புதன், 25 நவம்பர், 2009

பேசத் தெரிய வேண்டும்!

பேச்சு என்பது, முக்கியமாக உரையாடல் என்பது ஒரு கலை. அதில் பல பரிமாணங்கள் பலரிடம் நாம் அன்றாடம் உணரலாம். உதாரணத்திற்கு, நாம் ஒரு கருத்தைச் சொல்கிறோம். கேட்பவர், ஒன்று ஆமாம் என்று தொடங்கி பேசுவார். அல்லது அபபடி இல்லைங்க இது அந்த மாதிரி என்று மாற்றுக் கருத்து சொல்வார்கள்...பெரும்பாலும் இருவரும் ஒருவர் கருத்தை மற்றவர் மறுத்தோ ஆமோதித்தோ பேசுவது இயல்பு. பேசும் விஷயத்தையும் பேசுபவர்களையும் பொறுத்தது அது.


என் அலுவலகத்தில் ஒருவர் இருந்தார். அவரிடம் பேசுவது பெரும்பாலும் வெட்டுக் குத்து போல முடிகின்ற சாத்தியக் கூறே அதிகம்.யார் என்ன பேசினாலும் அதற்கு எதிர்மறை போல பேசுவதே அவர் ஸ்டைல். ஆனால் முழுதும் எதிர்க் கருத்தாகவும் இருக்காது. உதாரணமாக அவர் பெயர் கண்ணன் என்று வைத்துக் கொள்வோம். "உங்க பேர் கண்ணன்தானே..?" என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். அவர் உடனே கொடுக்கும் பதில் இப்படி இருக்கும்..." இல்லை சார், என் பேர் என்னனு கேட்கறீங்களே.. வேற யாரையாவது இப்படிக் கேட்டீங்களா? கேட்க முடியாது...எப்படி நீங்க அதுதான் என் பேர்னு சொல்லலாம்? உலகத்துல ஒருத்தனுக்கு நூறு பேர் இருக்கும் சார்.. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ரெண்டுல ஒரு ஆஃபீசர் இப்படிதான் என்னைப் பார்த்துக் கேட்டார்...அப்போ..." இப்படி தொடரும் உரையாடலில் இடைமறித்து "அது சரி உங்க பேர் கண்ணனா இல்லையா?" என்று கேட்டால் குறுக்கக் குறுக்க பேசி குழப்புறீங்களே...நீங்கள்ளாம் எப்பவுமே அடுத்த ஆளை பேசவே விடறதில்லை... நானும் பலதடவை பார்த்துருக்கேன்...என் பேர் கண்ணன் சார்..." "அதானேங்க நானும் சொன்னேன்" என்றால் "இல்லை சார் நீங்க சொன்னதுக்கும் நான் சொன்னதுக்கும் வித்தியாசம் இருக்கு"ம்பார். என்னங்க அர்த்தம் இல்லாமப் பேசறீங்கன்னு கேட்க முடியாது....அப்புறம் அந்தப் பேச்சும் தொடர்கதை ஆகிவிடும்! ஒரு முறை என் கையில் வைத்திருந்த நாளிதழைப் பார்த்து விட்டு, "அதான் சார் இப்படிப் பேசறீங்க...........இதெல்லாம் படிக்கறதை விட (ஒரு கட்சிப் பத்திரிக்கையின் பெயர் சொல்லி) படிங்க சார்..பொது அறிவு வளரும்.." என்றார்.


நாம் பேசுவதைதான் பேசுவார். ஆனால் முதலில் அதை மறுத்து விடுவார். ஏதேதோ பேசி விட்டு கடைசியில் நாம் சொன்னதையே சொல்வார். எப்போதாவது பொழுது போகாத நேரங்களில் அவர் வாயைக் கிண்டி பேச விட்டு கேட்டுக் கொண்டிருப்போம். பல சமயங்களில் பேச்சை தொடர விடாமல் அவர் என்ன சொன்னாலும் பதில் பேச மாட்டோம் அல்லது எதற்கு வம்பு என்று ஆமோதித்து விடுவோம்!


