செவ்வாய், 19 ஜூலை, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: அரசன் தந்த பரிசு
          எங்கள் பிளாக்கின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியை அலங்கரிப்பது பிரபல பதிவர் மின்னல்வரிகள் கணேஷ் (பாலா)
          அவரின் தளம் மின்னல் வரிகள்.

          கணேஷ் பதிவுலகில் எந்த அளவு பிரபலம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  பதிவுலகில் "வாத்தியார்" என்று அன்புடன் அழைக்கப்பட்டு நிறைய சிஷ்யர்களை பெற்றிருப்பவர் பாலகணேஷ்.  இனிய நண்பர்.  நகைச்சுவை மன்னர்.  இவரின் சிரிதாயணம்... மன்னிக்கவும் சரிதாயணம் புத்தகம் ஒரு நகைச்சுவை விருந்து.  எம் ஜி ஆர் ரசிகர்.  திரையுலக விஷயங்கள் மட்டுமல்ல, அந்தக் கால, இந்தக் கால இலக்கியம், கதைகள், கட்டுரைகள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.  நிறைய எழுத்தாளர்களுக்கும், பிரபலங்களுக்கும் நண்பர்.  இவர் எங்களுக்கும் நண்பர் என்பதில் எங்களுக்கும் பெருமை.

          இவரிடம் முன்னரே ஒருமுறை பத்திரிகையில் வெளியான கதை கேட்டிருந்தேன்.  அவர் கவனிக்கவில்லை என்பதை அவர் மடல் காட்டுகிறது.  இப்போது வந்திருக்கும் இந்தக் கதையை வெளியிடுவதில் ஸந்தோஷம் கொள்கிறோம்.
அவரின் முன்னுரை கீழே...  தொடர்ந்து அவர் படைப்பு.


=====================================================================


     "2011ம் ஆண்டு ஒரு அழகிய மாலையில் திரைக்கதை மன்னர் மதிப்பிற்குரிய திரு.கே.பாக்யராஜ் அவர்களை அவரது அலுவலகத்தில் நானும் வேணு அண்ணாவும் (சேட்டைக்காரன்) சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம். பலப்பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் வேணு அண்ணா அவர் ஒரு ஆலயக் கல்வெட்டில் கண்ட செய்தி ஒன்றைப் பற்றிக் கூறினார். உடனே பாக்யா ஸார், “‘அந்த ராஜா எப்டி இதுக்கு ஒத்துகிட்டான்? எப்டி ஒத்துக்க வெச்சாங்க? இத ஒரு கதையா எழுதினா நல்லாருக்கும்” என்றார். சற்றும் யோசியாமல் மு.கொ.தனமாக, “நான் எழுதிட்டு வரேன் சார்” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். நம்ம மூளை வழக்கம்போல கிராஸ்ல யோசிக்க, ‘மன்னனை ஏன் மத்தவங்க ஒத்துக்க வெச்சிருக்கணும்..? சர்வ அதிகாரம் படைச்ச மன்னனே ஏன் இத மத்தவங்கள ஒத்துக்க வெச்சிருக்கக் கூடாது?’ அப்டின்னு தோணுச்சு. உடனே சிறுகதையா எழுதி அவர்ட்ட கொண்டுபோய்த் தந்தேன். “பாத்துட்டு சொல்றேங்க.” என்றார் குறுஞ்சிரிப்புடன். அதன்பின் வந்த ஐந்தாறு நாட்களும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பின் போதும் அவர் கருத்துக் கூறுவார் என்று அவர் பெயரை எதிர்பார்த்து ஏமாந்தேன். ஏழாம் நாள் வந்த பாக்யாவில் சற்றும் எதிர்பாராத விதமாக கதை பிரசுரமாகியிருந்தது. அவர் வாய்விட்டுக் கூறாமலேயே அவரின் விமர்சனம் புரிந்தது. பின்னர் சந்திக்கையில் ‘நான் வேற மாதிரி கொண்டு போலாம்னு யோசிச்சிருந்தேன். நீங்க யோசிச்சதும் நல்லா இருக்கு” என்றார் சுருக்கமாக. (அவர் என்ன யோசித்திருந்தார் என்பதை மட்டும் சொல்லவே இல்லை எத்தனை கேட்டும்.) எங்கள் (ப்ளாகில்) இடத்தில் இதைப் படிக்கும் உங்கள் விமர்சனங்கள் என்னவாக இருக்கும் என்கிற ஆர்வம் மனதில் மீண்டும் பூத்திருக்கிறது..."


