செவ்வாய், 10 ஜனவரி, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மாங்காய் நெக்லெஸ்     எங்களின் இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் பதிவர் பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் படைப்பு.


     அவர்களின் தளம் thambattam.

     கொஞ்சம் சமீப காலமாக 'எங்கள்' வாசகி!  சிறு ட்விஸ்ட் வைத்து கதைகள் எழுத்தாக கூடியவர் என்று அவர் தளம் படித்தபோது தெரிந்தது.  விடலாமோ?  அவரிடமும் ஒரு கதை கேட்டு வாங்கிப் போட்டு விட்டேன்!


     உடனே தொடர்வது அவர் முன்னுரை..  அதனைத் தொடர்வது அவரின் சிறுகதை.


=============================================================அன்புமிகு ஸ்ரீ ராம்,

தங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒரு சிறு கதையை கே.வா.போ.க. பகுதிக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன். பிரசுரிக்க தகுதியாக இருக்கும் என நம்புகிறேன். வாய்ப்புக்கு நன்றி!

நன்றியுடன்,

பானுமதி வெங்கடேஸ்வரன்
=================================================================
மாங்காய் நெக்லெஸ்
 பானுமதி வெங்கடேஸ்வரன் 

"அம்மா, இன்னிக்கு என்ன டிரஸ்"?

"இன்னிக்கு பட்டுப் பாவாடை, சட்டை போட்டுக் கொண்டு போ..."

"போம்மா, ஏதாவது வேஷம் போட்டு  விட மாட்டாயா?"

"நேத்திக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டுண்டாச்சு, நாளைக்கு மடிசார் கட்டி விடுகிறேன். இன்னிக்கு பட்டு பாவாடை சட்டை போறும்".

"நாளைக்கு கண்டிப்பா மடிசார் கட்டி விடணும்.."

"கட்டி விடறேன்.

"அப்போ சரி.."

நவராத்திரி என்றால் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து விடுவதும் அந்த வேஷத்தோடு குழந்தைகள் எல்லோர் வீடுகளுக்கும் சென்றதும் ஒரு காலம்.

சிறப்பான அலங்காரம் செய்ய முடியாத நாட்களில் பட்டு பாவாடை சட்டை. இன்றும் அப்படித்தான். 

மாலா ஒப்புக் கொண்டாள்.  அம்மா அவளுக்கு குஞ்சலம் வைத்து பின்னி, அதில் பூவைச்சுற்றி, காதில் ஜிமிக்கி, மாட்டல் எல்லாம் போட்டு விட்டு, இறுதியாக அவளுக்கு மிகவும் பிடித்த அம்மாவின் பச்சைக் கல் மாங்காய் நெக்லஸையும்  அவள் சகோதரிக்கு பவழ நெக்லஸையும் அணிவித்தாள்.


"ஜாக்கிரதை.. ரொம்ப தூரம் போக வேண்டாம்.."

அந்த மாங்காய் நெக்லெஸ் தன் தோற்றத்தையே ஒரு படி உயர்த்தி விடுவதாக மாலாவுக்குத் தோன்றும். அம்மாவின் நகைகளில் அவளுக்கு மிகவும் பிடித்தது அதுதான். எல்லா பண்டிகை நாட்களிலும் அதை அணிந்து கொள்வாள். 

ஆனால் ஏனோ கொஞ்ச நாட்களாக பண்டிகை தினங்களில் அம்மா அதை அணிவிப்பதில்லை.

"அம்மா அந்த மாங்காய் நெக்லெஸ் எங்கம்மா"?

"அது பிறந்த வீட்டுக்கு போயிருக்கு.."  மாமா சொன்னவுடன், எல்லோரும் ஏன் சிரித்தார்கள்?

அவளுக்கு கொஞ்சம் வளர்ந்தவுடன்தான் குடும்பத்தின் அதிகப்படி செலவுகளை சந்திக்க நகைகளை அடகு வைப்பார்கள் என்பது தெரிந்தது.

அடிக்கடி அம்மாவின் நகைகளை பிறந்த வீட்டிற்கு அனுப்பிய  அப்பாவால் ஒரு கட்டத்தில் அவைகளை திரும்ப தன் வீட்டிற்கு வரவழைக்க முடியவில்லை.

