6.5.26

பெண்கள் இட ஒதுக்கீடு குறித்த உங்கள் கருத்து என்ன?

 

கேள்வி பதில்கள் : 

கீதா சாம்பசிவம்: 

1. இப்போதைய அரசியலில் பிரபலமாகப் பேசப்படும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து நகர சபைகளில் தலைமைப் பதவி வழங்கப்படும் போது அவர்களுடைய கணவன்மார்கள் அவர்களை மட்டுமல்ல அந்த நகர சபையையும் அந்த நகரத்தையுமே ஆட்டிப் படைப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். வெறும் இட ஒதுக்கீடு மட்டும் பெண்களுக்கு வேண்டிய அந்தஸ்தைப் பெற்றுத் தர முடியாது. ஒவ்வொரு பதவியிலும் அவர்கள் சுதந்திரமாக வேறு ஒருவருடைய அழுத்தமோ சிபாரிசோ வழிகாட்டலோ இன்றி செயல்படக்கூடிய சாமர்த்தியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே உண்மையான பெண்கள் சுதந்திரம் வரும் -  பெண்களுக்கான இட ஒதுக்கீடு பயன் அளிக்கும்.

2. இட ஒதுக்கீட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக மறுப்புத் தெரிவித்தது சரியா?

இட ஒதுக்கீட்டை வேறு ஏதோ ஒன்றுடன் முடிச்சுப் போட்டு, தந்திரமாக டில்லி ஆளும் கட்சி சட்டமாக்க முயற்சித்தது என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. இது உண்மையானால் அந்த மசோதாவுக்கு எதிராக பலரும்  வாக்களித்ததில் தவறு ஏதும் இல்லை. மேலும் அந்த இட ஒதுக்கீடுக்கான எல்லா விவரங்களும் அந்த மசோதாவில் எழுத்து வடிவில் ஐயத்திற்கிடமின்றி திட்டவட்டமாக சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வெறும் மழுப்பல் தான் பதிலாக கிடைத்திருப்பதைக் காண்கிறோம்.  இந்த விஷயத்தில் முழு  உண்மையும் சரியாக சொல்லப்படவில்லை என்பதுதான் உண்மையான நிலவரம் என்று தோன்றுகிறது.

3. அதை விட ஒரு படி மேலே போய் ராகுல் காந்தி இப்போதைய பிரதமர் குடும்ப அமைப்பையே சிதைக்க நினைக்கிறார் எனக் குற்றம் சாட்டி இருப்பதும் சரியா?

# வாய்ப்பு இருக்கு. 

4. பெண்கள் அரசியலுக்கோ அல்லது வேறுவிதமான முக்கியப் பணிகளுக்கோ வருவதால் குடும்பம் சிதைந்து போக வாய்ப்பு இருக்கிறதா?

நமது நாட்டில் ஆண் ஆதிக்க மனப்பான்மை மிகவும் பரவலாக இருக்கிறது.  தன்னைவிட தன் மனைவி சாமர்த்தியசாலியாக , அதிகம் சம்பாதிப்பவளாக இருப்பதைப் பெரும்பாலான கணவர்கள் விரும்புவதில்லை என்பதை நான் கண்கூடாக பல சமயங்களில் பார்த்திருக்கிறேன்.

5. பல குடும்பங்கள் சினிமா மோகத்தில் சீரழிந்து போவதை விட அதிகமாகப் பெண்கள் ஒதுக்கீட்டில் அர்சியலுக்கோ முக்கிய பதவிகளுக்கோ வருவதால் குடும்பச் சிதை ஏற்படுமா?

# ஒரு குடும்பம் சிதைந்து போகப்  பல காரணங்கள் இருக்கக்கூடும்.   நிலைமை இப்படி இருக்கும்போது ,  " அதுவே இருக்கும் போது, இது இருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது ?"  என்பது சரியான வாதம் ஆகாது. பெண்கள் முன்னேற்றத்தை கண்ணியமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆண்களுக்கு உண்டாகும் போது இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். இப்போது இந்த மசோதா கொண்டு வருவதே கூட ஒரு விளம்பரத்திற்காகத் தான் என்பதுதான் என்னுடைய உண்மையான கருத்து.

6. ஒரு திரைப்பட நடிகரைப் பிடித்தால் பெண்கள் தங்கள் எல்லையை மீறி நான் அவருக்கு மனைவியாகக்கூட இருப்பேன் என்று சொல்லுவதை விட மோசமாகவா குடும்பச் சீரழிவு இந்த இட ஒதுக்கீட்டால் ஏற்படும்?