======================================================================

அரசன் தந்த பரிசு 
 
 

பால கணேஷ் 
 
 

 மேலைமங்கலம் முழுவதும் ஒரே விஷயத்தைத்தான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தது. சற்றுமுன்  பறையறிவித்துச் சொல்லப்பட்ட செய்திதான் அது.

“நம் மன்னர் பெரிதாய் ஒரு சிவன் கோயில் கட்டப் போவதாகவும், அதற்கு பொதுமக்கள் அனைவரும் அவரவரால் முடிந்த  பணத்தைக் கொடுக்கலாமென்றும், பேரமைச்சரிடம் ஒரு பணம் கொடுத்தாலுங்கூட அவர்களின் பெயர் கோயில் திருப்பணிக் கல்வெட்டில் பொறிக்கப்படுமென்றும் சொல்கிறார்களே... என்ன ஆச்சரியம்..! அரசாங்க கஜானாவில் இல்லாத பணமா ?” என்றான் ஒருவன்.

“அப்படியல்லடா. ஒரு நல்ல காரியத்தில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டுமென்று அரசர் விரும்புகிறார். அவர் நினைத்தால் ஒரு புதிய வரியை விதித்து. அதில் வரும் பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது மிக எளிதாயிற்றே...? எதற்கு இப்படிப் பறையறிவிக்க வேண்டும்?” என்றான் மற்றவன்.

“நீ சொல்வதுதான்  சரியென்று தோன்றுகிறது. இன்றே என்னால் முடிந்த பணத்தை நான் பேரமைச்சரிடம் கொடுக்கப் போகிறேன்” என்றான் இன்னொருவன். பேசியபடியே அவர்கள் நகர்ந்தார்கள்.

“ஏனடி, உன் புத்தி கெட்டு விட்டதா என்ன..? நாமெல்லாம் பணம் கொடுத்து, அதை பேரமைச்சர் ஏற்றுக் கொள்வதா? நடக்கும் விஷயமாகப் பேசடி...” என்றாள் மோகனவல்லி.

“ஏனம்மா... தேவதாசிகள் என்றால் கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுக்கக் கூடாதென்று எதுவும் சட்டம் இருக்கிறதா என்ன? இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என்ன உரிமை இருக்கிறதோ, அது எனக்கும் உண்டுதானே? நிச்சயமாக நான் கோயில் திருப்பணிக்காக ஆயிரம் பொன்னைப் பேரமைச்சரிடம் கொடுக்கத்தான் போகிறேன்.”

“வேண்டாமடி. இதனால் வீண் பிரச்னைகள்தான் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.  அனாவசியமாக வம்பை விலை கொடுத்து வாங்காதே...” மோகனவல்லியின் குரலில் பதற்றம் இருந்தது.

“எந்த வம்பும் இல்லையம்மா... என்னுடைய காலத்துக்குப் பின்பும் என் பெயர் சொல்லுமளவு ஏதேனும் ஒரு விஷயம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை நான் இழந்துவிட விரும்பவில்லை. நாளையே நான் பேரமைச்சரைப் பார்க்கத்தான் போகிறேன்...”  என்றாள் அபரஞ்சி திடமான குரலில்.

