திங்கள், 15 பிப்ரவரி, 2016

"திங்க"க்கிழமை 160215 :: காலையில் காஃபி... மாலையிலும் காஃபி!












                                         Image result for brass coffee filter images   Image result for brass coffee filter images

காலை எழுந்த உடன் காபி என்பது வழக்கமாகி விட்டது.  பல் தேய்த்த கொஞ்ச நேரத்தில் காபி வரா விட்டால் கை நடுங்குகிறது, கண்கள் சிவக்கின்றன.. உடல் மெல்ல நடுங்கத் தொடங்குகிறது...!!!!  

காபி குடிப்பதை  நிறுத்த முடியுமா என்று என் பாஸ் சவால் விட்டார்.  முடியும் என்று சொன்னதோடு நிற்காமல், காலை காபி குடித்த பிறகு மாலை வரை குடிக்காமல் நிறுத்தியும் காண்பித்தேன்!

                                   Image result for coffee filter images    Image result for brass coffee filter images


சில நாட்களில் காபி நன்றாக இருக்கிறது.  அதே பொடி சில நாட்களில் வாசனை கூட இருப்பதில்லை.  அது ஏனென்பது புரியாத புதிர்.  பொடி வாகு, பால் வாகு என்று அவ்வப்போது ஆளுக்கொரு சமாதானம் சொல்வார்கள்.  ஆனாலும் ஒரு வாயாவது குடிக்காமலிருக்க முடிவதில்லை!


                                                   Image result for brass coffee filter images   Image result for brass coffee filter images

காபியிலிருக்கும் caffeine மூளையைத் தூண்டி விட்டு உடலைச் சுறுசுறுப்பாக்குகிறதாம்.

காபியிலும் caffeine இருக்கிறது.   டீத்தூளிலும் caffeine இருக்கிறது.  சொல்லப்போனால் டீத்தூளில் சற்று அதிகமாகவே இருக்கிறது.  எனினும் காபி போட நாம் பயன் படுத்தும் காபிப்பொடியின் அளவை விட தேநீர் போட நாம் உபயோகிக்கும் டீத்தூளின் அளவு கம்மிதானே..

நாங்கள் நரசுஸ் காபியிலிருந்து இந்தியா காபிக்கு  மாறி, பின்னர் லியோ, ஈஸ்வரன் காபி,  ஐயங்கார்க் காபி என்று பயணித்து இப்போது காபி டே மற்றும் சுந்தரம் காபியில் ஐக்கியமாகியிருக்கிறோம்.   

திருச்சியில் ஜோசப் காபி நன்றாயிருக்குமாமே...  வைகோ ஸார்,  தமிழ் இளங்கோ ஸார் சொல்லலாம்.  அல்லது கீதா மேடம் கூடச் சொல்லலாம்!  'கோதாஸ் காபி என்று ஒரு ரகம்!  எனக்கு முதன் முதலில் சொன்னது - அல்லது தந்தது - அனன்யா மகாதேவன்.  நன்றாயிருந்தது.  ஆனால் இதில் எல்லாம் சிக்கரி சதவிகிதம் அதிகம்.  (நாங்கள் அரைக்கிலோ காபிப்பொடிக்கு 50 கிராம் சிக்கரி சேர்க்கிறோம்)

-  காபிப் பொடியை வாசனை போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.  (ஆனால் கு.சா பெட்டியிலிருந்து எடுத்துத் திறந்து பார்த்தால் வாசனை இருக்கிறதா என்று கேஜி கேட்கிறார்!)


- அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.


- சில வீடுகளில் இன்னமும் தினமும் கொட்டை வறுத்து, அரைப்பவர்கள் இன்னமும் கூட இருக்கிறார்கள்.  ஒரு வாரத்துக்கோ, பத்து நாட்களுக்கோ மொத்தமாக வறுத்து வைத்துக் கொண்டு தினமும் கொஞ்சம் எடுத்துப் போட்டு அரைப்பவர்கள் இருக்கிறார்கள்.



- பித்தளையில் காபி பில்டர் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.  (அதில்தான் துளைகள் சிறிதாகப் போடமுடியும் என்று சொல்வார்கள்.  அது முன் காலத்துக்கு ஓகே.  இப்போது எவர்சில்வர் பில்டர்களிலும் லேசர் மூலமாகவோ எப்படியோ சிறுதுளைகள் போட முடியும்.  துளைகள் பெரிதானால் டிகாக்ஷன் இறங்குவது வேகமாகி சத்தில்லாமல் இறங்கி விடக் கூடும்!)


                      Image result for brass coffee filter images                   
Image result for brass coffee filter images

- ஒரு வெள்ளைத் துணியில் பொடியைப் போட்டுச் சுற்றி வெந்நீரில் மூழ்க வைத்து டிகாக்ஷன் தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள்.


பெர்கொலெட்டர் எனும் காபி மேக்கரில் வெந்நீர் கொதி நிலையில் விட்டு விட்டு இறங்குவதாலேயே வாசனையாக டிகாக்ஷன் கிடைக்கும்.  காபி மேக்கரோ, பில்டரோ, சுத்தம் செய்யும்போது அதன் துளைகளைப் பெரிதாக்கி விட்டோமானால் தரமான டிகாக்ஷன் கிடைக்காது!  பெர்கொலேட்டரில் பலவகை.  கேஜி ஸ்டீம் பெர்கொலேட்டர் வைத்திருக்கிறார்.

 Image result for coffee filter images  Image result for coffee filter images

- சில பேருக்கு கலராக இருந்தால்தான் காபி காபியாக ஒத்துக் கொள்வார்கள்.  அவர்களுக்காக இருப்பதுதான் சிக்கரி.   இந்தச் சிக்கரியால் நிறம் வழங்குவதைத் தவிர வேறு உபயோகமில்லை. சிக்கரியில் சில் மருத்துவ உபயோகங்கள் - ரத்தக்கொதிப்பு குறையும் என்பது போல - சொல்கிறார்கள்.  காபி சாப்பிடுவதால் கேன்சர் வரும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள், சில வகைக் கேன்சர் குணமாகின்றன என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்)   சிகான் என்கிற செடியிலிருந்து கிடைப்பது இந்தச் சிக்கரி!  சிக்கரி இல்லாமல்தான் நான் காபி குடிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களும் உண்டு.



- காபிக்கொட்டை ஒரே அளவாக, நிறமாக இருந்தால் பீபெரி பிளான்டேஷன் ஏ.  கலந்திருந்தால் பிளான்டேஷன் பி.   காபிக்கொட்டை தரம் பிரிக்குமிடத்தில் இருக்கும் மிஷினில் நிறம் குறைந்த கொட்டை வரிசையில் வந்தாலே அங்கிருக்கும் 'பின்' ஒரு துள்ளு துள்ளி அதை வரிசையிலிருந்து வெளியேற்றி விடுமாம்.  உடைக்க முடியாத கொட்டையாய் இருந்தால் அதை செர்ரி என்றும்,  உடைக்கக் / பிரிக்கக் கூடியதாய் இருந்தால் அதை பீ பெரி என்றும் சொல்வார்கள்.    நிறம் குறைந்த கொட்டைகள் நிறைய இருந்தால் அது ரோபெஸ்ட்டா.


நரசுஸ், லியோ, இந்தியா, காபி டே, சுந்தரம், ஈஸ்வரன் என்று நிறைய பெயர்களில் காபிப்பொடிக் கடைகள் இருந்தாலும் கொட்டைகளை இவர்கள் ஒரே இடத்திலிருந்துதானே வாங்குகிறார்கள்?


சிலர் வறுக்கும்போது சற்று வெளுப்பாக வறுக்கிறார்கள்.  சிலர் சரியான பதத்தில் வறுக்கிறார்கள்.  சிலர் அந்தப் பதத்தைத் தாண்டியும் சற்றே கருக வறுக்கிறார்கள்.  எது எப்போது நன்றாயிருக்கும் என்று சொல்ல முடியாது, அல்லது அவரவர்கள் சுவையைப் பொறுத்தது!


என் பாட்டி காபிக்கொட்டை வருப்பதற்குமுன் சிறிது சர்க்கரையை வெறும் வாணலியிலிட்டு கருக புரட்டிக் கொள்வார்.  அதைக் காபிகொட்டையுடன் சேர்த்து வறுக்கும்போது சிக்கரி போடாமலேயே நிறம் கிடைத்து விடும்.


-  பில்டரில் காபிப்பொடியை நிரப்பி அழுத்தி விடுபவர்களும் உண்டு, அழுத்தாமல் வைப்பவர்களும் உண்டு.  சிலர் மேலாக சிறிது சர்க்கரைத் தூவுவார்கள்.  சிலர் பில்டரில் காபிப்பொடியை இட்டு நிரப்பியதும் அதை மூடுமளவு கைப்பிடியுடன் கூடிய - உள்ளே அடங்கக் கூடிய - ஒரு தட்டு போன்ற மூடியை வைத்து விட்டு வெந்நீரை ஊற்றுவார்கள்.


