செவ்வாய், 12 ஜூலை, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: கதையல்ல நிஜம்          எங்கள் ப்ளாகில் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம்பெறும் கதைக்குச் சொந்தக்காரர் வல்லிசிம்ஹன்.
          வல்லிம்மாவின் தளம் நாச்சியார்.


          வல்லிம்மா.  அன்பும் பாசமும் நிறைந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.  அவரோடு பேசியவர்கள் அவரின் பேச்சில் இழைந்தோடும் அன்பையும், அக்கறையையும் உணர்வார்கள்.  அவர் தளம் சென்று படித்தவர்கள் அவரின் எல்லாப் பதிவுகளிலும் இடம் பெற்றிருக்கும் ஒரு வார்த்தையைக் கவனித்திருக்கலாம்.


          "எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்"

          இந்த வரிகளை அவர் இந்தக் கதையிலும் சேர்த்திருக்கிறார்.

          இனி அவரின் ஒரு சிறிய முன்னுரை.  அதைத் தொடர்ந்து அவரின் படைப்பு.


=================================================================

       
நன்றி ஸ்ரீராம்.

     இதோ கதை வந்த காரணம்.

     2008 இல் வீட்டை திருத்தி அமைத்து  இன்னொரு அறை கட்ட ஆரம்பித்தோம் அதற்கு வந்த கொலத்துக்காரர், சித்தாள் பத்து நபர்கள்.

     அதில் ஒரு தம்பதி இந்தக் கதையின் அம்மா அப்பா.  நிஜமாவே நடந்த சம்பவம். தினம் முருகானந்தத்தின் மனைவி மாப்பிள்ளையின் போக்கைச் சொல்லி அழுவாள்.

     நானும் இவரும் குறுக்கிட்டு அந்த  மனுஷனைக் கண்டிக்கலாம் என்றால் இவர்கள் மறுத்துவிட்டார்கள்.  பெண்ணுக்கு ஏதாவது தீமையாகும் என்று.

     பிறகு எப்படி எல்லாமோ போய், நல்லபடியாக முடிந்தது.   இரண்டு வருடம் கழித்து என் வலைப் பதிவில் எழுதினேன் மா.  என்னையும் கதை அனுப்பப் சொன்னதுக்கு மிக நன்றி.

அன்புடன் அம்மா.


=====================================================================


கதையல்ல, நிஜம்
ரேவதி நரசிம்மன்நிஜமாக நடந்த கதை 
+++++++++++++++++++++
முன் போல் இல்லை .உலகம்  மாறி வருகிறது என்று
நான் நினைக்கும் நேரம் இதைப் போல

செய்தி கிடைக்கிறது. பெரியவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்திகளின்,மாப்பிள்ளைகளின்

ஈனத்தனம் என்பது எந்த விதத்திலும் அகலவில்லை என்பது

அதிர்ச்சியாக எனக்குக் கிடைத்த புது விஷயம்.


வீட்டுக்குச்  சீரமைப்புப் பணிக்கு வரும் மேஸ்திரி முருகானந்தம்.

அவருக்கு இரண்டு மகள்கள்.

பெரிய பெண்ணு (பூங்காவனம்)ப்ளஸ் 2 முடித்துக் கல்யாணமும் செய்து கொடுத்தாச்சு.

அவளுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.

பத்து பவுன் போட்டுத் திருமணத்தை முடித்துக் கொடுத்தார்.

மயிலாப்பூர் மாடவீதியில் உள்ள சத்திரம் ஒன்றில் நாங்கள்

அனைவரும் சென்று முடிந்த அளவு உதவி செய்து திருமணம் நடந்தது.

பெண்ணுக்கு மாமனார் இல்லை.

மூன்று கொழுந்தனார்கள்.அனைவரும் கார் ஓட்டக் கற்று ஆட்டோ

ட்ரைவராகவோ, டாக்சி ட்ரைவராகவோ இருக்கிறார்கள்.


இரண்டாம் குழந்தை பிறந்ததும்,முருகானந்தம் தன் இரண்டாவது பெண்ணை,வேல்விழி யை

அவர்களுக்கு உதவியாகத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
அதுவும் இரண்டு மாதம் இருந்துவிட்டு

சென்னைக்கு வந்துவிட்டது.

