வீட்டில் தயார் செய்கின்ற சத்துமாவு எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
முதலில் கடையில் ராகி ஒரு கிலோ வாங்குங்கள்
வாங்கிய ராகியை, தண்ணீரில் முதல்நாள் மாலை முதல், மறுநாள் காலை வரையிலும் ஊறப்போடுங்கள்.
பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, அந்த ராகியை சுத்தமான ஈரத்துணியில் கட்டி வைத்துவிடவும். அவ்வப்பொழுது ராகி மூட்டை மீது தண்ணீரை தெளித்துக் கொண்டிருக்கவேண்டும்
ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து எடுத்துப்பார்த்தால், ராகி முளை வந்திருக்கும்.
இந்த ராகியை ஒரு வாணலியில் இட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கிலோ கோதுமை வாங்கி அதை பட்பட்டென்று பொரியும் வரை வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
ஒரு கிலோ பொட்டுக்கடலை (சென்னை பாஷையில் ஒடச்ச கடலை) வாங்கி (வறுக்காமல்) அதையும் சேர்த்துக்கொள்ளவும்.
சிலர் இதனோடு கொஞ்சம் பாதாம் பருப்பு கூட சேர்ப்பார்கள்.
மேற்கண்ட அனைத்து பொருட்களையும், ஒன்றாக மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
சத்துமாவு மூன்று கிலோ தயார்.
# இந்த சத்துமாவை, கொஞ்சம் எடுத்து, நெய் சர்க்கரை சேர்த்து, பிசைந்து உண்ணலாம்.
# கொஞ்சம் சத்து மாவை நல்ல தண்ணீரில் கரைத்து, ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் கொதிக்கவிட வேண்டும். கொதிக்கும்பொழுது, அடிப்பிடிக்காமல் இருக்க, கரண்டியால் கிளறிவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். கொதி வந்த பிறகு தேவையான அளவு பால் விட்டு, பொங்கி வரும் வரை மீண்டும் அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். பொங்கி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, சர்க்கரை போட்டுக் கலக்கவும். மிதமான சூட்டில் இருக்கும்பொழுது, டம்ப்ளரில் ஊற்றிக் குடிக்கவும்.
# சிலர் சத்து மாவை, மோரில் கரைத்தும் அருந்துவார்கள்.
சத்துமாவை ஐம்பது நாட்கள் வரை மூடியுள்ள எவர்சில்வர் பாத்திரத்தில் பாதுகாத்து வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.