20.3.13

அலேக் அனுபவங்கள் 18:: பேருந்து நாட்கள்.

              
அசோக் லேலண்டில் பயிற்சி பெற்ற ஆரம்ப நாட்களில், நான் ஒரு பேருந்துப் பயணியாகத்தான் இருந்தேன். 
                
பாக்டரி வேலை நேரம், காலை ஏழரை மணி முதல், மாலை நான்கு மணி வரையில். 
                 
காலையில் நாலே முக்கால் மணிக்கு எழுந்து, ஐந்தரை மணிக்குள் வீட்டை விட்டுக் கிளம்பி, ஐந்து நாற்பதுக்கு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் டாங்க் பேருந்து நிறுத்தத்தில், மதார் ஷா கடை வாயிலில், வந்து நின்று கொள்வேன். 
                 
தங்கசாலை செல்லுகின்ற பேருந்துக்காக காத்திருப்பேன். தடம் எண் பதினான்கு, முப்பத்தேழு ஆகியவை தங்கசாலை செல்லுகின்ற வண்டிகள் என்று ஞாபகம். அந்தக் காலத்தில், புரசைவாக்கத்திலிருந்து, தங்கசாலை வரையிலும் பதினைந்து பைசா டிக்கெட் கட்டணம்.. காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்காது. நிச்சயம் உட்கார இடம் இருக்கும். 
                 
ஆறு மணிக்குள், தங்கசாலை பேருந்து நிலையம். அங்கேயிருந்து 56A பேருந்தைப் பிடித்து, ஆறு நாற்பது சுமாருக்கு எண்ணூர் அசோக் லேலண்டு வாசலில் இறங்கிவிடுவேன். தங்கசாலையிலிருந்து, அசோக் லேலண்டு வாசல் வரை அம்பத்தஞ்சு பைசா டிக்கெட். இந்த வழித் தடத்தில், சில மாதங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கூட எடுத்து, பயணம் செய்தேன். பேருந்து எதிலும் காலை நேரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் பயணம் செய்வேன்.ஏன் பேருந்துகளில் உட்காருவதைப் பற்றி பிரஸ்தாபித்து எழுதுகிறேன் என்பதைக் கூறுகின்றேன். 
             
பள்ளிக்கூட நாட்களில் பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருகின்ற பையன், 'ஐ ஃபர்ஸ்ட்' என்று எல்லோரிடமும் பீற்றிக் கொள்வது போல, பல நாட்கள், பாக்டரி கான்டீனுக்குள், முதல் ஆளாக நுழைந்த பெருமை என்னையே  சேரும்.   
               
காண்டீனுக்கு, கவுண்ட்டர்களுக்கு சுடச் சுட வருகின்ற அன்றைய தின சிற்றுண்டியை, கூப்பன் கொடுத்து வாங்கி, தட்டில் ஏந்தி, காண்டீன் பெஞ்சுல அமர்ந்து, மேஜை மீது வைத்து, மின் விசிறிக்குக் கீழே அமர்ந்திருந்தாலும், 'உப் ... உப்ப்ப் ' என்று வாயால் ஊதி, சூடாற்றி, சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 
               
சிற்றுண்டி மணமும், தேநீர் மணமும் கலந்து, காண்டீன் மணம் அலாதியாக இருக்கும். காலை சிற்றுண்டி நேரம், மதிய நேரத்தில், உணவு உண்ணும் பொழுதும் மட்டும்தான் எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கும். அப்ரெண்டிஸ் நாட்களில், பாக்டரி உள்ளே, எங்களுக்கு உட்கார இடம் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் பயிற்சி. எல்லா இடத்திலும் நிற்க மட்டும்தான் அனுமதி. உட்காருவதற்கு இடம் கிடையாது என்பதும் உண்மை. நேரடி உற்பத்தி இல்லாத பகுதிகளுக்கு பயிற்சிக்கு சென்றால், உட்காருவதற்கு ஒரு ஸ்டூல் கிடைக்கும். (அதற்கு அந்தப் பகுதி நண்பர் யாரும் உரிமை கோராத வரை!)  
                
பயிற்சி பெறுகின்ற கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் அவர்களுக்கு ஒரு ரகசிய இடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். மதிய நேர உணவுக்குப் பின் யார் கண்ணிலும் படாமல் அரட்டை அடிக்க! மேலும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ்களை யாரும் அதிகமாக நெருங்கமாட்டார்கள். நாளைக்கு அதிலிருந்து ஒருவர் தமக்கு பாஸ் ஆக வருவதற்கு, சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதால். அதுமட்டும் அல்ல, கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் பயிற்சி முடிந்ததுமே எக்சிகியூடிவ் ஆகிவிடுவார்கள். நாங்கள் கன்ஃபர்ம் ஆகும் பொழுது, யூனியன் கேடர் ஆட்களாக ஆவோம். பாதிக்கப்பட்ட இனமாக இருந்தவர்கள், எங்களைப் போன்ற எஞ்சினீரிங் அப்ரெண்டிஸ்கள்தான்!  
           