நம்மைப் பார்க்க யாராவது வந்திருப்பார்கள். நம்முடன் பேசிக் கொண்டிருப்பார்கள். கையை கட்டிக் கொண்டு பணிவான புன்னகையுடன் இவரும் அங்கிருப்பார். சில விஷயங்களை புன்னகையுடன் தலையாட்டி பேச முற்படுவார். ஒருவகை எச்சரிக்கை உணர்வுடன் அவரையே பார்த்துக் கொண்டிருக்கும் நான் அவர் பேசத் தொடங்குமுன் பேச்சை மாற்றியோ அல்லது நான் ஏதாவது பேசவோ தொடங்கி விடுவேன். வந்தவரிடம் சொல்லவும் முடியாதே! அப்படியும் சிலர் "அவர் ஏதோ சொல்ல வர்றார், சொல்லட்டும்.." என்று ஆரம்பம் கொடுத்து விடுவார்கள். அப்புறம் பார்க்கணுமே அந்த அனுதாபிகளின் கதியை! பிறகு பேச்சு வளர வளர டென்ஷன் ஆகாமல் இவர் அவரை வெறுப்பேற்றுவார். நண்பர் விடவும் முடியாமல் பேசவும் முடியாமல் டென்ஷன் ஆவது சிலசமயம் வேடிக்கையாக இருக்கும்.


ஒருமுறை ஒரு அலுவலக நண்பர், ஒரு விசேஷத்துக்கு என்னை வற்புறுத்தி தன் டூ வீலரில் அழைத்துச் சென்றார். பாதி தூரம் போனதும் இன்னுமொரு நண்பரையும் அதில் ஏற்றிக் கொண்டார். நான் இறங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதையும் கேட்கவில்லை. ட்ராஃபிக் போலீஸ் கையில் மாட்டமலிருக்க என்று சொல்லி நடு வீதியிலேயே வண்டி ஓட்டி வந்தவர் ஒரு தவிர்க்க முடியாத நேரத்தில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடு சாலையில் இருவரையும் இறக்கி விட்டு "அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்று விட்டுப் போய்விட, அப்போதைய பல்லவன் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்களைத் தாண்டி ஓரம் சேர்வது பெரும் பாடாயிற்று.


என்னைப் பற்றி அவரிடம் கேட்டால் என்ன சொல்வாரோ?


வாசகர்கள் பேச்சு அனுபவங்களும் வரவேற்கப்படுகின்றன. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் - கோடு தாண்டி யாரும் போயிடக் கூடாது. பாத்துக்குங்க!

4 கருத்துகள்:

 1. என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் - அவர் என்ன பேசுகிறார் என்பது புரியவே புரியாது -- ஆனாலும் இழுத்து வெச்சி ரம்பம் போட்டுகிட்டே இருப்பாரு!பேசுவதை நிறுத்திவிட்டு - நம் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்தார் என்றால் - நம்மை ஏதோ கேள்வி கேட்டிருக்கிறார் என்று அர்த்தம் - அந்த நேரத்தில் நமக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழி முழி என்று முழிப்போம்!

  பதிலளிநீக்கு
 2. //அப்போதைய பல்லவன் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்களைத் தாண்டி ஓரம் சேர்வது பெரும் பாடாயிற்று.//

  அது..,

  பதிலளிநீக்கு
 3. நடுக்காட்டில் தவிக்க விட்டு சென்றுவிட்டாரோ?

  பதிலளிநீக்கு
 4. இருபது வருடங்களுக்கு முன் - தாம்பரம் - பீச் ரயில் மார்கத்தில் - அலுவலக கூட்டம் அலை மோதும் நேரங்களில், ஒரு ஐம்பது வயது பெரியவர், ரயிலில் ஏற வரும்பொழுது, யாரையோ உரத்த குரலில் - கன்னா பின்னா வென்று திட்டியவாறு வருவார். எல்லோரும் பயந்து ஒதுங்கும்பொழுது - அவர் வண்டிக்குள் ஏறி, வாகாக நிற்பதற்கு ஒரு இடம் ஏற்படுத்திக் கொண்டு, நின்று கொள்வார். பிறகு, இறங்கும்பொழுது மீண்டும் தமிழில் அர்ச்சனை செய்துகொண்டே வழி ஏற்படுத்திக் கொள்வார்! இவருடைய பேச்சாற்றல் இவருக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறது பார்த்தீர்களா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!