உங்கள் மனைவி, மக்கள், நீலவானம், மேகக்கூட்டம் எதனுடனானாலும் நீங்கள் தொடர்புடன் இருக்கும்போது எண்ணம் குறுக்கிடுமானால் தொடர்பு அறுந்து போகிறது. எண்ணம் என்பது நினைவின் வெளிப்பாடு. நினைவு என்பது ஒரு பிம்பம். பதிவு செய்யப்பட்ட உருவம். அங்கிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே காண்பவருக்கும் காணப்படுவதற்கும் இடையில் ஒரு பிரிவு உண்டாகிறது. இதை நீங்கள் வெகு ஆழமாகப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். காண்பவரை காட்சியினின்றும் தனிமைப் படுத்துவதுதான் ஒருவர் இன்னும் அதிகமாக வேண்டும், அதிக நுகர்ச்சி வேண்டும், என்று இடைவிடாத தேடுதல் ஏங்குவதற்குக் காரணமாக இருக்கிறது. இப்படியான ‘காண்பவர்’- அதாவது, அனுபவங்களை நாடும் ஒருவர், சரி தவறு என்று தணிக்கை செய்யும் ஒருவர், மதிப்பீடு செய்பவர், நியாயமா அல்லவா என்று சீர்தூக்கிப் பார்ப்பவர், கண்டிப்பவர் இருக்கும் வரை, அந்தந்தக் கணம் என்ன இருக்கிறதோ அதனுடன் உண்மையான தொடர்பு அற்றுப் போகிறது.
உங்களுக்கு உடலில் வலி உண்மையான வலி உண்டாகும் போது, வலி நேரடியாக உங்களுக்கு இருக்கிறது. வலி இருக்கிறது என்று கண்டு சொல்லிக் கொள்பவர் இல்லை. காண்பவர் தனியே இல்லாததால் வலிக்கான நடவடிக்கை நேரடியாகவும் உடனுக்குடனும் இருக்கிறது. கருத்தும் அதன் பின் செயலும் இல்லை. நேரடியான செயல் மட்டும் தான் இருக்கிறது. வலி நேரடியாக உடல் அளவில் உணரப் பட்டது. அதற்கான நடவடிக்கை உடன் தொடர்ந்தது. நீங்கள்தான் வலி. வலிதான் நீங்கள். காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, தெரிந்து கொள்ளாதவரை, புரிந்து கொண்டு ஆழமாக அறியப்படாதவரை, முழுதும் பிடிபடாதவரை, அறிவு பூர்வமாகவோ, தர்க்க ரீதியிலோ இல்லாமல் நேரடியாக உணரப் படாதவரையிலும் வாழ்க்கை ஒரு போராட்டமாக, எதிரெதிர் ஆசைகளினிடையே நடக்கும் முரண்பாடுகளாக, ‘எது வேண்டும்’ ‘எது இருக்கிறது’ இவற்றிடையே மோதலாகத்தான் இருக்கும்.
ஒரு பூவையோ, ஒரு மேகக் கூட்டத்தையோ, எதையுமோ பார்க்கும்போது ஒரு ‘காண்பவராக’ இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். அப்போது உங்களுக்கு இது சாத்தியமாகும்.