                  Image result for coffee filter images  Image result for brass coffee filter images

-  பொதுவாக ஒவ்வொருமுறை வெந்நீரை ஊற்றும்போதும் கொதிக்கக் கொதிக்க ஊற்றுவார்கள்.  அது இறங்கவில்லை என்றால் அதைக் கரண்டியால் தட்டுபவர்கள் உண்டு.  எனக்கு அதில் (தட்டுவதில்) உடன்பாடு இல்லை.  தானாய் இறங்கவேண்டிய டிகாக்ஷனை தடியால் அடித்து இறக்கினால் சுவை இருக்காது எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான்!


                                                                    Image result for brass coffee filter images

முதலில் இறங்கும் கள்ளிச்சொட்டு டிகாக்ஷன் சுவைதான்.  அதை முதலிலேயே ஒருவர் செலவு செய்து விட்டால் அப்புறம் காபி சாப்பிடுபவர்கள் பாவம்!   இப்படி இரண்டாம் டிகாக்ஷனில் கிடைக்கும் காபியை அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ரெயில்வே ஸ்டேஷனில் 'பிடில்' என்று சொல்வார்களாம்.  இப்போதும் உண்டா என்று தெரியவில்லை!


சிக்கரிக்கு பதில் காபிப்பொடியில் புளியங்கொட்டை வறுத்து அரைத்துச் சேர்ப்பவர்கள் உண்டு.  சில திருமணங்களில் சில சமையல் காண்டிராக்டர்கள் காரணமாக இது அடிக்கடி நடப்பதாகக் கேள்வி!  அதேபோல, ஒரு பெருநகரத்தில் இளசுகள் கூடும் கடைகளில் காபியில் சிறிதளவு - மிகச் சிறிதளவு - அபின் கலப்பார்கள் என்று கேள்விப்பட்டது உண்மையா பொய்யா எனக்குத் தெரியாது!  ஒரு புகழ் பெற்ற இன்ஸ்டன்ட் காபியில் கூட இதைக் கலக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.  வதந்திதான்.  நாமென்ன கண்டோம்!  ஒரு கதையில் காபிப்பொடியில் சீயக்காய்க் கலந்து கொடுத்து, அது என்னவென்று தெரியாத வரை அதைக் கொண்டாடினார்களாம் மக்கள்.  உண்மை தெரிந்த ஒரு நாளில் கடைக்காரர்களை அடித்துத் துரத்தி விடுவார்கள்!  கதை பெயர் நினைவில்லை.

எங்களுக்குத் தெரிந்த சமையகாரர் ஒருவர் இருந்தார்.  அவர் கலந்து கொடுக்கும் நெஸ் காபி மட்டும் தனிச் சுவையாய் இருந்தது என்று சொன்னவர்களுக்குத் தெரியாது, அவர் அதில் அட்ஜஸ்ட் செய்ய, புளியங்க்கொட்டைத் தோலை மட்டும் வறுத்து அரைத்து வைத்துக் கொண்டு சேர்த்தார் என்று!


நடுவில் சில நாட்கள் காபி வில்லை கிடைத்துக் கொண்டிருந்தன.  இப்போதும் கிடைக்கறதா தெரியவில்லை.  அந்த வில்லையை எடுத்துத் தூளாக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடிகட்டி எடுக்க வேண்டும்! பாலுடன் கலந்து குடிக்கலாம்.

காபியைச் சூடாகக் குடிக்கத்தான் எனக்குப் பிடிக்கும்.  ஐஸ் காபியில் எனக்கு உடன்பாடில்லை!

போதுமா காபி புராணம்?  இன்று காலை அருமையான வாசனையான காபி.  இதே பொடியில் இதே பாலில் (அட, புது கவர்தான்!) நேற்று போட்ட காபி மண்ணு மாதிரி இருந்தது நினைவுக்கு வந்ததும் 'அது ஏன் அப்படி?' என்று எழுந்த சிந்தனையின் விளைவு இந்தப் பதிவு!
 

காபியை டிகாக்ஷன் அதிகமாகக் கலந்து கறுப்பாகக் குடிப்பதிலோ, கம்மியாகக் கலந்து வெளுப்பாகக் குடிப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. சரியான அளவில் டிகாக்ஷன் கலந்து சர்க்கரை கம்மியாகக் கலந்து குடிப்பேன்.  இது என் ரசனை.
 
எக்ஸ்ப்ரசோ காபியை வீட்டிலேயே தயாரிக்க  :  டிகாக்ஷனைக் கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் விட்டுக் கொண்டு, புது வெண்ணெய் ஒரு துளி இட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு பாலுடன் சேர்த்துக் குடித்துப் பார்த்திருக்கிறீர்களா?


அந்தக் காலத்தில் மாடு வைத்து பால் கறப்பவர்கள் வீட்டில் புதிதாகக் கறந்து, காய்ச்சி, டிகாக்ஷன் கலந்து சாப்பிடுவார்கள்.  அது ஒரு ருசிதான்.  இப்போதெல்லாம் நகரங்களில் எங்கே மாடு வீட்டில் வைத்துக் கொள்ள முடிகிறது!  இதிலும் பசும்பால், எருமைப் பால் என்று இரண்டு பிரிவுகள் - கட்சிகள் - உண்டு.  நான் பசும்பால் கட்சி!   தண்ணீர் விடாமல் காய்ச்சிக் கலப்பதில் உடன்பாடில்லை!    இப்போதும் மதுரையில் எங்கள் வீட்டில் கறந்த பால் வாங்கித்தான் காபி.   இங்கு சென்னையில் கவர் பால்தான்!  இரண்டுக்கும் வித்தியாசம் குடிக்கும்போதே தெரியும்.  கீதா சாம்பசிவம் வீட்டில் கவர் பால் கிடையாது என்று நினைக்கிறேன்!
 
 
ஆமாம், தேநீர் பற்றி ஒரு பதிவு போட வேண்டுமா என்ன!
 
 
 
 
 
 
 
படங்கள்  :  இணையத்திலிருந்து நன்றியுடன்...


106 கருத்துகள்:

  1. ///காபி குடிப்பதை நிறுத்த முடியுமா என்று என் பாஸ் சவால் விட்டார். ///

    யார் அந்த பாஸ் அவரை நான் மட்டும் பார்த்தேன் அவர் அவ்வள்வுதான்......சும்மா இருந்த ஆளை சவாலுக்கு அழைத்து இப்படி ஒரு பெரிய பதிவா??? காபியை நிறுத்து என்று சொன்ன மாதிரி சாப்பாட்டை நிறுத்த முடியுமா என்று சவால்விட்டால் என்ன ஆவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி...ஹி..ஹி.. உங்க வீரம் எனக்கு ஆவாது மதுரைத் தமிழன்... எனக்கு சோறு போடறதே என் பாஸ்தான்.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

      நீக்கு
  2. ஆஹா! மிகவும் பிடித்த காபிக்கு ரசனையான பதிவு! டபுள் தமாக்கா :)
    எங்கள் வீட்டிலும் நரசுசிலிருந்து இப்போ காபி டே..நீங்கள் சொல்லும் சிக்கரி அளவுதான்.
    இப்போ எனக்குக் காபி வேண்டும் போல் இருக்கிறதே.... இரவு 11 மணி! என் தங்கைகள் ஒன்று சேர்ந்தால், காபி குடிக்காதீர்கள் என்னை விட்டுவிட்டு என்று சொல்லும்படியாக எக்ஸ்ட்ரா காபி உண்டு :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரேஸ். ஒரு நாளைக்கு நான் இரண்டு காபிதான் குடிப்பேன். ஏதோ வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும் எக்ஸ்ட்ரா காபி குடிப்பேன்.

      நீக்கு
  3. quitting coffee!!! ROFL - KGG, I know this is your write up!
    ஒரு வெள்ளைத் துணியில் பொடியைப் போட்டுச் சுற்றி வெந்நீரில் மூழ்க வைத்து டிகாக்ஷன் தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள்// very traditional way of making coffee! havent been able to like it! - Ananya Mahadevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அனன்யா. என் ஃபேஸ்புக் புலம்பல் உங்களை இங்கு அழைத்து வந்துள்ளது. நீங்கள் அதிகம் எங்கள் பக்கம் வருவதில்லை என்பதால் எழுதியது யார் என்று கண்டு பிடிக்க முடியலை. பரவாயில்லை, மன்னிச்சுட்டேன் உங்களை!!!!

