Tuesday, August 25, 2009

முதன் முதலாய் .......

நான் லஞ்சம் கொடுத்த அனுபவம். நான் ஜூனியர் டெக்னிகல் ஸ்கூலில் சேர்ந்து படித்த காலம். அப்பொழுது, இருந்த காங்கிரஸ் அரசாங்கம் - படிக்கும் பையன்களில் நல்ல மதிப்பெண் பெறுபவர்களுக்கு - உதவித் தொகை அறிவித்தது. அப்பாவின் வற்புறுத்தலால், நானும் அப்ளை செய்தேன். கிடைத்தும் விட்டது. (அதற்குப் பிறகு காங்கிரசும் போய் விட்டது - அப்புறம் ஆட்சியில் பங்கே கிடைக்க வில்லை) உதவித்தொகை - மாதம் ரூபாய் இருபது - முதல் இரண்டு வருடங்களுக்கு, மாதம் முப்பது ரூபாய் - மூன்றாம் வருடத்திற்கு.இந்தத் தொகை - நான் டவுன் பஸ்ஸில் வீட்டிலிருந்து பள்ளி சென்று திரும்புவதற்கே பாதி செலவாகி விட்டது என்றாலும், உதவி, உதவி தானே!

அந்தத் தொழில் நுட்பப் பள்ளி, ஒரு பாலி டெக்னிக்குடன் இணைந்து இருந்தது. அந்த பாலியில் ஒரு கிளார்க். பெயர் எஸ் சில் ஆரம்பித்து என்னில் முடிந்தது என்று ஞாபகம். முகம் மட்டும் நன்றாக ஞாபகம் உள்ளது. அவருடைய டெக்னிக்கே தனி. அரசாங்கத்திலிருந்து stipend amount வந்து விட்டது என்றால் - அறிவிப்புப் பலகையில், ஓர் அறிவிப்பு, டைப் அடித்து - குத்தி வைப்பார்கள். - அது இரண்டே வரி - ஏதேனும் ஒரு மூலையில் - ஒட்டப் பட்டு - காலை பத்து மணி முதல் - மாலை மூன்று மணி வரை மட்டும் இருக்கும் - மதிய உணவு வேளையில் மட்டுமே கண்களுக்குப் புலப்படும் - பிறகு மாயமாகி விடும். என் கூடப் படித்த யம காதகப் பையன்கள் - அந்த அறிவிப்பு டைப் ஆகும் பொழுதே மோப்பம் பிடித்து, ஸ்டைபெண்ட வாங்கும் மாணவர்களுக்கு அந்த அறிவிப்பை சொல்லி - அதன் மூலம் நாலணா - எட்டணா சம்பாதித்து விடுவார்கள்.

சனி ஞாயிறுகளில் - பாலி ஆபீஸ் இருக்காது. மாதம் ஒரு முறையும் - அந்த உ.தொகை வராது. சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட தாமதமாக வரும். அரசாங்க தாமதமா - அல்லது அலுவலகத் தாமதமா என்று கூட எங்களுக்குத் தெரியாது. அறிவிப்பு வந்தவுடன் போனால் - வாங்கி விடலாம்; அது ஏதேனும் பண்டிகை விடுமுறை அல்லது வெள்ளிக் கிழமை என்றால் - மாணவர்கள் உஷாராக இல்லை என்றால் - கஷ்டம்தான்.
அந்த ஸ் ......ன் முதல் முறையாக - நான் ஸ்டைபெண்ட வாங்கப் போன போது - மூக்குக் கண்ணாடியின் மேல் பக்கம் வழியே என்னைப் பார்த்தார். அப்பொழுது அந்த மாதிரிப் பார்வைகளை பார்த்து பயம் கொள்ள ஆரம்பித்தவன்தான் - நேற்றைய பஞ்சாட்சரம் வரை - யார் என்னை அப்படிப் பார்த்தாலும் பயந்து போய் விடுவேன்! ஸ் ...ன் - பெயர் ஊர் வகுப்பு, வயது, குலம், கோத்திரம் எல்லாம் விசாரித்து விட்டு, சுற்றிலும் இருக்கும் சக எழுத்தர்களை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே, 'நாளக்கி - லன்ச் டைம் முடியற சமயம் வா' என்றார்.

மறு நாள் மதியம் ஒன்று இருபத்தைந்துக்கு டான் என்று அவர் மேஜை அருகே சென்று நின்றேன். அவர் அவருடைய எவர்சில்வர் டிபன் பாக்சை - கழுவி, துடைத்து எடுத்து வைத்துவிட்டு, நேற்றைய கேள்விகளை - திரும்பவும் கேட்டவாறே - ஒரு பைல் எடுத்து, நிதானமாக பிரித்து, குனிந்து ஒரு லிஸ்ட் - மௌனமாகப் படித்தார். நான் மெளனமாக நின்று கொண்டு அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அங்கு என்னையும் அவரையும் தவிர யாரும் இல்லை. "அப்பா என்னவா இருக்கார்?" என்று யாரோ கேட்டது போல் இருந்தது. அவரைப் பார்த்தால் - அவர் இன்னமும் குனிந்த பார்வையும் - குமிழ் புன்சிரிப்புமாக தேடிக் கொண்டிருந்தார். அசரீரிக்கு பதில் சொல்லுவதா வேண்டாமா - என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அதே கேள்வி -- ஆஹா இந்த ஸ் ..... ன் தான் இப்படி வாயைத் திறக்காமல் - ஓர ஜூப்பு சூசி - உதட்டைப் பிரிக்காமல் பேசுகிறாரா !

