19.10.26

சமைக்க நினைத்தால் சமைக்கலாம்... வெரைட்டியா இல்லை கையினில்?

 "இன்னிக்கி என்ன சமைக்கறது?"

 இந்தக் கேள்வி வீட்டில் அடிக்கடி கேட்கிறேன்.  அதாவது கேள்வி நான்  கேட்கவில்லை.  கேள்வி கேட்கப் படுவதைகேட்கிறேன்!  கேட்பது பாஸ்.  என்னவோ அவருக்கு அதில் ஒரு சலிப்பு வந்து விட்டது போல..  இங்கு  மட்டுமா கேட்கிறேன்?  எல்லார் வீட்டிலும் இந்தக் கேள்வி வரும் என்றுதான் நினைக்கிறேன்!  சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வயதில் ஒரே மாதிரி வேலையை தினசரி ஒரே மாதிரி செய்வோருக்கு ஏற்படும் சலிப்பு.  என்னால் புரிந்து கொள்ள முடிந்தது..  அவ்வப்போது கைகொடுக்க ஆரம்பித்தேன்.

என் அம்மாவுக்கும் இதே பிரச்னை இருந்தது.  

கொஞ்சம் வித்தியாசமாக.  

சமைப்பது எது வேண்டுமானாலும் சமைத்து விடுவார்.  சாயங்காலம் டிஃபன்.  அதுதான் அவர் பிரச்னை.  அப்போதைய கதாநாயகன் என் அப்பா. அப்படீன்னா இப்போதைய கதாநாயகன் நீயான்னு கேட்கப்படாது.  நான் சொல்ல மாட்டேன்.

என்ன சமைப்பது என்று யாரிடமும் யோசனை கேட்கக் கூடாது என்பது முதல் பாடம்!  ஆளுக்கு ஒன்று சொல்வார்கள்.  எது செய்தாலும் ஒருவர் குறையோடு இருப்பார்.  எல்லோருக்கும் எல்லாமும் பிடித்து விடுகிறதா என்ன!  அம்மா சமைத்ததை நாங்கள் கேள்வி கேட்காமல் சாப்பிட்டது போல என் மகன்கள் இல்லை.

மேலும், என்ன சமையல் என்று சொல்லி விட்டு செய்தால் சாப்பிடும் நேரம் தட்டில் என்ன விழப்போகிறது என்கிற ஒரு சின்ன சஸ்பென்ஸ் மிஸ் ஆகி விடும்.  அந்த சஸ்பென்ஸ் பிடித்தது, பிடிக்காதது பேதத்தை உடைத்து விடும்!

நிறைய டிஃபன்கள் அப்பாவுக்குப் பிடிக்காது.  ஆனால் அவரே " திரும்பித் திரும்பி இதையேவா?"  என்றும் கேட்பார்!  வெந்தய தோசை அவரின் ஃபேவரைட்.  எனக்கு கொழுக்கட்டை மாதிரி அவருக்கு வெந்தய தோசை.  அவரின் வெந்தய தோசை ஆசையை நிறைவேற்றிய பாஸால் என் கொழுக்கட்டை ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.  இந்த வருட என் பிறந்த நாளின்போது சஸ்பென்சாக செய்கிறேன் என்று மாலை கொஞ்சம் கொழுக்கட்டை செய்தார்.  மாவுக்குள் இருந்த பூரணத்தை தேட நான் கணேஷ் வசந்த்தைத் தேடினேன்.

சில சமயங்களில் சில காய்கறிகள் சமைக்கப்படாமலேயே தூக்கி எறியப்படும் அவலங்களும் நடக்கும்.  அப்புறம் நான் முறையை வகுத்துக் கொடுத்தேன்.  வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளுக்கேற்ப ஒவ்வொரு நாளும் இதுதான் என்று டேபிள் மாதிரி போட்டேன்.  

நானே நிர்வகித்தேன், நறுக்கிக் கொடுத்தேன்.  சமயங்களில் நானே செய்தும் விடுவேன்.

மனதில் ஒரு ஐடியா உருவாக கீழ்க்கண்ட லிஸ்ட் உதவலாம்.

திங்கள் - வெந்தயக்குழம்பு, உருளை அல்லது சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  ;  

செவ்வாய்க்கிழமை :  மோர்க்குழம்பு, பச்சைக்காய் கறி   :  

புதன்கிழமை  :  தேங்காய் அல்லது பருப்புத் துவையல், பூசணி அல்லது சௌ சௌ கூட்டு  :  

வியாழக்கிழமை :  தக்காளி, வெங்காய வதக்கல் (சாதம் கலந்து கொள்ளலாம்), வடகம்        

வெள்ளிக்கிழமை  :  பொரிச்ச குழம்பு  , கறி 

சனிக்கிழமை  :  ரெடிமேட் சாதம்   

ஞாயிற்றுக்கிழமை  :  வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு கறி

இது ஒரு டென்டேட்டிவ் லிஸ்ட்தான்.   மாறுதல்கள் நம் மனதைப் பொறுத்தது.  மயங்கி நிற்கும் மனதை எழுப்பி விட உதவும்.

பருப்புத் துவையல் செய்யும் நாட்களில் என் அம்மா ஓமம் போட்டு வெந்தயக்குழம்பு செய்வார் என்று ஞாபகம்.

கைவசம் உள்ள காய்கறிகளை பொறுத்து இதை உபயோகித்துக் கொள்ளலாம்.  நடுவில் சுண்ட / மிதுக்க வத்தல், மணத்தக்காளி வத்தல் என்று வத்தக்குழம்பும் செய்யலாம்.  நாங்கள் அப்பள வெந்தயக்குழம்பும் செய்வோம்.

நடுவில் ஒருநாள் மிளகு சீரகப்பொடி சாதம் சாப்பிடலாம்.  மணத்தக்காளி, வேப்பம்பூ வறுத்து சூடான சாதத்தில் நெய்விட்டு கலந்து சாப்பிடலாம்.  

ஒருநாள் சமையலே இல்லாமல் வெறும் தயிர் சாதம் மட்டும் செய்து சாப்பிடலாம்.  சமைக்க நினைத்தால் சமைக்கலாம் வெரைட்டியா இல்லை கையினில்?

டிஃபன் வகைகளுக்கும் அப்படிதான்.  என்ன செய்வது என்ன செய்வது என்று குழம்பும் சமயம் மனதில் சில ஐட்டங்கள் நினைவுக்கே வராது.  எனவே ஒரு லிஸ்ட் போட்டேன்.  அதை Shuffle செய்தேன்.


