17.10.09

வாழ்க்கையில் முன்னேற ... 006


அரை நிமிடம் படியுங்க, இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்க; உடனே கடைபிடியுங்க.
பாடம் ஆறு: எங்கள் Blog வலைப் பதிவில், சென்ற வாரம் நாங்கள் நடத்திய வோட்டெடுப்பு - 'தீபாவளிக்கு நீங்கள் வாங்குவது' -- என்ற தலைப்பு - அதில் வழக்கமான தீபாவளி சமாச்சாரங்களோடு - போட்டி போட்டு, அதிக வோட்டுகள் வாங்கிய ஒரு வார்த்தை "வாழ்த்து". அதுதான் இன்றைய பாடம். வாழ்த்து பெறுங்கள்; வழங்குங்கள். எங்கெல்லாம் வாழ்த்துப் பெறமுடியுமோ அங்கெல்லாம் வாழ்த்து பெறுங்கள். எங்கெல்லாம் வாழ்த்து வழங்க முடியுமோ அங்கெல்லாம் வாழ்த்து வழங்குங்கள். ஆத்மார்த்தமாக வணங்கிப் பெறுங்கள். மனதார - எல்லோர் காதுக்கும் கேட்கும்படி, வாழ்த்துங்கள். நான் நடை பயிலும் தெருக்களில் - ஏதேனும் கல்யாண மண்டபம் கண்ணில் பட்டால், அங்கு திருமணம் நடைபெறும் நாட்களில், வாசலில் மணமகன் பெயரும், மணமகள் பெயரும் - கண்ணில் படும்படி வைத்திருப்பதைப் படிப்பேன். படித்துவிட்டு, அவர்கள் இருவரும், பன்னெடுங்காலம் எல்லா வளமும் பெற்று, ஆரோக்கியமாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்று மனதிற்குள் வாழ்த்தி என் நடையைத் தொடருவேன். நீங்களும் இதை செய்து பாருங்கள்.
(தொடரும்)

தீபாவளி தீபாவளிதான்..

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் போல, அன்று ரிலீஸ் ஆகும் புதுப் படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்ப்பது போல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுவதும் தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு பக்கத்திலும் அவரவர் நினைவுப் பதிவை படிக்க வேண்டியதும் அவ்வண்ணமே.....!

சில விஷயங்கள் பொதுவானவை. சில பிரத்யேகமானவை. அவரவர்க்கு அவரவர் அனுபவம்.

நினைவு தெரியாத வயதில் பெற்றோரின் கட்டாயத்துக்காக எழுந்து, கண்களில் கண்ணீருடன் எண்ணெய் தேய்த்துக் குளித்து, பயந்து பயந்து ஊசி வெடியில் தொடங்கி, பிறகு சிறிது சிறிதாக பெரியவர்களாகத் தொடங்கும் போது வெடியின் அளவும், வெடிக்கும் ஸ்டைல் மாற செய்யும் பந்தாக்களின் அளவும் கூடிக் கொண்டே போகும்.

முதலில் நம் வீட்டு வாசலில் நண்பர்கள் வெடித்தால் உரிமைப் பிரச்னையாகப் பார்க்கப் பட்டு, பிறகு குப்பை விழும் அளவில் மானப் பிரச்னை இருக்கிறது என்பதை உணரத் தொடங்கிய கால கட்டத்தில் நண்பர்களை நம் வீட்டு வாசலில் 'சேர்ந்து வெடிக்கலாம் வா' என்று சீனப் பிரதமர் போல அழைத்து வெடிக்கத் தொடங்குவோம். சூட்சுமம் புரிந்த நண்பர்கள் மாநாடு போட்டு அடுத்த தீபாவளியில் அவசரத் தீர்மானம் போட, பிறகு எல்லார் வீட்டிலும் 'சேர்ந்து வெடிப்பது' என்ற தீர்மானம் ஒருமனதாய் நிறைவேறும்!

