7.8.26

படபடபடபடபடபடபடபட அது ஒரு டைப்ரைட்டிங் காலம்

 

டைப்ரைட்டர் :


இந்தப் படத்தை இணையத்தில் பார்த்ததும் கொஞ்ச நேரம் கண்கள் அதிலேயே தங்கின.

இளமைக்காலங்கள்!  இது காட்ரெஜ் டைப்ரைட்டர் மாதிரி தெரிகிறது.  நாங்கள் படிக்கும் காலத்திலேயே இது கொஞ்சம் ஓல்ட் மாடல்.  நாங்கள் அடிக்கும்போது அறிமுகமானது Facit.  அதில் தட்டச்சவே நாங்கள் விரும்பினோம்.  அதற்கு அப்புறம் வருகிறேன்..  முதலில் முன்னுரையும் அறிமுகமும்...

இப்போது அலுவலகங்களில் இதன் தேவை இருக்கிறதா அல்லது எல்லாம் கணினி மயமாகி விட்டதா, தெரியவில்லை.  கணினியில் தட்டச்சு செய்யவும் இதில் பயிற்சி எடுப்பது அவசியமாக இருந்ததும் ஒரு காலம்.  ஆனால் இப்போதெல்லாம் ஒரு விரல் புரட்சி போல ஒரு விரல் டைப்பிங் காலம். 

எங்கள் அலுவலகத்திலேயே கணினி அறிமுகபப்டுத்தபப்ட்டபோது நான் முறையான தட்டச்சு செய்வதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.  ஆனால்  இரண்டு விரல்களைக் கொண்டே என் வேகத்துக்கு, சமயங்களில் என்னைவிட வேகமாக தட்டச்சு செய்யப் பழகிக் கொண்டார்கள். 

தயாநிதி மாறன் காலத்தில் கணினி விசைப்பலகையிலேயே முறையான தட்டச்சு பயில ஒரு குறுந்தகடு (அட..  தொடர்ந்து தமிழ் வார்த்தைகளாக போட்டுக் கொண்டு வருகிறேனே..) வெளியிட்டார்கள்.  அதைக் கொண்டு நீங்கள் asdfghg';lkjhj தொடங்கி அடித்துப் பழகலாம்.  அரசு அலுவலகங்களுக்கு அந்த குறுந்தகடு இலவசமாகக் கொடுத்தார்கள்.  யாராவது அதனால் பயன் பெற்றார்களா, தெரியாது!

ஆங்கிலத்தை விடுத்து தமிழில் தட்டச்சு செய்யும் நேரம் வந்தபோது கொஞ்சம் தடுமாறினார்கள்.  முறையான விசைப்பலகை விசைகளில் தட்டச்சுவது கடினமாயிருக்கவே அவர்களுக்கு 'அழகி' உதவிக்கு வந்தாள்!  ஆனால் அழகியிடம் பழகவும் ஒரு சிறு வாத்யார் தேவைப்பட்டார்.  நான் உதவியிருக்கிறேன்.

தட்டச்சுத் தேர்வில் நான் ஆங்கிலமும் தமிழும் உயர்நிலை முதல் வகுப்பு!

அப்போதெல்லாம் பள்ளிப்படிப்பு முடிவுறும் தருவாயில் எல்லோரும் டைப்ரைட்டிங் கற்றுக்கொள்ள வந்து விடுவார்கள்.  வாழ்வின் ஆதர்சம் அரசு அலுவலகத்தில் ஒரு க்ளெர்க் ஆகிவிடுவது என்கிற ஆசை.  அப்போதெல்லாம் எஞ்சினியரிங், மருத்துவ படிப்பெல்லாம் மீது அவ்வளவு ஆர்வம் இல்லை.  குறைந்தபட்சம் நான் வாங்கிய மதிப்பெண்களுக்கு அந்த எண்ணமே எனக்கில்லை.

அரசு அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா ஆக இரண்டு வழிகள் க்ரூப் ஃபோர் - இதற்கு SSLC போதும் - க்ரூப் டூ, க்ரூப் 1  எல்லாம் எழுத குறைந்தபட்சம் முறையே இளநிலை பட்டதாரி முதுநிலை பட்டதாரியாயிருக்க வேண்டும்.  வங்கி அலுவலர் பரீட்சை எழுதவும் அப்படியே.  

எனவே உடனடியான வேலை வாய்ப்புக்கு டைப்ரைட்டிங் தேவை என்ற நிலை இருந்தது.  குமாஸ்தா வேலைக்கு கூடுதல் தகுதி.  அல்லது தட்டச்சர் வேலைக்குச் செல்லலாம்.  அங்கிருந்து ஒரு  பரீட்சை எழுதி இளநிலை உதவியாளர், அப்புறம் அடுத்தடுத்த பரீட்சைகள் எழுதி அலுவலகத்தில் கண்காணிப்பாளர், மேலாளர், என்று உயரலாம்.

திட்டம் எல்லாம் சரிதான்.  எதுவும் நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருந்தது. 

அப்பா சொல்லி சேர்ந்தேனா, நண்பர்களை; பார்த்து சேர்ந்தேனா என்று யோசித்தால் அப்பா அப்படி எதுவும் எனக்கு ஐடியா கொடுத்ததில்லை என்று ஞாபகம்.  எனவே நண்பர்களைப் பார்த்து நானும் சேர்ந்தேன்.  சத்யா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யுட்டில் சேர்ந்தேன். நண்பர்கள் சுப்பிரமணி, ராமமூர்த்தி சொன்னபடி இரண்டு A4 சீட் பேப்பர் வாங்கி சுருட்டி சைக்கிளின் ஹேண்டில்பாரில் சொருகிக் கொண்டு ஸ்டைலாக சென்று வாசலில் இறங்கி சைக்கிளை ஸ்டென்ட் போட்டு நிறுத்தி...

'ஷ்...  இவ்வளவு விவரணம் தேவையா?' என்றால்..  ஆம்..  அந்த பந்தா எல்லாம்தான் அதில் சேர வைத்தது.   சைக்கிள் ஒரு இளமையின் சின்னம்.  நாங்கள் எல்லாம் சேர்ந்தும் கூட என் நண்பன் ஜெரோம் அதில் சேரவில்லை.  வீண் வேலை என்றான்.  அவன் கொஞ்சம் இன்டலக்சுவல் டைப்.  

மூன்று சகோதரர்கள்தான் முதலாளிகள்.  உள்ளே செல்லும்போது படபடபடபடபடபடபடபட வென ஓசை வந்து கொண்டிருந்தது. 

அங்கு உட்கார்ந்திருந்தவர் மூவரில் நடுவர் என்பது எனக்கு அப்போது தெரியாது.  ராமமூர்த்தி "ஸார்..  என் பிரெண்டு..  புதுசாக சேர வந்திருக்கிறான்" என்று சொல்லி விட்டு அங்கு காலியாயிருந்த ஒரு டைப்ரைட்டிங் மெஷினில் போய் உட்கார்ந்தான்.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவன் அருகில் ஒரு இளம்பெண் பாவாடை சட்டையில் அமர்ந்து டபடபடபடபடபவென்று அடித்துக் கொண்டிருந்தாள்.  அவளை நான் பார்த்திருக்கிறேன்...   

சாந்தி!

"வாங்க தம்பி..   உங்க பேரென்ன?" என்றார் தட்டச்சாசிரியர்!

===========================================================================================

OTT யில் பார்த்த படம்  :  சின்னச்சின்ன ஆசை 2026-  தமிழ்/மலையாளம் - சன் நெக்ஸ்ட் 

சின்னச்சின்ன ஆசை 
தஞ்சாவூரிலிருந்து வாரணாசி வரும் லீலா என்னும் மதுபாலா (இப்போது மதுபாலா  அல்ல,மதூ) தன் குழுவினரிடமிருந்து பிரிகிறாள்.  அவள் கைப்பையையும் மொபைல் போனும் திருட்டு போகின்றன.  வெறும் கையுடன் நின்று அழுது கொண்டிருக்கும் அவளை ஒரு டீ மாஸ்டர் (அவருக்கும் ஒரு நெகிழ்வான கதை பின்னால் வருகின்றது) மாதவன் மாஸ்டருக்குக் காட்டுகிறார்.