நான் - சற்றே தயக்கத்துடன் - ரிடயர்ட் - என்றேன். எங்கே வேலை பார்த்தார் -- அசரீரி. மூன்று வருடம் முன்பு ISRM - அதற்கு முன்னே பல இடங்கள் என்றேன். இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு? இங்கே தான் - பக்கத்திலே ஒரு தோட்டத்திலே - மண்ணு கொத்திகிட்டு இருக்காரு என்றேன். கூலி வேலையா ? என்று கேட்டது அசரீரி. இல்லை - சொந்த தோட்டம் - அதுலதான் என்றேன். என்ன போட்டிருக்கிறார் தோட்டத்துல ? கொத்தவரை, அவரை, சக்கரவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காய் - வெண்டைக்காய் என்று அடுக்கிக் கொண்டே போனேன். சரி சரி - இந்தா - முதல் ஸ்டைபெண்ட - ஆறு மாசத்துக்கான நூற்று இருபது ரூபாய் - ஆறு இடங்களில் கையெழுத்துப் போடு. அப்பாவிடம் போய் நான் சொன்னதை எல்லாம் சொல்லு.

நான் அப்பாவிடம் பணத்தைக் கொடுக்கும் பொழுது - அவர் "நடந்தது என்ன - (குற்றம்) " என்கிற பாணியில் துருவித்துருவி கேட்க - நான் எல்லாவற்றையும் விலா வாரியாக - பேசி, நடித்துக் காட்டினேன். அவர், ஸ் ...... ன் ' கேட்டது என்ன - லஞ்சம் ' என்று தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டார்.

மறுநாள் நான் பள்ளிக் கூடம் போகையில், T-Square உடன் சேர்த்து, ஒரு மஞ்சப் பையையும் - தூக்க முடியாமல் தூக்கிச் சென்றேன். அதற்கு உள்ளே காய் கறிகள். இதை - அவரிடம் கொடுத்து விடு - என்பதுதான் எனக்கு இடப்பட்ட கட்டளை.
பகல் மணி ஒன்று இருபத்தைந்துக்கு - அவரிடம் சென்றேன். வாயெல்லாம் பல்லாக - என்னை வரவேற்று - அந்த மஞ்சப் பையை - மேசைக்கடியில் வைக்கச் சொன்னார். பிறகு நான் அந்த பையைப் பார்க்கவே இல்லை!
ஆனால் - ஸ்டைபெண்ட - வருகின்ற நாளுக்கு முதல் நாளிலேயே - ஆபீஸ் பியூன் ஆறுமுகம் என்னிடம் வந்து "கிளார்க் அய்யா - நாளக்கி வந்து பணம் வாங்கிக்கச் சொன்னார்" என்று சொல்லி விடுவார். என்னிடமிருந்து நாலணா லஞ்சம் பெற்று எங்க வீட்டுப் பிள்ளை - தரை டிக்கெட் வாங்கிப் பார்த்து மகிழ்ந்தவர்கள் - என்னுடைய கொத்தவரங்காய் - அவரைக்காய் - லஞ்சத்தினால் - மேலும் சம்பாதிக்க இயலாமல் போய் விட்டது!
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் - லஞ்சத்தை லஞ்சத்தால் தான் ஒழிக்க வேண்டும் போலிருக்கிறது!
Jai Hind.

4 comments:

kg said...

நாகையில் JTS ஆரம்பிக்கும் பொழுது நயா பைசா வந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டது.
நாலணா எட்டணா நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், நீலகிரி தவிர ஏனைய மாவட்டங்
கள் நயாவைக் கூட விட்டு விட்டு பைசா என்று மட்டுமே கூட சொல்லப் பழகி விட்டன.

kggouthaman said...

கிட்டத் தட்ட - இதே கால கட்டத்தில் தான் - எங்கள் blog - 'this week for you' - பகுதியில் காணப்படும் "தூறல்கள்" புத்தக ஆசிரியர் - "ராணி" பத்திரிக்கையில் "நாலணா" என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பரிசு கதை எழுதியிருந்தார். அவர் ஏன் 25 பைசா என்று அப்பொழுது - அந்தக் கதைக்குப் பெயர் வைக்க வில்லை என்று அவரை, அவருடைய கைபேசிக்கு (099437 82928) அழைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

Mali said...

MALI said
நாலணா வோ, இருபத்தைந்து பைசாவோ,
கத்திரிக்காயோ, வெண்டைக்காயோ
லஞ்சம் லஞ்சம்தான்.

kggouthaman said...

என்னய்யா பெருசா நீ கொடுத்தே, வெண்டைக்காய் !
என்று அந்த ஸ் ...........ன் கூறியிருக்க மாட்டார் என்று
நினைக்கிறேன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!