குப்பை மானம் மலையேறும் நாளும் உண்டு. வீட்டு வாசலில் வெடி வெடித்து சற்றே சம்ப்ரதாயத்தை முடித்த உடன், சிலபல வெடிகளை பையில் திணித்துக் கொண்டு நண்பர்கள் வீடு ஒவ்வொன்றாக சென்று, ஜமா சேர்ந்து வீதி வலம் கிளம்புவோம். நண்பர்களுக்குள் சொல்லிக்கொள்ளப் படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. நண்பர்களின் சகோதரிகளைப் பற்றி யாரும் பேச மாட்டோம். அவர்களிடம் சகஜமாக நாங்களும் சகோதர பாவத்தில்தான் பேசுவோம். ஒவ்வொரு தெருவிலும் சில வீடுகள் அருகில் நின்று எங்கள் ஜமா இளைப்பாறும். 'பேசி'க் கொண்டிருப்போம். காத்திருந்தது வீண் போகாது! அகாரியமாய் வெளிப் படும் மின்னல் தேவை இல்லாத குப்பையை வெளியே கொட்டும், அல்லது ஒரு மத்தாப்பூவோ, புஸ் வாணமோ விடும். ஜமாவில் காத்திருந்த சம்பந்தப் பட்ட நண்பன் அல்லது ஜமாவே வெடி வெடிப்பதில் லேட்டஸ்ட் பயங்கர டெக்னாலஜியை அரங்கேற்றும். அவை ஒரு சிறிய மறைமுக இதழோரக் குறுஞ்சிரிப்புடன் acknowledge செய்யப் படும்!

காசு இல்லாத காரணத்தால் கொண்டாடாத தீபாவளி ஒன்றிரெண்டு வரும். அப்போது நண்பர்கள் மத்தியில் வீட்டில் யாராவது தெரியாத அல்லது இல்லாத ஒரு உறவினர் சாகடிக்கப் படுவார். காலை எல்லார் வீட்டிலும் வெடி சத்தம் கேட்கும்போது நம் வீட்டில் செய்ய முடியாத துக்கம் வார்த்தைகளாய் வெளிப் பட்டு அப்பா, அம்மாவைத் தாக்கும். அவர்கள் எந்த மாதிரி வேதனையில் இருந்திருப்பார்கள் என்று அப்போது உணர முடியாத பருவம்.

இப்போது அவைகளை நினைத்துப் பார்க்கும்போது சுகமான சந்தோஷங்கள், சொல்ல முடியாத சோகங்கள் மனதைக் கவ்வினாலும், நம் வீட்டுக் குழந்தைகள் நாம் பெற்ற இன்பங்களை பெற வேண்டும் என்று எல்லாம் செய்யும்போது நம் நினைவுகள் பின்னோக்கிப் போவதை தடுக்க முடியவில்லை. நாங்கள் அந்தக் காலத்தில் இருந்தது ஐநூறு வீடுகளுக்கும் மேல் இருந்த வீட்டு வசதிக் குடியிருப்பு. ஆட்கள், நண்பர்கள், பொழுது போக்குகள் அதிகம். இப்போது கட்டிடக் காடுகளாகிவிட்ட (வார்த்தை உபயத்துக்கு நன்றி ஹேமா!) இந்த நாளில் என் மகன்களுக்கு பக்கத்தில் வீடுகளும் குறைவு. கவனத்தை திசை திருப்ப டிவி என்ற மிகப் பெரிய அரக்கன் இயற்கை சந்தோஷங்களை பறித்து விடுகிறது...

தீபாவளி தீபாவளிதான்...

16.10.09

நாகையில் தீபாவளி !