மாதவன் மாஸ்டர் அதாவது இந்திரன்ஸ் கேரளாவிலிருந்து வந்திருக்கும், அவ்வப்போது அங்கு வந்து செல்லும், ஒரு ஓய்வுபெற்ற  பள்ளி ஆசிரியர்.  அந்த ஆவூரில் எல்லோரும் அவரை அறிவார்கள்.  அவரும் எல்லோரையும் அறிவார்.  நலலவர்.  மனைவியை இழந்தவர்.

அவர் மதுவுக்கு உதவ முற்படுவதும், நம்பியும் நம்பாமலும் மது அவர் உதவியை ஏற்பதும், பின்னால் நிகழும் சில சம்பவங்களும்....  ஒரு FeelGood Movie யாக தர முயற்சித்திருக்கிறார் புதிய இயக்குனர் வர்ஷா வாசுதேவ்.  முடிவு புதிதாக கதை எழுதும் எழுத்தாளருக்கேயுரியது என்று தோன்றியது.  அல்லது சில சம்பிரதாயங்களை மீற முடிவதில்லை!  ஒரு சாரார் எதிர்க்கலாம்.

மதுபாலா கார்ட்டூனில் போடப்பட்ட கேரிகேச்சர் போல இருக்கிறார்.  இந்திரன்ஸை வேறு சில படங்களில் பார்த்திருக்கிறேன்.  நெல்சன் படங்களில் வரும் ஒரு உயரக்குறைவான இளைஞர் ரசிக்கத்தக்க ஒரு பாத்திரத்தில் வருகிறார்.  அபர்ணா தந்தை நலம் நாடும் ஒரு நல்ல மகளாக வருகிறார்.

இது நடக்கக்கூடியதா, நடக்குமா, நம்ப முடியவில்லையே போன்ற கேள்விகளை விட்டு விட்டு படத்தை அமைதியாக ரசிக்கலாம்.
கோவிந்த் வசந்தா இசையில் சில ஹரிஹரன் குரல் கஜல்ஸ் போல பாடல்கள் காதில் விழுந்ததாக நினைவு.  பாடல்களை பொதுவாக ஓட்டி விட்டு விடுவேன்!!

ஜெயக்குமார் ஸார்..   நேற்றைய என் 'கவிதை'கள் இந்தப் படத்தைப் பார்த்தபோது தோன்றியவை..

============================================================================================

நெல்லை கண்ணன் பக்கம் :

கடவுளை நம்புங்கள் ரொம்ப சுவாரஸ்யமானது 


=======================================================================================

சமீபத்தில் முன்னாள் முதல்வர் தான் தோற்ற தொகுதியில் மறுபடியும் வாக்கு எண்ணிக்கைக்கு கோரி, அதுவும் நடந்து, மறுபடியும் அவர் தனது தோல்வியை உறுதி செய்து கொண்டார்.  தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று நெட்டிசன்கள் எல்லாரும் கருதும் நிலையில் காலச்சக்கரம் நரசிம்மா இது சம்பந்தமாக வெளியிட்டிருந்த ஒரு சுவாரஸ்யமான குறிப்பு.

1) காமராஜரின் தோல்வி அகில இந்திய காங்கிரஸுக்கு பேரிடியாக வந்தது .
காமராஜரிடம் அவர் உதவியாளர் வைரவன் அவரது தோல்வி செய்தியை அறிவித்தார் . அவர் வாடகைக்கு குடியிருந்த திருமலை பிள்ளை சாலை வீட்டில் திரண்ட காங்கிரஸ் தலைவர்கள் , வாக்கு வித்தியாசம் 1,285 என்பதால் , மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விடலாம் என்று சொன்னார்கள் .
அதற்கு காமராஜ் சொன்ன பதில் " ஏன்கிறேன்? காங்கிரஸ் மொத்தம் 51 சீட்டுதான் வாங்கியிருக்கு . 183 தொகுதியில் தோற்று போனோம் . ஸ்ரீபெரும்புத்தூர்ல போட்டியிட்ட முதல்வர் பக்தவத்சலம் கூட தோற்று போயிட்டார் . எல்லா இடங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கை கேட்பீர்களா ! போய் ஜோலிய பாருங்கங்கறேன் !'' -- என்றார் .
2) ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி லோஹியா சீடரான ராஜ் நாராயணனிடம் , 55,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் . அந்த தகவலை இந்திரா காந்தியின் செயலாளர் நிர்மலா தேஷ்பாண்டே தான் நள்ளிரவில் அவரிடம் தெரிவித்தார் . அப்போது இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி பூபுல் ஜெய்கர் அவருக்கு போன் செய்து ஆறுதல் சொன்னார் .
" Pupul ! People have thrown me out ! என்றார் இந்திரா .
"They did not throw you out ! You made them throw you out!'' -- என்றார் புபுல் ஜெய்கர் .
"So be it but they will realise their mistake and put me back in the saddle soon " -- என்று உறுதியுடன் சொன்னார், இந்திரா காந்தி . சொன்னபடி 1980 ல் பதவிக்கு வந்தார்
3) தோல்வியை பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார் . ஜெயலலிதாவுக்காக பிரச்சாரம் செய்த நடிகை மனோரமா , முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் , போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவை சந்தித்தார் .
"இவ்வளவு புத்திசாலியாக இருந்து கொண்டு , உன்னை சுற்றி இருப்பவர்கள் உனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் . அதை கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே !'' -- என்று மனோரமா சொன்னதும் , ஜெயலலிதா முதல் தடவையாக தனது தோல்வியை பற்றி மனோரமாவிடம் கருத்து தெரிவித்தார் .
'போகட்டும் ! ஆட்சியில் இருக்கும் ஜெயலலதாவை விட , எதிர்க்கட்சியில் இருக்கும் ஜெயலலிதா ஆபத்தானவர் என்று எல்லோரும் புரிந்து கொள்ளட்டும் . வரும் 1998 நாடாளுமன்ற தேர்தலில் இந்த தோல்வியை எப்படி ஈடு கட்டுவது என்று எனக்கு தெரியும் . 1989 ல் . போடிநாயக்கனூரில் வெற்றியை சந்தித்தேன் . 1996 ல் பர்கூரில் தோல்வியை சந்தித்தேன் . இனி அரசியல் வெற்றி தோல்வி என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன் . இனிமேல் நான் தோல்வி அடையவே மாட்டேன் . எனக்கு பிரச்சாரம் செய்ததற்கு நன்றி ! '' என்று மனோரமாவிடம் ஜெயலலிதா சொன்னார் .
அதன் பிறகு ஜெயலலிதா எந்த தொகுதியிலும் தோல்வி அடையவில்லை . எந்த தலைவரும் செய்யாத ஒரு ரிக்கார்டை தான் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி , கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்தார் . . இது அவரது மனஉறுதி யை காட்டியது .

காலச்சக்கரம் நரசிம்மா

================================================================================================

தெய்வமகன் சிவாஜி மகனைத்தேடி வரும் காட்சி.  பண்டரிபாயின் தவிப்பு சிவாஜிக்கு எதையோ உணர்த்துகிறது.  25 வருஷங்களுக்கு முன்னாலான கதை நினைவுக்கு வருகிறது.  விடை தேடி பழைய நண்பனைப் பார்க்க கிளம்புகிறார்.  குறையுடன் பிறந்த குழந்தையை கொலை செய்யச்சொன்னதால் இனி என்னைப் பார்க்காதே என்று சொல்லி விட்ட நண்பனுடன் உணர்ச்சிகரமான மோதல்..  மகன் பற்றிய கோப கலந்துரையாடல், உணர்ச்சி வெள்ளம்...

சிவாஜி...

===========================================================================================

பெங்களூருவுக்கு வரும் சங்கடம்!


========================================================================================

இருவேறு செய்திகள்!



========================================================================================
கோயம்புத்தூரில்  நேதாஜி !



நேதாஜி இங்கே இருக்கிறார்!

"நேதாஜி சுபாஷ் காலமாகி விட்டாரா?  இல்லை தலைமறைவாக இருக்கிறாரா?

இந்தக் கேள்வியைக் கோவை மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வாசியைப் பார்த்துக் கேட்டால் "இதே ஊரில் உயிருடன் இருக்கிறார்" பதில் வரும். காரணம்:  இந்த ஊரில் டூப்ளிகேட் நேதாஜி ஒருவர் உயிர் வாழ்ந்து வருவதுதான்.  இவர் பெயர் எஸ். கே அந்தராஜா கவுதாரி.  (போஸ் கவுடர் என்றே இவரை அனைவரும் அழைப் பர்.)   'வயது 63. இவ்வூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 35 ஆண்டுக் காலம் பணியாற்றி யிருக்கிறார். கட்சி நலனுக்காக யோசனைகளைக் காந்திஜிஇடம் எடுத்துக் கூற  இவர் மூன்று முறை வட நாடு சென்றிருக்கிறார்.