 நாங்களும் எங்களுக்கு உட்கார்ந்து ஓய்வு எடுக்க, ஒரு ரகசிய அரட்டை மூலை ஏற்பாடு செய்துகொண்டோம். ஆனால், ஒருநாள் மாட்டிக் கொண்டோம். எப்படி? பிறகு பார்ப்போம். 
                  

18.3.13

இப்படி எல்லாம் நடக்குமா - இரண்டாம் பகுதி.


                            
               
தொலைபேசியை எடுத்து, "ஹலோ" என்றேன். 
மறுமுனையில் பேசிய குரல், தொலைபேசி யார் பெயரில் பதிவாகி இருக்கிறதோ, அவர் பெயரைச் சொல்லி, 'அவர் இருக்கிறாரா' என்று கேட்டது. 
'இல்லை.'
'அவருடைய அலைபேசி எண் கொடுப்பீர்களா?'
'மாட்டேன்.'
'ஏன்?' 
'தெரியாது.'  
'எப்போ வருவார்?'
'தெரியாது.'
'நீங்க யாரு?'
'தெரியா ...... இல்லை நான் அவருக்கு தூரத்து உறவு.' 
'எவ்வளவு தூரம்?'
'முன்னூற்று நாற்பத்து ஒன்று கிலோ மீட்டர்!'
'உங்கள் பெயர் என்ன?'
'குப்புசாமி.' 
'சரி, மிஸ்டர் குப்புசாமி, உங்களுக்கு எங்களுடைய இன்வெஸ்ட்மெண்ட் பிளான் பற்றி சொல்லட்டுமா?'
'வேண்டாம்.'
'ஏன்?'
'எனக்கு வருமானமே கிடையாது.'
'அப்போ எப்பிடி சாப்பிடுகிறீர்கள்?' 
'கையாலதான்!'
மறு முனையில் பேசிக் கொண்டிருந்த குரல், மேலும் சம்பாஷணையை எப்படித் தொடர்வது என்று தெரியாமல், திகைத்து, இணைப்பை துண்டித்தார்கள்.
*********    *********** 
                   
ஸ்ரீராமை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், அவர் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். 
'ஹலோ? ஸ்ரீராம் எங்கே?'
'ஹலோ! குப்புசாமி மாமாவா?' 
'ஆமாம். '
'அவர் ஆபீசில் ஆடிட் என்று சொல்லி காலையில் சீக்கிரமே கிளம்பிப் போயிருக்கிறார். '
'அலைபேசி கொண்டு செல்லவில்லையா?'
'எடுத்துக்கிட்டுப் போயிருக்கார்.' 
'ஆனால் நான் கால் பண்ணினால், அலைபேசி சுவிட்ச் ஆஃப செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வருகின்றது?' 
'ஆமாம். ஆடிட் நேரத்தில் அலைபேசியை ஆஃப் செய்து வைத்துவிடுவார். '
'ஓ? அப்போ சரி. எப்பவாவது அவர் வீட்டுக்கு கால் செய்தால், ஏகாம்பரம் பற்றி என்னிடம் பேச வேண்டும் என்று சொல்லிவிடு.'
'யாரு மாமா ஏகாம்பரம்?' 
'கூகிள் ஏகாம்பரம் என்று சொன்னால், அவருக்குத் தெரியும்.' 
'சரி.' 

*****************     *******************   *************** 
மீண்டும் தொலைபேசி ர்ர்ர் ரிங் ரர்ர்ர்ர் ரிங்.
எடுத்தேன். 
'ஹலோ?'
'ஹலோ!'
மறுமுனையில் ஹலோ சொன்ன குரல், இதற்கு முன்பு பேசிய உபத்திரவ அழைப்பில் பேசிய குரல் போலவே இருந்தது. 
         
