மாளிகைமேடு
மேலைச் சாளுக்கிய நாடு, கீழைச் சாளுக்கிய நாடு ஆகியவற்றைச் சென்ற வாரம் பார்த்துக்கொண்டு வந்தோம்.
வேங்கிநாட்டில் 975ல் அரசாண்டுகொண்டிருந்த தானார்ணவனை இராட்டிரகூட மன்னன் தாக்கிக் கொன்று, வேங்கிநாட்டு மன்னனானான். விரட்டப்பட்ட தானார்ணவனின் மகன்களான சக்திவர்மன் மற்றும் விமலாதித்தன் தக்க காலத்தில், சோழ அரசர்களின் உதவியை நாடினர். இது தங்களின் மேலைச் சாளுக்கிய அரசுக்கு பிற்பாடு ஆபத்தைக் கொண்டுவந்துவிடும் என்று எண்ணிய சத்யாச்ரயன், ஒன்பது லக்ஷம் படைவீர ர்களுடன் சக்திவர்மனுக்கு உதவ வந்த ராஜேந்திர சோழன் படையை எதிர்த்தான். ராஜேந்திர சோழன் கடும் போரில் சத்யாச்ரயன் படையைத் தோற்கடித்தான். சத்யாச்ரயனும் அவனுடைய மிஞ்சி இருந்த படையும் மேலைச் சாளுக்கிய நாட்டை நோக்கி புறமுதுகிட்டனர். ராஜேந்திர சோழன் அங்கும் படையெடுத்து வெற்றி பெற்று பெரும் பொருளை அங்கிருந்து தஞ்சைக்கு வெற்றிப் பரிசாகக் கொண்டுவந்தான். 25 ஆண்டுகாலம் வேறொருவர் கைப்பற்றி இருந்த வேங்கி நாட்டை மீட்டு, ராஜேந்திர சோழன் சக்திவர்மனை அரசனாக்கினான் (கிபி 999ல்).
ராஜராஜ சோழன் அப்போது சோழப் பேரரசன். ராஜேந்திர சோழன் இளவரசன் மற்றும் படைத் தளபதி என்பதை நினைவில் வைக்கவேண்டும். வெற்றியுடன் தலைநகரான தஞ்சைக்கு மீண்ட ராஜேந்திர சோழனுக்கும், அவனது படைத் தளபதிகளுக்கும் பல பரிசுகளை ராஜராஜ சோழன் கொடுத்தான் (அப்படி ஒரு படைத் தலைவனுக்குக் கொடுக்கப்பட்ட இடம்தான் தற்போது ராணிப்பேட்டை அருகிலுள்ள காவேரிப்பாக்கம் என்பது. அது ராஜராஜ சோழன் காலத்தில், படைத் தலைவனுக்கு ‘காவிதி’ என்ற பட்டம் கொடுத்து அதற்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட இடம். காவிதிப் பாக்கம் என்பது காவிரிப்பாக்கம் என்று பெயர் மருவி விட்டது. காவிரிப் பாக்கத்தில் பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மனால் அமைக்கப்பட்ட ஏரி உள்ளது. இந்த காவிரிப்பாக்கம் ஏரி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும்.
வேங்கி நாட்டை வெற்றி பெற்று, சக்திவர்மனை அரசனாக்கிவிட்டாலும், அந்த அரசுடன் உறவுத் தொடர்பு இருக்கவேண்டும் என்பதற்காக, ராஜராஜ சோழன் தன்னுடைய மகளான குந்தவையை வேங்கி அரசன் சக்திவர்மனின் தம்பியான விமலாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்தான். சக்திவர்மன் கிபி 999லிருந்து 1010வரை வேங்கிநாட்டு அரசனாக இருந்தான். அவனுக்குப் பிறகு விமலாதித்தன் வேங்கி நாட்டு அரசனானான் (அதாவது ராஜராஜ சோழனின் மருமகன்).