நாகையில் தீபாவளி !
அது என்னமோ எந்த பண்டிகை வந்தாலும் என்னால் அந்த பண்டிகையை நாகையில் கொண்டாடியதை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இது எனக்கு மட்டும் ஏற்படும் கிளர்வா அல்லது எல்லோர்க்கும் பொதுவான நிகழ்வா?பொருளாதார ரீதியாக இப்பொழுது வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் ஒப்பிட்டுப் பார்த்தால்அந்த கைதான் தாழ்கிறது.
தீபாவளி அடுதத மாதம் என்பதற்கு முன்னமே மனம் தீபாவளியை ஒட்டிய நிகழ்வுகளில் பதிந்து அதை எவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவது என்று திட்டம் தீட்டுகிறது. துணி வாங்கவேண்டும், அதை ஷ்யாம் வீடடு எதிரில் திண்ணையில் கடை வைத்துள்ள ராஜா டெயிலரிடம் கொடுத்து எப்படியாவது இந்த வருஷ பண்டிகைக்குள் தைத்து வாங்கவேண்டும். பட்டாஸூகள் வகை வகையாக வீராசாமி கடையில் வாங்கவேண்டும். இதற்கு ஆகும் செலவுக்கு வீட்டில் கெஞ்சி அல்லது அடம் பிடித்து அனுமதி வாங்கவேண்டும்,எவ்வளவு காரியங்கள்.
நாகையில் ரெடிமேட் துணி வாங்க பெரிய கடைகள் இரண்டுதான். நாவல்டி ஸ்டோர் மற்றும் கீதா ஸ்டோர். ரெடிமேட் ஷர்ட் வாங்க என் பாட்டி ஒப்புத்துக்க மாடடார்கள். வளரும் பையன் துணி வாங்கி தைத்தால்தான் ஆண்டுவரும் என்ற ஒத்தை வார்த்தையில் எங்கள் "ரெடிமேட் ஸ்லாக்"ஆசை புஸ்வாணமாகிவிடும்! ராவுஜி வாங்குகிற காசுக்கு வஞ்சனையில்லாமல் தொள்புள என்று நீள்மாக அகலமாக ஷர்ட்டும் அரை ட்ராயரும் தைத்து கொடுப்பார். பத்தாவது படிக்கும்போதுதான் என் ரெடிமேட் ட்ரஸ் ஆசை நிறைவேறியது!
அடுத்து பட்டாஸ். பட்டாஸ் கடைகள் தீபாவளிக்கு பத்து நாள் முன் தான் வரும். வீராசாமி மெடிகல் ஷாப் பட்டாசு கடையாக உருமாறும். அந்திகடைக்கு எதிரில் ஒரு கடை, பெரிய கடைத் தெரு, சக்தி விலாஸ் பஸ் ஆபிஸ் பக்கம் ஒன்று என கடைகள் மெதுவாக சூடு பிடிக்கும். நானும் கிருஷ்ணனும் ஆளுக்கு ஒரு லிஸ்ட் தயார் பண்ணி எவ்வளவு விலை என பட்டியல் இடுவோம். தினமும் அதில் வகை வாரியாக மாற்றங்கள் செய்வோம். பாட்டி பங்கு, அப்பா பங்கு எனக் கோரிக்கைகள் , அழுகை, ஆர்பபாட்டம் என்று எல்லாவிதமான் முயறசிகளும் பட்டியலின் மதிப்பை மாற்றும். கடையில் ஷேர் மார்கட் மர்திரி பட்டாஸ் விலை மாறிக்கொண்டே இருக்கும். வாயில் வந்த விலைதான். ஒரு தீபaவளிக்கு முன் தினம் வீராசாமி கடையே ப்ற்றிக்கொண்டு தீபாவளி கொண்டாடியது!