'ஹலோ, நான் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், எனக்கு வருமானமே கிடையாது; என்னால் எங்கும் ஒரு பைசா கூட போடமுடியாது. இருந்தாலும் என்னால் சாப்பிட முடியும். கைகளாலும் சாப்பிடுவேன், ஸ்பூனாலும் சாப்பிடுவேன். போதுமா?'
'மாமா என்ன ஆச்சு உங்களுக்கு? இதை எல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?'
பேசியவர், ஸ்ரீராமின் தூரத்து சொந்தம். (ஹி ஹி - ஆமாம் தூரத்தில் வசிக்கின்ற சகோதரர்!) 
'ஓ! நீங்களா!' 
'ஆமாம்.'
'என்ன விஷயம்?'
'மாமா - உங்களுக்கு ஏற்காடு ஏகாம்பரம் என்று யாரையாவது தெரியுமா?' 
'எனக்குத் தெரிந்தது எல்லாம் கூகிள் ஏகாம்பரம்தான். அதுவும் இன்று காலையில்தான்.அது போகட்டும், ஏற்காடு ஏகாம்பரம் யாரு?'
'அப்படி ஒருவர் சற்று நேரம் முன்பு எனக்கு போன் செய்தார்.' 
'என்ன சொன்னார்?'
"இன்னும் ஒரு மணி நேரத்திற்குள், அவர் சொல்கிற இடத்திற்கு சொல்கிற அமவுண்ட் கொண்டு வந்து கொடுத்தால், ஸ்ரீராமை வீட்டுக்கு அனுப்புவோம். இல்லையேல் அவரை பல்லாவரம் பக்கத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் சிறை வைத்துவிடுவோம்" என்றார். 
                  
(முக்கியக் குறிப்பு: இந்தக் கதையில் காணப்படும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் -------------)
             

16.3.13

பாசிட்டிவ் செய்திகள் கடந்த வாரம் - மார்ச் 9, 2013 முதல் மார்ச் 16, 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  

=========================================================


முக்கியச் செய்திகள் என்ற தளத்திலிருந்து இந்தப் பகிர்வு : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்று மனுநீதி நாள். பொதுமக்களின் வரிசையில் நின்ற அந்த முதியவர், கலெக்டர் ராஜேந்திரனிடம் கத்தை கத்தையாய் மனுக்களை கொடுக்க, அதை கலெக்டர் கவனமாக வாங்கி உடனடியாக பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகளோ அந்த முதியவரை பயப் பார்வை பார்த்தபடி இருந்தனர்.

யார் இவர்?

""அவர் பேரு சின்னையன். சட்டத்துக்கு புறம்பா செயல் படறவங்களை குறிவச்சி பெட்டிஷன் போட்டு குடைச்சல் தருவாரு. அதனால்தான் இவரை கண்டா எல்லாருக்குமே பயம். குறிப்பா திருவண்ணாமலை மாவட்டத்துல 301 இடத்துல டாஸ்மாக் பார்கள் நடத்த முடிவுபண்ணி அரசாங் கம் ஏலம் விட்டப்ப... 46 பார்கள்தான் ஏலம் போச்சி. ஆனா மாவட்டத்துல அரசு கணக்கைவிட அதிகமா 350 இடங்கள்ல பார்கள் கள்ளத்தனமா நடக்குது. இந்த பார்களை உடனே மூடணும்னு சி.எம்.வரை புகார் மேல புகார் அனுப்புனாரு. விசாரணையில் அவரது புகார்கள் உண்மைன்னு தெரிஞ்சி ஏலத்தில் விடப்பட்ட பார்களைத் தவிர மற்றதை மூட உத்தர விட்டாங்க. இதனால் சின்னையனால் பாதிக்கப்பட்ட சிலர் போலீஸை வச்சி அவரை கைது செய்து உள்ளே தள்ளினாங்க. அதுக்கப்புறம் நடந்ததை அவர்கிட்டயே கேளுங்க'' என சின்னையனின் முகவரியைத் தந்தார் அங்கிருந்த ஊழியர்.
                                                 

இராமலிங்கனார் தெருவில் தனது டீக்கடையில் இருந்த சின்னையனிடம் பேசியபோது... ""பார்களை நடத்தின தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு புள்ளி என்னைத் தூக்கி ஜெயில்ல போடச்சொல்லி டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு பணம் தந்தாரு. அவரும் பணத்துக்கு விசுவாசமா 23.10.2009-ந் தேதி காலை என்னை ஸ்டேஷனுக்கு அழைச்சி வரச்சொல்லி பொதுவா பேசுனவரு... "சின்னையா நீ கவிதை எழுதுவியாமே? ஒரு கவிதை எழுது, இதோ வந்துடறேன்'னு வெளியில போனாரு. நானும் எழுத ஆரம்பிச்சேன்.