அந்த அளவு சீரழிவு வந்தபின் இந்த மாற்றங்கள் அதை எப்படி சரி செய்யும் ?

7. உண்மையான பெண்கள் முன்னேற்றம் என்பது என்ன?

பெண்கள் மகிழ்ச்சியாக, குறைகள் ஏதும் இன்றி, யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல் வாழ்கின்ற நிலையை அடைவது தான் உண்மையான பெண்கள் முன்னேற்றம்.

8. பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து அவர்கள் அரசியலிலோ அல்லது வேறு விதத்திலோ முன்னேற்றம் காண்பதால் நாட்டுக்கு நன்மையா? அல்லது குடும்பச் சீரழிவு ஏற்படுமா?

இட ஒதுக்கீடு கொடுத்து மட்டும்தான், அதுவும் சட்டசபையில் இட ஒதுக்கீடு கொடுத்து மட்டும் தான் பெண்கள் முன்னேற இயலும் என்பது ஒரு உண்மையான நிலை அல்ல.  சட்டசபை உறுப்பினர் ஆண் ஆனாலும் பெண்ணானாலும் அவர் எதை தன் கடமையாக நினைத்து, அது குறித்து எப்படிப் பணியாற்றுகிறார் என்பதைப் பொறுத்துதான் அவர் எடுத்துக் கொண்ட வேலையில் வெற்றி அடைகிறாரா என்பதைச் சொல்ல முடியும். 

9. பெண்கள் இட ஒதுக்கீடு குறித்த உங்கள் கருத்து என்ன?

இட ஒதுக்கீடு என்பது ஒரு வழியே தவற போய் சேர வேண்டிய இடம் அல்ல.

நெல்லைத்தமிழன் : 

1.  ஊடகங்கள், யூடியூபர்கள் போன்ற பலரும் ஒவ்வொரு பிரபலமானவர்களுக்கும் இரங்கல் செய்தி, காணொளி, அவரைப்பற்றிய செய்திகளை தயாராக வைத்துக்கொண்டு, எப்படா போவாங்க, உடனே வெளியிட்டு காசு பார்க்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்களோ? ஆளு கிட்டத்தட்ட போவதற்கு முன்னாலேயே செய்தியை ரொம்பவே விளக்கமா வெளியிடறாங்களே.  

.பெரிய பத்திரிகைகளைப் பொறுத்தவரை இது வழக்கமாக செய்யப்படுவது தான். அவ்வப்போது சரிபார்த்து கூட்டிக் குறைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூப் சேனல் களும் செய்தால் வியப்பில்லை.

2.  நேர்மையானவர்களைப் பார்த்து நாம் வாக்களிக்காமல், பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவையோ எம்.பி யையோ ஏன் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்? பொழுது போகாததனாலேயா?  

நேர்மையானவர்கள் தேர்தலுக்கு நிற்பது தற்காலத்தில் சாத்தியமில்லை.

3.  8000 ரூ கூப்பனை வைத்துக்கொண்டு என்ன என்ன வாங்கலாம் என்பதற்கு ஒரு லிஸ்ட் போட்டு தமிழர்களுக்கு நீங்கள் உதவினால் என்ன? கேள்வியின் காரணம், திட்டக்கமிஷன் (கமிஷன் முக்கியம்) உறுப்பினர் பொருளியல் அறிஞர் (னு அவரே சொல்லிக்கிறார்) ஜெயரஞ்சன் இதற்கு உதவாததுதான். 

 # அந்த திட்டம் செயலாக்கப் பட்டால் அரசியல் புள்ளிகள், கடைக்காரர்கள், மக்கள் எல்லாருக்குமே அதை உச்ச பட்ச லாபகரமாக ஆக்கிக் கொள்ளத் தெரியும்.  அரசுக்கு மட்டுமே அதை ஒழுங்காக நிறைவேற்றத் தெரியாது.

4.  விலங்குகளைக் காட்சியப்படுத்தி பொதுமக்களைக் காண வைப்பதை Zoo நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இதைப்போல, கிராமத்து வயதானவர்களை நகரத்தில் உள்ளவர்கள் கண்டதில்லை, விவசாயியைப் பார்த்ததில்லை என்று இதற்கென ஒரு லிஸ்ட் எடுத்து அவர்களையும் காட்சியப்படுத்தி வைக்கலாமா?  