      நீக்கு
  4. BTW, long post! Havent been able to ready fully due to time constraints.. Will be back soon. Lovely post! :)

    பதிலளிநீக்கு
  5. //சிக்கரி இல்லாமல்தான் நான் காபி குடிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களும் உண்டு.//

    நாங்க இன்றளவும் சிக்கரி சேர்க்காமல் தான் காஃபி! ப்யூர் காஃபி! :) காஃபி மேக்கர் இருக்கு என்றாலும் காஃபி ஃபில்டரில் தான் தினம் காஃபி போடுவேன்.

    பதிலளிநீக்கு
  6. அதே போல் விபரம் தெரிந்ததில் இருந்து இன்றளவும் கறந்த பால் காஃபி தான். மதுரையில் இருக்கையில் பசும்பால் தான் வாங்குவாங்க. அப்போது பாட்டிலில் கலர் கலரா மூடி போட்டுக் கோடெல்லாம் போட்டுப் பால் பாட்டில் வரும். சிவப்புக்கலர் கோடு என்றால் பசும்பால், நீலக்கலர் என்றால் எருமைப்பால். எனக்குத் தெரிந்து மதுரையில் எருமைப் பால் வாங்கியே பார்த்ததில்லை. எங்க வீட்டில் அந்த பாட்டில் பாலை அப்படியே காய்ச்சி, அதன் மூடியில் க்ரீம் இருக்கும். அதைச் சாப்பிட நாங்க போட்டி போடுவோம். ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு என்று கிடைக்கும். என்ன சொல்ல வந்தேன்? ஆமாம், பாட்டில் பாலை அப்படியே காய்ச்சி உறை ஊத்திடுவாங்க. காஃபி குடிக்க மற்றத் தேவைகளுக்குப் பசும்பால் தான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கறந்த புதுப் பாலில் காபி சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு கவர்ப் பால் காபி பிடிக்காது. என்ன செய்ய? எங்களுக்கு கவர்ப் பால் காபிதான்! நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  7. இப்போவும் எப்போதேனும் கவர் பால் வாங்கினாலும் நாங்க பெரும்பாலும் அதில் காஃபி குடிச்சதில்லை! ஹிஹிஹி, விருந்தாளிகள் எண்ணிக்கையைப் பொறுத்துப் பால்காரரிடம் சொல்லிப் பால் வாங்கிடுவோம். எப்போவேனும் கிடைக்காவில்லை என்றால் கவர் பால். அப்படித் தான் அன்று ஶ்ரீரங்கம் சந்திப்பில் கவர் பாலைப் பயன்படுத்தினேன். அதோடு டிகாக்‌ஷனும் காஃபி மேக்கரில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர்ப் பால் வாங்கினாலும் அதை மற்றவர்களுக்குக் கொடுத்துடுவீங்க! நாங்கள் வந்தபோது என்ன பாலில் காபி குடித்தோம் என்று நினைவில்லையே கீதா மேடம்!!

      நீக்கு
  8. காஃபி மேக்கர் டிகாக்ஷனை உடனடியாகப் பயன்படுத்திடணும். காலை போட்ட காஃபி மேக்கர் டிகாக்‌ஷன் அப்போதே செலவாகணும். மாலை வரை வைத்திருந்தால் நன்றாக இருக்காது. மாலை புதுசாப் போட்டால் தான் நன்றாக இருக்கும். நாங்க இங்கே வாங்கறது தெற்குச் சித்திரை வீதியில் ஒரு வணிகவளாகத்தைச் சேர்ந்த காஃபிப் பொடிக்கடையில்! பீபரிக் கொட்டை மட்டும் வாங்கி வறுத்து அரைத்து வாங்கி வருவோம். அரைகிலோ பொடி வாங்கினால் எங்க ரெண்டு பேருக்கும் மூன்று வேளைக் காஃபி 18 முதல் 20 நாட்கள் வரை வரும். சில சமயம் 15,16 நாட்களே வரும். அது பொடியில் டிகாக்‌ஷன் இறங்கும் தரத்தைப் பொறுத்தது. சிகரி போடாததால் டிகாக்‌ஷன் அவ்வளவு திக்காக இருக்காது. ஆகையால் ஒத்தால் போல் டிகாக்‌ஷனை இறக்கிக் கொண்டு பாலில் நீர் சேர்க்காமல் காய்ச்சிக் கலந்தால் காஃபி நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி மேக்கர் நாங்களும் வைத்திருந்தோம். அவசரத்துக்கு ஓகே.. அப்புறம் அதை ஓரமாக வைச்சுட்டு,ஃபில்டரை எடுத்துட்டோம்! நீர் சேர்க்காத பாலில் காபி ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை கீதா மேடம்! பழக்கம்தான் காரணம்.

      நீக்கு
  9. காஃபி டேயில் காஃபி பவுடர் வாங்கினால் எங்களுக்கு 100 கிராம் பொடி பத்து நாட்களுக்குப் போதும்! :P :P :P :P ஏனெனில் அதில் நீர் விட விடத் திக்காக இறங்கிக் கொண்டே இருக்கும். இரண்டு வருடங்கள் முன்னர் வரை நரசூஸ் தான் வாங்கினோம். திடீரென நம்ம ரங்க்ஸுக்கு அது பிடிக்காமல் போய் இப்போது வாங்கும் கடையில் வாங்க ஆரம்பிச்சிருக்கார். லியோ காஃபி பவுடர் ஒரே முறை தான் போட முடியும். ஶ்ரீரங்கம், திருச்சி பத்மா காஃபி, ஜோசஃப் காஃபி எல்லாம் வாங்கிப் பார்க்கலை. ஐயங்கார் காஃபி, கோத்தாஸ் காஃபி கிட்டேயே போகிறதில்லை. இந்தக் காஃபி பவுடரைப் பொட்டலம் கட்டி வணிகவளாகங்களில் விற்பாங்களே அது பக்கம் கூடப் போக மாட்டோம். அப்போது கொட்டை வாங்கி, அப்போதே அரைத்து வாங்கும் பொடிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லியோ பற்றி நீங்கள் சொல்வது சரிதான் கீதா மேடம். ரொம்ப லேஸா இருக்கும். முன்னால எல்லாம் லியோ விற்கும் கடைகளில் சிக்கரி தர மாட்டார்கள். இப்போதெல்லாம் அங்கேயும் சிக்கரி கலந்து கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். காபி டே சில கடைகளில் வாங்கினால் நன்றாக இருக்கிறது. சில கடைகளில்... ஊஹூம்! சுந்தரம் காபி ஓகே!

      நீக்கு
  10. 95ஆம் வருடம் வரை காஃபிக்கொட்டை வறுத்து அரைத்த பொடிதான்! அன்றன்று அரைப்பேன். இரவே அரைத்து வைத்துவிடுவேன். என்னிக்காவது காலையில் அரைப்பது உண்டு. காஃபிக்கொட்டை மிஷின் காரைக்குடி மெஷின் என்ற பெயர் பெற்ற மிஷின். இப்போது 2011 ஆம் வருடம் ஶ்ரீரங்கத்திற்குக் குடி பெயர்ந்த போது தான் காஃபிக்கொட்டை மிஷின், காஃபிக்கொட்டை வறுக்கும் ரோலர் எல்லாத்தையும் (படம் எடுக்காமல் :(} விலைக்குப் போட்டேன். எடைக்குத் தான் போட்டோம். இப்போவும் நம்ம ரங்க்ஸுக்கு அந்தக் காஃபியில் சபலம் உண்டு. வறுத்த கொட்டை வாங்கி வரேன், மிக்சி ஜாரில் அரைச்சுப் போட்டுப் பார்க்கலாமா என்று சொல்லுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பாட்டி வைத்திருந்த காபிக்கொட்டை அரைக்கும் மிஷின் ரொம்ப நாள் வைத்திருந்தோம் - சும்மாவே! எப்போதாவது காபிக்கொட்டை வாங்கி வறுத்து அரைத்து உபயோகித்திருக்கிறோம். ஒருமுறை மிக்ஸியில் கூட அரைத்திருக்கிறோம்!

      நீக்கு
  11. 95ஆம் வருடம் வரை காஃபிக்கொட்டை வறுத்து அரைத்த பொடிதான்! அன்றன்று அரைப்பேன். இரவே அரைத்து வைத்துவிடுவேன். என்னிக்காவது காலையில் அரைப்பது உண்டு. காஃபிக்கொட்டை மிஷின் காரைக்குடி மெஷின் என்ற பெயர் பெற்ற மிஷின். இப்போது 2011 ஆம் வருடம் ஶ்ரீரங்கத்திற்குக் குடி பெயர்ந்த போது தான் காஃபிக்கொட்டை மிஷின், காஃபிக்கொட்டை வறுக்கும் ரோலர் எல்லாத்தையும் (படம் எடுக்காமல் :(} விலைக்குப் போட்டேன். எடைக்குத் தான் போட்டோம். இப்போவும் நம்ம ரங்க்ஸுக்கு அந்தக் காஃபியில் சபலம் உண்டு. வறுத்த கொட்டை வாங்கி வரேன், மிக்சி ஜாரில் அரைச்சுப் போட்டுப் பார்க்கலாமா என்று சொல்லுவார்.

