Friday, August 14, 2009

Cheats and their Feats.

                வாஸ்து எனும் வஸ்து.

இது பற்றி நேரடியாக ஏதும் சொல்ல எனக்குத் தகுதியில்லை என்றாலும், இப்போது வாஸ்து ஆலோசனை (இடிக்காமல் மாற்றாமல் பரிகாரம் மாதிரியாக விளம்பரப் படுத்தப் படுவது) பெயர் மாற்றம், ரசிகர்கள் மோதிரம், கவசம் எண் கணித சாஸ்திரம் இப்படியாக பணம் பிடுங்கும் சமாச்சாரங்கள் ரொம்ப அதிகமாகிக் கொண்டே வருகின்றன. ஆதி நாட்களில் வேஷ்டி போர்த்திய துண்டு அணிந்த ஒரு தேவர் (பெயர் நினைவு இல்லை) பல ரகங்களில், பல விலைகளில் கவசங்களை விளம்பரம் செய்வார்.  நம்பிக்கை இல்லாதவர்கள் வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கையும் அதில் இருக்கும்.

அதற்கும் முன்பு துப்பாக்கி, லைசென்ஸ் தேவையில்லை என்று கேப் துப்பாக்கியை விற்றவர்களும், பெண்களை மயக்க மாயமோதிரம் பத்து ரூபாய்க்கு விற்றவர்களும் விளம்பரம் செய்வதை ஆனந்த விகடனில் கூட வருவதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய குடுமி வைத்த நண்பர் ஒருவர் கன்னியரின் கவர்ச்சிப் படங்கள் என்று ஐம்பது ரூபாய் அனுப்பி கண்ணுக்குத் தெரியாத செயற்கை ஆப டோன் படங்களைப் பெற்று கொதிப்படைந்தார்!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: இந்தப் பரந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏமாறத் தயாராக ஒருவன் புதிதாகப் பிறக்கிறான் என்பது தான் அது. எய்ட்ஸ் வியாதியை கூட்டு மருந்து தந்து குணப் படுத்துகிறேன் என்று வைத்தியர்கள் ஆரவாரம் செய்கிறார்களே அது ஒரு உதாரணம்.  ராமர் பிள்ளை பெட்ரோல் தயார் செய்தது (அது என்ன வாயிற்று?) மற்றொன்று.

பித்தளையை தங்கம் ஆக்கித் தருகிறேன் என்றும், புதையல் எடுக்க உதவி செய்கிறேன் என்றும் நகையை பளபளப்பாகுகிறேன் என்றும், சங்கிலி தொடர் முறையில் உங்களை கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்றும் எவ்வளவு புத்திசாலித் தனமான முயற்சிகள்! இதில் விழுந்து ஏமாறும் லட்சக் கணக்கான மக்கள்!  சீட்டுப் போட்டு வீடு வாங்கவும் நகை செய்யவும் முயன்று கோட்டை விட்டவர்கள் எத்தனை!

ஆனாலும் நாளையும் கூட கரன்சி இரட்டிப்பு மாதிரியான மோசடியில் மேலும் ஆயிரம் பேர் விழத் தயாராக இருக்கிறார்கள்.  மேரா பாரத் மகான்!
YRaman

6 comments:

Anonymous said...

ஏமாறுபவர்களை என்றும்
ஏமாற்றும் இந்த நாட்டிலே,
'ஏமாற்றுபவர்களை எப்படியேனும்
ஏமாற்ற வழிகள்
ஏதேனும் உள்ளதா?'
என்று எண்ணி எண்ணி
ஏங்கித்தவிக்கிறேன்!
(ஏழு வரிக் கவிஞன்)

Anonymous said...

எங்கள் மெஸ்ஸில் கேசவன் என்றொரு சமையல்காரர். சனிக்கிழமை என்றால் நன்றாக உடுத்திக்கொண்டு அருகே இருந்த கணேஷ் தியேட்டரில் என்ன படமாக இருந்தாலும் பார்க்கப் போய் விடுவார். ஆளும் அழகாக இருப்பதனால் நம் நண்பர்களுக்கு அவர் மேல் ஓரளவு பொறாமை உண்டு என்று கூட சொல்லலாம்.
ஒரு சனிக் கிழமை கேசவன் வழக்கம் போல் திரைப்படம் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து பஸ் ஸ்டாண்டில் அவர் நின்று கொண்டிருக்கும் போது கவனித்தோம். வழக்கமான அம்பாசடர் ஷூ வுக்குப் பதில் செருப்பு அணிந்திருந்தார். மறு நாள் காலை உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது விஜயன் அவரிடம் "என்ன கேசவ நேற்று தியேட்டரில் பார்த்தேன். செருப்பு அணிந்திருந்தீர்கள்?" என்றார். கேசவன் " யாரோ என் ஷூ வுக்குள் கண்ட அசிங்கத்தை எல்லாம் போட்டு விட்டார்கள் அதனால் தான்" என்றதும் " அப்படியா, உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா?" என்றார் விஜயன்.
சந்தேகமாவது ஒன்றாவது, எனக்கு அது யார் என்று நன்றாகவே தெரியும் என்றார் கேசவன்.
"அவரை என்ன செய்யப் போகிறீர்கள்" என்றார் விஜயன்.
"அதெல்லாம் அப்போவே ஆச்சு சார்" - இது கேசவன்.
"என்ன செய்தீர்கள்?" - விஜயன்.
"அவர் என் ஷூவுக்குள் வைத்ததை அவரே நேற்றிரவு தோசைக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டார்" என்றதும் விஜயனுக்குத் தான் இரவு சாப்பிட்ட கொத்துமல்லி சட்னி நினைவுக்கு வர .. அவர் முகம் போன போக்கில் இருந்து எங்களால் மீதியை ஊகிக்க முடிந்தது.

Anonymous said...

ராமர் பிள்ளை பெட்ரோல் தயார் செய்ததில் ஒரு சில பழுத்த அரசியல் வாதிகள் கூட ஏமாந்து தான் போனார்கள்.
ராமர் ஏமாற்றுபவர்களை ஏமாற்றியவரா இல்லையா? இல்லை, ராமர் சேதுவுக்கு எதிர்ப்பு கூட ஒரு வகையில் ராமர் (பிள்ளை) ஏமாற்றியதன் தாக்கம் தானோ?

Anonymous said...

தலைப்புகளில் ஏன் ஆங்கிலம்?
தமிழில் தலைப்புகளுக்குத் தட்டுப்பாடா - இல்லை நீங்களும் தமிழ்த் திரையுலகுடன் தொடர்புடையவரா?

Anonymous said...

ராமர் பிள்ளை தன கண்டுபிடிப்பை தானே நம்பினார் என்று தோன்றுகிறது... ஒரு வகை மன மயக்கம் என்று சொல்லலாமோ? ஏமாறுபவர்கள் ஏமாற்றுபவர்கள் என்று தனித் தனியாக் பிரிக்க வேண்டாம்.... எல்லோருமே ஏமாற்றுகிறோம்...எல்லோருமே ஏமாறுகிறோம்....

Anonymous said...

Hello,

can anyone tell me which is the best counter strike guide ? :)...i found this one :

http://www.downloadzdb.com/Counter_Strike_Best_Guide

What do you far take it ?

Thanx in advance

Sorry for my bad english :s

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!