12.10.26

"திங்க"க்கிழமை  :  நீங்க நல்லாச் சாப்பிட ஒரு குறிப்பு - கீதா சாமபசிவம் 

  

நீங்க நல்லாச் சாப்பிட ஒரு குறிப்பு

கீதா சாம்பசிவம்

புது வருஷத்துக்கு ஒரு புது டெசர்ட் பார்ப்போம்,  டெசர்ட்னதுமே அது பழங்களால் ஆனதுனு தெரிஞ்சிருக்குமே. முதல்லே இதுக்குத் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

கேக் சாப்பிடறவங்க கடையில் விற்கும் ப்ளம் கேக் வாங்கிக்குங்க.  பெரிசா இருக்கட்டும். கடையிலே கேக் சாப்பிடமாட்டேனு சொல்றவங்க வீட்டிலேயே மில்க் மெயிடினால் செய்யப்பட்ட கேக்கை வாங்கிக்கலாம். இல்லைனா ஹாட்சன் மஹாதேவன் கடையிலே எக்லெஸ் கேக் கிடைக்கும் அதை வாங்கிக்குங்க.  இது முக்கியமா வேணும் சரியா?

அடுத்து ஜெல்லி க்ரிஸ்டல் பவுடர் வாங்கி அதிலே சொல்லி இருக்கும் முறையில் ஜெல்லியைத் தயார் செய்து, ஒரு பவுலில் ஊற்றி, அதிலே பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் பருப்புகளைக் கலந்துக் குளிர வைக்கவும்.  ஜெல்லி கெட்டியாக ஆனதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

இப்போது பழங்கள் எல்லாவகையும் வகைக்கு

ஆப்பிள் நடுத்தரம் ஒன்று, ஒரு மாதுளை, ஆரஞ்சு இரண்டு, கொய்யாப் பழம் நடுத்தரம் ஒன்று,  வாழைப்பழம் கனிந்ததாக பெரிதாக இருந்தால் ஆறு, இல்லை எனில் பத்து, பேரிச்சம்பழம் கொட்டை நீக்கியது 50 கிராம், பச்சை திராக்ஷை 50 கிராம், பன்னீர் திராக்ஷை 50 கிராம், முந்திரிப்பருப்பும் கிஸ்மிஸும் தேவை எனில் சேர்க்கலாம்.  சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை.

பால் சுண்டக் காய்ச்சியது அரை லிட்டர், கஸ்டர்ட் பவுடர் வெனிலா வாசனையில் இரண்டு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன்.

வெனிலா ஐஸ் க்ரீம்  குடும்ப பாக்கிங்கில் உள்ளது. (தேவையானால்)

பழங்களை நன்கு கழுவி நறுக்கி ஒன்றாகக் கலந்து ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வைக்கவும்.

சுண்டக்காய்ச்சிய பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து கொண்டு அடுப்பில் வைத்துக் கிளறவும் கெட்டிப்படும்போது வெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கி ஆற வைக்கவும்.  மிக்சியில் போட்டு அடித்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது கலக்கும் முறை

முதலில் ஒரு பெரிய பவுலில் கேக்கை வைக்கவும்,  அதன் மேல் ஜெல்லியைப் பரவலாகக் கொட்டவும்,  பின்னர் அதன் மேல் பழங்களைப் போடவும்.  அதன் பின்னர் அதன் மேல் அடித்து வைத்த கஸ்டர்டைச் சேர்க்கவும்.  

விருப்பமுள்ளவர்கள் இதை அப்படியே ஃபோர்க்கால் எடுத்துத் தட்டில் எல்லாவற்றோடு சேர்த்துப் போட்டுக்கொண்டு வெனிலா ஐஸ்க்ரீமோடு சேர்த்துச் சாப்பிடலாம்.  சேமியா பாயசம் இருந்தாலும் அதோடு சாப்பிடலாம். ரொம்பவே ரிச்சானது!

நாங்க ராஜஸ்தான், குஜராத்திலே இருந்தப்போ இது அடிக்கடி பண்ணுவேன். எல்லாப் பழங்களும் இல்லாட்டியும் இருக்கிற பழங்களை வைத்துச் செய்வோம்.  கேக் நான் வீட்டிலேயே செய்துடுவேன்.  அதனால் அதிகம் செலவாகாது. மேலும் அங்கே பழங்கள் எல்லாவிதமானவையும் கிடைக்கும் என்பதோடு சுவை, ருசி, விலை எல்லாமும் ஏற்கும்படியாக இருக்கும்.

