மு(எ)ன்னுரை :: நன்றி ஜீவி ஸார். என் என் வேண்டுகோளுக்கு இணங்கி, நீங்கள் அனுப்பிய உங்கள் கதைகளில் ஒன்றை இங்கு உங்கள் அனுமதியோடு பிரசுரிக்கிறோம்.
எந்தக்
காலத்துக்கும் பொருந்தக் கூடிய கதை. வாசகர்கள் இதைப் படித்துத் தங்கள்
கருத்துகளை இங்கு விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
உங்களின்
கதை ஒன்றைப் பிரசுரிக்கும் வாய்ப்பு 'எங்களு'க்கு அமைந்தது தற்செயல்தான்
என்றாலும், அடுத்தடுத்தும் நம் வலையுலக நண்பர்களின், பத்திரிகைகளில்
பிரசுரமான, அவர்களின் படைப்புகளை, அவர்களிடம் கேட்டு (அவர்கள் மனமுவந்து கொடுத்தால்) வாங்கிப் பிரசுரிக்க எண்ணம்.
அடுத்த படைப்பை திருமதி ராமலக்ஷ்மி அவர்களிடமிருந்து கேட்க எண்ணம். இங்கு பொதுவில் சொல்லி விட்டேன். மெயில் மூலம் இனிதான் கேட்க வேண்டும்.
திரு ஜீவியின் வலைத்தளம் பூவனம்.
திரு ஜீவியின் வலைத்தளம் பூவனம்.
இனி ஜீவி ஸார் படைப்பு உங்கள் பார்வைக்கு...
============================== ==========================
காலத்தின் முத்திரை செழுமைக்காகக் காத்திருக்கும் கதை
============================== ========================
அது என்ன காலத்தின் செழுமைக்காகக் காத்திருத்தல்?
'தி இந்து' டிசம்பர் 24, 2015 பதிப்பில் ஒரு செய்தி:
தமிழகத்
தலைநகரில் தற்போது 4 குடும்ப நல நீதி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும்,
வழக்கு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாலும் கூடுதலாக 4 குடும்ப நல
நீதிமன்றங்கள் அமைப்பதற்காக ரூ.3.15 கோடியை தமிழ்க அரசு ஒதுக்கியுள்ளது
-- எவ்று செய்தி வந்துள்ளது.
இது தான் காலத்தின் செழுமைக்காக காத்திருப்பது. விவாகரத்து போன்ற மன வேற்றுமை செயல்பாடுகளைக் குறைப்பது.
விகடனும் குமுதமும்
ஜீவி
வெள்ளிக்கிழமை சாயந்திரம் வரை ராஜியிடமிருந்து போனில்லை.
கோர்ட் வழிகாட்டல் கொடுத்து மூன்று மாசமாயிற்று; இதுவரை இப்படி நடந்ததில்லை. சரியா நாலு மணிக்கு ராஜியிடமிருந்து எத்தனை மணிக்கு இவன் வீட்டுக்கு வந்து குழந்தையைக் கொண்டு வந்து விடுகிறாள் என்று போன் வந்து விடும். முதல் தடவையாக இன்று தான் போனில்லை.
மோகனுக்கு ஆயாசமாக இருந்தது.
நாலரை மணிவரை கூப்பிடக் காணோம். என்ன ஆயிற்று இவளுக்கு?.. அவனால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாமே அவளுக்குப் போன் பண்ணிப் பார்க்கலாமா என்று அவன் நினைத்த பொழுது தான் தொலைபேசி கூப்பிட்டது.
ராஜிதான் லைனில் இருந்தாள். அவள் குரலில் ஏகப்பட்ட பதட்டம். "ரமேஷை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது" என்று முழுசாக மூணு வார்த்தைகள் சொல்வதற்குள் அவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது.
மோகன் பதறிப் போய்விட்டான். "என்னாச்சு?.. எங்கேயிருந்து பேசறே?.." என்று தடுமாறினான்.
"ஆசுபத்திரிலேந்து
தாங்க... குழந்தைக்கு திடீரென்று ஜூரம் அனலாக் கொதிக்க..."
"எந்த ஆசுபத்திரி?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவனுக்கு நெற்றி பூராவும் வியர்த்து விட்டது.
"புஷ்பம் ஆசுபத்திரிங்க...ஆறாவது வார்ட்... இன்னிக்கு ஸ்கூல் கூட போனான்.." அவள் சொல்லி முடிக்கக் கூட பொறுமையாக அவனால் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை.
"இதோ வந்திட்டேன்.." என்று போனைத் துண்டித்து, கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
புஷ்பம் ஆசுபத்திரி வழக்கமான ஆசுபத்திரி களையுடன் இருந்தது.
லிப்ட்டிற்கு காத்திருக்கையில் 'ச்சை..' என்று வெறுத்து, ஒருவழியாக அது வந்து ஆறேழு பேர் அதில் திணிக்கப்பட்டு, ஆறாவது மாடிக்கு வருகையில் அவனுக்கு வியர்த்தது... வார்டுக்குள் நுழைகையிலேயே ராஜி எதிர்ப்பட்டாள். "என்ன செஞ்சு தொலைத்தே?" என்று சீறிவிழப் போனவன், முகம் நிறைந்த கலவரத்துடன் அவளைப் பார்த்ததும் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.
ரமேஷ் கட்டிலில் ஜூர அனத்தலில் கிடந்தான். " இங்கே பார்! அப்பாடா..ரமேஷ்!.." என்ற அவனின் கூப்பிடலுக்கு லேசாகக் கண்ணைத் திறந்துப் பார்த்து உடனே மூடிக்கொண்டான்.
"இப்போத்தான் டாக்டர் வந்து ஊசி போட்டு விட்டுப் போனார்.... தூங்கி எழுந்திருந்தா ஜூரம் தணியும் என்று சொல்லியிருக்கார்.." என்று சொன்னவளை விரோதத்துடன் பார்த்தான்.
"வழக்கம் போல ஸ்கூலுக்குப் போனான்.. அவன் வந்ததும், உங்ககிட்டே கொண்டு வந்து விடலாம் என்று நானும் ரெடியாத்தான் இருந்தேன்.. வரும் பொழுதே தலைய வலிக்கறது அம்மான்னான். நெத்திலே கைவைச்சுப் பார்த்தா லேசா சுட்டது..மாத்திரை கொடுத்தேன்,கேக்கலே.. கொஞ்ச நேரத்லே ஜூரம் தகிக்க ஆரம்பிச்சிடுத்து...அதான், இங்கே அட்மிட் பண்ணிட்டு, உங்களுக்கு போன் செஞ்சேன்.." என்று மூச்சு வாங்க ஒப்பித்த அவளைப் பார்க்கையில் அவனுக்கு லேசாகப் பரிதாபமாக இருந்தது.