# விலங்குகளை காட்சிப்படுத்தலாம் தவறு இல்லை. ஆனால், அதை மிகச் சிறப்பாகச் செய்ய மிகப் பெரும் செலவு செய்ய வேண்டி வரும்.  அதற்கு நம்மவர்களுக்கு வசதியோ யோக்யதையோ இல்லை.

அம்மி ஆட்டுக்கல் எல்லாமே காட்சிக்கு வந்த பிறகு நீங்கள் சொல்லும் பிற  அனைத்தும் காட்சிக்கு வர ரொம்ப நாள் ஆகாது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

5.  விலங்குகளைக் கொல்லக்கூடாது, கொல்லாமை என்றெல்லாம் நாம் பேசுகிறோம். நாம்தான் கரப்பான் பூச்சியையும் கொசுக்களையும் எலிகளையும் கொல்வதற்கு முனைகிறோம். இவற்றைக் கொல்லலாம், இவற்றைக் கொல்லக்கூடாது என்று ஏதேனும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா?

# தேவையான அளவு மட்டுமே உணவுக்காக, அல்லது தற்காப்பு-நோய் தவிர்ப்புக்காக , மருத்துவம் போன்ற  ஆராய்ச்சிக்காக, கடைசி பட்சமாக புரிதலுக்காக பிராணிகளைக் கொல்வது தவறல்ல என்று நம்பப் படுகிறது.

உன்னை முட்ட வரும் பசுவைக் கொல் என்று புத்தர் சொன்னதாக கல்கி எழுதியிருக்கிறாரே !

= = = = = = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


இது எங்களுடைய பூர்வீக வீடு.  நூறு வருடங்களுக்கு மேற்பட்டது. ஆனால் இந்த வீட்டில் நான் இரண்டு மூன்று முறைதான் வருடாந்திர விடுமுறையில் இருந்திருக்கிறேன். இங்கு பழைய கடிதங்கள் (அது இருக்கும் 100 வருடங்களுக்கான கடிதங்கள்), ஓலைச்சுவடிகள் ஏராளம் இருந்தன. என் அப்பா, நான் பஹ்ரைனில் இருந்தபோது இந்த வீட்டை விற்றுவிட்டார்.

என்னுடைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வந்தபோது நான் இங்குதான் இருந்தேன். அப்போதெல்லாம் மற்றவர்களுக்கு எஸ் எஸ் எல் சி பாஸ் ஆயாச்சு, நம்பர் பேப்பர்ல வந்துவிட்டது என்பதே பெரிதாகக் கொண்டாடக்கூடியதாக இருந்தது. இப்போல்லாம் மதிப்பெண்கள், போகப் போக 95 சதம் 98 சதம் என்று உயர்ந்துகொண்டே போகுது. 


நான் 9ம் வகுப்பிலிருந்து படித்த பள்ளி இது. பாளையங்கோட்டை.  அதுவரை என் அப்பாவுடன் இருந்து, அவர் இடமாறுதல் அடையும்போது அவருடன் சென்று, ஒவ்வொரு ஊரிலும் படித்தேன் (அவருக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இட மாறுதல்). 8ம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு, மாவட்ட அளவில் நடக்கும் தேர்வில் நான் இரண்டாம் ரேங்க் பெற்று, பாளையங்கோட்டையில் இந்தப் பள்ளியில் சேர்ந்தேன்.


ரொம்பவே மாற்றம் அடையாமல் இருக்கும் பள்ளி இது. இருந்தாலும், 'மதம்' அடையாளம் சமீப வருடங்களில் வந்துவிட்டது. இந்தப் பள்ளியில் சேர்ந்தபோதுதான், நான் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரையாக இதுவரை இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. பல அனுபவங்களைத் தந்த பள்ளி இது.  தூய சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டை. 

= = = = = = = = = = = = 

KGG பக்கம். 

இது நடந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. 

ஒருநாள் காலையில் வழக்கம்போல குரோம்பேட்டையிலிருந்து எண்ணூர்  செல்வதற்காக ரயிலில் சென்றுகொண்டு இருந்தேன்.  ரயில் கிண்டியை கடந்து செல்ல வேகம் எடுக்கும் சமயத்தில், பெட்டியின் ஒரு கோடியிலிருந்து வந்தான் சுமார் 10 வயது உள்ள ஒரு சிறுவன். அவன் கையில் ஒரு (சிகரெட்?) பெட்டியின் அட்டை. அதில் ஏதோ ஒரு பெயர் எழுதியிருந்தது. தயக்கத்துடன் அந்த அட்டையை என்னிடம் காட்டினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'அது என்ன' என்று கேட்டேன். 