=====================================================================================

மனசாட்சியம் -12
KGY Raman

" எண்ணம் என்பது முற்றும் அற்ற நிலையில் உங்கள் மனம் இருப்பதை அனுபவித்திருக்கிறீர்களா ? " என்பது ஆன்மீக சாதனையாளர்களுக்கு எதிர்ப்படும் ஒரு கேள்வி. மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள் ? மனம் சும்மா இருப்பதை அறியாத ஒன்று. ஆசை, பயம், சந்தேகம், ஆர்வம், சினம், சந்தோஷம், (அ)திருப்தி, கடந்த காலம்,  இப்படியாக ஏதோ ஒரு விஷயத்தை யோசித்துக் கொண்டிருப்பது தான் மனித மனங்களின் இயல்பு. 

என்ன காரணம் என்று தெரியாமல் ஏதோ ஒரு சினிமா பாடலின் வரியை மனதுக்குள் அசை போடுவது எனக்கு அவ்வப்போது நிகழும் ஒரு விஷயம். மிகப் பெரும்பாலும் மிகப் பழைய பாடல்களில் என்னைக் கவர்ந்த வரிகளாக அது இருக்கும். அவற்றில் சிலவற்றை உங்களுக்கு சொல்வதில் எனக்கு ஒரு திருப்தி. 

கொத்தமங்கலம் சுப்பு என்பவர் ஜெமினி வாசன் அவர்களிடம் நீண்ட நாள் வேலை பார்த்தவர். தில்லானா மோகனாம்பாள் கதையை விகடனில் தொடர்கதையாக எழுதியவர் என்று சொன்னால் உங்களுக்கு உடனே விளங்கும். விகடன் ஆசிரியர் குழுவிலும் அவர் இருந்திருக்கிறார் என்று நினைவு.

" வள்ளியின் செல்வன் "  என்ற படத்தில் 
பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராக ஓடிய வண்ணம் ரயில் விளையாட்டு விளையாடுகிறார்கள். இந்த காலப் பிள்ளைகளுக்கு இந்த ரயில் விளையாட்டு பற்றிய புரிதல் இருக்குமா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

கூ கூ என்று கூவியவாறு இஞ்சின் பையன் ஓடுகிறான். தொடர்ந்து ரயில் பெட்டி பையன்களும் பெண்களும் அதே வேகத்தில் ஓடி ரயிலை செலுத்துகிறார்கள். 

இந்த வட்டத்துக்கு வெளியே கையில் ஒரு கொடி வைத்தவாறு நிற்கும் சிறுவன் ரயில் அருகில் வரும் போது 

" பசுபதி கோயில் " என்று ஸ்டேஷன் பெயரை உரக்கச் சொல்கிறான்.‌. இது காட்சி.

ஊதும் ஓடும் ரயில் 

அதன் நீளம் ஒண்ணரை மயில் (மைல்)

" பசுபதி கோயில் " 

உங்க ஊரில் நிற்காது மெயில் ..

அந்தக் காலத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டு  தனுஷ்கோடி தாண்டி இலங்கை தலைமன்னார் வரை செல்லும் ரயில் ஒன்று இருந்தது. இண்டோ சிலோன் எக்ஸ்பிரஸ் என்றும் bபோட் மெயில் என்றும் அதற்குப் பெயர். எனவே அந்த  " உங்க ஊரில் நிற்காது மெயில் "  என்பதை முழுதுமாக ரசிக்க இந்தப் புரிதல் நமக்குத் தேவை. 

இஞ்சின் இஞ்சின் இஞ்சின் !! பெருமூச்சு ஏன் விடறே "

" எத்தனை பாரம் நான் சுமக்கிறேன் தெரியுமா 

ஆனைக் குட்டி ரெண்டு 
அல்சேஷன் பன்னண்டு

பாசஞ்சர் தொண்ணூறு

பாசுக்காரன் முன்னூறு " 

(அந்த நாட்களில் ரயில்வே பாஸ் வைத்திருப்பவர்கள் கூட்டம் மிகப்பெரியதாக இருந்தது. அதைப் பயன்படுத்திப் பலரும் ரயில்களில் இலவசமாகப் பயணித்துக் கொண்டிருந்தனர். 90 பேர் காசு கொடுத்து வரும் போது 300 பேர் பாஸ் பிரயாணம் செய்கிறார்கள் என்பது எவ்வளவு ஆழமான கற்பனை ? )

கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்கள் கொண்டாடப்பட்ட அளவுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் கொண்டாடப்படத்தக்கவர். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எனக்குத் தோன்றும். இது ஜெமினி போன்ற பெரிய நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது. 

