நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
7.8.26
படபடபடபடபடபடபடபட அது ஒரு டைப்ரைட்டிங் காலம்
டைப்ரைட்டர் :
இந்தப் படத்தை இணையத்தில் பார்த்ததும் கொஞ்ச நேரம் கண்கள் அதிலேயே தங்கின.
இளமைக்காலங்கள்! இது காட்ரெஜ் டைப்ரைட்டர் மாதிரி தெரிகிறது. நாங்கள் படிக்கும் காலத்திலேயே இது கொஞ்சம் ஓல்ட் மாடல். நாங்கள் அடிக்கும்போது அறிமுகமானது Facit. அதில் தட்டச்சவே நாங்கள் விரும்பினோம். அதற்கு அப்புறம் வருகிறேன்.. முதலில் முன்னுரையும் அறிமுகமும்...
இப்போது அலுவலகங்களில் இதன் தேவை இருக்கிறதா அல்லது எல்லாம் கணினி மயமாகி விட்டதா, தெரியவில்லை. கணினியில் தட்டச்சு செய்யவும் இதில் பயிற்சி எடுப்பது அவசியமாக இருந்ததும் ஒரு காலம். ஆனால் இப்போதெல்லாம் ஒரு விரல் புரட்சி போல ஒரு விரல் டைப்பிங் காலம்.
எங்கள் அலுவலகத்திலேயே கணினி அறிமுகபப்டுத்தபப்ட்டபோது நான் முறையான தட்டச்சு செய்வதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஆனால் இரண்டு விரல்களைக் கொண்டே என் வேகத்துக்கு, சமயங்களில் என்னைவிட வேகமாக தட்டச்சு செய்யப் பழகிக் கொண்டார்கள்.
தயாநிதி மாறன் காலத்தில் கணினி விசைப்பலகையிலேயே முறையான தட்டச்சு பயில ஒரு குறுந்தகடு (அட.. தொடர்ந்து தமிழ் வார்த்தைகளாக போட்டுக் கொண்டு வருகிறேனே..) வெளியிட்டார்கள். அதைக் கொண்டு நீங்கள் asdfghg';lkjhj தொடங்கி அடித்துப் பழகலாம். அரசு அலுவலகங்களுக்கு அந்த குறுந்தகடு இலவசமாகக் கொடுத்தார்கள். யாராவது அதனால் பயன் பெற்றார்களா, தெரியாது!
ஆங்கிலத்தை விடுத்து தமிழில் தட்டச்சு செய்யும் நேரம் வந்தபோது கொஞ்சம் தடுமாறினார்கள். முறையான விசைப்பலகை விசைகளில் தட்டச்சுவது கடினமாயிருக்கவே அவர்களுக்கு 'அழகி' உதவிக்கு வந்தாள்! ஆனால் அழகியிடம் பழகவும் ஒரு சிறு வாத்யார் தேவைப்பட்டார். நான் உதவியிருக்கிறேன்.
தட்டச்சுத் தேர்வில் நான் ஆங்கிலமும் தமிழும் உயர்நிலை முதல் வகுப்பு!
அப்போதெல்லாம் பள்ளிப்படிப்பு முடிவுறும் தருவாயில் எல்லோரும் டைப்ரைட்டிங் கற்றுக்கொள்ள வந்து விடுவார்கள். வாழ்வின் ஆதர்சம் அரசு அலுவலகத்தில் ஒரு க்ளெர்க் ஆகிவிடுவது என்கிற ஆசை. அப்போதெல்லாம் எஞ்சினியரிங், மருத்துவ படிப்பெல்லாம் மீது அவ்வளவு ஆர்வம் இல்லை. குறைந்தபட்சம் நான் வாங்கிய மதிப்பெண்களுக்கு அந்த எண்ணமே எனக்கில்லை.
அரசு அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா ஆக இரண்டு வழிகள் க்ரூப் ஃபோர் - இதற்கு SSLC போதும் - க்ரூப் டூ, க்ரூப் 1 எல்லாம் எழுத குறைந்தபட்சம் முறையே இளநிலை பட்டதாரி முதுநிலை பட்டதாரியாயிருக்க வேண்டும். வாங்கி அலுவலர் பரீட்சை எழுதவும் அப்படியே.