அவன் ஒன்றும் பேசவில்லை - கைகளில் ஒரு நடுக்கம். அவனுடைய கண்ணில் லேசாக அழுகை எட்டிப் பார்த்தது. 

சரி - இந்தப் பையன் ஏதோ ஒரு விலாசம் கேட்கிறான் என்று நினைத்து, உனக்கு என்ன விலாசம் வேண்டும்? நீ எந்த ஊர்? என்று கேட்டேன். 

கொஞ்சம் திக்கித் திணறி தன் பெயர் பாலசுப்ரமணியன் என்றும் - பாம்பேயிலிருந்து வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாகவும் கூறினான். 

" ஏன் ஓடி வந்தாய்?" 

" அப்பா திட்டினார். அதனால் ஓடி வந்துவிட்டேன் "

" அப்பா ஏன் திட்டினார் ?"

" சரியாகப் படிக்கவில்லை என்று "

" எப்போது ஓடி வந்தாய் ? " 

" நேற்று காலையில் இந்த ஊருக்கு வந்தேன் "

" ஏதாவது சாப்பிட்டாயா ?"

" இல்லை " 

பார்க் ஸ்டேஷன் வந்தது. 

" சரி, என்னுடன் வா. முதலில் ஏதாவது சாப்பிடு " என்று சொல்லி பார்க் ஸ்டேஷன் வெளியில் வந்ததும் இருந்த ஒரு ஹோட்டலுக்கு அவனை அழைத்துச் சென்றேன். சர்வரிடம், அந்தப் பையன் என்ன கேட்கின்றானோ அதை எல்லாம் கொடுக்கச் சொன்னேன். 

வயிறார  சாப்பிட்டான். 

அவனுடைய அப்பாவின் பாம்பே விலாசம் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதை அவனிடம் கேட்டு, சென்ட்ரல் ஸ்டேஷன் போஸ்ட் ஆபீஸிலிருந்து ஒரு போஸ்ட் கார்ட் வாங்கி, அவனுடைய அப்பாவின் விலாசம் எழுதி, பையன் ஓடி வந்ததையும் அவன் என்னுடைய பாதுகாப்பில் இருப்பதையும் விவரமாக எழுதி, அவனை எப்படியாவது திரும்ப அழைத்துச் செல்லும்படியும் அந்தக் கடிதத்தில் எழுதி அதை சென்ட்ரல் ஸ்டேஷன் போஸ்ட் பாக்ஸில் போஸ்ட் செய்து விட்டு அந்தப் பையனை அழைத்துக்கொண்டு குரோம்பேட்டை கிளம்பினேன். 

ரயிலில் அவனைப் பற்றி மேற்கொண்டு விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொண்டேன். 

பையன் பேச்சில் கொஞ்சம் மலையாள வாடையும் வீசியது. 

(தொடரும்) 


29 கருத்துகள்:

  1. கீதா சாம்பசிவம் மேடம் இட ஒதுக்கீடு பற்றி ஏன் இப்படி மாஞ்சு மாஞ்சு கேள்விகள் கேட்டிருக்காங்க?

    வீட்டில் சமையலறை சம்பந்தமான வேலைகள், வீட்டை மற்றும் பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, பசங்களை பார்த்துக்கொள்வது, துணிகள் தோய்த்து காய வைத்து அயர்ன் கார்ரிடம் போட்டு எடுத்துவைப்பது எனப் பல இடங்களிலும் (அரசு 33சதம்தான் சொல்லுது, ஆனால் அறுபது சத்த்துக்கு மேலேயே இட ஒதுக்கீடு இருக்கு) அவங்களுக்குத்தான் ஒதுக்கீடு. வேணும்னா வங்கி சம்பந்தமான வேலைகளையும், மற்ற வேலைகளிலும் முழு ஒதுக்கீடு கொடுக்க ரெடி.