மதியம் 1.30மணி இன்ஸ்பெக்டர் ரூமைவிட்டு வெளியில வந்தேன். "உங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கு. நீங்க வெளியில போகக் கூடாது'னு போலீஸ்காரர் ஒருத்தர் தடுத்தாரு. ஜட்ஜ் வீட்டுக்கு கொண்டு போனாங்க. அவங்க நீங்க பஜார்ல கத்திய காட்டி வியாபாரி ஒருத்தர மிரட் டியதா வழக்குன்னாங்க. என் வயசுக்கு நான் மிரட்டினா பயப்படுவாங்களா? இது பொய் வழக்குன்னேன். அவங்க கோர்ட்ல சொல்லுங்கன்னு 15 நாள் ரிமாண்ட் பண்ணாங்க.

திருவண்ணாமலை சப்ஜெயிலுக்கு கொண்டு வந்தப்ப ஜெயிலர் சாப்பிட் டீங்களான்னு கேட்டாரு. காலையில இருந்து சாப்பிடலைன்னு சொன்னேன். இங்க சாப்பாடு தர்ற டைம் முடிஞ்சிப் போச்சுன்னாரு. என்கூட வந்த போலீஸ் காரங்க பிரியாணி சாப்பிட்டுட்டு வரலாம் வான்னு கூப்பிட்டாங்க. நான் உங்க பணத்துல சாப்பிட விரும்பல, என்னை அரெஸ்ட்பண்ணி வச்சிருந்தப்ப அரசாங்க செலவுல சாப்பாடு வாங்கித் தரணும்னு விதியிருக்கு. மதியம் ஏன் வாங்கித் தரலை. அந்தப் பணம் என்னாச்சின்னு கேட்டேன். முழிச்சாங்க. அது தெரியிறவரை சாப்பிடமாட் டேன்னுட்டேன். இதப்பாத்த ஜெயிலர் இவரை இங்க வச்சிக்க முடியாது, வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு போங்கன்னுட்டாரு.

வேலூருக்கு நைட் 10.30-க்கு வண்டி போச்சு. என் உடம்பு ரொம்ப துவண்டுப் போயிருந்ததால அதிகாரிங்க என்னை, வேலூர் ஜி.ஹெச்.சுக்கு அனுப்பினாங்க. நைட் 11.30-க்கு டாக்டர் குளுக்கோஸ் போட பாத்தாரு. நான் மறுத்து உண் ணாவிரதம்னேன். மறுநாள் பெரிய டாக்டருங்க வந்து என்னை மனநல பாதிப்புன்னு அந்த பிரிவுக்கு அனுப்பி னாங்க. அங்கயிருந்த டாக்டர்கிட்ட உணவு விஷயத்தைச் சொன்னேன். அவர் கோபமாகி போலீஸை சத்தம் போட் டாரு. என்கூட வந்த போலீஸ்காரங்க பிரச்சினையை எங்கயோ சொல்ல, இன்ஸ்பெக்டர் ரமேஷே இரண்டுபேர தயார்பண்ணி எனக்கு ஜாமீன் வாங்கித் தந்து அனுப்பினாரு. அதுக்கப்புறம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு மறுநாள் வந்து என்மேல பொய் கேஸ் போட்ட இன்ஸ்பெக்டர், மிரட்டினதா சொன்ன வியாபாரி, லஞ்சம் வாங்கின டாக்டர் எல் லார் மேலயும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆதாரங்களோட மனு தந்திருக்கேன்'' என்றவர்...

""30 வருஷத்துக்கு முன்ன ரேஷன் கடையில வேலை பார்த்தேன். கடைக்கு வந்த எஸ்.ஓ. மாச மானா 300 ரூபா தரணும்னு சொன் னாரு. தப்புபண்ணச் சொல்றியான்னு அடிச்சிட்டேன். வேலையவிட்டு நீக்கிட்டாங்க. பொதுநல சேவை மையம்ங்கிற பேர்ல இதுவரைக்கும் 2500 மனுக்களுக்கு மேல தந்திருக்கேன்.