நேதாஜி தலை மறைவாக இருந்த காலத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய இவரை, செகிந்திராபாத்திலிருந்து ஐதராபாத் வரும் வரை கண்காணித்து வந்த ரகசியப் போலீஸ், இவர் ரயிலை விட்டு இறங்கியதும் கைது செய்து இழுத்துச் சென்றது. தாம் சுபாஷ் சந்திர போஸ் அல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கூட 24 மணி நேரம் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தார்.

மற்றொரு சமயம் -

திரிபுரா காங்கிரஸுக்குத் தலைமை தாங்க வந்த நேதாஜிக்குத் திடீரென 104 டிகிரி ஜூரம் வரவே  தலைமையுரைக்குப் பிறகு ஆஸ்த்திரிக்குச் சென்றுவிட்டார் அவர்.  அடுத்த சில நிமிடங்களில் கூட்டத்துள் ஒரு பெரிய சலசலப்பு.   "அதோ சுபாஷ் போஸ் நடந்து போகிறார்" என்று கூட்டம் இவரைப் பின் தொடர்ந்தது. அவர்களிடம் "தான் போஸ் போஸ் அல்ல" என்று கூறித் தப்பிப்பதற்குள் போதும் போது மென்றாகி விட்டதாம்.

காந்திஜி அவர்களுடன் அவரது இல்லத்திலேயே தங்கியிருந்திருக்கிறார் இவர். காந்திஜி, நேருஜி, காமராஜ், சி. சுப்பிரமணியம் போன்ற தலைவர்களும் இவரைப் 'போஸ்' என்றே அழைப்பது வழக்கம்.   இன்று இவருக்கு வரும் கடிதங்கள் இவர் பெயருடன் 'போஸ்' எனக் குறிப்பிட்டே முகவரி எழுதப் பட்டிருக்கின்றன. 

நேதாஜியைப் பல முறை இவர் சந்தித்திருக்கிறார்.  "நீ என் உடன் பிறவாச் சகோதரன்" என்று அடிக்கடி நேதாஜி கூறுவாராம்.

"நேதாஜி இதுவரை உயிருடன் இருந்திருந்தால்?" எனக் கேட்கப் பட்டதற்கு இவர் அளித்த பதில்:

"என்னைப் போலவே தோற்றமளிக் கும் அவர் தற்சமயம் பற்களை இழந்து என்னைப் போலவே பொக்கை வாயு டன் கைத்தடியுடன் காணப்படுவார்.

'டூப்ளிகேட்' போஸிற்கு வாயில் நுழையாத வார்த்தை 'அமெரிக்கா' இதை "அமொரோக்கா" என்றே நீட்டி முழக்கிக் கூறுவார். அமெரிக்கரைப் போலவே பேசி இறுதியில் "அங்கே நான் போகலே..அப்ப... டீன்னு யாரோ சொன்னாங்கோ" என்று சொல்லி, பிறரைச் சிரிக்கவைப்பார். இப்படி இவர் பேசியதைக் கேட்டு என்னெஸ்கே' அவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்!

பேட்டி: திரைஞானி.

========================================================================================

பாஹே பக்கம் 

அப்பாவின் வேண்டுகோள்..

​நான் முக்கியமெனக் கருதும் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  பல வருஷங்களுக்கு முன்பிருந்தே பத்திரிகைகளுக்கு எழுதும்போதும், திருமணம் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து அனுப்பும்போதும் என் மனைவி பெயரையும் இணைத்தே எழுதுவது என் வழக்கம்.  இப்போது அவள் மறைவுக்குப் பின் என் பெயரோடு அவள் பெயரையும் இணைத்தே என் முகவரி அமைத்துக் கொண்டிருக்கிறேன். என் இயல்பான குணத்திற்கு நான் தந்திருக்கிற புதிய அடையாளம் இது.  என்னிலிருந்து அவளை பிரிக்க முடியாத ஏற்பாடும் கூட.  இது எனக்கு மிகுந்த மன நிறைவு தருகிறது.  என் லெட்டர் ஹெட், பெயருக்கான ரப்பர் ஸ்டாம்ப் இவற்றோடு எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் இப்படி இரு பெயரிலேயே பதில் சொல்லியும் வருகிறேன்.  இது என் இறுதி மூச்சுவரை என்பது உறுதி.
தன் மனைவியை மிகவும் நேசிக்கும், மதிக்கும் ஒவ்வொரு கணவனும் இப்படி தன் பெயரோடு மனைவி பெயரையும் இணைத்து வழக்கத்திற்கு கொண்டு வருவது, பெண்மையை கௌரவப்படுத்துவதும், அதற்கு மரியாதை தருவதுமாகும் என்று கருதுகிறேன்.  நானறிந்தவரை யாரும் இதைச் செய்வதாகத் தெரியவில்லை.  அச்சு மற்றும் எலெக்ட்டானிக் மீடியாக்களில் செல்வாக்குள்ள உங்களை போன்றவர்கள் (என்னையும் மாமாக்களையும் சொல்கிறார்) இக்கருத்தை முன்வைத்து வற்புறுத்துமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  ஆணாதிக்கம் என்ற அசிங்கமும் இதனால் பெருமளவு மாறும்.

ஆண்-பெண் இருபாலாரிடையேயும் ஆதிக்கப் பிரச்னைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.  பெரும்பாலும் இது யதார்த்தத்தில் இல்லை.  ஆழ்மனத் தொடர்பும், அன்பும், பாசமுமான தாம்பத்யத்தில் இது அறவே இல்லை, இருக்கவும் கூடாது.  அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தனி நபர்கள் இவ்வாறு இருக்கலாம்.  அது அவர்களின் மனநோய்.

ஆணாதிக்கம் என்று ஆர்ப்பாட்டக்குரல் எழுப்பிப் பெண்ணியம் பேசும் எல்லோருமே - ராஜம் கிருஷ்ணன், மைதிலி சிவராமன், மஞ்சுளா ரமேஷ், நிர்மலா சுரேஷ், பொன்மணி வைரமுத்து, அனுராதா ரமணன், சீதா ரவி, சுஹாசினி மணிரத்தினம், (பட்டியல் வெகு நீளம்) என்றுதான் அழைக்கப்படுகிறார்களே தவிர,  அவர்களது கணவன்மார்கள் இப்படியே தம் மனைவி பெயரை இணைத்துத் தன் அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லையே..  (கிருஷ்ணன் ராஜம், சிவராமன் மைதிலி என்பது போல), ஏன்?  இதற்கு பிரபலத்துவம் அவசியம் என்பதும் இல்லையே?

எனக்குத் தெரிந்த, தெரியாத எல்லா கணவன்மார்களுக்கும் இது என் வேண்டுகோள்.  பெயரிலும் நீங்கள் உங்கள் மனைவியைப் பிரிக்காதீர்கள்.  அன்புக்கு மட்டுமல்ல, இது உங்கள் பண்புக்கும் கூட! "ஆணுக்கு பெண் கவசம் - அது ஒன்றே சத்தியம் ; ஆணாதிக்க நிஜத்தில் 'ஆமிதுவும் சாத்தியம்!"

உங்கள், 
பாலசுப்ரமணியம் ஹேமலதா 

==========================================================================================
இங்கிலிஷ்....  


===================================================================================

கவிதைப் பக்கம்  :
நா முத்துக்குமார் 


ஒப்புதல் வாக்குமூலம்.

