செவ்வாய், 15 டிசம்பர், 2015

அலுவலக அனுபவங்கள் - அவசர காலத்தில் அதிகாரிகள் எப்படிச் செயல்படலாம்?



பல வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம்.


அது ஒரு அரசு சார்ந்த தொழிற்சாலை. அப்போது மத்திய அரசினால் ஒரு ஆணை பிறப்பிக்கப் படுகிறது.


எந்த ஒரு சிவில் வேலையும், அதாவது கட்டுமானப் பணிகள் போன்ற புதிதாக எந்த ஒரு வேலையையும் தொடங்கக் கூடாது.


அப்போது அந்த ஊரில் ஒரு இயற்கைப் பேரிடர்.  ஆங்காங்கே சிரமங்கள் இருந்தாலும் ஓரளவு பாதுகாப்பாகவே இருக்கும் ஊர். 


இந்தத் தொழிற்சாலையில் ஒரு முக்கியமான பிரிவில் வேலைகள் சரியாகவே நடக்கவில்லை.  அதிகாரிகளால் முதலில் ஏன், என்ன என்று விஷயத்தை ஊகிக்க முடியவில்லை.  அனால் வேலை அந்தக்க வேண்டும்.


அப்போது சற்று புத்தி கூர்மையுள்ள அதிகாரிகள் விஷயத்தைக் கண்டு பிடித்தார்கள்.  அந்தப் பிரிவினர் வாழும் குடியிருப்பில் பாதுகாப்பற்ற நிலை.  சுற்றுச் சுவர் உடைந்து விழுந்து வெள்ளம் சூழும் அபாயம்.  அரசு ஆணை காரணமாக ஒன்றும் செய்யவும் முடியாது என்று அலுவலகத்தில் சொல்லி விட்ட நிலையில் மன அழுத்தம்.  வேலை நடக்கவில்லை.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு அதிகாரி ஒரு ஐடியா கொடுத்தார்.  மதியான லஞ்ச் அவரில் இது சம்பந்தமாகப் பேச்சு வந்தது.  அவர் இப்படி எழுதலாம் என்று பேச்சு வாக்கில் சொல்லிக் கொண்டிருந்ததை மறுநாள் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எழுதி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார், அலுவலகத்தில் பொறுப்பில் இருந்த அதிகாரி.


அதாவது, தொழிற்சாலையின் உற்பத்தி முக்கியம்.  அதிலும் அந்தத் தொழிற்சாலையின் ஆணிவேரான பகுதி அது.  மன அழுத்தம் காரணமாக தொழிற்சாலையின் உற்பத்தி பாதிக்கப் பட்டிருக்கும் விஷயத்தை முக்கிய விஷயமாகக் குறிப்பிட்டு,  அதனால் இந்தக் குறை களையப்பட்டால் இந்த பாதிப்பு நீங்கி, தொழில் உற்பத்திக்கு நன்மை கிட்டும் என்ற வகையில்
அனுமதி கேட்டு கடிதம் எழுதப் பட்டது.


மேலதிகாரி, உயர் அலுவலகம், அதற்கும் உயர் அலுவலகம் என்று ஏதோ ஒரு வகையில் இந்தக் கடிதம் பிரதம மந்திரி வரை சென்று விட, அவர், இந்த அர்த்தத்தில் எல்லாம் இந்த ஆணை பிறப்பிக்கப் படவில்லை.  அனாவசியச் செலவுகளைக் குறைக்கத்தான் ஆணை,  அத்தியாவசியத் தேவைகளை நிறுத்த அல்ல சில ஆணைகளுக்கான விதி விலக்குகளை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தன் கைப்படக் குறிப்பு எழுதி உடனடி அனுமதி அளிக்க உத்தரவிட்டார்.


வேலையும் நடந்தது.  சுற்றுச் சுவராக கருங்கல் சுவர் கட்டப்பட்டது.  மன அழுத்தம் நீங்கியது.


பக்கத்து அலுவலகங்களிலிருந்து வந்து, இந்த மாதிரி ஒரு ஆணையால் எல்லாரும் சும்மா இருக்கும் வேளையில் எப்படி இப்படி ஒரு கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்ய முடிந்தது என்று ஆச்சர்யமாகக் கேட்டார்கள்.  


விஷயத்தைச் சொன்னதும் 'ஓ.. இப்படிக் கூட டிராஃப்ட் செய்ய முடியுமா?' என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.


சுவர் உடையப் போகிறது, கட்டிக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டிருந்தால் அனுமதி கிடைத்திருக்காது, ஏன், அடுத்தடுத்த லெவல் மேலதிகாரிகளுக்கு அந்தக் கடிதம் ஃபார்வார்டே ஆகியிருக்காது, கடிதம் முதல் கட்டத்தையே தாண்டியிருக்காது.   ஆணைகளில் இருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை மட்டுமே படிக்கும் அதிகாரிகள் இங்கேயே மடக்கிப் போட்டிருப்பார்கள்.  வேலையும்  நடந்திருக்காது.

31 கருத்துகள்:

  1. //விஷயத்தைச் சொன்னதும் 'ஓ.. இப்படிக் கூட டிராஃப்ட் செய்ய முடியுமா?' என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.//

    என் அலுவலகத்தில் நான் டிராஃப்ட் போட்டு, அனைவருக்கும் நன்மையளிக்கும் படியாக சாதித்துக்கொடுத்த எவ்வளவோ பல விஷயங்கள் என் நினைவுக்கு வந்தன.

    எதுவுமே நாம் எழுதும் டிராஃப்ட்டில்தான் உள்ளது என்பது மிக மிக உண்மை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆடிக்கறக்கும் மாட்டையும் ஆடியும், பாடிக்கறக்கும் மாட்டை பாடியும்தான் கறக்க வேண்டும்.