அதற்கப்புறமாதான் இந்த கலாட்டா ஆரம்பம்.அக்கா வீட்டுக்காரர், திருச்சியிலிருந்து  இங்கு வந்து , இந்தப் பெண்ணை வெளியில் அழைத்துப் போவதற்கும்,காளஹஸ்திக்கு

நாக தோஷம் பரிகாரம் செய்ய அழைத்துச் செல்வதுமாக போக்குக் காட்டினார்.இவர்களுக்கு வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை.

முருகானந்தத்தின் மனைவி( சிவகாமி)யும் வேலை நேரத்தில் இங்கே வருவார்.

திடீரென்று ஒரு நாள், அந்த அம்மாவும் ,பெண் வேல்விழியும்

வந்தார்கள்.

'இப்ப என்ன செய்யறதுன்னு சொல்லுங்கம்மா

என்று மடமடவென்று முதல் மாப்பிள்ளையின் அநாகரீகச் செயலைச் சொல்லிக் காட்டினார்.
எங்க(முதல்) பொண்ணு பலவீனமா இருக்காம்.அதனால் இந்தப் பெண்ணை

'நீ என்னைக் கல்யாணம் செய்துக்கோ. அக்காவும் நீயுமா இருப்பீங்களாம்னு

சொல்லி இருக்கார்மா'என்று அழுதவளை

மன அதிர்ச்சியில் வார்த்தை வராமல் பார்த்தேன்.

''எப்ப நடந்ததுப்பா இது' என்று அந்தப் பெண்ணைக் கேட்டால்,

நேத்திக்கு அம்மா அப்பா வேலைக்கு வந்ததும் வீட்டாண்ட வந்தார்மா,

நல்லவேளையா என் ஃப்ரண்டும் இருந்தா.

அவளை வெளில போகச் சொல்லிட்டு,

நீ என்னோட இப்ப ஆட்டோல வா, உன்கிட்டப் பேசணும்'னு சொன்னார்மா.

அந்தாளு பார்வையே சரியில்லைன்னுட்டு, நான் அம்மா அப்பா வரட்டும் மாமா

நாம் எல்லாம் வெளில போகலாம்னுட்டு வீட்டுக்கு வெளியில் வந்து உட்கார்ந்துட்டேன்.அப்பவும்

விடாம எதிராப்புல உட்கார்ந்து கிட்டு, உங்க அக்காவால எனாக்குப் பலனொண்ணும் இல்ல. எப்பப்

பார்த்தாலும் பிள்ளைகளையே பார்க்கிறா. என்னோட வெளியில் வரமாட்டேங்கறா. சளி பிடிச்சுக்கும்

பெரிய பொண்ணுக்கு வீட்டுப் பாடம் எழுதணும்னு'' சொல்றா.

உனக்குத்தான் என்னைப் பிடிக்குமே ,நீ எப்படியாவது இதை நடத்திக் கொடுக்கணும்னு

சொன்னார்மா.
அதுக்குள்ள பக்கத்துவீட்டம்மா வந்து ''மாப்பிள்ளை, வேலுப் பொண்ணு தனியா இருக்கா

நீங்க கொஞ்சம் பொழுது சாய்ஞ்சு வாங்க'' என்று சொன்னதும்

கோபமாகத் திருச்சிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாராம்.

படபடப்புத் தீராத நிலையில் வேல்விழியும் அம்மா வந்ததும்

நடந்ததைச் சொல்லிவிட்டாள்.

அப்பாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அவரிடம்

சொல்ல பயந்துகொண்டு இங்கே வந்திருக்கிறார்கள்.என்னம்மா செய்யட்டும். பூங்காவனத்துக்குத் தெரிஞ்சா உசிரையே

விட்டுடும்மா'என்கிறாள். சிவகாமியின் சொந்த ஊர் திருமயம்,

அங்கே எல்லா உறவுகளும் இருக்கிறார்கள்.

முருகானந்தத்துக்கும் நார்த்தாமலை தான் சொந்த ஊர்.

இப்ப பேத்திக்கு  முடியிறக்கிக் காது குத்தப் போகப் போறோம்மா

அங்க போய் இந்த விஷயத்துக்கு முடிவு கட்டணும்.