1) இட்லி சாம்பார், சட்னி  2) புளி அவல்  3). தோசை, சட்னி, மி.பொ

4). பொங்கல், கொத்ஸு  5). ஜவ்வரிசி மோர்க்கூழ்  6). குறுணை உப்புமா

7)  சப்பாத்தி, தால்  8). கோதுமை ரவா உப்புமா   9)  பணியாரம் - தித்திப்பு

10).அரிசி மாவு உப்புமா  11) அடை  12) தேங்காய் சேவை  13). ஊத்தப்பம்

14). பூரி  15.  ரவா உப்புமா   16.  எலுமிச்சை சேவை  17.  சப்பாத்தி குருமா 

18. புளிசேவை   19.  பணியாரம் -  காரம் 20) அவல் தேங்காய் சர்க்கரை  

21) மோர் அவல்  22) அரிசி மாவு மோர்க்கூழ் - புளிப்பு மோர் போட்டும் 

செய்யலாம், புளியைக் கரைத்தும் செய்யலாம்.23) கோதுமை தோசை 

24)  ரவாமைதா தோசை   25) உப்புமா கொழுக்கட்டை  26) புளிப்பொங்கல் 

என்ன லாபம் என்றால் நினைவுக்கு சட்டென்று வராத டிஃபன் வகையறாக்கள் இதைப் பார்த்ததும் மனதில் அலார்ம் அடித்து, எதற்கான மூலப்பொருட்கள் வீட்டில் இருக்கிறதையோ அதைச் செய்யலாம்.

==============================================

மனசாட்சியம் 18
KGY Raman


நம்பகமான ஒருவர் "நன்றாக இருக்கிறது " என்று சொன்னதால் ஒரு தொ.கா தொடர் ஒன்று பார்க்க ஆரம்பித்தேன்.  நன்றாகப் போகிறதே என்று ஆச்சரியப்பட்டேன். 

விரைவிலேயே அதில் நம்ப இயலாத , விரும்பத்தகாத காட்சிகள் வந்தன. கொஞ்சம் செயற்கையான சூழல், அசட்டுத்தனம்.. அதையெல்லாம் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அவற்றில் என்னை மிகவும் வெறுப்பேற்றிய காட்சி:

ஒரு சிறு வெற்றிக் கொண்டாட்டம். ஆணும் பெண்ணுமாக பத்து பதினைந்து பேர் சுமார் இருபது லிட்டர் விஸ்கி பீர் குடித்து டான்ஸ் ஆடுகிறார்கள்.

ஏன் - ஆண்கள் மட்டுமே குடிக்கலாம் , பெண்கள் குடிக்கக் கூடாது என்று சட்டமா என்று கேட்பவர்களும் இருப்பார்கள். சட்டம் கொடுக்கிற சம உரிமையை இப்படித்தான் நிலை நாட்ட வேண்டுமா என்பதுதான் என் நெருடல்.

அத்துமீறுகிறவர்கள் தப்பு செய்பவர்கள் என்று பார்த்தால் பெண்கள் அதில் மிகச் சிறிய மைனாரிட்டியாக தான் இருப்பார்கள் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. அது மட்டுமல்ல வீட்டிலே ஒவ்வொருவரும் ஒரு வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்வது என்பது பெரும்பாலும் பெண்கள் கையிலே இருக்கிறது. வீட்ல மிஸஸ்ஸுக்கு பிடிக்காது என்று சொல்லி குடி, சூதாட்டம், வீண் விரயம் இவற்றைத் தவிர்த்த பல பேரை நான் அறிவேன். 

சும்மா சமூக வலைதளங்களில் மட்டும் பெண்ணின் பெருமையை பேசுவது மட்டும் இல்லை நமது சமுதாயத்தில் வீட்டிலும் வெளியிலும் கூட பெண்களின் செல்வாக்கு இருந்து வந்திருக்கிறது. இப்போது ஆண்களோடு சரிசமம் என்று சொல்லிக் கொண்டு பெண்கள் இருந்தால் புகை பிடிப்பதும், மது குடிப்பதுமாக இருந்தால் அது நம் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய தீங்கு என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நிலவரம் எப்படி இருக்கும்போது ஒரு தொலைக்காட்சி தொடரில் இளம்பெண்கள் ஆர்ப்பாட்டமாக மது அருந்துவதை காட்டுவது எவ்வளவு விரும்பத்தகாதது என்பதை ஏன் இந்த தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்வதில்லை ? அதே சீரியலில் புகையிலை பயன்படுத்துதல் பற்றி வந்த எச்சரிக்கைச் செய்தியை பார்த்தேன். ஆனால் " மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என்ற பிரசித்தமான வாசகம் காணப்படவில்லை.  அது வேண்டாம் என்று சட்டத்தை மாற்றி அமைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

இளம் வயதில் நான் மிகப்பெரிய பெர்ரி மேஸன் ஆர்வ வாசகர்.  கிட்டத்தட்ட மாதம் ஒரு முறை ஒரு புது பெர்ரி மேஸன் நாவல் விற்பனைக்கு வரும். கூனூரில் ப்ரிம்ரோஸ் என்ற பெயரில் ஒரு லண்டன் மாடல் கடை இருந்தது. (இப்போதும் இருக்கும் என நம்புகிறேன்). அந்தக் கடை உரிமையாளர் திரு ராமசுவாமி என்கிற இளைஞர். பெர்ரி மேஸன் நாவல் புதிதாக வந்தவுடனே எனக்கு ஒரு பிரதி எடுத்து வைத்து விடுவார். ஒன்றிரண்டு பழைய தலைப்புகளை கூட எனக்குக் கொடுத்து " இதை வாங்கிப் படித்துப் பாருங்கள் . மிகவும் நன்றாக இருக்கிறது "  என்று சொல்வார்.  ஒவ்வொரு நாவலிலும் ஒரு சின்ன சுவாரஸ்யமான சட்டச் சிடுக்கு ஒன்று இருக்கும்.  அதைப் பெர்ரி மேஸன் எப்படித் தந்திரமாகக் கையாளுகிறார் என்பது பெரிய சுவாரசியம்.  

இந்த தொலைக்காட்சி தொடரிலும் அது போன்ற சுவாரசியங்கள் கணிசமாக வைப்பதற்கு சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.‌ ஆரம்பத்தில் இதுவும் அப்படி இருக்கக்கூடும் என்கிற ஒரு நம்பிக்கை ஏற்பட்டதும் உண்மை.  ...

என்றாலும் கூட இந்தத் தொடரைப் பார்த்துதான் ஆக வேண்டும். எப்படி முடிகிறது என்று தெரியாமல் தூக்கம் வராது என்பது மனித இயல்பு.  நன்றாகப் போகலாம் என்கிற சிறு நம்பிக்கையும் கூட இருக்கிறது.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ....

103 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். .

    அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். அனைவருக்கும் முப்பெரும் தேவிகள் தங்கள் நல்லாசிகளை தந்து அனைவரையும் ஆயுள் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமெனவும் அன்னையை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.  சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவு அருமை தினமும் என்னென்ன சமைக்கலாம் என்பதை பட்டியலிட்டு விட்டீர்கள். வர வர தினமும் இந்த மாதிரி அயிட்டங்களை சமைப்பதை விட சாப்பிடுவதே போர்தான் அடிக்கிறது. ஆனால், சாப்பிடலாமலும் இருக்க இயலவில்லை. ஔவையார் முதுமொழிபடி ஒரு பொழுதை தவிர்க்கலாம் இரண்டாவது பொழுதுக்கு வயிறு கட்டளை இடுகிறது.

    டிபன் வகையறாக்களை அருமையாக தொகுத்ததற்கு மிக்க நன்றி. இன்று என்ன சமையல் என்பதை இரவு நினைத்தபடி படுத்தேன். (இரவிலும் நினைக்கக்கூடாது. ஒவ்வொரு நாளின் விடியலும் நம் கையில் இல்லை." நாளையதை இப்போது பேசக் கூடாது வீட்டு கதவருகில் நாராயணர் புன்னகைத்து கொண்டே" நாம் சொல்வதை கேட்டபடி இருப்பார்" என எங்கள் அடிக்கடி பாட்டி சொல்வார்கள். (அப்போதெல்லாம் நான் சிறுவயதில் தூக்கம் கலைந்த சில இரவுகளில்ல் கதவை பார்த்தபடி இருப்பேன்:)) ) .இறைவன் தரிசனத்தைக் காணத்தான்.

    இன்று உண்மையிலேயே வேலை அதிகம். பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  எதைச் சாப்பிடவும் தோன்றாமல் ஒரு மந்த நிலைதான் வயிற்றில் நிலவுகிறது!

      சில வீடுகளில் இன்றும் கதவருகில் மட்டுமல்ல அவர்கள் அருகிலும் நாராயணன் இருப்பார்.  ஏனென்றால் அந்தக் குடும்பத்தலைவரின் பெயர் அதுதான்!

      நீக்கு
  3. தட்டச்சு செய்யும் போது அவசரத்தில். (எங்கள் பாட்டி அடிக்கடி என்பதாக வந்திருக்க வேண்டும். ) வார்த்தைகள் இடம் பெயர்ந்து விட்டது. திருத்தி வாசிக்கவும்.நன்றி

    பதிலளிநீக்கு
  4. இன்றைக்கு இன்டெரெஸ்டிங் டாப்பிக்.

    மனசாட்சியம் பாதி வரை படித்துவிட்டேன். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  இரண்டில் எதை இன்டரஸ்டிங் என்று சொல்கிறீர்கள்!!

      நீக்கு
    2. பிறகு நீங்கள் வருவதை எதிர் நோக்கி இருந்தேன். ஏமாற்றி விட்டீர்களே !

      நீக்கு
    3. பிறகு வருவதை எதிர்பார்த்து ....

      நீக்கு
  5. நேற்று எனக்கு உண்மையாவே வீட்டில் கோபம். காரணம் நான் ஆறு மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை. காலைச் சாப்பாடு சாப்பிடும்போது மணி பனிரண்டரை. மாலை சிறு நடை முடித்துவிட்டு வரும்போது பூரிக்கு தயார் செய்துகொண்டிருந்தாள். மணி ஏழு. எட்டு மணிக்கு பூரி, மசால் என அடுக்கியிருந்தது. மாலையில் ஆப்பிள் சாப்பிட்டதோடு சரி.

    இப்படித்தான் தினமும் ஆகிவிடுகிறது, அனேகமா. அதனால் மாலை, தோசை, தயிர் என ஆகிவிட்டது.
    ஆறு மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை என்பதே எனக்கு பிரச்சனையாகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய சாப்பிடும் நேரம் எட்டரை, ஒன்று, ஏழு!  காலை அரைமணி தாமதம் ஆகும்.  மதியம் சரியாக இருக்கும்.  இரவு அரைமணி முதல் ஓர் மணி நேரம் வரை தாமதமாகும்!

      நீக்கு
    2. பாவம் பா. நெல்லை. எங்க பெரியவன் இப்போ பழங்களோடு ஒரு நாளை முடித்துக் கொள்கிறான். அவன் மனைவிக்குச் சென்னையில் பாதி நேரம் கழிந்து விடுகிறது. மருமகளின் பெற்றோர் மிக வயதானவர்கள்.

      நீக்கு
    3. எதெதற்கெல்லாம் பழக வேண்டி இருக்கிறது?  காலச்சூழல்.

      நீக்கு
    4. உண்மை. மௌனமாக இருப்பதுதான் தாயாரின் நிலைமை.

      நீக்கு
    5. தாயார் என்றில்லை. மூத்த தலைமுறைக்கே..

      நீக்கு
    6. //அவன் மனைவிக்குச் சென்னையில் பாதி நேரம் கழிந்து விடுகிறது. மருமகளின் பெற்றோர் மிக வயதானவர்கள்.// உங்க சம்பந்திகள் இருவரும் இன்னமும் அம்பத்தூர் தானா?

      நீக்கு
    7. @நெல்லை, உங்க சாப்பாடு முறையே சுத்தமாகச் சரியில்லை என்பது என்னோட உறுதியான கருத்து. உடல் இளைக்கணும், அதனால் டயட்னு சொல்லிக் கொண்டு நீங்க எதையுமே ஆர்வத்தோடும், விருப்பத்துடனும் சாப்பிடுவதில்லை. அதனால் உங்க மனைவிக்கும் தனக்கு மட்டும் தனியாக எதுவும் பண்ணிக்க மனசு வராது. என்னிக்கானும் அபூர்வமாப் பண்ணினால் கூட நீங்க இப்படிக் கோபித்தால் அவங்களும் தான் என்ன செய்ய முடியும்? முதலில் உணவு முறையை மாத்துங்க. காய்கள் நிறையவும், சாதமோ, சப்பாத்தியோ கொஞ்சமாகவும் சாப்பிடலாம். காலை உணவில் சாலட் அல்லது பழ சாலட், கஞ்சி வகைகள்னு வைச்சுண்டு மதிய உணவில் சாதாரணமா வீட்டில் பண்ணுகிறாப்போல் கறி, கூட்டுப் பண்ணிட்டு அதையும் பச்சடி வகைகளையும் அதிகம் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சமாக ஒரு சின்னக் கிண்ணம் சாதம் சாப்பிட்டுக்கலாம். சாம்பாருடன் அல்லது ஏதேனும் குழம்புடன். ரசம், மோரெல்லாம் குடிச்சுடுங்க. மாலை நேரம் நட்ஸ், சுண்டல் போன்றவை சாப்பிட்டுவிட்டு இரவில் ஒரிரு சப்பாத்தி, நிறையக் காய்கள் போட்ட கூட்டு அல்லது கறி. இரவில் சாலட் ஜீரணம் ஆகாது. புளி கூடக் கோடம் புளி பயன்படுத்துங்கள். இது என்னோட ஒரு பைசா.