    பதிலளிநீக்கு
  12. காஃபி டேயில் காஃபி பவுடர் வாங்கினால் எங்களுக்கு 100 கிராம் பொடி பத்து நாட்களுக்குப் போதும்! :P :P :P :P ஏனெனில் அதில் நீர் விட விடத் திக்காக இறங்கிக் கொண்டே இருக்கும். இரண்டு வருடங்கள் முன்னர் வரை நரசூஸ் தான் வாங்கினோம். திடீரென நம்ம ரங்க்ஸுக்கு அது பிடிக்காமல் போய் இப்போது வாங்கும் கடையில் வாங்க ஆரம்பிச்சிருக்கார். லியோ காஃபி பவுடர் ஒரே முறை தான் போட முடியும். ஶ்ரீரங்கம், திருச்சி பத்மா காஃபி, ஜோசஃப் காஃபி எல்லாம் வாங்கிப் பார்க்கலை. ஐயங்கார் காஃபி, கோத்தாஸ் காஃபி கிட்டேயே போகிறதில்லை. இந்தக் காஃபி பவுடரைப் பொட்டலம் கட்டி வணிகவளாகங்களில் விற்பாங்களே அது பக்கம் கூடப் போக மாட்டோம். அப்போது கொட்டை வாங்கி, அப்போதே அரைத்து வாங்கும் பொடிதான்.

    பதிலளிநீக்கு
  13. கேஜிஜி சார், மனைவியை பாஸ் என்று குறிப்பிட மாட்டார். ஆகையால் இது எழுத்து நடையிலிருந்தும், மனைவியை பாஸ் என்று சொல்வதிலிருந்தும் ஶ்ரீராம் எழுதினது தான் என்று புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா மேடம். இதை எழுதியிருப்பது ஶ்ரீராம் என்று புரிந்து சொன்னதற்கு!

      கேஜிஜி.. கொஞ்சம் வாங்க.. வந்து இரண்டு மூன்று வாரம் 'திங்க'க்கிழமையைக் கவனிச்சுக்குங்க...!

      :))

      நீக்கு
  14. கேஜிஜி சார், மனைவியை பாஸ் என்று குறிப்பிட மாட்டார். ஆகையால் இது எழுத்து நடையிலிருந்தும், மனைவியை பாஸ் என்று சொல்வதிலிருந்தும் ஶ்ரீராம் எழுதினது தான் என்று புரிகிறது.

    பதிலளிநீக்கு
  15. காப்பி மோசமாக இருந்ததும் நல்லதுதான் ,இவ்வளவு விபரம் நான் தெரிந்து கொள்ள முடிந்ததே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பகவான் ஜி. பாராட்டுதானே... ஹி...ஹி.. மதுரைத் தமிழன் காதுல விழற மாதிரி சொல்லுங்க!

      நீக்கு
  16. ஒரு வாரத்துக்கு அரை கிலோ ப்லாண்டேசன் ஏ காபி பவுடர் எனக்கு நினைவுக்கு வந்த கடந்த 60 ஆண்டுகளாக வாங்கின வகையில், 1440 கிலோ காபி பவுடர் எனது வயிற்றுக்குள்ளே சங்கமம்.
    ரூபாய் 4 தான் அந்தக் காலத்தில் கிலோவுக்கு. இப்போது ரூபாய் 467 விற்கிறது.
    அந்தக் காலத்தில் திருச்சியில் ஜோசப் காபி, நரசூஸ் காபி,
    தஞ்சையில் ராமன்ஸ் காபி,
    சென்னை வந்த உடன், அம்பத்தூர் கிருஷ்ணாஸ் காபி, பின், காபி டே ,
    எப்பவுமே சிக்கரி கிடையாது.
    முதல் டிகாஷன்
    காலையிலும் மாலையிலும்
    நடுவில் நடுவில் நன்பர்கள் வரும்போதும்
    காபி தான் சொர்க்கம். காபியே சிந்தனை.

    காபி ராகமும் பிடிக்கும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி ராக ரசனைக்கு நன்றி சுப்பு தாத்தா. தஞ்சாவூர் ராமன்ஸ் காபி நானும் எங்கள் தஞ்சைக் காலங்களில் சாப்பிட்டிருக்கிறோம். நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  17. இத்துண்டு பால்... கொஞ்சோன்னு டிகாசன்...பத்தாத சீனி... நிறைய தண்ணீர்...இந்த டீ..காபியை நான் எப்போதும் குடிப்பதில்லை.....

    பதிலளிநீக்கு
  18. இத்துண்டு பால்... கொஞ்சோன்னு டிகாசன்...பத்தாத சீனி... நிறைய தண்ணீர்...இந்த டீ..காபியை நான் எப்போதும் குடிப்பதில்லை.....

    பதிலளிநீக்கு
  19. //நாங்கள் வந்தபோது என்ன பாலில் காபி குடித்தோம் என்று நினைவில்லையே கீதா மேடம்!!//

    krrrrrrrrrrrrrrrrநீங்க வந்தப்போ நல்லப் புத்தம்புதுப் பசும்பால் வாங்கி வைச்சிருந்தேன். இப்போத் தான் போன வார சந்திப்பின் போது பால் வாங்கி வைக்க மறந்துட்டோம். பால்காரரைத் தொடர்பு கொள்ள முடியலை! ஆகையால் ஆவின் பசும்பால் வாங்கி வைச்சோம். அதில் காஃபி மேக்கரில் போட்ட டிகாக்‌ஷனில் காஃபி கொடுத்தேன். காஃபி நல்லாவே இருந்தாலும் எங்க ரெண்டு பேரின் நாக்கு மட்டும் இது கறந்த பால் இல்லைனு சொல்லிச்சு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாகக் கறந்த பாலில் கலந்த காபிக்கும், கவர்ப்பாலில் கலந்த காபிக்குமான சுவை வித்தியாசத்தை என் நாக்கால், இதைப் படிக்கும்போதே மனதளவில் உணர முடிகிறது கீதா மேடம்! (வாக்கிய அமைப்பு சரியா வந்திருக்கோ!!)

      நீக்கு
  20. ஹிஹிஹி, எல்லாம் ரெண்டு ரெண்டு தரம் வந்திருக்கு. ஒண்ணை எடுத்துடவா? இல்லைனா கமென்ட்ஸ் எண்ணிக்கைக்காக விட்டு வைக்கவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹிஹிஹி, எல்லாம் ரெண்டு ரெண்டு தரம் வந்திருக்கு. ஒண்ணை எடுத்துடவா?//

      இந்தக் கேள்வியை நான் சாய்ஸில் விட்டு விடுகிறேன்!

      நீக்கு
    2. //ஹிஹிஹி, எல்லாம் ரெண்டு ரெண்டு தரம் வந்திருக்கு. ஒண்ணை எடுத்துடவா?//

      இந்தக் கேள்வியை நான் சாய்ஸில் விட்டு விடுகிறேன்!

      நீக்கு
  21. சு.தா.(சுப்புத்தாத்தா) அம்பத்தூர் கிருஷ்ணா காஃபியில் கொட்டையைக் கறுப்பாக வறுத்துடுவாங்க. அம்பத்ஹ்டூரில் நான் அங்கே வாங்கவே மாட்டேன். நம்ம ரங்க்ஸ் வாங்கினால் அங்கே வாங்குவார். நான் நைசாக டாடா காஃபி கடையில் வாங்கிடுவேன். கூர்க் காஃபிக் கொட்டை! அதே வடக்குப் பூங்கா தெருவில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தாண்டி, கரூர் வைஸ்யா பாங்குக்கு அடுத்து 2.3 கட்டிடம் தாண்டி இருக்கு டாடா கூர்க் காஃபிக் கடை! முன்னெல்லாம் (நான் சொல்வது பத்துப் பதினைந்து வருடங்கள் முன்னர்) அரைகிலோ காஃபிப் பொடிக்கு அரைக்கிலோ சர்க்கரை கொடுத்தாங்க! அப்புறமா நம்ம ரங்க்ஸுக்கு நான் அங்கே தான் வாங்கறேன்னு தெரிஞ்சு காஃபியின் சுவையும் புரிஞ்சு அங்கே வாங்க ஆரம்பிக்கவும் அதிர்ச்சியில் நிறுத்திட்டாங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி இலவச இணைப்புகள் தரும் வழக்கம் நரசுஸிலும் உண்டே...