பெரிய பொண்ணு வாழ்க்கையும் கெடக் கூடாது. இந்தப் பொண்ணுக்கும்

நல்ல இடம் அமையணும் என்று அழுதாள் சிவகாமி.
இப்படிக் கூட நடக்குமா. எப்பேர்ப்பட்டக் கிராதகனாக இருக்கணும் அவன்

என்று என் மனம் தத்தளித்தது.

இப்படியே விட்டால் இந்தப் பெண்ணோட வாழ்க்கையே பாழாகி விடும்.

'நீ முதலில் ஊரில் யாரை நம்ப முடியுமோ அவர்களிடம்

சொல்லிவிடு. இவர் இந்த மாதிரி இவளைப் பார்க்க வந்தது

தெரிந்தால் இவளுக்கு வரும் வரன்களும் தட்டிப் போகும்''

என்று நான் சொல்ல,அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா

அம்மா, நான் நாத்தனாரிடம் பேசி இதற்கு

முடிவு செய்கிறேன்''என்று கிளம்பிச் சென்றாள்.

அவள் திரும்பி இன்று வரும்வரை ஒரே யோசனை. என்னால் இந்த

மாதிரி நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.

திருமயம் போய் ஐய்யனார் கோவிலில் முடியிறக்கி

காதும் குத்திவிட்டுத்  திரும்பி வந்து , நடந்த கதையையும் சொன்னாள் சிவகாமி.

கோயிலில்  முடியிறக்கிய பெண்ணின் மேல் சத்தியம் செய்து தரும்படியும் ,இல்லாவிட்டால் பஞ்சாயத்து வைக்கப் போவதாகவும் மிரட்டி இருக்கிறாள். மாப்பிள்ளையிடம்.
கொஞ்ச நேரம் யோசித்த அவன் 
இனி தவறு ஏதும் செய்வதில்லை. அந்த எண்ணத்தோடு

வேல்விழியைப் பேசவும் இல்லை என்று சொன்னானாம்!

கேலிப் பேச்சே தவிர உண்மையில் பூங்காவுக்கு நான் தப்பு செய்ய மாட்டேன் அத்தை.
தயவு செய்து வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்,மானம் போய்விடும் ''

என்று சிவகாமியிடமும்,அவளுடைய வீட்டுப் பெரியவரிடமும்

உறுதி கொடுத்திருக்கிறான்.


சீக்கிரம் இந்த வேல்விழிக்கு வேலி போடு, ஊரில் மாப்பிள்ளை தேடாதே

இங்கயே தேடிக் கல்யாணம் செய்'என்று நான் சொன்னேன்.மாப்பிள்ளை, ஒரு வரன் இருக்கார்மா,அவரும் ''கொல்த்து''   வேலைதான்  செய்கிறார். நல்ல வருமானம் ,. கல்யாணம்னா பத்துப் பவுன் வேணும்.மூணு பவுன் இருக்கிறது மிச்சம் ஏழு பவுனுக்கு

என்ன செய்யறது. அம்மாவைத் தான் நம்பி யிருக்கிறேன் இரண்டு பவுனாவது

கொடுத்து உதவணும் அம்மாதான்""

என்றாளே பார்க்கணும்!!

இது உண்மையிலியே நடந்தது. பெயரும் ஊரும் தொழிலும் மாற்றிவிட்டேன்.

எதற்கு வம்பு!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.51 கருத்துகள்:

 1. படிச்சிருக்கேனோ! இயல்பான நடை. எதிரே உட்கார்ந்து பேசுவது போல் இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஶ்ரீராம். என்னையும் இந்த வரிசையில் கௌரவம் செய்ததற்கு மிக நன்றி. இன்னும் பல நல்ல கதைகள் கிடைக்க வாழ்த்துகள்.. வேல்விழிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து நன்றாக இருக்கிறாள்.