எனவே உடனடியான வேலை வாய்ப்புக்கு டைப்ரைட்டிங் தேவை என்ற நிலை இருந்தது. குமாஸ்தா வேலைக்கு கூடுதல் தகுதி. அல்லது தட்டச்சர் வேலைக்குச் செல்லலாம். அங்கிருந்து ஒரு பாரி சாய் எழுதி இளநிலை உதவியாளர், அப்புறம் அடுத்தடுத்த பரீட்சைகள் எழுதி அலுவலகத்தில் கண்காணிப்பாளர், மேலாளர், என்று உயரலாம்.
திட்டம் எல்லாம் சரிதான். எதுவும் நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருந்தது.
அப்பா சொல்லி சேர்ந்தேனா, நண்பர்களை; பார்த்து சேர்ந்தேனா என்று யோசித்தால் அப்பா அப்படிஜி எதுவும் எனக்கு ஐடியா கொடுத்ததில்லை என்று ஞாபகம். எனவே நண்பர்களை பார்த்து நானும் சேர்ந்தேன். சத்யா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யுட் தில் சேர்ந்தேன். நண்பர்கள் சுப்பிரமணி, ராமமூர்த்தி சொன்னபடி இரண்டு A4 சீட் பேப்பர் வாங்கி சுருட்டி சைக்கிளின் ஹேண்டில்பாரில் சொருகிக் கொண்டு ஸ்டைலாக சென்று வாசலில் இறங்கி சைக்கிளை ஸ்டென்ட் போட்டு நிறுத்தி...
'ஷ்... இவ்வளவு விவரணம் தேவையா?' என்றால்.. ஆம்.. அந்த பந்தா எல்லாம்தான் அதில் சேர வைத்தது. சைக்கிள் ஒரு இளமையின் சின்னம். நாங்கள் எல்லாம் சேர்ந்தும் கூட என் நண்பன் ஜெரோம் அதில் சேரவில்லை. வீண் வேலை என்றான். அவன் கொஞ்சம் இன்டலக்சுவல் டைப்.
மூன்று சகோதரர்கள்தான் முதலாளிகள். உள்ளே செல்லும்போது படபடபடபடபடபடபடபட வென ஓசை வந்து கொண்டிருந்தது.
அங்கு உட்கார்ந்திருந்தவர் மூவரில் நடுவர் என்பது எனக்கு அப்போது தெரியாது. ராமமூர்த்தி "ஸார்.. என் பிரெண்டு.. புதுசாக சேர வந்திருக்கிறான்" என்று சொல்லி விட்டு அங்கு காலியாயிருந்த ஒரு டைப்ரைட்டிங் மெஷினில் போய் உட்கார்ந்தான்.
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அருகில் ஒரு இளம்பெண் பாவாடை சட்டையில் அமர்ந்து டபடபடபடபடபவென்று அடித்துக் கொண்டிருந்தாள். அவளை நான் பார்த்திருக்கிறேன்...
OTT யில் பார்த்த படம் : சின்னச்சின்ன ஆசை 2026- தமிழ்/மலையாளம் - சன் நெக்ஸ்ட்
சின்னச்சின்ன ஆசை
தஞ்சாவூரிலிருந்து வாரணாசி வரும் லீலா என்னும் மதுபாலா (இப்போது மதுபாலா அல்ல,மதூ) தன் குழுவினரிடமிருந்து பிரிகிறாள். அவள் கைப்பையையும் மொபைல் போனும் திருட்டு போகின்றன. வெறும் கையுடன் நின்று அழுது கொண்டிருக்கும் அவளை ஒரு டீ மாஸ்டர் (அவருக்கும் ஒரு நெகிழ்வான கதை பின்னால் வருகின்றது) மாதவன் மாஸ்டருக்குக் காட்டுகிறார்.
மாதவன் மாஸ்டர் அதாவது இந்திரன்ஸ் கேரளாவிலிருந்து வந்திருக்கும், அவ்வப்போது அங்கு வந்து செல்லும், ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். அந்த ஆவூரில் எல்லோரும் அவரை அறிவார்கள். அவரும் எல்லோரையும் அறிவார். நலலவர். மனைவியை இழந்தவர்.