"டாக்டர் என்ன சொன்னார்?"
"ஊசி போட்டிருக்கார்..மாத்திரையும் கொடுத்திருக்காங்க.. சாதாரண ஒவ்வாமை தான், சரியாப் போயிடும்னு சொன்னார்.." என்று சொல்லிவிட்டு, புடவைத் தலைப்பால் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த குங்குமப் பொட்டு அழிந்து விடாமல் ஜாக்கிரதையாக வேர்வை துடைத்துக் கொண்டாள் ராஜி. கழுத்தில் இரட்டைவட சங்கிலியுடன் தாலிச்சரடு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.
அவன் வந்ததும் தான் அவளிடம் இருந்த பதட்டம் தணிந்து லேசான நிம்மதி ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்து விட்ட நிம்மதி.
கொஞ்ச தூரத்தில் ஸ்டெத்ஸ் மாலையுடன் நாலைந்து பேர் விவாதித்தபடி வருவது கண்ணுக்குத் தட்டுப்பட்டது. அதில் சிவப்புக்கலர் சட்டை போட்ட ஒருவரைச் சுட்டி, "அந்த டாக்டர் தாங்க நம்ம ரமேஷைப் பார்த்தது.." என்றாள் ராஜி.
அதற்குள் டாக்டரே இவர்கள் இருந்த இடத்திற்கு வந்து விட்டார். அவளைப் பார்த்து, "பிளட் ரிசல்ட்டும் பார்த்திட்டேன்...பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை..." என்றவர், கட்டிலில் கிடந்த ரமேஷின் நாடி பிடித்துப் பார்த்து விட்டு தலை நிமிர்ந்தார். இப்பொழுதுதான் மோகனைப் பார்த்தார் போலும்.
அதற்குள் மோகனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். "நான் தான் ரமேஷ் ஃபாதர், டாக்டர்.. "
"அப்படியா...குட்..ஒண்ணுமில்லை, கொஞ்ச நேரத்திலே, ஜூரம் விட்டுறும்.. தென் ஹி வில் பி நார்மல்.. ஓ.கே.. கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் .." என்ற டாக்டர்,
மோகனைப் பார்த்து, " இன்னும் ரெண்டு வேளைக்கு மாத்திரையை மட்டும் கண்டினியூ பண்ணச்சொல்லியிருக்கேன்..நான் நாளைக்குப் பாக்கறேன், அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்...
அவர் கிளம்பும் பொழுது ராஜியைப் பார்த்து, "நல்லவேளை..உடனே கூட்டி வந்து அட்மிட் செய்தீர்கள்.." என்று அவள் செய்ததைப் பாராட்டுகிற மாதிரி சொன்னது, அவனுக்கு ஏதோ தான் குற்றமிழைத்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
நினைத்துப் பார்க்கையில் எல்லாம் ஏதோ நாடகம் போலிருக்கிறது. யாரோ முதலிலேயே சீன் சீனாக அழகாக எழுதி, காட்சியமைப்புகள் எல்லாம் தீர்மானித்து விட்டு, இந்த இந்த பாத்திரங்களில் நடிக்க நீங்களெல்லாம்தான் லாயக்கு என்று நடித்துக் கொடுக்கக் கூப்பிட்ட மாதிரி இருக்கு.. நடிப்பதில் ஒன்றுதலும், செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்கிற பக்குவமும் இருந்தால், அப்படிப்பட்டவர்களுக் கென்று ஸ்பெஷலாக காட்சியமைப்புகளில் மாற்றம் இருக்கும் போலிருக்கிறது. மற்றபடி வாழ்க்கையே அடுத்த காட்சி என்ன என்று தெரியாத நாடகமேடையாகத்தான் அவனுக்குப் பட்டது.
இன்னகாரணம் என்று சுட்டிக் காட்ட எதுவும் இல்லை. தொட்டதெற்கெல்லாம் அது எதெனால் என்று தெரியவில்லை, இருவருக்கும் பிடிக்காமல் போயிற்று.
கல்யாணம் ஆகி புதுக்குடித்தனம்
ஆரம்பித்த நாளிலிருந்து இந்தக் கதைதான். அவனுக்கு விகடன் என்றால் இவளுக்கு குமுதம் என்கிற மாதிரி சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் மாறுபட்ட கருத்து.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் தங்கள் சுயத்தைக் கட்டி அழுதால் இப்படித்தான் நேரும் போலிருக்கு. இருவரிடத்திலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுத்தல்
இல்லாதபொழுது அது வெடித்துச் சிதறியது. கடைசியில் பிரிந்து விடுவது என்று தீர்மானித்து கோர்ட் வரை போனார்கள். அவர்களும் ஆனவரை சேர்த்துவைக்கப் பார்த்தார்கள். முடியாது போனபோது, 'ஆறுமாசம் தனித்தனியாக வாழ்ந்து காட்டுங்கள்; அப்புறம் தான் எந்த நடவடிக்கையையும் பற்றித் தீர்மானிக்க முடியும்' என்றார்கள். ராஜி அவள் பிறந்த வீட்டிற்குப் போனாள். பெற்றவர்கள் சொன்ன எந்த புத்திமதியையும் ஏற்றுக் கொள்ள இருவருக்குமே சங்கடமாக இருந்தது.
இவர்கள் இருவரும் குவிமையமாக ஒன்று சேர்ந்த ஒரே விஷயம், பெற்றெடுத்த குழந்தையிடம் பாசம் காட்டியது தான். அவனுக்கும் பத்து வயசு முடியப்போகிறது.. நான்காம் வகுப்பு படிக்கிறான். ரமேஷின் பள்ளிக்கூட நேரமும், இவர்கள் அலுவலக நேரமும் போக மற்ற நேரமெல்லாம் அவனிடம் கொஞ்சிக் குலாவுவதில் இருவருமே குறைவைத்ததில்லை; தனித்தனியான கொஞ்சல் போக, சில நேரங்களில் குழந்தையை நடுவில் வைத்து ஆளுக்கொரு பக்கமாக அணைத்துக் கொள்ளும் சந்தர்பங்களும் வரும். இருவர் முகங்களும் குழந்தையை நடுவில் வைத்து மிக நெருக்கத்தில் இருக்கும் அப்படிப்பட்ட நேரங்களில், இரண்டு பேருக்கும் இடையே ஏன் இந்த முரண்பாடு, எதற்காக இப்படி ஒருத்தருக்கொரு த்தர் மாறுபட்டு சண்டை போட்டுக் கொள்கிறோம் என்று இருவருக்குமே புரியாது. இருந்தும் ஏதாவது ஒரு விஷயத்தில் அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் முரண்பட்டு அதுவே ஒரு பெரும் குதறலாக முடிந்துபோகும்.