பேரமைச்சர் அம்பலவாணரின் முகம் செக்கர்வானமெனச் சிவந்திருந்தது. “விளையாடுகிறாயா அபரஞ்சி? நமது மன்னர் ரணதீரர் எழுப்பும் இந்த ஆலயம் காலம் உள்ளளவும் நிலைத்து நின்று அவரது நல்லாட்சியைப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக எழுப்பப் போகிறார். இப்படியான ஒரு பெரும் பணியில் தம் பெயர் மட்டுமல்லாது, குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் இப்படி ஒரு அறிவிப்பைச் செய்துள்ளார். அதற்காக...?  உன்னிடமிருந்து நான் ஆயிரம் பொன் என்ன... பத்தாயிரம் பொன் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள முடியாது.”

“ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது பேரமைச்சரே... குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று மன்னர் விரும்பினார் என்றால் நானும் குடிமக்களில் ஒருத்தியல்லவா? நான் கொடுத்தால் என்ன?”

“ஆலயச் சுவர்களில் ஒரு விவசாயி கொடுத்தது இவ்வளவு பணம், ஒரு வியாபாரி கொடுத்தது இவ்வளவு பணம் என்று பொறிக்கும் போது, தேவதாசி கொடுத்தது இவ்வளவு பணம் என்றா உன் பெயரைப் பொறிக்க முடியும்? வருங்கால சந்ததியினர் இதைப் படித்தால் எள்ளி நகையாட மாட்டார்களா? ஒரு நற்பணிக்குக் களங்கம் கற்பித்தது போல் ஆகிவிடுமே... இந்த எண்ணத்தைத் துறந்து நீ இங்கிருந்து போய்விடு...” என்றார் அம்பலவாணர் கண்டிப்பான குரலில்.

தாசி அபரஞ்சியிடம் இன்னும் பலவிதமாக அவர் எடுத்துக் கூறியும், அவள் ஏற்க மறுத்துவிடவே, சினமடைந்த அவர் அவளை வெளியே தள்ளும்படி வீரர்களை அழைத்து உத்தரவிட்டார். சினத்தின் உச்சிக்குப் போன அபரஞ்சி கூச்சலிட்டாள். “பேரமைச்சரே... என்னை அவமதித்து விட்டீர். நான் இப்போதே மன்னரிடமே சென்று திருச்சபையில் (நீதிமன்றத்தில்) நீதி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றபடியே சென்றாள்.

திருச்சபையில் பேரமைதி நிலவியது. மன்னன் ரணதீரன், சலனமில்லாத முகத்தோடு அபரஞ்சியை ஏறிட்டான். “உன் வழக்கைச் சொல்லம்மா...”
“மன்னா... காலமெல்லாம் தங்கள் பெயர் சொல்லும் வண்ணம் நீங்கள் கட்டும் ஆலயத்தில் என் பெயரும் இடம்பெற வேண்டுமென்று நான் மிகவிரும்பி ஆலயத் திருப்பணிக்காக பேரமைச்சரிடம் ஆயிரம் பொன் கொடுத்தேன். அவர் ஏற்க மறுத்து, என்னையும் அவமதித்து விட்டார்....” என்றாள் அபரஞ்சி.

அவையில் பெரும் சலசலப்பு எழுந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேச முற்பட்டதால் எழுந்த அந்த சலசலப்பை மன்னரின் ஒரு கையசைப்பு அமைதிப்படுத்தியது. 

“அம்பலவாணரே... ஏன் அபரஞ்சி கொடுத்ததை ஏற்க மறுத்தீர்கள்?” என முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு தவழ, வினவினான் மன்னன்.

“எப்படி மன்னவா ஏற்க முடியும்? இவள் தாசிக் குலத்தில் பிறந்தவள். நாட்டில் பல ஆண்களின் மோகத்தீயை அணைத்தவள் அல்லவா?” என்றார் அம்பலவாணர்.

