16.6.14

திங்க கிழமை 140616 :: சொல்லுங்கள் வெல்லுங்கள்.


ஐம்பது ரூபாய்க்குள் (கடையில் தின்பண்டமாக வாங்காமல்.) செலவு செய்து நான்கு பேர் காலை உணவு வயிறார சாப்பிடவேண்டும். 

எங்களுக்கு எழுதியனுப்புங்கள். அல்லது கமெண்ட் செய்யுங்கள்.   போட்டிக்கு வரும் கமெண்ட்கள் உடனே வெளியிடப்படாது. மற்ற கமெண்ட்ஸ் சற்று நேரம் கழித்து வெளியிடப்படலாம்! 

வருகின்ற ஞாயிறு வரையிலும் கால அவகாசம். 

வாழ்த்துக்கள்! 
      


14.6.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


 
 
 
2) இது ஒரு சாதனை. அதுவும் இலவசச் சாதனை! மருத்துவர் பலராமன்.
 
 


3) பரத், ஆட்டிஸ குழந்தையாமே..?’னு அப்போ கேட்டவங்களுக்கும், வெளிப்படையா கேட்கலைனாலும் எங்களை வேடிக்கையா பார்த்தவங்களுக்கும் இப்போ பதில் சொல்லத் தோணுது. என் பிள்ளை யையும் மத்த பிள்ளைகள் மாதிரியே படிக்க வெச்சு, வேலைக்கு அனுப்பிட்டேன். தன் சம்பளத்துல எனக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அழவெச்சுட்டான் என் பையன்'' என்றபோது, தன் அம்மாவை அன்புடன், நன்றியுடன் கட்டியணைத்து, அதுவரை பேசாத அத்தனை வார்த்தைகளையும் அந்த ஒரு நொடியில் புரியவைத்தார் பரத். சித்ரா சுப்பிரமணியம் 
 
 
 
இவரின் பாஸிட்டிவ் விடாமுயற்சி நமக்கு ஒரு பாடம்.
 
 
 
5) மானுட சேவையில் மாலதி ஹொல்லா 
 
 
 
6) சுமார் 2600 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கும் வேலு
 
 
 
7) இந்தச் செய்தியில் பாஸிட்டிவ் ராஜேந்திரனும் அவர் மனைவியும்தான்.
 
 
 
8) இறைவனுக்குச் செய்யும் தொண்டு. ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை குழுவினர்.
 
 
 
9) சோலார் பைக். மதுரை மாணவன் கார்த்திக் 
 
 

10) விடா முயற்சிக்கு கிடியோன் கார்த்திக்.
 
 
 
11) சோகமான பாஸிட்டிவ் செய்தி. ஆனாலும் இவர் தந்தையின் நம்பிக்கை பொய்க்காமல் கிரண்குமார் உயிருடன் மீண்டு வர நாமும் பிரார்த்திப்போம்.




12) பினோ ஜெபின் 



11.6.14

தற்கொலை..... ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்...! )



                                                            
                                                                         

"வாங்கிட்டேண்டா.. இந்த சாயந்திரம்தான் எனக்குக் கடைசி.  ராத்திரி குடிச்சுடுவேன்.  உன்னை கடைசியா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்"

கையில் டிக் 20 டப்பாவுடன் சிரித்தான் நண்பன்.

பகீரென்றது.

'மறந்திருப்பான், சரியாகியிருக்கும்' என்று நினைத்தோமே...
ரண்டு நாள் முன்பு...

"வலிக்காம சாகறது எப்படிடா?"

நண்பன் கேட்டபோது கிண்டலாகக் கேட்டேன், "ஏன்? நீ சாகப் போறியா?"

"ஆமாம்... எனக்குத்தான் கேட்கிறேன்"  அவன் குரலின் தீவிரமும், கலங்கிய கண்களும் என்னை பதட்டமடைய வைத்தன. 

"ஏண்டா பாவி?"
                                           
நீளமாக அவன் சோகத்தைச் சொன்னான்.  இப்போது கேட்க வேடிக்கையாக இருக்கும்.  அந்தப் பதின்ம வயதில் அவன் மிகவும்  கஷ்டப்படுதாகவே தோன்றியது, என்றாலும் தற்கொலை என்பது சரியில்லை, அந்த அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை என்றும் தோன்றியது.  அதை அவனிடமும் சொன்னேன்.

கொஞ்சம் விவாதம் நடந்தது.  பெரும்பாலான நேரங்கள் மௌனம் காத்தான்.  அதுதான் உறுத்தியது.  கிளம்பிச் சென்று விட்டான்.  மறுநாள் காலை அவனைப் பள்ளியில் பார்த்தபோது சாதாரணமாகத்தான் இருந்தான்.

இப்போது இப்படி வந்து நிற்பவனை என்ன செய்ய? 

மீண்டும் கொஞ்ச நேரம் அறிவுரை சொல்லிப் பார்த்தேன்.  அண்டை வீட்டுக்காரர்கள் தாண்டிச் செல்லும் நேரம் மௌனம் காத்தோம்.  விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் கவனிக்கும் நேரமும் அமைதி காத்தோம்.