அதுவும் கோர்ட் சொன்ன வழிகாட்டல் தான்; ஒவ்வொருவாரமும் ஒருவரிடம் என்று, மாற்றி மாற்றி குழந்தை இருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுக்குள் யாரிடம் குழந்தை இருக்கிறதோ, அவர் இன்னொருவரிடம் குழந்தையை தன் பொறுப்பில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டு இதுவரை காப்பாற்றிவிட்டார்கள். எந்தத் தடவையும் இல்லாதபடி இந்தத் தடவைதான் குழந்தை ரமேஷூக்கு உடல்நிலை சரியில்லாது போய் அவனை ஆசுபத்திரியில் சேர்க்கும் படி ஆகிவிட்டது.
"ஏங்க...குழந்தை உங்களைக் கூப்பிடறாங்க.." என்று ராஜியின் குரல் கேட்டு, மூலையில் ஸ்டூலில் உட்கார்ந்த்திருந்தவன், சிந்தனை கலைந்து 'பெட்'டுக்கு ஓடி வந்தான்.
மலங்க மலங்க விழித்த ரமேஷைப் பார்த்து ஆடிப்போய்விட்டான் மோகன். "ரமேஷ்..இங்கே பார்!..அப்பா வந்திருக்கேன், பார்.." என்று தடுமாறியவனின் சட்டை நுனியைப் பிடித்துக் கொண்டான் குழந்தை.
ஜூரம் தணியாததின் வேகம் கண்ணிலும், அணத்தலிலும் வெளிப்பட்டது. "அப்பா..." குரல் ஈனஸ்வரத்தில் குழந்தையிடமிருந்து வெளிப்பட தலைகுனிந்து, "நான் இங்கேதாண்டா இருக்கேன்.." என்று வாத்ஸல்யத்துடன் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
அரைகுறைக் குழறலுடன். "அப்பா..நீ எங்கேயும் போயிடாதேப்பா.." என்று கைநீட்டி மோகனின் முகம் தொட்டான் ரமேஷ்.
மோகனின் கண்கள் கலங்கி விட்டன.."எங்கேயும் போகமாட்டேன்...இங்கேயே இருக்கேன், பார்!" என்று அவன் ரமேஷை அணைத்துக் கொண்டபொழுது தணலாகச் சுடும் உடம்பின் வெப்பம் அவனையே சுட்டது. 'ஆண்டவனே!... குழந்தையைக் காப்பாற்று....அப்படியே இந்தக் குழந்தையின் ஜூரத் தகிப்பை எனக்கு மாற்றிவிடு...எந்தத் தப்பும் செய்யாத இந்த சின்னஞ்சிறு உயிரைக் காப்பாத்துப்பா' என்று மனசார வேண்டிக் கொண்டான் மோகன்.
அவன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்து விட்டாள் ராஜி. "அதான் டாக்டர் சொன்னாரே..ரமேஷுக்கு சரியாப் போயிடுங்க...நீங்க கலங்கினா, எனக்கு யாருங்க ஆறுதல் சொல்லுவா...ப்ளீஸ்.."
கொஞ்ச நேரத்தில், ரமேஷூக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு தூக்கம் வந்ததோ தெரியவில்லை....சீராக சுவாசம் இழையோட, லேசாக உதடு திறந்து தூங்கும் குழந்தை கையைத் தொட்டவாறு அருகேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து விட்டான் மோகன். படுக்கைக்கு அருகில் சுவரில் சாய்ந்தவாறு ராஜி.
பொல பொலவென்று பொழுது விடிந்திருந்தது.
லேசான முதுகுத் தொடலில் திடுக்கிட்டு விழித்தான் மோகன். ராஜிதான். அப்படியே ஸ்டூலில் உட்கார்ந்தபடி தன்னையறியாமல் தூங்கிப் போயிருக்கிறான்.
"தூக்க மருந்து கொடுத்திருக்காங்க போலிருக்கு; ராத்திரி முழுக்க ரமேஷ் நல்லாத் தூங்கினாங்க... இப்போ ஜூரம் நல்லா இறங்கியிருக்குங்க.." என்று முகம் மலரச் சொன்னாள்.
நெற்றியில் கைவைத்துப் பார்க்கையில் மோகனுக்கும் திருப்தியாயிருந்தது.
"நீங்களும் இல்லையா?..நான் ரொம்பவும் பயந்து போய்ட்டேங்க..இனிமே என்னை விட்டு எங்கேயும் போயிடாதீங்க.." என்றவளின் கண்கள் கலங்கி அவனை நெகிழச்செய்தது.
"சீ..அசடு மாதிரி அழாதே!..என்னை விட நீ தான் தைர்யசாலின்னு நான் நெனைச்சிண்டு இருக்கேன்.. நீயே கலங்கினா, எனக்கு யார் இருக்கா, சொல்லு!" என்று மோகன் அவள் கைபற்றினான்.
"எல்லாம் என் தப்பு தாங்க.. நான் சொல்றது ரைட்டாத்தான் இருக்கும்ங்கற மனோபாவம்..சின்ன வயசிலேந்து, இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுத்துப் போகணும்ங்கறது தெரியாமலேயே வளர்ந்திட்டேங்க...எங்க அம்மா,அப்பா சொல்றதைக் கேட்டிருந்தாக்கூட இந்தளவுக்கு ஆகியிருக்காது.." என்று குமைந்தவளை ஆசுவாசப்படுத்தினான் அவன்.
"இல்லே, ராஜி.. நீ எவ்வளவோ நல்லவள்; வெகுளி...எனக்கும் இத்தனை முரட்டுத்தனம் கூடாது."
"நீங்க ஆயிரம் சொல்லுங்க, எனக்கு மனசு கேக்கலே..நமக்குன்னு யார் இருக்கா சொல்லுங்க... அப்பா-அம்மா இருக்காங்கதான்! இருந்தாலும் நாமே அப்பா அம்மா ஆகிட்ட பின்னாடி கொஞ்ச கூட விவஸ்தையில்லாம, நம்ம குழந்தைக்கெதிராவே சண்டை போட்டிருக்கோமே?.. நம்மை விட்டா அதுக்குத்தான் வேறே என்ன நாதி இருக்கு?..ராத்திரி பூரா நெனைக்க நெனைக்க எனக்கு மனசே ஆறலிங்க.." என்று கேவியவளை, தோள் தொட்டுச் சமாதானப்படுத்தினான் மோகன்.