“உம்மையும் சேர்த்துத்தானே..?” என்று மன்னன் இடக்காகக் கூறவும், பேரமைச்சர் குரல் எழும்பாமல் திகைத்துப் போய் அமைதியானார்.

“மன்னர் இவ்வாறு பேசுவது தகாது. ஆலயத்தின் சுவரில் ஒரு தேவதாசியின் பெயரை எவ்விதம் பொறிக்க இயலும்? பின்னாளில் வரலாறு நம்மை இகழாதா? பேரமைச்சர் நடந்து கொண்டதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார் அரசவைப் புலவர்.

“புலவரே... உயர்ந்தவர் - தாழ்ந்தவர், பணக்காரர் - ஏழை, குலமகள் - தேவதாசி என்ற பாகுபாடெல்லாம் உம்மையும் அமைச்சரையும் போன்றோருக்குத்தான். அரசனாகிய எனக்கு என் குடிமக்களில் ஒவ்வொருவரும் சரிசமமே. புரிகிறதா...? தேவதாசியென்றால் அவ்வளவு கேவலமா என்ன? நீரும் நானும் வணங்கும் சிவபெருமானே, தன் அடியவர் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையார் என்ற தேவதாசியின் வீட்டுக்கு நடையாய் நடந்தாரே... தன் அடியவருக்கு அவளைத் திருமணம் செய்விக்கும் பொருட்டு தன் நிலையிலிருந்து இறங்கி வந்த சிவபெருமானைக் கேவலமாய்ச் சொல்வீரா? இறைவனையே கணவனாக வரித்து ஆலயத்தில் நடனமாடி இறைவனுக்குப் பணி செய்வதையே வாழ்க்கையாகக் கொண்ட தேவதாசிக் குலத்தை எம்மைப் போன்ற அரசர்களும், உம்மைப் போன்ற அரசவை உறுப்பினர்களுமாகச் சேர்ந்தல்லவா இப்படி மாற்றினோம்? அவர்கள் செய்வது பாவம் எனில் செய்யத் தூண்டிய பாவிகள் நாமல்லவோ..? அவர்கள் குற்றமுள்ளவர்கள் என்றால் அதில் நமக்கும் பங்கு உண்டில்லையா?”

மன்னன் ரணதீரனின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் அரசவைப் புலவர். பேரமைச்சர் அம்பலவாணர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு பேசினார். “மன்னவா... நீங்கள் சொல்லும் வாதங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது. நியாயங்களை உணர முடிகிறது. என்றாலும்... சற்று யோசியுங்கள்... ஆலயத்தின் கல்வெட்டில் தேவதாசி என்றா பொறிப்பது? பின்னர் வரும் சந்ததியினருக்கு அது கேலியாகி விடுமே... என்னவென்று இவள் பெயரைப் போடுவது என்பதுதானே பிரச்சினை? அதனால்தான் இவள் தந்த ஆயிரம் பொன்னை ஏற்க மறுத்தேன். நீங்கள் இவளை ஆதரித்துப் பேசுவதனால் இதற்கொரு முடிவை நீங்களே சொல்லி விடுங்கள். நாங்கள் மனமொப்பி ஏற்றுக் கொள்கிறோம்...” என்றார்.

மன்னன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். புருவங்கள் முடிச்சிட கண்களை மூடி சில நிமிடம் யோசித்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் நிமிர்ந்தான். “சரி பேரமைச்சரே... தேவதாசியென்று பெயர் பொறித்தால்தானே கேவலம்? இன்னாருடைய அன்னை என்று பெயர் பொறித்தால் தவறில்லையே... இந்த அபரஞ்சியை இந்த நிமிடம் முதல் என் வளர்ப்புத்தாயாக ஏற்றுக் கொள்கிறேன். ஆடற்கலையில் வல்லவனாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆடல் மண்டபம் எழுப்பி, அதில் மன்னன் ரணதீரனின் வளர்ப்புத்தாய் அபரஞ்சியின் உபயம் என்று பெயர் பொறிக்கச் சொல்லுங்கள்...” என்றான் சிம்மாசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்து நின்று. 