திருவண்ணாமலை நகராட்சிக் குச் சொந்தமா எத்தனை கடைங்கயிருக் குன்னு கேட்டேன். 270, 281, 356-ன்னு மாத்தி மாத்தி தகவல் தந்திருக்காங்க. பவன்குமார் (அ.தி.மு.க.) தன் பினாமி கமலக்கண்ணன் பேர்ல எடுத்திருக்கிற 2 கடைக்கு 2003-2009 வரை வாடகை பாக்கி 62,900-னு டாகுமெண்ட் சொல் லுது. 2 கடைக்கே இவ்வளவான்னு மொத்த கடைங்களோட வாடகைத் தகவல்கள் கேட்டு மனு தந்தேன், தக வல் வரலை. அதேமாதிரி 2500 மாணவிகள் படிக்கிற நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதிய இடிச்சிட்டு நகராட்சி சார்பா 20 கடைங்க கட்டறாங்க. பணத்துக் காக பள்ளிய இடிச்சிக்கிறாங்க. பணம் வேணும்னா என் பேர்ல 100 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கட் டும். வாரிசா சேர்மன் ஸ்ரீதர நியமிக் கிறேன். அவர் கூலிப்படைய வச்சி என்னை கொன்னுட்டு இன்சூரன்ஸ் பணத்தை வாங்கிக்கட்டும். பள்ளிய விட்டுட சொல்லுங்கன்னு கலெக்டருக்கு மனு தந்திருக்கேன்'' என்றார் புன்னகைத்தபடி.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவரின் மனைவி தாமரைச்செல்வி, ""வீட்டுக்குன்னு அவரால 10 பைசாவுக்கு பிரயோஜனமில்லை. ஆனா இவர் தினமும் கடைக்கு வந்து 50 ரூபா எடுத்துட்டுப் போயிடறாரு. "மத்தவங்களை மாதிரி நான் குடிக்கவா எடுத்துட்டுப்போறேன். சிலருக்கு குடிக்கிறது பழக்கம், சிலருக்கு சிகரெட் புடிக்கிறது பழக்கம். எனக்கு பொதுமக்களுக்கு சேவை செய்றது பழக்கம்'னு சொல்றாரு.. அதுக்குமேல அவர்ட்ட என்ன கேட்கிறது'' என சலித்துக்கொண்டவரிடம் புகைப்படம் எடுக்கணுமே என்றதும், ""இதுல அது வேறயா போப்பா'' என மறுத்துவிட்டார்.


எந்த ஊரில் என்ன பிரச்சினை என்றாலும் உடனே வெள்ளை பேப்பர் வாங்கி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தந்துவிட்டு வருகிறார் சின்னையன். வித்தியாச மான மனிதர்.


2) இன்று ஒரு தகவல் என்ற தளத்திலிருந்து இந்தப் பகிர்வு : சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்...
                                  

படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.

படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் .

படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.

படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி...!




[பாசிட்டிவ் செய்திகளில் இதைச் சேர்த்திருக்கிறேன் என்றாலும், சுவாரஸ்யம் கருதியே.
காக்கைக்கும் இருக்கும் பாசிட்டிவ் அப்ரோச் மனிதனுக்கு வரட்டும் என்று எடுத்துக் கொள்ளலாமா!
]


3) நிழலில் ஒதுங்க இடமில்லாமல் பாம்புகள் செத்துப் போவதைப் பார்த்து மனம் நொந்த Jadav Molai Payeng, வன அலுவலகத்தில் சொல்லி 'உங்களால் ஏதாவது செய்ய முடியுமா' என்று கேட்க, அவர்கள், உங்களால் முடிந்தால் நீங்களே வளருங்கள்... குறிப்பாக மூங்கில் என்று சொல்ல ஐவரும் 'ஏன் செய்யக் கூடாது' என்று முயற்சித்து, இன்று தனி ஒரு மனிதனாக 1360 ஏக்கர் காட்டை உருவாக்கியிருக்கிறார். 

                                       

இப்படி ஒருவரால் ஒரு காட்டை உருவாக்க முடியும் என்றால், நம்மால் ஏன் ஒரு தோட்டத்தையாவது உருவாக்க முடியாதா என்று கேட்கிறது இந்த தளம்.

15.3.13

(எனக்கும் பிடித்த) P B ஸ்ரீனிவாஸ்

                                              
                               

சமீபத்தில் இசைவிழா நிகழ்ச்சிக்குச் சென்றபோது மயிலை ஸ்ரீ பார்த்தசாரதி சபாவில் டி. எம். கிருஷ்ணா கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்த போது பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ் வந்தார். மெல்ல நடந்து வந்தார். அவரை இரண்டு பேர் கைப் பிடித்து அழைத்து வந்தார்கள். கையில் ஏகப் பட்ட நோட்டு, நோட்டிஸ்கள், என்று வைத்திருந்தார். அவரை ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைத்து விட்டுச் சென்றார்கள் அவர்கள். காதிலிருந்த காது கேட்கும் கருவியைச் சரி செய்து கொண்டு கச்சேரி கேட்டார் அவர். 

என்ன இனிமையான பாடல்களை நமக்குத் தந்தவர்...

மெகா டிவி என்று நினைவு.  சமீபத்தில் அங்கு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இவர், கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா வாணி ஜெயராம், ஏ. எல். ராகவன், டி. எம். எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர். ஏ. எல். ராகவன் குரல் தவிர, வேறு யார் குரலும் பழைய மாதிரி இல்லை. 