மூன்று பிள்ளைகள், மூன்று பெண்களை வளர்த்து ஆளாக்கவும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்கவும் அம்மாவின் நகைகள்தான் அப்பாவுக்கு கை கொடுத்தன. அலங்கரித்துக் கொள்ள மட்டுமா ஆபரணங்கள்?

"இன்னிக்கு நகையை எல்லாம் கொடுக்கிறோமே என்று கவலைப் படாதே, நாளைக்கே உன் பையன்களெல்லாம் படித்து நல்ல வேலைக்கு வந்த பிறகு உனக்கு வாங்கித் தராமலா போய் விடுவார்கள்.."? கூடவே இருந்த மாமா அம்மாவுக்கு தைரியம் கொடுப்பார்.

அவர் சொன்னது உண்மையாகவும் ஆயிற்று. மாலாவின் இரு அண்ணன்கள் ஸ்காலர்ஷிப்பில் இன்ஜீனீயரிங் படித்து நல்ல வேலையில் அமர்ந்தார்கள்.
அம்மாவுக்கு என்று அவர்கள் சங்கிலி, வளையல் என்று வாங்கித்தர முன்வந்தாலும், அவைகளை பெண்களின் திருமணத்திற்காக வைத்துக் கொள்ளத்தான் அம்மாவுக்கு தோன்றியது.

அப்பா தன் சக்திக்கு ஏற்றபடி பெண்களுக்கு திருமணம் முடித்தார். 
பெரிய வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும், அத்தியாவசிய தேவைகளுக்கு பஞ்சம் இல்லை.

திருமணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மாலாவின் கணவனுக்கு உத்யோக உயர்வு கிட்டியது. அரியர்ஸ், போனஸ் எல்லாம் சேர்த்து, ஏதாவது நகை வாங்கிக்கொள் என்று அவன் சொன்னதும், மாலா "பச்சைக் கல் மாங்காய் நெக்லெஸ்" என்றாள்.

"கல்லு நெக்லஸ்ஸா? கல்லு நகையில் காசு போடுவது வேஸ்ட்". என்று மறுத்து விட்டான்.

இதை அலுவலகத்தில் அவள் தோழிகளோடு பகிர்ந்து கொண்ட பொழுது, "அவருகிட்ட போய் இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க?  நகை சீட்டு சேருங்க, வாங்கிக்கங்க.." என்று சுளுவாக தீர்வு சொன்னாள் மீனா.

"ஏன் நீங்கள்ளாம் இப்படி இருக்கீங்க?   உன் பணத்தை கொண்டு போய் இன்னொருத்தன் கையில் கொடுக்கிறீர்கள்..   அதுக்கு இன்ட்ரெஸ்ட்டும் கிடையாது. அதுக்கு பதிலா பாங்கில் ஆர்.டி. கட்டு. அது மெச்சுர் ஆகும் பொழுது அந்த பணத்திற்கு என்ன வேணுமோ அதை வாங்கு.."

இதுவும் நல்ல யோசனைதானே என்று ஆர்.டி. கட்ட ஆரம்பித்தாள்.
ஆனால் ஆர்.டி. மெச்சூர் ஆகும் சமயம் அவள் மாமியார் கீழே விழுந்து கையை உடைத்துக் கொள்ள, அந்த பணம் மாமியாரின் மருத்துவ செலவிற்கு உதவியாக இருந்தது.  அடுத்த முறை ஆர்.டி. கட்டிய பணம் நாத்தனாரின் பையனுக்கு பூணூல் போட்ட பொழுது அம்மான் சீர் செய்ய உதவியது. ஒவ்வொரு முறை ஆர்.டி. மெச்சூர் ஆகும் பொழுதும், ஒரு செலவு ரெடியாக காத்துக் கொண்டிருக்கும்.

இதற்குள் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று ஏறி, நெக்லெஸ் வாங்கலாம் என்று நினைத்து கட்டிய பணத்தில் தங்க காசுதான் வாங்க முடிந்தது. மாலாவும் எப்படியோ முட்டி மோதி, ரெண்டு பவுன் மதிப்புக்கு காசுகள் சேர்த்து விட்டாள்.