யார் வீட்டில் அதிக வெடி குப்பை சேர்கிறது என்ற போட்டி எல்லா காலத்திலும் உண்டு. அதிக குப்பைகள் வருகிற மாதிரியான வெடிகள் அதிக அளவில் வாங்குவோம். பட்டாஸ் வாங்கி நமர்க்காமல் பாதுகாக்க வெய்யிலில் வைத்து அல்லது அடுப்பின் மேல் ஜாக்கிரதையாக வைத்து சூடு பண்ணி , கோழி அடை காப்பது மாதிரி காபந்து பண்ணுவது ஒரு சுகானுபவம். தீபாவளி சமயம்தான் புயலும் தன் தலையை நீட்டும். ஒரு மாதிரி டென்ஷன்தான்!
நாகை சிறிய ஊர். அங்கு வேலை வாய்ப்புகள் குறைவு. அதனால் வெளி ஊரிலிருந்து வரும் பணம்தான் பெருமளவில் புழங்கும். விவசாய வருமானம் மிக குறைவு. பண்டிகைகள், நாகையிலிருந்து வெளியூரில் வேலைக்காக சென்றவ்ர்கள் அனுப்பும் பணத்தில் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்காக ஊருக்கு வரும் மாணவர்கள், இளைஞ்ர்கள், இந்த ஊரில் பெண் எடுத்த ஆடவர் என திரளாக வருபவர்கள் நாகை கடைகளில் வியாபாரம் செய்வர். தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்பே ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் அலை மோதும்.
தீபாவளிக்கு புது சினிமா வரும். முதல் நாள் முதல் ஷோ... பெரிய விஷயம். தீபாவளிக்கு முதல் நாள் இரவு அனேகமாக் எல்லார வீட்டிலும் வெங்காய சாம்ப்பார், உருளைக்கிழங்கு கறி என அமர்க்கள்ப்படும். காலை 2 மணிக்கே ஊர் எழுந்துவிடும். மங்கிய லைட் ஒளியில், விறகடுப்பில் அண்டாவில் வென்னீர் போட்டுக் குளியல். புதிய ட்ரஸ் அணிந்து ஸ்வாமி நம்ஸ்காரம் பண்ணி கையில் மத்தாப்புடன் வாசலில் வாண வேடிக்கை ஆரம்பிப்போம். ரேடியோ கூட தொந்தரவு செய்யாத காலத்தில் ஒரே நோக்கம் வெடி வெடிப்பதுதான். மற்றவர் வீட்டிற்கு செல்வது என்ற கலாசாரம் நகரத்தின் பாதிப்புதான். தீபாவளியை நிறைய சத்தத்துடன், நிறைய புகையுடன் நிறைந்த மனத்துடன் கோலாகலாமாகக் கொண்டாடுவோம்.

