30.11.26

"திங்க" க்கிழமை  :: சோள இட்லி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி  - மனசாட்சியம் - 52

  

சோள இட்லி

கீதா சாம்பசிவம்

நாங்க சிறு தானியம் சாப்பிட ஆரம்பிச்சு பல மாதங்களுக்கும் மேல் ஆகியிருந்த காலம் அது. எல்லாத்தையும் மசிக்க முடிஞ்ச எனக்கு சோளத்தை வேக வைப்பது ஒரு சோதனையாகவே இருந்தது. ஒரு மாதிரியா வேக வைச்சுடுவேன். சில வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு சானலில் எல்லா சிறு தானியங்களிலும் இட்லி செய்வதைப் பற்றிச் சொன்னார்கள். நாமதான் ஏற்கெனவே வரகு, கம்பு போன்றவற்றில் இட்லி செய்து பார்த்துட்டோமே. இப்போ சோளத்தில் செய்யலாம் என நினைத்து நேற்று அதற்கான பொருட்களைத் தயார் செய்தேன்.

சோளம் உடைச்சது 250 கிராம் அல்லது ஒரு ஆழாக்கு அல்லது 2 கிண்ணம்

உளுந்து கால் கிண்ணம்

வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்.

காலை உணவுக்குச் செய்வதானால் ஏற்கெனவே ஊற வைச்சு அரைச்சிருக்கணும். ஆனால் முந்தைய நாள்தான் இந்த யோசனை உதித்ததால் மாலை ஆறு மணி அளவில் சோள ரவையைக் களைந்து தனியாக ஊற வைத்தேன். பின்னர் உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஊற வைத்தேன்.  இரண்டு மணி நேரம் ஊறினால் போதும் என்பதால் இரவே அரைத்து வைத்து உப்புப் போட்டுக் கலந்து விடலாம். மாவு நன்கு பொங்கி வரும்.

அரைத்த மாவு

மறுநாள் காலை அதை இட்லிகளாக வார்த்து எடுத்தேன். 

சோள இட்லி தயார், சாப்பிட வாங்க!

தொட்டுக் கொள்ளக் குடமிளகாய்க் கொத்சு!

குடமிளகாய்க் கொத்சு கொதிக்குது! :)

செய்முறை

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு நீரில் ஊற வைத்துக் கரைத்து எடுத்தது இரண்டு கிண்ணம்

பயத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் குழைய வேக வைக்கவும். அதிலேயே புளி ஜலத்தைச் சேர்க்கவும்.

ஒரு நடுத்தர அளவுக் குடைமிளகாய்,

நடுத்தர அளவுத் தக்காளி

பெரிய வெங்காயம் பெரிதாக ஒன்று அல்லது நடுத்தரமாக இரண்டு பொடிப்பொடியாக நறுக்கவும்.

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

தாளிக்க எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி, கடுகு, க.பருப்பு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம்

மேலே தூவ பச்சைக் கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கியது.

உப்பு தேவையான அளவு

அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு, உபருப்பு, கபருப்பு தாளித்து, பெருங்காயமும், கருகப்பிலையும் சேர்க்கவும்.  மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் குடைமிளகாயைச் சேர்க்கவும். குடைமிளகாய் அரைப்பதம் வேகும்போது தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி சேர்ந்து வரும்போது பருப்புக்கலவையுடன் சேர்ந்த புளிக்கரைசலைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். ரொம்ப நீர்க்கவும் இல்லாமல் சேறு போல் கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சாம்பார், கொத்சு போன்றவை சேறு போல் கெட்டியாக இருந்தால் அவ்வளவாக ருசிக்காது. கூடியவரை பால் போன்ற பதத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.

======================================================================================