"விளையாடறீங்களா.... விளையாடுங்க... விளையாடுங்க... இதைப் பார்க்க இன்னிக்கி நான் இருக்கேன்.." என்றான் பூடகமான புன்னகையுடன், அந்தக் குழந்தைகளிடம்.

"ஏய்" என்று அதட்டினேன்.  பின்னே?   நாளை இந்தக் குழந்தைகள் சாட்சி சொல்ல மாட்டார்களா?  அப்புறம் என் நிலை?!!

ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வர்றியா" 

"சரி... ஆனால் இவங்க கிட்ட ஏதும் உளறாமல் வெய்ட் பண்ணு"

மேலே போய் தண்ணீர் கொண்டு வந்தபோது கழுத்தையும், நெஞ்சையும் தடவிக் கொண்டிருந்தான். 

"எரியுதுடா"  அவன் கையில் பார்த்தேன்.  டப்பா காலியாக இருந்தது. 

"அடப்பாவி!" சுற்றுமுற்றும் பார்த்தேன்.  கீழே எங்காவது கொட்டிவிட்டு சும்மா பயமுறுத்துகிறானோ?  

என் சந்தேகம் புரிந்தது போல அருகில் வந்து வாயை ஊதினான்.  மூட்டைப்பூச்சி மருந்து வாசனை அடித்தது. 

                                                        
தண்ணீரை வாங்கிக் குடித்தான்.  நான் அவன் தூக்கிப்போட்ட டப்பாவைக் கைகளால் தொடப் போனவன், முடிவை மாற்றிக் கொண்டு (கைரேகை பதியக் கூடாதாம்) செருப்புக் காலால் அதை உதைத்துத் தள்ளிக் கொண்டுபோய் தூரத்தில் ரோடுக்கு அந்தப்பக்கம் தள்ளி விட்டேன். 

இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடனே நான் ஏன் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகவில்லை என்று புரியவில்லை.

அவன் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்ல மாட்டேன்.  அது நிச்சயம்!  முன் அனுபவம் இருக்கிறது.  வேறு எதாவதுதான் செய்ய வேண்டும். 

அவன் அப்பா நீதித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.  இந்த என் நண்பன் இதற்குமுன் ஆறேழு முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறான்!  முதல்முறை ஓடும்போதுதான் எங்களுக்கு அது அதிர்ச்சி.  அப்புறமப்புறம் அது சாதாரண செய்தியாகி விட்டிருந்தது.

முதல்முறை அவன் வீட்டை விட்டு ஓடிய மறுநாள் என்னைத்தான் சந்தித்தான்.  உறவினரை பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏற்றிவிட்டுத் திரும்பியபோது திருவள்ளுவர் தியேட்டரிலிருந்து வெளிவந்த கும்பலில் இவனும் இருந்தான். என்னைப் பார்த்து விட்டு சைக்கிளுடன் வேகமாக மறைய முயன்றவனை நானும் சைக்கிளில் வந்திருந்ததால் பின்னாலேயே விரட்டி மேம்பாலம் அருகில் மடக்கிப் பிடித்தேன்.  ஏதோ காரணம் சொன்னான். அந்த நேரம் பார்த்து என் அண்ணனின் நண்பர் ஒருவர் எதிர்ப்பட, அவருடன் கலந்து பேசி அவனைச் சமாதானப்படுத்தி, அவனைக் கொண்டுபோய் அவன் வீட்டில் விட்டோம்.



                                                             
                                                 

இரண்டாவது முறை அவன் ஓடிய காலையில் அவன் அப்பா என் வீடு தேடி வந்து விட்டார்.  "இதோ பார்! நீதான் அவன் க்ளோஸ் ஃபிரெண்ட். என்ன செய்வியோ எது செய்வியோ தெரியாது...  இன்று மாலைக்குள் அவனை எங்கிருந்தாவது தேடிக் கண்டுபிடித்து வீட்டில் ஒப்படைக்காவிட்டால் உன்னைப் பிடித்து உள்ளே போட்டு விடுவேன்" என்று அவர் பயமுறுத்தியதில், நான் பீதி + பேதியாகி பள்ளி செல்லாமல் அவனைத் தேடியலைந்தேன்.

அவன் எங்கெங்கு செல்வான் என்று தெரியும்.  ஒவ்வொரு இடமாகத் தேடினேன்.  அவனின் தனிப்பட்ட நண்பர்களை விசாரித்தேன்.  முக்கால் நாள் செலவழிந்திருந்தபோது அகப்பட்டு விட்டான்.  அவனே வீடு திரும்பும் எண்ணத்தில் இருந்ததால்,  அவனைக் கொண்டு விட்டு வந்து விட்டேன்! 

"இனிமேல் ஏதாவது ஆச்சுன்னா (அதாவது இவன் மறுபடி ஓடினான்னா என்று அர்த்தம்!) நான் பொறுப்பில்லை.  எனக்குத் தெரியாது.  உங்கள் பையனை அவன் எதிர்பார்க்கும்படி வைத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு"  என்று சொல்லி விட்டுத்தான் வந்தேன்.  அப்புறம் கொஞ்ச நாள் எதிரில் அவன் தெரு முனையில் கண்ணில் பட்டால் நான் உடனே பக்கத்து சந்தில் மறைந்து விடுவேன். 