                                         

பி. பி. ஸ்ரீநிவாஸ் என்றதும் என் நினைவுக்கு உடனடியாக வந்த சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோர் நினைவிலும் இன்னும் பல பாடல்கள் இருக்கும். பாசமலர், சுமைதாங்கி, பொன் ஒன்று கண்டேன் என்று நிறைய இருக்கும்... எனக்கும் அதேபோல பெரிய லிஸ்ட் உண்டு. எனினும் சில பாடல்களை மட்டும் இங்கு உங்களுடன் சேர்ந்து கேட்கிறேன்..


1) பூவரையும் பூங்கொடியே... கைகளால் வரையும் ஓவியமும், கண்களால் வரையும் ஓவியமும்! 

"வடிவங்கள் மறைந்து விடும்... வண்ணங்கள் மறையாதே..: உருவங்கள் மாறி விடும்... உள்ளங்கள் மாறாதே..."



2) இளமை கொலுவிருக்கும்..... "பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா.. ஒரு பூவைக்கு மாலையிடும் நாள் வருமா.."

"அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ... ஒரு அணைப்பில் அடங்குவதும் அவள் அல்லவோ.."


"பெண் இயற்கையின் சீதனப் படைப்பல்லவா" // "எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?"




3) துள்ளித் திரிந்த பெண்ணொன்று... "வேலில் வடித்த விழியொன்று மூடிக் கொண்டதே(ன்) இன்று.."
 
"அன்னை தந்த சீதனமோ...என்னை வெல்லும் நாடகமோ.."



4) நிலவுக்கு என்மேல் என்னடி கோபம... "சித்திரை நிலவே... அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு..."



5) ஏதோ மனிதன் பிறந்து விட்டான...."பெண்ணே தெய்வம், அன்னை கடவுள், பெருமை என்று பேசுகிறான்.... பெண் பேதைகள் தீமைகள் என்றும் அவனே மறுநாள் ஏசுகிறான்..."

"...நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்....ஆறறிவுடனே, பேச்சும் பாட்டும், அறிந்தே மனிதன் பிறந்து விட்டான்... அந்த ஆறாம் அறிவைத் தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டு விட்டான்..."


6) ஜாவ்ரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா... "அகப்பட்ட மனிதரைப் பிடிக்கிற வேலைக்கு ஆர்ப்பாட்டம் என்ன ராஜா...."
 
"பம்பம்பம்" என்பதும் அதைத் தொடரும் இசையும்...
"காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ? கழுதைக்குச் சுமக்கிற பொதி சொந்தமோ..."
 
 மிகத் தேடி எடுத்தேன்    வீடியோவை. கட் ஆகி கட் ஆகி வருவது சோகம்.



7) நேற்று வரை நீ யாரோ நான் யாரோ... "யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்"
 "உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே" 


"நேரிலே பார்த்தால் என்ன. நிலவென்ன தேய்ந்தா போகும்? புன்னகை புரிந்தால் என்ன? பூமுகம் சிவந்தா போகும்?



8) எங்கேயோ பார்த்த முகம்..."இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்...புதுநிலவோ... பூச்சரமோ... மதுமலரோ... மாணிக்கமோ..."

14.3.13

இப்படி எல்லாம் நடக்குமா?

                      
ஹலோ? எங்கள் ப்ளாக் ஆசிரியர்? 



ஆமாம். 

இன்றைக்கு போஸ்ட் எதுவும் போடாதீர்கள். 

ஏன்? 

தமிழ் ப்ளாக் கூகிள் இந்திய ஒருங்கிணைப்பு அலுவலகத்திலிருந்து, ஏகாம்பரம் பேசுகின்றேன். உங்கள் ப்ளாக் போக்கு வரத்துகளை பதிவு பண்ணுகின்ற எங்கள் கணினி, உங்கள் ப்ளாக் நண்பர்கள் : வரவுகள் : தரவுகள்: இண்டெக்ஸ் தயார் செய்துள்ளது. அதில் உங்கள் (எங்கள்) ப்ளாக் முதல் இடம் பெற்றுள்ளது. உங்கள் ஜி+, முகநூல், யாகூ, பிகாசோ, இத்யாதி கணக்குகளில், உங்கள் அலைபேசி எண்ணை கண்டு பிடித்து, அதன் மூலமாக உங்களைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றேன். 
       
அதுக்கும் போஸ்ட் எழுதாமல் இருப்பதற்கும் என்ன அய்யா சம்பந்தம்? 