  பதிலளிநீக்கு
 3. கீதாமா. ப்ளாக் ல வந்த கதைகளில் இதுவும் ஒன்று.
  எங்கள் ப்ளாக்ல ஸ்ரீராம் போட்டதுதான் இன்னும் சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 4. உங்களுடைய மனசு நல்ல மனசு. அந்த நல்ல எனர்ஜியை உங்களிடம் வருபவர்களுக்கும் கொடுக்கிறீர்கள். அதனால் தான் அவர்களுக்கும் நல்லதே நடக்கிறது, வல்லி.
  காலைவேளைகளில் ஹரிகேசனல்லூர் வெங்கட்ராமன் ஜோசியம் சொல்லுகிறாரே அவரும் உங்களைப் போலத்தான். எல்லா ராசிக்காரர்களுக்கும் 'இன்று அற்புதமான, நல்லவைகள் அதிகமாக நடைபெறுகின்ற நல்லநாள்' என்றே ஆரம்பிப்பார். கடைசியில் 'இன்று மதியம் வரை சந்திராஷ்டமம், வாயைத் திறக்காதீர்கள்' என்பார்!
  உங்கள் ப்ளாகோ அல்லது பேஸ்புக் பதிவோ படித்தால் அன்று முழுவதும் பாசிடிவ் எனெர்ஜி இருப்பது போலவே இருக்கும்.
  அருமையான மனுஷி நீங்கள்.எங்கள் ப்ளாகிலும் உங்களை சந்தித்து பாசிடிவ் அலைகளைப் பெற்றது சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 5. Facts are stranger than fiction . ரசித்துப்படித்தேன் படித்து ரசித்தேன் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. நிஜத்தை கதையாக சித்தரித்திருப்பது அருமை அம்மா...பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 7. நிஜத்தை கதையாக சித்தரித்திருப்பது அருமை அம்மா...பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 8. அன்பு ரஞ்சனி மா. எத்தனை அன்புடா உங்களுக்கு என்னிடம்.

  ஸ்ரீராம் கேட்ட போது ,எ பி யோட செகண்ட் ராங்க் குறைக்கிற மாதிரி
  எதாவது நடந்துடுமோ ந்னு பயம். நாமோ ஒரு எழுத்து படிக்கிறதில்லை.
  நம் எழுத்தைப் படிக்க யார் வருவார்கள் என்ற பயம் தான்..]]]]]]
  அப்படி ஒண்ணும் ஆகாது.

  நல்லவர்கள் மட்டுமே எனக்குத் துணை . உங்கள் எல்லோரையும் சொல்லுகிறேன்.

  நம்ப முடிகிறதா. இங்க வந்த பிறகு வீட்டு வேலை அதிகமாகிவிட்டது.
  கணினியில் வேளுக்குடி கேட்டபடி, இல்லாட்டா சினிமாப் பாட்டு,
  சமையல்,துணிமணி, வாக்வம் க்ளீன்ர்னு போகிறது.
  சந்தோஷமா இருக்கேன். நன்றி ரஞ்சனி. பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. நன்றி ஜிஎம்பி சார். இதுவரை நான் எழுதின அனைத்துமே என் வாழ்விலோ சினேகிதிகள் வாழ்விலோ நடந்தவைதான். படித்துப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி. ஸ்ரீராமுக்குத் தான் எல்லாப் பெருமையும்.

  பதிலளிநீக்கு
 10. அன்பு ஆதி மா.சென்னையில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் எனக்குக் கதை மாந்தர்கள் உறவு நிறைய இருக்கும்.பூக்கார அம்மா ஆரம்பித்து அத்தனை பேரும் ஆவலாதி சொல்லிவிட்டுப் போவார்கள். வசியம் பண்ண கதை. மருமகள் அடித்த கதைன்னு அதுமாட்டுக்கு நீளும். நன்றி டா.

  பதிலளிநீக்கு
 11. தங்கு தடையற்ற எழுத்தோட்டம் வல்லிம்மாவின் தனிச்சிறப்பு. பதிவுகளைப் போலவே இந்தக் கதையிலும் அதைக் காண முடிகிறது.

  அருமை வல்லிம்மா. நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 12. கதை பற்றிச் சொல்லணும்னு நினைக்கிறேன்.
  இது மாதிரி நம்பறதா வேணாமான்னு திகைக்க வெக்கிற நிகழ்வுகள் நம்மை சில சமயம் தடுமாறத்தான் வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. நடந்தகதை. படித்து விட்டவுடன் ஏதோ எதிரிலேயே நடப்பதுபோலத் தோன்றுகிறது. தொழிலாளிகளிடம் நிகழ்வுகள் அதிகமம்மா. உங்கள் உதவும் மனதையும் பாராட்டவேண்டும்.எனக்கும் உங்களிடம் நெடுநாள் பழகியமாதிரி ஒரு தோழமை. அருமையம்மா. அன்புடன்

  பதிலளிநீக்கு
 14. அன்பு ராமலக்ஷ்மி, வருகைக்கு மிக நன்றி. உங்கள் எல்லோரின் அன்பு தான் என்னை இன்னும் எழுத வைக்கிறது. உங்கள் பாராட்டு எனக்குப் பெரிய ஆதரவு. நன்றாக இருக்கணும்மா.