அவர் மதுவுக்கு உதவ முற்படுவதும், நம்பியும் நம்பாமலும் மது அவர் உதவியை ஏற்பதும், பின்னால் நிகழும் சில சம்பவங்களும்.... ஒரு FeelGood Movie யாக தர முயற்சித்திருக்கிறார் புதிய இயக்குனர் வர்ஷா வாசுதேவ். முடிவு புதிதாக கதை எழுதும் எழுத்தாளருக்கேயுரியது என்று தோன்றியது. அல்லது சில சம்பிரதாயங்களை மீற முடிவதில்லை! ஒரு சாரார் எதிர்க்கலாம்.
மதுபாலா கார்ட்டூனில் போடப்பட்ட கேரிகேச்சர் போல இருக்கிறார். இந்திரன்ஸை வேறு சில படங்களில் பார்த்திருக்கிறேன். நெல்சன் படங்களில் வரும் ஒரு உயரக்குறைவான இளைஞர் ரசிக்கத்தக்க ஒரு பாத்திரத்தில் வருகிறார். அபர்ணா தந்தை நலம் நாடும் ஒரு நல்ல மகளாக வருகிறார்.
இது நடக்கக்கூடியதா, நடக்குமா, நம்ப முடியவில்லையே போன்ற கேள்விகளை விட்டு விட்டு படத்தை அமைதியாக ரசிக்கலாம்.
கோவிந்த் வசந்தா இசையில் சில ஹரிஹரன் குரல் கஜல்ஸ் போல பாடல்கள் காதில் விழுந்ததாக நினைவு. பாடல்களை பொதுவாக ஓட்டி விட்டு விடுவேன்!!
ஜெயக்குமார் ஸார்.. நேற்றைய என் 'கவிதை'கள் இந்தப் படத்தைப் பார்த்தபோது தோன்றியவை..
சமீபத்தில் முன்னாள் முதல்வர் தான் தோற்ற தொகுதியில் மறுபடியும் வாக்கு எண்ணிக்கைக்கு கோரி, அதுவும் நடந்து, மறுபடியும் அவர் தனது தோல்வியை உறுதி செய்து கொண்டார். தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று நெட்டிசன்கள் எல்லாரும் கருதும் நிலையில் காலச்சக்கரம் நரசிம்மா இது சம்பந்தமாக வெளியிட்டிருந்த ஒரு சுவாரஸ்யமான குறிப்பு.
1) காமராஜரின் தோல்வி அகில இந்திய காங்கிரஸுக்கு பேரிடியாக வந்தது .
காமராஜரிடம் அவர் உதவியாளர் வைரவன் அவரது தோல்வி செய்தியை அறிவித்தார் . அவர் வாடகைக்கு குடியிருந்த திருமலை பிள்ளை சாலை வீட்டில் திரண்ட காங்கிரஸ் தலைவர்கள் , வாக்கு வித்தியாசம் 1,285 என்பதால் , மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விடலாம் என்று சொன்னார்கள் .
அதற்கு காமராஜ் சொன்ன பதில் " ஏன்கிறேன்? காங்கிரஸ் மொத்தம் 51 சீட்டுதான் வாங்கியிருக்கு . 183 தொகுதியில் தோற்று போனோம் . ஸ்ரீபெரும்புத்தூர்ல போட்டியிட்ட முதல்வர் பக்தவத்சலம் கூட தோற்று போயிட்டார் . எல்லா இடங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கை கேட்பீர்களா ! போய் ஜோலிய பாருங்கங்கறேன் !'' -- என்றார் .
2) ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி லோஹியா சீடரான ராஜ் நாராயணனிடம் , 55,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் . அந்த தகவலை இந்திரா காந்தியின் செயலாளர் நிர்மலா தேஷ்பாண்டே தான் நள்ளிரவில் அவரிடம் தெரிவித்தார் . அப்போது இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி பூபுல் ஜெய்கர் அவருக்கு போன் செய்து ஆறுதல் சொன்னார் .
" Pupul ! People have thrown me out ! என்றார் இந்திரா .
"They did not throw you out ! You made them throw you out!'' -- என்றார் புபுல் ஜெய்கர் .
"So be it but they will realise their mistake and put me back in the saddle soon " -- என்று உறுதியுடன் சொன்னார், இந்திரா காந்தி . சொன்னபடி 1980 ல் பதவிக்கு வந்தார்
3) தோல்வியை பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார் . ஜெயலலிதாவுக்காக பிரச்சாரம் செய்த நடிகை மனோரமா , முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் , போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவை சந்தித்தார் .