அடுத்து என்னைக் கவர்ந்த பாடல் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 

" வேப்பெண்ணெயப் பூசிக்கிட்டு, வெறும் கையாலே நீவி விட்டு, வேடு கட்டும் கூந்தலிலே - செங்கமலம், காக்கா கூடு கட்டப் பாக்குதடி ருக்குமணி " 

" பொறுமை இழந்திடலாமோ 
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ " 

" தாலாட்டுப் பாடி,  இவ தாயாகி மகனுக்குப் பாலூட்ட நெருங்குது நாளு - அவன்

காலாட்டி கையாட்டி ஆடுவதைப் பாத்துவிட்டா கீழே விடமாட்டாரு ஆளு "

சந்தமும், எளிமையும், பொருளும் மிக்க இது போன்ற வரிகள் மனதில் திரும்பத் திரும்பச் சுழன்று வருவதில் என்ன வியப்பு ? 

ஹலோ மை டியர் ராமி

எங்க அம்மா உனக்கு மாமி 

டிலே பண்ணாதே சாமி 

இங்கு டேஞ்சர் ஒண்ணுமில்ல சாமி

போன்ற போக்கிரி வரிகளும் கவரத்தான் செய்கின்றன ! லோகோ bபின்ன ருசி !

18 கருத்துகள்:

  1. இன்றைய டெசர்ட் செய்முறை அருமை. சாப்பிடும் வயது இருக்கணும். அப்போல்லாம் எப்படிச் சாப்பிட்டேன் என நினைத்துக்கொள்கிறேன். நான் ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்க்ரீம் சாப்பிடுவேன் இல்லைனா ஃபலூடா மிக விரும்பிச் சாப்பிடுவேன்.

    நேற்று அமுல் கசாட்டா சாப்பிட்டேன். உங்கள் குறிப்பின் மிக எளிய வடிவம் அதுன்னு தோணுது

    பதிலளிநீக்கு
  2. மனசாட்சியத்தில், பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ வரிகளைத் தவிர வேறு பாடல்கள் எனக்குத் தெரியவில்லை. அதனால் பகுதி அந்நியமாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமை இழப்பது வந்த அதே படத்தில் இருந்து இன்னொரு பாடலையும் போட்டு இருக்கிறேன் அது உங்கள் கவனத்திற்கு வரவில்லை. நமக்குத் தெரிந்த விஷயம் தான் இருக்க வேண்டும் என்று என்ன இருக்கிறது ? சொல்லழகு & பொருத்தம் - அதை ரசிக்கலாம் இல்லையா ?

      நீக்கு
    2. மற்றவை தெரியாத விஷயங்கள் என்பதற்காக்க் குறிப்பிட்டேன். என் அம்மா, ஐயா சாமீ ஆரோக்ய சாமீ நரிக் கொம்பிருக்கு வாங்கலையோ போன்ற சில பாடல்களை முணுமுணுத்ததால் அவை மனதில் பதிந்திருக்குன்றன. இந்தப் பாடல்களை முணுமுணுத்துக் கேட்டதில்லை.

      நீக்கு
  3. கீசா மேடம்... நீங்க இப்படி வித விதமாகச் செய்திருக்கிறீர்கள் என்பதே ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. அநியாயமா இல்லையோ? என்னைப் பார்த்து இப்படிக் கேட்பது?  நான் சமைக்க ஆரம்பிச்ச பதின்மூன்று வயதிலிருந்து சமையலில் பரிட்சை செய்து பார்த்து வருகிறேன். என் மாமாக்கள் அனைவருமே இந்த விஷயத்தில் எனக்கு அதிக ஊக்கம் கொடுத்திருக்காங்க. அதிலும் இரண்டாவது மாமா மதுரையில் இருந்து சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் வேலையில் சேர்ந்தப்போ அம்பத்தூரில் எங்களுடனேயே பேயிங் கெஸ்டாகத் தங்கி இருந்தார். அப்போ எங்களுக்குக் கல்யாணம் ஆகி நாலைந்து மாதங்கள் தான். அப்போ ஆப்பீச்செல்லாம் வேறே போனேனா தினம் தினம் எங்களுக்கு மத்தியானம் சாப்பிட விதம் விதமானப் பிசைந்த சாதங்கள் பண்ணுவேன். அதை மாமாவுக்கும் கொடுப்பேன். மாமா ஆச்சரியப்படுவார், பரவாயில்லைம்மா, நாகம் உன்னை நல்லா ட்ரெயினிங் பண்ணி இருக்கா என்பார். என் தாத்தா வீட்டிலேயும் அம்மாதான் நல்லாச் சமைப்பார் அவங்க ஐந்து அக்கா தங்கைகளில் அம்மா தான் விதம் விதமாகச் சமைப்பார்.