இவன் தோட்டத்தில் 
புல்லும் இருக்கிறது 
பனியும் இருக்கிறது 
ஒன்று சேர்த்து 
பனித்துளி செய்யத் தெரியவில்லை

இவன் வானத்தில் 
வெயிலும் இருக்கிறது 
மழையும் இருக்கிறது 
ஒன்று குழைத்து 
வானவில் வரையத் தெரியவில்லை

இவன் கடலில் 
அலையும் இருக்கிறது 
கரையும் இருக்கிறது 
ஒன்று கலந்து 
கடந்துபோகத் தெரியவில்லை

இவன் எதிரே
இன்பமும் இருக்கிறது 
துன்பமும் இருக்கிறது 
இரண்டையும் இணைத்து 
வாழ்ந்து பார்க்கத் தெரியவில்லை

முத்துகுமாரின் பிரபல தூர் கவிதை 


=======================================================================================

சாண்டில்யன் பக்கம்.  :
சாதாரணமாக சாண்டில்யனின் கதாநாயகர்கள் மாஸ் காட்டுவதிலும் சரி, காதலிப்பதிலும் சரி..  MGR ஐ நினைவு படுத்துபவர்கள்.  காதலைப் பொறுத்தவரை MGR பாணியிலேயே அல்லது MGR  தானே சாண்டில்யன் கதைகள் படித்து அப்படி தன்னை வடிவமைத்துக் கொண்டாரோ..  காதலிகள்தான் நாயகன் மேல் விழுந்து காதலிப்பார்கள்.  இவர் தன்னை பெரிதாக வெளிப்படுத்த மாட்டார்.

மலைவாசல் கதை ஹூணர்களின் இந்திய படையெடுப்பு, ஆக்ரமிப்பு பற்றியது.  அதில் வரும் நாயகன் அஜித் காதலியிடம் வழிவதை பாருங்கள்...

பிறகு சித்ராவையும் ஏற இறங்கப் பார்த்தான். “அந்த மலை அஜித் சந்திரன் அதை ஒரு விநாடி உற்று நோக்கினான். உச்சி இங்கு வராது. ஆனால் மனிதன் முயன்றால் அதை அடையலாமல்லவா?" என்றான்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று சித்ராதேவிக்குத் தெரியவில்லை. சற்று அவள் குழம்பியிருந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள அவளை நெருங்கி, அவள் இரு கைகளையும் அஜித் சந்திரன் பிடித்துக் கொண்டான். "சித்ரா! இதோ பார், என்னை மறுக்காதே. அந்தஸ்தை மறந்துவிடு. அந்தஸ்து உலகத்தில் நிலையற்றது; இன்றிருக்கும் ராஜிய நிலை புரண்டால் நாளை நான் எஜமானனும் உன் தகப்பனார் அடிமையுமாக மாறலாம். நீ முழுக்க முழுக்க ஹூணர் குலத்தவளும் அல்ல. உன் தாயார் கூர்ஜர ஸ்திரீ! இல்லாவிட்டால் ஹிந்துக்களின் முகவெட்டும், இவ்வளவு அழகும் நீண்ட அளகபாரமும் உனக்கு வந்தே இரா. ஆண் பெண் மனம் ஒன்றுபடும் போது உலகச் சூழ்நிலை அர்த்த மற்றது" என்று கெஞ்சி அவளைத் தழுவ முயன்றான்.

"எல்லாவற்றையும் விட உன் பேச்சு அர்த்தமற்றது, விலகி நில், இல்லாவிட்டால் கூச்சலிட்டு மாளிகையிலிருந்து என் தந்தையை உதவிக்கு அழைப்பேன்!” என்று சீறினாள் சித்ரா.

“நீ கூச்சலிட வேண்டிய அவசியமே இல்லை. டேய் அஜித்! நீ என் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கும் படிப்பு இதுதானா?” என்று கர்ஜித்துக்கொண்டே கையில் நீண்ட சாட்டையுடன் பக்கத்திலிருந்த சண்பக மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான் சித்ராவின் தகப்பன் அடிலன்.

========================================================================================

இல்லாமலே போய்விட்ட அந்த ஜெமினி-சாவித்ரி முதல் படமான மனம் போல் மாங்கல்யம் படத்திலிருந்து ஒரு பாடல்...It was released on 5 November 1953.No print of the film is known to survive, making it a lost film.

அட்டேபள்ளி ராமராவ் இசையில் கனகா சுரபி எழுதிய பாடல்கள்!

ஜெமினி சாவித்ரி காதலிக்க, அதைக் கெடுத்து சாவித்ரியை தான் திருமணம் செய்ய நினைக்கிறார் சாரங்கபாணி.  இன்னொரு ஜெமினி தவறுதலாக மனநலக்காப்பகத்தில் அடைக்கபப்ட்ட அங்கிருக்கும் நர்ஸ் பாலசரஸ்வதியை லவ் செய்கிறார் அந்த இன்னொரு ஜெமினி.  எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பதே கதை!

116 கருத்துகள்:

  1. ஆஸ்பத்திரியிலிருந்து விலகி நீங்கள் எழுதியுள்ள தட்டச்சுக் கதை ஆரம்பம் என்ன என்னவோ நினைவுகளைக் கொண்டுவந்தது. சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. ஆஸ்பத்திரியிலிருந்து இன்னும் விலகவில்லை. அது வியாழன்! தட்டச்சு கதை சாதாரணம். ஆனால் அதன் நினைவுகள் எல்லோருக்கும் இனிமையாக இருக்கும். பதட்டமில்லாத பரீட்சை.

      நீக்கு
  2. ஸ்டாலின், பணத்தை வாரியிறைத்து வெற்றி பெற்றால் தமிழர்களுக்குத் தலைக்குனிவு என நினைத்தேன் தேர்தல் முன்பு. வாக்காளர்கள் நல்ல முடிவை எடுத்திருக்கின்றனர்.

    பதவி இல்லாத்தால் பையனை எதிர்கட்சித் தலைவராக ஆக்கும் நிர்பந்தம்.

    சரி... வெள்ளிக்கிழமை பாடலாக ஏன் "ஆடிய ஆட்டமென்ன" பாடல் நினைவுக்கு வரவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பையனுக்கோ 'இவன் முதல்வராயிட்டானே' என்கிற ஆத்திரம் இன்றைய முதல்வர் மீது...     ஆடிய ஆட்டமென்ன பாடலைப் போட்டால் செல்வாண்ணா கோச்சுப்பார்!

      நீக்கு
    2. கருணாநிதிக்கு, சட்டி சுட்டதடா பாடல் தினமலரில் வந்திருந்தது, தோற்றதும். ஸ்டாலினுக்கு ஆடிய ஆட்டமென்ன பொருத்தமான பாடல் இல்லையா?

      நீக்கு
    3. அதைவிட 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' பாடல் இன்னும் பொருத்தமாயிருக்கும் அல்லவா?

      நீக்கு
    4. ஆடி அடங்குபவர்களுத்தானே அந்தப் பாடல் பொருத்தமாயிருக்கும். இதுகள்தான் அடங்காப் பிடாரிகளாச்சா.. யாராவது அடக்கினாத்தான் உண்டு!

      நீக்கு
  3. போலி நேதாஜி போல, உள்ளாட்சித் தேர்தலின்போது திருப்புல்லாணியில் பார்த்த டூப்ளிகேட் எம்ஜிஆர் நினைவுக்கு வருகிறார். புதன் பகுதியில் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலி நேதாஜி அல்ல.  அவர் நேதாஜி போல, நேதாஜி சாயலில் இருந்தார்.  காந்தி, நேரு, ஏன் நேதாஜியையே சந்தித்திருக்கிறார்.  எம் ஜி ஆர் வேடமணிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.  ரஜினி போலவே ஒருவரை ரீல்ஸில் அடிக்கடி பார்க்கிறேன்.  கமலுக்கு 7 டூப்ளிகேட் உண்டு!

      நீக்கு
    2. கமலே ஒரு டூப்ளிகேட்தானே என்ற வரியை எதிர்பார்த்தேன்.

      நீக்கு
    3. சொல்லலாம். அவர் சாக்கடையாக மாறி சில வருடங்கள் ஆகின்றன. ஒரு கலைஞனாக கமலை நான் என்றும் குறைத்து மதிப்பிட மாட்டேன்.

      நீக்கு
  4. தட்டச்சு வேண்டா வெறுப்பா, அப்பா சொல்றாரேனு போனேன். எதிலும் இறங்கிவிட்டால் தீவிரம்தான். ஆங்கிலம் ஹையரிலும் முதல் வகுப்பு. பாளையில் முதன்மை தட்டச்சு மையம் தமிழுக்குச் சேரச் சொன்னது. ஹைஸ்பீட் ஆங்கிலம் ரொம்ப வேகமா வரும், ஆனால் பரீட்சைக்குப் போகவுல்லை.

    தட்டச்சு நிலையத்தில் காதல் வரவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் வரவில்லை.   ஆனால் இனிமையான பொழுதுகளாகவே கழிந்தன.