இப்போது குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்டார்கள். "போப்பா, அம்மா எவ்ளோ வருஷமா ஆசைப்படறா?   பாவம்ப்பா.. பச்சக் கல் மாங்கா நெக்லெஸ் வாங்கிக்கட்டுமே.." என்று அப்பாவிடம் அம்மாவுக்காக வாதாடி, மாங்கா நெக்லெஸ் வாங்கிக் கொள்ள அனுமதி வாங்கித் தந்தார்கள்.

அன்று மாலை நகரின் பிரபலமான அந்த நகை கடைக்குச் சென்றார்கள். அங்கிருந்த கல் அட்டிகைகளில் எதுவும் இவள் விருப்பத்தை பூர்த்தி செய்யவில்லை. இவள் தன் கனவு நகையை வரைந்து காட்டிய பொழுது, அங்கிருந்தவர்," இது ரொம்ப பழைய மோஸ்தர்மா, இப்போல்லாம் யாரும் இது மாதிரி விரும்புவது இல்லை. உங்களுக்கு வேணும்னா, ஆர்டர் கொடுத்துதான் செய்யணும்..,  மூணு வாரம் ஆகும்"

மூணு வாரங்களுக்குப் பிறகு வெல்வெட் பெட்டியில் வைத்து தரப்பட்ட மாங்காய் நெக்லெசை வீட்டிற்கு கொண்டு வந்து, சாமி படத்திற்க்கு முன்பும், அம்மா படத்திற்கு முன்பும் வைத்து விட்டு அணிந்து கொண்ட பொழுது ஏனோ அழுகை வந்தது. அதற்குப் பிறகும் அவளால் மேலும் நகைகள் வாங்க முடிந்தது. அதற்கும் மாங்காய் நெக்லேஸின் ராசிதான் காரணம் என்று நினைத்தாள்.

அதன் பிறகு உறவினர்கள் வீட்டு திருமணங்களுக்கு அந்த நெக்லஸைத்தான் அணிந்து கொண்டு செல்வாள். நவராத்திரியில் கண்டிப்பாக அணிந்து கொள்வாள். 

மகன்களின் திருமணங்களிலும் முகூர்த்த நேரத்தில் மாங்காய் நெக்லேஸ்தான் அவள் கழுத்தை அலங்கரித்தது.

தனக்கு பெண் இல்லாததால் மருமகள்களை மகள் போலவே நடத்தினாள். மூத்த மருமகளின் பிறந்த நாளுக்கு தன்னுடைய விருப்பமான மாங்காய் நெக்லெசை பரிசளித்தாள்.  தொடர்ந்து வந்த பண்டிகைகளின் பொழுது மருமகள் அதை அணிந்து கொள்வாள் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

வழக்கமில்லாத வழக்கமாய் வாரத்தின் மத்தியில் ஒரு நாள் மகனும் மருமகளும் வந்தனர்.  மருமகள்,ஒரு வெல்வெட் பெட்டியை மாமியார் முகத்திற்கெதிரே நீட்டி, "அம்மா இது எப்படி இருக்கு?  உங்களுக்கு பிடிச்சிருக்கா?" என்றாள்.

உள்ளே போல்கி மாடல் நெக்லெஸ் ஒன்று கண்ணை கவர்ந்தது.

"சூப்பர்! என்ன திடீர்னு? போனஸ் ஏதாவது கிடைச்சுதா?

ஆமாம்! நீ கொடுத்த போனஸ்தான்" என்றான் மகன் சிரித்துக் கொண்டே..

"நான் கொடுத்த போனஸா?  என்னடா சொல்ற"?

"ஆமாம்மா, கொஞ்ச நாளாவே இவளுக்கு இந்த மாடல் நெக்லெஸ் வாங்கிக்கனும்னு ஆசை, கேட்டுண்டே இருந்தா, நீ ஒன்னோட பச்சைக்கல் நெக்லசை கொடுத்தாயா அதை எக்ஸ்சேன்ஜ் ஆஃபரில் 
மாத்தியாச்சு..."

மகன் பேசிக்கொண்டே போக மாலாவிற்கு உள்ளே ஏதோ பொலபொலவென்று உதிர்ந்தது.  

"அது வெறும் நெக்லெஸ்ஸா?   எத்தனை ஆசை?   எத்தனை கனவு?  அது கை கூட எவ்வளவு கஷ்டம்?  ரொம்ப ஈஸியா கொடுத்து மாத்திட்டேன்னு சொல்றா.."