"சரி..சரி..உனக்கு நான்; எனக்கு நீ; நமக்கு நம்ம குழந்தை ரமேஷ்!. சரிதானா?.. முக்கோணம் போல அமைஞ்சாச்சு...அதைக் காப்பாத்திக்கறது நம்ம சாமர்த்தியம்.. இத்தனை காலம், யதார்த்த உலகம் புரியாம வானத்லே பறந்தோம்..இப்போ தான் பூமிலே கால் பாவித்து..." என்று ஏதோ தத்துவம் போல் சொல்பவனை, புரிந்து கொள்ள முயற்சிப்பது போல நிமிர்ந்து பார்த்தாள் ராஜி.
காலை டெஸ்ட்டுகளுக்காக தூரத்தில் நர்ஸ் வருவது தெரிந்தது.
"நீ வேணா பல் விளக்கிட்டு வா..நான் போய் காப்பி வாங்கிட்டு வந்திடறேன்" என்றான் மோகன்.
"இல்லே..மாமா ராத்திரி போன் பண்ணினார். வர்றதா சொல்லியிருக்கார்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மோகனின் பெற்றோர் அந்த வார்ட் கோடியில் வருவது தெரிந்தது. கூடவே ராஜியின் அப்பாவும் அம்மாவும். மோகனின் அம்மா கைக்கூடையில் காபி பிளாஸ்க் இருப்பது பக்கத்தில் வந்ததும் தெரிந்தது.
"ரமேஷூக்கு இப்போ எப்படிம்மா, இருக்கு..தேவலையா?" என்றவருக்கு, "இப்போ பரவாயில்லையப்பா. டாக்டர் வந்து பார்த்திட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடுவார் என்று நினைக்கிறேன்" என்றாள்.
"எங்களுக்கு ரொம்ப கவலையா போயிடுதுப்பா.." என்ற ராஜியின் அப்பாவிற்கு, "நானும் ரொம்ப பயந்திட்டேன், மாமா..இப்போ எங்க கண்களும் திறந்திடுச்சி.." என்று அவரை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான் மோகன்.
கொண்டு வந்த கைக்கூடையில் இருந்த காபி பிளாஸ்க்கை டேபிளின் மேல் வைத்த மோகனின் அம்மா, கைப்பர்ஸ் திறந்து ஒரு பொட்டலம் பிரித்து அதிலிருந்த வீபூதியை வேண்டிக்கொண்டே ரமேஷின் நெற்றியில் இட்டார்.
மாம்பலம் வீடு.
சோபாவின் ஆளுக்கொரு பக்கமாக மோகனும், ராஜியும் இருக்க நடுவில் ரமேஷ்.
"என்னப்பா உன் கையிலே குமுதம்! அம்மா புஸ்தகம்னா அது?" என்று அப்பாவைத் துளைத்தெடுத்த ரமேஷூக்கு, "இது கூட வெறைட்டியா நன்னாத்தாண்டா இருக்கு," என்றவனை மலங்க மலங்கப் பார்த்தான் ரமேஷ்.
"விகடன் மட்டும் என்னவாம்?..அட்டகாசமான்னா இருக்கு.." என்று அப்பாவைப் பார்த்து குறும்புடன் சொன்ன அம்மாவைப் பார்க்கையில் அதிசயமாக இருந்தது அவனுக்கு.
மோகனின் பக்கத்தில் இன்னும் நெருங்கி, ரகசியமாக அவன் கைதொட்டு தன் கைக்குள் வைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ராஜிக்கு இந்த சொர்க்கமே தன் கைக்குள் இருப்பது மாதிரியான உணர்வேற்பட்டது.
'ரமேஷூக்கு அடுத்து இதோ இன்னொரு குழந்தை' என்று நினைத்துக் கொண்டான் மோகன்.
அருமை
பதிலளிநீக்குஅருமை
விட்டுக் கொடுப்பதில் அல்லவா இருக்கிறது
மகிழ்ச்சியும் வாழ்வும்
நன்றி நண்பரே
தம +1
எல்லாம் நன்மைக்கே என்று சொல்வார்கள் பெரியவர்கள் காய்ச்சலும் நன்மைக்கே...
பதிலளிநீக்குஆஹா அருமையான கதை. தலைப்பே சூப்பர்.
பதிலளிநீக்குவிட்டுக்கொடுப்பதில் இருக்கிற சுகமே தனி தான்.
இது கதையல்ல!நிஜம்!படித்தேன் நெகிழ்ந்தது இதயம் விட்டுக் கொடுத்தால் வாழ்வே கெட்டுப் போகாது!
பதிலளிநீக்குகல்யாணம் ஆனா புதிதில் நான் விகடன், என் கணவர் கஸ்தூரி குமுதம். இப்போ விகடனும், ஹிந்து தமிழும்:)) அருமையான கதை சகா:)
பதிலளிநீக்குகதை அருமை ஜிவி சார்! வாழ்க்கையே இப்படித்தானே! தலைப்பு வித்தியாசம்!
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
என்னைப் பொறுத்தவரை இந்தக் குளறுபடி எல்லாம் இல்லை! இதிலும் நாங்க தனி! புத்தகங்கள் படிப்பதெல்லாம் நான் மட்டுமே. போட்டியே கிடையாது! :) அவர் பல சமயங்களிலும் புரட்டிப் பார்ப்பதோடு சரி! :) ஆகவே அவரவர் ருசி அவரவருக்கு என்று இருக்கோம். மேலும் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் தான் ரசனையும் கூட!
பதிலளிநீக்குஆனால் இந்தக் கதையை வெளிவந்தபோதே படித்த நினைவும் இருக்கு. நல்ல ஓட்டம். முடிவு முன் கூட்டியே அனுமானிக்க முடிந்தாலும் கடைசிவரை படிக்க வைத்த கதை! தேடி எடுத்துப் போட்ட உங்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குநல்ல கதை. தலைப்பும் அருமை!
பதிலளிநீக்குஅருமை.மனதுக்கு நிறைவான முடிவு.பெற்றோரின் ஈகோவால் குழந்தைகள் பாதிக்கப் படுவது உண்மை.அதை உணர்ந்தால் சண்டையுடன் பின் தொடர்ந்து சமாதானமும் வந்துவிடும்.
பதிலளிநீக்குவாழ்க்கையே அடுத்த காட்சி என்ன என்று தெரியாத நாடகமேடை
பதிலளிநீக்குஅழகான முடிவும்
அருமையான தலைப்பும்
ஆழ்ந்த பொருளும்,
சீரான நடையுமாக
சிறப்பான கதை.. பாராட்டுக்கள்..