அவை ஸ்தம்பித்தது. அபரஞ்சி கண்ணீர் மல்கியவளாய் அரசரின் காலில் விழப்போனாள். “என்னம்மா இது? நானல்லவா தங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்? தாயே, இனி பேரமைச்சரிடம் நீங்கள் ஆயிரம் பொன்னைத் தரலாம். மனமகிழ்வுடன் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். உங்கள் பெயரும் காலம் உள்ளளவும், இந்த ஆலயம் உள்ளளவும் நிலைக்கும். போய் வாருங்கள்...” என்றான்.

அவையினர் அனைவரும் சுய உணர்வு பெற்றவர்களாய், “மன்னர் ரணதீரர் வாழ்க” என்று மன்னனை வாழ்த்தி உரத்துக் குரல் எழுப்பினர். மகிழ்ச்சியின் அலைகள் அரசனின் அந்த திருச்சபையை நிறைத்தது.

37 கருத்துகள்:

 1. மன்னரின் முடிவு நல்ல முடிவு. பாராட்டுகள் கணேஷ்.

  பதிலளிநீக்கு
 2. வாத்தியார்னா சும்மாவா? நல்ல முடிவு சொல்லிவிட்டார். - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 3. தேவதாசிகள் விபச்சாரிகள் இல்லை. நமது முன்னோர்கள் பற்றிய அறியாமையை மேலும் பரப்பும் அபத்தமான எழுத்து.

  பதிலளிநீக்கு
 4. ஆனந்த கணேஷ் /// இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பது போன்ற ஒரு விஷயம்தான் இது. அந்த இனத்தில் நெருப்புகள் இருந்ததைப் போலவே சில கசடுகளும் இருந்துள்ளன என்பது செய்திகளின் மூலம் அறிவது. நீரும் அந்நாளில் வாழ்ந்து அறியவில்லை, நானும் வாழ்ந்து அறியவில்லை. புரிகிறதா?

  பதிலளிநீக்கு
 5. நல்ல ஓட்டம்.நாள் சிறுகதை.நிறைய எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. ///// இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பது போன்ற ஒரு விஷயம்தான் இது. அந்த இனத்தில் நெருப்புகள் இருந்ததைப் போலவே சில கசடுகளும் இருந்துள்ளன என்பது செய்திகளின் மூலம் அறிவது. நீரும் அந்நாளில் வாழ்ந்து அறியவில்லை, நானும் வாழ்ந்து அறியவில்லை. புரிகிறதா? //

  நீங்களும் நானும் அறியாத ஒன்றை வைத்து கதை எழுதி இருப்பதாகச் சொல்லி இருப்பதுவரை சந்தோஷம். ஆனால், இதுபற்றி அறிந்தபின்னர் தவறை அறியாமையை திருத்திக்கொள்வது மேன்மக்கள் குணம். நீங்கள் மேம்பட்டவர் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. தேவதாசிகள் பற்றி பெண்கள் நல வாரியத்தின் தலைவி எழுதிய கட்டுரை இது. படித்துப் பாருங்கள்.

  https://engalblog.blogspot.com/2016/07/blog-post_19.html?showComment=1468910127624#c5130207407176385456

  பதிலளிநீக்கு
 8. இதையும் படித்துப் பாருங்கள்: http://www.samarthbharat.com/files/devadasihistory.pdf

  பதிலளிநீக்கு
 9. //...... அவர்கள் செய்வது பாவம் எனில் செய்யத் தூண்டிய பாவிகள் நாமல்லவோ..? அவர்கள் குற்றமுள்ளவர்கள் என்றால் அதில் நமக்கும் பங்கு உண்டில்லையா?”//

  மிகவும் யோசிக்க வைக்கும் கேள்வியாகத்தான் உள்ளது.