நானும் அவனும் இப்போதெல்லாம் சந்தித்துக் கொள்வதில்லை என்பதை அவன் சகோதர, சகோதரிகள் உணரும்படி செய்தும் விட்டேன்!

அவன் அடுத்த சில நாட்களிலேயே மறுபடி ஓடிப் போனான்.  இந்த முறை எங்கள் இன்னொரு நண்பன் மிரட்டப் பட்டு,  தேடிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன்! 

அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் அவனை வளைக்கும் கலையை நாங்கள் கற்றிருந்தோம்.  இடையில் ஓடிய ஒரு சந்தர்ப்பத்தில் அவன் தனது சைக்கிளை கிடைத்த விலைக்கு விற்று விட்டு சாப்பாட்டுச் செலவுக்கு வழி செய்துகொண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக எல்லோருக்கும் 'தண்ணி' காட்டினான்!

இந்தமுறை அவன் 'கண்டுபிடிக்கப்பட்ட'தும்,  அவன் அப்பா அவனுக்கு அவன் விற்ற நபரிடமிருந்தே அந்த சைக்கிளை மிரட்டியே திரும்ப வாங்கிக் கொடுத்து விட்டார்.
அப்புறம் நீண்ட நாட்கள் அவன் வீட்டை விட்டு ஓட முடியாதபடி அவனுக்கு அவன் வீட்டாரிடமிருந்து காவல் பலமாயிருந்தது.  அதுவே அவனை இன்னும் விரக்தியடைய வைத்திருந்தது.  போதாக்குறைக்கு அவன் 'கண்' வைத்திருந்த அவன் தூரத்து உறவுப் பெண்ணொருத்தி வீட்டுக்கு வந்திருந்தபோது அவளெதிரில் இவன் பெல்ட்டால் விளாரப்பட்டது இவன் மனதை திப்பிலி ஆயிரமாய்....  அதாங்க சுக்கு நூறாய் உடைத்திருந்தது!


இதெல்லாம்தான் அவன் இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம்.
                                                                                                                                        [ தொடரும் ]
இதன் தொடர்ச்சி இங்கே! 

9.6.14

திங்க கிழமை 140609 :: சத்து மாவு.

                
வீட்டில் தயார் செய்கின்ற சத்துமாவு எப்படிச் செய்வது என்று பார்ப்போம். 
   
முதலில் கடையில் ராகி ஒரு கிலோ வாங்குங்கள் 
  


வாங்கிய ராகியை, தண்ணீரில் முதல்நாள் மாலை முதல், மறுநாள் காலை வரையிலும் ஊறப்போடுங்கள். 

பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, அந்த ராகியை சுத்தமான ஈரத்துணியில் கட்டி வைத்துவிடவும். அவ்வப்பொழுது ராகி மூட்டை மீது தண்ணீரை தெளித்துக் கொண்டிருக்கவேண்டும் 

ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து எடுத்துப்பார்த்தால், ராகி முளை வந்திருக்கும். 

இந்த ராகியை ஒரு வாணலியில் இட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு கிலோ கோதுமை வாங்கி அதை பட்பட்டென்று பொரியும் வரை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 
         

ஒரு கிலோ பொட்டுக்கடலை (சென்னை பாஷையில் ஒடச்ச கடலை) வாங்கி (வறுக்காமல்) அதையும் சேர்த்துக்கொள்ளவும். 
          

சிலர் இதனோடு கொஞ்சம் பாதாம் பருப்பு கூட சேர்ப்பார்கள். 
   

மேற்கண்ட அனைத்து பொருட்களையும், ஒன்றாக மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். 

சத்துமாவு மூன்று கிலோ தயார். 

இந்த சத்துமாவை, கொஞ்சம் எடுத்து, நெய் சர்க்கரை சேர்த்து, பிசைந்து உண்ணலாம். 
     






# கொஞ்சம் சத்து மாவை நல்ல தண்ணீரில் கரைத்து, ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் கொதிக்கவிட வேண்டும். கொதிக்கும்பொழுது, அடிப்பிடிக்காமல் இருக்க, கரண்டியால் கிளறிவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். கொதி வந்த பிறகு தேவையான அளவு பால் விட்டு,  பொங்கி வரும் வரை மீண்டும் அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். பொங்கி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, சர்க்கரை போட்டுக் கலக்கவும். மிதமான சூட்டில் இருக்கும்பொழுது, டம்ப்ளரில் ஊற்றிக் குடிக்கவும். 
    
# சிலர் சத்து மாவை, மோரில் கரைத்தும் அருந்துவார்கள். 
                  
               
சத்துமாவை ஐம்பது நாட்கள் வரை மூடியுள்ள எவர்சில்வர் பாத்திரத்தில் பாதுகாத்து வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.