      நீக்கு
  6. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வலையுலக நட்புகள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும்.

    சமையலுக்கான மெனு ஐடியாக்கள் நன்று. டிஃபனுக்கான பட்டியலும் நன்று. எங்கள் வீட்டில் இப்படியெல்லாம் பட்டியல் ஒன்றுமில்லை. எதையேனும் மாற்றி மாற்றி செய்துவிடுவது வழக்கம். காலை நேரம் சமையலுக்கு என்ன காய்கறி என்று இல்லத்தரசி சொல்வதை சுத்தம் செய்து, நறுக்கித் தருவது, தேங்காய் துருவித் தருவது போன்ற வேலைகள் மட்டுமே என்னுடையது. மெனு என்ன, என்ன சமைக்க வேண்டும் என்று நான் சொல்வதில்லை! அவர் முடிவுக்கு விட்டுவிட்டேன். சொல்லும் காய்கறியை நறுக்கித் தருவது மட்டுமே என் வேலை! :) இது எனக்கும் சுலபமாக இருக்கிறது! பல வீடுகளில் என்ன சமைப்பது என்ற கேள்வி தான் பிரதானமாக இருக்கின்றது!

    தொலைக்காட்சித் தொடர்கள் - நான் பார்ப்பதே இல்லை! முன்னரே சொல்லி இருந்தது போல எங்கள் வீட்டில் TV இல்லை! கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக நான் TV பார்ப்பதில்லை. தில்லியில் இருந்த TV எங்கள் பகுதி வாட்ச்மேனுக்கு கொடுத்து விட்டேன். இங்கே திருச்சியில் இருந்தது ரிப்பேர் ஆனபிறகு அதையும் கொடுத்து விட்டோம் - ஐந்து வருடங்களுக்கு முன்னர்! எப்போதாவது சில வீடுகளுக்குப் போகும்போது அங்கே சீரியல் பார்க்க நேரிடும்போது மனது பதறுகிறது - எந்த சீரியல் எடுத்தாலும் Scheming, அடுத்தவர் குடும்பத்தினை எப்படிக் கெடுக்கலாம், தகாத உறவுகள், குடி, போதை சமாச்சாரங்கள் என எல்லாமே இருக்கிறது - இது தான் நிறைய பேரால் பார்க்கப்படுகிறது என்பதும் வேதனையான உண்மை - எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை வராமல் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...   நீங்கள் ஒரு அன்பான தந்தை, பொறுப்பான அமைதியான கணவர்.  எங்களுக்கு தெரியும் அது!  எனவே நீங்கள் எதையும் டிமாண்ட் செய்ய மாட்டீர்கள் என்பதும் தெரியும்!
      இங்கு மாமா சொல்லி இருக்கும் நம்பகமான நபர் நான்தான்!  அது The Court சீரிஸ்.  இந்த தந்தோர் பற்றி மஹாதேவன் கூட முகநூலில் கழுவி ஊற்றி இருந்தார்.  கேஸ் அடுத்த வாய்தா தேதி சொல்லும்போது கோர்ட் இஸ் அட்ஜர்ன்ட் என்கிறார்கள்.  தி கேஸ் ஐஸ் அட்ஜர்ன்ட் என்றுதான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

      நீக்கு
    2. "கோர்ட்" என்று ஒரு தெலுங்கு/கன்னடம் படம் கூட வந்திருக்குனு நினைக்கிறேன். ஸ்ரீராம் சொன்ன கோர்ட் தொடரைப் பார்க்கலாமா வேண்டாமானு சீட்டுக்குலுக்கிப் போட்டுட்டு இருக்கையில் முகநூலில் ஜேரகு கிட்டேவே போகாதீங்கனு மறைமுகமாகச் சொன்னார். அதனால் போகவே இல்லை. பொதுவாக நான் இந்த அமேசான் ப்ரைமில் தொடர்கள், நெஃபிளிக்ஸில் தொடர்கள்னு பார்ப்பதில்லை. அவ்வப்போது கொஞ்சம் மனசு மந்தமாக இருந்தால் ஏதேனும் திரைப்படம் நடிக, நடிகையர் யார்னு பார்த்துட்டுப் பார்ப்பேன். அப்படித் தான் முந்தாநாள் அஜய் தேவகன், மாதவன், ஜோதிகா நடிச்ச "ஷைத்தான்" பார்த்தேன். ஆரம்பத்தில் நன்றாகவே இருந்தாலும் பின்னால் போகப் போகப் பெரிய அளவுக் கதம்பத்தைக் காதில் சுற்றி விட்டார்கள்.

      நீக்கு
    3. எனக்கு இந்தத் தொந்தரவுகள் இல்லை. இங்கே பார்க்க முடிவதில்லை. விருப்பமும் இல்லை. எனக்குப் பிடித்த பழைய படங்கள், பாட்டுகள்
      எல்லாம் கத்தி கபடா இல்லாத கதைகள்.:)))

      நீக்கு
    4. அன்பின் வெங்கட் நலமாக இருங்கள். மீண்டும் எழுத வாருங்கள். குடும்பத்துக்கு என் வாழ்த்துகள்.

      நீக்கு
    5. அன்பின் வல்லிம்மா, தங்களது அன்பிற்கு நன்றி. விரைவில் எழுதுவேன் மா...

      நீக்கு
    6. கீதா அக்கா..  ஷைத்தான் நான் பார்த்து பல மாதங்களாகின்றன!  மாதவன்தான் வில்லன்.

      நீக்கு
    7. ஒவ்வொருவருக்கும் விருப்பங்கள் மாறுபடுகிட்னரான வல்லிம்மா.  எனக்கு கோர்ட்டில் குறுக்கு விசாரணை பிடிக்கும்.  ஆனால் இந்த கோர்ட்டில் வேறு மாதிரி கதை போகிறது.  பணத்திமிர் கொண்ட மமதை அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கத்துடிக்கும் பேச்சுக்குறைபாடுள்ள பெண்...  நடுவில் காமாசோமாவென்று சில காட்சிகள் வருகிட்னரானதான்.  அதையும் மீறி நான் ரசிக்கிறேன்!

      நீக்கு
    8. தொ கா தோ நானும் பாராமுகமாகத்தான் இருந்தேன். சிபாரிசு வந்தப் புறம் .... ?!?

      நீக்கு
  8. சித்தி சீரியல்தான் நான் முதன் முதலில் பார்க்க ஆரம்பித்த சீரியல். ஒரு சில எபிசோடுகளிலேயே மனைவி என்னிடம் தொலைக்காட்சியில் சீரியல் பார்க்கக்கூடாது என வேண்டுகோள் வைத்தாள். இன்றுவரை எந்தத் தொடரையும் நான் பார்ப்பதில்லை.