  பதிலளிநீக்கு
 15. அன்பு அபயா அருணா, எங்களால் முதலில் நம்பவே முடியாது. அத்தனை டீசண்டாக இருப்பான் அந்த மாப்பிள்ளை. வாழ்வின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் இல்லை. இருந்தாலும் வேல்விழியின் அம்மா இந்த விஷயத்தைக் கையாண்ட விதம் எங்களை அதிசயிக்க வைக்கிறது. நானால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏதாவது செய்திருப்பேன்.
  வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றீ மா

  பதிலளிநீக்கு
 16. ஆங்காங்கே நடக்கக்கூடும் வெகு இயல்பான நிகழ்வுகள் தான்.

  அதைப் பட்டும் படாமலுமாகச் சொல்லிச்சென்ற விதம் அழகு.

  மேடத்துக்குப் பாராட்டுகள்.

  இங்கு பகிர்ந்து படிக்க வைத்த ’எங்கள் ப்ளாக்’க்கு நன்றிகள்.

  oooooooooooooooooooo

  {இதே கதைக்கருவை மிக அழகாகக் கையில் எடுத்துக்கொண்டு, தற்சமயம் தினமலர் வாரமலரில், திரு. தேவிபாலா என்பவர் “மனக் கணக்கு” என்ற தலைப்பில் மிகவும் விறுவிறுப்பான ஓர் தொடர் கதை எழுதிவருகிறார். 10.07.2016 ஞாயிறு முடிய இதுவரை 10 அத்யாயங்கள் முடிந்துள்ளன. படிக்க படு சுவாரஸ்யமாக உள்ளது. இது அனைவரின் தகவலுக்காகவும் மட்டுமே. }

  பதிலளிநீக்கு
 17. அன்பு காமாட்சிமா, நல்ல வார்த்தைகளால் மகிழ வைத்துவிட்டீர்கள். எல்லாம் ஸ்ரீராம்
  செய்த வேலை. மறைந்து கொண்டிருந்த என் எழுத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
  ஆமாம் வறுமை வாட்டுவது போதாது என்று இது போலத் தொந்தவுகள் அவர்களுக்கு நிறையவே இருக்கின்றன. மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
 18. சிறப்பான கதை! இயல்பான நடை! இறுதியில் பூங்காவனத்தின் கணவன் திருந்தியது மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 19. நிகழ்ச்சி நல்லாத்தான் இருக்கு. Problem handle பண்ண படிப்பு அவசியமில்லை, அனுபவம் மட்டுமே போதும் என்றதை விளக்கியது. சந்தடி சாக்குல உங்க கிட்ட 2 பவுனுக்கு அச்சாரம் போட்டாங்களே சிவகாமி.. அங்கதான் அவங்களோட அனுபவமும் திறமையும் தெரியுது.

  பதிலளிநீக்கு
 20. இனியாவது இனிதாக வாழ வாழ்த்துவோம். திருமதி. வல்லிசிம்ஹன் அவர்களுக்கும் வாழ்த்துகள் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 21. வல்லிம்மா எழுதற ஒவ்வொரு எழுத்திலும் அன்பு சொட்டுமே ! அவங்க கதைகள் எல்லாமே மோஸ்ட்லீ வாசிச்சிருக்கேன் ஆனா இந்த கதை இங்குதான் படிக்கிறேன் .பகிர்வுக்கு நன்றிகள் எங்கள் பிளாக்

  பதிலளிநீக்கு
 22. வல்லிம்மாவை இங்கு பார்த்ததில் சந்தோஷம். அவர் கதை சொல்லக் கேட்டதிலும் சந்தோஷம். இது அவர் சொல்லச் சொல்லக் கேட்ட கதை. அதனால் எழுத்துக்கு மாற்றப்படாத சொல்வதில் இருக்கும் இயல்புத்தன்மை வேறு எந்தக் கலப்படமும் கலக்காமல் அப்படியே இருந்ததை அதே ஜோரில் கேட்டு உள்வாங்கிக் கொள்ள முடிந்தது... கறந்த பால் கறந்தபடியே என்பார்களே, அது போல.

