திங்கள், 25 ஜூலை, 2016

"திங்க"க்கிழமை 160725 :: சிறுதானியமாவு கொழுக்கட்டை, மற்றும் அடை.          இந்த வாரமும் தோழி ஹேமாவின் ரெஸிப்பி.  நான் ஏற்கெனவே சொன்னது போல அவர் ஒரு ஆரோக்கிய சமையல் ஆராய்ச்சியாளர்.  புதுசு புதுசாக முயற்சி செய்து பார்ப்பவர்.  எனக்கு சமையலில் ஆர்வம் உண்டு என்பதால் எனக்கு டேஸ்ட் பார்க்க சாம்பிள் கொண்டுவந்து விடுவார்.
 
 

         சென்றவாரம் நெல்லைத்தமிழன் படங்களுடன் ஒரு ரெஸிப்பி அனுப்புவதாக பின்னூட்டமிட்டிருந்தார்.  இதுவரை வரவில்லை!
 


 

          இனி இன்றைய திங்கற ஐட்டத்துக்குப் போவோமா நேயர்களே....  எல்லோரும் சண்டை போடாம வரிசையா வாங்க....  ஆங்...  அப்படித்தான்...


          ஒரு கப் மல்டிக்ரெயின் மாவு,  அதாவது வரகு, சாமை, தினை எல்லாம் கலந்த சிறுதானிய மாவு ஒரு கப்.   கேரட், பீன்ஸ், குடைமிளகாய் எல்லாம் சேர்த்து கால் கப்.  பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு.
 

 

         வெங்காயம் தேவைப்படுபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.  பூண்டு இதற்குச் சேராது! 
 


 

          ஒரு கடாயில் முதலில் சிறுதானிய மாவை லேஸாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை அதில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து வேக விட்டு, இந்த மாவையும் அதில் சேர்த்து கிளறி, ஒரு முட்டை வெண்ணெய், நல்லெண்ணெய் விட்டு கைகளால் கொழுக்கட்டை மாவு போலப் பிசைந்து கொள்ளவும்.
 
 

         
 
          இதை இரண்டு வகையில் செய்து  சாப்பிடலாம். ஒன்று இதை பிடிக்கொழுக்கட்டை போல  வேகவைத்து சாப்பிடலாம்.  இரண்டாவது வகை தோசைக்கல்லில் இந்த மாவை ஆடை போலத்  தட்டி, ஃபோர்க்கால் துளைகளிட்டு, அதில் எண்ணெய் விட்டுத்  சாப்பிடலாம்.
 
 

          காரச் சட்னி  பொருத்தமான காம்பினேஷன்.

30 கருத்துகள்:

 1. நல்லவேளை, பூண்டும், வெங்காயமும் போடல. சாப்பிட்டாச்சு! இது இங்கே பண்ணினால் நான் தான் சாப்பிடணும்! சிறுதானியத்தில் இட்லி, தோசை, அடை, குழி அப்பம், பொங்கல், புளிப்பொங்கல், எலுமிச்சை,புளி, தேங்காய், காய்கறி சாதம்னு எல்லாமும் பண்ணியாச்சு இதைத் தவிர.

  பதிலளிநீக்கு
 2. கொழுக்கட்டை அருமையாக இருக்கும். (செய்முறையைப் படித்து படங்கள் பார்த்த உடனே தெரிகிறது). அடை அவ்வளவு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆரோக்கியமானதும்கூட. சிலர் பொழுது போகாமல் அரிசி மாவில் மணிக்கொழுக்கட்டை என்று வெகு நேரம் எடுத்துச் செய்வார்கள். அதைவிட இந்தக் கொழுக்கட்டை (அரிசிக் கொழுக்கட்டையும்கூட) உடம்புக்கு ரொம்ப நல்லது.