    நண்பன் ஆபீஸ் விட்டு வந்ததும் தொடர்ந்து அவங்க மனைவியோட நாலு சீரியல் பார்ப்பான். பலரும் சீரியலைப் பார்க்கத் துடிப்பது எனக்குத் தெரியும். எங்களுக்கு அந்தப் பைத்தியம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைக்காட்சி சேனல்களில்  வரும் சீரியல்களுக்கும் இவற்றுக்கும் நிறையவே வித்யாசம் உண்டு.  இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது!  சித்தி பெரியப்பா என்று எந்த சீரியலும் நான் பார்ப்பதில்லை.  வீட்டிலுள்ளோரையும் பார்க்க விட்டதில்லை.

      நீக்கு
    2. தமிழ் தொடர்களைத்தான், அதிலும் பையன் சித்தியைத் திருமணம், பெண்கள் எப்போதும் அடுத்தவர்களைக் கெடுக்கவே யோசிக்கும் தொடர்கள், குடும்ப உறவுகளைச் சிதைக்கும் நோக்கில் எடுக்கும் வில்லிகளின் தொடர்கள்.... இவையெல்லாம் தமிழுக்கே சொந்தம்.

      நீக்கு
    3. நாங்க ராஜ் தொலைக்காட்சி யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் நன்றாக நடக்கும்போது அதில் தான் ஒரு சில பாலசந்தர் தொடர்கள், செய்தி, திரைப்படங்கள்னு பார்த்தோம். பாலசந்தரின் ஊஞ்சல் தொடர் வந்தப்போத் தான் ராஜ் தொலைக்காட்சிக்குப் பிரச்னை வந்து மூடினாங்க. பாம்பே சாணக்கியாவின் விஸ்வரூபம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயம் அது. நல்ல கதை அமைப்பு, இயக்கம். பின்னர் அதை அவர் தனியாக வெளியிட்டு அதன் சுட்டியையும் பகிர்ந்திருந்தார். அப்போப் பார்த்திருக்கேன் எல்லாவற்றையும் மொத்தமாக. அதே போல் அவருடைய இரண்டாம் சாணக்கியனும் பார்த்தேன். அந்த மாதிரித் தொடர்களே இப்போது வருவதில்லை. நம்மவர் சன் தொலைக்காட்சியில் ஒரு சில சீரியல்கள் மாமியாருக்காகப் போடுவோம். அப்போ அவரும் உட்கார்ந்து பார்க்க ஆரம்பிச்சு, மெட்டி ஒலி, நாதஸ்வரம் எலலாம் பார்த்திருக்கார். நான் சாயங்காலம் ஆறுமணிக்கு இரவு உணவுத் தயாரிப்பில் இருக்கையில் அவ்வப்போது வந்து உட்கார்ந்து மேலோட்டமாகப் பார்த்திருக்கேன். ஆனால் எட்டு மணிக்கெல்லாம் போய்ப்படுத்துடுவேன். அவர் ராத்திரி பத்தரை மணிக்கு அர்னாபுக்கும் ராஜ்தீப் சர் தேசாய்க்கும் குட் நைட் சொல்லிட்டுத் தான் படுப்பார். மாமா ஆஸ்பத்திரியில் படுத்ததும் சில நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டியையே கொடுத்தாச்சு. தானமாகத் தான். விலை எலலாம் இல்லை.

      நீக்கு
    4. மாமா அவர்களின் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. மிக நல்ல மனிதர்களைக் கடவுள் அழைத்துக் கொள்கிறார்.

      நீக்கு
    5. ஆரம்ப கால தொலைக்காட்சியில் சில குவிஸ் உள்ளிட்ட தொடர்கள் பார்த்ததுண்டு.  சன், ராஜ், விஜய் என்று எதிலும் எந்த சீரியலும் பார்க்க மாட்டேன், பார்க்க மாட்டேன், பார்க்க மாட்டேன்!!

      நீக்கு
    6. ஒட்டிக் கொண்டால் வெட்டுவது கடினம் வகைதான் தொடர்கள்.

      நீக்கு
    7. @ஸ்ரீராம், பாம்பே சாணக்கியாவின் தொடர்கள் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்கும்/ கடைசியாக மஹாபெரியவர் பத்தின சீரியல் எடுத்துட்டு இருந்தார். ஆரம்பத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் லிங்க் சரியாக் கிடைக்கலை. அநேகமாக முடிஞ்சிருக்கும். சந்தவசந்தம் குழுமத்தில் பகிர்ந்துப்பாங்க. இப்போல்லாம் அங்கேயும் வருவதில்லை. :( ஒருவேளை சங்கரா டிவியில் வரலாம்.

      நீக்கு
    8. //அதிலும் பையன் சித்தியைத் திருமணம்,//நாங்க முதல்முறை நசிராபாத் சென்றிருந்தபோது அங்கே ஒரு காப்டன் நீலகண்டையா என்னும் தெலுங்குக் காரரின் முதல் மனைவியின் மகன் இப்படித் தான் சொந்தச் சித்தியையே விடாப்பிடியாகக் கல்யாணம் செய்து கொண்டு கூட்டி வந்தான். மிகவும் ஆசாரமான பிராமணர் அவர். அவர் முதல் மனைவியின் ஸ்ராத்தம் போதும், அப்பா, அம்மா ஸ்ராத்தம் போதும் எங்களை அழைத்து மரியாதை செய்து கால் அலம்பிச் சாப்பாடெல்லாம் போடுவார்கள். நெற்றியில் எப்போதும் விபூதி, குங்குமம். அந்த இரண்டாம் மனைவி பார்க்க எம்.எஸ்.அம்மா மாதிரி இருந்ததோடு அல்லாமல் பாடுவதும் அப்படித் தான்.

      நீக்கு
  9. என் அப்பாவின் பழக்கத்தை நானும் வைத்துக்கொண்டிருக்கிறேன். அன்றைய சமையல் மெனு சொல்வது. இதனால் நான் பெற்ற தீமை, எனக்குப் பிடிக்காத்து அல்லது என் அம்மா செய்து தராத்து எதையும் நான் எனக்கு மனைவியைப் பண்ணச் சொல்லாத்து, அவளுக்கு பல சாப்பிட முடியாமல் போனது, ஒரே காம்பினேஷனால் போரடிப்பது.

    பசங்க வளர்ந்தபின் நான் மாறலை, ஆனால் அவள் அதிகப்படியாக வெரைட்டி செய்வதைப் பற்றிநான் கவலை கொள்வதில்லை, சுவைப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைக் கேட்கும்போது நான் சொல்கிறேன்.  என்றாலும், நான் சொன்னது நடப்பது என்பது மிகவும் /ரேர்.  இந்த லிஸ்ட் மூலமும், டேபிள் மூலமும் அவர்களுக்கு ஒரு சிறு உதவி செய்ய முடியுமா என்று பார்த்தேன்.