தன் வருத்தங்களை சொல்லி புலம்பும் தோழி சாந்தியிடம் இப்போதும் புலம்பினாள்.

சாந்தி எப்போதும் போல இப்போதும் முழுமையாக கேட்டுக் கொண்டாள், பிறகு, " இதிலிருந்து நாம ஒண்ணு தெரிஞ்சுக்கணும், அவர்களுக்குனு தனி விருப்பங்கள் இருக்கும்..  உன்னோட விருப்பம் மாங்காய் நெக்லஸ் என்றால், அவளோட விருப்பம் போல்கி  நெக்லெஸ். என்று கூறி விட்டு, சிரித்தாள். பிறகு மாலாவின் தோளைத் தட்டி, "மனசை போட்டு குழப்பிக்காதே.. இது நேச்சுரல்.. இப்போ ஒன்னோட விருப்பம் என்ன? காப்பியா? டீயா?"

மாலாவிற்கு கொஞ்சம் வருத்தம்தான், இருந்தாலும், தெளிந்து விடுவாள்.  

39 கருத்துகள்:

 1. மாங்காய் நெக்லசுக்கு ஆசைப்படாத பெண் இருக்க முடியுமா.
  என்னிடமும் இருந்தது. கல்வைத்து இல்லை. மாங்காய்களாகவே கோர்த்து இருந்தது.
  உருமாறியது பின்னாட்களில். உங்கள் கதை எல்லாப் பெருமூச்சுகளையும் ஒன்றாக வெளியேற்றியது. ஆமாம் தெளிவு வரும் நேரம் நிம்மதி.
  அருமையாக எழுதி இருக்கிறீர்கள் பானுமதி.
  ஸ்ரீராமிற்கும் உங்களுக்கும் மிக நன்றியும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 2. நெக்லஸ் பற்றிய எண்ணம்
  எங்களையும்
  எண்ணிப் பார்க்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 3. அது வெறும் நெக்லெஸ்ஸா? எத்தனை ஆசை? எத்தனை கனவு? அது கை கூட எவ்வளவு கஷ்டம்? ரொம்ப ஈஸியா கொடுத்து மாத்திட்டேன்னு சொல்றா.."
  உணர முடிகிறது நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 4. ஆளுக்கொரு ஆசை ,ஆளுக்கொரு விருப்பம் இருக்கத் தானே செய்யும் :)

  பதிலளிநீக்கு
 5. This story describes life experience that could be that of any reader.If you grew up amid such family situation,experienced love and loss ,self doubt,feelings of exclusion or astonishing self discovery then Baby's story will strike many chords.I was able to relate with the feelings expressed in mangai necklace.Well written in simple style.Thank you Banu and engal blog for publishing a nice story.

  பதிலளிநீக்கு
 6. This story describes life experience that could be that of any reader.If you grew up amid such family situation,experienced love and loss ,self doubt,feelings of exclusion or astonishing self discovery then Banu's story will strike many chords.I was able to relate with the feelings expressed in maangai necklace.Well written in simple style.Thank you Banu and engal blog for publishing a nice story.

  பதிலளிநீக்கு
 7. கதையும் அதை எழுதியுள்ள பாணியும் மிகச் சிறப்பாக உள்ளன.

  ’ஒரு சிலர் தாங்கள் பொக்கிஷமாக நினைக்கும் பொருட்களையும், அதன் மேல் அவர்களுக்கு உள்ள தனியான பாச உணர்வுகளையும், மற்றவர்களும் உணர்வார்கள் எனச் சொல்ல முடியாது’ என்பது இந்தக்கதையில் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது.

  இதே கருத்தினைத்தான் ‘பொக்கிஷம்’ என்ற என் தொடர் பதிவின் ஆரம்ப முன்னுரையில் நானும் சொல்லியிருந்தேன். http://gopu1949.blogspot.in/2013/03/1.html

  கதாசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். வெளியிட்டு படிக்க உதவியுள்ள அருமை நண்பர் ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. "One man's food is another man's poison" என்பதையும், நமக்கு எது முக்கியமோ அது மற்றவர்களுக்கு முக்கியமில்லாததாக இருப்பதையும் நினைவுபடுத்தியது. எங்க அப்பா வைத்திருந்த 10 ரூ (1970கள்ல) காயின் எனக்கு ரொம்ப முக்கியமா வச்சுருக்கேன். அதன் விலை 10 ரூ அல்ல. அது என் அப்பாவின் கை பட்டது; அவர் வைத்திருந்தது. இதுமாதிரி என் வாழ்க்கையில் உள்ள தொடர்புகளை ரொம்ப முக்கியமா நினைப்பேன். எனக்குள்ள சென்டிமென்ட், என் பையனுக்கு நிச்சயம் இருக்காது. இது சாதாரணம்தான். கதை அதனைப் படம்பிடித்துள்ளது.