    பதிலளிநீக்கு
  6. பொதுவாக மதுரைப்பக்கங்களிலேயே பெண்களைச் சின்ன வயசில் இருந்தே சமையலில் ட்ரெயினிங் பண்ணிடுவாங்க. அநேகமாகத் தென் மாவட்டங்களிலேயே இப்படித் தான் என நினைக்கிறேன். ஆனால் சிலர் பெண்களை சுத்துக்காரியம்னு சொல்லுவாங்க, வீடு பெருக்கித் துடைப்பது, பாத்திரம் அலம்புவது, துணி உலர்த்துவது போன்றவற்றை மட்டுமே செய்யச் சொல்லுவாங்க. சமையலில் ஈடுபடுத்த மாட்டாங்க. அவ தான் இவ்வளவு காரியம் செய்யறாளே, சமையல் தானா வந்துடும். கல்யாணம் ஆனதும் எல்லாம் நிமிஷம் பண்ணிடுவா என்பார்கள். மாமா வீட்டில் எங்களை எலலாம் அம்மாவின் அம்மா எல்லா வேலைகளிலும் நல்லாப் பழக்கினாங்க. நாங்க 3 பேத்திகள் ஒரே வயசில். சித்தி ஒருத்தி எங்களை விட நாலு வயசு பெரியவள். எல்லோரையுமே நெட்டி வாங்குவாங்க. யாரும் தலையிட்டுக் குத்தம் சொன்னதில்லை. ஏன் இப்படி என் பெண்ணைப் படுத்தறேன்னு கேட்டதில்லை. அதான் முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களை (ஆண்களையும்) வீட்டு வேலைகளில் பழக்கப்படுத்துவது நல்லது.

      நீக்கு
  7. சொந்த வியாக்கியானம் எழுத ஆரம்பிச்சாப் பெரிசாப் போறது. பதிவைப் படிச்சுட்டு வரேன். இன்னிக்குக் கொஞ்சம் அதிகப்படி வேலை இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. சுவையான கேக் கஸ்டட் ப்ரூட்ஸ் செய்முறை நன்று.

    இன்றைய மனசாட்சி பாடல்கள் அருமையாக இருக்கிறது எமக்கு புதியன.. பழைய காலமும் பாடல்களும் விளையாட்டும் மகிழ்ச்சியான தருணங்கள்..

    பதிலளிநீக்கு
  9. மன சாட்சியம் பகுதியின் செய்திகள். இனிமை. கல்யாணப்பரிசு பாடல்கள், பதிபக்தி படப் பாடல்கள் இப்படி பல உயிர் பொருந்திய கவிதைகளைச் சொன்ன பட்டுக்கோட்டையார் நிறைய ஆயுசுடன் இல்லாதது வருத்தம்.

    பதிலளிநீக்கு
  10. கீதாமா வின் கேக் சூப்பர். க்க்கை சாப்பிடுவதை விட்டு விட்டதால் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  11. கண்ணதாசன் , வாலி மட்டுமல்லாது, அந்தக்காலத்தின் உன்னதத் திரை இசைக் கவிஞர்கள் சிலரையும் அடிக்கடி நினைவில் கொள்ளவேண்டும்.

    மருதகாசி: வாராய்..நீ.. வாராய், மாசிலா உண்மைக் காதலே.., காவியமா..நெஞ்சின் ஓவியமா.., அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, வசந்தமுல்லைப் போலே வந்து.., உலவும் தென்றல் காற்றினிலே.., ஆடாத மனமும் உண்டோ.., தை பொறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்.., நீலவண்ணக் கண்ணா..வாடா..

    கு.மா.பாலசுப்ரமணியம்: அமுதைப் பொழியும் நிலவே.., கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே.., சித்திரம் பேசுதடி..., எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுவதும் ஏனோ..., நெஞ்சினிலே நினைவு முகம்.., இன்பம் பொங்கும் வெண்ணிலா.., மாசிலா நிலவே நம் காதலை..

    இப்படியெல்லாம் என்றும் நெஞ்சைத் தாலாட்டும் வரிகளை இயற்றி அருளிய புண்ணியவான்கள். உண்மையில், தமிழர்களாகிய நாம் பெரும்பாக்யம் செய்தவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வனக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. டெசர்ட் செய்முறை அருமை. படங்கள் கவருகிறது.

    பதிலளிநீக்கு
  14. மனசாட்சியில் பகிர்ந்த பாடல்களில் பசுபதி கோயில் ரயில் பாட்டு மட்டும் கேட்டது இல்லை, மற்ற பாடல்கள் கேட்டு இருக்கிறேன். பழைய பாடல்கள் பிடிக்கும் தொலைக்காட்சியில் பழைய பாடல்கள் நிகழ்ச்சியை விரும்பி கேட்பேன். கடைசி பாடல் சந்திர பாபு என்று நினைக்கிறேன்.
    இந்த பாடல்கள் கிடைத்தால் ஸ்ரீராம் பகிரலாம்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!