செவ்வாய், 22 மார்ச், 2011

பக்குவம் என்ன சொல்லுவாய்?

 
                 
டிர்ரிங் டிர்ர்ரிங் ....

"ஹலோ 'எங்கள்' தொலைக்காட்சி நிலையம்."

"சார் நேற்று  'ஆரோக்கிய உணவு' பற்றி ஒரு பன்.... சாரி ஒரு அரை..... சாரி ஒருத்தர் பேசினாரே - அவருடைய பெயர் என்ன?"

"கொஞ்சம் இருங்க. ஃபைலைப் பார்த்துச் சொல்கிறேன்."

"... அந்தர்தியானம் ம்ம்ம்ம் ... அலசல் புராணம்.... ஆளை மயக்கும் எழில் ல்ல் ... ஆரோக்கிய உணவு .... இதுவா? --- ஆமாம். ஆரோக்கிய உணவு குறிப்புகள் வழங்குபவர் வைத்தி."

"சார் அவருடைய விலாசம் இருக்கா?"

"எதுக்குக் கேக்குறீங்க?"

"அவருடைய உணவுக் குறிப்புகள் என்றால் என் மனைவிக்கு ஒரே பைத்தியம். (நற, நற!) அவர் சொல்வதைக் கேட்டு அதன் படியே வீட்டில் சமைப்பாள். (நற, நற!) அவரை வீட்டில் போய்ப் பார்த்து, பாராட்டி நாலு வார்த்தை பேசிவிட்டு வரலாம் என்று இருக்கின்றேன்."

"ஓ! அப்படியா? விலாசத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். வைத்தி, நம்பர் ஆறு, பானைத் தெரு, சோத்துப்பாக்கம், PIN 603319." அலை பேசி எண் : ----------

"நன்றி சார்."
(அடேய் வைத்தீ -- வக்கிரேண்டா தீ!)

*******    ********

அலை பேசியில் உடனே வைத்தியைக் கூப்பிட்டான் பட்டாபி.

"ஹலோ ஆரோக்கிய உணவு வைத்தி ஹியர்"

"சார் என் பெயர் பட்டினி பட்டாபி."

"ஹி ஹி என்ன பட்டினியா அல்லது பத்தினியா?"

"பட்டினி பட்டாபிதான் சார்! நானும் என் மனைவியும், 'எங்கள் டி வி' இல உங்க ப்ரோக்ராம் ரொம்ப விரும்பி (நான் மட்டும் வெதும்பி) பார்ப்போம்."

"ஓ! மிக்க நன்றி."

"அதனால, உங்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்க ஆசை."

"என்னுடைய விலாசம் தெரியுமா? நீங்க எங்கே இருக்கீங்க?"

"தெரியும் சார். உங்க விலாசம், செல் நம்பர் எல்லாம் எங்கள் டி வி க்கு ஃபோன் செய்து தெரிந்துகொண்டேன். நான் இருப்பது, ஆமைப்பாக்கத்தில்"

"அட, அப்படியா? எப்போ வரீங்க? நாளை லஞ்சுக்கு வருவீங்களா?"

"வர்றோம் சார்!"

"உங்களுக்கு என்ன பிடிக்கும்? சைவமா அல்லது அசைவமா? என்ன காய்கறி, என்ன ரசம், என்ன கூட்டு? என் மனைவி ரொம்பப் பிரமாதமா சமைப்பாங்க."

"நாங்க வேற ஒரு பிளான் வெச்சிருக்கோம் சார். உங்க மனைவியை ரைஸ் மட்டும் சூடாக, தயார் செய்துவிட சொல்லுங்கள். மீதி எல்லா அயிட்டங்களும் நாங்க செய்து, எடுத்து வருகிறோம். உங்க வீட்டில் மொத்தம் எத்தனை பேருங்க?"

"மகன் மகள் எல்லோரும் வெளியூரில் இருக்கிறார்கள். நானும் என் மனைவியும் மட்டும்தான்."

"அப்போ நாலு பேருங்களுக்கு ரைஸ் ரெடி பண்ணச் சொல்லுங்க. நாங்க மேல்மருவத்தூர் கோவிலுக்குப் போயிட்டு, நேரே உங்க வீட்டுக்கு வந்திடறோம். நாளை மத்தியானம் ரெடியா இருங்க."

"சார் எனக்குப் பிடிச்ச சமையல் என்ன என்று நீங்க கேட்கவே இல்லையே!"