      நீக்கு
    2. நம்ம வீட்டில் முன்னெல்லாம் கடைசி நாத்தனார் சொல்லுவது தான் தினசரி மெனு. அவ கல்யாணம் ஆகிப் போயிருந்தாலும் அங்கே காலம்பர அவங்க கணவரை ஷிஃப்டுக்கு அனுப்பும்போது அந்த வண்டியிலேயே அவங்களும் இங்கே வந்துடுவாங்க. நாங்க ஏதானும் சமைக்கத் திட்டம் போட்டிருந்தாலும் அதைச் செய்ய முடியாது. அவங்க சொல்றது தான். அதுக்காகவே நான் குழந்தைகளுக்கு ஏழு மணிக்குள்ளாக எது வேணுமோ அதைப் பண்ணிக் கொடுத்துடுவேன். அவங்களுக்குப் பாகற்காயெல்லாம் பிடிக்காது. சேனைக்கிழங்கும் பிடிக்காது. நாம் வாங்கி வைச்சிருந்தால் நாம் கொஞ்சம் அசந்திருக்கிறச்சே வேலைக்காரியிடம் தூக்கிக் கொடுத்துடுவார். அதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அவங்க என்னிக்கு வரலையோ அன்னிக்கு மாமாவுடைய விருப்ப உணவுனு வைச்சிருப்பேன்.

      நீக்கு
    3. நானும் இந்த வாழ்க்கையை 1989 வரை வாழ்ந்தேன். அதுவும் என் குழந்தைகளைக் கடிந்து கொண்டே இருப்பது மனதை வறுத்தும். இTஎ போல அவர்களுக்குத் தேவையானதைச் செய்து பால்கனியில் வைத்துக் கொடுத்து விடுவேன். தன் சகோதரனின் குழந்தைகள் தானே என்று நினைத்ததில்லை. அப்படியிருந்தும், பெரியவன் வேலைக்குச் சேர்ந்ததும் அத்தைக்குப் புது டிவி வாங்கிக் கொடுத்தான்.

      நீக்கு
    4. ​கீதா அக்கா சொல்லி இருக்கும் விவரங்கள் வியப்பானவை. உறவுகள் ரொம்ப விசித்திரமானவை. அவற்றைக் கையாள்வது கம்பி மேல் நடப்பது போல!

      நீக்கு
    5. நல்ல வேளை... பசங்களுக்கு இதுதான் என்று நான் ஒரு பொழுதும் தலையிட்டதில்லை. இப்போதும் அப்படித்தான். வெளியிலிருந்து ஆர்டர் செய்யும் உணவு என்றால் அவங்களுக்குத் தெரியும்..இஷ்டப்படி வாங்க முடியாது என்று

      நீக்கு
    6. ஸ்ரீராமுக்கு இதெல்லாம் புதுசா இருக்குப் போல. அவங்க எப்போவுமே இப்படித் தான். எங்க வீட்டுக்கு வரும்போதெல்லாம் சமையலில், மாமா சாப்பிடுவதில் தலையிடுவாங்க. அவங்க சொல்வதைத் தான் சமைக்கணும். மாமாவுக்குப் பிடிக்காதுனு சொன்னால் உடனே உங்களுக்கு என்ன ரொம்பத் தெரியுமா என்பார்கள்.

      நீக்கு
    7. அவரையே விட்டு சொல்லக் சொல்லி இருக்க வேண்டும்.  எங்கள் வீட்டிலும் இந்த நிலை இருந்ததுண்டு.  அதனாலேயே என் அப்பா வீட்டாருடன் எங்களுக்கு அதிக தொடர்பில்லாமல் போனது!!  அப்பாவாவது பேசலாம்.  அவரும் சும்மா இருப்பார்.

      நீக்கு
    8. மாமா ஏன் தலையிடவில்லை என்பது ஒரு பெரிய கதை. பொதுவெளியில் அதெல்லாம் வேண்டாம். ஆனால் நான் அவருடைய இயலாமைக்குக் காரணம் புரிந்து கொண்டதால் எனக்கும் மாமாவுக்கும் பிரச்னையே வந்ததில்லை. அது போதுமே குடும்ப வாழ்க்கையில் அதானே முக்கியம். நீங்க ஹேமாவின் கணவர் சஷ்டி அப்தபூர்த்திக்கு வந்தப்போ சுஜாவோட வீட்டுக்கு வந்தீங்களே, அப்போக் கூட அவங்க அங்கே தான் எங்களுடன் வந்து தங்கி இருந்தார்.

      நீக்கு
  10. வெங்கட் சொல்வதுபோல் காய் கட் பண்ணுவது பிடிக்கும், காரணம் பொதுவாகவே நான் வேலை செய்ய ஆரம்பித்தால் ரொம்ப சுறுசுறுப்பு. ஆனால் காலையில் எனக்கு ஒரு சில்ல நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் பனிரண்டு மணி வரைபிசி.

    மனைவி, முந்தைய நாள் காய் கட் பண்ணுதை ஒத்துக்கொள்ள மாட்டாள். இப்படிப் போகிறது இங்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடிக்குமோ பிடிக்காதோ காய் கட் பண்ணும் வேலை தலையில் விழுந்து விடுகிறது.  முன்னர் வேகமாக செய்து கொண்டிருந்தேன்.  இப்போதெல்லாம் நிறுத்தி நிதானமாகத்தான்...

      நீக்கு
    2. வேலையைச் சீக்கிரம் முடித்துவிட்டால் ஏதேனும் புதிய வேலை வந்துவிடும் என்பதாலா? ஹா ஹா ஹா

      நீக்கு
    3. நான் வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை முதல் நாளே நறுக்கிப்பேன். நிதானமாக ஆய்ந்து கள்ளன் எடுத்துட்டு நறுக்கணும் இல்லையா? காலம்பர உட்கார்ந்தால் நாழி ஆயிடும். முன்னெல்லாம் குழந்தைகள், நம்ம ரங்க்ஸ், மைத்துனர்கள்னு எல்லோருக்குமே காலையில் அவசரம் என்பதால் பீன்ஸ், கொத்தவரை, அவரை போன்றவை கூட முதல் நாளே நறுக்கி வைச்சுடுவேன். மாமியாருக்கும் முதல் நாள் நறுக்கினால் பிடிக்காது. ஆனாலும் நம்ம அவசரத்துக்கு அதான் சரியா இருக்கும்.