  பதிலளிநீக்கு
 3. சமையலில் நிறைய வகைகளை முயற்சிக்கவேண்டுமென்றால், அதை ரசித்து ருசிக்க வீட்டில் ஆள் இருக்க வேண்டும். கீதா மேடத்துக்கு அப்படி வீட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. சிறுதானியத்திலேயே இத்தனை வகைகளைப் பண்ணியுள்ளாரே..

  எங்கள் பிளாக் - ரெசிப்பி விரைவில் வருது. பேச்சலர் (forced) என்பதால் சோம்பல்.அதுவும் படங்களுடன் என்பதால், வெறும் ரெசிப்பியை எழுதமுடியாது. சமையல் புலிகள் (கீதா மேடம் போன்று) உங்கள் தளத்தை வலம் வருவதால் கொஞ்சம் நடுக்கம்தான்.

  பதிலளிநீக்கு
 4. //அடை அவ்வளவு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. //சிறு தானியங்களை ஊறவைத்து அரைத்துச் செய்யும் அடை நன்றாகவே இருக்கிறது. கம்பு, வரகு, சோளம், தினை, சாமை, குதிரைவாலி எனத் தனித் தனியாகவும் கலந்து போட்டும் செய்து பார்த்தேன். நன்றாக இருக்கிறது. இங்கே ஶ்ரீராம் சொல்லி இருப்பது தவலை அடை மாதிரி. தவலை அடைக்கு இப்படித் தான் அரிசி பருப்புக்களை ரவை போல் உடைத்துக் கொண்டு உப்புமா மாதிரிக் கிளறிக் கொண்டு தோசைக்கல்லில் அல்லது வெண்கலப்பானை, உருளி போன்றவற்றில் அடை போல் தட்டுவது உண்டு. தவலை அடை என்பார்கள் அதை! இதுவும் கிட்டத்தட்ட அப்படித் தான்! :)

  பதிலளிநீக்கு
 5. குடைமிளகாய் போட்டால் நான் பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை. ஏதேனும் ஒரு காரம் தான்! அநேகமாய்க் குடைமிளகாயே காரமாகத் தான் இருக்கு! :)

  பதிலளிநீக்கு
 6. மிக அருமை. பார்க்கவும் நன்றாக இருக்கிறது. இங்கே கிடைக்கிறதான்னு பார்க்கிறேன்.
  நன்றி ஸ்ரீராம்.வழிமுறைகள் அழகாகச் சொல்லி இருக்கிறிர்கள்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  படங்களுடன் உணவு செய்முறைகளை விளக்கிய விதம் அருமை.வெறும் அரிசி கொழுக்கட்டையை விட சத்துக்கள் நிறைந்த சிறு தான்யங்களை வைத்து இரு விதமான சிற்றுண்டி பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நானும் இதைப்போன்று அவசியம் செய்து பார்க்கிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. சிறு தானியம் எங்கள் வீட்டில் 30 வ்ருடத்திற்கும் மேலாக உபயோகத்தில் என்பதால் எல்லாம் செய்து பார்த்தாயிற்று...குதிரைவாலி யிலிருந்து எல்லா வகை சிறு தானியமும். அதுவும் ஒவ்வொரு ஊரிலும் இருந்த போது அந்த ஊரில் தேடிக் கண்டு பிடித்து வாங்கிவிடுவதுண்டு. அதுவும் அப்போதெல்லாம் இந்த சிறு தானியங்களுக்கு மவுசு இல்லை இப்போது போல். அதனால் கோழித்தீவனங்கள் கடையில் தான் கிடைக்கும். இந்த ரெசிப்பியிலும் அடையும் செய்யலாம் என்று சொல்ல் நினைத்து வந்த போது நீங்களே அதுவும் சொல்லியிருந்தீர்கள்.

  உங்கள் தோழி செம எக்ஸ்பெர்ட் போல...அவங்களுக்கு வாழ்த்துகள்!!!!! பாராட்டுகள்! சொல்லிடுங்கப்பா...