    ஒருவேளை கடவுள் நேர்ல வந்து ஆண்களுக்கு, பெண்களுக்கான ஓய்வெடுக்கும் நேரத்தில் பாதியைத் தூக்கிக் கொடுக்கப் போகிறேன், இனி ஆண்கள் பன்னிரண்டு மணி நேரம் தூங்கி ஓய்வெடுக்கணும், பெண்கள் மூணு மணி நேரம் தூங்கினாலே போதும் என இயற்கையையே மாற்றிவிடப் போகிறேன் என்று சொன்னால், நாங்கள் வேண்டாம் கூடாது என்று சொல்லிடுவோமா என்ன? ஒரே ஒரு ரிக்வஸ்ட்தான் வைப்போம். கடவுளே.. திருமணம் ஆன ஆண்களுக்கு என்று மாத்திரம் இந்த இயற்கையை மாத்துங்க. பசங்க ஒழுங்கா படிச்சு வேலைக்குப் போகட்டும் என்று மாத்திரம் சொல்லுவோம்.

    இதுக்கு மேல இட ஒதுக்கீடு வேணுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்தத்தில்.... ?

      நீக்கு
    2. //வேணும்னா வங்கி சம்பந்தமான வேலைகளையும், மற்ற வேலைகளிலும் முழு ஒதுக்கீடு கொடுக்க ரெடி.// நெல்லை, மாமா பணி ஓய்வு பெறும்வரைக்கும் நான் தான் வங்கி வேலைகள் , (மாமனாருக்கும் சேர்த்து) வீட்டு மளிகைச் சாமான்கள் உள்பட அனைத்தும் என் பொறுப்பு, அதோடு இல்லாமல் வீடு கட்டும்போது ஹார்ட்வேர் கடைகளில் சாமான்கள் ஆர்டர் கொடுப்பதிலிருந்து ஜன்மல்களுக்கு க்ரில், கண்ணாடி போன்றவை வாங்க சென்னையில் (பாரிஸ் கார்னர்) தேவராஜ முதலித் தெருவுக்குப் போய் எல்லாமும் பார்த்து ஆர்டர் கொடுப்பது வரை பண்ணி இருக்கேன். இத்தனைக்கும் கூட்டுக்குடும்பம். மூத்தவள் என்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் நான் தான் எல்லாவற்றையும் வீட்டிலும் செய்யணும். பின் மதியம் 3 மணிக்கு நான் வீட்டில் இல்லை எனில், அன்றைய மாலைக் காஃபி முதல் மாலை டிஃபன் வரை செய்ய ஆளில்லாமல் அப்படியே கிடக்கும். ஆகவே எங்கே போனாலும் 3 மணிக்குள்ளாகத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் வேறே. எப்படிச் சமாளித்தேன் என இப்போக் கூட நினைச்சால் எனக்கே ஆச்சரியம் தான்.

      நீக்கு
    3. இதுக்கு மேல இட ஒதுக்கீது எதுக்கு பெண்களுக்கு?

      என் மனைவி, சில சில வேலைகளை தானே இழுத்துப் போட்டுக்கிட்டு செய்ய ஆரம்பித்தாள். நல்லதாப் போச்சுன்னு நான் கழண்டுக்கிட்டேன். வங்கி வேலை, விசா, டிக்கட் புக் பண்ணறது என்று அனேகமா எல்லா வேலையுமே அவள்தான் செய்யறா.

      இரண்டு வருடங்களுக்குப் பிறகு, என் பெண் ரொம்பச் சொல்றாளேன்னு, நான் சமையல் பண்ணறேன்னு நான்கு நாட்கள் முன்னால பண்ணினேன் (பாதிதான்). நல்லாவே வரலை. (சித்திரம் கைப்பழக்கமோ இல்லையோ... கரண்டி கைப்பழக்கம்தான்). பேசாமல் மனைவியையே பண்ணச் சொல்லியிருக்கலாம்.

      நீக்கு
  2. கௌதமன் சார் பாதிலேயே சுவாரசியமான சம்பவத்தை நிறுத்திட்டாரே. அடுத்த வாரம் வரை காத்திருக்கணும். அதுக்குள்ள இந்த வாரம் எழுதிய சம்பவம் மறக்காக இருக்கணும்... எவ்வளவு இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. ஒரு விளம்பரம் என்ற பதில் உண்மையான கருத்து.அவசர அவசரமாக இந்த விஷயத்துக்கு சிறப்பு பாராளுமன்றக் கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன?

    ஒருவர் சொன்னார். 26-27 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் இயல்பாகவே சட்டப்படி அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் தொகைப்படி வந்துவிடும். அப்போ சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாலும் ஒண்ணும் ஆகாது என்கிறார்.