  அதற்காகவே வல்லிம்மாவுக்கும் ஸ்ரீராமிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
 23. உண்மை நிகழ்வை சுவையாக சொல்லியிருக்கிறார் வல்லி மேடம். படிக்கும் போதே வேல்விழிக்கு நல்லபடியாகக் கல்யாணம் ஆக வேண்டுமே என்று வேண்டிக் கொண்டேன். திருமணம் நன்கு முடிந்து நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்திருக்கும் என்றும் நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 24. வாழ்க்கைச் சித்திரம்.சிறப்பு
  ரெண்டு பவுன்?

  பதிலளிநீக்கு
 25. நிஜத்தில் நடந்தது கதையாக.......

  நல்ல கதை வல்லிம்மா.... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 26. அன்பு சுரேஷ்,
  நிஜக்கதையை ரசித்துக் கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி. தூண்டு கோல் ஸ்ரீராம் தான்.

  பதிலளிநீக்கு
 27. ஆமாம் நெல்லைத்தமிழன்,
  சிவகாமியின் சாமர்த்தியத்துக்கு நானெல்லாம் உரை போடக் காணாது.
  இரண்டு பவுன் கொடுக்கும் வரை என்னை விடவில்லை. நல்லபடியாகத் திருமணம் செய்து கொடுத்தாள். வருகைக்கு நன்றி மா.

  பதிலளிநீக்கு
 28. சிவகாமிக்கு வேறு கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் சமாளிக்கும் தெம்பு உண்டு கில்லர் ஜி. போன வருடம் கடைசி மகனுக்குத் திருமணம் ஏற்பாடு செய்திருந்தாள்.
  கடனாக 20000 கேட்டு , மாதத்துக்கு 2000 மாக அடைத்துவிடுவதாகச் சொன்னாள்.
  என்னால்தான் தரமுடியவில்லை. திருமணம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன்.

  பதிலளிநீக்கு
 29. அன்பு ஏஞ்சல், நல்ல வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.
  இன்னும் இருக்கின்றன கதைக் கருக்கள் ட்ராஃப்ட் வடிவத்தில்..பார்க்கலாம். எப்பவாவது எழுதுகிறேன்

  பதிலளிநீக்கு
 30. வரணும் ஜீவி சார். நடந்த நிகழ்ச்சிதானே. சொல்வது சுலபம். அவர்கள் இன்னும்
  நம் வீட்டுக்குப் பக்கத்தில் தான் வேலை எடுத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். உங்கள்
  உயர்ந்த உள்ளம் பாராட்டாகச் சொன்ன கருத்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
  ஸ்ரீராம் எனக்குக் கடிதம் எழுதி கேட்ட வேளை, உங்கள் அனைவரையும் இங்கே பார்க்கிறேன்.
  எங்கள் ப்ளாகின் பாசிட்டிவ் பக்கம் இன்று எனக்காக அமைந்தது.
  மிக நன்றியும் வணக்கமும்.

  பதிலளிநீக்கு
 31. வல்லி அக்காவின் கதையை முன்பே படித்து ரசித்து இருக்கிறேன். அருமையாக இயல்பாய் சொல்லி செல்வார்கள். அவர்கள் சொல்லும் மலரும் நினைவுகள் எல்லாம் அன்பையும், பாசத்தையும் சொல்லும். ஶ்ரீராம்க்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. அன்பு ராஜி சிவம், நலமாப்பா. உங்கள் எண்ணப்படி,
  வேல்விழிக்குத் திருமணம் நடந்து இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
  நன்றாக இருக்கவேண்டும்.
  வந்து படித்து ரசித்ததற்கு மிக நன்றி மா.வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 33. மதிப்புக்குரிய சென்னைப் பித்தன் ஐயா,

  அப்போது இரண்டு பவுன் கொடுக்கும் நல்ல மனதை எனக்கு இறைவன் கொடுத்தான்.