      நீக்கு
    4. முதல்நாளே நறுக்கி வைக்கும் முறைக்கு நான்  எதிரி. ஆனாலும் சில சமயம் அப்படியும் செய்திருக்கிறேன்.  அதைவிட ஒருமுறை காய்கறி வாங்கி வந்ததும் ஒரு வாரத்துக்கான காய்கறிகள் மொத்தத்தையும் நறுக்கி டப்பர்வேரில் போட்டு வைத்து விட்டேன்.  

      கீரை நறுக்குவதில் முருங்கைக்கீரை சள்ளை.  பேப்பரில் வை பிரிஜ்ஜில் வை என்பார்கள்.  சள்ளை சள்ளைதான்.  அடுத்தது பூண்டு உரிப்பது.  எளிதான முறைகள் இருக்கிறது என்று அவர்கள் சொல்லும் எந்த முறையும் எனக்கு கைவந்ததில்லை.  பசலைக்கீரை, மணத்தக்காளி கீரை எல்லாம் இலைகளை மட்டும் எடுத்து நறுக்க வேண்டும்.  பொறுமை..  பொறுமை ஸ்ரீ....

      நீக்கு
    5. முருங்கைக்கீரையை வாங்கி வந்ததும் அப்படியே தினசரி பேப்பரில் சுத்திக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு மறுநாள் எடுத்தால் எல்லாமும் பேப்பருக்குள் உதிர்ந்திருக்கும். பெரிய குச்சிகளை சுலபமாக எடுத்துட்டு மற்றதையும் உலுக்கினால் எல்லாம் வந்து விடும். முருங்கைக்கீரைப் பருப்பு உசிலிக்கும், அடைக்கும் தான் எங்க வீட்டில் ஓட்டு. அம்பத்தூர் வீட்டில் இருந்த முருங்கை மரத்தின் இலைகள் தெருவாசிகள் அனைவரும் மிகவும் ஆசையுடன் பறித்துச் செல்வார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். காயும் நல்ல செழிப்பாக இருந்தது.

      நீக்கு
    6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  11. ஶ்ரீராம் லிஸ்ட் ஓகே. ஜவ்வரிசி கூழ்.... இதெல்லாம் என் லிஸ்ட்லயே வராது. ரவா இட்லி, அடை, கோதுமை தோசை, பன்சி ரவை உப்புமா, தோசை, சப்பாத்தி போன்றவையே வரும். டிபன் என்பது மாலை என்பதால் பொங்கல் போன்றவை வராது. அரிசி உப்புமா, பருப்பு பிடி கொழுக்கட்டை, பேல்பூரி போன்றவை வரும். சில நாட்களில் வெறும் உருளை வெங்காய கறி மாத்திரம் சாப்பிடுவேன். இப்போ, ஓட்ஸ் சப்ஜா ஆப்பிள் நட்ஸ் பால் கலவை சேர்ந்திருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விருப்பத்துக்கும் என் விருப்பத்துக்கும் மாறுபாடு இருக்கிறது.  எனக்கு ஜவ்வரிசி மோர்க்களி மிக மிகப் பிடிக்கும்.   சில சமயங்களில் ஒரே மாதிரி டிபனை தினசரி சாப்பிட்டு வருவது வெறுத்து அலுத்து விடுகிறது.

      நீக்கு
    2. //ஓட்ஸ் சப்ஜா ஆப்பிள் நட்ஸ் பால் கலவை சேர்ந்திருக்கு. //ஓட்ஸ் மட்டுமில்லை, கார்ன்ஃப்ளவரிலும் இப்படிச் செய்யலாம். அதுக்காகவே பையர் விதம் விதமாக நட்ஸ் வாங்கி வைச்சிருக்கார். முதல்லே சில நாட்கள் சாப்பிட்டேன். பின்னர் நட்ஸைக் கடிப்பதில் சிரமமாக இருக்கவே நிறுத்திட்டேன். ப்ரெட், வெண்ணை எடுத்துப்பேன். அல்லது ப்ரெட், சீஸ் வைத்து சான்ட்விச் பண்ணிப்பேன். இப்போல்லாம் காலை எதுவுமே சாப்பிடாமல் ப்ரொடின் ஹார்லிக்ஸ் குடிச்சுட்டுப் பதினோரு மணிக்குள் ரசம், சாதம், ஒரு கறி அல்லது கூட்டு, மோர் சாதம்(நெல்லை சொன்னப்புறமா லெபான் மோர்)ஊறுகாய்னு சாப்பிடறேன். மத்தியானம் பிஸ்கட்கள், அரைக் கப் காஃபி. இரவு உணவு ஆறரையிலிருந்து ஏழுக்குள். இரண்டு சப்பாத்தி, அல்லது இரண்டு தோசை, அல்லது இரண்டு அடைதோசை, அல்லது ஏதேனும் உப்புமா ஒரு சின்னக் கிண்ணம். அதோடு 250 மில்லிலிட்டர் புதினா மோர். பல வருஷங்களாக மாலை உணவை ஏழு மணிக்குள்ளாக முடிச்சுட்டு இருக்கோம். இப்போவும் அப்படியே. எப்போவானும் அரை மணி தாமதம் ஆகும்.

      நீக்கு
    3. ப்ரெடடை ஒரு ரெகுலர் உணவாக என்னால் நினைக்க முடியவில்லை.  அது சும்மா வாய்க்கொழுப்புக்கு ஸ்நாக்ஸ் மாதிரி என்றுதான் தோன்றும்! 

      நீக்கு
    4. சில சமயங்களில் மாலை வேளைக்கு ப்ரெட் பகோடா, ப்ரெட் உப்புமா எனப் பண்ணுவது உண்டு. பெரும்பாலும் சான்ட்விச் தான். உ.கி. மட்டுமோ, அல்லது பட்டாணியோ, மிக்சட் வெஜிடபுளோ போட்டோ அல்லது சட்னி ஏதேனும் இருந்தால் அது மட்டுமோ வைச்சு சான்ட்விச் பண்ணிடுவேன்.

      நீக்கு
  12. https://sivamgss.blogspot.com/2022/06/blog-post_26.html
    https://sivamgss.blogspot.com/2021/01/blog-post_30.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இரு சுட்டிகளையும் பார்த்தீங்களா இல்லையானு தெரியலை. முன்னர் ஒரு தரம் ஸ்ரீராம் இப்படித்தான் அலுப்புடனும் சலிப்புடனும் ஒரு பதிவு போட்டிருந்தார். அப்போது நான் டிஃபன் வகையறாக்கள், சமையல் வகைகள்னு பதிவாகவே எழுதி இருந்தேன். அதான் இந்தப் பதிவுகளில்.

      நீக்கு
    2. அட.. அப்படியா? நானா.. நானே நானா...

      நீக்கு
  13. என்ன சமைக்கலாம் மெனு நன்றாக உள்ளது.