    அதிக எம்பிக்களினால் அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் போன்ற செலவுகளும், ஓசி கேன்டீன் செலவுகளும் பயணப்படிகளும் அதிகரிக்கும், ஊழல் அதிகரிக்கும், கேஸ்கள் அதிகமாகும் (அதிலும் 2ஜி, கேபிள் திருட்டு, போன்று கிடப்பில் போடப்படும் கேஸ்கள் இன்னும் அதிகமாகும்) என்பதைத் தவிர வேறு பிரயோசனம் உண்டா?

    பதிலளிநீக்கு
  4. கீதா அக்காவின் கேட்டிருக்கும் கேள்விகள், அதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்கள், கேள்வி பதில்கள் போல இல்லாமல், எதிரே உட்கார்ந்து பேட்டி எடுப்பது போல அமைந்திருப்பது சிறப்பு. அப்படியே வந்ததா? அல்லது நீங்கள் அப்படி அமைத்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  5. கௌதமன் சாரின் அனுபவம் சுவாரஸ்யம். அப்புறம் என்ன ஆச்சு? பகுதிக்கு எழுதியது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ​கௌதமன் சார் எழுதியது உண்மையான கதையா? அல்லது சினிமா கதையா?

    பெண்கள் இட ஒதுக்கீடு சட்டமானதோ அல்லையோ, அதன் நோக்கம் வென்று விட்டது வங்காளத்திலும் ஆசாமிலும்.

    ஒதுக்கீடு வேண்டும் என்று வாயால் சொல்பவர்கள் ஏன் கட்சி சார்பாக போட்டியிடுவர்களில் 33 சதவீத இடங்களில் பெண் போட்டியாளர்களை நிறுத்தவில்லை.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு வேறு கட்சி வேறு சட்டம் வேறு.

      நல்லவேளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றணும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஏன் விளக்கு, எண்ணெய், திரி எடுத்துக் கொண்டு தான் தீபம் ஏற்றப் போகவில்லை என்ற சந்தேகம் வரவில்லை.

      ஆணாதிக்க சமூகத்தில் சட்டம் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும்.

      இன்னொரு உதாரணம்... தமிழக பள்ளிகளில் இரு மொழிக்கொள்கை. ஹிந்தி கிடையாது என்று சொல்லும் முதலமைச்சர், மந்திரிகள், மூன்று மொழிக் கொள்கை உள்ள பள்ளிகளை மாத்திரமே நடத்துவார்கள்.

      நீக்கு
    2. அவர் நானும் வரேன்னு சொல்பவர் தான். அன்னிக்கும் சொல்லி இருந்திருக்கணும். ஏனோ சொல்லலை. :(

      நீக்கு
    3. //தமிழக பள்ளிகளில் இரு மொழிக்கொள்கை. ஹிந்தி கிடையாது என்று சொல்லும் முதலமைச்சர், மந்திரிகள், மூன்று மொழிக் கொள்கை உள்ள பள்ளிகளை மாத்திரமே நடத்துவார்கள்.//

      கருணாநிதி குடும்பத்தில் இளைய தலைமுறையினர் அனைவருக்குமே ஹிந்தி நன்றாகத் தெரியும். அதிலும் கனிமொழியின் ஒரே மகன் கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தியுடன் கூட சம்ஸ்கிருதமும் படிச்சவர். அவங்க பொதுமக்களை மட்டுமே படிக்க வேண்டாம்னு சொல்லுவாங்க. அவங்க குடும்பத்துக்கும் கட்சிக்கார அமைச்சர்களுக்கும் இது பொருந்தாது. :)

      நீக்கு
  7. மிருகங்களை காட்சிப் படுத்தலாம் இயற்கையாக, அவைகளுக்கு சிரமமான செயலாக இருக்கக் கூடாது.

    நெல்லைத் தமிழன் படக்காட்சி மனதில் நிறைந்து நிற்கிறது.

    திரு. கெளதம் அவர்களின் காப்பாற்றும் பையன் .... தொடர்வோம்....என்னவானது என்ற ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
  8. என்னோட கேள்விகளுக்கான பதில்களைச் சிறப்பாகக் கொடுத்திருக்கும் எ.பி.ஆசிரியப் பெருமகனாருக்கு என் நன்றி. ஆனாலும் எல்லாமும் ஒத்துக்க முடியலை. ஆனால் இங்கே இப்போ அதைச் சொல்லலை. கருத்துரை நீளமாக ஆகிடும் என்பதோடு இப்போக் காலை வேளை இங்கே என்பதால் வேலைகளும் இருக்கின்றன. இன்னும் கேள்விகள் பல இருக்கு. அது குறித்தும் கேட்கணும். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எ.பி.ஆசிரியப் பெருமகனாருக்கு// கீசா மேடம்... சமீப காலங்களில் நிறைய தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தீங்களோ?

