திங்கள், 31 ஆகஸ்ட், 2009

நாம் இப்படிதான் இருக்கிறோம்

உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடு.
நாம்தான் அரசாங்கம். நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும் ஒழுக்கமும், சுத்தமும் என்பதை மறந்து விடுகிறோம். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக் கூடாது என்ற சின்ன விதியை மதிக்க முடிகிறதா நம்மால்? காவல்காரரை ஏமாற்ற ஹெல்மெட்டுக்குள் மைக், ப்ளூ டூத்!.
சாலை தோறும் குப்பை போடுகிறோம்.
காசு கொடுப்போருக்குதான் கோவில்களில் முன்னுரிமை. காசு கொடுத்து குறுக்கு வழியில் கும்பலைக் கடந்து சாமி கும்பிட்டால் சாமி அருள் கிடைக்குமா?
வருமான வரியை ஏய்க்க போலி மருத்துவ சான்றிதழ்கள்...
நம் அவசரத்துக்கு one way விதியை மீறுகிறோம் - மீறிப் பிடிக்கும் காவலர் கேட்குமுன் 50 ரூபாயை நீட்டுகிறோம்.
லஞ்சம் வாங்குவது தவறு என்கிறோம். நமக்கு வேலை ஆக வேண்டுமென்றால் நாமே கொடுக்கத் தயாராகிறோம்.
நாம் கை காட்டும்போது பஸ் நிற்காவிட்டால் கோபம் வருகிறது. நேரத்துக்கு வருவதில்லை என்று முணுமுணுக்கிறோம். நாம் ஏறி விட்டாலோ அடுத்தடுத்த நிறுத்தங்களில் பஸ் நின்றாலோ,கூட்டம் ஏறினாலோ எரிச்சலடைகிறோம்.
சினிமா நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் தேவ புருஷர்களாகக் கருதி தீக்குளிக்கும் அளவு போகிறோம்.
இலவசமாய் தருகிற எதையும் விடுவதில்லை. வேண்டாம் என்று மறுக்க மனம் வருவதுமில்லை!
சத்தமாய் பாட்டுப் போடுவதிலிருந்து, சத்தமில்லாமல் அடுத்தவர் வீட்டுத் தோட்டத்திலிருந்து லவட்டிகொள்வது வரை அடுத்தவர் உரிமையில் எவ்வளவு தலையிடுகிறோம்?
(என் மாமா அடிக்கடி சொல்வார் - உன் உரிமை என்று நீ உன் கையை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வீசலாம் - அது என் மூக்கில், முகத்தில் படாத வரை என்று!)
புகை பிடித்தல் நமக்கே கேடு. பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது. எத்தனை பேர் மதிக்கிறோம்? சாலைகளில் குடித்து விட்டுப் பண்ணும் அலம்பல்கள் கொஞ்சமா? (அது சரி, அரசாங்கமே கடையைத் திறந்து வைக்கும்போது என்ன செய்ய?!)
இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறந்தவர்கள் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு உடனேயே உனக்குத் தண்ணீர் தர மாட்டேன், கரண்ட் தர மாட்டேன், உன் மொழியை விட என் மொழிதான் உயர்ந்தது என்றெல்லாம் அடித்துக் கொள்கிறோம்.
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ பாடல் பொய்யாகியதே...
கற்பு கற்பு என்று அலட்டிக் கொள்வதிலும் நம் வீட்டு ஜன்னல்கள் மட்டும் மூடியிருக்க விரும்புகிறோம்.
நம் வீட்டில் மின் தடை ஏற்பட்டால் உடனே பக்கத்துக்கு வீட்டைப் பார்க்கிறோம்....அங்கேயும் மின்சாரம் இல்லா விட்டால்தான் நமக்கு நிம்மதி...!
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?

2 கருத்துகள்:

  1. 'vicarious beliefs propel human actions' என்று எப்போதோ Psych 101ல் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இதை இரட்டைத் தர நிலை (dual standard) என்று சொல்லலாமோ?
    ஒன்று எனக்காக; மற்றது மற்றவருக்காக! இது பெரும்பாலும் இந்தியர்கள் எல்லோருக்கும் உள்ளதுதான் - . சிலர் மட்டும் ஒற்றைத் தர நிலை எடுத்து வாழக் கூடும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!