விமலாதித்தன் கிபி 1011லிருந்து 7 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அந்தச் சமயத்தில் சாளுக்கிய வேங்கி நாடு, சோழர்களுடைய செல்வாக்கின் கீழ் இருந்தது. விமலாதித்தனின் மகன் ராஜராஜ நரேந்திரன் (நினைவிருக்கட்டும், இவர் ராஜராஜ சோழனின் மகளான குந்தவைக்குப் பிறந்தவர்). இவனுக்கு தன் மகளான அம்மங்கா தேவியை ராஜேந்திர சோழன் மணமுடித்துக் கொடுத்தான். அதாவது கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக, வேங்கி நாடு (கீழைச் சாளுக்கியம்) ஒரு வகையில் சோழப் பேரரசுடன் மண உறவு கொண்டிருந்தது. ராஜராஜ நரேந்திரனுக்கும் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் ராஜேந்திரன் என்ற பெயர் சூட்டப்பட்டவன். (அதாவது அம்மா வழி தாத்தாவின் பெயர்). அவனுடைய இன்னொரு பெயர் அநபாயன். இவனை சாளுக்கிய ராஜேந்திரன் என்பார்கள். அவன் இளமைக் காலத்தில் கங்கைகொண்ட சோழபுர அரண்மனையில்தான் வாழ்ந்தானாம். வாலிப காலத்தில் சோழப் படையுடன் சேர்ந்து, அவர்களின் ஒரு சேனைத் தலைவனாக பல போர்களில் பங்கேற்றிருந்திருக்கிறான். இதனால்தான், ராஜேந்திர சோழனின் (அதாவது தாத்தாவின்) மகன்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக சோழப் பேரரசை ஆண்டு, கடைசியில் வாரிசு இல்லாத நிலை வந்தபோது, சோழ அரசவைக்குச் சென்று, தனக்கு ஆட்சி உரிமை கொடுக்கக் கோரினான். அவனது வீரம், ராஜேந்திர சோழனுடைய ரத்த உறவு, வேறு வாரிசு இல்லாத தன்மை ஆகியவற்றால், சாளுக்கிய ராஜேந்திரனையே சோழ அரசனாக ஏற்றுக்கொண்டனர். அவனும் குலோத்துங்கச் சோழன் என்ற பெயரில் சோழ அரசனாக ஆனான். (கிபி 1070ல்). கிபி 848ல் விஜயாலய சோழனால் ஸ்தாபிக்கப்பட்ட சோழப் பேரரசு (பல்லவர்களிடமிருண்டு சோழ நாட்டை மீட்டவன் அவன்) ராஜேந்திர சோழனின் கடைசி மகன் அதிராஜேந்திர சோழன் கிபி 1070ல் மறையும் வரை இடைக்காலச் சோழப் பேரரசு என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னர், குலோத்துங்கச் சோழனிடமிருந்து சாளுக்கிய சோழப் பேரரசு என்று அழைக்கப்படலாயிற்று.
ராஜேந்திர சோழனை, தனக்குப் பிறகான நான்கு சோழ அரசர்களைப் பார்த்த ஒரே ஒரு சோழ அரசன் என்று சொல்லலாமல்லவா?
ராஜேந்திர சோழன் பொ.ஆ.1012ல் பேரரசனாக முடிசூட்டப்பட்டான். ராஜராஜ சோழன் அரசாட்சியிலிருந்து விலகி ஓய்வு காலத்தை இறைபக்தியில் செலவழித்தான்.
இளவரசனாக இருந்தபோது, இலங்கையுடன் நடந்த போரில், ஐந்தாம் மகிந்தா போரில் தோற்றுப் பின் வாங்கினான். சோழப் படை வட இலங்கையைக் கைப்பற்றியது. மகிந்தா தலைநகரான அனுராதபுரத்தை விட்டுவிட்டு தென்னிலங்கைப் பக்கம் சென்று பொலனருவாவைத் தலைநகராக்கிக்கொண்டான். சோழப் படைக்கோ படைவீரர்கள், அவர்களுக்கான உதவி, தமிழகத்திலிருந்து வரவேண்டும். அதனால் படையை முன்னெடுக்காமல், வட இலங்கையைக் கைப்பற்றியதுடன் நிறுத்திக்கொண்டார்கள்.