      நீக்கு
  22. லியோவில் ப்ளாஸ்டிக் டப்பாக்கள் கொடுப்பாங்க! கிருஷ்ணாவில் ஒண்ணுமே கொடுத்ததில்லை! :) கூர்க் காஃபியில் தீபாவளி சமயம் எவர்சில்வர் சம்புடம் கொடுப்பாங்க! இங்கே நாங்க வாங்கற இடத்தில் ஒரு எவர்சில்வர் வாணாய் கொடுத்திருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! கூர்க்! அது கூட ரெண்டு தரம் வாங்கியிருக்கோம். திருப்தியில்லை!

      நீக்கு
  23. //அம்பத்ஹ்டூரில்// ஹிஹிஹி, அம்பத்தூரில் என்று படிக்கவும். ரயில்வேயில் 3,000 கோடி லாபம் ஈட்டினாங்கங்கற செய்தியை ரங்க்ஸ் காட்டினாரா? அதிர்ச்சியில் கை தடுமாறிடுச்சு! டைபோ! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்பத்ஹ்டூரில்//

      அஆ! இம்போஸிஷன் எல்லாம் எழுத வேணாம், விடுங்க பரவாயில்லை!

      நீக்கு
  24. //திருச்சியில் ஜோசப் காபி நன்றாயிருக்குமாமே...//

    ஜோஸப் காஃபி ...... அது ஒரு காலம். இப்போதும் ஓரிடத்தில் அந்தக்கடை உள்ளது.

    திருச்சியில் பத்மா காஃபி என்று பல இடங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாகக் கொடி கட்டிப் பறந்து வந்ததில் மற்ற எல்லாமே படுத்துப்போய் விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

    இப்போது கடந்த ஓராண்டாக அதிலிருந்தும் (பத்மா காஃபியிலிருந்தும்) நாங்களும் மாறிவிட்டோம்.

    ..... இப்போது நான் வெளியே செல்ல வேண்டியுள்ளதால் பிறகு தொடர்வேன் .....
    வைகோ ஸார், தமிழ் இளங்கோ ஸார் சொல்லலாம். அல்லது கீதா மேடம் கூடச் சொல்லலாம்!//

    பதிலளிநீக்கு
  25. REVISED:
    ========

    //திருச்சியில் ஜோசப் காபி நன்றாயிருக்குமாமே... வைகோ ஸார், தமிழ் இளங்கோ ஸார் சொல்லலாம். அல்லது கீதா மேடம் கூடச் சொல்லலாம்!//

    ஜோஸப் காஃபி ...... அது ஒரு காலம். இப்போதும் ஓரிடத்தில் அந்தக்கடை உள்ளது.

    திருச்சியில் பத்மா காஃபி என்று பல இடங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாகக் கொடி கட்டிப் பறந்து வந்ததில் மற்ற எல்லாமே படுத்துப்போய் விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

    இப்போது கடந்த ஓராண்டாக அதிலிருந்தும் (பத்மா காஃபியிலிருந்தும்) நாங்களும் மாறிவிட்டோம்.

    ..... இப்போது நான் வெளியே செல்ல வேண்டியுள்ளதால் பிறகு தொடர்வேன் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வைகோ ஸார்... வெளி வேலையை முடிச்சுட்டு வாங்கோ... அப்புறம் காபி சாப்பிடலாம்!

      பத்மா காபி? எனக்கு தஞ்சாவூரில் ரயிலடி நியூ பத்மா கஃபே தான் தெரியும்!

      நீக்கு
  26. என்ன சாப்பாட்டு ஐட்டம் என்று பார்க்கவந்தால், காபி புராணம். அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும், பழக்கப்பட்டவர்களுக்கு, காபி இல்லைனா ஓடவே ஓடாதுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. திருச்சியில் இருந்தவரை காஃபிக் கொட்டை வாங்கி வீட்டிலேயே அரைத்துடிகாஷன் போடுவோம் அல்லதுபெர்கொலேட்டரில் காஃபி தயாரிப்போம் பெங்களூர் வந்தபின் வீட்டில் அரைக்கும் மெஷின் பழுதாய் விட்டதால் ஃபில்டர் காஃபிதான் இங்கே கோதாஸ் காஃபி பயன் படுத்துகிறோம் 15% சிக்கரி கலந்திருக்கும் சர்க்கரை குறைவாக கொஞ்சமாகக் காஃபி குடிப்பது வழக்கம் ஆனால் ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் அது என்னவோ தெரிய வில்லை விருந்தாளிகள் வந்தால் வீட்டில் காஃஃபி சுவை கூடும்

    பதிலளிநீக்கு
  28. திங்கக் கிழமை குடிக்கும் கிழமை ஆகி விட்டதே எனது இன்னொரு தளம் பூவையின் எண்ணங்களில் முதல் பதிவே காஃபி பற்றியதுதான்

    பதிலளிநீக்கு
  29. நான் சென்னை வரும்பொழுது அதுவும் உறவினர் / நண்பர்கள் வீட்டில் மட்டும் தவிர்க்க இயலாவிட்டால் காபி குடிப்பது உண்டு. 3.1.16 க்குப் பிறகு இதுவரை காபி குடிக்கவில்லை. டிசம்பர் சீசனுக்கு முன்பாக 3 மாதங்கள் காபி குடிக்காமல் இருந்தேன் .

    பதிலளிநீக்கு
  30. காஃபியை குறித்து இவ்வளவு விடயங்களா ? அருமை
    நான் காஃபி, டீயை பலமுறை சவால் விட்டு நிறுத்தி இருக்கிறேன் தற்காது காலையில் ஒரு காஃபி மட்டுமே குடிககிறேன் நினைத்தால் இதையும் நிறுத்த முடியும் தற்போது யாரும் பந்தயத்துக்கு வரவில்லை. ஆகவே தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  31. அடேடே... நெல்லைத் தமிழன் ஸார்.. பதிவை நீங்களும் ரசிப்பீர்கள் என்று ஆவலுடன் காத்திருந்தேனே... ஏமாந்து போனேனே...

    பதிலளிநீக்கு
  32. நன்றி ஜி எம் பி ஸார். நானே G+ அறிமுகத்தில் "திங்கற கிழமை குடிக்கிற கிழமை ஆனதே" என்றுதான் பகிர்ந்துள்ளேன்! பார்க்கவில்லையா!

    பதிலளிநீக்கு
  33. காபி பொடி வாசனை பற்றி-அலுமினியம் பஃஆயிலில்
    இருந்து அதை லேசாக பிரித்து உபயோகித்தால் வாசனை கெடாது-பிரிக்கும்போது வாசனை மூக்கைத்துளைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  34. ஆமாம். காஃபியின் ஸ்பெஷலே அந்த வாசனைதான். அதுவே ஒரு சுறுசுறுப்பைக் கொடுக்கும்! நன்றி விஸ்வா.

    பதிலளிநீக்கு
  35. ஆஹா! காஃபி! நாங்கள் இருவருமே விரும்பிக் குடிப்பது. துளசி: கேரளத்தில் காஃபி அவ்வளவு நன்றாகப் போடுவதில்லை என்பதால் டீ தான். சென்னை வந்தால் காஃபி...மணம் இங்கு வரை....

    கீதா: காஃபி காஃபிதான்...ஐயோ எக்ஸ்ப்ரஸ்ஸோ காஃபி...ஸ்ஸ்ஸ்..எனக்கும் நல்ல சூடாக வேண்டும்....அம்மா வீட்டில் உங்கள் அளவு போல சிக்கரி கலப்பார்கள். மாமியார் வீட்டில் நோ சிக்கரி. பல காஃபி பொடிகள் மாறி லியோ உட்பட இப்போது காஃபி டே!!! நன்றாக அரைத்து வாங்குவதுண்டு. ரொம்ப கர கர என்றில்லாமல். ஐயோ காஃபி எல்லாம் குடிக்காமல் இருக்க முடியாதுப்பா....கஷ்டம்...

    பதிவு சுவையான காஃபி ஃப்ளேவருடன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளசிஜி / கீதா..

      உங்களிருவருக்கும் சுடச்சுட என் கையால் நுரை பொங்க ஒரு கப் காஃபி கொடுத்த திருப்தி! அப்படியே நானும் ஒரு ஸ்மால் டோஸ்...!

      :))))

      நீக்கு
  36. பத்மா காஃபி + நாகநாதா டீ ஸ்டால் + வாசன் மெடிகல் ஹால் இவை மூன்றும் திருச்சியில் இன்று இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான கிளைகளுடன் சக்கை போடு போட்டு வருகின்றன.

    இவை மூன்றுமே சுத்தம், சுகாதாரம், நல்ல பராமரிப்பு, வாடிக்கையாளர் கூட்டம், விறுவிறுப்பான சுறுசுறுப்பான ஆட்களுடன் சேவை செய்து வருகின்றன என்றும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வைகோ ஸார்... காபிப்பொடிக் கடைகளைத் தாண்டும்போதே வாசனை மூக்கைத் துளைத்து மூளையை எட்டும். சில கடைகளில் வாங்கினால் அவ்வளவு நன்றாயில்லை என்று நாம் நினைக்கும் கடைகளில் கூட வாசனை பிரமாதமாக இருக்கும்.