      நீக்கு
    2. No. நான் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தியே 3 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. இருந்ததையும் கொடுத்தாச்சு. இங்கே வந்து கொஞ்ச நாட்கள் பாலிமரில் செய்தி பார்த்தேன். ஓரிரண்டு படங்கள் பார்த்தேன். பின்னர் இதுக்காகக் கூடத்தில் போய் உட்காரணுமேனு தோன்றவே இப்போ ரூமை விட்டுச் சாப்பிட, விளக்கு ஏத்த, சாமியைப் பார்க்கனு மட்டும் போறேன்.

      நீக்கு
  9. @Gouthaman Sir! மும்பையிலிருந்து இத்தனை தூரம் வித்தவுட்டில் வந்திருக்கானே அந்தப் பையர். தைரியம் தான். நல்லபடியாகத் திரும்பி ஊருக்குப் போயிருப்பான். நல்லவேளையாக் கூடவே கூட்டிட்டுப் போயிட்டீங்க. வேறே யார் கிட்டேயாவது சிக்கி இருந்தான் எனில்! நினைக்கவே முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் இதை வேறு மாதிரி யோசித்துப் பாருங்க....

      அந்தப் பையனைக் கூட்டிக்கிட்டுப் போனேன். வீட்ல தங்கச் சொன்னேன். இரவு சாப்பாடும் போட்டோம். மறுநாள் காலைல ஆளைக் காணோம். அது மட்டுமல்ல சில பொருட்களையும் காணோம் என்று அடுத்த வாரம் கௌதமன் சார் முடித்தால்?

      நீக்கு
  10. //8000 ரூ கூப்பனை வைத்துக்கொண்டு என்ன என்ன வாங்கலாம்// நான் மேட்டூரில் முதல் முதலில் வேலைக்குப் போனபோது, எனக்கு மெடிகல் க்ளெய்ம் என்று ஒரு நல்ல அமவுண்ட் உண்டு. சின்னப் பையன் நான். அதனால் எனக்கு எங்க உடம்புல பிரச்சனை வரும் (எடை தவிர). எங்க ஃபேக்டரிக்கு வெளில ஒரு சித்த மருத்துவர் இருந்தார். சரி அவரைப் பார்த்து நாடி கீடில்லாம் பார்த்து ஏதேனும் நல்ல சித்தா மருந்து வாங்கிக்கலாம்னு போனேன். அவர் என்னைப் பார்த்துட்டு, சார்.. நீங்க கவலையே படாதீங்க... நான் உங்க மெடிகல் கிளெய்முக்கு என்ன அமவுண்ட் வேணுமோ அதைப் போட்டு பில் தர்றேன் என்றார் (இன்னும் ஆளை செக் பண்ணவே இல்லை). அடப்பாவீன்னுட்டு அந்த திசை பக்கமே எட்டிப்பார்ப்பதை விட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான அரசு ஊழியர்கள் செய்வது இது தான். டூத்பேஸ்ட், ப்ரஷிலிருந்து இந்த மாதிரி மெடிகல் க்ளெய்ம் போட்டு வாங்கிடுவாங்க. கடைக்காரருக்குக் கமிஷன் உண்டோ? தெரியலை.

      நீக்கு
  11. எ.பி. ரொம்பவே டல்லடிக்குதே இரண்டு நாட்களாக. இன்னிக்கு ஸ்ரீராம் மட்டுமில்லாமல், தி/கீதா, கோமதி அரசு, கமலா ஹரிஹரன் ஆகியோரையும் காணோமே! என்ன ஆச்சு எல்லோருக்கும்? ஸ்ரீராம் தான் சேலம் போறதாச் சொன்னார். மத்தவங்க? ஸ்ரீராம் அங்கே பெண் வீட்டிலேயே தங்கிட்டாரா? பார்க்கப் போனா அவர் பையர் தான் அங்கே போய் உட்கார்ந்துக்கணும். இவர் ஏன் போறார்? !!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!