பாண்டிய மன்னர்களுடன் தொடர்பு வைத்திருந்த இலங்கை அரசை முழுவதுமாக ஒடுக்க வேண்டும் என்று எண்ணினான். அந்தச் சமயத்தில் ஐந்தாம் மகிந்தா, வட இலங்கையை சோழர் படையிடமிருந்து மீட்க எண்ணி அதன் மீது படையெடுத்தான். இதனை அறிந்த ராஜேந்திர சோழன், தன் கடற்படையின் ஒரு பகுதியை இலங்கைக்கு அனுப்பினான். நடந்த போரில், சோழப் படை வென்று, இலங்கை அரசனைச் சிறை பிடித்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியருடன் நடந்த போரில், பாண்டிய அரசன் இலங்கையில் ஒளித்து வைத்திருந்த அவனது ரத்தின ஆரம் கிடைத்தது. இலங்கை முழுவதும் சோழ அரசின் கீழ் வந்தது. சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தா தஞ்சாவூருக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து மடிந்தான். அவனுடைய மகன் இலங்கையில் ரகசியமாக வளர்க்கப்பட்டான். அதே சமயத்தில், ராஜேந்திர சோழன், பாண்டிய அரச மரபினர் கலகம் விளைவித்ததால், அதன் மீது போரிட்டு வென்று, தன்னுடைய மகன் ராஜேந்திர தேவனை சோழ நாட்டின் பிரதிநிதியாக இருந்து அரசாண்டுவரச் செய்தான்.
ராஜேந்திர சோழனுக்கு தன்னுடைய பெயரால் ஒரு தலைநகரம் அமைக்க விரும்பினான். அதற்கு உரிய இடமாக, தன்னுடைய தந்தை அமைத்த ஜெயங்கொண்ட சோழபுரத்தின் அருகிலிருந்த காட்டைத் திருத்தினான். நிலம் பண்படுத்திய பிறகு, அவனுடைய ஆலோசகர்கள், தலைநகரம் கோயில் அமைக்க விரும்பினால் அந்த இடத்தை முழுவதுமாக கங்கை நீர் கொண்டுவந்து தெளித்தல் நலம் என்று கூறினர். அந்தக் காரணத்திற்காக ஒரு படையை அமைத்து அவர்களை கங்கையை நோக்கிச் செல்ல அனுப்பினான்.
வேங்கை நாடு முடிய எதிர்ப்பில்லாமல் சென்ற படையை கோதாவரிக்கு அப்பால் சிற்றரசர்கள் எதிர்த்தனர். அவர்களை வென்று முன்னேறிச் சென்றது ராஜேந்திரனின் படை. ஒரிசா பகுதிச் சிற்றரசர்களையும் வென்றது. அப்போது மேற்கு வங்காளத்தை ஆண்டுகொண்டிருந்த Bபால வம்சத்து அரசனான மஹிபாலன், சோழப் படையின் நோக்கம் அறியாமல், தெற்கிலிருந்து சோழப் படை முன்னேறுவதா என்ற எண்ணத்தில் அதனை தன் கீழ் இருந்த சிற்றரசர்களோடு எதிர்க்கத் துணிந்தான். அவனது அமைச்சர்கள், அரசன் தலைமை இல்லாமல் வரும் படை இது, மிகுந்த வீரத்துடன் கூடியது, அதனால் எதிர்க்க வேண்டாம் என்று சொல்லியும், மஹிபாலன் போர் முழக்கம் செய்தான். கடும் போரில் தோல்வியடைந்து புறமுதுகிட்ட மஹிபாலனைச் சிறைப் பிடித்தது சோழர் பெரும்படை. பிறகு கங்கைக் கரையை அடைந்து தக்கக் குடங்களில் கங்கை நீரை நிரப்பிக்கொண்டு, தோற்ற அரசர்களை அந்தக் குடங்களைச் சுமக்கச் செய்து திரும்பியது சோழர் படை. அதனை ராஜேந்திர சோழன் வேங்கி நாட்டில் எதிர்கொண்டு வரவேற்றான்.
தான் அமைக்க விரும்பிய நகரத்திற்கான இடத்தின் மீது கங்கை நீரைத் தெளித்து கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை நிர்மாணித்தான். அங்கு கங்கை கொண்ட சோழீச்வரம் என்ற சிவன் கோயிலைக் கட்டினான். அதன் அருகிலேயே தன்னுடைய அரண்மனையையும் ஏற்படுத்தினான்.