நல்ல்தொரு கதை!! சில எழுத்தாளர்களின் முத்திரை வரிகள் என்று முன்னம் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது!! :-))
பதிலளிநீக்குஅருமையான கதை, பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇந்தக் கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போது முன்பே படித்தது போல் தோன்றுகிறது எந்த வருடத்தில் எந்தப் பத்திரிக்கை என்று கூற முடியுமா. தலைப்பைப் பார்த்தால் குமுதமோ ஆனந்த விகடனோவாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன் விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் சிறக்கும் என்பதை அழகிய கதை மூலம் விளக்கிய ஜீவிக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதிரு ஜீவி அவர்களின் புகைப்படமும், தள முகவரியும் சற்றே தாமதமாக இப்போது இணைத்துள்ளேன்.
பதிலளிநீக்குஜீவி கமிங் ஜார்ஜியா என்று எழுத்துக்கள்தெரிவதுபோல் இருக்கிறதே( பிரசுர படத்தில்)
பதிலளிநீக்குநல்லதோர் கதையை படிக்க வாய்ப்புதந்த ஸ்ரீராம் அவர்களுக்கு ஜே! ஜி.வி. சாரின் கதை சொல்லும்பாணி தனித்தன்மை கொண்டது அல்லவா அவருக்கு என் பாராட்டுகள்
பதிலளிநீக்குநல்லதோர் கதையை படிக்க வாய்ப்புதந்த ஸ்ரீராம் அவர்களுக்கு ஜே! ஜி.வி. சாரின் கதை சொல்லும்பாணி தனித்தன்மை கொண்டது அல்லவா அவருக்கு என் பாராட்டுகள்
பதிலளிநீக்குஎல்லா டைவர்ச்சும் இப்படி சுகமாய் முடிந்தால் நல்லதுதான் :)
பதிலளிநீக்குசிறப்பான கதை
பதிலளிநீக்குநன்றி
பெற்றோர்கள் பிரிந்தால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தாம். குழந்தையை உத்தேசித்தாவது இருவரும் ஈகோவை விட்டொழித்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இக்காலத்துக்குத் தேவையான கதை! எழுத்தாளர் ஜீவி சார் அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குகதையை வாழ்த்திய உள்ளங்கள் என் அன்பான நன்றியையும் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவிட்டுக் கொடுத்தல் என்பது உயரிய செயல். நியாயம் உள்ளவர்கள் பக்கம் விட்டுக் கொடுத்தல் அதனினும் உயர்ந்த ஒன்று. ஆனால் இந்த 'விட்டுக் கொடுத்தலின் வெற்றி' அதன் தொடர்பான இன்னொரு ரகசியத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. முரண்படும் இருவர் ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து விட்டுக்கொடுத்தலே அதற்கான வெற்றியை நிச்சயம் செய்யும். எந்நேரமும் ஒருவரே விட்டுக் கொடுபவராய் இருப்பின் இன்னொருவரின் நிர்தாட்சண்யமற்ற விட்டுக்கொடுக்காமை மேலும் மேலும் வலிமை பெற்று விட்டுக்கொடுக்கும் நல்ல உள்ளத்தைக் காயப்படுத்தும். விட்டுக்கொடுக்கும் உயரிய தத்துவமும் தன் நிலை தாழ்ந்து தவிக்கும். முக்கியமாக இருமனம் கலக்க வேண்டிய வாழ்க்கை நலனுக்கு இந்தப் போக்கு நல்லதல்ல. அதனால் விட்டுக் கொடுத்தலை நல்ல விதத்தில் புரிந்து கொண்டு அதனை வெற்றியடையச் செய்வது தம்பதியரின் இருவருக்கும் அவசியமான வாழ்க்கை வெற்றியை நிச்சயப்படுத்தும் ஒன்றாகிறது.
இந்தக் கதையில் கூட பாருங்கள். "எல்லாம் என் தப்புதாங்க.." என்று ராஜி குமுறும் போது, "இல்லே ராஜி! நீ எவ்வளவோ நல்லவள். வெகுளி. எனக்கும் இத்தனை முரட்டுத்தனம் கூடாது.." என்று மோகன் மனம் உணர்ந்து தாழும் போது, "நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள்.. " என்று ராஜி இன்னும் தழைந்து தன் நிலை உணர்கிறாள். வாழ்க்கையில் உணரும் புத்திசாலித்தனம் வேறு எந்த மூன்றாம் வழிகாட்டலாலும் உணர வைப்பதை விட பலம் வாய்ந்தது.
பொறுமையாகப் படித்து கருத்துச் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி.
அடுத்து எழுதப் போகும் எழுத்தாளரைப் பற்றியும் அறிவித்திருக்கிறார்கள். திருமதி இராமலஷ்மி அவர்களின் காலத்தின் முத்திரைக்காக காத்திருக்கும் சிறுகதையை வாசித்து மகிழ ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
புதுமையான இந்தப் பகுதியை ஆர்வத்துடன் வழக்கம் போலவானப் புதுப்பொலிவுடன் துவங்கியிருக்கும் 'எங்கள் பிளாக்' ஆசிரியர் குழாமுக்கு என் நன்றி.
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குநன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா... நீங்கள் சொல்லியிருப்பதை ரசித்தேன் மைதிலி கஸ்தூரிரங்கன் சகா.
பதிலளிநீக்குநன்றி துளசிஜி.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம். உங்கள் இரண்டாவது பின்னூட்டத்துக்கு : உங்கள் உடல் நலமின்மை காரணமாக பதிவின் (சென்ற வாரப் பதிவையும் சேர்த்து) சில பகுதிகளைப் படிக்காமல் விட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இது தேடி எடுத்துப் போட்ட கதை அல்ல, அவர் கதை என்று நினைத்து வேறு ஒரு ஜீவியின் கதையைப் போட்டதால் அவரிடம் கேட்டு வாங்கிப் போட்ட கதை! இந்தப் பகுதித் தொடராக உருவெடுக்கிறது. அடுத்த வாரம் சகோதரி ராமலக்ஷ்மியின் படைப்பு வெளியாகிறது. முதல் கட்டமாக, நம் பதிவர்களின், பத்திரிகைகளில் வெளிவந்த அவர்களின் கதைகளை இங்கு கேட்டு வாங்கிப் போடுவதாக ஐடியா.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி நண்பர் டி என் முரளிதரன்.
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
பதிலளிநீக்குநன்றி மிடில்க்ளாஸ்மாதவி. முத்திரை வரிகள் ஏதும் பிடிபட்டதா?
பதிலளிநீக்குநன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார். இது அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பத்திரிகையில் வெளியானது.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.... ஹிஹிஹி... நான்தானா... ஒரு ஃப்ளோவில் பதில் சொல்லி விட்டேன்!
பதிலளிநீக்குமீள் வருகைக்கு நன்றி ஜி எம் பி ஸார். ஜீவி ஸார் உங்களுக்கு பதில் அளிப்பார் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி மோகன்ஜி.
பதிலளிநீக்குஉண்மை பகவான்ஜி. நீங்கள் சொல்வது உண்மை. நன்றி.