அது, நீங்க போஸ்ட் எழுதுகின்ற நாட்களில், வைரஸ் ஜுரம் போல அல்லது விலைவாசி போல கவுண்ட்டர் ஓடுகிறது. எங்களால், உங்களுக்கு அதாவது உங்கள் அல்லது எங்கள் ப்ளாக் வலைப் பதிவிற்கு செய்ய நினைக்கின்ற சில மேம்பாடுகளை கவுண்ட்டர் ஓடுகின்ற நேரங்களில் செய்ய முடியவில்லை. அதனால்தான் போஸ்ட் எதுவும் போடாமல் இருக்கச் சொல்கின்றேன். 

மேம்பாடு?  நான் கேட்டேனா? 
            
நீங்க கேட்கலை. நான் ஏற்கெனவே சொன்னபடி எங்கள் கணினி இண்டெக்ஸ் பார்த்து, அதில் முதன்மை இடம் வகிக்கின்ற வலைப் பதிவிற்கு, சில மேம்பாடுகள் மற்றும் சோதனை வடிவ அமைப்புகளை அமைத்து, உங்களிடமிருந்து அவைகளின் செயல்பாடு குறித்து அபிப்பிராயங்கள் கேட்டு, மற்ற பதிவாளர்களுக்கும் அந்த மேம்பாடுகளை அறிமுகப் படுத்துவோம்.

நீங்கள் ஒன்றும் படுத்த வேண்டாம். ஏற்கெனவே இரண்டு மூன்று நாட்கள் போஸ்ட் இல்லையே ஏன்? என்று ஸ்ரீராம் என்னை அலையிலும், தொலையிலும், வலையிலும், (முகநூல்)நிலையிலும், நச்சரித்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு ஏதேனும் போஸ்ட் போடலை என்றால், என்னை டீ-பிரமோட் செய்துவிடுவேன் என்கிறார். எனவே, நான் நிச்சயம் போஸ்ட் போடுவேன். 
              
சரி. அப்படியானா ஸ்ரீராம் நம்பர் கொடுங்க. நான் அவரிடம் பேசுகின்றேன். 

கொடுத்தேன். 

**************    ***************   ***********   

ஹல்லோ ஸ்ரீராம்? 

ஆமாம். 

ஏகாம்பரம் பேசினாரா? 

ஆமாம். 

என்ன செய்யலாம்? 

அவர் சொல்வது போலவே செய்து விடப் போகின்றேன். 

அலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது. 

ஹல்லோ? ஹல்ல்ல்லோ? ????? கீங்க்க் கீங்க்க்..... மௌனம். 

மீண்டும் ஸ்ரீராமை அலைபேசியில் அழைத்தால், "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது." 
             
பிறகு இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை அதே முயற்சி, அதே போன் குரல், அதே வாசகம். இந்த நாடகம் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நடந்தது. 

அப்பொழுது, தொலைபேசியில் ஒரு அழைப்பு. 

இருங்க அது யார் என்ன என்று கேட்டுவிட்டு வந்து, பிறகு பதிவைத் தொடர்கின்றேன்.  
------------------
               
(பிறகு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் பதியுங்கள்) 
                        

11.3.13

அலுவலக அனுபவங்கள் - பசவப்பா

                   
பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. எங்கள் அலுவலகம் எப்போதுமே ஜாலியான குடும்பம் போல இருக்கும். சண்டைகளும் இருக்கும். கிண்டல் கேலிகளும் இருக்கும்.
         
வேளாண் துறை அலுவலகம் அது.   ஆல் இந்தியா ரேடியோவில் இவர்கள் அலுவலகம் பங்கு பெறும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. வேளாண்மை சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் போல இருக்கட்டும் என்று பேசி முடிவெடுத்தார்கள்.
               
டைரக்டர் உள்ளே வரும்போதே உற்சாகமாக வந்தார். எல்லோரையும் ஆபீசின் மெயின் ஹாலில் கூட்டினார். 


                                                                                    

அந்தக் காலத்தில் ரேடியோவில் வருவது பெரிய கவரேஜ். எனவே அன்று முழுவதும் டிஸ்கஷன் நடந்தது. யார் யார் என்னென்ன பேசுவது என்று ஒதுக்கிக் கொண்டார்கள்.

டைரக்டர் சொன்னார். "யார் யார் என்னென்ன பேச வேண்டும் என்று குறித்துக் கொடுத்திருக்கிறேன். நான் உங்கள் பெயர் சொல்லி உங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கும் விஷயத்தைச் சொல்லி, அது குறித்து என்ன நினைக்கறீங்கன்னு கேட்பேன். நீங்கள் பதில் சொல்வது போல நேச்சுரலா படிக்கணும்... ரிஹர்சல் நாளைலேருந்து பார்த்துடுவோம்.." என்றார். 