ஞாயிற்றுக் கிழமை படங்களைக் காணலாம் என்று வந்தால், ஒரே
சரித்திரமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களோ? சரி.. சரித்திரத்தை
நிறுத்திவிட்டு ராஜேந்திரன் அமைத்த அரண்மனைப் பகுதியில் (மாளிகை
மேடு) இருந்த சிற்பக் கூடத்தைக் காணலாம்.
அகழாய்வில் கிடைத்தவற்றை எழுதிவைத்துள்ளார்கள்.
கங்கைகொண்டசோழீச்வரம் கருவறையின் மேற்புறத் தோற்றம் (விமானம்)
மாளிகை மேடு அகழ்வாய்ந்தபோது எடுத்த படம்
தமிழ் கல்வெட்டும், சிங்க முகமும் (பெரும்பாலும் தூணின் அடிப்பாகம், அல்லது விளக்கேற்றும் கல் என்று பலவற்றிலும் இதனைக் காணலாம்.)
முட்டுவாஞ்சேரியில் கிடைத்த 12ம்
நூற்றாண்டு லிங்கம், அதே நூற்றாண்டைச் சேர்ந்த திருமானூரில் கிடைத்த நந்தி.
ஏலாக்குறிச்சியில் கிடைத்த தட்சிணாமூர்த்தி, 11-12ம்
நூற்றாண்டு. கங்கைகொண்ட சோழபுரத்தில் கிடைத்த 11-12ம்
நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிலை.
பராந்தகன்
காலக் கல்வெட்டு.
மாளிகைமேடு அகழாய்வில் கிடைத்த பராந்தக சோழன் காலக் கல்வெட்டில், இரண்டு வணிகக் குழுக்களை தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு குடிபெயர்வு செய்து, அதற்காக அவர்களுக்கு சில வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தும், அவர்கள் இருவித வரிகளை வசூலித்துக்கொள்ளலாம் என்றும், இந்த வணிகக் குழுவிற்கு அரசு தரப்பில் எந்தப் பிரச்சனையும் (அலுவலர்கள்) தரக்கூடாது என்றும் கல்வெட்டில் ஆணை பிறப்பித்து அளித்திருக்கிறார்கள்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் கிடைத்த பெண்ணுருவம்.
ஏலாமாத்தூரில் கிடைத்த வைஷ்ணவி, வராஹி, கௌமாரி – 11-12ம்
நூற்றாண்டு
விநாயகர் பெரியது,
சண்டிகேஸ்வரர் – கங்கைகொண்ட சோழபுரம், 11ம்
நூற்றாண்டு
தேவி, 11ம் நூற்றாண்டு, பிராமி, 10-11ம் நூற்றாண்டு, பெரியமறை.
கௌமாரி, உமா மகேஸ்வரி, 10-11ம் நூற்றாண்டு, பெரியமறை.
துர்கை-பெரியகுறிச்சி, 10-11ம் நூற்றாண்டு, சண்டிகேஸ்வரர், 10-11ம் நூற்றாண்டு, பெரியமறை.
முருகன், காமராசவல்லி, 12-13ம் நூற்றாண்டு, தட்சிணாமூர்த்தி, 12-13ம் நூற்றாண்டு, கல்லக்குடி (ஊர் நினைவுக்கு வருதா? பெயரும் நினைவுக்கு வரணுமே)
சாமுண்டா, பெரியமறை, 10-11ம் நூற்றாண்டு, ரிஷபாந்தி, 10ம் நூற்றாண்டு, புதுக்கோட்டை
வராகி, தேவி, 10-11ம் நூற்றாண்டு.
ஐயனார், 10-11ம் நூற்றாண்டு, அர்த்தநாரீஸ்வரர், பெரியாறை.
அம்மன், தக்ஷிணாமூர்த்தி
துவாரபாலகர், அரியலூர், துர்கை, 11-12ம் நூற்றாண்டு, அரியலூர்.