  கதாசிரியர் அவர்களுக்கு பாராட்டுகள்.

  படிக்க வாய்ப்பளித்துள்ள ‘எங்கள் ப்ளாக்’குக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. ஆனந்தகணேஷ் ஸார்... மேன்மக்கள் என்று கூறி எனக்கு செக் வைத்த உங்கள் சாதுர்யத்தை மிக ரசித்தேன். நான் மேன்மக்களில் சேர்த்தியல்ல. சுத்தமான அரை வேக்காடு என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. தாங்கள் தந்துள்ள பிடிஎப் புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளதால் அதைப் படித்தறிந்து கொள்ள இயலாத நிலை எனக்கு. பெண்கள் நல வாரியத் தலைவி அவர்கள் எழுதிய கட்டுரையின் சரியான லிங்க் தரும்படி வேண்டுகிறேன். அதுவேனும் தமிழில் இருந்தால் நிச்சயம் படித்துத் திருத்திக் கொள்கிறேன். பரிகாரமும் செய்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. நல்ல கதை.. .எதிர்பாராத முடிவு என்றாலும்.... என்றாலும்... அமைச்சர் முதலானோர்தான் வெற்றி பெற்றார்கள் என்பது என் கருத்து.... “அபரஞ்சி” என்ற பெயராக மட்டும் இல்லாமல், “மன்னனின் அன்னை” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுத்தானே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.... அந்த வகையில் அமைச்சரும் புலவரும்தான் வெற்றி பெற்றுள்ளார்கள்....

  இது எனக்குத் தோணுச்சு.... அவ்ளோதான்... :-)

  பதிலளிநீக்கு
 12. முன்னே போட்ட பின்னூட்டத்தைக் காணோம்.
  பரவாயில்லை கதை சிறப்பான முறையில் கையாளப் பட்டிருக்கிறது. தெய்வ வழிபாட்டுக்காக் தலைமுறையாக ஒதுக்கப் பட்டவர்கள் ,
  இந்த முறையிலாவது ஏற்றுக் கொள்ளப்பட்டது பாராட்ட வேண்டிய விஷயம். நாம் ராஜா காலத்திலிருந்து இப்போ நிறைய மாறிவிட்டோம் என்றே நினைக்கிறேன்.
  மிக நல்ல கதையைக் கொடுத்து ,வாசித்த திருப்தியையும் தந்துவிட்டீர்கள் பாலா. மனம் நிறை வாழ்த்துகள்.

  .

  பதிலளிநீக்கு
 13. நல்ல கோணத்தை காட்டிருக்கீங்க ஹுசைனம்மா. உண்மையும் அதுதான். க்ளாப்ஸ் டு யூ.

  பதிலளிநீக்கு
 14. கற்பனைக்கு கதை என்பதால் ஒத்துக்கொள்ளலாம். மற்றபடி உரிமைகள் மறுக்கப்பட்ட தேவதாசிகளுக்கு இந்த அளவு மரியாதை கிடைப்பது என்பது, அதுவும் பழைய மன்னர் ஆட்சிக் காலத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு விஷயம்.

  பதிலளிநீக்கு
 15. கொஞ்சம் புதுசா இருக்கு! ஏனெனில் ஆயிக்குளம் என்பதே ஓர் தேவதாசியின் பெயரில் ஏற்பட்ட குளம் தான்! அப்படி இருக்கையில் அமைச்சர் மறுத்ததையோ மன்னனின் முடிவையோ புரிஞ்சுக்க முடியலை! இங்கே ஶ்ரீரங்கத்தில் வெள்ளையம்மாள் என்னும் தேவதாசியின் பெயரால் ஒரு கோபுரமே இருக்கிறது. வெள்ளைக்கோபுரம் என்னும் பெயரில்! :)