      நீக்கு
  5. அஜீத் காதலியிடம் வழிவது.....இப்படி எழுதுவது நியாயமா? மடக்க நினைப்பவன் பெண் எதற்கு மயங்குவாள் என்றுகூடத் தெரியாமல் இருப்பானா?

    எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியாதே...   ஆனாலும் நானெல்லாம் கெத்தை விடாத டைப்!

      நீக்கு
  6. நான் படித்த இன்ஸ்டிடியூட்டில் ஹைஸ்பீடுக்கு இரண்டு மிஷின். தொட்டால் வழுக்கிக்கொண்டு போகும் வேகம். கோத்ரஜ் மிஷின்கள் புதியவை என்பதால் அதில்தான் பழகினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழுக்கிக் கொண்டு போனால் அச்சு பேப்பரில் விழாதே...    ஹிஹிஹி   ஜோக்கு ஜோக்கு!

      நீக்கு
    2. நான் படிச்சப்போ அதிகம் ரெமிங்க்டன் ரான்ட். பழகின மிஷினை விட்டுட்டு வேறே புது மிஷினில் உட்கார்ந்தால் அன்னிக்குனு பார்த்து தட்டச்சவே வராது. :( காட்ரெஜில் அதிகம் பழகினதில்லை. சித்தப்பா வீட்டில் ரொம்பப் பழைய மிஷின். ஆனால் அதில் சுலபமாகத் தட்டச்சிடுவேன்.

      நீக்கு
    3. நான் பழகியது Facit தான்

      நீக்கு
  7. அன்பும் பண்புமான தாம்பத்தியத்தில் ஆதிக்கம் அறவே இல்லை... விதிவிலக்குகள் இருக்கலாம்....

    அப்படி எனக்குத் தோன்றவில்லை. யாரேனும் ஒருவர் ஆதிக்கம் செலுத்தித்தான் பெரும்பாலும் நான் பார்த்திருக்கிறேன். பாஹே சொல்வது ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இல்லையென்றாலும் நீங்களாவது இருங்கள் என்கிறாரோ...

      நீக்கு
    2. இரண்டும் இருந்திருக்கு என்றாலும் பெரும்பான்மை ஆணாதிக்கம் தான். :(

      நீக்கு
  8. தனியார் துறை வந்துவிட்டால் இஸ்ரோ சீரமைக்கப் படுவது காலத்தின் கட்டாயம். ஒரு வகையில் தனியார்கள் போட்டிக்கு வருவது நல்லது. ஆனால் ஐந்து வருடங்கள் இஸ்ரோவில் வேலை பழகிவிட்டு காசுக்காகத் தனியாரிடம் ஓடாமல் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பக் கஷ்டம்தான்.  சிட்டிசன் படத்தின் கதாநாயகி சொல்லும் ரிஸ்க்தான்!

      நீக்கு
    2. பாதுகாப்பு விஷயத்தில் தனியாரை அனுமதிப்பது சரியாத் தெரியலை.

      நீக்கு
  9. தட்டச்சுப் பகுதியை நிறுத்திய விதம் அருமை. தொடர்கதை போல ஸ்வாரஸ்யமாக்குகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   நன்றி.  இதெல்லாம் ரசிக்க ஆரம்பிச்சிட்டீங்க...

      நீக்கு
  10. மதுபாலா இந்திரன்ஸ் படம் பார்த்தபோது எனக்கு தோன்றிய வரிகள்
    நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
    தற்போதெல்லாம் சினிமாவும் வீடியோவும் பதிவுகளில் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..  படத்தில் அவ்வளவு சீக்கிரம் அப்படியான ஓட்டுதல் சாத்தியமா என்று மனம் கேட்கவில்லையா?  ஒரே நாளிலா?

      நீக்கு
    2. mmmmmm வேறே எதில் பார்க்கலாம்? முகநூலில் பலரும் விமரிசனங்கள் எழுதி இருந்ததையும் படிச்சேன்.

      நீக்கு
    3. ஏன் உங்களிடம் OTT இல்லையா?

      நீக்கு
  11. /// ஆணுக்கு பெண் கவசம் -
    அது ஒன்றே சத்தியம் .. ///

    மூத்தோர் வார்த்தை அமிர்தம்..

    பதிலளிநீக்கு
  12. நெல்லை சார் இஸ்ரோவில் சேர்பவர்கள் விலகுவது என்பது புதியதில்லை. காலம் காலமாக இருப்பதுதான். தனியார் மயம் எனும்போது கூடுதல் ஆகிவிட்டது. முன்பு விலகியவர்கள் சென்றது அமெரிக்காவிற்கு. கால்டெக் hughes போன்ற நிறுவனங்களுக்கு.

    வேலை செய்பவன் வேலை செய்துகொண்டே இருப்பான். ஒன்றும் செய்யாமல் நடுவில் ஒருவன் வந்து அந்த வேலை எல்லாம் அவன் செய்ததாக பதவி உயர்வு வாங்கிக்கொள்வான். வடக்கில் இருந்து இங்கு வேலை செய்ய வருபவர்கள் ராஜினாமா செய்துவிட்டு புதிய கம்பெனி துவங்கி இஸ்ரோவுக்கே சப்ளை செய்வான். பின்னர் இருக்கவே இருக்கிறது ஈகோ . இது போன்று பல காரணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது சட் என நூறு பேர் விலகுகிறார்கள் என்றதும் அலார்ம் அடித்தது.

      எல்லா கம்பெனிகளிலும், வேலை செய்பவர்களுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும். வேலை செய்யாதவர்கள் மேனேஜர் கேடகரில ப்ரொமோஷன், ஊதிய உயர்வு வரும். இது சகஜமாகிவிட்டது.

      நீக்கு
  13. என் தந்தை சொல்லி நான்
    கேட்காதவை இரண்டு
    1) தட்டச்சு, 2) சிறு கடை வைப்பது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... எல்லாம் அவன் செயல்.

      நீக்கு
    2. என்ன அநியாயம் அப்பா சொல்லிக் கேட்கலையா? கேட்டிருந்தால் பெரிய வியாபாரியாகும் வாய்ப்பை விட்டுட்டீங்களே

      நீக்கு
  14. நான் தட்டச்சு பயின்றது எங்கள் காலத்து ரெமிங்டன் ராண்ட்.
    அது 100 மாணவர்கள் தங்கள் டைப்ரைட்டிங் மிஷினோடு உட்கார்ந்திருந்த ஹால். தட்டச்சுத் தேர்வில் ஸ்பீடு டெஸ்ட்.
    'ஸ்டார்ட்' என்று தேர்வு கண்காணிப்பாளர் அறிவித்ததும். 'தட தட தட'வென்று
    ஆலங்கட்டி மழை போல அந்த ஹாலே தடதடத்த சப்தம் இன்னும் மறக்கவில்லை.
    அப்புறம் ஜாப் டைப்பிஸ்டாக அய்யங்கார் கடையில் வேலை பார்த்தத கதையெல்லாம் என் பூவனம் தளத்தில் 'வசந்த கால நினைவுகள்' பகுதியில்
    வாசிக்கக் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..  அப்போது ஹால்டா வும் இருந்தது.  நீங்கள் சொல்லும் அந்த சத்தமழை என் காதுகளிலும் ஒலிக்கிறது!

      நீக்கு
    2. ஹால்டா மிஷினும் எங்க தட்டச்சு நிலையத்தில் இருந்தது. ஆனால் நான் ரெமிங்க்டன் ரான்டிலே தான் பழகினேன். அலுவலகத்தில் ஹால்டா தான் வைச்சிருந்தாங்க.

      நீக்கு
    3. தப்பே இல்லாமல் கோணல் மாணல் இல்லாமல் நான் அடிக்கிறேன் என்பதில் நம்மவருக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். அவருக்குக் கிட்டத்தட்ட ஓர் செக்ரடரி போல வேலை எல்லாம் பார்த்துக் கொடுத்திருக்கேன்.

      நீக்கு
    4. பெண்கள் எப்போதும் எதிலும் நேர்த்தி.

      நீக்கு
  15. செல்வா வின் கோவம் அவ்வளவு பிரசித்தமா!...

    ///ஆடிய ஆட்டமென்ன!..///

    பொருள் பொதிந்த வார்த்தைகள்..
    தொடர்ந்த வரிகளால் வேறு விதமாகி விட்டது...

    நிதர்சனம் என்றாலும் ஆடி வெள்ளிக்கிழமையில் எதற்கு?...