இந்தச்
சிற்பத் தொகுதிகளைப் பகிரும்போது, நான் எசாலம் செப்பேடுகள் பற்றி எழுதவேண்டும் என்று
நினைத்தேன். இந்தச் செப்பேடுகள் விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையில்
எசாலம் கிராமத்து சிவன் கோயிலை (திருவிராமீசுவரம்) திருப்பணிக்காக 1987ல் தோண்டியபோது கிடைத்தவை. இது இராஜேந்திர சோழனின் 25ம் ஆட்சி ஆண்டில்
எழுதப்பட்டது.
வளையத்தில்
கோர்க்கப்பட்ட 14
தொகுதிகளை
உடையது. இது பற்றி ஏதாவது ஒரு கோயில் பதிவில், இடம் கிடைக்கும்போது
எழுதுகிறேன்.
இந்தப் பயணத்தின்போது சோழகங்கம் என்று அழைக்கப்பட்ட பொன்னேரியைப் பார்க்கவில்லை. ராஜேந்திர சோழனின் மாதண்ட நாயக்கன், கங்கைவரை சென்று வெற்றிபெற்றதன் நினைவாக, அங்கு வென்ற மன்னர்களை கங்கைநீரைச் சுமந்துவரச் செய்து, அந்த நீரின் ஒரு பகுதியை இந்த இடத்தில் விட்டு, ஒரு பெரிய ஏரியை உருவாக்கினான். சோழகங்கம் என்று அழைக்கப்பட்ட அந்த ஏரிக்கு கொள்ளிடம் பகுதியிலிருந்து உபரி நீர் வரும்படியாக மதகுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏரி சுமார் 14 அடி ஆழம் உள்ளது. 15 கிமீட்டருக்கும் அதிகமான சுற்றளவுடையது.
தற்போது நீர் வரத்துப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஏரியும் தூர்ந்துபோய்விட்டதாம். பெரும் மழை வந்தபோதுதான் ஏரியில் நீர் நிரம்புகிறதாம்.
சோழகங்கம் ஏரி-இணையம்.
மாளிகை மேட்டையும் சிற்பக் கூடத்தையும் பார்த்துக்கொள்ளும் அரசுத் துறையைச் சேர்ந்த காண்டிராக்ட் பொறுப்பாளருடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
வரும் வாரம், நாங்கள் சென்று பார்த்த பள்ளிகொண்ட பெருமாள் கோயில் பற்றிக் காணலாம்.
(தொடரும்)
காவிரிப்பாக்கம் தகவல் இதுவரை அறிந்ததில்லை, நெல்லை
பதிலளிநீக்குகாவிரிப்பாக்கம் ஏரி பெரிசு. ரொம்ப வருஷம் முன்ன போனது.
குழந்தைகள் பரீட்சைல நல்ல மார்க் வாங்கினா சில பெற்றோர் பரிசு கொடுப்பாங்க ஊக்கப்படுத்த அது போல ராஜ ராஜ சோழன் ராஜேந்திரனுக்கும் கொடுத்திருக்கிறார் போல!!
கீதா
வாங்க கீதா ரங்கன். ராஜராஜசோழன் 1014ல் மறைகிறான். அதற்கு முன் இருபது வருடங்களாகவே ராஜேந்திரன் துணையாக இருக்கிறான். அவனது வீரத்தைப் பலரறிய மெச்சும்போது, அது கொடுக்கும் ஊக்கமே தனி அல்லவா?
நீக்குவிமலாதித்தன் குந்தவை நல்லா நினைவிருக்கும்!!!! பின்ன காட்சியாய்க் கண்டது இல்லையா!!!!!!!
பதிலளிநீக்குஆனா அதுக்கப்புறம் உள்ள கதை இப்பதான் தெரிந்து கொள்கிறேன், நெல்லை.
நெல்லை பெரிய பாராவை இனி எழுதறப்ப கொஞ்சம் பிரிச்சிடுங்க மூன்றாக....உடனே எனக்கு வயசாகிடுச்சுன்னு சொல்லப்டாது கேட்டேளா....
கீதா
குந்தவை என்ற பெயரைக் கேட்கும் பொழுதெல்லாம் ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவையின் நினைவு மேலிடுவது தான் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் வீச்சும் பெருமையும் ஆகும்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார்... தமிழர்களுக்கு வரலாற்றில் ஆர்வம் வந்ததற்கு கல்கிதான் மிகப் பெரிய காரணம் என்றால் அது சரியான பார்வை.