  ஆனா, அடுத்தவர்களின் சென்டிமென்டுக்கு மரியாதை, அவர் உயிருடன் இருக்கும்வரை தரவேண்டும். ரொம்ப வயதானபின், அவர் கண்முன்னாலேயே அவர் பொக்கிஷமாக நினைப்பதை அடுத்த தலைமுறை, துச்சமாக எண்ணிப் பேசுவதும், தூரப்போடுவதும், வெளியே சொல்லமுடியாத வருத்தத்தைத் தரும். மாலாவின் வருத்தம் தீரக்கூடியது அல்ல.

  பதிலளிநீக்கு
 9. அருமையான கதை .வாழ்த்துக்கள் மேடம் ..மனசு குற்ற உணர்வில் தவிக்கிறது ..எனக்கும் ஒரு மாங்கா டிசைன் நெக்லஸ் பாட்டி வழி நகை அப்பா எனது திருமணத்தின்போது பாலிஷ் போட்டு கொடுத்தார் . ஹெவியா இருக்கும் ஆனா நான் அதை போட்டதே இல்லை திருமணத்தன்று மட்டுமணிந்தேன் ..அம்மாவுக்கு அந்த டிசைன் பிடிக்கலை (மாமியார் வழி நகை என்பதலோ என்னவோ )
  ஒருமுறை கேரளா ஜிவெல்லர்சில் இந்தியா போகும்போது மாற்றிவிட சொன்னார் ..அது அப்போ அப்பாவுக்கு தெரியாது ..அப்பாவும் மாலா போல மனம் வருந்தியிருப்பார் :( .. குற்ற உணர்வு பரம்பரை நகையை வீணாக்கிட்டேன் ..

  பதிலளிநீக்கு
 10. படித்தேன் மிகவும் அருமையான கதை.நான் நினைத்தேன் குழந்தைகள் சிவாரிசு செய்து நெக்லஸ் வாங்கி கிடைத்தவுடன் இவளுக்கு அதன்மேல் பிரியம் போயி வேண்டாம் என்று சொல்லுவாள் என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 11. "ஜாக்கிரதை! ரொம்ப தூரம் போக வேண்டாம்.."

  ஆரம்பத்தில் மாலாவின் கழுத்து நெக்லேஸ் தொலைந்து விடுமோ என்ற பதைபதைப்புடனேயே மேற்கொண்டு படிக்கிறோம். கொஞ்ச நேர வாசிப்பில் தெரிகிறது, அது பிளாஷ் பேக் என்று.

  அந்த மாலாவுக்கும் திருமணமாகி, ஆசைப்பட்ட பச்சை மாங்காய் நெக்லெஸ் ஒருவழியாக வாங்கி, மருமாகளுக்கு பரிசாய்க் கொடுத்த அந்த ஆசை நெக்லெஸ், மருமகளின் ஆசைக்கேற்ப போல்கி நெக்லெஸாய் மாறியது அவளுக்கே அதிர்ச்சியாய்ப் போய்...

  அவரவர்களுக்கு இருக்கும் தனி விருப்பங்கள் பிறரின் விருப்பங்களை அசைத்து உலுக்கி சின்னாப்பின்னமாக்குவது வாழ்க்கையின் சோகம் தான்.

  'மாலாவிற்கு கொஞ்சம் வருத்தம் தான்; இருந்தாலும் தெளிந்து விடுவாள்' என்று முத்தாய்ப்பான கடைசி வரியில் வாழ்க்கைப் பாடத்தைச் சொன்னதில் கதை, சங்குக் கழுத்தில் மாங்காய் நெக்லெஸ் டாலடிப்பது போல ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள், கதாசிரியருக்கு!