"அது என்ன சார், இவ்வளவு நாளா நீங்க ஆரோக்கிய உணவு பற்றி சொல்வது எல்லாவற்றையும் கேட்டு, என்னை விட என் மனைவிக்கு ரொம்ப நன்றாக, எதை, எப்படி சமைக்க வேண்டும் என்று அத்துபடியாகிவிட்டது. சத்தான காய்கறிகளை, முத்தாக சமைத்து எடுத்து வருகிறோம்."

****** ******

"மீனாக்ஷி, மீனாக்ஷி!"

"என்னங்க?"

"நீ அடிக்கடி எங்கள் டி வி யில் விரும்பிப் பார்க்கும் ஆரோக்கிய உணவு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கா?"

""நல்லா ஞாபகம் இருக்குதே? ஆமாம், உங்களுக்குத் தான் அந்த நிகழ்ச்சி பிடிக்காதே? அந்த ஆளைக் கன்னா பின்னா என்று திட்டுவீர்களே! அதுக்கு என்ன இப்போ?"

"நான் மனசு மாறிவிட்டேன் என்று வெச்சிக்கோயேன். நாம அவருடைய வீட்டுக்கு விருந்து சாப்பிட நாளை போகப் போகிறோம். அது மட்டும் இல்லை, நாமதான் ரைஸ் தவிர மீதி எல்லாம் செய்து எடுத்துப் போகப் போகிறோம். நாலு பேருங்களுக்கு வேண்டிய கறி, கூட்டு, அவியல், சாம்பார், ரசம், எல்லாம் செஞ்சி எடுத்துப் போகிறோம்!"

"இது நல்ல ஐடியாவா இருக்கே! நாளைக்குக் காலையில மார்க்கெட்டுக்குப் போயி, நல்ல காய்கறிகளாகப் பார்த்து வாங்கி வந்துடுங்க."

"சரி"

***** *****

மறுநாள். மார்க்கெட் சென்று, நல்ல காய்கறிகள் வாங்கி வந்தான் பட்டாபி. வரும் வழியிலேயே, ஹோட்டல் ஒன்றில் புகுந்து, இட்லி வடை சாம்பார், பொங்கல் பூரி என்று வேட்டையாடி, வயிற்றை நிரப்பிக் கொண்டு சாவகாசமாக வீடு வந்தான். கோவிலுக்குப் போகின்ற நாட்களில், காலையில் ஒன்றும் சாப்பிடமாட்டாள் மீனாக்ஷி.

சமயலறையில் வேலையாக இருந்த மனைவியிடம் காய்கறிகளைக் கொடுத்தான். அப்படியே சமயலறையில் இருந்த உப்பு பாட்டிலை சத்தமில்லாமல் எடுத்து, நேரே கொண்டுபோய் மாடியில் இருந்த புத்தக அலமாரியில் புத்தகங்களுக்குப் பின்னால் ஒளித்து வைத்தான்.

பிறகு, கீழே இறங்கி வந்து, மனைவிக்கு உதவியாக, காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தான். கீரையை ஆய்ந்து கொடுத்தான்.

சற்று நேரம் கழித்து, "என்ன மீனாக்ஷி, எல்லா அயிட்டங்களும் ரெடியா?"

"எல்லாம் ரெடியாகிட்டு இருக்கு. இந்த உப்பு பாட்டிலை எங்கேயோ வெச்சிட்டேன். அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்."

(பட்டாபி மனதுக்குள் - உப்பு பாட்டிலை நீ எங்கேயும் வெக்கலை, நாந்தான் மறச்சி வெச்சேன்.) வெளியே, சத்தமாக, " லூசா நீ? என்ன சொல்றே?"

"ஏன்? என்ன தப்பா சொல்லிட்டேன்?"

"அவரு யாரு, என்ன சொல்லுவார் எல்லாம் மறந்துட்டியா?"

மீனாக்ஷி - சற்று யோசித்துவிட்டு, "அட ஆமாம். கீரை, காய்கறிகளில் இயற்கையாகவே நிறைய உப்புச் சத்து இருக்கும். நாம் அன்றாடச் சமையலில், உப்பே சேர்க்க வேண்டாம். உப்பு இல்லாமல் உணவு அருந்துவதுதான் எப்பவும் சிறந்தது. இதைத் தானே அடிக்கடி சொல்லுவார். நான் அவர் நிகழ்ச்சிகளைக் கேட்க ஆரம்பித்த பின்தான் சமையலில் போடுகின்ற உப்பின் அளவை பாதியாகக் குறைத்துவிட்டேன். நீங்க சொல்வது சரிதான். உப்புப் போடாமலேயே எல்லாம் செய்து முடித்து விடுகிறேன்.