 மனசாட்சியம்- 52
KGY Raman 

அண்மையில் காமராஜ் நேரு சாஸ்திரி மொரார்ஜி இவர்களைக் குறித்து குல்தீப் நய்யார் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை நமது எ பி யில் போட்டிருந்ததைப் பார்த்த நண்பர் ஜீவி சற்றே கடுமையாக அதைக் கண்டித்திருந்தார். எதற்கு இந்த அர்த்தம் இல்லாத வளவளப்பு ? சாஸ்திரி காலத்தில் பிறக்காத ஒருவர் ஏன் அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற மாதிரி எல்லாம் கூட எழுதி இருந்தார். எனக்கு இதில் உடன்பாடு இல்லை.  பழைய நிகழ்ச்சிகளில் சாதாரணமாக பொதுமக்களுக்குக் கண்ணில் படுவது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே.  அதுவும் அந்தத் தகவல்களை யார் சொல்கிறார்களோ அவர்களது மனப்பான்மைக்கு ஏற்ப அதில் சில மாறுபாடுகள் இருப்பதும் சாத்தியம்தான்.  சாஸ்திரி நேரு காமராஜ் மொரார்ஜி ஜகஜீவன் ராம் இவர்களைப் பற்றி நமக்கு ஒரு உறுதியான அபிப்பிராயம் இருந்து கொண்டிருக்கும். இந்த மாதிரி ஒரு நன்கு அறியப்பட்ட நபர் அந்த நிகழ்ச்சிகளை அலசி ஆராய்ந்து என்ன நடந்தது என்பதை முழு விபரமாக சொல்லும் போது நமக்குள் ஒரு சில புதிய புரிதல்கள் வரும். அந்த நிகழ்ச்சி பற்றி மட்டும் தான் என்று இல்லை வாழ்வியல் கோட்பாடுகள் பற்றி கூட நமக்கு சில ஞானோதயங்கள் ஏற்பட சாத்திய கூறுகள் உண்டு. சாஸ்திரி காலத்தில் பிறக்காத ஒருவர் சாஸ்திரியை பற்றி வெளிவந்த கட்டுரையை மீண்டும் வெளியிடக்கூடாது என்றால் ராஜராஜன் காலத்தில் பிறக்காத கல்கி பொன்னியின் செல்வன் எழுத முடியுமா ? பயனில்லாத விஷயங்களை ஏன் பேச வேண்டும் என்பது ஒரு நியாயமான கேள்விதான் என்றாலும் கூட பயன் இல்லாத பலவும் பொழுதுபோக்காக விரும்பப்படுவதும் உண்மை தானே. ஜெயகாந்தன் லா ச ரா ஜானகிராமன் போன்றவர்கள் இன்று out of date  அவர்கள் எழுதியதை ஏன் இன்று படிக்க வேண்டும் என்று கூட சிலர் வாதிக்கலாமல்லவா ? உண்மையில் அந்த காலத்திய படே படே எழுத்தாளர்களைப் பற்றி எனக்கு அப்படி ஒரு திடமான அபிப்பிராயம் உண்டு. 

உண்மையில் இந்த கட்டுரையைப் படித்ததும் , லால் பகதூர் சாஸ்திரி அவர்களைப் பற்றிய என் அபிப்பிராயம் பெரிதும் மாறவில்லை என்றாலும் கூட அவர் நேருவுக்கு அடுத்த தலைவராக இருக்க விரும்பினார் என்ற தகவல் எனக்குப் புதிது. மிக எளிய வாழ்க்கை வாழ விரும்பி அதை மிகவும் கவனமாக செயல்படுத்திய ஒரு உண்மையான நாணயமான நல்ல மனிதரிடம் இந்த ஆசை இருக்கலாமா என்று கூடத் தோன்றியது.  ஆனால் அரசியல் என்று தேர்ந்தெடுத்து வந்துவிட்ட அரசியல்வாதிக்கு , அந்த வகையான ஆசையும் இருக்க வேண்டியதுதான் - அது இருப்பதும் இயல்புதான் என்று , சற்று நேர யோசனைக்குப்பின் தெரிந்து கொண்டேன். எந்தப் புத்தகத்திலிருந்து இந்தப் பகுதி எடுக்கப்பட்டதோ, அது நிச்சயமாக மலிவான அல்லது எளிதில் கிடைக்கக்கூடிய புத்தகம் அல்ல. கிடைத்தால் கூட நாம் அதைப் போய் இன்று வாங்க மாட்டோம்.

நம் மனதில் நாம் சிருஷ்டி செய்து வைத்திருக்கிற பிம்பங்களின் உண்மையான சொரூபம் என்ன என்பதை அறிந்து கொள்ள இந்த மாதிரியான பதிவுகள் பயன்படும். இதை வளவளப்பு என்று அலட்சியப்படுத்துவது சரியல்ல . அதற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. 

தவறான பிம்பங்கள் என்று சொல்ல வரும் போது முக்கியமான ஒன்றை இங்கே நான் சொல்ல வேண்டும்.‌1967 தேர்தலில் நான் நன்கு யோசித்து செய்வதாக நினைத்துக்கொண்டு அன்றைய ஆட்சிக்கு எதிரணிக்கு வாக்களித்தேன் . இதை நான் சொன்னதும் நான் பெரிதும் மதிக்க கூடிய ஒரு பேராசிரியர் " நீ செய்த இந்தத் தப்பின் உண்மையான பரிமாணம் உனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் புரியும் " என்று சொன்னார். " நான் செய்தது சரிதான் என்பதும் உங்களுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் புரியும் " என்றுமே எடக்காக நான் பதில் சொன்னது இன்று வெட்கத்துடன் நினைவுக்கு வருகிறது. 

நாம் மிகவும் பலமாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை சிதைத்துக்கொள்ள பல சமயம் நமக்கு மனம் வருவதில்லை. எந்த மாதிரியான சாட்சியங்களைக் கொடுத்தாலும் அவற்றை நாம் ஏற்றுக் கொள்வதில்லை என்பது அல்ல அவற்றைத் திரும்பியே பார்ப்பதில்லை.‌

என் நெருங்கிய உறவினர் ஒருவர் மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதி ஒருவர் பெயரில் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார்.‌ அவருடைய நல்ல காலம் அந்த நல்ல எண்ணத்துடனேயே அவர் வாழ்வு முடிந்து போயிற்று. 

பழங்கதைகளிலும் பயன் இருக்கிறது . நல்ல இலக்கியத்தின் பரம ரசிகரான நண்பர் ஜீவி இதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!