with love and affection,

ரங்கன்

எங்கள் Blog ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும், தினமும் படிப்பவர்களுக்கும், அவ்வப்போது கமெண்ட் எழுதி எங்களை ஊக்கமும் உற்சாகமும் அடைய வைப்பவர்களுக்கும், 'எங்கள்' முன்னேற்றத்தில் என்றும் ஈடுபாடு கொள்ளும் உங்கள் எல்லோருக்கும், மேலும் சக பதிவர்கள் அனைவருக்கும் 'எங்கள்' இதயங்கனிந்த, இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு வளமுடன்! - ஆசிரியர் குழு.

வாழ்க்கையில் முன்னேற...005

அரை நிமிடம் படியுங்கள் இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்கள்... உடனே கடைபிடிங்க.....


பாடம் ஐந்து: இன்றைக்கு குடிக்க வேண்டிய தண்ணீர் அளவின் முதல் தவணையை குடித்து விட்டீர்களா...பல் தேய்க்கும்போதே இன்றைக்கு யார் யாருக்கு பிறந்தநாள், விசேஷ நாட்கள் என்று மனதில் ஓடவிட்டு வாழ்த்து சொல்லத் தயாராகுங்கள்..
(தொடரும்)

15.10.09

வினையாகும் விளையாட்டு

நேற்று செய்திகளிலும் இன்று செய்தித் தாளிலும் BCCI ஸ்ரீசாந்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை வந்திருந்தது. கொடுக்கப் பட வேண்டிய எச்சரிக்கைதான்...எனக்கும் தோன்றும் இவர்கள் எல்லாம் மைதானத்தில் ஆடுகிறார்களா அல்லது போர்க்களத்தில் சண்டை இடுகிறார்களா என்று!
நம்மூர் ஸ்ரீசாந்த் ஹர்பஜன் ஆகியோர் விக்கெட் எடுத்த உடன் செய்யும் சேஷ்டைகள் அருவெருப்பையும் வெறுப்பையும் உண்டுபண்ணும். வரகுணபாண்டியன் சொல்வதுபோல (!) 'ஆட்டக் காரர்'களிடையே ஆக்ரோஷம் தேவைதான்...ஆனால் அமைதி மிக அவசியம் அல்லவா? ஏதோ செயற்கரிய செயல் செய்து விட்டது போல கையை மண்ணில் குத்தி, குதித்து, ஆட்டமிழந்த ஆட்டக்காரரை நோக்கி வெறுப்பான பார்வையால் மண்டையை ஆட்டி ஆட்டி இவர்கள் செய்யும் செயல்கள் ஆட்டம் பார்க்கும் சுவாரஸ்யத்தையே கெடுத்து விடுகின்றன.
மற்ற நாட்டு பௌலர்களும் பந்து வீசி விட்டு பக்கத்தில் வந்து முறைத்து விட்டுப் போவதுண்டு... முன்னால் ஆஸ்திரேலிய பௌலர் 'ப்ருஸ் ரீட்' என்று ஒருவர் மூச்சுக்குள் திட்டிக் கொண்டே பந்து வீசுவார். ஆட்டத்தை விளையாட்டாகப் பார்க்காமல் ஆத்திரக் களமாக மாற்றும் இவர்களை எல்லாம் என்னென்பது? நாகரீகமாக, விளையாட்டு உணர்வுடன், நட்புடன் விளையாட என்றுதான் பழகுவார்களோ? இதற்கு நம் பத்திரிகைகளையும் சொல்ல வேண்டும். ஆக்ரோஷமாகப் பந்து வீசினார் என்று இதை எல்லாம் கொண்டாடுவதால் வரும் வினை இது.

அந்தக் காலத்தில் ரவி சாஸ்திரி, கபில் தேவ், மதன்லால் போன்றோர் பந்து வீசிவிட்டு விக்கெட் விழுந்தவுடன் சிறிய சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் காட்டுவார்கள். பார்க்க கௌரவமாக இருக்கும். இப்போது? வெறுப்பை சம்பாதிக்காமல் அடுத்தவர்களுடைய நட்பை சம்பாதிப்பது எப்படி என்று இவர்களுக்கெல்லாம் வகுப்புதான் எடுக்க வேண்டும்...
சமீபத்தில் டென்னிசில் வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவர் நடுவரைப் பார்த்து கொலை மிரட்டலே விடுத்தார். பிற்பாடு மன்னிப்பு கேட்டார் என்றாலும் அவர்கள் நாகரீகம் அங்கு தொலைந்தது தொலைந்ததுதானே..ஆனால் அந்த மன்னிப்பெல்லாம் கூட இவர்கள் கேட்க மாட்டார்கள். கோடி கோடியாகப் பணம் கொட்டும்போது பணிவு எப்படி வரும்? தவறு செய்யலாம். தப்புதான் செய்யக் கூடாது.. ஏனென்றால்,
தவறு என்பது தவறி செய்வது...தப்பு என்பது தெரிந்து செய்வது...தவறு செய்தவன் வருந்தி ஆகணும். தப்பு செய்பவன் திருந்தி ஆகணும்

வாழ்க்கையில் முன்னேற ... 004


அரை நிமிடம் படியுங்க, இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்க. உடனே கடைபிடியுங்க.
பாடம் நான்கு: நீங்க தினமும் செல்ல வேண்டிய - அல்லது அடிக்கடி செல்ல வேண்டிய, உங்கள் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள இடங்கள் - ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கின்ற எந்த இடமாக இருந்தாலும் - அங்கு நடந்து சென்று திரும்ப நடந்து வாருங்கள். வாகனங்களைப் பயன்படுத்துவதை இந்த இடங்களுக்கு, இயன்றவரையிலும் தவிருங்கள். 
(தொடரும்)

14.10.09

மாலி புனிதப் பயணம் திருச்சி அண்ட் சுற்றுப்புறம்


நான்,என் மனைவி, மனைவியின் தங்கை, அவர் கணவர் ஆகிய நால்வரும் Four Wheeler இல சென்ற வாரம் திருச்சி பயணம் சென்றிருந்தோம்.

