வியாழன், 31 டிசம்பர், 2015

அலிஷாவின் சங்கடங்கள்


ஒருநாள், பெரியவர்களுக்கான அந்த மாலை வகுப்பில் அந்த மனோதத்துவ ஆசிரியர் உள்ளே நுழைந்ததுமே மாணவர்களிடம் 


"இன்று நாம் ஒரு விளையட்டு விளையாடுவோம்" என்றார்.


"என்ன விளையாட்டு?"
 


உங்களில் யாராவது ஒருவர் முன்னால்  வாருங்களேன்"  ஆசிரியர் அழைத்ததும் முன்னே வந்தார் அலிஷா.
 


ஆசிரியர் அலிஷாவிடம் அவர் வாழ்க்கையின் மிக முக்கியமான முப்பது பேர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதச் சொன்னார்.
 


அலிஷா அவர் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று முப்பது பேர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதினார்.
 


இப்போது ஆசிரியர் இந்த முப்பது பேர்களில் ரொம்ப முக்கியமில்லாத மூன்று பெர்களை அழிக்கச் சொன்னார்.
 


அலிஷா உடன் வேலை செய்பவர்கள் பெயர்களை அழித்தார்.
 


"இன்னும் ஒரு 5 பேர்களின் பெயர்களை அழியுங்கள்"
 


அலிஷா பக்கத்து வீட்டுக்காரர்கள் பெயர்களை அழித்தார்.
 


இது அப்படியே அவர்கள் உறவினர்கள் நான்கு பெயர்களின் பேர்கள் மட்டும் இருக்கும் வரை தொடர்ந்தது.  அம்மா, அப்பா, கணவர், மற்றும் அவர்களின் குழந்தை.

இப்போது வகுப்பறையே உறைந்து போய் கவனித்து கொண்டிருந்தது...
 


'இது விளையாட்டுமில்லை, அலிஷாவுக்கு மட்டுமானதுமில்லை.'
 


இப்போது ஆசிரியர் இன்னும் இரண்டு பெயர்களை அழிக்கச் சொன்னார்.
 


அலிஷா மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டு, தனது பெற்றோர்களின் பெயர்களை தயக்கத்துடன் மெல்ல அழித்தார்.
 


"தயவு செய்து இன்னும் ஒரு பெயரை நீக்குங்கள்"  ஆசிரியர்.
 


நடுங்கும் கைகள், கலங்கும் கண்களுடன் அலிஷா மிகவும் சங்கடமாக உணர்ந்தபடி மகனின் பெயரை அழித்து விட்டு, சத்தமிட்டு அழுதார்.
 


ஆசிரியர் அலிஷாவை இருக்கையில் அமரச் சொன்னார்.  கொஞ்ச நேரம் கழித்து "ஏன் உன் கணவரைத் தேர்ந்தெடுத்தாய்?  உன் பெற்றோர்கள்தான் உன்னை உயிராக்கி, உருவாக்கியவர்கள்.  உன் மகனோ குழந்தை, அதிலும் உன்னிலிருந்து தோன்றியவன்.  நீயோ இன்னொரு கணவனை சுலபமாகத் தேடிக் கொள்ளலாம்.  அப்படியிருக்க...?"
 


மொத்த வகுப்பறையும் அலிஷாவின் பதிலுக்காய்க் காத்திருந்தது.
 


"ஒருநாள் - எனக்கும் முன்னதாக - எனது பெற்றோர்கள் என்னை விட்டு மறைந்து விடுவார்கள்.  என் மகனும் அவன் வயதுக்கு வந்ததும் என்னை விட்டு விலகி விடுவதற்கான வாய்ப்பு அதிகம்.  கடைசி வரை என்னுடன் உண்மையாக அவர் வாழ்வைப் பகிர்ந்து கொள்பவர் என் கணவர் மட்டுமே.."
 


வகுப்பே எழுந்து நின்று கைதட்டியது.
 


இது எனக்கு வாட்ஸப்பில் வந்த செய்திப்பகிர்வு.  உங்கள் வாழ்க்கைத் துணையை மதியுங்கள் என்கிற மெஸேஜோடு!
 


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?   உங்கள் வாழ்க்கையின் அதி முக்கிய நபர் யார்?


====================================================================

ஃபேஸ்புக்கில் அவ்வப்போது கிறுக்கும் "கவிதை"களிலிருந்து சில இங்கு...
 

மூப்பு :

வாடியதால்
வாசம் தொலைத்த
மலரொன்று
விழுந்து கிடக்கிறது
வற்றிய குளத்தில்

ஏற்கெனவே
விழுந்து கிடந்த
மஞ்சள் இலைகள்
காற்றில் நகர்ந்து
ஆதுரத்துடன்
அணைத்து மூடுகின்றன
மலரை


====================================================================

சென்னையில் பயமுறுத்திய மழை நிற்காதபோது!

தீபாவளிக்கு வந்து
திரும்பிப் போகாத
மாப்பிள்ளை போல,
 
எப்பவோ ஆரம்பித்து
இன்னும் நிற்காமல்
பெய்யும் மாமழையே
நாங்கள்
நிராயுதபாணி
ஆகிவிட்டோம் 

இந்தவருடம் போய்
அடுத்தவருடம் வா...
இப்படிக்கு சென்னை மக்கள்!