      நீக்கு
  37. தொடர்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்மா காஃபி திருச்சியில் பிரபலமானதற்கான காரணங்கள்.

    1) அதன் A1 தரம்

    2) தரம் வாரியாக நம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு விலைப் பட்டியல்கள் பற்றிய தெளிவான அறிவிப்புப்பலகைகள்.

    3) மக்கள் சேவைக்காக ஊரெங்கும் ஏராளமான கிளைகள்

    4) கடைகளின் படு சுத்தமான பராமரிப்பு

    5) கடை வேலையாட்களின் சுறுசுறுப்பு

    6) கடை அருகே நின்றாலே சுண்டியிழுக்கும் காஃபிப்பொடி மணம் + குணம்

    7) பளிச்சென்ற டிஜிடல் எலெக்ட்ரானிக் எடைமெஷின் (மின் தராசு)

    8) கால் கிலோ, அரைக்கிலோ, ஒரு கிலோ என பல அளவுகளில் நாம் அவ்வப்போது வாங்கிடும் காஃபிப்பொடி பில்களை பத்திரப்படுத்தி சேமித்து வைத்து 5 கிலோ, 10 கிலோ, 15 கிலோ ஆனதும் அவர்களிடம் திரும்பக்கொடுத்தால் அதற்கு அவர்கள் தரும் புத்தம் புதிய காஃபி பில்டர், டவரா டம்ளர், டிபன் பாக்ஸ், டிபன் கேரியர் போன்ற பல்வேறு எவர்சில்வர் பாத்திர அன்பளிப்புகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைகோ ஸார்...

      இந்த பில்லை எல்லாம் சேர்த்துக் கொடுத்தால் சிறு எவர்ஸில்வர் பொருட்கள் தரும் வழக்கம் எல்லா காஃபிப் பொடி கடைகளிலும் உண்டு என்று தெரிகிறது.

      நீக்கு
  38. நாங்களும் 1995 முதல் 2014 வரை இங்குதான் (பத்மா காஃபியின் தான்) வாங்கி வந்தோம்.

    போர்டில் ‘ஸ்பெஷல்’ என்று போட்டுள்ள நம்பர் ஒன் வரைட்டியில் 80/20 எனச் சொல்லி வாங்கிவருவோம். அதாவது 80% ப்யூர் காஃபி + 20% சிக்கரி கலந்தது. அரைக்கிலோ வாங்கினால் ஒருவாரம் சரியாக இருக்கும். விருந்தினர் வருகை குறைவாக இருப்பின் சமயத்தில் 10 நாட்களுக்கும் வரும். என் வீட்டில் நிரந்தமாக நால்வர் ... இதில் நான் மட்டும் தினமும் நான்கு முறை காஃபி சாப்பிடும் பழக்கம் உள்ளவன். (காலை எழுந்தவுடன், பிறகு டிபன் முடிந்த கையோடு, மாலை 5 மணி சுமாருக்கு, இரவு பலகாரம் முடித்து படுக்கப்போகும் முன்பு). மீதி மூவரும் தலைக்கு மூன்று முறை வீதம் மட்டுமாவது காஃபி சாப்பிடுபவர்கள்.

    15 to 20% சிக்கரி கலந்தால் தான் காஃபி காஃபியாக இருக்கும். அத்தோடுகூட பாலும் நல்ல குவாலிடியாக இருக்க வேண்டும். முதலில் இறங்கும் டிகாக்‌ஷனில் கலக்கும் காஃபி மட்டுமே ஜோராக இருக்கும்.

    இரண்டாம்/மூன்றாம் முறை இறங்கும் டிகாக்‌ஷனை உடனடியாகக் கொட்டி விடாமல் எங்கள் வீட்டில் தனியாக சேமித்து வைத்திருப்பார்கள். நான் எப்போதாவது நள்ளிரவில் எனக்குத் தூக்கம் வராதபோது, அங்கு சென்று, அவற்றில் கொஞ்சூண்டு சர்க்கரை போட்டு அப்படியே பானகம் போல நினைத்துக் குடித்துவிடுவதும் உண்டு. அதன் பிறகு நான் பதிவு வெளியிட்டால் அதில் ஒரு தனி கிக் இருக்கத்தான் செய்யும். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைகோ ஸார்...

      எங்களுக்கு அரை கிலோ காபிப்பொடி பத்து நாட்கள் வரும். வீட்டில் மூன்று பேர் காபி சாப்பிடுவோம். முதல் டௌன் டிகாக்‌ஷனில் காபி குடிக்க மனசு வராது... மற்றவர்களுக்கு சுவை குறைந்து விடுமே...!

      நீக்கு
  39. இப்போது கடந்த ஓராண்டாக நாங்கள் வாங்கும் காஃபித்தூள் ‘ஆனந்தா காஃபி’ என்ற கடையில். திருச்சி வாணப்பட்டரை மாயவரம் லாட்ஜ் க்கு எதிர்புறம் இந்தக்கடை உள்ளது. பத்மா காஃபியை விட இன்னும் நன்றாகவே உள்ளது.

    80/20 .... ஸ்பெஷல் காஃபித்தூள் அரை கிலோ ரூ 170 .... நமக்கு நேராகவே காப்பிக்கொட்டையை அரைத்து, சிக்கரி சேர்த்து மீண்டும் கலக்கி சுடச்சுட தருகிறார்கள். போன் செய்தால் உடனடியாக சுடச்சுட டோர் டெலிவெரியும் செய்கிறார்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்தரம் காபித்தூள் (அரைக்கிலோவுக்கு ஐம்பது கிராம் சிக்கரி) சேர்த்து கிலோ ₹ 450. காஃபி டே ₹ 430.

      நீக்கு
  40. //அதேபோல, ஒரு பெருநகரத்தில் இளசுகள் கூடும் கடைகளில் காபியில் சிறிதளவு - மிகச் சிறிதளவு - அபின் கலப்பார்கள் என்று கேள்விப்பட்டது உண்மையா பொய்யா எனக்குத் தெரியாது!//

    1980 வரை திருச்சியில் மிகப்பிரபலமான ஜன நடமாட்டங்கள் மிகுந்த, ஓர் பகுதியில், ஒரு குறிப்பிட்ட கடை வாசலில் காஃபி சாப்பிட மட்டும், மிக நீண்ட க்யூ நிற்கும். அனைவரும் நின்றுகொண்டேதான் காஃபியைச் சாப்பிட்டுச் செல்ல வேண்டும். உட்கார இடமே இருக்காது. காஃபி சும்மா அவ்வளவு ஜோராக டேஸ்டாக இருக்கும். அதன் சுவை நெடுநேரம் நம் நாக்கில் தங்கியிருக்கும்.

    இந்தப்பிரபலக் கடையிலும் தாங்கள் மேலே சொல்வதுபோல, அபின் போன்ற ஏதோ போதைப் பொருளினை பில்டரின் அடியில் போட்டு, டிகாக்‌ஷன் வடிகட்டிச் செய்கிறார்கள் என, நானும் கேள்விப்பட்டது உண்டு. ஆனால் இப்போது அங்கு அந்தக்கடை இல்லை. :(

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ ஊருக்கு ஊர் இந்த போதை சமாச்சார வதந்தி உண்டுன்னு சொல்லுங்க! ஐஸ் காபி குடிச்சதில்லையா வைகோ ஸார்?

      நீக்கு
  41. என்னால் சாதம் சாப்பிடாமல்கூட நீண்ட நேரம் இருந்துவிட முடியும். நல்ல ருசியான காஃபி சாப்பிடாமல், தொடர்ச்சியாக 5 மணி நேரங்கள்கூட இருக்க முடிவது இல்லை.

    காஃபிப்பொடி + பால் + ஜீனி + காஃபி கலக்கத் தேவைப்படும் எரிபொருட்களு க்கான செலவு, இதர மளிகை சாமான்களுக்கான செலவுக்குச் சமமாகவே ஆகிவிடுகின்றது என்பதும் எங்களைப்பொறுத்தவரை உண்மையே.

    காஃபி புராணங்களும், இதில் பலரின் அனுபவங்களும், வந்துள்ள பின்னூட்டங்களும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. பாராட்டுகள்.

    இப்போ நான் மீண்டும் ஓர் காஃபி கிடைக்குமா? எனக் கேட்கக் கிளம்பிவிட்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் வைகோ ஸார்...