    நமக்கு காய்கறி கட் செய்யவும் ஆள் இல்லை தனித்தே வேலைகளை முடிக்க வேண்டும்.:)

    சீரியல் பார்ப்பது சிரமமான காரியம் தான்.. மற்றவனை கெடுப்பது வெட்டுக் கொத்தையும்தான் காட்டுவார்கள் படங்களும் பல அவ்வாறுதான் அதனால் படங்கள் தெரிந்துதான் பார்ப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்ப்பது அந்தவகை சீரியல்கள் இல்லை.  நன்றி மாதேவி.

      நீக்கு
    2. நானும் அவ்வண்ணமே

      நீக்கு
  14. அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். தேவியின் அருளினால் நம் வாக்கு வன்மையும் எழுத்து வன்மையும் வளரட்டும்.

    பதிலளிநீக்கு
  15. எனக்கும் கூழ் வகையறா மிகப் பிடிக்கும். முனைந்து செய்ய கைகளுக்குத் தான் வலு இல்லை.:)) மைலாப்பூரில் கூழ் செய்து கொடுப்பவர்கள் கூட இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ஈசிம்மா...   சட்டுனு ஆயிடும். ஆனா நீங்கள் சொல்ற கூழ் வேற போல..   அது டம்ளர்ல ஊற்றிக் குடிக்கற கூழ் போல!

      நீக்கு
    2. இல்லைம்மா. கெட்டிக் கூழ் தான். நான் இருக்கும் போது சாப்பிட்டிருக்கிறேன். அரிசிக்காரத் தெருவில் ஒரு அம்மா செய்து கொடுப்பார்.

      நீக்கு
    3. எங்கள் வீட்டு மோர்க்களி எங்கள் அலுவலகத்தில் ரொம்பப் பிரபலம்.  அதேபோல பாஸின் மொறுமொறு மெலிசு தோசையும் கேசரியும் கூட ஸ்பெஷல்.

      நீக்கு
    4. மானசீகமா அங்க வந்தாச்சு

      நீக்கு
  16. ஶ்ரீராமின் மெனு சூப்பர். நீங்க மெஸ் ஆரம்பித்தால் நான் தான் முதல் கஸ்டமர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  கடகராசி கடக லக்கினக்காரனான எனக்கு இப்போது யோக காலமாம்...   ஆரம்பிச்சுடலாமான்னு பார்க்கறேன்.

      நீக்கு
    2. ஆஹா அப்படியா. வெளி நாட்டுக்கும் அனுப்புவீர்களா:)

      நீக்கு
    3. அனுப்பினா போச்சு!

      நீக்கு
  17. ''ஏன் - ஆண்கள் மட்டுமே குடிக்கலாம் , பெண்கள் குடிக்கக் கூடாது என்று சட்டமா என்று கேட்பவர்களும் இருப்பார்கள். சட்டம் கொடுக்கிற சம உரிமையை இப்படித்தான் நிலை நாட்ட வேண்டுமா என்பதுதான் என் நெருடல்.'' இரு பாலருமே அத்து மீறும் காட்சிகளைத் திருச்சியுலும் ,கோவையிலும் பார்த்திருக்கிறேன். மேல் தட்டு மிகவும் இடிக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நானும் பார்த்திருக்கிறேன்.  அதைப்பற்றி பேசினாலே சண்டை வரும்!

      நீக்கு
    2. உண்மையைச் சொன்னால் கோபிப்பது தப்பு. இது புரியாமல் கட்சி கட்டுகிறவர்களை என்ன செய்ய முடியும்.

      நீக்கு
    3. என்னைப்போல் ஒருவர் ! மெத்த மகிழ்ச்சி.

      நீக்கு
  18. மது மனசைத் தளர்த்திவிடும் . எது செய்தாலும் கேட்க ஆளில்லை என்றால் எத்தனை பெரிய குடும்பமும் சிதறிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் அதையும்தான் படைத்து வைத்திருக்கிறான்....  ம்ஹூம்...

      நீக்கு
    2. ஏன் என்ற கேள்வி எப்போதும் தொடரும்.

      நீக்கு
  19. எங்களுக்கும் சேலம் விஜயா ஸ்டோர்ஸில் சேஸ், பெரிமேசன் புத்தகங்கள் ஒரு புத்தகம் இரண்டு ரூபாய் விலையில் ! (1967) கிடைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிமேசன் கடைசியில் ஒரே ஒரு பாயிட்டை வைத்துக் கொண்டுதான் ஜெயிப்பாராமே..  அப்படியா?

      நீக்கு
    2. ஆமாம் நாளடைவில் நானே கண்டு பிடிக்க ஆரம்பித்தேன்;0000)

      நீக்கு
  20. ''சமைப்பது எது வேண்டுமானாலும் சமைத்து விடுவார். சாயங்காலம் டிஃபன். அதுதான் அவர் பிரச்னை. அப்போதைய கதாநாயகன் என் அப்பா. அப்படீன்னா இப்போதைய கதாநாயகன் நீயான்னு கேட்கப்படாது. நான் சொல்ல மாட்டேன்.'' சூப்பர் வாக்கியம். ஶ்ரீராம். ஹாஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   ஆனா இப்போ எதுவுமே வாய்க்கு பிடிக்கலை அம்மா.

      நீக்கு
    2. உண்மைதான். உப்பு உரைப்பு புளிப்பா நார்த்தங்காய் சாதம் சாப்பிடவும். அன்ன த்வேஷம் மறையும் அப்பா.

      நீக்கு
    3. காய்ந்த நார்த்தங்காய் வாயில் அடக்கிப் பார்த்தேன்.

      நீக்கு
    4. நாரத்தங்காயை வாயில் அடக்கிக் கொண்டால் கன்னம் உள்பகுதி, நாக்கு எல்லாம் தோல் வழன்று போய்ப் புண்ணாகி விடும்.

      நீக்கு
    5. மிகச்சிறிய துண்டு நாக்கில் வைத்து சப்பிப் பார்ப்பேன்.

      நீக்கு
  21. பதிவு அருமை.
    தினம் சமைப்பது குழப்பமில்லாமல் இல்லாமல் தெளிவாக இருந்தது.கணவர் , குழந்தைகள் அருகில் இருக்கும் போது அவர்களுக்கு என்று சமைக்கும் போது அவர்கள் அதை விரும்பி சாப்பிடும் போது மகிழ்ச்சி.
    இப்போது என் ஒருவளுக்கு என்று சமைக்கும் போது அலுப்பு என்ன சமைப்பது என்ற குழப்பம் எல்லாம் வருகிற்து.

    பதிலளிநீக்கு
  22. மனசாட்சியம் 18 ல் சொல்லபட்ட விஷயங்கள் நன்றாக இருக்கிறது.
    தொடர்கள் மற்றும் சினிமாக்களை தேர்வு செய்து தான் பார்க்க வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!