"இவ்வளவு புத்திசாலியாக இருந்து கொண்டு , உன்னை சுற்றி இருப்பவர்கள் உனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் . அதை கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே !'' -- என்று மனோரமா சொன்னதும் , ஜெயலலிதா முதல் தடவையாக தனது தோல்வியை பற்றி மனோரமாவிடம் கருத்து தெரிவித்தார் .
'போகட்டும் ! ஆட்சியில் இருக்கும் ஜெயலலதாவை விட , எதிர்க்கட்சியில் இருக்கும் ஜெயலலிதா ஆபத்தானவர் என்று எல்லோரும் புரிந்து கொள்ளட்டும் . வரும் 1998 நாடாளுமன்ற தேர்தலில் இந்த தோல்வியை எப்படி ஈடு கட்டுவது என்று எனக்கு தெரியும் . 1989 ல் . போடிநாயக்கனூரில் வெற்றியை சந்தித்தேன் . 1996 ல் பர்கூரில் தோல்வியை சந்தித்தேன் . இனி அரசியல் வெற்றி தோல்வி என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன் . இனிமேல் நான் தோல்வி அடையவே மாட்டேன் . எனக்கு பிரச்சாரம் செய்ததற்கு நன்றி ! '' என்று மனோரமாவிடம் ஜெயலலிதா சொன்னார் .
அதன் பிறகு ஜெயலலிதா எந்த தொகுதியிலும் தோல்வி அடையவில்லை . எந்த தலைவரும் செய்யாத ஒரு ரிக்கார்டை தான் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி , கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்தார் . . இது அவரது மனஉறுதி யை காட்டியது .
தெய்வமகன் சிவாஜி மகனைத்தேடி வரும் காட்சி. பண்டரிபாயின் தவிப்பு சிவாஜிக்கு எதையோ உணர்த்துகிறது. 25 வருஷங்களுக்கு முன்னாலான கதை நினைவுக்கு வருகிறது. விடை தேடி பழைய நண்பனைப் பார்க்க கிளம்புகிறார். குறையுடன் பிறந்த குழந்தையை கொலை செய்யச்சொன்னதால் இனி என்னைப் பார்க்காதே என்று சொல்லி விட்ட நண்பனுடன் உணர்ச்சிகரமான மோதல்.. மகன் பற்றிய கோப கலந்துரையாடல், உணர்ச்சி வெள்ளம்...
"நேதாஜி சுபாஷ் காலமாகி விட்டாரா? இல்லை தலைமறைவாக இருக்கிறாரா?
இந்தக் கேள்வியைக் கோவை மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வாசியைப் பார்த்துக் கேட்டால் "இதே ஊரில் உயிருடன் இருக்கிறார்" பதில் வரும். காரணம்: இந்த ஊரில் டூப்ளிகேட் நேதாஜி ஒருவர் உயிர் வாழ்ந்து வருவதுதான். இவர் பெயர் எஸ். கே அந்தராஜா கவுதாரி. (போஸ் கவுடர் என்றே இவரை அனைவரும் அழைப் பர்.) 'வயது 63. இவ்வூர் காங்கிரஸ் மிட்டித் தலைவராக 35 ஆண்டுக் காலம் பணியாற்றி யிருக்கிறார். கட்சி நலனுக்காக யோசனைகளைக் காந்திஜிஇடம் எடுத்துக் கூற இவர் மூன்று முறை வட நாடு சென்றிருக்கிறார்.
நேதாஜி தலை மறைவாக இருந்த காலத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய இவரை, செகிந்திராபாத்திலிருந்து ஐதராபாத் வரும் வரை கண்காணித்து வந்த ரகசியப் போலீஸ், இவர் ரயிலை விட்டு இறங்கியதும் கைது செய்து இழுத்துச் சென்றது. தாம் சுபாஷ் சந்திர போஸ் அல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கூட 24 மணி நேரம் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தார்.
மற்றொரு சமயம் -
திரிபுரா காங்கிரஸுக்குத் தலைமை தாங்க வந்த நேதாஜிக்குத் திடீரென 104 டிகிரி ஜூரம் வரவே தலைமையுரைக்குப் பிறகு ஆஸ்த்திரிக்குச் சென்றுவிட்டார் அவர். அடுத்த சில நிமிடங்களில் கூட்டத்துள் ஒரு பெரிய சலசலப்பு. "அதோ சுபாஷ் போஸ் நடந்து போகிறார்" என்று கூட்டம் இவரைப் பின் தொடர்ந்தது. அவர்களிடம் "தான் போஸ் போஸ் அல்ல" என்று கூறித் தப்பிப்பதற்குள் போதும் போது மென்றாகி விட்டதாம்.