நீக்குகல்கி அவர்களின் எழுத்து வீச்சைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், நமக்கு இப்போது அகழ்வாய்வில் செப்புப் பட்டயமோ அல்லது கல்வெட்டோ கிடைத்து, குந்தவைதான் ஆதித்தன் இறப்புக்குக் காரணம், அல்லது அருண்மொழித் தேவன் சொல்லித்தான் இந்தக் கொலை நிகழ்ந்தது என்று இருந்தால், நாம் உடனேயே, இந்தக் கல்வெட்டு, செப்புப் பட்டயம் போலி, வெளிநாட்டுச் சதி என்றே முடிவுக்கு வருவோம்.
கந்கைகொண்ட சோழபுரம் பத்தி இங்கு வந்துகொண்டிருக்கிறதே படங்களோடு...
பதிலளிநீக்குபடங்களைப் பெரிசு படுத்தி வாசிக்க முடியலையே நெல்லை. அதுதானே முக்கியமான தகவல்கள் இல்லையா அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்களுக்காக சொல்றேன்., நெல்லை. பரவால்ல பதிவு நீளமானாலும் பரவால்ல.
சில படங்களைப் பெரிசு பண்ணிப் பார்க்கறா மாதிரி அமைச்சா நல்லாருக்கும்னு தோணுது.
கீதா
படங்கள் எல்லாம் சூப்பர் நெல்லை. கௌமாரி, பார்த்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குசாமுண்டா, பெரியமறை, 10-11ம் நூற்றாண்டு, ரிஷபாந்தி, 10ம் நூற்றாண்டு, புதுக்கோட்டை//
இதுவரை இப்பெயர்கள் கேட்டதில்லை, நெல்லை
சோழகங்கம் என்று அழைக்கப்பட்ட பொன்னேரியைப்//
பொன்னேரிக்கு சோழகங்கம் என்ற பெயர் இப்பதான் தெரிந்து கொள்கிறேன்.
எல்லாமே சூப்பர் நெல்லை
கீதா
இன்றைய பதிவு சிறப்பு. சாதாரணமாக வெகுஜன வாசிப்பில் கிடைக்காத வரலாற்று நிகழ்வுகளை சங்கிலி போலக் கோர்த்து அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இராஜேந்திரனின் இலங்கைப் படையெடுப்புகளைப் பற்றி வாசிக்கும் பொழுது இக்காலத்திய சொல்லாடலான 'தொப்புள்கொடி உறவு' என்ற வார்த்தை என் நினைவுக்கு வந்து போயிற்று.
பதிலளிநீக்குஜீவி சார் வாயால் இத்தகைய கருத்துக்களைப் பெறும்போது அது தரும் திருப்தியே தனி.
நீக்குஉண்மையாகவே இலங்கை அரசர்களுக்கும் பாண்டிய அரசுக்கும் தொப்புள்கொடி உறவு. பாண்டியன் போருக்கு இலங்கை அரசன் படையுடன் துணைக்கு வருவதும், பாண்டியன் தன் மணிமுடி, இரத்ன ஹாரத்தை இலங்கை அரசனிடம் கொடுத்து வைத்திருப்பதும் எத்தகைய வரலாற்று நிகழ்வுகள் பாருங்கள்.
சிற்பக்கூட படப்பதிவுகள் 'ஓகோ' ரகம். இங்கு அவற்றை வெளியிட்டிருப்பதற்கு பின்னாலான உழைப்பும் ஆர்வமும் பாராட்டப்பட வேண்டியது. கொடுத்து வைத்த "எபி'. வாழ்த்துக்கள் நெல்லை.
பதிலளிநீக்குஅதற்கு இடம் கொடுத்து, கேஜிஎஸ் அவர்கள் வசம் இருந்த ஞாயிறை, நெல்லை எழுதட்டும் எனக் கொடுத்தது எங்கள் பிளாக்அல்லவா?