=================================================================


மா மழையைத் தொடர்ந்து..

மழையாமியின்
பொழிவில்
ஆறுகள்
வெள்ளங்களை
ப்ரவகிக்கச் செய்த
அந்த நள்ளிரவில்
மறைந்தது மதம்
பூத்தது
மாபெரும் மனிதம்.

====================================================================

யதார்த்தக் கவிதை  :

அழுது கொண்டிருந்த
அனைவரும்
ஆற்றங்கரைக்குப்போய்க்
குளித்து விட்டு
வந்த பிறகு

புன்னகைக்கத் தொடங்கினார்கள்...

அடுக்களையை
எட்டிப்பார்த்த
அக்கா சொன்னாள்..
"எளவு..
எலையப் போட்டா
சாப்பிட்டுக் கிளம்பிடலாம்..
டிரெயினுக்கு நேரமாகுது...
"


=====================================================================

மேய்ப்பன் :

 
பசுக்கள்
திரும்பி விட்டன
மேய்ச்சலிலிருந்து.
மேய்ப்பனைத்தான் காணோம்.
வெள்ளை மாடொன்றின்
கொம்பில்
மாட்டியிருக்கிறது
உடைந்த புல்லாங்குழலின் 
துண்டு ஒன்று...


===================================================

சிந்தனைச் சிதறல்கள்.... !!

-  சிலர் சொல்லும் கருத்தை ஏற்காததற்கு அந்தச் சிலரை நமக்குப் பிடிக்காததும் காரணமாக இருக்கலாம்!.


-  தவறாயிருந்தாலும் சிலர் கருத்தை மறுக்காததற்கு அந்தச் சிலரை நமக்கு ரொம்பப் பிடிப்பதால் கூட இருக்கலாம்.

==================================================================

நீண்ட நாள் தேடி,  பின்னர் கிடைத்த, பிடித்த M K T பாகவதர் பாடல்  :

உன்னையே அன்புடன் வாரியணைக்கும்
உன்னையே அன்புடன் வாரியணைக்கும்


அன்னையே பூமியில் நீ தேடவும் நின்றாய்
விதிவசமென்றேன் 


கண்ணையிந்தேன் காணவுமில்லேன் என்
கண்ணையிந்தேன் காணவுமில்லேன்


கண்மணி நீயே கண்ணுறங்காயே
கண்மணி நீயே கண்ணுறங்காயே 


வானமுதே தேனே வாழ் உலகில் மானே
வானமுதே தேனே வாழ் உலகில் மானே


வளர்கண் தாலேலோ வளர்கண் தாலேலோ

புன்னகை மாமுக கனி பிழி ரசமே கனி பிழி ரசமே

தாவியே சூழத் தங்க மஞ்ச மேல் உறங்க மஞ்ச மேல் உறங்க

தாவியே சூழத் தங்க மஞ்ச

விழிகள் குளிரக் காணும் பூஜை செய்திலோமே பூஜை செய்திலோமே
தங்கமே ஏழையெமக் காவியும் நீயே ஆவியும் நீயே


43 கருத்துகள்:

  1. அலிஷா நம்பிக்கை அனைவருக்கும் ஆகட்டும்.
    கவி வரிகள் அருமை, நல்ல தொகுப்பு நன்றி.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே வாழ்க்கைத் துணை ஒவ்வொரு மனிதருக்கும் முதல் நபர் என்பது உண்மையே எனினும் தாய்-தந்தையர் முக்கியம்தான் என்பது எனது ஆணிக்கரமான கருத்து

    ஹைக்கூ அனைத்தும் ரசித்தேன் நண்பரே...

    இந்த பாடல் நான் முதன் முறையாக கேட்கிறேன் நண்பரே.... எனது பாட்டு புஸ்தகத்திலும் இல்லையே....

    பதிலளிநீக்கு
  3. அலிஷா குறித்துப் படித்திருக்கேன். மற்றவையும் நன்றாக இருந்தன. எம்.கே.டி. பாடல் எல்லாம் அவ்வளவாத் தெரியாது. ஹிஹிஹி, அம்புட்டு வயசாகலை பாருங்க, அதேன்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    சொல்லிய கருத்தும் கவித்துளிகளும் நன்று
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. து, கீ: கவிதைகள் அருமை ஸ்ரீராம்!!!! வெகு அருமை! ரொம்பவே ரசித்தோம். நீங்கள் வலையில் இதைப் போன்று பகிரலாமே இனியும்.

    சிந்தனைச் சிதறல்கள் சிதறவில்லை!!! பெரும்பான்மையான மக்களின் நிலைப்பாட்டைச் சொல்லுவதே!

    எம் கே டி பாகவதரின் குரல் வெகுநாட்களுக்குப் பிறகு. இதம்!