  கீதா

  பதிலளிநீக்கு
 9. இந்த சிறுதானியங்களுடன், பயறு கோதுமை மற்றும் சில ஸாமான்களை வறுத்து அறைத்து வைத்துக்கொண்டு அதில்தான் காலையில் கஞ்சி சற்று திக்காக பால் சக்கரையுடன் பருகுகிறேன். இந்தமாவையே உபயோகித்து பிடிகொழுக்கட்டை செய்து விடலாம். வேலை மிச்சம். கொஞ்சம் ரவைபோல மாவு இருந்தால் சூப்பராக வரும். கீதா எல்லோரும் சொல்லவேண்டியதை முன்னாலேயே சொல்லி விடுகிரார். மத்தவாளுக்குக் கொஞ்சம் சான்ஸ் விடுங்கோ. பரவாயில்லை. சும்மா சொன்னேன்.வெஜிடபிள் கொழுக்கட்டை.
  பிடி கொழுக்கட்டையைக் கூட அடி கனமான அகலமான தவலையில் கீழே தவலடையாகவும்,மேலே சிறிய பிடி கொழுக்கட்டையாகவும் பிடித்து வைத்து,தாராளமாக எண்ணெய்விட்டு மேலே ஒரு சொம்பில் ஜலம் வைத்து மூடி நிதான தீயில் வைத்து விடுவார்கள். இத்து வடிந்து மேலே குழக்கட்டைகள் வெந்துவிடும்.நிதானதீயில் தவலடையும்ஒருபக்கம் கரகரப்பாகவும்,மேல்ப்பக்கம் உதிரும் வெந்தபதத்திலும் இருக்கும். இது அரிசி பருப்பு உடைத்து தேங்காய் சேர்த்துச் செய்யும் பிடி.அல்லது தவலடை என்பார்கள். இப்போது தவலைக்கு எங்கு போவது. ஏதோ ஞாபகம் வந்தது. அவ்வளவுதான். அன்புடன்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க கீதா மேடம்.. எப்படியோ மறுபடியும் நீங்க செய்யாத ஒரு டிஷ்! இவை எல்லாம் சுவையாகவும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. என் மகன்கள் கூட விரும்பிச் சாப்பிட்டனர்.

  பதிலளிநீக்கு
 11. வாங்க நெல்லைத்த தமிழன்.. எனக்கென்னவோ கொழுக்கட்டையை விட அடை நன்றாக இருந்தது என்று தோன்றியது. குருணை அரிசி போட்டு நாங்கள் பிடிக்கொழுக்கட்டை செய்வோம். உப்புமாதான்.. ஆனால் வேறு விதத்தில்! அதைப்போல (கொழுக்கட்டை) இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. காய்கறிகள் போடுவது கிச்சடி சாப்பிடும் உணர்வைத் தந்தாலும் வித்தியாசச் சுவை. என்ன, என் தோழி உப்பு கொஞ்சம் கம்மியாகப் போட்டிருந்தார்.. (வேண்டுமென்றேதான்)

  பதிலளிநீக்கு
 12. @நெல்லைத்தமிழன்.. அரிசி மாவில் மணிக் கொழுக்கட்டை என்று நீங்கள் சொல்வது அம்மிணிக் கொழுக்கட்டையாயின் எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும் அது! கொழுக்கட்டைச் செய்து மீந்து போன மாவில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி எல்லாம் போட்டு இஷ்டப்பட்ட வடிவில் செய்து ஆவியில் வைத்து எடுப்பது.