                                         

 

அவரவர்கள், அவரவர் பேப்பரை வைத்துக் கொண்டு பேசிப் பழகினார்கள். டைரக்டர் இன்று உற்சாகமாக இருந்தாலும் என்றுமே அவர் டெரர். கோபம் வந்து விட்டால் வாயில் சரளமாக வார்த்தைகள் வந்து விழும்.

ரிஹர்சலில் டெஸ்பாட்ச் கிரிஜா நிறையத் திட்டு வாங்கினாள். பசவப்பாவுக்கு தமிழ் வராது. வடநாட்டு நடிகை தமிழ் பேசுவது போல எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டிருந்தான்.

மேனஜர் குருநாதன் தனி டைப். யார் லீவு போட வேண்டி வந்தாலும் அவரிடம்தான் போவார்கள்.

"சார்... நான் நாளையும் நாளை மறுநாளும் லீவு..."

"சரி.."

"பில் போட எல்லாம் ரெடியா வச்சிருக்கேன்..."

"சரி..."

எந்த சீட்டாக இருந்தாலும் அவர்கள் லீவு போட்டால் அவர்கள் சீட்டில் அமர்ந்து அங்கு பெண்டிங்கில் இருக்கும் வேலையை குருநாதன் முடித்து விடுவார். மிக நல்லவர். அவரிடம் ஒரே ஒரு குறை, அவரின் குசும்பு. சாரி குறும்பு!

ரெகார்டிங் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது...பசவப்பா குணசேகரை நெருங்கினான்.

"ஒரு ஹெல்ப் குணா... ரெகார்டிங் அப்போ டைரக்டர் என்னைக் கேள்வி கேட்கும்போது என் காலில் லேசா சுரண்டு...இல்ல தட்டு... காது சரியாக் கேட்காது. தமிழ் வேற அவ்வளவு தெரியாது..."


                                               

குணா 'சரி' என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் குரு. என்னை நிமிண்டி ஓரமாக அழைத்துச் சென்றார்.

"ரெகார்டிங்க்ல பசவப்பாவைப் போட்டுப் பார்க்கறோம். அவனை நான் சொல்ற நேரத்துல நீ சொரண்டிடு" என்றார்.

"எதுக்கு சார் பாவம்..."


                                     


"அட.. சும்மா தமாஷ்தானே... விடு"

அந்த நாளும் வந்தது. வானொலி நிலையம் சென்றோம். ரெகார்டிங் ஆரம்பித்தது. டைரக்டர் இறுக்கமாக இருந்தார். இரண்டு பேர் கேள்வி பதில் முடிந்தது. அடுத்ததாக ஏதோ ஒரு விஷயம் சொல்லி, "நீங்க என்ன நினைக்கறீங்க கிரிஜா" என்றார்.

சரியாக இந்த சமயம் குருநாதன் எனக்கு ஜாடை காட்ட, பேனாவைக் கீழே போட்டு விட்டு அதை எடுக்கும்போது யதேச்சையாகப் படுவது போல பசவப்பா காலில் சுரண்டி விட்டேன்.

திடுக்கிட்டுச் சுதாரித்த பசவப்பா பேப்பரை எடுத்துக் கொண்டு ராகமாக ஒப்பிக்க ஆரம்பிக்க, பதில் சொல்லத் தொடங்கிய கிரிஜா குழம்பிப் போய் எங்கள் டைரக்டர் முகத்தைப்பார்க்க, அவர் கை காட்டி ரெகார்டிங்கை நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டியவர், பசவப்பாவை நோக்கிக் கை நீட்டி ஜாடை செய்தபடி "*&^%***&^$#*#$%&*(&^%#)(*&&^***... " என்று ஆரம்பித்து.....


நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். பசவப்பா "சாமி... காலை வாரி வுட்டிட்டியே" என்றான்.


                                       

"யோவ்... நான் என்ன செஞ்சேன்... நீ குணா கிட்டதான சொல்லியிருந்தே...கீழ விழுந்த பேனாவை எடுக்கும்போது கை பட்டுடுச்சி...பசவப்பா.. உனக்குத் தமிழ்தான் தெரியாது.. உன் பெயர் கூடவா தெரியாது? கிரிஜான்னுதான சொன்னாரு?"

"அதானே" எல்லோரும் கோரசாகச் சொல்ல, பசவப்பா நொந்து போய்க் கிளம்பிச் சென்றான்.          

           
படங்கள் : நன்றி இணையம்