      முதல் க்வாலிட்டியோ, இரண்டாம் க்வாலிட்டியோ காஃபி சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. (முதல் தரம், இரண்டாவது தரம் என்று தமிழில் எழுதினால் No.of times என்பது போல் அர்த்தம் மாறி விடுகிறது என்பதால் - ஆனால் வேறு பொருளில் அதுவும் சரியாகவே வரும் - க்வாலிட்டி என்று எழுதினேன்)

      :))))

      நீக்கு
  42. எனக்கு காப்பி குடிக்க நிரம்ப பிடிக்கும்,ஆனாலும் இப்போது தேனீர் தான் காலையில் குடிப்பது!
    மதியத்துக்கு மாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு காப்பி குடிப்பதோடு சரி!
    நான்கைந்து மாதம் முன்னால் வரை தினம் நான்கு தடவையாவது காப்பி குடிப்பேன்.

    எங்கள் ஹோட்டலில் காப்பி போடும் மெசினில் வறுத்த முழுக்காப்பி கொட்டையை அப்படியே வாங்கி கொட்டி வைத்திருக்கின்றோம்.
    ஒவ்வொரு காப்பி கப்புக்கும் மெசின் தானாகவே தேவைக்கு காப்பியை அரைத்து கொள்ளும்,

    சர்க்கரையும் பாலும் தனியே டப்பியில் பருமாறுவோம்.

    எக்ஸ்பிரசோ எனும் கசப்புக்காப்பிக்குரிய காப்பிக்கொட்டை வேறு, நர்மலாய் நாம் குடிக்கும் காப்பிக்கொட்டை வேறு!
    இரண்டு காப்பிக்கொட்டைக்கும் சுவையும் வேறாக இருக்கும்,

    கப்பேசீனோ எனும் பால் சேர்த்து நுரைத்து வரும்காப்பியை தான் நீங்கள் எக்ஸ்பிரசோ என சொல்கின்றீர்களோ என நினைக்கின்றேன்! எக்ஸ்பிரசோகாப்பி கடும் கசப்பாய் அதற்கென குட்டிகப்புகளில் பரிமாறுவோம்,

    இலங்கையில் காப்பிக்கு,தனியா,வேர்க்கொம்பு எனும் சுக்கு சேர்த்து வறுத்து அரைத்து அரித்து வைத்து கொள்வார்கள், சுவையும் மணமும் அருமையாக இருக்கும்,

    தலையிடிக்கு காப்பி அருமருந்து என்பது என் அனுபவம்,சோர்வை விரட்டி தூக்கத்தை துரத்தும் வல்லமை காப்பிக்கு உண்டு. இரவில் தூக்கம் விழிக்க விரும்புவோர் காப்பி குடித்தால் தூக்கம் வராது,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நிஷா.. ஸ்விஸ்ல ஹோட்டல் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். உண்மையில் நான் கடைகளில் சென்று, இந்த கப்புசினோ, ஐஸ் காபி, எக்ஸ்பிரஸோ எல்லாம் குடித்துப் பார்த்ததில்லை.

      இலங்கையின் ஸ்பெஷல் காபியை விட தேநீர்தானே, இல்லையா!

      நீக்கு
  43. காபினா...காப்பி தான். படிக்கும் போதே குடிக்கனும்னு...தோனுதே...எங்க மாமனார் பசும் பால், கள்ளிச் சொட்டு டிகாஷன் அதுவும் சிக்கரி கலக்காமல்..இருந்தால் தான் குடிப்பார்கள். காப்பி கொட்டை வாங்கு அப்போது வறுத்து, சர்க்கரை சேர்த்து பதமாக வருத்து அரைத்து செய்வது தான் பிடிக்கும். இப்போ...பியூர் காப்பி பொடி தான்...சொல்லிக் கிட்டே போகலாம்....ஆனா அதை நீங்களே சொல்லிட்டதால........உங்க பதிவில....நான் நிப்பாட்டிக்கிறேன் ஹிஹிஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி உமையாள் காயத்ரி.. கள்ளிச் சொட்டு டிகாக்‌ஷன்தான் கட்டுப்படி ஆவதில்லை. தினமும் இல்லா விடினும் அவ்வப்போதாவது இப்படிக் குடிக்கத்தான் வேண்டும்.

      :)))

      நீக்கு
  44. காலை எழுந்தவுடன் காஃப்பி.
    அதுவும் சந்தனக் கலரில் திக் டிகாகஷனுடன்
    அப்போ காய்ச்சின புதுப்பாலுடன் சாப்பிடும் மகிமை உங்கள் பதிவிலும் கிடைத்தது. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிமா.. "காலை எழுந்தவுடன் காஃபி.. பின்பு கண்களுக்குக் கொஞ்சம் நியூஸு.." என்று பாடலாம்! இல்லை?

      நீக்கு
  45. காலை எழுந்ததும்
    ஒரு நடைப் பயிற்சி
    நடைப் பயிற்சியின் நிறைவில்
    காபி,காபி
    காலையில் பள்ளிக்கு கிளம்பும் முன்னர்
    நிச்சயமாக இரண்டு காபி குடித்து விடுவேன்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேடே.. நடைப்பயிற்சி! என்னால் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க முடியாத விஷயம்...

      நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

      நீக்கு
  46. பேஷ்..! பேஷ்..! ரெம்போ நன்னாயிருக்கு..!
    த ம 10

    பதிலளிநீக்கு
  47. ஆஹா !என் favorite காப்பி :)
    நான் போன வருஷம் வரைக்கும் நரசுஸ் காபி தூள் பார்சலில் வரவச்சென் .
    இந்த வருஷ துவக்கத்தில் இருந்து நிறுத்தியாச்சி மிக கஷ்டத்துடன் ..
    புரசைவாக்கத்தில் மெட்ராஸ் லியோ காபி கடைங்க பக்கம் போனாலே சும்மா வாசனை அமோகமா இருக்கும் !
    பால் சேர்த்த காப்பின்னா சர்ர்க்கரை குறைவாவும் கறுப்பு காப்பின்னா அதுக்கு பனைவெல்லம் மட்டும் சேர்த்தும் குடிச்ச காலம் பசுமையா இருக்கு ..சரவணபவன் காபி டாப் எப்பவும் .

    பதிலளிநீக்கு
  48. //எக்ஸ்ப்ரசோ காபியை வீட்டிலேயே தயாரிக்க : டிகாக்ஷனைக் கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் விட்டுக் கொண்டு, புது வெண்ணெய் ஒரு துளி இட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு பாலுடன் சேர்த்துக் குடித்துப் பார்த்திருக்கிறீர்களா?//
    யெஸ் யெஸ் :) ஒரு சின்ன திருத்தம் சுடுதண்ணி ப்ளஸ் கொஞ்சம் இன்ஸ்டன்ட் தூள் ப்ளஸ் கொஞ்சம் வெண்ணெய் ப்ளஸ் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அத்தனையும் milk frother இல் அடிச்சு குடிக்கிறோம் இப்போ .புல்லட் proof காப்பி :) பேலியோ டயட் ..yummy

    பதிலளிநீக்கு
  49. இலங்கையில தேனீர் தான் பிரபல்யம் எனினும் சுக்கு,மல்லி சேர்த்த காப்பியும் பிரபல்யம் தான்.

    ஆமாம் நாங்கள்சுவிஸில் ஹோட்டலும் இரண்டு திருமண மண்டபங்களும் வைத்திருக்கின்றோம்.
    சுவிஸ் முழுமைக்கும் கேட்டரிங்க் பார்ட்டி சேவிஸ் செய்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  50. சுவையான காபி அலசல்
    "கஞ்சி குடித்து நூறு வயது வாழ்வதை விட காபி குடித்து ஐம்பது வயது வாழ்வது மேலானது" என்று கல்கி சொன்னதாக படித்திருகிறேன்.
    காலை எழுந்தவுடன் காபி பின்பு ஏழு மணிக்கு ஒரு காபி , . விடுமுறை நாட்கள் என்றால் காலை 11 மணிக்கும் மாலை 7 மணிக்கும் டீ . இது எங்கள் வீட்டு நடைமுறையாகி விட்டது. பில்டரில் துளைகள் அடைத்துக் கொண்டால் எளிதில் டிக்காஷன் இறங்குவதில்லை. வாரத்திற்கு முறை பில்டரை வெந்நீரில் கொதிக்க வைத்தால் துளைகள் அடைப்பு நீங்கி டிக்காஷன் சரியாக இறங்குகிறது

    பதிலளிநீக்கு
  51. இப்பவே காஃபி காஃபி மணி 11. 35 . :)

    மெர்க்காராவின் எஸ்டேட்டிலிருந்து காஃபிக் கொட்டைகள் ( ஐயாவோடது ) வருடா வருடம் வரும். அதை அவ்வப்போது வறுத்துப் பொடித்து காஃபி போடுவார்கள். தனி ருசி. இப்ப குடும்பம் பெருகிப் போச்சு. அதுனால ஆயா வீட்டிலிருந்து காஃபிக்கொட்டை, ஏலக்காய், மிளகு, சீயக்காய், வெள்ளை மிளகாய் எல்லாம் வர்றதில்லை.