காந்திஜி அவர்களுடன் அவரது இல்லத்திலேயே தங்கியிருந்திருக்கிறார் இவர். காந்திஜி, நேருஜி, காமராஜ், சி. சுப்பிரமணியம் போன்ற தலைவர்களும் இவரைப் 'போஸ்' என்றே அழைப்பது வழக்கம். இன்று இவருக்கு வரும் கடிதங்கள் இவர் பெயருடன் 'போஸ்' எனக் குறிப்பிட்டே முகவரி எழுதப் பட்டிருக்கின்றன.
நேதாஜியைப் பல முறை இவர் சந்தித்திருக்கிறார். "நீ என் உடன் பிறவாச் சகோதரன்" என்று அடிக்கடி நேதாஜி கூறுவாராம்.
"நேதாஜி இதுவரை உயிருடன் இருந்திருந்தால்?" எனக் கேட்கப் பட்டதற்கு இவர் அளித்த பதில்:
"என்னைப் போலவே தோற்றமளிக் கும் அவர் தற்சமயம் பற்களை இழந்து என்னைப் போலவே பொக்கை வாயு டன் கைத்தடியுடன் காணப்படுவார்.
'டூப்ளிகேட்' போஸிற்கு வாயில் நுழையாத வார்த்தை 'அமெரிக்கா' இதை "அமொரோக்கா" என்றே நீட்டி முழக்கிக் கூறுவார். அமெரிக்கரைப் போலவே பேசி இறுதியில் "அங்கே நான் போகலே..அப்ப... டீன்னு யாரோ சொன்னாங்கோ" என்று சொல்லி, பிறரைச் சிரிக்கவைப்பார். இப்படி இவர் பேசியதைக் கேட்டு என்னெஸ்கே' அவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்!
நான் முக்கியமெனக் கருதும் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பல வருஷங்களுக்கு முன்பிருந்தே பத்திரிகைகளுக்கு எழுதும்போதும், திருமணம் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து அனுப்பும்போதும் என் மனைவி பெயரையும் இணைத்தே எழுதுவது என் வழக்கம். இப்போது அவள் மறைவுக்குப் பின் என் பெயரோடு அவள் பெயரையும் இணைத்தே என் முகவரி அமைத்துக் கொண்டிருக்கிறேன். என் இயல்பான குணத்திற்கு நான் தந்திருக்கிற புதிய அடையாளம் இது. என்னிலிருந்து அவளை பிரிக்க முடியாத ஏற்பாடும் கூட. இது எனக்கு மிகுந்த மன நிறைவு தருகிறது. என் லெட்டர் ஹெட், பெயருக்கான ரப்பர் ஸ்டாம்ப் இவற்றோடு எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் இப்படி இரு பெயரிலேயே பதில் சொல்லியும் வருகிறேன். இது என் இறுதி மூச்சுவரை என்பது உறுதி.
தன் மனைவியை மிகவும் நேசிக்கும், மதிக்கும் ஒவ்வொரு கணவனும் இப்படி தன் பெயரோடு மனைவி பெயரையும் இணைத்து வழக்கத்திற்கு கொண்டு வருவது, பெண்மையை கௌரவப்படுத்துவதும், அதற்கு மரியாதை தருவதுமாகும் என்று கருதுகிறேன். நானறிந்தவரை யாரும் இதைச் செய்வதாகத் தெரியவில்லை. அச்சு மற்றும் எலெக்ட்டானிக் மீடியாக்களில் செல்வாக்குள்ள உங்களை போன்றவர்கள் (என்னையும் மாமாக்களையும் சொல்கிறார்) இக்கருத்தை முன்வைத்து வற்புறுத்துமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஆணாதிக்கம் என்ற அசிங்கமும் இதனால் பெருமளவு மாறும்.
ஆண்-பெண் இருபாலாரிடையேயும் ஆதிக்கப் பிரச்னைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இது யதார்த்தத்தில் இல்லை. ஆழ்மனத் தொடர்பும், அன்பும், பாசமுமான தாம்பத்யத்தில் இது அறவே இல்லை, இருக்கவும் கூடாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தனி நபர்கள் இவ்வாறு இருக்கலாம். அது அவர்களின் மனநோய்.
