிதை?ஆக எழுத காரணம்???

    சேமிக்கிறோமோ இல்லையோ கூகுளுக்கு நம்முடைய கடவுசொற்கள் எல்லாமும் தெரியும். password மேனேஜரை பாருங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பாசிட்டிவ் செய்திகள் கொடுத்த ஸ்ரீராம் உடைத்த வீட்டின் படம் என்ற நெகடிவ் செய்தியை கவிதை?ஆக எழுத காரணம்??? //

      அதில் நெகட்டிவ் எங்கே வந்ததது JKC ஸார்... 

      புதுப்பரிமாணத்தை அடையப்போகும் இல்லம்.  ஆனால் வாழ்ந்த வீட்டின் நினைவுகள் நம் மனதில் பசுமையாய் இருக்குமே...

      நீக்கு
    2. JKC சார். மொபைல் பழுதடைந்ததால் உங்கள் கேள்விகள் அறிவிப்பு கண்ணில் படவில்லை. இப்போது பார்த்தேன். உங்கள் கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் சொல்கிறோம்.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    வெள்ளைக் குதிரையும், நெல்லைத் தமிழரும் இன்று ஒவ்வொருவரின் பார்வையின் கோணத்தில் ஒவ்வொரு கருத்துக்கள்.மொத்தத்தில் நெ. தமிழருக்கு வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. நெல்லை, படங்கள் எல்லாம் சூப்பர்.

    நீங்கள் பகிர்ந்திருக்கும் அந்த நீர் நிலையைப் பார்த்ததும், வெங்கட்ஜி அவர் சென்று வந்த பயணப் பதிவொன்றில் மஹாபாரதத் தொடர்புடைய ஒரு பெரிய நீர் நிலை தேவாரியா Tal படம் போட்டிருந்த நினைவு வந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  28. இடிபாடுகள் படம் எவ்வளவோ கதைகள் சொல்கின்றன ஸ்ரீராம்.

    உங்கள் வரிகள் பிரமாதம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. 1. பொன்னியின் செல்வன் கதை - பெரிய பழுவேட்டரையர்- வந்தியத்தேவன் அவன் நண்பன் கந்தமாறன்

    2. ஊமச்சி - மந்தாகினி தேவி காவிரியில் விழுந்த குழந்தை ராஜராஜனைக் காப்பாற்றும் படம்

    3. கால்களை இழந்த விஜயாலயச் சோழன்?

    4. தக்கோலப் போர்?

    ம செவின் படங்கள் ஓரளவு நினைவு இருந்தன,.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் மணியம் செல்வன் இல்லை.  அவர் அப்பா மணியம்.  பொன்னியின் செல்வன் நான்காவது முறை என்றெல்லாம் வந்தபோது 'வேதா' என்றொரு ஓவியர் வரைந்தார்.

      நீக்கு
  30. ஜெ ஓவியம் பழைய படம் அதாவது அவருடைய ஸ்டைல் மாறுவதற்கு முந்தைய படங்கள். போன முறையும் பகிர்ந்தீங்களே

    இதில் கொஞ்சம் பரவாயில்லை அதாவது சில ஸ்கெட்ச் அவர் ஸ்டைல் மாறுவதைக் குறிப்பதாகப் பட்டது...கொஞ்சம்

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கௌ அண்ணா, சில விஷயங்களைஎ ழுதி வைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

    எனக்கு KYC அப்டேட் செய் செய் என்று வந்து கொண்டே இருந்தது. பார்த்தால் அப்டேட்டட் என்று வங்கித் தளம் சொல்கிறது என்றாலும் கிளைக்குச் சென்று பார்த்து வந்தேன். அங்கும் அப்டேட்டட் என்றே காட்டியது. அப்புறம் சொல்லிவிட்டு வந்தேன் இப்படித் தவறான sms கொடுக்காதீங்க என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. ஃபேஸ்புக் பதிவு சுவாரசியமான தகவல்கள்.

    அமெரிக்காவில் சிறையில் இருந்த கொலையாளிக் கைதிகளை உளவியல் ரீதியாக ஆராய்ந்ததில் நிறைய தெரிந்ததை வைத்து சீரீஸ் ஒன்று வந்ததாக மகன் சொல்வான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  33. பா.வெ.வின் கேள்விக்கும் நெல்லையின் கேள்விக்கும் பெரியவர் கொடுத்திருக்கும் பதில் அருமை. இந்தக் காலத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எனினும் வெறும் பொருளாதார சுதந்திரம் மட்டும் காரணம்னு சொல்ல முடியாது. படிப்பும் ஒரு காரணம். திருமணத்தை ஓர் ஒப்பந்தமாகச் செய்து விட்டது. பல பெண்கள் தங்கள் கணவனை ஏடிஎம் மிஷின் போலத் தான் நடத்துகின்றனர். அதோடு இந்த கணினி யுகம் தொடங்கியதிலிருந்து உலகம் குறுகி விட்டதாலும் வாழ்க்கை முறை, முக்கியமாய்ச் சாப்பாடு, உணவு செய்முறைகள் மாறி விட்டதாலும் ஏற்பட்ட மாற்றங்களே ஆகும். படிப்பில் நன்னடத்தையை முக்கியமாகச் சுட்டுவதில்லை. மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது என்பது இப்போதெல்லாம் இல்லை. அதனால் மாணவர்களுக்கு ஆசிரியர் என்றால் ஓர் அலட்சியப் போக்கே காண முடியும். எத்தனை மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு ஆசிரியர்களைக் கொலை கூடச் செய்திருக்கிறார்கள். காலத்தின் கோலம்னு எல்லாம் நினைக்க முடியலை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!