    அன்றாடப் பிரச்சனைகளெல்லாம் கீழ்மட்ட அதிகாரிகளே சந்திக்க நேரிடும்.

    சொல்லவேண்டியதை, சொல்ல வேண்டிய முறையில், அழகாகவும் தெளிவாகவும் எடுத்துச்சொன்னால், எவனும் பொதுவாக ஒத்துக்கொள்வான்.

    அப்படியும் ஒத்துக்கொள்ளாத பிடிவாதக்காரர்களாக (மரமண்டைகளாக) இருப்பினும், போட்டுக்காண்பித்தால் போதும் ... அவர்களே பிரச்சனைகளின் ஆழத்தையும், வீர்யத்தையும், அன்றாட விளைவிகளால் உணர்ந்துகொண்டு, கீழ் இறங்கி ஓடோடி நம்மிடம் வருவார்கள். பிறகு பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.

    கீழ்மட்ட அதிகாரிகளுக்கு நாலும் தெரிந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. யோசனை நன்றாகத்தான் இருக்கிறது நண்பரே இதை நிலுவையில் இருக்கும் அரசும் கவனித்தால் நலமே...

    பதிலளிநீக்கு
  4. கேட்பது மாதிரி கூறுவது அவசியம் தான்..

    பதிலளிநீக்கு
  5. சொல்லுகின்ற விதத்தில் சொல்லப்பட்டால் எதுவுமே நடக்கும் என்பது மிகவும் சரிதான். அதாவது மிகவும் தேவை என்று நினைப்பதைச் சாதிக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியம் என்பதுதான் இது.

    கீதா: சரி இது தமிழகத்தில் வொர்க்கவுட் ஆகுமா?????? அதுவும் நிதர்சனமாகத் தெரியும் பப்ளிக் ஹெல்த்...இதற்கும் லெட்டர் அவசியமோ???!!!!

    பதிலளிநீக்கு
  6. நிலுவையில் இருக்கும் ஆணைகளை வரிக்கு வரி அர்த்தம் கொண்டால் தைரியமாக எந்தச் செயலையும் செய்ய முடியாது

    பதிலளிநீக்கு
  7. இதை யாருக்காக சொல்ல வறீங்க நண்பரே!!

    பதிலளிநீக்கு
  8. மேலே மேலே போய் பதிலும் வந்திருக்கே.. ஹ்ம்ம்ம்!

    பதிலளிநீக்கு
  9. இங்கே ஒருசில அதிகாரிகள் யோசிப்பதே இல்லை!

    பதிலளிநீக்கு
  10. நன்றி வைகோ ஸார். திறமையாக வேலை செய்பவர்கள் யோசித்து வேலை செய்வார்கள். கடமைக்கு செய்பவர்கள் காரணம் காட்டி எஸ்கேப் ஆவார்கள்!

    பதிலளிநீக்கு
  11. நன்றி கில்லர்ஜி. அரசைப் பொறுத்து அல்ல இது. அதிகாரிகளைப் பொறுத்தது!

    பதிலளிநீக்கு
  12. நன்றி கீதா. எந்த இடத்திலுமே புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்தானே...

    பதிலளிநீக்கு
  13. நன்றி நண்பர் சொக்கன். இதை யாருக்காகவும் சொல்ல வரவில்லை. அலுவலக அனுபவங்கள் சீரிஸில் இன்று இது! அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  14. நன்றி சகோதரி தென்மதுரத்தமிழ் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  15. சொல்கிற விதத்தில் சொன்னால் தான் வேலை நடக்கும்.....

    நல்ல அனுபவம்.

    பதிலளிநீக்கு
  16. இதே மாதிரி, ஒரு சம்பவம் ...தெருவின் நடுவில் இருந்த மின் கம்பத்தை அகற்றக் கோரி மக்கள் போராடிப் பார்த்தார்கள் ,மின் வாரியம் அசைந்து கொடுக்கவில்லை .ஒரு லாரியை செட் அப் செய்து அந்த மின் கம்பத்தில் லேசாக இடிக்கச் செய்தார்கள் ,அடுத்த சில நாட்களிலேயே நந்தியாய் நின்ற கம்பம் ஓரமாய் ஒதுங்கி விட்டது :)

    பதிலளிநீக்கு
  17. சொல்லும் சொல்லில் இருக்கிறது
    செயலின் வெற்றியும் தோல்வியும்
    அருமை நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  18. சில இடங்களில் அறிவையும் பயன்படுத்தவேண்டியது அவசியம். சட்டங்களையும் விதிகளையும் மட்டுமே பார்த்தால் பயனில்லை.

    பதிலளிநீக்கு
  19. அணை உடையப்போகிறது எனச்சொல்லி காத்திருந்ததற்கு...தோட்டம் முழுகப்போகிறது என்றிருந்தால் முன்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமோ....

    பதிலளிநீக்கு
  20. நான் இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  21. ஆளுவது அதிகாரிகள்தான்..பேரு..அமைச்சர்களுக்கு....

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. நாட்டை ஆள்வது அதிகாரிகள்தான்.... பேரு ஆளம் கட்சிகளுக்கு....

    பதிலளிநீக்கு
  24. //அனால் வேலை அந்தக்க வேண்டும்.//

    இதுக்கு என்ன அர்த்தம்னு புரியலையே? :)

    பதிலளிநீக்கு
  25. மனிதாபிமானமுள்ள அதிகாரி! அது சரி, எந்த ஊர்? எந்தப் பிரதமர்? எந்த அதிகாரி? எந்த அலுவலகம்? அதெல்லாம் சொல்ல வேண்டாமோ? :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!