  அதற்கு மேல் சிவகாமிக்கு ஏக செலவு.
  கருத்து சொன்னதற்கு மிக மிக நன்றி

  பதிலளிநீக்கு
 34. வரணும் வெங்கட்.
  சென்னை முழுவதும் இது போல எத்தனை நடக்கிறதோ.
  என் சின்ன உலகில் நடந்தது. மகிழ்ச்சியாக முடிந்தது. பாராட்டுகளுக்கு
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
 35. வரணும் கோமதி மா. இத்தனை அன்பு வருகைகளை நான் நினைத்துப் பார்க்கவில்லை.
  ஸ்ரீராம் எப்பொழுதும் இதே போல் நன்றாக இருக்கணும்.
  வாழ்க வளமுடன் கோமதி.

  பதிலளிநீக்கு
 36. அன்பு கரந்தை ஜெய குமார்,முதல் பின்னூட்டத்தத் தாண்டி எல்லோருக்கும் பதில் சொல்லிவிட்டேன்.
  வருகைக்கு மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 37. இரண்டு பவுன் கொடுத்து விட்டு ,எதற்கு எதிர்மறையாய் சிந்திக்க வைக்கும் ' என்றாளே பார்க்கணும்!!'என்று எழுதணும்:)

  பதிலளிநீக்கு
 38. அருமை... உண்மைக்கதை உங்கள் பாணியில் பயணிப்பது சிறப்பு...
  அதுவும் முடிவில் ரெண்டு பவுன் கேட்டாங்க பாருங்க... சூப்பர்...
  எல்லாரும் இனிதாக வாழட்டும்...

  பதிலளிநீக்கு
 39. பகவான் ஜி. அட்வைஸ் மட்டும் போதாது என்பதை அப்போது புரிந்துகொண்டேன்.
  அதுவும் பவுன் கொடுப்பது என் கணவரிடமும் பேசிச் செய்ய வேண்டிய விஷயம்.
  அந்த நிலையில் என் மனசில் வந்த வார்த்தைகள். .*******]]] ஒரு அதிர்ச்சி ரியாக்ஷன் என்று சொல்லலாமா.

  பதிலளிநீக்கு
 40. வரணும் குமார். புத்திசாலிப் பெண் சிவகாமி. 46 வயதுதான் இருக்கும்.
  பெற்ற குழந்தைகளிடம் அத்தனை பாசம்.
  சாமர்த்தியமாகச் செயல் படும் துணிவு. மூன்று குழந்தைகளுக்கும் குறையில்லாமல்
  வாழ்வு அமைத்துக் கொடுத்துவிட்டாள். நன்றி மா.

  பதிலளிநீக்கு
 41. அன்பு ஸ்ரீராம்,எங்கள் ப்ளாக்
  என்னைக் கதை சொல்லச் சொல்லி
  மீண்டும் உயிர்ப்போடு இயங்க வைத்து இருக்கிறீர்கள்.
  வலைப்பதிவர்களை மீண்டும் சந்தித்ததில் மனம் நிறைய மகிழ்ச்சி.
  இதை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பார்க்கிறேன்.
  அனைவருக்கும் என் நன்றியும் மனம் நிறை வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 42. மிக்க நன்றி வல்லிம்மா.. அழகாக ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு மனப்பூர்வமாய் பதில் சொல்லி விட்டீர்கள். நடுநடுவே மறுபடி மறுபடி என்னையும் பாராட்டி இருப்பது உங்கள் அன்பு மனத்தையும் பண்பையும் காட்டுகிறது. உங்கள் படைப்புக்கான பாராட்டுகளில் நானும் புல்லாய் நீர்ப்பெற்றேன்! நன்றிகள் மா. உங்கள் எழுத்து மனதை வருடும் உணர்வுகளால் ஆனது. அனைவருக்கும் பதில் சொல்லியிருக்கும் அருமைக்கும், என்னைச் சொல்லி இருப்பதற்கும் மிக மிக நன்றி. இதன் மூலம் உங்கள் எழுதும் ஆர்வம் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லியிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 43. "அப்போது இரண்டு பவுன் கொடுக்கும் நல்ல மனதை எனக்கு இறைவன் கொடுத்தான்" - என்ன அருமையான வரிகள். இது முக்காலும் உண்மை. எதுவுமே நாம் செய்வதல்ல. செய்யும் எண்ணத்தை இறைவன் கொடுக்கிறான். 'கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் ..உணவே தந்து போற்றும் தயாளன்" என்ற வரிகள் சும்மா இல்லை. தேவையானவருக்கு, யார் கொடுப்பார்களோ அவர்களைக் காட்டுவதும், கேட்பவர்களுக்குத் தரும் எண்ணைத்தைத் தருபவனும் அவனே..