ஆணாதிக்கம் என்று ஆர்ப்பாட்டக்குரல் எழுப்பிப் பெண்ணியம் பேசும் எல்லோருமே - ராஜம் கிருஷ்ணன், மைதிலி சிவராமன், மஞ்சுளா ரமேஷ், நிர்மலா சுரேஷ், பொன்மணி வைரமுத்து, அனுராதா ரமணன், சீதா ரவி, சுஹாசினி மணிரத்தினம், (பட்டியல் வெகு நீளம்) என்றுதான் அழைக்கப்படுகிறார்களே தவிர, அவர்களது கணவன்மார்கள் இப்படியே தம் மனைவி பெயரை இணைத்துத் தன் அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லையே.. (கிருஷ்ணன் ராஜம், சிவராமன் மைதிலி என்பது போல), ஏன்? இதற்கு பிரபலத்துவம் அவசியம் என்பதும் இல்லையே?
எனக்குத் தெரிந்த, தெரியாத எல்லா கணவன்மார்களுக்கும் இது என் வேண்டுகோள். பெயரிலும் நீங்கள் உங்கள் மனைவியைப் பிரிக்காதீர்கள். அன்புக்கு மட்டுமல்ல, இது உங்கள் பண்புக்கும் கூட! "ஆணுக்கு பெண் கவசம் - அது ஒன்றே சத்தியம் ; ஆணாதிக்க நிஜத்தில் 'ஆமிதுவும் சாத்தியம்!"
சாதாரணமாக சாண்டில்யனின் கதாநாயகர்கள் மாஸ் காட்டுவதிலும் சரி, காதலிப்பதிலும் சரி.. MGR ஐ நினைவு படுத்துபவர்கள். காதலைப் பொறுத்தவரை MGR பாணியிலேயே அல்லது MGR தானே சாண்டில்யன் கதைகள் படித்து அப்படி தன்னை வடிவமைத்துக் கொண்டாரோ.. காதலிகள்தான் நாயகன் மேல் விழுந்து காதலிப்பார்கள். இவர் தன்னை பெரிதாக வெளிப்படுத்த மாட்டார்.
மலைவாசல் கதை ஹூணர்களின் இந்திய படையெடுப்பு, ஆக்ரமிப்பு பற்றியது. அதில் வரும் நாயகன் அஜித் காதலியிடம் வழிவதை பாருங்கள்...
பிறகு சித்ராவையும் ஏற இறங்கப் பார்த்தான். “அந்த மலை அஜித் சந்திரன் அதை ஒரு விநாடி உற்று நோக்கினான். உச்சி இங்கு வராது. ஆனால் மனிதன் முயன்றால் அதை அடையலாமல்லவா?" என்றான்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று சித்ராதேவிக்குத் தெரியவில்லை. சற்று அவள் குழம்பியிருந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள அவளை நெருங்கி, அவள் இரு கைகளையும் அஜித் சந்திரன் பிடித்துக் கொண்டான். "சித்ரா! இதோ பார், என்னை மறுக்காதே. அந்தஸ்தை மறந்துவிடு. அந்தஸ்து உலகத்தில் நிலையற்றது; இன்றிருக்கும் ராஜிய நிலை புரண்டால் நாளை நான் எஜமானனும் உன் தகப்பனார் அடிமையுமாக மாறலாம். நீ முழுக்க முழுக்க ஹூணர் குலத்தவளும் அல்ல. உன் தாயார் கூர்ஜர ஸ்திரீ! இல்லாவிட்டால் ஹிந்துக்களின் முகவெட்டும், இவ்வளவு அழகும் நீண்ட அளகபாரமும் உனக்கு வந்தே இரா. ஆண் பெண் மனம் ஒன்றுபடும் போது உலகச் சூழ்நிலை அர்த்த மற்றது" என்று கெஞ்சி அவளைத் தழுவ முயன்றான்.
"எல்லாவற்றையும் விட உன் பேச்சு அர்த்தமற்றது, விலகி நில், இல்லாவிட்டால் கூச்சலிட்டு மாளிகையிலிருந்து என் தந்தையை உதவிக்கு அழைப்பேன்!” என்று சீறினாள் சித்ரா.