பதிலளிநீக்குநன்றி சென்னை பித்தன் ஸார்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி ஞா. கலையரசி.
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்.
பதிலளிநீக்குநல்லபடியாக ரமேஷுக்கு அப்பா அம்மா ஒன்றாகக் கிடைத்தார்கள். அருமையான அனுபவக் கதை. ஜீவி சாருக்கும் எங்கள் ப்ளாகிற்கும் மிக நன்றி.
பதிலளிநீக்குநன்றி வல்லிமா.
பதிலளிநீக்குஇந்த கதை, கதை என்பதால் படிக்க நன்றாக இருந்தது முடிவும் அருமை ஆனால் நிஜத்தில் இப்படி எங்காவது நிகழும் என்றால் அதை நம்ப இந்த காலத்தில் அதுவும் இந்த நீயூ ஜெனரேஷனால் இயலாது என்பதே என் கருத்து இந்த காலத்திலுள்ள இளைய வயதினருக்கு சுயநலம் மிக அதிகம் முதலில் தான் தன் கேரியர் அதன் பின்தான் மற்றது எல்லாம் என்று வாழ்ந்து வருகின்றனர்
பதிலளிநீக்குயோசிக்க வைக்கிறது உங்கள் பின்னூட்டம் மதுரைத் தமிழன். இந்தக் கால இளைஞர்களின் மனோபாவம் அறிய முடியவில்லை. ஆனால் இந்த மனோபாவம் இந்தக் கால இளைஞர்களுக்கு மட்டும்தானா? அதே சமயம் இதுபோன்ற கதைகள் அவர்களுடைய கண்ணோட்டத்தை மாற்றக் கூடுமோ!
பதிலளிநீக்குஇந்த கருத்தை நான் சொல்லக் காரணம் நான் சந்தித்த தமிழ் இளைய தம்பதிகள் சில பேர் என்று கூட சொல்லாம். முதலில் ஒரு நண்பரின் வீட்டில் நான் சந்தித்த பெண் அவளுக்கு கல்யாணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவள் வேலை செய்வது இங்கு(அமெரிக்காவில்) அவரது கணவரோ சிங்கப்பூரில் அந்த பெண்ணிடம் பேசிய போது அவர்களுக்கு கேரியர்தான் முக்கியம் எங்களுக்கு குழந்தைகள் முக்கியமல்ல அதனால் எங்களுக்கு குழந்தைகலே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம் என்று கூறினார் அதை கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. மற்றோரு தமிழ் தம்பதியினர் என்ன காரணத்தினலோ டைவர்ஸ் பண்ணி இருந்தார்கள் இருவரும் அடுத்த அடுத்த அப்பார்ட்மென்டில்தான் வசித்து குழந்தையை பார்த்து கொண்டார்கள் ஆனால் ஒரு நாள் திடிரென்று அந்த ஆள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டார் போகும் அன்றுதான் சொல்லி சென்றுவிட்டார் அது போல இன்னொரு தம்பதியினர் டைவர்ஸ் செய்துவிட்டு இருக்கின்றனர் கணவர் இன்னொரு திருமணம் செய்து குழந்தைகளுடன் அடுத்த ஊரில் இருக்கிறார் வார இறுதியில் குழந்தை வந்து கூட்டி சென்று பார்ட்து கொள்கிறார். இன்னும் இது போல சில தமிழ் குடும்பங்கள் நான் சொன்ன குடும்பத்தின் குழ்ந்தைகள் எல்லாம் என் மகளுடன் படிக்கின்றனர் என்பதுதான் வேதனையான விஷயம்
பதிலளிநீக்குஅருமையான கதை அண்ணா...
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி.
மதுரைத் தமிழனின் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். எனக்கு என்னுடைய வேலை, சம்பளம் இவையே முக்கியம் என்று ஆடும் உறவுக்காரப் பெண்ணை எனக்குத் தெரியும். வாய்க்கு ருசியாக சாப்பாடு வேண்டுமா? சமையலுக்கு ஆள் வைக்கிறேன். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமா? எல்லாப் பாடங்களுக்கும் டியூஷன் வைக்கிறேன். உன் அம்மாவைப் பார்த்துக் கொள்ள வேண்டுமா? காலையில் ஒரு ஆள் மாலையில் ஒரு ஆள் என்று வரச்சொல்லுகிறேன். உன் அம்மா ஒரு ஸ்பூனைக் கூட நகர்த்த வேண்டாம். குழந்தைகளுக்கு காலை, மதியம், மாலை உணவு பள்ளி கேண்டீனில். எல்லாவற்றிற்கும் நான் சம்பாதிக்கும் பணம் இருக்கிறது. அள்ளி வீசுகிறேன். என்னை வேலையை விடச் சொல்லாதே. இரவு தாமதமாகத் தான் வீட்டிற்கு வருவாள். சீக்கிரம் வந்து நான் செய்ய வேலை ஒன்றும் இல்லையே? என்கிறாள். என்ன செய்வது? வீட்டிற்கு வரும்போதே காதில் கைபேசி. 'எனக்கு அவசரமாக பேச வேண்டும் ஆபீஸ்காரர்களுடன்' என்று சொல்லிக் கொண்டே வருவாள். கணவன் ஏதாவது சொன்னால், டிவோர்ஸ் கொடுத்துவிடு என்று அவனையும் வீட்டில் இருக்கும் மாமியாரையும் பார்த்துக் கத்துகிறாள். இந்த மாதிரிப்பெண்கள் படித்து என்ன பயன்? லட்சக்கணக்கில் சம்பாதித்து என்ன பயன்? தினமும் வீட்டில் சண்டைதான். குழந்தைகளும் அம்மா அப்பாவைப் பார்த்து கத்துகிறார்கள். யார்க்கும் யார் மேலும் மரியாதை இல்லை. என்ன உறவு என்று தோன்றுகிறது. ஏதோ தனித்தனியாகப் போய்விடாமல் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கிறார்களே என்று அந்த மாமியார் அல்ப சந்தோஷம் பட்டுக்கொண்டு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
பதிலளிநீக்குஇந்தக் கதையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.
பல வருடங்களுக்கு முன் வந்த கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். கதையின் 'feel good' கருத்து நன்றாக இருக்கிறது.
பெரும்பாலான விவாகரத்துக்களின் பின்னால் இருப்பது இந்த ஈகோ தான் :(
பதிலளிநீக்குஆனால் கதையின் நாயகி உணர்ந்து திருந்தியதால் கதையின் முடிவு சுபமாக நிறைவடைந்தது .