  பதிலளிநீக்கு
 44. வல்லிம்மாவின் கதை ஏதோ நம் கண் முன் நடப்பது போல், நமக்கே நடப்பது போல் தோன்றியது. அந்த அளவிற்கு நடை போடுகிறது கதை. வல்லிம்மாவின் மனசும் தெரிகிறது கதையில். நல்லபடியாக அந்த மாப்பிள்ளை திருந்தினானே! அந்த அம்மா மிக அழகாகக் கையாண்டிருக்கிறார். அதாவது சில சமயங்களில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்றில்லை. வாழ்க்கைக் கல்வி, அனுபவப் பாடம், சமயோசித புத்தி இருந்தால் போதும் நல்ல முடிவுகள் எடுக்கலாம் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

  வல்லிம்மாவை இப்போதுதான் புகைப்படத்தில் காண நேர்ந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது பளிச்சென்று.
  கதை அருமை என்றால் அதை இங்குப் பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கும் நன்றி.

  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்!!

  பதிலளிநீக்கு
 45. எனக்குத் தெரிந்தும்
  இதுபோலொரு நிகழ்வு நடந்தது
  எழுதிச்சென்ற விதம்
  அதை நினைவுப்படுத்திப் போனது
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  கதையை வாங்கிப் போட்டவருக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 46. அன்பு நெல்லைத்தமிழன், ஆமாம் 2008இல் இவர் வேலைகளையெல்லாம் முடித்து ஓய்வு எடுத்துவிட்டார். இருக்கிறதில் பேரன்,பேத்திகளுக்குச் செய்யவேண்டும்.

  நம் கௌரவம் நம்மைச் சும்மா விடாது. அதையெல்லாம் விட சிவகாமி நிலை
  கவனத்தில் இருந்தது. இறைவன் எத்தனையோ விதங்களில் எங்களுக்கு உதவி இருக்கிறான். இன்னமும் அப்படித்தான். கையில் இருப்பதை நினைத்ததும் கொடுத்துவிடவேண்டும். மனம் குரங்காக மாறுவதற்கு முன்னால்.
  உங்கள் எழுத்தின் மேன்மை அரியது. மனம் நிறைவாகிறது. மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
 47. அன்பு கோபு ஜி, தாங்கள் வந்து கௌரவித்தது மிக மகிழ்ச்சி.
  பெருந்தன்மை உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது. உங்கள் எல்லோரும் போலக் கட்டுக் கோப்பாக எழுதவில்லை. இருந்தும் பாராட்டி இருக்கிறீர்கள்.
  தினமலர் செய்தி ஆச்சரியமாக இருக்கிறது.

  பத்திரிகைகள் இங்கே கிடைப்பதில்லை. ஹிண்டு மட்டும் ஆன்லைனில் வாசித்துக் கொள்கிறேன் .
  மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 48. Thulasidharan V Thillaiakathu வணக்கம்மா. பதிவுகள் படிப்பதையே நிறுத்தி வைத்திருந்தேன். முகனூல் ஆக்கிரமிப்பும்,
  குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதுமாகப் போய் விட்டது.
  எங்கள் ப்ளாகும் ,கீதா சாம்பசிவம் மற்றும் சிலபேரின் தொடர்களைப் படிக்கிறேன்.
  உங்களது அன்பு வார்த்தைகளுக்கு மிக நன்றி. இதம் தரும் சொல்லும் இறைவன் வரமே.
  நிறையப் படிக்க வேண்டும் .இந்த சந்தர்ப்பம் எனக்கு நல்ல வழிகாட்டி. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 49. கதை அல்ல நிஜம் என்பது படிக்கும் போதே புரிந்தது. இயல்பான நடைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 50. மிக நன்றி பானுமதி. நல்ல வேளை உங்கள் கருத்தைப் படித்தேன் மா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!