*****  *****

அப்புறம் என்ன? வைத்தி வீட்டில் டைனிங் டேபிளில் பட்டாபி & கோ கொண்டு சென்ற பதார்த்தங்களை சுடச் சுட சாதம் போட்டுக் கொண்டு, அழகாகப் பிசைந்து, ஆவலுடன் வாயில் போட்டுக் கொண்ட வைத்தியின் முகம் போன போக்கைப் பார்த்து, புளகாங்கிதம் அடைந்தான் பட்டாபி.

"சாம்பாரில் உப்புப் போட மறந்துவிட்டீர்கள் போலிருக்கு?"

"என்னங்க சார் இப்படி சொல்லுறீங்க? சாம்பாரில் மட்டும் அல்ல - எதிலுமே ஞாபகமா உப்புப் போடாம சமைத்து எடுத்து வந்திருக்கிறோம்!"

"எதிலேயுமே உப்புப் போடலையா?" அதிர்ந்து போனார் வைத்தி.

"ஆமாம் சார். நீங்கதானே ஆரோக்கிய உணவு நிகழ்ச்சியில எப்பவுமே சொல்லுவீங்க. காய்கறிகளிலும் கீரைகளிலும் இயற்கையாக இருக்கின்ற உப்பு போதும். நாம் தனியாக உப்பு போட வேண்டாம். உப்பு சர்க்கரை இரண்டுமே வெள்ளை எமன்கள். இவைகளை அறவே ஒதுக்கவேண்டும் என்று."

வைத்தி மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் என்ன செய்வது என்று திகைத்ததைப் பார்த்து, பட்டாபிக்கு ஒரே சந்தோஷம். அவர் திணறித் திணறி ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தார்.

***** *****
அடுத்த வாரம் ஆரோக்கிய உணவு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தனர் பட்டாபியும் மீனாக்ஷியும்.

வைத்தி சொன்னார். "உப்பு, சர்க்கரை இவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல், குறைவாக, அரை உப்பு / அரை சர்க்கரை என்று சேர்த்துக் கொள்வது நல்லது......."

பட்டாபி உரக்கக் கூவினான் "அது ........."
                         

13 கருத்துகள்:

 1. ஓஹோ..
  இதைத்தான் வடிவேலு அப்படி சொன்னாரா..
  'எதப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்..'

  கிளாசிக் பஞ்ச்..

  பதிலளிநீக்கு
 2. உண்மையில் தயிர் / மோர் சாதம் சாப்பிடும் பொது உப்பு போட்டுக் கொள்ளாமல்.. குழம்பு காய்கறியோடு சாப்பிடுவது நல்லது. குறைவான அளவில் உப்பு சர்க்கரை சேர்த்துக் கொண்டால் பின்னாளில் பயனளிக்கும்.

  பதிலளிநீக்கு
 3. டும்டும்...டும்டும்...

  வலைசரத்தில் அறிமுகம் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. தெரியாத்தனமா எதையும் சொல்லிடக்கூடாது.

  பதிலளிநீக்கு
 5. இதுக்குத்தான் பொய் அட்ரெஸ் போன் நெம்பர் குடுக்கணுங்கறது.

  பதிலளிநீக்கு
 6. //அப்பாதுரை said...

  இதுக்குத்தான் பொய் அட்ரெஸ் போன் நெம்பர் குடுக்கணுங்கறது. //

  இது தெரியாம, நானு ரெண்டு மூணு தடவை உண்மையான அட்ரஸ்ஸ கொடுத்திட்டேனே.. இப்ப என்ன பண்ணறது. ?

  பதிலளிநீக்கு
 7. உண்மையாவே யாரோ பாவம் டாக்டரை எங்கள் புளொக்
  வளைச்சுக் கட்டியிருக்குப்போல !

  பதிலளிநீக்கு
 8. நல்லா சிரிச்சு ரசிக்க வைச்சீங்க!

  உண்மையிலேயே என் உறவினர் ஒருவர் உப்பின் தீமைகளைச் சொல்லி - ரொம்பக் கொஞ்சம் உப்பு போட்டுச் சமைக்க வைத்தார் - அவர் சாப்பிடும் போது உப்பைத் தமக்கு மட்டும் சேர்த்துக் கொண்டார்!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!