அவர்களுக்குள் அன்பு அதம் மீது மெல்லிய கோட்டிங் ஈகோ ஆகவே அதை தகர்த்தெரிய இருவருக்குமே சுலபமாக இருந்தது ..புக் வாசிப்பில் விகடன் குமுதம் போல எங்க வீட்ல நிறைய சொல்லலாம் :)கணவருக்கு கால்பந்து உயிர் ..நானும் சேர்ந்து பார்க்க ஆரம்பிச்சாச்சு அவருடன் பல வருடங்களாக .அவர் வேலை யில் இருந்தாலும் யார் கோல் போட்டா என்று ரன்னிங் கமென்ட்ரி sms இல் அனுப்புவேன் :) ..இது கதை என்பதால்முடிவு சந்தோஷமாக இருக்கு ஆனால் நிஜத்தில் நடப்பதென்பது அதுவும் இக்காலத்தில் !!கேள்விக்குறியே ..மதுரை தமிழன் மற்றும் ரஞ்சனிம்மா இருவரது கருத்துக்களுடன் ஒத்துபோகிறேன் ..வெளி நாட்டில் நம் இந்தியர்களிடத்தில் மிக பரவலாகி வருது இந்த விவாகரத்து .சொந்த காலில் நிற்பதாக நினைத்துக்கொண்டு பல பெண்கள் இரண்டு கால்களையும் ஊனமாக்கி கொள்வது பெரும் அவலம் ..இவர்களின் இரும்பு சங்கிலி ஈகோவில் கசக்கி எறியப்படுவது சிறு பிள்ளைகள் தான் பாவம்
இப்போ உள்ள பிள்ளைகள் யார் பேச்சையும் கேட்பதில்லை :( என்பதே நிதர்சனமான உண்மை ..அவர்களின் ஈகோவின் முன் தாய் தந்தை குழந்தை எல்லாருமே துச்சம் தான்
பதிலளிநீக்குஇப்பொழுது தான் விவாதம் சூடு பிடித்துள்ளது. ஆரம்பித்து வைத்த மதுரைத் தமிழனுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇந்தக் கதை வெளிவந்தது ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன் தான். அப்படியானால் நான்கு ஆண்டுகளுக்கு பின்னால் தான் இப்படியான நிலையா?
இல்லை. நிச்சயமாக இல்லை. ரத்து செய்ய முடியாத ஒரு பந்தமாக திருமணம் என்பது இல்லை என்பதே அன்றைய நிலையும் கூட. இருந்தும் அப்படியான ரத்துக்கு முன் நிறைய யோசிக்க வேண்டிய பிரச்னைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி கூடிய வரை விவாகரத்தைத் தவிர்ப்பதற்கான முடிவுகளை மேற்கொள்ளத் தூண்டுவதற்கான எண்ணங்களை விதைக்கக் கூடிய கதைகளை எழுதுவதே எழுத்தாளனின் வேலையாகிப் போகிறது. நீதிமன்ற கவுன்ஸ்லிங்கள் கூட இதன் அடிப்படையில் தான்.
'கோகிலா என்ன செய்து விட்டாள்?' கதையை திரு ஜெயகாந்தன் விகடனில் எழுதியிருந்த தருணத்தில் அவரை சந்தித்த பொழுது, "கடைசியில் அவர்களை ஒன்று சேர்த்து வைத்து விட்டீர்களே?.. கதை பூராவும் மாரடித்தது இதற்குத்தானா?" என்று ரொம்ப ஆத்திரத்தோடு அவரிடம் கேட்டேன்.
ரொம்பவும் அமைதியாக புன்முறுவலோடு "அவர்களை ஒன்று சேர்ப்பது தான் நம் வேலை. பிரிப்பது அல்ல" என்றார் ஜே.கே.
அன்று தான் எழுதுவது பற்றியும், அந்த எழுத்துக்கான ஞானம் பற்றியும் பாடம் கிடைத்தது.
திருமதி ரஞ்சனி நாராயணன் சொல்வது போன்ற இன்றைய நிலை இருக்கலாம். கதை என்று வரும் பொழுது இந்த யதார்த்த நிலையை பிரதிபலித்து மட்டும் கதையை முடித்து வைக்க ர.நா. அவர்களாலேயே முடியாது. யதார்த்த நிலையை படம் பிடிப்பது மட்டும் கதையல்ல. யதார்த்த சிக்கல்களுக்கு தீர்வு சொல்வதே கதைகளாகிப் போகிறது. ரஞ்சனி நாராயணன் வர்ணித்த போக்குகளுக்கு என்ன தான் தீர்வு என்று யோசித்துப் பாருங்கள். கதை பிறக்கும். அப்படியாகப் பிறக்கும் கதையில் இந்த யதார்த்த நிலைகளை ஆதரித்து எழுத முடியாது போகும் என்பதே உண்மை.
திருமணத்திற்கு முன் பலர் கல்யாணமாகி குறைந்தபட்சம் ஆறேழு வருஷங்களுக்குப் பின் தான் குழந்தை என்று நினைக்கிறார்கள் என்பது யதார்ந்த நிலை என்று வைத்துக் கொள்ளுங்கள். வேலை, கைநிறைய சம்பாதிப்பது, சந்தோஷமாக இருப்பது, 1300 சதுர அடிகளில் வீடு இதையெல்லாம் தான் குழந்தைக்கு முன்னான முக்கிய விஷயங்களாகக் கருதுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் கணக்கு போட்டபடியே எல்லா எண்ணங்களும் நிறைவேறியது, குழந்தையைத் தவிர என்று முடிப்பது தான் ஒரு கதைக்கான வட்டமாகிப் போகும். நினைத்த நேரத்தில் குழந்தையையும் பெற்றுக் கொள்ள முடியாது போனது தான் கதைக்கான முடிச்சு. அதற்கு உடற்கூறு போன்ற யதார்த்த உண்மைகள் காரணமாகிப் போகும்.
விவாகரத்து ஆதரவு கதைகளில் கூட இவ்வளவு காலம் ஆண்களின் தனிப்பட்ட அடாவடித்தனங்கள் தான் அதற்கான காரணமாகிப் போனது. இப்பொழுது அப்படி எழுதுவதும் யதார்த்தமில்லை என்பது போலவான புரிதல்களில் தள்ளப்படுகிறோம்.