நீக்குஅழகாக சரித்திர நிகழ்வுகளை எழுதியுள்ளீர்கள் நெல்லை. பாராட்டுகள். நான் படித்த காலத்தில் ஒரே வரியில் (கங்கை நீரை தான் ஜெயித்த அரசர்கள் தலைச்சுமையாகக் கொணர்ந்தான்) முடித்து விடுவார்கள். நான் படித்த வரையில், கோதாவரிக் கரை வரைக்கும் படைக்கு ராஜேந்திர சோழனே தலைமை தாங்கிச் சென்றதாகவும், அதற்கு வடக்கே வங்காளத்துக்குத்தான் தன் படைத்தலைவனை மட்டும் அனுப்பியதாகவும் நினைவு. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க சூர்யா அவர்கள். சில ஒஆரங்களாக உங்களைக் காணோமே என நினைத்துக்கொண்டேன். பயணமா?
நீக்குவரலாற்றை, அதிலும் பலர் எழுதிய புத்தகங்களைப் படிக்கப் படிக்க புதிய தகவல்களை அறிந்து ஆச்சர்யப்படுவேன். இந்தப் பகுதியில் பகிர்வேன்.
/கல்லக்குடி (ஊர் நினைவுக்கு வருதா? பெயரும் நினைவுக்கு வரணுமே)/
பதிலளிநீக்குஹா ஹா.....பேர் மட்டுமா? நாகூர் ஹனீபா பாட்டும் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல செய்திகளின் ஊடே திருஷ்டிப் பூசணிக்காய் போல இந்த வரியை நுழைத்தீர்கள் என்று கொள்கிறேன். நெல்லை சிறப்பாக எழுதுகிறார் என்று பலரும் பாராட்டும்போது உங்கள் மேல் கண் த்ருஷ்டி படாமல் இருக்கட்டும்.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. நலமா துரை செல்வராஜ் சார்.
நீக்கு@ சூர்யா
பதிலளிநீக்கு/// உங்கள் மேல் கண் த்ருஷ்டி படாமல்
இருக்கட்டும்... ///
நெல்லை அவர்கள் அருட் கடாட்சம் பெற்ற வித்தகர்...
ஒரு குறையும் இராது...
ஓம் ஹரி ஓம்..
சிறப்பான பதிவு
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜ் சார். மிக்க நன்றி
நீக்குஇந்த ராஜராஜ நரேந்திரன் அம்மங்கா தேவி கதை சம்பந்தப் பட்ட பகுதியைத்தான் சாண்டில்யன் மன்னன் மகள் கதையில் எழுதி இருக்கிறார். ஆனால் நாயகன் கற்பனைப் பாத்திரமான கரிகாலன், விமலாதித்தன் மகளான நிரஞ்சனா தேவி. கதையை ஒரு சுவாரஸ்யமான முடிச்சுடன் எழுதி இருக்கிறார் சாண்டி!
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். கற்பனை கதாபாத்திரங்கள் மூலம் கதை செல்லும்போது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். கல்கிக்கு அடுத்தது சாண்டில்யன்தான்.
நீக்குஇந்த ரத்தினமாலை சாண்டில்யன் கதையில் செங்கதிர் மாலை என்று வருகிறது. அது சேரனுக்கு சொந்தம் என்று எழுதி இருக்கிறார் அவர்.
பதிலளிநீக்குசக்திவர்மன் கிபி 999லிருந்து 2010வரை வேங்கிநாட்டு அரசனாக இருந்தான். அவனுக்குப் பிறகு விமலாதித்தன் வேங்கி நாட்டு அரசனானான் (அதாவது ராஜராஜ சோழனின் மருமகன்).
பதிலளிநீக்குவிமலாதித்தன் கிபி 2011லிருந்து 7 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். 2000??
நன்றி. உடனடியாக சரி செய்து விட்டேன். நான் படிக்கும்போது கூட கவனத்தில் பதியவில்லை!
நீக்குவாங்க ஜெயகுமார் சார். தொடர்ந்த தட்டச்சில் வரும் தவறுகளைப் பிறகு சரி செய்வேன். இவை கவனத்தில் வரவில்லை. நன்றி
நீக்கு// கல்லக்குடி (ஊர் நினைவுக்கு வருதா? பெயரும் நினைவுக்கு வரணுமே) //
பதிலளிநீக்குமறக்க முடியுமா? தலைவிதி!