  பதிலளிநீக்கு
 16. ஹிஹிஹி, மறந்துட்டேனே, மேல் மங்கலம் எங்க ஊரு! என் அப்பாவோட பூர்வீகம். அங்கே ஒரு பழைமையான சிவன் கோயிலும் உண்டு. விசாரிக்கிறேன் இது பத்தி! :)

  பதிலளிநீக்கு
 17. தீர்ப்பு அருமை வாத்தியாரே.... இன்றைய முதல்வர்களின் மனநிலை போன்றே அன்றைய மன்னர்களின் செயல்களும் இருந்தது அறிந்து மகிழ்ந்தேன்.
  - கில்லர்ஜி
  பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே ஸ்ரீராம் அவர்களுக்கு.

  பதிலளிநீக்கு
 18. மன்னரின் பெருந்தன்மை புரிந்தது ,கில்லர்ஜி கருத்துதான் புரியவில்லை :)

  பதிலளிநீக்கு
 19. பகவான்ஜி இன்றைய முதல்வர்கள் போலவே அன்றைய மன்னர்களும் உடனுக்குடன் நியாயம் வழங்குவதை கண்டு மகிழ்ந்தேன் என்று சொல்வ வந்தேன்

  பதிலளிநீக்கு
 20. நல்ல கதை மின்னல் வரிகள் தளத்திலும் வெளியிட்டிருந்தாரா? படித்த நினைவு இருக்கிறது. கல்வெட்டு செய்தியை கதையாக்கிய விதம் அருமை

  பதிலளிநீக்கு
 21. நல்ல கதை மின்னல் வரிகள் தளத்திலும் வெளியிட்டிருந்தாரா? படித்த நினைவு இருக்கிறது. கல்வெட்டு செய்தியை கதையாக்கிய விதம் அருமை

  பதிலளிநீக்கு
 22. sema kathai...mudivu arumai. ganesh avargal ezuthuvathaipatri sollanumaa enna....migavum rasithom

  பதிலளிநீக்கு
 23. அருமை அருமை
  வித்தியாசமான இரசிக்கத் தக்க முடிவு
  இதுவரை படிக்கவில்லை
  வாங்கி போட்டு படிக்கும் வாய்ப்புத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 24. கொஞ்சம் சினிமாட்டிக்காக இருந்தாலும் சிறப்பான நடை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 25. அருமையான முடிவு அரசனின் அசத்தல் பரிசு ..ஏற்கனவே படிச்ச நினைவு இருக்கு கணேஷ் அண்ணாவின் தளத்தில் ..மீண்டும் இங்கே வாசிக்க பகிர்ந்ததற்கு நன்றி எங்கள் பிளாக்

  பதிலளிநீக்கு
 26. ஆலயக் கல்வெட்டில் இருந்த செய்தியையும் கூறி இருக்கலாமோ. இன்னும் ரசிக்க வைத்திருக்கும்

  பதிலளிநீக்கு
 27. அருமையான கதை, படிப்பினை கொடுக்கும் முடிவு..
  படிக்க வாய்ப்பு கொடுத்த எங்கள் ப்ளாக் கிற்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 28. தேவதாசி அபரஞ்சி என்ற பெயரிலேயே மன்னன் அந்தப் பணத்தை ஏற்றுக்கொண்டார் என்று கதையை முடித்திருக்கலாம். தேவதாசிக்கும் மரியாதை கொடுத்த மன்னன் என்ற பெயர் வந்திருக்கும். ஆனால் கதையில் இத்தனை விறுவிறுப்பு இருந்திருக்காது. இத்தனை சர்ச்சைகள் எழுந்திருக்காது. பாக்கியாவில் கதையும் வந்திருக்காது.
  சரிதாயணம் போல இருக்கும் என்ற படிக்க வந்த எனக்கு ஒரு புது பாலகணேஷ் அறிமுகமாகியிருக்கிறார், பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!