என் மனைவி, திருச்சியில் படிக்கும் பொழுது வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் திருவானைக்கோவிலுக்கு நடந்து சென்று அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்து பள்ளியறை பால் பிரசாதம் பெற்று வருவேன். அதுபோல மறுபடியும் தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறியதால் அதேபோல் வெள்ளிக்கிழமையன்று திருவானைக்கோவிலில் அகிலாண்டேஸ்வரியை தரிசித்து பள்ளியறை பால் பிரசாதம் பெற்று பருகி மகிழ்ந்தோம்.

அடுத்தநாள் புரட்டாசி சனிக்கிழமை.பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தரிசனம். கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் Special permission பெற்று நன்றாக தரிசனம் செய்தோம்.
மூன்று நாட்கள் தங்கி திருச்சியை சுற்றியுள்ள 30 கோவில்களை தரிசனம் செய்தோம். First timevisit சிருவாசேரி மதுரகாளி, திருப்பட்டூர், Thirupainjili, திருவாசி, ஒயகொண்டான்மலை, கரூர் பசுபதி நாதர்கோவில்,Thaanthonrimalaiperumaal போனஸ்- முக்கொம்பு காவேரிகுளியல். காவேரியில் தண்ணீர் நிரம்ப ஓடுகிறது. கல்லணை நிரம்பி 16 கண்மாய்களும்திறந்து தண்ணீர் பாய்ந்து செல்லும்காட்சி கண்ணுக்கு விருந்து.
In addition to Trichy, இந்த தடவை கரூர் சென்றிருந்தோம்.
திருச்சியில் இருந்து கருர்வரை முக்கால்வாசி தூரம் தண்ணீர் நிரம்பிய அகண்ட காவேரியை ரசித்துக்கொண்டு கார்பயணம் சுகமாக இருந்தது,
The highlight of our tour is கருரின் அருகில் இருக்கும் நெரூரில் உள்ள "சதாசிவ ப்ரேம்மேந்திரரின் ஜீவா சமாதி" சதாசிவ ப்ரேம்மேந்திரரின் சரித்திரம் கேட்டால்மிகவும் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. ப்ரேம்மேந்திரர் தான் உயிருடன் சமாதி அடைவதற்கு Mysore மகாராஜா, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மகாராஜாக்கள் வந்து குகை அமைத்து உதவினார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. அவர் சமாதி மீது அவர் கூறியபடி 9 வது நாளில் வில்வமரம் தோன்றியதாம்.அந்த வில்வமரத்தின் அடியில் தான் தற்பொழுது பூஜை நடக்கிறது. நாங்கள் காலையில் சென்றபொழுது பூஜை நடந்து கொண்டிருந்தது. பூஜை முடிந்தவுடன் எல்லோருக்கும் quality கேசரி, பொங்கல்,சட்னி சாம்பார் என்று வேண்டும் அளவு பிரசாதம் வழங்கப்பட்டது
பிரசாதம் உண்டபின் எங்களுக்கு தெரிந்த ப்ரேம்மேந்திரரின் சில பாடல்களை ( மானச சஞ்சரரே, சர்வம் ப்ரேம்மமயம்,ஸ்மரவாரம வாரம், பஜரேகோபாலம், பிபரே ராமரஸம், ப்ருகி முகுந்தேதி ராசனே ) மனது நெகிழ பாடி ப்ரேம்மேந்திரரின் அருளுடன் சென்னை வந்து அடைந்தோம்,

அன்புடன்
மாலி.