    சௌபாக்கிய லக்ஷ்மி வரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு உண்மையில் அந்தப் பாடல் எல்லாம் மனதுக்கு வரவே இல்லை.  'மாப்பிள்ளை டோய்'  ரேடியோவில் நானும் ரசித்த பாடல்.

      நீக்கு
  16. பற்றுகளைக் கொடுத்தவன் பரமன்...

    அவற்றை ஏன் விடவேண்டும்!...

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. டைப்ரைட்டிங் கற்றுக் கொண்ட காலங்களை நினைத்து கொள்கிறேன். நானும், என் கணவரும் ஒன்றாக கற்றுக் கொண்டோம் ஒன்றாக பரீட்சை எழுதினோம். அந்தக்கால நினைவுகள் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணத்துக்குப் பிறகுதான் கற்றுக்கொண்டீர்களா?

      நீக்கு
    2. மகள் டைப் கற்றுக் கொள்ள போன போது ஏற்பட்ட ஆசை இருவருவருக்கும்.

      நீக்கு
    3. அட...    என் மாமா கே ஜி ஒய் அளிப்பது வயதுக்குமேல் பனி செய்துகொண்டே படித்து பட்டம் பெற்றார்.  இப்போது குடும்பமே சமஸ்கிருதம் கற்றுக் கொள்கிறது.

      நீக்கு
    4. அட... உங்கள் ஆர்வத்தை, உழைப்பை... வியக்கேன்!

      நீக்கு
    5. Credit goes to Adhi Venkat. Me, Passed first exam with distinction. She (Adhi) is going to complete. She passed all the exams in first class. Kudos to her.

      நீக்கு
  19. அது சரி அப்பாவின் ஆசைப்படி, ஆணைப்படி இன்று முதல் நீங்கள் ஸ்ரீராம் சுஜாதா என்று பதிவிடுவீர்களா? அப்பாடா கீதா மாமிக்கு பதில் வம்பிழுக்க வந்துட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொய்க்கவர்களில் அப்படி எழுதுகிறேன்.  அவர் சொன்னதால் அல்ல, எனக்கே தோன்றி எழுதினேன்.

      நீக்கு
    2. அந்தக் கவர்களில் அப்படித்தான் எழுதணும், இல்லைனா எந்த ஶ்ரீராம் என்ற சந்தேகம் வரும்.

      நீக்கு
    3. அதற்கு முகவரி எழுதலாமே.. வேறு அடையாளங்களும் இருக்கும்!

      நீக்கு
  20. சின்னச்சின்ன ஆசை விமர்சனம் படித்தேன் பார்க்கவில்லை . நெல்லை கண்ணன் கடவுளை நம்புங்கள் பேச்சு நன்றாக இருக்கிறது.தெய்வமகன் சிவாஜி படம் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  OTT யில் படம் பார்ப்பீர்களோ...

      நீக்கு
    2. mmmmm?????சிரிக்கலாம் மாட்டீங்களே? ஓடிடி, ஓடிடி என்றால் என்ன? அதில் படம் பார்ப்பதுனா எப்பூடி?

      நீக்கு
    3. The global and regional expansion of Over-The-Top (OTT) streaming media is driven by mobile data adoption, affordable smartphones, and a strategic pivot toward localized regional content and hybrid ad-supported models. The worldwide market is projected to reach approximately $353 billion, with India's expanding digital sector serving as a primary growth engine boasting hundreds of millions of active streaming users

      எந்த OTT வேண்டுமோ அதை டவுன்லோட் செய்து மாதத் தவணையோ , வருடத் தவணையோ கட்டினால் படங்கள் பார்க்கலாம். நிறைய OTT க்கள் இருக்கின்றன. எங்கள் வீட்டில் நாங்கள் அமேசான், ஆஹா, நெட்ப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட், சோனி லைவ், Z5, ஜியோயோ ஹாட்ஸ்டார், ஆகியவை வைத்திருக்கிறோம்.

      நீக்கு
  21. தட்டச்சு என்றவுடன் எனக்கும் என் அப்பாவின் நினைவு தோன்றியது. தட்டச்சராக அரசு பணியில் சேர்ந்து கடைசி வரை தட்டச்சராகவே இருந்து ஒய்வு பெற்றவர். ஒரே ஒரு ஆசுவாசம். எம்ஜியார் ஆட்சியில் தட்டச்சர்களுக்கு ஒரே ஒரு ப்ரோமோஷன் பதவியாக யு டி டைப்பிஸ்ட் என்ற உயர்வு கிடைத்தது.
    நான் தற்போது ஒருவிரல் க்ரிஷ்னாராவ். ஒற்றை விரலால் தட்டச்சு செய்பவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு எக்ஸாம் எழுதினால் ரெகார்ட் ரூம் க்ளெர்க் அப்புறம் ஜூனியர் அசிஸ்டன்ட் என்று பரீட்சை எழுதி ப்ரமோட் ஆகலாம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் சொல்வதைப் பார்த்தால் தட்டச்சர் வேலை கிரேடு குறைச்சல்னு அர்த்தம் வருது. ஆனால் நான் வேலை பார்த்த காலத்தில் வங்கிப் பணி, மத்திய அரசுப்பணி, மாநில அரசுப்பணி எல்லாவற்றிலும் தட்டச்சரின் சம்பளம் அங்கே உள்ள எல்டிசி எனப்படும் லோயர் டிவிஷன் கிளார்க்கின் சம்பளத்தை விட ஐம்பது ரூபாயாவது அதிகம் இருக்கும். ஏனெனில் நான் மாசா மாசம் தட்டச்சருக்கெனக் கொடுக்கப்படும் சிறப்புச் சம்பளத்தை அதற்கான டி.ஏ. வோடு வாங்கி இருக்கேன். நான் இருந்தது அப்போ எம்.எஸ்.ஈ.பி. மதராஸ் எலக்ட்ரிசிடி போர்டு. அப்போல்லாம் மின் வாரியம்னு பெயர் வரலை. அதோடு தமிழ்நாடு மின் வாரியம் என மாறியதெல்லாம் 1075க்குப் பின்னரே என நினைக்கிறேன். இப்போதுள்ள டான் ஜெட் தமிழ்நாடு ஜெனரேஷன் அன்ட் டிஸ்ட்ரிபூஷன் கார்பரேஷன் எல்லாம் மிகச் சமீப காலத்தில் ஏற்பட்டது.

      நீக்கு
    3. ரெகார்ட் ரூம் கிளார்க் என்பவர் கடை நிலை ஊழியர்களுக்குக் கிடைக்கும் ப்ரமோஷன். வங்கிப் பணியிலும் அப்படித்தான். பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்கையில் சில சமயம் அவங்களோட கல்வித் தகுதி குறைவாக இருந்தால் அதைப் பொறுத்து அட்டென்டர், மெசெஞ்சர், ரெகார்ட் கிளார்க் என வேலை கொடுப்பார்கள். ஒரு வருஷத்துக்குள்ளாகக் குறிப்பிட்ட தேர்வில் பாஸாகி விட்டால் எல்டிசி ஆகலாம்.

      நீக்கு
    4. I think you are mentioning LDC as Junior Assistant.

      நீக்கு
    5. டைப்பிஸ்ட் ரொம்ப தாழ்த்தி என்று சொல்ல வரவில்லை.  பரீட்சை எழுதி முன்னேறாவிட்டால் கடைசிவரை டைப்பிஸ்ட்தான்.  ஸ்டெனோதான்!

      நீக்கு
    6. அரசுப் பணியிலேயே செக்ரடரி பதவினு ஒண்ணும் உண்டே. எந்தத் துறையில் வேலை செய்யறோமோ அதே துறையில் மெல்ல மெல்ல முன்னேறலாம். ஆனால் நிச்சயமாய்ப் பரிக்ஷை உண்டு என்பதும் தவிர்க்க முடியாதது என்பதும் உண்மை. என்னவோ போங்க வேலையை விட்டுட்டு ராஜஸ்தான் போகறச்சே இதெலலம் தோணவே இல்லை. இப்போ தோணி என்ன செய்ய முடியும்?

      நீக்கு
    7. வேலையை விடாமல் இருந்திருக்கலாம்தான்.