  இதான் எழுதியவரின் திறமை.  பதிலளிநீக்கு
 12. அந்த மாங்காய் நெக்லசே பிறந்த விட்டுக்குப் போய் வந்த ஒன்று என்றிருந்தால் செண்டிமெண்ட் இன்னும் தூக்கி இருக்குமோ

  பதிலளிநீக்கு
 13. I had a thin chain which went to 'pirantha veedu ' often when I was a small girl.... Now it is part of my chain.. story reminded me of that...
  Nice story!

  பதிலளிநீக்கு
 14. நன்றி வல்லியம்மா! பாராட்டுவதற்கே ஒரு பெரிய மனசு வேண்டும். அதுவும் சுட சுட பாராட்டும் உங்களின் சுறுசுறுப்புக்கும், அன்பிற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 15. @J.Y.Kasirajalingam, கரந்தை ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் தனபாலன்: எண்ணிப் பார்ப்பதற்கும், உணர்வதற்கும், மெஸ்சேஜை சரியாக புரிந்து கொண்டதற்கும் நன்றி! மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 16. @பகவான்ஜி: உண்மைதான் சார். இந்த தெளிவு வந்துவிட்டால் எவ்வளவு நிம்மதி! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. நன்றி வை.கோ. சார்! உங்கள் பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. நல்லதொரு கதை. அம்மாவின் மாங்காய் நெக்லேஸ் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 19. @நெல்லை தமிழன்: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! உங்களைப் போலவே நானும் என் அம்மா கடைசியாக எனக்கு தந்த 50 ருபாய் நோட்டை பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் என்னதான் மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் சில விஷயங்கள் மாற்றப்படுவது காலத்தின் கட்டாயம். That is the irony of life.

  பதிலளிநீக்கு
 20. @ஏஞ்சலின்: பாராட்டுக்கு நன்றி! குற்ற உணர்வு தேவை இல்லை. மற்றவர்களின் உணர்வுகளை விட நம் விருப்பங்களை பெரிதாக நினைக்கும் பொழுது நாம் எல்லோருமே இப்படி சில அசட்டுத் தனங்களை செய்து விடுகிறோம். இட்ஸ் ஓகே! உங்கள் அப்பாவுக்கு உங்கள் உணர்வு புரிந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 21. @சீதளா & கலா கோபால்: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 22. @ஜீ.வி.: விரிவான அழகான விமர்சனத்திற்கு நன்றி! உங்களிடமிருந்து பாராட்டு பெறுவது சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி!
  விமர்சனம் எழுதின விட்டு, கொஞ்சம் இடைவெளி விட்டு இதுதான் கதாசிரியரின் திறமை என்று எழுதி இருக்கிறீர்கள். அந்த இடைவெளியின் அளவு திறமை என்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 23. @ஜி.எம்.பி.: அந்த நெக்லெஸ் வாங்கியவுடன் மேலும் நகைகள் வாங்க முடிந்தது அதுவும் அந்த நெக்லேஸின் ராசி என்று நினைத்தாள் என்று எழுதியிருக்கிறேன். ஆகவே அந்த மாங்காய் நெக்லெஸ் பிறந்த வீடு போக வேண்டிய அவசியம் இல்லை என்றுதானே பொருள்? வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 24. @மிடில் க்ளாஸ் மாதவி, கீதா சாம்பசிவம் & வெங்கட் நாகராஜ்: நீங்கள் மூவருமே ஏதோ ஒரு விதத்தில் இந்த கதையோடு உங்களை சம்பந்தப் படுத்திக்கொள்ள முடிகிறது இல்லையா? வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 25. Last but not the least, I sincerely thank sirukadhai kavalar Sriram from the bottom of my heart for the given opportunity. சிறுகதை என்னும் ஒரு வடிவமே மெல்ல மெல்ல அழிந்து கொண்டு வரும் வேளையில் பிரயத்தனம் எடுத்து,நிறைய சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கும் அவருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

  பதிலளிநீக்கு
 26. நடுத்தரக் குடும்பத்துப் பெண்மணிகள் அனைவரிடமும் இதுபோன்ற சொல்லாத கதைகள் ஏராளம் இருக்கும். பானுமதி போன்றவர்கள் அக்கதைகளை வெளியே கொண்டுவர வேண்டும். என்னதான் ஆண்கள் கதை எழுதினாலும், பெண்களின் உணர்வுகளை பெண்கள் எழுதும்போது - வெண்டைக்காய் வெந்தியக் குழம்பு மாதிரி- வேப்பம்பூ ரசம் மாதிரி - கொஞ்சம் பழுத்த மாங்காய் பச்சடி மாதிரி -கொத்தவரங்காய் பருப்பு உசிலி மாதிரி - தனிப்படவே சுவைக்க முடிகிறது! -இராய செல்லப்பா நியூ ஜெர்சி.