“நீ கூச்சலிட வேண்டிய அவசியமே இல்லை. டேய் அஜித்! நீ என் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கும் படிப்பு இதுதானா?” என்று கர்ஜித்துக்கொண்டே கையில் நீண்ட சாட்டையுடன் பக்கத்திலிருந்த சண்பக மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான் சித்ராவின் தகப்பன் அடிலன்.
இல்லாமலே போய்விட்ட அந்த ஜெமினி-சாவித்ரி முதல் படமான மனம் போல் மாங்கல்யம் படத்திலிருந்து ஒரு பாடல்...It was released on 5 November 1953.No print of the film is known to survive, making it a lost film.
அட்டேபள்ளி ராமராவ் இசையில் கனகா சுரபி எழுதிய பாடல்கள்!
ஜெமினி சாவித்ரி காதலிக்க, அதைக் கெடுத்து சாவித்ரியை தான் திருமணம் செய்ய நினைக்கிறார் சாரங்கபாணி. இன்னொரு ஜெமினி தவறுதலாக மனநலக்காப்பகத்தில் அடைக்கபப்ட்ட அங்கிருக்கும் நர்ஸ் பாலசரஸ்வதியை லவ் செய்கிறார் அந்த இன்னொரு ஜெமினி. எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பதே கதை!
வாங்க நெல்லை.. ஆஸ்பத்திரியிலிருந்து இன்னும் விலகவில்லை. அது வியாழன்! தட்டச்சு கதை சாதாரணம். ஆனால் அதன் நினைவுகள் எல்லோருக்கும் இனிமையாக இருக்கும். பதட்டமில்லாத பரீட்சை.
போலி நேதாஜி அல்ல. அவர் நேதாஜி போல, நேதாஜி சாயலில் இருந்தார். காந்தி, நேரு, ஏன் நேதாஜியையே சந்தித்திருக்கிறார். எம் ஜி ஆர் வேடமணிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ரஜினி போலவே ஒருவரை ரீல்ஸில் அடிக்கடி பார்க்கிறேன். கமலுக்கு 7 டூப்ளிகேட் உண்டு!
ஆஸ்பத்திரியிலிருந்து விலகி நீங்கள் எழுதியுள்ள தட்டச்சுக் கதை ஆரம்பம் என்ன என்னவோ நினைவுகளைக் கொண்டுவந்தது. சுவாரசியம்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. ஆஸ்பத்திரியிலிருந்து இன்னும் விலகவில்லை. அது வியாழன்! தட்டச்சு கதை சாதாரணம். ஆனால் அதன் நினைவுகள் எல்லோருக்கும் இனிமையாக இருக்கும். பதட்டமில்லாத பரீட்சை.
நீக்குஸ்டாலின், பணத்தை வாரியிறைத்து வெற்றி பெற்றால் தமிழர்களுக்குத் தலைக்குனிவு என நினைத்தேன் தேர்தல் முன்பு. வாக்காளர்கள் நல்ல முடிவை எடுத்திருக்கின்றனர்.
பதிலளிநீக்குபதவி இல்லாத்தால் பையனை எதிர்கட்சித் தலைவராக ஆக்கும் நிர்பந்தம்.
சரி... வெள்ளிக்கிழமை பாடலாக ஏன் "ஆடிய ஆட்டமென்ன" பாடல் நினைவுக்கு வரவில்லை?
பையனுக்கோ 'இவன் முதல்வராயிட்டானே' என்கிற ஆத்திரம் இன்றைய முதல்வர் மீது... ஆடிய ஆட்டமென்ன பாடலைப் போட்டால் செல்வாண்ணா கோச்சுப்பார்!
நீக்குபோலி நேதாஜி போல, உள்ளாட்சித் தேர்தலின்போது திருப்புல்லாணியில் பார்த்த டூப்ளிகேட் எம்ஜிஆர் நினைவுக்கு வருகிறார். புதன் பகுதியில் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குபோலி நேதாஜி அல்ல. அவர் நேதாஜி போல, நேதாஜி சாயலில் இருந்தார். காந்தி, நேரு, ஏன் நேதாஜியையே சந்தித்திருக்கிறார். எம் ஜி ஆர் வேடமணிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ரஜினி போலவே ஒருவரை ரீல்ஸில் அடிக்கடி பார்க்கிறேன். கமலுக்கு 7 டூப்ளிகேட் உண்டு!
நீக்கு