      நீக்கு
    8. எமர்ஜென்சி சமயம் ராஜஸ்தானுக்கே உடனே வந்து வேலையில் சேரச் சொல்லி அலுவலகத்திலிருந்து கடிதமும் வந்திருந்தது. ஆனால் நம்ம ரங்க்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டார். அப்போப் பையர் வயிற்றில். சந்தேகம் நிவர்த்தி ஆகலை. நிவர்த்தி ஆயிட்டால் மறுபடி டெலிவரிக்குனு லீவ் போடணும். அலுவலகத்தில் எல்லோரும் கேலி செய்வதோடு நான் திரும்பி ரங்க்ஸுடன் வந்து இருக்க முடியாது என்பது ஒரு பெரிய கண்டிஷன். அதுக்காகவே தான் 74 இல் அவர் என்னை வேலையை விட்டுட்டு வரச் சொல்லிட்டார். பணம் சபாதிப்பதை விடச் சேர்ந்து வாழ்வது தான் முக்கியம்னு இரண்டு பேருமே நினைச்சோம். அதைச் செயல் படுத்தினோம். பணக்கஷ்டம் இருந்தது. எப்படியோ சமாளித்தோம்.

      நீக்கு
  22. ஓட்டலுக்கு வருகை குறைந்தாலும் வருமானம் வரும் தானே! செயலிகளை நம்பி இருக்கும் மக்களும், மக்களை நம்பி இருக்கும் செயலிகள் பாடும் கஷ்டம் தான்.

    அப்பாவின் வேண்டுகோள் நன்றாக இருக்கிறது.

    கடைசி பாட்டு வல்லி அக்காவிற்கு பிடித்த பாட்டு. அவர்கள் முன்பு பதிவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
    எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டலுக்கு வராமல் வீட்டிலிருந்தே செயலிகளை பயன்படுத்தி உணவு வாங்குவோர் பாடுதான் சிரமம்!

      நீக்கு
  23. மணியான மதராசு மாப்பிள்ளை
    அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றனர்..

    இப்போது சென்னை என்றாலே பிடிப்பதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரில் என்ன இருக்கிறது! எல்லாம் மனிதர்கள்தான்.

      நீக்கு
    2. அந்தப் பாடலில் ஜெமினி முறைப்புடனேயே பாடுவார்.

      நீக்கு
  24. நானெல்லாம் பள்ளியிலேயே பத்தாம் வகுப்பிலே தட்டச்சு ஆரம்பிச்சாச்சு. அப்போது +2 வரவில்லை என்பதால் பதினோராம் வகுப்புத் தான் எஸ்.எஸ்.எல்.சி.. பள்ளிப்படிப்பிலேயே டைப்பிங்கில் லோயர் கிரேட் வந்துவிட்டதால் பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் நேரடியாக ஹையர் தான். இஃகி,இஃகி,இஃகி. ஆங்கிலம் ஹையர் தேர்வானதும் தமிழிலும் நேரடியாக ஹையர் தான். ஆனால் அக்கவுன்டன்சி மட்டும் லோயர் முடிச்சுட்டுத் தான் ஹையர் போகலாம்னு வாத்தியார் சொல்லிட்டார். ஆகவே அதிலே லோயர் தான் முதலில் ஒரே அட்டெம்டிலே பாஸ் பண்ணினேன். கூடப்படிச்ச மாமாக்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். இத்தனூண்டு பொண்ணு முதல் தரமே பாஸானு. :))))) அதே போலத் தான் பள்ளியில் படிக்கிறச்சே ஹிந்தியும் ஒரு மொழிப்பாடம். எட்டாவது வரை படிச்சோம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மூன்று மொழிகள். ஒண்ணும் பிரச்னை இருந்ததில்லை. தமிழ்நாட்டிலே எல்லோருமே படிச்சாங்க இப்படித் தான். ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் தான் கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி எதிர்ப்பு அதிகம் ஆகிக் கொண்டே வந்து பத்தாம் வகுப்புப் படிக்கையில் மதுரையில் ஒரே கலவரம். அதெல்லாம் முன்னாடியே சொல்லி இருக்கேன். அப்பா தப்பித்ததே பெரிய விஷயம். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியிலேயே தொழில்முறை அப்பயிற்சியாக தட்டச்சு சொல்லிக் கொடுப்பதென்பது அப்போது எல்லா பள்ளிகளிலும் நடைமுறையில் இல்லை.  நாங்கள் எல்லாம் வெளியே செனேறு தனியாகத்தான் படிக்க வேண்டி இருந்தது.

      நீக்கு
    2. சென்னையில் லேடி சிவசாமி ஐயர் பள்ளியிலோ வேறே எதிலோ இருந்ததாய்ச் சொல்வார்கள். மதுரையில் எங்க ஸ்கூல் அப்புறமாய் நிர்மலாபாய் ஸ்கூல், (சௌராஷ்ட்ரா பள்ளி என்போம்.) ஆண்களுக்கு மதுரை ரயில்வே ஸ்டேஷன் போகும்போது மெயின் ரோடிலேயே இப்போவும் இருக்கும் செயின்ட் மேரீஸ் பாய்ஸ் ஹைஸ்கூலில் மட்டும் இருந்தது.

      நீக்கு
    3. நிர்மலா ஸ்கூல் வேற, சௌராஷ்டிரா ஸ்கூல் வேற...

      நீக்கு
  25. எல்லாத்திலேயும் முதல் வகுப்பு எனச் சொன்னால் என்னோட கடைசி நாத்தனார் மட்டும் இதை எல்லாம் நம்பவே இல்லை. அதெல்லாம் வாங்க முடியாது. நீங்க முதல்லே எஸ்.எஸ்.எல்.சியே 1966 இல் எழுதி இருக்க முடியாது. உங்களுக்கு அப்போப் பதினைந்து வயசு ஆகலை. பொய் சொல்றீங்க என்பார். எங்களுக்கெல்லாம் சிப்புச் சிப்பாய் வரும். ஹிந்தியும் மத்யமாவில் முதல் வகுப்பு, தமிழ்ச் சங்கம் பரிக்ஷையில் முதல் வகுப்புனு அப்போல்லாம் ரொம்பக் கொண்டாட்டமாக இருந்த காலம். :)))) 24 மணி நேரமும் படிப்பையே நினைத்திருந்த ஒரு பொன்னான காலம் அது. இப்போ நினைச்சாலும் மனம் சந்தோஷமாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  26. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அது மறு வாக்கு எண்ணிக்கை இல்லை. ஒருவேளை மறுபடியும் நினைச்சுண்டு கேட்கறாங்களோ என்னமோ? இது ஈவிஎம் சரியில்லை, சரியில்லை, அது பிஜேபிக்கே ஓட்டுக்களைக் கொண்டு செல்கிறதுனு இந்தியா பூராவும் உள்ள எதிர்க்கட்சிகளின் புலம்பலால் இங்கேயும் எதிர்க்கட்சியான முந்தைய ஆளும் கட்சி தேர்தல் கமிஷனை ஈவிஎம் சரியா இருக்கானு பார்க்கச் சொன்னார். பார்த்தாங்க. அதில் ஒண்ணும் பிரச்னை இல்லைனு சொல்லிட்டாங்க. இதிலே சிலர் ஈவிஎம் மிஷினை இப்போதைய மத்திய ஆளும் கட்சி ஒரு அறையில் போட்டுக் கொளுத்திட்டதாகவும் சொல்லிட்டு இருக்காங்க. இத்தனை பெரிய விஷயம் நடந்தப்போ உலக மீடியாக்கள் எல்லாம் என்ன செய்தாங்கனு தெரியலை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒன்றை காரணம் காட்டி மாரு வாக்கு எண்ணிக்கைதான் நடந்ததாக படித்தேன்.

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம், பலரும் முகநூலிலேயே சொல்லி இருந்தாங்க. இது மறு வாக்கு எண்ணிக்கை இல்லை என்பதை. பொதுவாகவே தமிழக மக்கள் முதல்லே யாரு என்ன சொல்றாங்களோ அதை மட்டும் தான் கேட்டுப்பாங்க. பின்னாடி அது தப்பு, இதான் உண்மையா நடந்ததுனு கரடியாக் கத்தினாலும் (கரடி பாஷை புரிஞ்சிருக்காது தான்.) :))))) கேட்டுக்க மாட்டாங்க.