    பட் சிக்ரியே சேர்க்காம 50 % நரசூஸ் ப்ளஸ் காஃபிடேயில் பீ பெரித்தூள் 50 % இரண்டும் கலந்து காஃபி மேக்கரில் லேசாக சீனி தூவி காபித்தூள் நிரப்பி சூடாக நாமே ஃபில்டரில் போடுவது போலத் தண்ணீரை ஊற்றி டிக்காக்‌ஷன் ( இரண்டையும் ஒன்றாக ) இறக்கி ஆவின் பாலில் ( முன்னே பசும்பால் ) சரிக்குச் சரி தண்ணீர் கலந்து இந்த சூடான டிக்காக்‌ஷனை விட்டு இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து டபரா டம்ளரில் நுரை வர ஆத்திக் குடித்தால் அன்றைய நாள் சொர்க்கம். அடுத்தடுத்தும் டிஃபன் சாப்பிட்டு, மாலை வேலையில் கட்டாயம் மும்முறை உண்டு. சிலப்போ நடுவில் குடிப்பதால் 5 தரம், 6 தரமும் ஆகிவிடும். !!

    அருமையான் காஃபி ஸ்ரீராம் :)

    பதிலளிநீக்கு
  52. நல்ல இடுகை.

    விடுபட்டதாக எனக்கு தோன்றியவை :

    மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி

    1> டிகிரி காஃபி = இது பெரும்பாலானோருக்கு தெரிந்த லாக்டோ மீட்டரில் பாலின் கொழுப்பு / தர அளவு பார்த்து வாங்கி காபி போடும் முறை ஆகும்

    2> மீட்டர் காஃபி = இது கொஞ்சம் சிக்கலான செய்முறை கொண்டது???!!! பெரும்பாலானோர் எண்ணக்கூடியது போல இது லாக்டோ மீட்டரில் வரும் மீட்டர் அல்ல......!!!! சில பல சர்க்கஸ் வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும்.
    2.1 > டிகாஷனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனை கை வாகிற்கு தகுந்தாற்போல் இடதோ வலதோ கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்
    2.2> இன்னொரு கையில் தேவையான அளவு பாலினை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, அப்படியே அலாக்காக கை வீச்சில் முழுதுமாக (பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டு) மேலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூக்கி பிடிக்க வேண்டும்.
    2.3> இப்போது இரண்டாவது கையையும், அலாக்காக கை வீச்சில் முழுதுமாக (பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டு) மேலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாழ்த்தி பிடிக்க வேண்டும்.
    2.4> மேலே உள்ள பாத்திரத்திலிருந்து பாலினை கை உயரம் மாறாமல் அப்படியே (சொய்ய்ஈங்குன்னு) டிகாஷன் பாத்திரத்திற்கு உள்ளே செலுத்த?? வேண்டும்.
    2.5> மேற்கண்டவற்றை செய்வது கண நேரத்தில் நிகழவேண்டும் மற்றும் இந்த நிகழ்வின் பொது இரண்டு கை / பாத்திரத்திற்கு இடைப்பட்ட "தூரம்" குறைந்தது "ஒரு மீட்டர்" க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
    2.6> "மீட்டர் காபி" தயார்.

    இது தஞ்சை ஸ்பெஷல்!!!

    இது தற்போது கிடைக்கக் கூடிய இடம் : மேத்தா கடை என்று அழைக்கப்படும் காபி பேலஸ் - தெற்கு வீதி அருகில் - எல்லை அம்மன் கோயில் தெரு மற்றும் அய்யன்கடை தெரு, தஞ்சை.

    இப்போ சொல்லுங்க, இதுக்கு "மீட்டர் காபி" னு பேர் வச்சவன் ரசிகனா இல்லையா???!!!

    இந்த கடைக்கு வேறு பல விசேஷங்களும் உள. கூகிளார் உதவக்கூடும்.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_15.html

    & http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/patent-screw-feeder.html

    பதிலளிநீக்கு
  53. ஐயாவோட எஸ்டேட்டில் இருந்து :)

    பதிலளிநீக்கு
  54. நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  55. நன்றி ஏஞ்சலின். பனைவெல்லம் போட்டு காபி குடித்ததில்லை. ஆனால் சிறுவயதில் (ரேஷனிலும்) சர்க்கரை கிடைக்காத மாதக் கடைசிகளில் வெல்லம் போட்டுக் காபி குடித்ததுண்டு. அதுவும் தனிச்சுவைதான்!

    பதிலளிநீக்கு
  56. மீள் வருகைக்கு நன்றி நிஷா. சுக்குமல்லிக் காபி எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  57. நன்றி டி என் முரளிதரன். ஃபில்டரைக் கழுவ அதை அப்படியே கேஸ் அடுப்பில் காட்டி விட்டு அப்புறம் கழுவினால் க்ளீனாக ஆகி விடும்.

    பதிலளிநீக்கு
  58. நன்றி தேனம்மை லக்ஷ்மணன். உங்கள் காபி நினைவுகளை காபி பேஸ்ட் செய்ய வைத்து விட்டது இந்தப் பதிவு! ஹிஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  59. நன்றி ik way. டிகிரிக் காபி ஓகே, மீட்டர் காபி வர்ணனை தூள்! தஞ்சையில் நான் பார்த்ததில்லை. நான் தஞ்சையில் இருந்த காலங்கள் 79 க்கு முன்! ரசனையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  60. மீள் வருகைக்கு நன்றி தேனம்மை. (இதோடு 99 கமெண்ட்ஸ் ஆகிறது! 100வது பின்னூட்டம் இடப் போவது யார்! :)))

    பதிலளிநீக்கு
  61. நான் தான் 100 வது கமெண்ட் !
    காபி போஸ்டையும் கமெண்ட்சையும் மீண்டும் படிச்சி ஜொல்லிட்டு !
    ஓடிபோய் ரொம்ப நாள் கழிச்சி கருப்பட்டி காப்பி போட்டு குடிச்சேன் நேற்று :)

    பதிலளிநீக்கு
  62. நா.....னே..... வருவேன் அந்த நூறைத் தொடுவேன்!!!(:-)

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    பதிலளிநீக்கு
  63. ஹா... ஹா... ஹா... நூறுக்கு ரெண்டு பேர் போட்டி! ஏஞ்சலின்... உங்களின் இந்தப் பின்னூட்டம் படித்ததும் "நாமும் ஏன் நாளை காபியில் வெல்லம் போட்டுக் குடிக்கக் கூடாது?" என்று தோன்றுகிறது. நாளை முடியாது! நாளை முதல் மூன்று நாட்கள் என் தங்கைப் பெண் திருமணம். அது முடிந்ததும் கட்டாயம் முயற்சிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  64. k Way நன்றி. நூலிழையில் நூறைத் தவறவிட்டாலும் மொய் எழுதுவது போல 101 ஆகி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  65. // "நாமும் ஏன் நாளை காபியில் வெல்லம் போட்டுக் குடிக்கக் கூடாது?"//

    முடிந்தால் இதனை முயற்சித்துப் பாருங்கள். நல்ல ஒரு உட்கொள்ளக் கூடிய பண்டம்.

    http://coconutboard.gov.in/coconut.htm#sugar

    இது என்ன ஏன் எப்படி என்பது பற்றிய மேலதிக தகவல்களிற்கு கீழ்க்கண்ட உரல்களினை உரசிப் பார்க்க.

    http://demo.dodotechnologies.in/digest/index.php/health/item/410-palakkad-coconut-producer-company-and-cftri-join-hands-to-take-neera-to-newer-heights

    http://www.coconutboard.nic.in/Producer-companies.htm

    http://www.coconutboard.gov.in/

    http://www.coconutboard.in/innov.htm

    http://coconutboard.gov.in/coconut.htm#sugar

    http://indpad.blogspot.in/2015/10/dovetailing-coconut-farmers-in-palakkad.html

    தொடர்பு கொள்ள வேண்டின் : http://www.keralacoconut.com/contact-us

    Padmanbhan B, Vice President - B2B sales,PCPCL +91 - 9495098243

    பதிலளிநீக்கு
  66. இங்கே கிடைக்கும் பாலில் ஒரு புகை ஸ்மெல் வரும் ஆவின் பால் மாதிரி டேஸ்டும் இல்லை அதனாலேயே கருப்பு காப்பி குடிக்க ஆரம்பிச்சேன் ..பனைவெல்லம் அதோட கொஞ்சம் சுக்குத்தூள் சேர்த்துக்கோங்க digestion இற்கும் அப்புறம் தலைவலி கோல்ட் போன்றவற்றிற்கும் உடனடி நிவாரணி
    காபி இங்கேயே கட்டி போட்டுடிச்சே :) இன்னும் புது போஸ்ட் போகவேயில்லை நான்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!