  பதிலளிநீக்கு
 13. நெல்லைத்தமிழன்... கீதா மேடத்துக்கு ரங்ஸ் இதை எல்லாம் ரசிக்க மாட்டார் என்று சொல்லியிருக்கிறார் பாருங்கள். செய்பவர்களுக்கு சுவாரஸ்யம் இருந்தால் போதும். தூள் கிளப்பலாம்! உங்கள் ரெசிபியை அவசியம் அனுப்புங்கள். சென்ற வாரம் ஈ மெயில் முகவரி தந்திருக்கிறேன். எல்லாம் டிரையல் அண்ட் எரர்ஸ் தானே? அதுவும் நமக்குள்தானே? புதுசு புதுசாக முயற்சிப்போம்!

  பதிலளிநீக்கு
 14. மீள் வருகைக்கும் விளக்கங்களும் நன்றி கீதாக்கா.. எனக்கென்னவோ குடை மிளகாய் காரம் போதுமானதாகத் தோன்றுவதில்லை! நான் எங்கம்மா மாதிரி!

  பதிலளிநீக்கு
 15. மிக்க நன்றி வல்லிம்மா. முயற்சி செய்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 16. வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. வாங்க கீதா ரெங்கன்.. உங்க பாராட்டை அவங்களுக்குச் சொல்லிவிடுவோம்! நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 18. அடடே.. வாங்க காமாட்சிம்மா.. கீதாக்கா ரொம்ப Fastடாக்கும்! சீக்கிரம் வந்து விடுகிறார்கள். நீங்கள் கூட இன்னும் அதிகமான தகவல்கள் சொல்கிறீர்கள். தவலடை நினைவு படுத்தி இருக்கிறீர்கள். சாப்பிட்டு வருடங்களாகிறது.. இங்கு அந்த அடை என்கிற வஸ்துவை நான் தோசைக்கல்லில் போட்டுத்தான் எடுத்தேன்! நன்றிம்மா வருகைக்கும், கருத்துக் பகிர்வுக்கும்.

  பதிலளிநீக்கு
 19. பார்சல் அனுப்பி வைத்தால் தின்று பார்த்து விட்டு சொல்வேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 20. எனக்கு சில உணவு வகைகளைப் பார்க்கும் போது பெர்முடேஷன் காம்பினேஷந்தான் நினைவுக்கு வருகிறதுஎதையும் ருசித்து சாப்பிடுபவர்களுக்கு இதெல்லாம் உபயோகமாகும் என் பெரொஇய அண்ணி வெரும் அரிசிக் கொழுக்கட்டை என்று செய்வார்கள் அதுபோல் யாரும் செய்து இதுவரைசாப்பிட்டதில்லை.

  பதிலளிநீக்கு
 21. சாப்பிடவும் நன்றாகவே இருக்கிறது வலிப்போக்கன்.

  பதிலளிநீக்கு
 22. ஹா.... ஹா.... ஹா.... பார்சலா... அனுப்பிடுவோம். நன்றி கில்லர்ஜீ.

  பதிலளிநீக்கு
 23. நன்றி ஜி எம் பி ஸார். எனக்கும் அந்த வெறும் கொழுக்கட்டைகள் எல்லாம் பிடிக்கும் என்றாலும் அவை எப்போதும் சாப்பிடுபவைதானே.. இவை கொஞ்......சம் வித்தியாசமானவை!

  பதிலளிநீக்கு
 24. பார்க்க நன்றாகவே இருக்கிறது. மல்டி க்ரைன் ஆட்டா தான் இங்கே கிடைக்கிறது. அதில் செய்ய முடியாது. ஊருக்கு வரும்போது தான் செய்து தரச் சொல்ல வேண்டும்! :)

  பதிலளிநீக்கு
 25. நூத்துக்கிழவன் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே {aka கமலா காமேஷ்) மன்றம்!

  சமையலில் நிறைய வகைகளை முயற்சிக்கவேண்டுமென்றால், அதை ரசித்து ருசிக்க வீட்டில் ஆள் இருக்க வேண்டும். கீதா மேடத்துக்கு அப்படி வீட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. சிறுதானியத்திலேயே இத்தனை வகைகளைப் பண்ணியுள்ளாரே..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!