      நீக்கு
  27. ஹூம், தெய்வ மகன் படத்தை 3 தரம் பார்க்க வைச்சுட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

    ஆமாம், ஸ்விக்கி,ஜொமொட்டோ எல்லாம் போயிட்டால் என்ன செய்வாங்க? இங்கேயும் சில ஓட்டல்களில் நாம் நேரடியாகத் தொலைபேசிச் சொன்னால் கொண்டு வந்து தராங்க. விலையில் மாற்றம் இருக்காது. கொண்டு வருபவருக்கு வரும் தூரத்தைப் பொறுத்து சேவைக்கான பணம் கொடுக்கணும்.

    இஸ்ரோ பத்தி இந்தச் செய்தி 3,4 நாட்களாகச் சுத்துதே!

    இந்தப் படம் ஜெமினி, சாவித்திரி பத்தித் தெரியாது. அப்போ மிஸ்ஸியம்மா முதல் படம் இல்லையா> ஙேஏஏஏஏஏஏஏஏஏஏ

    இந்த நேதாஜி ரசிகர் பத்தி எப்போவோ கேள்விப்பட்ட நினைவு. சுவாரசியமான விஷயங்கள்.

    சத்தியமான வார்த்தை உங்க அப்பா சொல்லி இருப்பது போல் எல்லோரும் நடந்துண்டால்? கனவாவது காணலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திடீர்னு ஆனா வழக்கம்போல ஒரு ஒரு  வரில எல்லாத்தையும் தாண்டிகிட்டு வந்துட்டீங்க...  நன்றி.

      நீக்கு
  28. பசிக்குது, மாத்திரை போட்டுக் கொண்டாச்சு. சாப்பிட்டுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  29. ///நாயாய் அலைந்து தேடி
    தாய்மாமன் பிடித்து வந்தார்...///

    அடடா... என்ன ஒரு வாத்சல்யம்!..

    பதிலளிநீக்கு
  30. இந்தச் சின்னச் சின்ன ஆசை படத்துக்கு சன் நெக்ஸ்டில் இருந்து தினம் தினம் கூப்பிட்டாங்க. மெயில் வந்துட்டே இருந்தது. நான் ஏதோ பழைய படம்னு நினைப்பாலும் சன் தொலைக்காட்சிகளையே பார்க்க வேண்டாம்னு இருப்பதாலும் போய்ப் பார்க்கவில்லை. இனிமேலும் சன்னில் மட்டும்னால் பார்க்க யோசனை தான். :)

    நினைச்சேன், கவிதையிலேயே ஏதோ வித்தியாசமா இருக்கேனு. இந்தப் படம் தான் காரணமா. ஹூம், நெல்லை கண்ணன். இவரைப் போல் இன்னும் சிலரையும் வடிகட்டி வைச்சிருக்கேன். அதிலே பிரகாஷ் ராஜும் உண்டு. பிரதமரின் ஆங்கிலப் பேச்சில் இந்திய உச்சரிப்பைக் கேலி செய்தவர்களில் இவரும் ஒருத்தர். :( பாவம் இந்தப் பிரதமர். இவரைப் போல் அவமானப்படுபவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. என்னுடைய ராசியாக இருப்பதாலோனு நினைச்சுப்பேன். :(

    நரசிம்மாவின் இந்தப் பதிவு பார்த்துப் படிச்சுட்டேன்.

    ஓகோ! டங் ட்Vஇஸ்டரா? பார்க்கிறேன்.

    முத்துக்குமார் சொல்லி இருப்பது போல் தான் பலருடைய வாழ்க்கையும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரகாஷ்ராஜ் எனக்கும் அலர்ஜி.  கண்டா போகச்சொல்லுங்க என்று பாடலாம் போல இருக்கும்!  இப்போ சமீபத்துல ரேவதி கூட அந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டாங்க தெரியுமோ...

      நீக்கு
    2. ஒரு காலத்தில் ரேவதி பிடித்த நடிகைகளில் ஒருத்தர். எப்போ சுரேஷ் மேனனை உப்புப் பெறாத காரணத்துக்காகப் பிரிந்தாரோ அப்போவே பிடிக்கவில்லை. :((((( ஆனாலும் மௌனராகத்தில் அவர் நடிப்பு இயல்பாக இருக்கும்.

      நீக்கு
    3. இப்போது நடந்த டெல்லி மாணவர் போராட்டத்தில் மாணவர் பக்கம் நியாயம் இருப்பதாக பேசினார் ரேவதி,

      நீக்கு
  31. Tongue Twister தப்பாய் வந்திருக்கு. திருத்தும் முன்னர் வெளியாகி விட்டது. ஒரே அவசரம். :(

    நா.முத்துக்குமாரின் இந்தத் தூர் வாரல் கவிதையும் கேட்டாச்சு அவர் குரலிலேயே முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி. எங்க வீட்டிலேயும் இப்படித் தான் தூர் வாருவோம். மாமா தான் கிணற்றுக்குள் இறங்குவார். மாமனாரும், நானும் வெளியே இருந்து கொண்டு கயிற்றைப் பிடிச்சுண்டு இருப்போம். நான் கிணற்று வாளியைக் கயிற்றில் கட்டு உள்ளே இறக்குவேன். மாமா கிடைக்கும் ஒவ்வொரு சாமானாய்ப் போடுவார் அதிலே. பின்னர் மேலே இழுத்துக் கொண்டு வந்து வீட்டிற்குள் சேர்ப்போம். பின்னர் வேலை முடிஞ்சதும் அவர் மேலே ஏறி வருவதற்குள்ளாக எனக்கு மூச்சு நின்னு போய்ப் பின்னர் மறுபடி மேலே வரும். இதெல்லாம் 87/88 வரை. பின்னர் நடக்கலை. அதோடு கிணறு அப்போ 35 அடி ஆழம் தான். அதிகம் இல்லை. பின்னர் மேலும் ஆழப்படுத்தினோம்.

    பதிலளிநீக்கு
  32. டங் ட்விஸ்டர் கேட்டாச்சு. நல்லா இருக்கு. மலை வாசல் படிக்கலை. முடிஞ்சப்போத் தேடி எடுத்துப் படிக்கணும். பார்ப்போம். எம்ஜிஆர் மட்டுமில்லை, பாக்யராஜும் இதே பாணியைத் தான் கையாண்டார். தன் மேல் பரிதாபம் வரவழைத்துக் கொண்டு நடித்த நடிகர்களில் முதலாம் இடம் ராஜ் கபூருக்கு. பின்னர் எம்ஜிஆர், பாக்யராஜ்.

    மனம் போல் மாங்கல்யம் கேட்ட நினைப்புத் தான். சின்னப்பெண் இல்லையா நான். ஸ்ரீராம் மாதிரி எல்லாம் வயசாகலையே. படமோ பார்க்க முடியாதுனு சொல்லிட்டீங்க. பாட்டைக் கேட்டு வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சின்னப்பெண் இல்லையா நான். ஸ்ரீராம் மாதிரி எல்லாம் வயசாகலையே. //

      Grrrr....

      நீக்கு
  33. செயலிகளை நம்பி இருக்கும் மக்கள்தான் சிரமப்படுவர்.

    படம் சின்ன சின்ன ஆசை விமர்சனம். நன்று.முடிந்தால் விடுதலையில் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுதலை? விடுமுறையைச் சொல்றீங்களோ?

      நீக்கு
    2. எனக்கும் அப்படிதான் தோன்றியது கீதா அக்கா.. நன்றி மாதேவி.

      நீக்கு
  34. முத்துக்குமாரின் தூர் கவிதையை முன்பே எங்கோ படித்திருக்கிறேன். அல்லது நானே அவரைப்பற்றிய கட்டுரையில் எழுதியிருக்கிறேனா...

    கவிஞர்கள் கண நேரத்தில் கிளம்பிப்போய்விடுகிறார்கள்
    அரசியல்வாதிகள் ஆயுசைத் தாண்டியும் இருப்பார்கள்தான்...

    பதிலளிநீக்கு
  35. ரெமிங்க்டனில் இளம் வயதில் கற்றுக்கொண்டேன். டெல்லி மந்த்ராலயத்தில் என் முதல் ஆபீஸில் நுழைந்தபோது, ஃபாஸிட் (Facit) ’வாப்பா..’ என்றது. சோமாலியாவில் இந்திய தூதரகத்தில் என் அறைக்குள் நுழைந்து கவனித்தேன். ஒரு பழைய ஒலிவெட்டி (Olivetti) டேபிளில் உட்கார்ந்து எனக்காகக் காத்திருந்தது தெரிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு வாய்ப்பது எல்லாமே அப்படிதானே!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!