  பதிலளிநீக்கு
 27. @ ராய செல்லப்பா: வருகைக்கு நன்றி! உணர்வுகளை எழுதுங்கள் என்று சொல்லியிருந்தால் கவலை இல்லை, நீங்கள் அற்புதமான உதாரணங்களை கூறி, பயமுறுத்தி விட்டீர்கள்..முயற்சிக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 28. மாங்கா நெக்லஸ் .... தலைப்பே எனக்கு நன்கு பிடித்துக் கொண்டது, மனதில் பதிந்த கதையாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
 29. நல்ல யதார்த்த ந்டையில் எழுதப்பட்ட கதை! அருமை! வாழ்த்துகள்!

  கீதா: அருமையான கதை ஏனென்றால் பல குடும்பங்களிலும் குறிப்பாக நடுத்தர வர்கத்துக் குடும்பத்தில் நடக்கும் கதை. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. அதை நாம் குறையும் கூற முடியாது! அடுத்த தலைமுறையின் விருப்பங்கள் வேறாகி லேட்டஸ்ட் ஃபேஷன் என்று நகர்வதால்....எங்கள் வீட்டிலும் என் மாமியாரின் பழைய அழகான நகைகள் எல்லாம் இப்போதைய லேட்டஸ்ட் ஃபேஷனுக்காகப் போய்விட்டது! பெண் பேத்திகளுக்குச் சென்றதால்... பழையன கழிதலும் புதியன புகுதலும்...

  //"அது வெறும் நெக்லெஸ்ஸா? எத்தனை ஆசை? எத்தனை கனவு? அது கை கூட எவ்வளவு கஷ்டம்? ரொம்ப ஈஸியா கொடுத்து மாத்திட்டேன்னு சொல்றா..// தான் ஆசைப்பட்டு கஷ்டபட்டு வாங்கிய நகையை மருமகளுக்குக் கொடுத்திருக்காமல் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது. கொடுத்திருந்தால் கதையே பிறந்திருக்காது இல்லையா பானுக்கா...

  இப்போது மிக அழகான அந்தக் காலத்து வீடுகள், தோட்டங்கள் எல்லாம் ஃப்ளாட்டுகளாக உருமாறுவது போல

  ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பது கதையாக...உணர்வுகளுடன்...அருமை...

  எங்கள் இருவரிங்க் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்! எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 30. இன்னொருவருக்கு நம் பொருளைக் கொடுத்த பின் அது அவரது உடமையாகி விடுகிறது. அதற்கும் நமக்கும் ஆன உறவும் முடிந்து விடுகிறது இல்லையா? இப்படி யாருமே நினைப்பதில்லை.
  என் அம்மாவும் இப்படித்தான். தனது வைரத்தோடு வைர மூக்குத்தி ஆகியவற்றை பிள்ளை வயிற்றுப் பேத்திகளுக்குக் கொடுத்துவிட்டு புலம்பிக் கொண்டே இருக்கிறாள். போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள் என்னாவாயிற்றோ என்று!
  இவை உன்னுடயவை அல்ல மறந்து விடு என்பேன் நான்.
  எல்லோரது மனங்களையும் தராசுத் தட்டில் வைத்து விட்டது உங்கள் மாங்காய் நெக்லஸ்.

  பதிலளிநீக்கு
 31. /இன்னொருவருக்கு நம் பொருளைக் கொடுத்த பின் அது அவரது உடமையாகி விடுகிறது. அதற்கும் நமக்கும் ஆன உறவும் முடிந்து விடுகிறது இல்லையா? இப்படி யாருமே நினைப்பதில்லை.//  நல்ல தெளிவான சிந்தனை. தெளிவிருந்தால் மயக்கம் இல்லை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.  

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!