//திருமணத்திற்கு முன் பலர் கல்யாணமாகி குறைந்தபட்சம் ஆறேழு வருஷங்களுக்குப் பின் தான் குழந்தை என்று நினைக்கிறார்கள் என்பது யதார்ந்த நிலை என்று வைத்துக் கொள்ளுங்கள். வேலை, கைநிறைய சம்பாதிப்பது, சந்தோஷமாக இருப்பது, 1300 சதுர அடிகளில் வீடு இதையெல்லாம் தான் குழந்தைக்கு முன்னான முக்கிய விஷயங்களாகக் கருதுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் கணக்கு போட்டபடியே எல்லா எண்ணங்களும் நிறைவேறியது, குழந்தையைத் தவிர என்று முடிப்பது தான் //
பதிலளிநீக்குஇப்படி இருந்து குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட்ட பல தம்பதிகள் நான் நன்கு அறிந்த உறவினர்களிலேயே உண்டு! :( ஆனாலும் கடவுள் கிருபையால் அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிடைத்திருக்கிறது. இன்னும் சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமின்றியும் இருக்கிறார்கள். கணவனோடு ஒரு ஆண்டு கூட முழுமையாக வாழாமல் திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி கூடச் செய்யாமல் பிரிந்து வந்து பிறந்த வீட்டில் வாழும் பெண்களையும் பார்த்து வருகிறேன். மொத்தத்தில் இந்தக் கதை இன்றைய இளம் தலைமுறையினருக்குப் படிப்பினையாக இருந்தால் அது நன்மையே!
திருமணம் செய்து கொண்டாலும் தனக்குப் பின்னர் உள்ள தம்பி, தங்கைகளுக்காகக் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடும் பெண்களையும் உறவினர் வட்டத்தில் பார்த்து வருகிறேன். அவர்களின் நல்ல மனதின் நியாயத்தைப் புரிந்து கொண்டதாலோ என்னமோ ஆண்டவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை அருளி விடுகிறான்.
பதிலளிநீக்கு//இப்பொழுது அப்படி எழுதுவதும் யதார்த்தமில்லை என்பது போலவான புரிதல்களில் தள்ளப்படுகிறோம்.// இப்போது பெரும்பாலும் பெண்களுக்கு ஒத்துப் போவதில்லை என்பதே முக்கிய காரணமாக இருக்கிறது. பெண்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. :(
பதிலளிநீக்குநம் வலையுலக நண்பர்களின், பத்திரிகைகளில் பிரசுரமான, அவர்களின் படைப்புகளை, அவர்களிடம் கேட்டு (அவர்கள் மனமுவந்து கொடுத்தால்) வாங்கிப் பிரசுரிக்க எண்ணம்.//
பதிலளிநீக்குநல்ல காரியம். தொடர வாழ்த்துக்கள்.
சாரின் கதையை அவர் வலைத்தளத்தில் படித்து கருத்து சொல்லி இருக்கிறேன்.
நல்ல கதை. விட்டுக் கொடுத்தல், சகிப்புதன்மையை உணர்த்தும் கதை.
//முரண்படும் இருவர் ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து விட்டுக்கொடுத்தலே அதற்கான வெற்றியை நிச்சயம் செய்யும். எந்நேரமும் ஒருவரே விட்டுக் கொடுபவராய் இருப்பின் இன்னொருவரின் நிர்தாட்சண்யமற்ற விட்டுக்கொடுக்காமை மேலும் மேலும் வலிமை பெற்று விட்டுக்கொடுக்கும் நல்ல உள்ளத்தைக் காயப்படுத்தும். விட்டுக்கொடுக்கும் உயரிய தத்துவமும் தன் நிலை தாழ்ந்து தவிக்கும். முக்கியமாக இருமனம் கலக்க வேண்டிய வாழ்க்கை நலனுக்கு இந்தப் போக்கு நல்லதல்ல. அதனால் விட்டுக் கொடுத்தலை நல்ல விதத்தில் புரிந்து கொண்டு அதனை வெற்றியடையச் செய்வது தம்பதியரின் இருவருக்கும் அவசியமான வாழ்க்கை வெற்றியை நிச்சயப்படுத்தும் ஒன்றாகிறது//
பின்னூட்டத்தில் சார் சொல்லி இருப்பது மிக சரி.
நிறைய இடங்களில் அன்பு, விட்டுக் கொடுத்தல் ஒரு வழி பாதையாக, கேலிக்கு உரியாதாகவே இருக்கிறது. விட்டுக் கொடுத்தலை புரிந்து கொண்டு தம்பதியர் நடந்து கொள்வது குடும்பத்திற்கு நல்லது..
வை. கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குநல்லவேளையாப்போச்சு. குழந்தைப்பாசமே அவர்கள் மீண்டும் சேர வழிவகுத்துள்ளது.
//வாழ்க்கையே அடுத்த காட்சி என்ன என்று தெரியாத நாடகமேடை//
மிகச்சிறப்பான கதை. பாஸிடிவ் அப்ரோச் உடன் நல்ல முடிவு.
கதாசிரியர் உயர்திரு. ஜீவி சார் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். வெளியிட்டு படிக்க உதவிய எங்கள் ப்ளாக்குக்கு என் நன்றிகள்.
Select all images with Trees என்று படங்கள் குறுக்கே வருகிறது, ஸ்ரீராம். என்னால் பின்னூட்டமாக அனுப்ப இயலவில்லை.
- VGK
நன்றி பரிவை சே. குமார்.
பதிலளிநீக்குநன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்.
பதிலளிநீக்குநன்றி ஏஞ்ஜலீன்.
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குநன்றி வைகோ ஸார்.
பதிலளிநீக்கு//இவர்கள் இருவரும் குவிமையமாக ஒன்று சேர்ந்த ஒரே விஷயம், பெற்றெடுத்த குழந்தையிடம் பாசம் காட்டியது தான்.//
பதிலளிநீக்குநல்லவேளையாப்போச்சு. குழந்தைப்பாசமே அவர்கள் மீண்டும் சேர வழிவகுத்துள்ளது.
//வாழ்க்கையே அடுத்த காட்சி என்ன என்று தெரியாத நாடகமேடை//
ஆங்காங்கே இவ்வாறான முத்திரை பதித்த வரிகளுடன் மிகச்சிறப்பான கதை. பாஸிடிவ் அப்ரோச் உடன் நல்ல முடிவு.
கதாசிரியர் உயர்திரு. ஜீவி சார் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
இங்கு இதனை வெளியிட்டு படிக்க வாய்ப்பளித்து உதவிய எங்கள் ப்ளாக்குக்கு என் நன்றிகள்.
ஓஹோ, ஏற்கனவே நான் நேற்று கொடுத்துள்ள கமெண்ட்ஸ் கிடைத்து வெளியிடப்பட்டுள்ளதா .... அதை நான் இன்று கவனிக்கவே இல்லை. அது வழக்கம்போல் காக்கா ஊஷ் ஆகியிருக்குமோ என நினைத்து மீண்டும் எழுதி அனுப்பியுள்ளேன்.
பதிலளிநீக்கு{ நேற்று நான் பின்னூட்டமிட இங்கு வந்தபோது நான் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. மெயில் மூலம்கூட தங்களுக்குத் தெரிவித்திருந்தேன்.}