    கீதா: அலிஷா யோசிக்க வைக்கிறாள். அவள் சொன்ன கடைசி வரி.."கடைசி வரை என்னுடன் உண்மையாக அவர் வாழ்வைப் பகிர்ந்து கொள்பவர் என் கணவர் மட்டுமே.." ம்ம்ம்ம் இருந்தாலும் அவள் நம்பிக்கைக்கு ஒரு ஷொட்டு!

    தங்களுக்கும் தங்கள் குடும்த்தாருக்கும், சுற்றத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. அலிஷா பற்றி முகநூலில் படித்தேன். எத்தனை சண்டை சச்சரவு வந்தாலும் துணைவர் மட்டுமே என்றும் துணை.
    கவிதைகளும் (மழை பற்றி வந்த எல்லா கவிதைகளுமே மனதை தொட்டன) நன்றாக இருக்கின்றன. பலவித பூக்களின் மணத்துடன் நீங்கள் கொடுத்த (தொடுத்த) கதம்பம் மனதிற்கு இதம்.
    வரப்போகும் புதிய ஆண்டிற்கு நல்வரவு கூறியது போல இருக்கிறது.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 'எங்கள்' ஆசிரியர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும்!

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கைத்துணை எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக்காட்டும் பதிவு.
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கேட்க மறந்துவிட்டேன் 280 பதிவுகள் போட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  9. வாட்ஸப்பில் எழுதியிருந்தவர் யாரோ?.. அற்புதம் போங்கள். பத்திரிகைகளில் படிக்கும் கதைகள் பிச்சை வாங்க வேண்டும்.

    அலிஷாவிடம் கேட்கப்படும் கேள்விகள் குறைந்து கொண்டே வர, கடைசி கேள்வியை நெருங்கும் போது உறைந்தே போய் விட்டேன் எனலாம்.

    உங்கள் வாழ்க்கையில் அதி முக்கிய நபர் யார்?-- என்னும் கேள்விக்கு "நான்" என்பவர்கள் சுயநல்மிக்கவர்களாய்... இல்லை, தன்நம்பிக்கை மிக்கவர்களாய் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

    மற்றவைகளுக்கு>,, பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்க்கையில் அதி முக்கியம் நாம் மட்டுமே என்று நம்புகிறேன். கடைசிவரை யாரோ தானே தவிர அவரோ இவரோ இல்லை. கடைசி வரை என்பதே விளக்கத்திற்கப்பாற்பட்டது.

    மேய்ப்பன் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே.

    நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.

    பதிவின், கதையும், கவிதைகளும் மிகவும் அற்புதமாய் இருந்தது.ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன்.
    நான் வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. அன்பு நண்பரே,
    வணக்கம்.

    "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. பல்சுவைக் கலவையாக அருமையாக இருந்தது பதிவு. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  16. நல்ல தொகுப்பு.

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும், வாசகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)!

    பதிலளிநீக்கு
  17. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. முகநூலில் படித்த கதை...
    நல்ல தொகுப்பு அண்ணா...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்.

    நானும் படித்தேன்.

    மொத்தத்தில் இனிய கதம்பம்.

    தங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  21. நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி கில்லர்ஜி. உங்கள் எம் கே டி பதிவில் கூட இந்தப் பாடல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
  23. நன்றி துளசிஜி, கீதா. நீங்கள் அளிக்கும் ஊக்கத்துக்கு நன்றி. கவிதைகள் பதிவிட்டால் வாசகர் எண்ணிக்கைக் குறைந்து விடுகிறது! :)))

    பதிலளிநீக்கு
  24. நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம். ப்ளாக் இடது பக்க கட்டத்திலேயே பதில் இருக்கிறதே.. 298 பதிவுகள் போட்டிருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  25. நன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி ஜீவி ஸார். இந்த வாட்ஸப் பகிர்வு என்னையும் பாதித்ததனால்தான் முதலில் ஃபேஸ்புக்கிலும் பின்னர் இங்கும் பகிர்ந்தேன்! மற்றவைகளுக்குப் பிறகு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்! காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  27. நன்றி அப்பாஜி. எனக்கு(ம்) அப்படித் தோன்றியது. தவறோ என்று நினைத்தேன்! மேய்ப்பன் பாராட்டுகளுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  30. நன்றி நண்பர் ஊமைக்கனவுகள்.

    பதிலளிநீக்கு
  31. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
  32. அலீசாவின் முடிவுதான் சரி !

    பதிலளிநீக்கு
  33. அலிஷா பெண்ணாகிப் போனாள். இதே கேள்வியை ஒரு ஆணிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும் நானாக இருந்தால் என் மனைவி என்பேன் ஆனால் எல்லோருக்கும் இதில் உடன்பாடு இருக்குமா தெரியவில்லை. இந்த நான் தான் முக்கியமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்னை நானே அழிக்க முடியுமா.ஐ மீன் ப்லாக் போர்டில் ..!சிந்தனைச் சிதறல்கள் யோசிக்க வைக்கிறது ஃபேஸ்புக்கில் சிலவற்றைப் படித்தநினைவு. ஃபேஸ்புக்கில் லைக் போட்டேனா நினைவில்லை. ஆனால் அனைத்தையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!